மெர்க்கேட்டரின் வயது 500

மெர்க்கேட்டர், உலகின் பயன்படுத்தக்கூடிய நிலப்படத்தை (map) முதல்முதலாக உருவாக்கியவர்.

டாலமிக்குப் பிறகு நிலப்படம் வரைதலில் நேர்ந்த முதல் பெரிய முன்னேற்றத்தைச் சாதித்தது ஜெரார்ட் மெர்கேட்டரின் 1569 ஆம் வருடத்து நிலப்படம். ஜெரார்ட் மெர்கேட்டருக்கு இந்த ஆண்டில் 500 வயது ஆகி இருக்கும். இதைக் கொண்டாடும் முகமாக, நியூயார்க் பொது நூலகம், மெர்கேட்டர் 500 என்ற பெயரில் ஒரு கண்காட்சி நடத்திக் கொண்டிருக்கிறது. ஜெரார்ட் மெர்கேட்டர் தயாரித்த நிலப்படத்துக்கான தொலைநோக்குப் பார்வை புரட்சிகரமானது: தற்கால நிலப்படங்களின் அடிப்படையாக கருதப்படுவது பூமியின் வளைவுக்கேற்ப சரியான விகிதங்களில் கண்டங்கள் நீட்டி வரையப்படுவதுதான். இதில் ஜெரார்ட் முன்னோடியாக இருந்திருக்கிறார். இனிதான் நிலங்களைக் கண்டடையவேண்டும் என்று அதுவரை இருந்த மனப்பான்மையிலிருந்து மாறி, ஏற்கனவே தெரிந்த நிலங்களை நோக்கி பயணம் செய்யலாம் என்ற புதிய சிந்தனை எழுவதற்கும், அதன் விளைவாக, உலகத்தின் அடிப்படைப் பார்வை மாறுவதற்கும் மெர்கேட்டர் நிலப்படம் காரணமாக இருந்தது. ஒரு நிலப்படத்தைப் பயன்படுத்திச் சேரவேண்டிய இடத்திற்குச் சென்றுவிடலாம் என்பதும் முதன்முறையாக சாத்தியமாயிற்று.

நிலப்பட ஆர்வலர்கள் இந்த நியூயார்க் பொதுநூலக கண்காட்சியைக் கண்டு வருவது பயன் தருவதுதான் என்றாலும், மெர்கேட்டர் காலத்திற்கு முன்பு இருந்த நிலப்படம் எழுதுபவர்கள், பெரும்பாலும் தத்தம் சொந்த ஆசைகளாலும் அரசியல் உள்நோக்கங்களாலும் உந்தப்பட்டவர்கள், நிலப்பட வரைதலின் சரித்திரத்தில் கொந்தளிப்பு மிக்கதொரு காலத்தில் பங்கேற்றனர் என்பது எதுவும் அங்கு காண்பிக்கப்படவில்லை.

****

உலகில் நட்டநடுவில் இருப்பதுதான் எத்தனை அற்புதமானது! நகரங்கள், ஓடைகள், துறைமுகங்கள், மலைகள், வளைகுடாக்கள், தீபகற்பங்கள், கண்டங்கள் இவையனைத்தும் நாம் இருக்கும் இடத்திலிருந்தே வெளி நோக்கி விரிகின்றன என்றால் எப்படி இருக்கும்? அலெக்ஸாண்டிரியாவின் மாபெரும் எகிப்திய நூலத்தில் தன்னிருக்கையில் அமர்ந்திருந்த டாலமியை மையமாகக் கொண்டு அன்று அறியப்பட்டிருந்த உலகமே சுற்றிலும் எழத் துவங்கியது . இங்குதான் இரண்டாம் நூற்றாண்டின் அந்த கிரேக்க உரோமானிய அறிவாளர், முதன்முதலாக அறிவியல் பூர்வமாகப் பூமியின் சுற்றளவை அளந்து, கண்டங்களையெல்லாம் தக்கவிடத்தில் தகுந்த அளவைகளில் பொருத்தினார். [இத்துறைக்கே] முதல் கருவாக அமைந்த அவருடைய நிலவியல் தகவல் நூலில் ஒரு கோட்டுச்சட்டத்தை (கிரிட்) உருவாக்கினார். அதுதான் அட்ச ரேகை எனப்படும் நிலநேர்க்கோட்டுக்கும் தீர்க்கரேகை எனப்படும் நெடுங்கோட்டுக்கும் அடிப்படையாக இருந்தது, கடகரேகை, மகரரேகை என்று பின்னர் வரையறுத்துக் கொள்ளப்படுவதற்கு துவக்கமாக இருந்தது. இதன்மூலம் புவியில் எந்த ஓரிடத்தையும் பாகைகள் மூலம் குறித்துவிட எளிதாக முடிந்தது.

