இலட்சியக் கொலைகளும், அலட்சியக் கொலைகளும்

ஒவ்வொரு நாளும் ஏதோ புத்தகம், சஞ்சிகை எதிரில் நிற்கிறது. இன்று மாலை தபாலில் வந்த ஸைன்டிஃபிக் அமெரிக்கன் பத்திரிகையில்- பத்திரிகையின் பெயரைத் தீவிரமாக வாசித்தால், ’ஆக்ஸிமொரான்’ என்று தோன்றும். கொஞ்சம் பரிவோடு வாசித்தால் அந்நாட்டில் அப்படி இருக்கிற ஒரு பங்கு மனிதர்களைச் சொல்கிறது என்று எடுத்துக் கொள்வோமே என்று தாராள குணம் மேலெழும்பும்- அபாரமான சில கட்டுரைகள் உள்ளன. நேர நெருக்கடியில் ஒரு நோட்டம் மட்டும் விட்டேன். படித்தால் மூளை எகிறிக் குதிக்கும் என்று தோன்றியது.

சில கட்டுரைகள் பற்றி: நம் உடலில் மனித உயிரணுக்களைப் போல பத்து மடங்கு அதிகமாக நுண்ணுயிரிகள் இருக்கின்றனவாம். துரித நோட்டம் விடுகையிலேயே தோன்றி மறைந்த எண்ணங்கள். ’நான்’ என்று அசால்டாக நடக்கிறோம், கருத்து சொல்கிறோம், பிறரைக் கொல்ல முடிவு செய்கிறோம், பெரும் ஆறுகளைத் தடுத்து பிரும்மாண்டமான அணைகளைக் கட்டி, ஏராளமான உயிரினங்களின் வாழ்வுப் பாதையை நம் இச்சைப்படி மாற்றி அமைக்கிறோம். காடுகளை அழித்து, ஆற்றுப்படுகைகளை மணல் வாரி, இயற்கையோடு போருக்குப் போகிறோம். லட்சக்கணக்கான மனிதர்களைத் திடீரென்று நகரத்திலிருந்து காடுகளுக்குத் துரத்துகிறோம். அந்த நான் யார்? இதெல்லாம் பல நூறாண்டுக் கேள்விகள்தாமே என்று கேட்கத் தோன்றினால், இல்லை என்கிறது கட்டுரையின் போக்கு. இந்த நான் என்பது உண்மையில் 10 சதவீதமே உள்ள மனித உயிரணுக்களின் தொகுப்பா, இந்த 90 சதவீதமுள்ள நுண்ணுயிர்களின் தொகுப்பா? அது கட்டுரையின் கேள்வி.இதற்கும், முந்தைய நூற்றாண்டுகளின் கேள்விகளுக்கும் வேறுபாடு மட்டுமல்ல, பெரும் பாதை பிரிப்பே உள்ளது.

இன்னொரு கட்டுரையில், சில நேரம் தவறுகள், பல அறிவியல் ஆய்வுகளை முன்னெடுத்துப் போக உதவுகின்றன என்று வாதம் முன்வைக்கப்படுகிறது. குவாண்டம் தகவல் கோட்பாடு என்று இன்று சொல்லப்படும் ஒரு துறை துவங்கக் காரணம் 80களில் ஒரு இயற்பியலாளர், ஒளியின் வேகத்தை விடக் கூடுதலான வேகம் கொண்ட தந்தி முறையைக் கண்டு பிடித்ததாகச் சொன்னதுதான். மிகவுமே நுணுகி நோக்கிய பின்னரே அதில் என்ன தவறு என்று தெரிந்ததாம். அந்தத் தவறைக் கண்டுபிடிக்கப் பயன்படுத்திய அணுகுமுறைகளில் இருந்து கிட்டிய முன் தாவல், மேற்படி க்வாண்டம் தகவல் கோட்பாடு.இதனால் தவறுகளே அறிவியலை முன்னெடுக்கின்றன என்று சொல்வதாக நினைக்கத் தேவை இல்லை. ஒரு நபரின் தவறுகளில் இருந்து ஒரு கூட்டம் சிந்தனையாளர்களுக்குப் புதுத் திறப்புகள் கிட்டலாம் இல்லையா, அதைத்தான் இப்படிச் சொல்கிறார் கட்டுரையாளர்.

