சபாஷ்… சரியான போட்டி

தமிழ் சமூகத்தின் ஒரு காலத்தின் இசை குறித்த ரசனையையும், கர்நாடக சங்கீதத்தின் முக்கிய ஆளுமைகள் குறித்தும் பேசும் இக்கட்டுரை, எழுத்தாளர் அசோகமித்திரனால் எழுதப்பட்டது. 10.12.2000 அன்று வெளியான தினமணி கதிர் இதழில் வெளியானது.

இரு சமீபத்திய நிகழ்ச்சிகள் இதை எழுதக் காரணமாயிருந்தன என்று கூற வேண்டும். ஒன்று, தொலைக்காட்சியில், ‘ஹரிதாஸ்’ படம் காட்டப்பட்டது. இரண்டு, ஓர் ஆங்கில நாளேட்டின் ஞாயிறு மலர்ப பகுதியில் மறைந்த மூன்று தமிழ்ப் பாடகர்கள் பற்றிய கட்டுரை. ஹரிதாஸ் என்றவுடன் எம்.கே. தியாகராஜ பாகவதர், மூன்று தீபாவளி நாள்களுக்கு அப்படம் ஒரு சென்னைத் திரைப்படக் கொட்டகையில் தொடர்ந்து ஓடியது, ‘மன்மத லீலையை வென்றார் உண்டோ’, இவைதான் பொதுவாக நினைவுக்கு வருபவை. ஆனால் அப்படம் இவை மட்டும் கொண்டதல்ல. தென்னிந்தியாவில் ஒரு மிகச் சிறந்த பாடகியையும் ஒரு முக்கிய வேடத்தில் கொண்டிருந்தது. ஞாயிறு மலர்க் கட்டுரை தண்டபாணி தேசிகர், தியாகராஜ பாகவதருடன் அந்தப் பாடகி பற்றியது. அவர் என்.சி. வசந்தகோகிலம்.

இரண்டாம் உலக யுத்தத்துக்கு ஐரோப்பா தயாராகிக் கொண்டிருந்த நாட்களில்தான் இந்தியாவில் அதிலும் குறிப்பாகத் தென்னிந்தியாவில் இசை மற்றும் நாட்டியம் சில புதிய இயந்திர சாதனங்களால் தேர்ந்த அல்லது பயிற்சி பெற்ற ரசிகர்கள் மட்டுமல்லாமல் அனைத்து மக்களும் பகிர்ந்து கொள்ளக் கூடியதொரு சூழ்நிலையை உருவாக்கியது. பேசும் படம், இடைத் தட்டு, வானொலி ஆகிய சாதனங்கள் பொழுதுபோக்கு அம்சங்களைவிடப் பாரம்பரியக் கலாச்சார வெளிப்பாடுகளை அதிகம் நம்பியிருந்தன. ஒரு சிறிய டீக்கடையானாலும் அங்கு ஒரு கிராமபோன் நாள் முழுவதும் ஒலித்துக் கண்டிருக்கும். சற்று வசதி பெற்ற உணவிடமானால் அங்கு ‘ரேடியோகிராம்’ என்பது இருக்கும். இந்த ரேடியோகிராம் ஒரு சிறிய அலமாரி போன்றது. இதில் வானொலிப் பெட்டியுடன் கிராமபோன் சாதனமும் இணைந்திருக்கும். சில ரேடியோகிராம் பெட்டிகளில் பத்து இசைத்தட்டுகளை அடுக்கி வைத்துவிட்டால் அந்த இயந்திரம் தானாகவே அடுத்தடுத்து அந்தப் பத்து இசைத்தட்டுகளையும் ஒலிக்க வைக்கும். ரேடியோ போல் ஒலியின் அளவைக் கூட்டிக் குறைக்கலாம். அந்த நாளில் சில உணவிடங்களில் இந்த ரேடியோகிராம் கிளப்பும் ஒலி அரை கிலோ மீட்டர் வரை கேட்கும்.

இசைத்தட்டுகளின் தயாரிப்பு மிகுந்த கவனத்துடன் செய்யப்பட வேண்டியிருந்தது. ஒளிப்பதிவு சென்னையில் செய்யப்பட்டாலும் இதை இசைத்தட்டில் மாற்ற கல்கத்தாவில்தான் முடியும். இன்று கல்கத்தா விமான நிலையம் உள்ள டம்டம் என்ற இடத்தில்தான் இந்தியாவின் ஒலிப்பதிவு செய்யப்பட்ட பாடல்கள், நாடகங்கள் இசைத்தட்டில் மாற்றப்பட்டன. இதனாலேயே கலைஞர்கள் தேர்வு மிகவும் இறுக்கமாகவே இருக்கும். இந்திய சுதந்திரத்திற்கு முந்தைய பத்துப் பதினைந்து ஆண்டுகளில் இசைத்தட்டுச் சங்கீதம் மிக உயரிய தளத்திலேயே இருந்ததற்கு இதுவும் ஒரு காரணம்.

