ஈத்தேடல்
நிழலுக்குத் துணையாய்
நான் மட்டுமே இருக்கிற அறையில்
வழி தொலைந்து அலைகிறதோ
இந்த ஈப்பறவை?
வண்ணமொளிர் வெளிச்சத்தில்
கண்டிருக்கக் கூடும்
தனக்கான கடவுளையோ
கனியுதிர்வனத்தையோ.
உதைத்தும் உடையாத
சாளரக் கண்ணாடி மீது
ஊர்ந்து வழிகிறது
ஒரு கறுப்புக் கண்ணீர்த் துளி.
கண்ணாடி விலக
வழி புலப்படும்
றெக்கை விரித்தால் பயணம்
தாழ்த்தினால் பாதாளம்.
கரை தாண்டியும்
கடந்து போகட்டும்
கடவுள் கிட்டாதெனினும்
உண்ணக் கள்ளாவது கிடைக்கும்.
ஆற்றில் தத்தளித்துக் கொண்டிருந்ததை
கடலில் தள்ளிவிட்டதாய்
திட்டாதவரைக்கும் சந்தோஷமே.
உறைந்த விழிப்பு
மேலே விழுந்து
உழுதோடும் காற்றில்
சுவாசம் இழுத்து
பயணித்து கொண்டிருக்கிறேன்.
கை
கால் பிருஷ்டம்
மூன்று புள்ளிகளில்
நங்கூரமிட்டிருக்கிறது
என் இருப்பு.
தளை அறுத்து
உறைந்த விழிப்பாய்
சிறிதுநேரம் இருந்துவிட்டு
திரும்பிவிடுகிறேன்.
அதுவரைக்கும்-
என் கூட்டையும்
கூடு தாங்கும்
இந்த பைக்கையும்
பத்திரமாய் பார்த்துக்கொள்ளுங்கள்.