தவறுகளை இல்லாதவை போல வரலாற்றைத் திருத்தி அழித்து விடுவது அறிவீனம். அவற்றைத் திரும்பப் பார்க்கும் வகையில் ஆவணப் படுத்துவது அவசியம். கடந்தவற்றை குரோதத்தோடு பார்ப்பதை விட, அவற்றிலிருந்து சரியான விடைகளை எப்படி உருவுவது என்று பார்ப்பதே அறிவுள்ள செயலாகும். தவறுகளே செய்ய மாட்டாதவர் என்று எம்மனிதரையும் உருவகித்துப் பீடமேற்றுவது, நமக்கு நாமே செய்து கொள்ளும் சிதைப்பு. புனிதர்களால் மனித இனம் முன்னேறுவதில்லை, அவர்கள் மனிதருக்கு சுமக்க முடியாத, சுமக்கத் தேவை இல்லாத ஒரு சுமையாகி விடுகிறார்கள். இன்னும் சொன்னால் அறிவியலில் புனிதர் என்று யாரும் இல்லாததாலேயே அது நிரந்தர வாலிபத்தோடு இருக்கிறது, உயிர்த் துடிப்போடு செயல்படும் ஊக்கம் அதற்கு இயல்பு போல அமைந்து விடுகிறது.

நேற்று முன் தினம் மக்ஸ்வீனிஸ் பத்திரிகையின் சமீபத்து இதழ் வந்தது. அதன் வடிவமைப்பில் துவங்கி அச்செழுத்து, காகிதம், உள்ளே உள்ள பல கதைகள், கட்டுரைகள் எங்கு துவங்குவது அதன் புகழ் பாட? இரண்டு நாட்களாயின அந்த இதழைப் படித்து முடிக்க. சாப்பிடுகையில், டாய்லெட்டில் அமர்கையில், வெய்யில் உடலில் உறைக்க சில நிமிடம், கண்ணாடிக் கதவு வழியே மாலைச் சூரியன் சாயும்போது அமர்வார்களே, அப்போது, என்று பல துண்டு துணுக்கு நிமிடங்களில் அதைப் படித்து முடித்தேன். நேற்று இரவு கடைசிக் கதையைப் படிக்கையில் உறக்கம் வந்து அமிழ்த்தியது. முடித்து விட்டு நினைவிழந்தேன். படிக்க இத்தனை அருமையாக உள்ள பத்திரிகையைக் கூட தொடர்ந்து இருந்து வாசிக்க முடியாது ஒரு வாழ்க்கை. இளைஞனாக இருக்கையில் ஒரு நாவலை எடுத்தால் இரண்டு நாட்கள் அசையாமல் ஒரே அறையில் இருந்து வாசிக்க முடிந்திருக்கிறது. [காட்ச் 22, டின் ட்ரம், த க்ளாஸ் பீட் கேம், செம்பருத்தி] வாழ்வில் முன்னேற்றம் இருக்கிறதா என்று கேட்டால், இந்தக் கோணத்தில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கும். ஒரு முன்னேற்றம்- இங்கு மின்சாரம் வெட்டப்படுவது சில வருடங்களில் ஓரிரு முறை, இரண்டு மூன்று நிமிடம் நடந்திருக்கலாம். அது முக்கியமான முன்னேற்றமா? ஆம் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் ஒரு புத்தகத்தைக் கூட இருந்து படிக்க முடியாதது? நிச்சயம் முன்னேற்றமில்லை.

இன்று வால் மக்டெர்மிட் நாவல் ஒன்றை (Retribution) முடிக்கவிருக்கிறேன். முக்கால் தாண்டியாயிற்று. இதையும் பல நாட்களாகப் படித்து வருகிறேன். பத்துப் பக்கம் அங்கும், 20 பக்கம் இங்குமாகப் படித்ததுதான். இடையில் பெர்ண்ட் ஹைன்ரிஹ்ஹின் ‘விண்டர் வோர்ல்ட்’ மறுபடி படிக்க வேண்டி இருக்கிறது. இனி பார்த், டையர் எல்லாம் பாக்கி. இப்படித் துண்டு துண்டாகப் படிப்பானேன்? ஒவ்வொரு புத்தகத்துக்கும் ஒரு குணம் இருக்கிறது. ஓய்வு கிடைக்கும் நேரங்களுக்கென ஒரு குணம் உண்டு. ஓய்வு எத்தனை நேரம் கிட்டும் என்பது சொல்ல முடியாமல் இருந்தால் ஆழ்ந்து படிக்கத் தேவை இல்லாத வகை எழுத்தைப் படிப்பது உதவும். ஓய்வு என்பது சிக்கலான நேரங்களில், சிக்கலான இடங்களில் என்றால், சில நேரம் மிகச் சிக்கலான எழுத்தைப் படிப்பது அவசியமாகக் கூடத் தோன்றுகிறது. இதில் இப்படித்தான் புத்தி போகும் என்று முன் கூட்டிச் சொல்ல முடியும் என்று தோன்றவில்லை.