இந்தக் காலகட்டத்தில்தான் தமிழ்நாட்டில் மூன்று பாடகிகள் முன்னணிக் கலைஞர்களாக அறிய வந்தார்கள். எம்.எஸ். சுப்புலட்சுமியின் இசைத்தட்டுகள் 1930-களிலேயே நிகழ்ந்துவிட்டன. என்.சி. வசந்தகோகிலம், டி.கே. பட்டம்மாள் ஆகியோர் இரண்டாம் உலக யுத்தம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனால் அவர்கள் பிரவேசத்திற்க்குப் பிறகு உண்மையில் யார் முதலிடம், யார் இரண்டாம் இடம் என்பது ஆரோக்கியமான சங்கீத சர்ச்சையாக இருந்து வந்தது. இதில் இசைத்தட்டுக்கு முக்கிய இடம் இருந்தது. ஏறக்குறைய அதே அளவுக்கு இரு பத்திரிகைகள் பூடகமான போட்டிக்குத் தளம் அமைத்தன. ஒன்று யாவரும் அறிந்த ‘கல்கி’. இன்னொன்று, இன்று அனேகமாக ரசிகர்கள் மத்தியில் நினைவில் கூடநிற்காமல் போய்விட்ட ‘நாரதர்’.

‘நாரதர்’ வெளியிடப்பட்ட காரணம் இசையிலிருந்து மிகவும் விலகியது. ‘ஆனந்த விகடன்’ நல்ல கதைகள், நல்ல கட்டுரைகள், நல்ல தலையங்கங்கள், நல்ல கேலிச் சித்திரங்கள் இவற்றினால் மட்டும் ஒரு முன்னணிப் பத்திரிகையாக வளரவில்லை. ‘பகுத்தறிவுப் போட்டி’ என்ற பெயரில் ஒரு குறுக்கெழுத்துப் போட்டியையும் மிகவும் தன்னம்பிக்கைக்குரியதாக நடத்தி வந்தது. அந்த நாளில் ஆனந்த விகடனைத் தாக்கி விமரிசித்தவ்ர்கள் இந்தச் சூதாட்டத்தினால்தான் பத்திரிகை விற்று, மக்களைப் படுகுழியில் தள்ளிக் கொண்டிருக்கிறது என்றார்கள். ஆனால் 1955-ல் மத்திய அரசு ஒரு சட்டம் கொண்டு வந்து இந்தப் போட்டிகளை மிகவும் சிறுத்துப் போகும்படி செய்தபோது ‘ஆனந்த விகடன்’ போட்டியை முற்றிலும் நிறுத்திவிட்டது. ஆனால் அதன் வாசகர்கள் எண்ணிக்கை குறையவில்லை: மாறாக ‘ஆனந்த விகடன்’ மிக வலுவான, பெருமைக்குரிய வெளியீடாகவே தொடர்ந்தது. ‘ஆனந்த விகடன்’ பகுத்தறிவுப் போட்டியில் இரண்டாவது பரிசு பெறும் நூற்றுக்கணக்கானவர்களின் பட்டியலை வெளியிடுவதற்கென்றே தொடங்கப்பட்டது ‘நாரதர்’. பட்டியலோடு நடனம், இசை, சினிமா பற்றிய குறிப்புகளும் சேர்ந்து அதற்கொரு பத்திரிகை வடிவம் தந்தன. ஆனால் இந்த அம்சம் ‘நாரதர்’ பத்திரிகையை இசை, நடனக் கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடைய சாதனமாகச் செய்த்யது. ஒரு நபர் அவரது ‘கடபுடா தடபுடா’ குட்டி ஆஸ்டின் காரை மணிக்குப் பதினைந்து மைல் வேகத்தில் ஓட்டிக் கொண்டு இப்பணியை எந்த அலட்டலும் இல்லாமல் செய்துவந்தார். அவர் ‘ராவுஜி’ என்ற புனைபெயர் கொண்ட சீனிவாசராவ்.