’கண்டுபிடிப்பு யுகம்’ எனப்படும் காலம், தகவல் திரட்டலில் பெரும் எழுச்சியைக் கொணர்ந்தது. இன்றைய இணையத்தின் அதிவேகத்தை ஒத்த துரிதப்படுத்தலைக் கொணர்ந்தது, புதிதாக எழுதப்பட்ட ஒவ்வொரு நிலப்படமும் உலகைத் திருப்பி போட விழைந்த புது முயற்சி. ஆனால் குறிப்பிடத்தகுந்த அளவிற்கு எல்லா வரைபடங்களுமே, தற்சார்புடையவையாக, அதாவது, எழுதுபவர்களின் சொந்த நோக்கைப் பொறுத்தே அமைகின்றன. எழுதுபவரின் அறிவை ஒரு நிலப்படம் பிரதிபலிக்கும் என்றாலும், இன்னும் அறியப்படாத உலகங்களையும் அது தனக்குத்தானே கற்பனை செய்துகொண்டது. (பொது ஆண்டு 1510 இல் இருந்த லெனாக்ஸ் கோளத்தை அவதானியுங்கள். ”இங்கு டிராகன்கள் இருக்கும்” என்ற அச்சு அசலான சொற்றொடரைப் பயன்படுத்திய ஒரே நிலப்படம் இதுதான்); வரலாற்றின் புதிய தேடல்களை அது பதிவு செய்திருந்தாலும், பண்பாட்டு மேட்டிமைத்தனத்தையும் அது முன் வைத்தது . உரோமானியர்கள் தாங்கள் அறிந்த இடங்களை வைத்து நிலப்படத்தை நிரப்பினார்கள், கண்டங்களின் நிஜ உரு பற்றி அவர்கள் எந்தக் கவலையும் படவில்லை  (அவர்களின் மத்தியதரைக் கடல் வேறெந்த மாக்கடலையும் விடப் பெரிதாக இருந்தது). கிரிஸ்துவத்தைச் சார்ந்த நிலப்படம் எழுதுபவர்கள் தாங்கள் அறிந்த உலகங்களின் விளிம்புகளில் நன்மை, தீமைகளால் நிரப்பி, ஆப்பிரிக்காவிலிருந்து பெருத்த வினோத உயிரினங்கள் ஊர்ந்துவருவன போல வரைந்தனர்; சில நிலப்படங்களில் துறக்கஉலகும்கூட (சொர்க்கம்) காண்பிக்கப்பட்டது. 1380 ஆம் ஆண்டு வாக்கில், மார்க்கோ போலோவின் பயணக் கட்டுரைகள், மக்கள் ஆர்வத்தை கிழக்கு நோக்கி – ஆசியாவின் பக்கம் திருப்ப, நிலப்படங்களும் அதைப் பின்தொடர்ந்தன; ஆனால் அவற்றில் பயணியின் வருணனை எவ்வளவு மெய்யானது என்பது தெளிவாகவேயில்லை. பெரும்பாலும் வரைபடங்களில், வரைந்தவர்களின் வேட்கைகளே அவர்கள் வரைய முனைந்த நிலப்பரப்பைவிட அதிகமாக இருந்தன. இவற்றைக் கொண்டு ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்குப் போவதென்னவோ சாத்தியமில்லாத ஒன்றாக இருந்தது.

