மகரந்தம்

ஃபேஸ்புக் தளத்தின் சந்தைப்படுத்தும் உத்திகள் குறித்து…

இக்கட்டுரை ஃபேஸ்புக் தளத்தின் சந்தைப்படுத்தும் உத்திகள் குறித்து. ஏன் அதன் விளம்பரங்கள் எதிர்பார்த்த பலனை தருவதில்லை என்று பேசுகிறது. மாறாக, நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் விளம்பரங்கள் அதிக பலனைத் தருவதாக சொல்கிறார். மேலும், கட்டுரையாளருக்கு கூகுள் நிறுவனத்தின் மீது அலாதி பாசம் இருக்கவேண்டும். ஃபேஸ்புக்கின் அதே உத்திகளை பயன்படுத்தும் கூகுளை பற்றி மட்டும் வாய் திறக்கவில்லை. ஆனால்ஃ பேஸ்புக்கை மட்டும் கரித்து கொட்டுகிறார். ஃபேஸ்புக் தளத்தின் பங்கேற்பாளர்கள் கிட்டத்தட்ட 1 பில்லியன். இது ஒரு சாதாரண வெளி அல்ல. இங்கு நடைபெறும் சந்தைப்படுத்தல் என்பது நிச்சயம் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். இவர் புகழும் நியூயார்க் டைம்ஸ் நாளிதழும் ஃபேஸ்புக்கின் அதே உத்தியை பயன்படுத்துகிறது. அதற்கு கூடுதல் கவனம் கிடைப்பதாகச் சொல்கிறார். ஆனால் அதை நிரூபிக்கப் போதுமான தரவுகளை இவர் தரவில்லை. ஆனாலும், இது படிக்க வேண்டிய கட்டுரை தான்.

http://www.technologyreview.com/web/40437/

உண்மையில், ஃபேஸ்புக் தளம் நம்மூர் அடையார் டைம்ஸ், மாம்பலம் டைம்ஸ் போன்ற பத்திரிக்கைகள் போலத்தான். மக்களை இலவசமாக சென்றடைகிறது. அம்மக்களுக்கென ஒரு வெளியை உருவாக்குகிறது. அதைப் பயன்படுத்தி விளம்பரங்கள் மூலம் சம்பாதிக்கிறது. ஒரே ஒரு வித்தியாசம் தான். முக்கியமான வித்தியாசம். அது : நம்மூர் பத்திரிகைகளிடம் தனது பயனாளர் குறித்து எந்த தகவல்களும் இல்லை. ஆனால் ஃபேஸ்புக்கிடம் தனது பயனாளர் குறித்து சகல தகவல்களும் உண்டு. அதனால் அதன் வீச்சும் அதிகம். அதை வைத்து அத்தளம் எந்த பிற பத்திரிகைகளையும் விட அதிகம் பணம் சம்பாதிக்க முடியும்.


எகிப்தில் தலைவிரித்தாடும் மத அடிப்படைவாதம்

எகிப்தின் முக்கிய கட்சியான ‘இஸ்லாமிய சகோதரத்துவ’ அமைப்பு இரு முகங்களைக் கொண்டது. ஒன்று அப்பட்டமான மத அடிப்படைவாதம். மொத்த சமூகத்தையும் தனது காலில் போட்டுக் கொண்டு மிதிக்க நினைக்கும் நோக்கம் கொண்டது. இன்னொன்று, சுத்த ஜனநாயகம் மற்றும் அறிவியல் கண்ணோட்டம் கொண்டது. ஆனால் கட்சியில் இரண்டாவதற்கு அதிக வலுவில்லை. அதனால் இதன் குரல் அதிகம் வெளியில் கேட்காது. அந்நாடுக்குள்ளேயே இக்கட்சியின் கொள்கை மற்றும் நோக்கம் குறித்து குழப்பம் உண்டு. விரைவில் அங்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் அக்கட்சியின் நிஜமுகம் குறித்த குழப்பம் அதிகரித்து வருகிறது. இந்தக் கட்டுரையை படியுங்கள். குழப்பம் தீரும். தெளிவு கிடைக்கும்.