இந்த ‘நாரதர்’ பத்திரிகையில் 1940-களில் ஒரு வாரம் தவறாமல் கிராமபோன் இசைத்தட்டு விளம்பரங்களோடு செய்திகள், குறிப்புகள், விமரிசனங்களும் வரும். அந்த நாளில் ‘கல்கி’ சற்று அளவுக்கதிகமாகவே ஆனந்த விகடனையும் அதன் அதிபர் எஸ்.எஸ்.வாசனையும் விமரிசிக்கும். இதன் ஒரு விளைவு எம்.எஸ்.சுப்புலட்சுமியின் இசைத்தட்டுகள், திரைப்படப் பாடல்கள் குறித்து ‘நாரதர்’ இதழில் அதிக செய்திகள் இருக்காது. ஒரு முறை மட்டும் எம்.எஸ்.ஸின் ஒரு தனிப்பாடல் பற்றிச் சிறு விமர்சனம் வந்தது. பாட்டின் பல்லவி ‘கண்டதுண்டோ கண்ணன் போல் சகியே… கண்டதுண்டோ கண்ணன் போல்”. பல்லவியைப் பாடி அடுத்த பாதிக்குப் போகும்போது, “கண்டதுண்டோ கண்ணன் போலே போலே போலே சகியே” என்றிருக்கும். ‘நாரதர்’ பத்திரிகையில் “இந்தப் போலே போலே போலே விநோதமாக இல்லை?” என்று எழுதியிருந்தது. விளைவு கண்ணன் பற்றிய எண்ணற்ற பாட்டுகளில் யார் காதிலும் விழாமல் பூட்டி வைக்கப்பட்டது இந்தக் “கண்டதுண்டோ” பாட்டு மட்டும்தான். மாறாக இதன் பின்புறமிருந்த வள்ளலார் பாட்டு (“வானத்தின் மீது மயிலாடக் கண்டேன்”) பல நூறு முறைகள் ஒலித்தது.

எம்.எஸ். சுப்புலட்சுமி ‘சேவா சதனம்’ சினிமாவில் நடித்துப் பாடிய பல பாடல்களில் இரண்டு, கச்சேரியிலும் திரும்பத் திரும்பப் பாடுபவையாக அமைந்தன. ஒன்று, சிம்மேந்திர மத்தியம் ராகத்திலான ‘இகபரமெனும்’. இரண்டாவதாக ஹிந்தோளத்தில் ‘மாரமணன்’. இரண்டும் பாபநாசம் சிவன் பாடல்கள். அடுத்து எம்.எஸ். நடித்த ‘சகுந்தலை’ படத்தில் அநேகமாக எல்லாமே வெறும் சினிமாப் பாட்டுக்களாக இருந்துவிட்டன.

அந்த நாளில்தான் டி.கே. பட்டம்மாள், என்.சி. வசந்தகோகிலம் ஆகிய இருவரின் திரைப்பாட்டுப் பிரவேசம் நிகழ்ந்தது. ‘தியாகபூமி’ படத்தில் டி.கே. பட்டம்மாள் பல பாட்டுகள் பாடினார். நிர்தாட்சண்யமாய்க் கூற வேண்டுமானால், படம் ரசிகர்களின் ஆதரவைப் பெறுதவற்கு ஒரு முக்கியக் காரணம், படத்தில் பாடல்கள் பாடப்பட்ட விதம். ‘வேணுகானம்’ என்ற படத்தில் என்.சி. வசந்தகோகிலம் ஒரு வேடமும் ஏற்றுப் பாடவும் செய்தார். இயற்கை, வசந்தகோகிலத்தின் உருவ விஷயத்தில் சில சலுகைகள் தரவில்லை. ஆனால் அவருக்கு அசாத்திய தன்னம்பிக்கை தந்திருந்தது. ‘ஹரிதாஸ்’ படத்தில் மாமனார்-மாமியாரை ஆட்டிப் படைக்கும் மருமகளாகவும், புருஷனைச் சொற்களால் குத்திக் குதறிப் போடும் மனைவியுமான வேடம். அப்படத்தின் வெற்றிக்கு வசந்தகோகிலம் ஒரு முக்கியக் காரணம்.

கதாநாயகனை அழிவுக்குப் பிடித்துத் தள்ளும் பாத்திரத்தை அவர் அவ்வளவு அனாயாசமாக நடித்திராவிட்டால் படத்தின் திருப்புமுனை அவ்வளவு நம்பகமாக அமைந்திராது. எம்.எஸ்.சுப்புலட்சுமி சாத்துவிகத்தையும் பரபரப்பின்மையையும் வெளிப்படுத்தினால், வசந்தகோகிலம் தன்னம்பிக்கை, தைரியம், அதிகாரம் கொண்ட தோற்றத்தை அளித்தார்.