1481 ஆம் ஆண்டில், கொலம்பஸ், பெரும்பொருள் தேவைப்பட்ட ஒரு பயணத்திற்கு ஆதரவைத் தூண்டும் வகையில் உணர்ச்சிப் பெருக்குள்ள வாதங்களை எழுத அமர்ந்தார். தூரக்கிழக்கிற்கு நீளும் நிலப்பரப்பு இருந்தது என்பதையும், உலகின் சுற்றுப்பரப்பின்படி அது மேற்குலகில் வந்து சேரவேண்டும் என்பதையும் அவர் அறிந்திருந்தார். ஏதேனும் ஓர் உத்திரவாதமின்றி அறியாத இடங்களுக்குப் பயணம் மேற்கொள்ள யாரும் பொருளுதவி செய்யமாட்டார்கள் என்பதையும் அவர் நன்றாக உணர்ந்திருந்தார். அதனால் வாதங்கள் வலிமையாக இருக்கவேண்டும்; கணக்கிடுதல்கள் அறிவார்ந்தனவாக இருக்கவேண்டும்; அளவைகள் நம்பிக்கைக்குரியனவாக இருக்கவேண்டும், இறுதியில் வந்தடையும் முடிவு போய்ச்சேரக்கூடியதாகத் தெரிய வேண்டும் என அறிந்திருந்தார். எனவே அவர் ஒரு நிலப்படத்தை வரைந்தார்.

கொலம்பஸிற்கு நிலப்படம் என்பது, ஆபத்தான ஆனால் பயனளிக்கும் ஒரு பயணத்திற்குப் புரவலரைப் பெறுவதற்கான ஒரு வாதம்; தம் நிலங்களின் எல்லைகளை விரிவுபடுத்துவதில் அவர்களுக்கிருக்கும் ஆசையைத் தூண்டி விட்டு அதன் மூலம் அவர்களின் பணப்பைகளைத் தனக்குத் திறக்க வைக்க உதவும் ஒரு வாதம். முதலில் கொலம்பஸ், டாலமி அளித்த கணக்கிடுதல்களைப் பார்த்தார்; அவற்றில் 180 பாகை கோணத்தில் மொத்த பூமியும் ஒரு நீண்ட துண்டாக இருந்தது, அதில் ஏற்கனவே அகன்றிருந்த ஐரோப்பா-ஆசியா ஆகியவற்றின் இணைந்த நிலப்பரப்பை மேலும் அகட்டி 225 பாகை கோணத்தில் பொருத்தினார். இதனுடன், மார்க்கோ போலோவின் பயணவிவரங்களிலிருந்து 28 பாகைகளைச் சேர்த்தார்., சீனாவிலிருந்து ஜப்பானுக்கான தொலைவென முன்வைக்கப்பட்டதை 30 பாகைகள் என்று கணக்கு வைத்துக்கொண்டு அதனையும் சேர்த்தார். இறைவன், ஆதிமனிதனை நோக்கி நீட்டிய விரலைப் போலத் தோற்றமளிக்கும் விதமாக ஆசியாவின் கிழக்குக் கடற்கரைப் பகுதியை நீட்டித்து, இறுதியில் கானரி தீவுகளில் துவங்கி ஐப்பான் வரையான பயணத் தூரம் 68 பாகையளவே இருக்கும் என்றும் முடிவு கட்டினார், ஆனால் அவருடைய அந்த முடிவு உண்மையான தொலைவில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே இருந்தது.

ஆனால், புது உலகொன்றைக் கண்டு பிடிக்கப் போகிற தன் பயணத்தில், கடந்த ஆயிரம் ஆண்டுகளாக வரைபடக் கணக்குகளில் அடுக்கடுக்காய்ச் சேர்ந்து விட்ட ஒரு பெரிய தவறு இருப்பதை அவர் அறிந்தாரில்லை. அவருடைய கணக்கு உலகை அமானுஷ்ய அளவுக்குள் சுருக்கிவிட்டது: அவரால் தன்னிச்சையாகத் தீர்மானிக்கப்பட்ட அந்த 68 பாகைகள் கிட்டத் தட்ட அட்லாண்டிக் பெருங்கடலைக் கடக்கும் தூரத்தையே காட்டின. எனவேதான், மேற்கிந்தியத் தீவுகளில் அவர் வந்திறங்கியது தற்செயலாக நிகழ்ந்ததென்றாலும், அங்கிருந்தன எல்லாம், இருக்கவேண்டிய இடத்தில் சரியாகவே இருந்தன. [இதனாலோ என்னவோ] கொலம்பஸ் 1506 ஆம் ஆண்டில் அவர் மரணமடையும் வரையிலும் கூட, தான் கண்ட நிலப்பரப்பு புதியது அன்று, கிழக்காசிய கடற்கரையை ஒட்டியதுதான் அது என்று வாதிட்டார்.