http://www.spiegel.de/international/world/muslim-brotherhood-seeks-power-in-egypt-a-834260.html

இதே நோக்கத்துடன் இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் இந்திய வேர் அல்லாத சில மத அடிப்படைவாத இயக்கங்கள் இயங்கிவருகின்றன. இவைகளுக்கு நம்மூர் ‘அறிவுஜீவி’களின் முழு ஆசிர்வாதமும் ஒத்துழைப்பும் உண்டு. இவர்களின் நோக்கம் தான் என்ன? இந்திய சமூகத்தை எப்படி மாற்றத் நினைக்கிறார்கள்? இந்தக் கேள்விக்கான பதிலும் மேலே உள்ள கட்டுரையில் உண்டு.


கோழியும் பேசுமோ?!

இரு ஆராய்சிகள் குறித்த வெவ்வேறு கட்டுரைகள்.

கோழிகள் எழுப்பும் ஒலிகளை வைத்தே அவை சொல்லவருவதை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சி ஒன்று. ‘இதையெல்லாமா ஆராய்கிறார்கள்?’ என்ற கேள்வி வருவது இயற்கைதான். ஆனாலும் அதில் இருக்கும் விஷயம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. இக்கட்டுரையை படியுங்கள். குறைந்தபட்சம் இந்த ஒளிக்காட்சியை மட்டுமாவது காணுங்கள்.

http://www.gizmag.com/chicken-sounds-computer-system/22587/

இன்னொன்று : தாமரை இலையின் தன்மை குறித்த ஆராய்ச்சி ஒன்று நானோ தொழில்நுட்பத்தில் புதிய திறப்பை சாத்தியப்படுத்தியுள்ளது. அது குறித்த கட்டுரை :

http://www.gizmag.com/lotus-leaf-diagnostic-devices/22539/


ஆயுட்காலத்தை நீட்டிப்பது எப்படி?

இந்தக் கேள்விக்கு விடை கண்டுபிடிக்க மனித குலம் படாத பாடுபடுகிறது. தன்னிடம் இருக்கும் குறைகளை களைந்துவிடத் துடிக்கும் மனித மனத்தின் துடிப்பு இது என்று தான் நினைக்கத் தோன்றுகிறது. குறைகளைக் களைந்துவிட்டால் உன்னத நிலை கிடைக்கும் என்ற கனவு. கனவு மெய்ப்படுமா என்றெல்லாம் இப்போது ஒன்றும் சொல்ல முடியாது. விடை காலத்தின் கையில். ஆயுட்காலத்தை நீட்டிப்பது குறித்த ஒரு ஆராய்ச்சி குறித்த கட்டுரை :

http://www.gizmag.com/diet-buckyballs-extending-lifespan/22245/

கவனிக்க வேண்டிய ஒரு விஷயம் : இந்தக் கட்டுரையின் கருதுபொருளை விட இதற்குப் பதிலெழுதி இருக்கும் பலரின் கருத்துகள் மிக ருசிகரமாகவும், அதிசயமூட்டுவதாகவும் இருக்கின்றன. இப்படி ஒரு வாசக மறுவினை தெரிவிக்கும் நிலை தமிழ் பத்திரிகை உலகில் இருக்குமா? அதை விட இப்படிக் கட்டுரைகளை எழுதுமளவு அறிவியல் நாட்டம் நம் எழுத்தாளர்/ பத்திரிகையாளர்/ அறிவியல் ஆய்வாளர்கள் போன்றாருக்கு இருக்கிறதா? இது பிரமாதமான கட்டுரை இல்லை. சாதாரணத் தகவல் கட்டுரைதான். இருந்தும் இதிலிருந்து வாசகர்கள் பல விஷயங்களை உருவி எடுத்துப் புரட்டிப் புரட்டிப் போட்டு மறுவினைகள் மூலம் மேற்கில் அறிவியல் பூர்வமாக யோசிக்க எத்தனையோ சாதாரண வாசகர்கள் தயாராக இருக்கிறார்கள் என்று காட்டுகிறார்கள். இதன் காரணங்களும், விளைவுகளும் என்னென்ன?