‘கண்டதுண்டோ கண்ணன் போல்’ பாட்டுக்கு எதிர்ப்பாட்டாக வசந்தகோகிலத்திடமிருந்து ஒரு கண்ணன் பாட்டு வந்தது. சுத்தானந்த பாரதியார் எழுதிய ‘குழலோசை கேட்குதம்மா’. எம்.எஸ்ஸின் இசைத்தட்டில் சம்பிரதாய மிருதங்கம், வயலினுடன் சினிமாவுக்குரிய சில வாத்தியங்களும் இருந்தன. வசந்தகோகிலத்தின் இசைத்தட்டிலும் அதே போல ஒரு வேளை அதே வாத்தியக்காரர்களாகக் கூட இருந்திருக்கலாம். என்.சி. வசந்தகோகிலம் முதல் சுற்றில் ஜெயித்துவிட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

எம்.எஸ். சுப்புலட்சுமி ஒரு சிறு புரட்சி நடத்தினார். ‘சாவித்திரி’ என்ற படத்தில் நாரதர் வேடம் அணிந்து அட்டையால் செய்யப்பட்ட மேகங்களினூடே ‘புரூஹி முகுந்தேதி’ என்று பாடிக்கொண்டு திரையில் பிரவேசித்தார். முன்பொருமுறை ‘நந்தனார்’ படத்தில் கே.பி. சுந்தராம்பாள் உடலெல்லாம் போர்த்திய பண்ணைத் தொழிலாளியாக நடித்ததை ஆனந்த விகடனில் கிண்டல் செய்திருந்தார்கள். இப்பொது போர்வை போர்த்திய நாரதர்!

என்.சி. வசந்தகோகிலம் நாரதர் வேடமணிந்து திரையில் தோன்ற நான்காண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது. அந்தப் படத்தில் தியாகராஜ பாகவதரும் டி.ஆர். ராஜகுமாரியும் நடிப்பதாக இருந்தது. ஆனால் அதற்குள் லட்சுமிகாந்தன் கொலை வழக்கு காரணமாக, படத்தில் பாகவதர் நடிக்க முடியவில்லை. அவருக்குப் பதிலாக இன்னொரு பாகவதர்(ஹொன்னப்ப பாகவதர்) நடித்தார். ‘வால்மீகி’ என்ற அந்தப் படத்தில் யூ.ஆர்.ஜீவரத்தினம் என்ற இன்னொரு பாடகி – நடிகையும் நடித்திருந்தார். என்.சி. வசந்தகோகிலம் போர்வை போர்த்திய நாரதராக.

‘கண்ணெடுத்தாகிலும் காணீரோ’ என்ற ஒரு தனிப்பாடலை எம்.எஸ்.சுப்புலட்சுமி இசைத்தட்டில் இரு பக்கங்களிலும் அடங்குவதாக விஸ்தாரமாகப் பாடினார். இங்கு ஒரு தகவல் கூற வேண்டும். அந்த நாளில் இசைத்தட்டுகளை 78 ஆர்.பி.எம். தட்டுகள் என்பார்கள். கிராமபோனில் இந்த இசைத்தட்டு 78 முறை சுற்றினால்தான் ஒலிப்பதிவின்போது பாடியபடி பாட்டைக் கேட்கலாம். இசைத்தட்டில் பக்கத்திற்கு மூன்று நிமிடங்களாக ஆறு நிமிடங்கள். இந்த ஆறு நிமிடங்களில் ராக ஆலாபனை, பாட்டு, சங்கதி, ஸ்வரம், மிருதங்க தனி ஆவர்த்தனம் எல்லாவற்றையும் முடிக்க வேண்டும். செம்மங்குடி சீனிவாசய்யர் இசைத்தட்டு ஒன்றிற்கு பக்கவாத்தியங்கள் சௌடய்யா(வயலின்), பாலக்காடு மணி (மிருதங்கம்). மூன்று ஜாம்பவான்கள் இந்த ஆறு நிமிஷத்துக்குள் அவர்களுடைய அபார வித்தைகளைக் காட்ட வேண்டும். காட்டினார்கள். ஆரபி ராக ‘சால கல்லனா’ என்ற பாட்டு.