1569 ஆம் ஆண்டு மெர்கேட்டர் வரைபடம், நிலப்பட வரைவியலில் அதுகாறும் இருந்த பழைய வடிப்புகளையெல்லாம் உடைத்தெறிந்து, அது அழகுக்காக வரையப்பட்ட படமில்லை, பயனுள்ளதொரு நிலவரைபடம் என்று காட்டியது.
முதல்முறையாக வானவியலும் கணிதவியலும் உலகை ஓர் உருவத்துக்குக் கொணர முண்டியடித்தன. ஆனால் எவ்வித உருவம்? 1400 ஆண்டுகளாக ஐரோப்பிய நிலப்படவியலை ஆண்டுகொண்டிருந்த டாலமி எழுதிய நிலப்படம், 180 பாகைக்குள் உலகமே அடங்குவதாகக் காட்டியதால். குறுகிய பயன்பாடு கொண்டதாக இருந்தது. டாலமி எழுதிய நிலப்படத்தைக்கொண்டு வணிக மீகாமர்கள் கானரி தீவுகளிலிருந்து கிழக்காசியாவின் கரை வரையிலும், வடக்கில் ஸ்காண்டிநேவியா வரையும், தெற்கில் ஆப்பிரிக்காவின் சஹாரா வரையும் தொழில் செய்ய முடிந்தது. உண்மையில் அவர்கள் புவியின் நிலப்பரப்பில் முக்கால் பகுதியை மட்டுமே அதுவரை கண்டறிந்திருந்தார்கள். டாலமி எழுதிய நிலப்படத்தில் வேறு சில தவறுகளும் இருந்தன.- காட்டாக, சூரியன் பூமியைச் சுற்றி வருகிறது என்பது போல.

கொலம்பஸின் மேற்கிந்தியத் தீவுகள் நோக்கிய பயணம் முடிந்து 50 ஆண்டுகள் கழித்து, கண்டங்களின் உருவம், வடிவம் குறித்த புதிய புதிய தெளிவுறுத்தல்களுடன் ஒன்று மாற்றி ஒன்றாக பற்பல நிலப்படங்கள் எழுதப்பட்டன. தகவல் திரட்டலுக்கு இந்த கண்டுபிடிப்பு யுகம் ஒரு நற்கொடையாக இருந்தது. தற்காலத்தில் இருக்கும் இணையத்தின் அதிவேகத்தைப் போல, புதிதாக எழுதப்பட்ட ஒவ்வொரு நிலப்படமும் உலகைப் புரட்டிப் போட விரும்பும் இன்றைய புதுமுயற்சி நிறுவனங்களை ஒத்திருந்தது. 1507 ஆம் ஆண்டு வால்ட்சீமுல்லரின் நிலப்படம், அமெரீகொ வெஸ்பூச்சி என்ற சாகசப் பயணியின் பிரசித்தி பெற்ற பயணக் குறிப்புகளை வைத்து எழுதப்பட்டது. அவை சுயப் பிரதாபததைத்தான் அதிகம் பேசின என்றாலும், அந்தக் குறிப்புகளினடிப்படையில், அந்த நிலப்படம் அக்கண்டத்துக்கு அமெரீகோ வெஸ்புச்சியின் பெயரையே சூட்டியது. 1513 ஆம் ஆண்டில் பல்பொவா, பசிஃபிக் பெருங்கடலின் முனையில் நின்றார்; அப்போது தொலைவில் இருந்த அக் கரையோரப் பகுதியும் நிலப்படத்தில் இணைக்கப்பட்டது. 1522 ஆம் ஆண்டில், நெடும்பயணம் மேற்கொண்ட மஜெல்லனின் (Magellan) பயணக்குழு மிக நலிவுற்ற நிலையில் ஊர் திரும்பியது, அதன் தலைவர் (மஜெல்லன்) ஃபிலிப்பீன்ஸில் மாண்ட போதும், முதல் முறையாக உலகை ஒரு முறை சுற்றி வரும் பயணம் பூர்த்தியடைந்தது.