சென்ற இதழில் நான் எழுதிய கட்டுரையில் உரக்குவியலில் இருந்த எறும்புகள் பற்றி எழுதியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அது சம்பந்தமாக ஒரு கேள்வி அன்றிலிருந்து மனதில் நின்றது. இந்த எறும்புகள் குளிர் மறைந்ததும் வந்தனவா, அல்லது குளிர் காலத்திலும் இந்த உரக்குவியலில் சந்தோஷமாக இருந்தனவா? இதை யோசிக்க ஒரு காரணம், நல்ல குளிர் காலத்தில் இந்தக் குவியல் மீது கொஞ்சம் ஆவி பறப்பதைப் பார்த்திருக்கிறேன். இலைகள் மக்குவதில் உஷ்ணம் பிறக்கிறது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். உஷ்ணம் அதிகமானால் இலைகளை மக்க வைக்க உதவும் பாக்டீரியாக்கள் இறக்க வாய்ப்புண்டு. அதனால்தான் இலைக்குவியல்/ கழிவுக் குவியலைப் புரட்டிக் கொடுப்பது அவசியம். அது உஷ்ணத்தை இறக்கி, குவியலில் உஷ்ணத்தைச் சமப்படுத்தும். ஆவி பறக்குமளவு உஷ்ணம் வருகிற இடத்தில் எறும்புகளால் உலாவ முடியுமா? அல்லது குளிருக்கு இந்த உஷ்ணம் மகிழ்வான இடமாக இருக்குமா?

எறும்புகளுக்குச் சந்தோஷம் உண்டா?இது நமக்குத் தெரிய என்ன வழி? முன்பொரு காலத்தில் நாயகர்களுக்கு இந்தத் திறமைகள் ஏதோ வரப்ரசாதமாகக் கிட்டும். விக்கிரமாதித்தன் பட்டி கதைகளில் வருவது போல – பட்டிக்குதானே மிருகங்களின் பாஷைகள் புரியும்?- நமக்கும் எறும்பு பாஷை தெரியவேண்டும். ஏற்கனவே நாய்களின் குரைப்புகளையும், கோழிகளின் கெக்கலிப்புகளையும் அவை என்ன உணர்ச்சிகளை வெளிக்காட்டுகின்றன என்று கண்டறிய ஒலிகளைப் பதிவு செய்து, அவை எழுப்பப் பட்ட சந்தர்ப்பத்தோடு இணைத்துப் பார்த்து அறிய முயன்று கொண்டிருக்கிறார்கள். நிச்சயம் நாய்களும், கோழிகளும் நம்மோடு என்றில்லாவிடினும், தமக்குள்ளாவது ஏதோ தொடர்பு கொள்ளவே முயல்கின்றன என்று கருதப்படுகிறது. அந்த குரலொலிப்பு முயற்சிகளில் மொழி என்று சொல்லுமளவு என்னதும் உண்டா என்று அறிவதுதான் இந்த ஆய்வுகளின் முயற்சி.