எம்.எஸ்.சின் ‘கண்ணெடுத்தாகிலும்’ வந்த சில நாட்களுக்குள் வசந்தகோகிலத்தின் ஒரு புதிய இசைத்தட்டு. இதுவும் சுத்தானந்த பாரதியார் பாடல். முழு இசைத்தட்டாக ‘ஆர்வத் தீயால்’ என்ற பாடலை ராகமாலிகையாக வசந்தகோகிலம் பாடினார்.

இதற்கிடையில் ஹிந்தியிலிருந்து தமிழுக்கு ஒலிமாற்றம் செய்யப்பட்ட ‘ராமராஜ்யம்’ படத்திற்காக டி.கே. பட்டம்மாள், ‘எனக்கு உன்னிரு பதம் கிடைக்க வரம் அருள்வாய்’ என்ற பாடலைப் பாடினர். ‘யாரோ இவர் யாரோ’ என்ற பாடலை எம்.எஸ்., டி.கே. பட்டம்மாள் இருவரும் தனித்தனியாக இசைத்தட்டில் அளித்தார்கள். இந்த மூவர் தவிர, இன்னும் சில பாடகிகளும் 1940-50 ஆண்டுகளைச் சிறப்பித்தார்கள். குமாரி சூடாமணி, அனந்தலட்சுமி சடகோபன், ராதா- ஜெயலட்சுமி சகோதரிகள், பி.ஏ. பெரியநாயகி, டி.வி. ரத்னம் ஆகியோருக்கும் அந்தப் பத்தாண்டு இசை வரலாற்றில் இடம் உண்டு. பெரியநாயகி, ரத்னம் இருவரும் அதிகம் சினிமாவைச் சார்ந்தவர்களாகி விட்டார்கள். ‘ஸ்ரீவள்ளி’ படத்தில் பி.ஏ. பெரியநாயகியின் பாடல்கள் பல ஆண்டுகள் வானொலி நேயர் விருப்ப நிகழ்ச்சிகளில் திரும்பித் திரும்பிக் கேட்கப்பட்டன. இவர்கள் எல்லோரையும் பற்றி ‘நாரதர்’ சீனிவாசராவ் எழுதியிருக்கிறார்.

‘ஆனந்த விகடன்’ பகுத்தறிவுப் போட்டி நின்றதோடு ‘நாரதர்’ பத்திரிகையும் நின்று விட்டது. சொந்தமாகப் பத்திரிகையை மீண்டும் வெளியிட சீனிவாசராவ் முயற்சி செய்தார். வெற்றி பெறவில்லை. இந்திய சுதந்திரம் வந்த சில ஆண்டுகளில் வசந்தகோகிலம் மறைந்தார். மும்மணிகளாக விளங்கி ஒருவருக்கு இன்னொருவர் சளைத்தவரல்ல என்ற சூழ்நிலையில் தமிழ் இசை மேன்மையுற்றதோடு எல்லாத் தரப்பு மக்களும் பகிர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. இப்போது சற்று சோர்வு அடைந்தது. பின்னர் பாடகர்கள் அவரவர்கள் வழியில் பணியாற்றினார்கள். வி.ஜி.பி. நிறுவனம் தவணை முறையில் வானொலிப் பெட்டிகளைத் தமிழ்நாடு முழுவதிலும் நிறைத்தது. இசைத்தட்டு, கிராமபோன் முதலியன மறையத் தொடங்கின. இசைத்தட்டுகள் சிறிது காலம் நீடித்தாலும் அவற்றைக் கேட்க எளியோர்களின் சக்திக்கு அப்பாற்பட்ட ரெகார்ட் பிளேயர் தேவைப்பட்டது. விரைவிலேயே இவை கூட மறைந்துவிட்டன.

இன்று எல்லா ஆட்டோ ரிக்ஷாக்களிலும் ஒலிநாடா ஒலிபெருக்கிகள் காண, கேட்கக் கிடைக்கிறது. தோன்றி ஒரு மாதத்திற்குள் விலகிவிடும் திரைப்படப் பாட்டு, தொலைக்காட்சியில் அடுத்த மாதம் தோன்றி, அதற்கடுத்த மாதம் மறையப்போகிற திரைப்படப் பாட்டு. எம்.எஸ்., வசந்தகோகிலம், பட்டம்மாள் நாட்களில் இருந்த ஆரோக்கியப் போட்டா போட்டி இன்று பொருத்தமே இல்லாமல் போய்விட்டது. இசைத்தட்டால் உருவான ஓர் அபூர்வ சூழ்நிலை இசைத்தட்டோடு மறைந்துவிட்டது.

(நன்றி : தினமணி கதிர்)