1512 ஆம் ஆண்டில் ஏறத்தாழ அதே காலத்தில் பனாமா அடர்காடுகளிடையே தன் பாதையை பல்போவா வெட்டித் திருத்திக் கொண்டிருந்தபோது, ஜெரார்டஸ் மெர்கேட்டர் (மெர்காடொர் -ஃப்லெமிஷ் உச்சரிப்பு] தற்போது பெல்ஜியம் என்றழைக்கப்படும் பிரதேசத்தில் பிறந்தார். புவியியல், வானவியல் இரண்டிலும் ஒரு கணித நிபுணர் மூலம் பயிற்சி பெற்ற அவர், நிலப்படங்கள் மீது தீராக்காதல் கொண்டவராக இருந்ததால், 24 வயதிலேயே வெற்றிகரமான நிலப்பட வணிகரானார். இளமையிலேயே தேர்ந்த நிலப்படவியலாளரான அவர், டாலமி’ கைக்கொண்ட சில அடிப்படைகளைப் பின்பற்றி அதே சமயம் வட- தென் அமெரிக்காவைத் தனித்தனியாக பிரித்துக் காட்டியதில் சமகாலத் தகவல்களை முழுதும் ஏற்றதான வடிவில், தன் முதல் உலக நிலப்படத்தை 1538 ஆம் ஆண்டில் வெளியிட்டார் (இந்த நிலப்படப் பலகை, இருதய வடிவில் ஒரு புடைப்புருவமாக நியூயார்க் பொது நூலகத்தில் காட்சிப்பொருளாக வைக்கப்பட்டுள்ளது.)

1569 ஆம் ஆண்டில், மெர்கேட்டர் நிலப்படம் பழைய நிலப்படவியல் கோட்பாடுகளை உடைத்தெறிந்தது. வெறும் பார்வைக்கான ஒரு நிலப்படமாக இல்லாமல், பயன்படக்கூடிய ஒன்றாகவே அது இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. டாலமி, கொலம்பஸ் இருவருடைய நிலப்படங்களில் , பலகையில் கோட்டுச்சட்டங்கள் சீரான இடைவெளிகளில் இருந்தன. ஆனால் மெர்கேட்டர் எழுதிய நிலப்படத்தில், அட்ச ரேகையும் தீர்க்கரேகையும் பூமத்திய ரேகைக்கு ஏற்றவாறும், தமக்கிடையேயும் குறிப்பிட்ட விகிதத்தில் அளவில் கூடிக்கொண்டு சென்றன. இந்தக் கோட்டுச்சட்டப் படத்தினால் மீகாமர்கள் தத்தம் பாதைகளை சரிபார்த்துக்கொள்ள மெர்கேட்டர் நிலப்படம் உதவியது. (கொலம்பஸைப் போல் தொலைவில் ஒரு புள்ளியைக் குறிவைத்து அதை அடைந்துவிடமுடியும் என்று குத்துமதிப்பாக நம்பி இருக்கத் தேவை இல்லாமல்) உலகை இப்படி ஒரு புதிய பார்வையுடன் பார்ப்பதும், புதிய தேடல் பயணங்கள் மேற்கொள்வதும் பெரும்வெற்றி அடைந்தன. 1576 ஆம் ஆண்டில், மார்ட்டின் ப்ரோபிஷர் வடமேற்குப் பாதைக்கான வாயிலைக் கண்டு பிடித்தபோது, மெர்கேட்டர் எழுதிய நிலப்படத்தின் மாதிரி ஒன்று அவர் சட்டைப்பையில் மடக்கி வைக்கப்பட்டிருந்தது.