இதே போல தேனிக்கள் எப்படி தாம் கண்டு பிடித்த உணவு இருக்கும் திசையை, இடத்தைச் சக தேனீக்களுக்குச் சுட்டிக் கொடுக்கின்றன என்று அறிவதில் ஆய்வாளர்கள் ஈடுபட்டிருப்பதையும் சுட்ட வேண்டும். இத்தனை ஆயிரம் ஆண்டுகள் கழித்து, அறிவியல் ஆய்வுகள், பழைய சாகசக் கதைகளின் நாயகர்களும், உப நாயகர்களும் அறிந்த கலைகளை மீட்டெடுக்கிறார்கள். அந்தப் பண்டை நாயகர்களுக்கு உண்மையிலேயே இந்த கலைகள், நுண்ணுணர்வுகள் இருந்தனவா, இல்லை அவை கனவை, மானுடருக்கு இருக்க வேண்டிய லட்சிய குணங்களை ஏற்கனவே சாதிக்கப்பட்டனவாகக் காட்டினவா?
இன்று இயற்கையிடமிருந்து விலகி விலகி நாம் போய்விட்ட தூரத்தில் இருந்து நோக்கினால் பண்டை நாயகர்கள் கனவை நிஜம் போல எழுதினார்கள் என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால் ஒருவேளை மிருகங்கள், தாவரங்கள், நதிகள், பாலைகளோடு ஒன்றிய வாழ்க்கை வாழ்ந்த அவர்களுக்கு உண்மையிலேயே பட்சிகள், மிருகங்களோடு ‘பேச’த் தெரிந்திருந்ததோ? நாம் முன்னேறியது போலக் கருதுவதுதான் கனவோ?

இவற்றை இன்னொரு கோணத்தில் பெர்ன்ட் ஹைன்ரிஹ் (Bernd Heinrich) அணுகுகிறார். அவர் கண்டதில், மரமறுக்கும் எறும்புகள் இயல்பாக க்ளிஸரால் அல்லது அது போன்ற ஒரு உறைநிலையை எதிர்க்கும் திரவத்தை உடலில் உற்பத்தி செய்யக் கற்றுக் கொள்கின்றனவாம். குளிர் கூடத் துவங்கும்போது இந்தத் திரவத்தை உற்பத்தி செய்து விடுகின்றன. அது அந்த எறும்புகளை ஒரு மயக்கநிலையில் ஆழ்த்தும். குளிர்காலத்தை இந்த மயக்கநிலையில் முடங்கிக் கிடந்து அவை கடக்கும், தப்பிக்கும். மறுபடி உஷ்ணம் எழத் துவங்கினாலும், சில நாட்கள் தொடர்ந்த உஷ்ணம் இருந்த பிறகே அவை உயிர்ப்பு பெறுகின்றன. அவர் அறிவியல் வழியில் சோதிக்கிறார். அந்த சோதிப்பில்தான் அவை ஒரு உறை எதிர்ப்பு (anti-freeze) திரவத்தை உற்பத்தி செய்கின்றன என்பது அவருக்குத் தெரிகிறது.

அதில் அவர் காண்பது- ஈக்கள் உஷ்ணமான அறைக்குள் வந்ததும் உடனே உயிர்ப்படைந்து பறக்கத் துவங்குகின்றன. எறும்புகள் தொடர்ந்து இரண்டு மூன்று நாள் உஷ்ணமான அறையில் இருந்தால்தான் உயிர்ப்படைகின்றன. ஒரு தடவை உயிர்ப்படைந்த எறும்புகளை மறுபடி கடும் குளிருள்ள வெளிப்புறத்துக்குக் கொண்டு சென்றால் அவை உயிர் பிழைத்து இருப்பதில்லை. குளிர் எதிர்ப்பு திரவத்தை அவற்றால் உடனடியாக உற்பத்தி செய்ய முடியவில்லை என்று தெரிகிறது. மாறாக, இதே போலவே லேடிபேர்ட் வண்டுகள் எனப்படும் வகை வண்டுகளும் கடும் குளிரிலும் பிழைத்திருப்பதைக் காண்கிறார். தன் உஷ்ணமான மர வீட்டில் உள்ளே ஒளிந்திருந்த லேடிபேர்ட் வண்டுகளிலிருந்து ஒரு கூட்டத்தை அள்ளி எடுத்து -14 செல்ஷியஸ் தட்பம் உள்ள தன் குளிர்பதனப் பெட்டியின் உறைபெட்டியில் வைக்கிறார். 148 வண்டுகளில் 64 போலத்தான் பிழைக்கின்றன என்று படித்ததாக நினைவு.