ஜெரார்ட் மெர்கேட்டர் என்னவோ, மிகக் குறைவாகவே பயணம் செய்தவர்; அவர் இவ்வளவு கவனமாகத் திட்டமிட்ட பாதைகளில், கடல்வழிப் பயணங்களை அவர் மேற்கொள்ளவே இல்லை. இளைஞராக இருக்கையில் அவர் தன் தொழிற்கூடத்தை விட்டு நீங்கி, கணிசமான நேரம் நகரத்திற்கு வெளியே நில அளவை செய்வதற்காகக் குறும்பயணங்கள் மேற்கொண்டிருந்தவர்தான். 1544 ஆம் ஆண்டு, அவர் மதரீதியான நம்பிக்கை, கோட்பாடுகள் ஆகியவற்றிற்கு எதிராகச் செயல்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுக் கைது செய்யப்பட்டார். கிரிஸ்தவ விவிலியத்தைக் காட்டிலும் புவியியலையே மேலாக அவர் கருதியதே இந்த நடவடிக்கைக்குக் காரணமாக இருந்திருக்க வேண்டும்.. மெர்கேட்டர், நண்பர்களுடைய உதவியால் விடுவிக்கப்பட்டபின், மதில்களுக்குள் இருந்த டூய்ஸ்பொர்க் என்ற ஜெர்மானிய நகரத்திற்குச் சென்றுவிட்டார். அங்கிருந்து ஃபிரான்ஸ், நெதர்லாந்து, பால்கன் பகுதிகள், ஏன் கிரேக்கமும் சேர்த்து பல நிலப்பகுதிகளுக்கு அவ்வவற்றின் நிலப்படங்களை எழுதினார்; தவிர அக்கால கட்டத்தின் மிக உயர்ந்த தரமுள்ள உலக உருண்டை மாதிரிகளைத் தயாரித்தார். ரைன் நதிக் கரையிலமைந்த அந்தச் சிறு நகரத்தில், ஒரு மேசையிலிருந்து, ’மிகுந்த நிதானமான குணமும், அசாதாரணமான அளவு வெளிப்படையான பேச்சும், உள்ளார்ந்த நேர்மையும் கொண்டவர்’ என்று வருணிக்கப்பட்ட ஒரு மனிதரால், பிரெஸீல் (ப்ராஸ்யு- போர்ட்டுகீஸிய உச்சரிப்பு), லாப்ரெடொர், சைபீரியா, ஜப்பான் போன்ற நாடுகளின் மாறிக் கொண்டிருந்த எல்லைகளை வரையறுக்கமுடிந்தது. அவர் அவ்விடத்தை விட்டு எங்கும் செல்லவேவயில்லை.
***

இத்தனை காலம் தாக்குப்பிடித்த மெர்கேட்டர் நிலப்படத்தை எல்லாரும் பயன்படுத்துவது சாத்தியமில்லை. மீகாமர்கள், பொறியல் வல்லுநர்கள், அவர் காலத்து இராணுவத்தினர், இவர்கள் அனைவருக்கும் பெருங்கடல் சார்ந்த நெடும்பயணங்களுக்கும், படையெடுப்புகளுக்கும் பயனுடையதாக இருந்தாலும், அறிவியல் அறிஞர்களும் நிலைவியல் வல்லுநர்களும் ஓர் அழகிய முகத்தில் இரு யானைகளின் காதுகள் விரிந்து துருத்திக்கொண்டிருப்பதைப் போல், பூமத்திய ரேகைக்கு அப்பால் தொலைவில் இருந்த நிலப்பரப்புகளை அசிங்கமாகக் காட்டியதாகக் கருதி அதை வெறுத்தார்கள்.
நாட்கள் செல்லச்செல்ல, நிலப்படத்தின் புடைப்பால் ஓரத்திற்குத் தள்ளப்பட்ட நாடுகள் உலகின் பிற பகுதியினரால் இதன் விளைவாக தாம் உலகின் பிற நாட்டவரால் எவ்வாறு பார்க்கப்படுகிறோம் என்பது பாதிக்கப்படுகிறது என்று அறிந்து கொண்டிருக்கின்றன. பல நாடுகள் தம்மைச் சிறப்பாக காண்பித்துக் கொள்ளும் வகையில் , தமக்கு அனுகூலமாகவும் மாற்று நிலப்படங்களை தயாரிக்கத் துவங்கியுள்ளன.

வடக்கும் தெற்குமாய் நீண்டு உள்ள சிலே நாடு, குறுக்கு வாட்டு மெர்கேட்டர் நிலப்படத்தில் அதன் நிஜ அளவோடு மிகச்சரியான விகிதத்தில் பொருந்தியது. வட அமெரிக்காவோ லாம்பெர்ட் கூம்பு உருவமாறா வரைவு முறையில் (Lambert Conic conformal – ஒரு கோளத்தின் மீது கூம்பு ஒன்றை வைத்து அதன் வழி பார்ப்பது) பார்க்கும்போது கண்களுக்கு இனிதாகவும் இருந்தது.

1963 ஆம் ஆண்டில், விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆர்தர் ஹெச். ராபின்சன் என்ற நிலவியல் வல்லுநர், 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலிருந்து ஐக்கிய அமெரிக்க நாடுகள் பயன்படுத்தி வந்த நிலப்படங்களில் ஓர் அடிப்படைத் திருத்தத்தைக் கொண்டுவந்தார். ராபின்சனுடைய நிலப்படம், அதுவரை ஓர் சிறந்த மாதிரியாகக் கருதப்பட்டிருந்த மெர்கேட்டர் நிலப்படத்துடைய இன்னொரு வகை வடிவாக இருந்தது. வடபகுதி நசுக்கிக் குறைக்கப்பட்டு -அலாஸ்கா, கிரீன்லாந்து, வடநிலப்பரப்புகள் மேலும் சோவியத் யூனியனாக அப்போது இருந்த நிலப்பகுதிகள் ஆகியவை- பணியாரத்தின் கிழிபட்ட ஓரத்தைப் போல் இருந்தது. இவ்விகிதங்கள் அரசியல் காரணங்களால் மாற்றப்பட்டவை: முதலில் இருந்த நிலப்படத்தில், நிஜ உலகில் இருந்த நிலப்பரப்போடு ஒப்பிட்டால் சோவியத் யூனியன் 223 விழுக்காட்டளவு மிக அதிகமாக இருந்தது, கனடா 258 விழுக்காட்டளவு அதிகமாகவும், ஐக்கிய நாடுகள் 64 விழுக்காடே அதிகமாகவும் இருந்தன. நாடுகளுக்கிடையே பனிப்போர் நடந்தது, ஏதேனும் செய்யவேண்டியிருந்தது.

1988 ஆம் ஆண்டில், நேஷனல் ஜியொக்ராஃபிக் சொஸைட்டி, ராபின்சன் எழுதிய புதிய நிலப்படத்தை ஏற்றுக்கொண்டு, அதில், சோவியத் யூனியன் நூற்றுக்கு 18 விழுக்காடு கவனக்குறைவால் தற்செயலாக சுருக்கப்பட்டதாகவும் காட்டியது. 1990 ஆம் ஆண்டில், யூனிவர்சல் பிரஸ், “டௌன் அண்டர் மேப் ” என்ற பெயரில், இன்னுமே தீவிரமானதொரு அரசியல் நகர்வில், மெர்கேட்டர் நிலப்படத்தை அப்படியே கவிழ்த்துப் போட்டு, ஆஸ்திரேலியா உலகில் உச்சியில் இருப்பதுபோன்றதொரு நிலப்படத்தை வெளியிட்டனர்.[1]

பின்குறிப்புகள்

மெர்கேட்டர் – 500 – நியூயார்க் பொது நூலகத்தில் 2012 ஆண்டு செப்டம்பர் 29 வரை இக்கண்காட்சி உள்ளது.

நிலவரைபடவியலின் வரலாறு குறித்து மேலும் தெரிந்து கொள்ள விரும்புவோருக்கு, இருப்பதில் சிறந்த புத்தகமாக வில்ஃபர்ட் நோபில் எழுதிய ‘த மாப்மேகர்ஸ்’ (Wilfred Noble’s Tha Mapmakers) என்னும் 2001 ஆம் வருடம் திருத்திப் பதிக்கப்பட்ட புத்தகத்தைப் பரிந்துரைக்கலாம். இப்புத்தகம் டாலமியிலிருந்து மார்ஸ் ரோவர் எனும் செவ்வாய் கிரகத்தில் திரிந்து அக்கிரகத்தில் நிலப்படத்தைத் தயாரிக்க உதவும் எந்திரம் வரையிலும் வரலாறை விரிக்கிறது.

[இது கெர்னிகா என்னும் பத்திரிகையில் (Guernica) வெளி வந்த ஒரு ஆங்கிலக் கட்டுரையின் மொழிபெயர்ப்பு. எழுதியவர் மிஷெல் லெக்ரொ. இவர் லாஃபாம்ஸ் க்வார்டர்லி என்கிற பத்திரிகையில் ஒரு பதிப்பாசிரியராகப் பணி புரிகிறார். மூலக் கட்டுரையை கெர்னிகா பத்திரிகையில் ஏப்ரல் 24, 2012 ஆம் தேதி இதழில் பார்க்கலாம். ]

[1] உருண்டையாக அந்தர வெளியில் தொங்கும் ஒரு கிரகத்தில் மேல் கீழ் என்று ஏதும் இல்லை அல்லவா?  அப்போது ஆஸ்திரேலியா மேலே இருப்பதாகக் காட்டுவதில் எந்தத் தவறும் இல்லையே? என்பது அவர்கள் நிலைபாடு.