பறவைகள், எறும்புகளோடு பேசிய பட்டிக்கு இந்த விவரங்களெல்லாம் தெரிந்திருக்கவில்லை என்று நினைக்கிறேன். அல்லது பறவைகளோடு பேசியதில் கூட மனிதருக்கு என்ன தேவை அதைத்தான் கேட்டுப் பெற்றார் அவர் என்று தோன்றுகிறது. பெர்ண்ட் ஹைன்ரிஹ் அவற்றோடு பேசும் ஜால வித்தை ஏதும் தெரியாமல், வெளியிலிருந்து நோக்கி, பல்லுயிரினங்களைக் கேட்டுத் தன் இனம் பற்றிய தகவல் பெறாமல், தன் மையமாக யோசிக்காமல், பெறுவது பல்லுயிரினங்களிடையே உள்ள பெரும் உயிர்ப்பு வலை பற்றிய ‘அறிவு’. இது முன்னேற்றமா? எனக்கு ஆம் என்று சொல்லத் தோன்றுகிறது. ஆனால், எப்படி பல்லாயிரம் மனிதர் நடுவே பட்டி போன்ற ஓரிருவருக்கே மிருகங்களோடு பேச முடிந்ததோ, அதே போல பல கோடி மனிதர் நடுவே பெர்ன்ட் ஐப் போல சில நூறு மனிதர்களே –உலகெங்கும் சேர்த்துக் கணக்கிட்டால் கூட அவ்வளவுதான் தேறுவர்- இப்படிப் பல்லுயிரினங்களின் இணைப்பு வலையின் பிரும்மாண்டத்தை நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள் எனலாம். அந்த விஷயத்தில் நாம், மனித இனமாக, முன்னேறி இருக்கிறோமா?

பெர்ன்டின் புத்தகத்தைப் படிக்கையில் அறிவியல் மனோபாவம் எப்படி உலகை அணுகுகிறது, உயிர்களையும் எப்படி அணுகுகிறது என்பது கொஞ்சம் தெளிவாயிற்று. ஆமாம், பள்ளியிலேயே தவளைகளை அறுத்துத்தான் உயிரியல் வகுப்புகளைத் துவக்குகிறார்கள், தெரியும். ஆனால் இந்த வண்டு சோதனை, எறும்பு சோதனை எல்லாம் ஒரு புறம் தேவையற்ற குரூரம் என்று தோன்றினாலும், அவர் அதிலிருந்து என்ன படிப்பினைகளைப் பெறுகிறார் என்று கவனிக்கையில் குரூரத்தின் மீது விமர்சனம் மட்டுப்பட்டு, முடிவுகள் மீது கவனம் போய் விடுகிறது.

பெர்ன்ட் ஹைன்ரிஹ் போன்றவர்கள் அறிவியல் பார்வையைப் பயன்படுத்தினால், நானோ, எறும்பு, புழுக்களை எல்லாம் கிட்டத்தட்ட பக்தியோடு அணுகும் நிலையில் உள்ளேன். இத்தனை சிறு உயிர்களுக்கு இத்தனை அற்புத அறிவா, திறமைகளா என்று வியக்கும் என் மனச்சாய்வால் எனக்குப் பெரும் முன்னேற்றம் கிட்டியதாகச் சொல்ல முடியாது. மனிதரின் மொத்த அறிவுக்கும் ஏதும் பலனில்லை, இந்த ‘அற்புதம்’ பற்றிய உணர்வெழுச்சியால், பொது சமூகத்துக்கு இயற்கையின் பல்லுயிரினங்களின் கூட்டு வலை வாழ்வை அறிந்து செயல்படத் தேவையான ஞானமோ/ நடைமுறை அறிவோ கிட்டாது. அதே நேரம் பெர்ன்ட் போன்றார் இப்படி ஒரு துறையில் ஈடுபடக் காரணமே இந்த அற்புதம் குறித்த தரிசனம் தந்த எழுச்சி சிறு பிராயத்தில் அவரைப் பாதித்திருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. வாழ்வினழகைத் தரிசிக்காத அறிவுக்குத் தேடி அறியும் நாட்டம் வருமா? சிறு பிராயத்தில் அழகால் ஈர்க்கப்படுவதும், அற்புதமாகக் காண்பதும், படிப்படியாக புளகித்தலை விடுத்து, பின்னலுறவுகளின் அமைப்பு நேர்த்தியைக் கண்டு துலக்கம் பெறுவதும் படிப்படி முன்னேறுதல். உண்மையான பிரமிப்பு என்பது பின்னால், ஏராளமான தகவல்களைத் தொகுத்துத் தன்னுள்ளான ’அறிவாக’  அவற்றைக் கண்டடையும்போது கிட்டும், அதன் எழிலே தனி, அதை எப்படியோ தன் சலசலப்புடன் ஓடும் எளிய தெளிவோடை நடையில் பெர்ன்ட் நமக்குக் காட்டி விடுகிறார்.

இன்று அந்த பெர்ண்ட் ஹைன்ரிஹ் புத்தகத்தில் இன்னொரு அத்தியாயத்தைப் படித்தேன். பக்கத்தைச் சும்மா திறந்து படிப்பது என் வழக்கம். அப்படித் திறந்தால், இன்று கிட்டியது ஒரு டயரிக் குறிப்பு. பெர்ன்ட், விடிகாலையில் உறக்கம் போய்விட்டதால் எழுந்து, அருகில் உள்ள குளத்தை நோக்கிப் போகிறார். பறவைகள், ஆட்டர் (Otter), பலவிதமான நீர் எலிகளை எல்லாம் பார்க்க அடிக்கடி போகுமிடம். [அந்தக் குறிப்பைப் படிக்கையில் எனக்கு ஒன்று தெரிந்தது. அவர் என் ’ஜிப்லாக்’ கட்டுரை மாதிரிதான் எழுதுகிறார். பார்க்க- சென்ற சொல்வனம் இதழ். ஒரே ஒரு வித்தியாசம் படு லாகவமாக, நுட்பமாகச் சொற்களைப் பயன்படுத்துகிறார். ஜெர்மன் மொழிக்காரர், என்ன மாதிரி இங்கிலீஷில் எழுதுகிறார்! இங்கே சொந்த மொழியே தாளம் போட வைக்கிறது.] அவருக்கு நீரின், பனியின், தாவரங்களின், பறவைகளின், வண்ணத்துப் பூச்சிகளின் …. எல்லா..களின் இயல்பு பற்றியும் அறிவியல் பூர்வமாகவும், எழிலியல் பூர்வமாகவும் தெரிந்திருக்கிறது. நான் இதுவரை யாரையும் பார்த்துப் பொறாமைப் பட்டதில்லை. இவரைப் பார்த்துப் பொறாமைப் படலாம் போல இருக்கிறது. அது கூட கௌரவமான செயலாக இருக்கும். அப்படி ஒரு இயற்கையில் தோய்ந்த வாழ்க்கை என்ன அருமையாக இருக்கும். எந்த சோகமும், மன அழுத்தமும் தாக்க முடியாத உறை எதிர் திரவம் அந்த அறிவில் தொடர்ந்து ஊறியபடி இருக்கும் என்றுதான் தோன்றுகிறது. அப்படி ஒரு சிந்தனைப் போக்குள்ளவரால் எங்கும் அலகிலா விளையாட்டைக் கண்டு களிப்பதைத் தவிர வேறென்ன செய்ய முடியும்?

நேற்று இரவு 1.50க்கு விழிப்பு வந்தது. 10.மணிக்கே உறங்கியதால் இப்படி என்று தோன்றுகிறது. மறுபடி தொடர்ந்து உறங்க முடியவில்லை. அறை சூடாக இருந்தது. ஜன்னல்களைத் திறந்து வைத்து, மேலே மின் விசிறியை ஓட விட்டேன். அப்படியும் தூங்க முடியவில்லை. பல காரணங்கள். மனது மிகவும் சங்கடமாக, குழப்பமாக, ஆழ்ந்த சலிப்பில் ஊறி இருந்தது. அப்போது படித்த அத்தியாயம்தான் மேற்படி பெர்ண்ட்டின் நாட்குறிப்புப் பக்கங்கள். அவை கொஞ்சம் உயிரூட்டின. மிகச் சுவையான எதையும் ஒரேயடியாகச் சாப்பிடுவதோ, படிப்பதோ, கேட்பதோ எனக்குப் பழக்கமில்லை. நிறுத்தி வைத்து, அதைப் பற்றி யோசித்து விட்டு, அப்புறம் தொடர்வேன். அல்லது ஒருநாள் கழித்து கூடத் தொடர்வேன். சில சமயம் 10 நாட்கள் கூட இடைவெளி வேண்டி இருக்கும். ஜெஃப் டையரின் ’ஜோனா’ புத்தகம் அப்படித்தான் இருக்கிறது.

முன்பு நிறுத்தி இருந்த வால் மக்டர்மிட் புத்தகத்தை எடுத்துத் தொடர்ந்தேன். அதில் ஓரிரு அத்தியாயம் மேலே படிக்கையில் மிகவும் இறுக்கமான ஒரு இடத்தில் கதை வந்து சேர, நான் நின்றேன். மறுபடி மனம் துக்கமானது. காரணம் ஏதும் தெரியவில்லை. புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அந்த அதிகாலைக்கு முந்திய அகால வேளையில் நான் செய்யக்கூடிய வேலைகளை யோசித்தேன், அவற்றோடு ஒப்பிட்டால் இது என்ன பெரிய துக்கம் என்று மக்டர்மிட் புத்தகத்தை எடுத்து விர்ரென்று படித்து முடித்து விட்டேன். 4.50. திடீரென்று ஒரு யோசனை. எழுந்து பல் தேய்த்து, ஷூக்களை அணிந்து, ஒரு இலேசான மேலணியைப் (ஜாக்கெட்) போட்டுக் கொண்டு வெளியே போனேன். நம் ஊரில் காலை 5.30 மணிக்கு இருக்கும் வெளிச்சம், ஆனால் இலேசான அருமையான குளிர். அப்படி ஒரு துல்லியமான நீல வெள்ளை ஒளி. காற்று கண்ணாடி போல இருந்தது. தெரு நீண்ட தெரு. சுமார் ஒரு மைல் போல இருக்கும் தெரு. என் வீடு, இலேசாகச் சரிந்து நீளும் தெருவில் ஒரு கோடி, இன்னொரு கோடியில் ஒரு மையத் தெரு. என் வீடு இருப்பது மேட்டுப் பகுதி. வீட்டு முன் நடைபாதையில் இருந்து முக்கால் மைல் கீழ் நோக்கிப் பார்க்கலாம். தெருவில் ஒரு மனிதர் கூட இல்லை. இத்தனை அருமையான ஒளி, சன்னமான குளிர், புத்துணர்வை உடனே தரும் காற்று, பளீரென்ற பச்சையில் மரங்கள், எங்கும் குதூகலிக்கும், உற்சாகப் பரபரப்பில் புள்ளினங்கள். நூற்றுக் கணக்கான மனிதர்கள் இதேதையும் காணாமல், கேட்காமல் தம் இருண்ட வீடுகளுக்குள் அடைந்திருக்கிறார்கள். ஆங்காங்கே மிகச் சில வீடுகளில் ஓரிரு அறைகளில் ஒளி தெரிகிறது.

நம் ஊரில் ஒரு கிராமத்திலாவது மனிதர்கள் இப்படி ஒரு உற்சாகக் காலையில் படுத்து உறங்குவார்களா? நகர மனிதர்களின் செயல் முறைகள் அடிப்படையிலேயே ஏதோ கோளாறுள்ளவை. நானும் இன்று காலை வரை கோளாறான மனிதன் தான். நாளை? கோளாறு தொடரும் என்பதுதான் விசனம் தரும் விஷயம்.

அப்படி ஒரு பெரும் சரிவு, சைக்கிளில் ஏறி ஒரு இரண்டு மூன்று மிதி மிதித்து விட்டு விட்டால் கிட்டத் தட்ட தெருக் கோடி வரை சைக்கிளை மிதிக்காமல் போய்ச் சேர்ந்து விடலாம். படு வேகமாக இல்லாமல் சீரான வேகமாகக் கிட்டும். மேடு சரிவுகளை இப்படி மெதுவான ஏற்ற இறக்கங்களாக அமைப்பதில் அமெரிக்க சாலை அமைப்பாளர்களின் அணுகல் பிரசித்தம்.
நான் இந்தத் தெருவில் காரையே அப்படித்தான் ஓட்டுவேன். ஓரிரு தடவை அக்ஸிலரேட்டரைச் சிறிது அழுத்தினால் போதும். Cruising என்பார்களே, அப்படி தெருக்கோடி வரை போகலாம். இந்தத் தெருவில் எப்படியுமே 20 மைல் வேகத்துக்கு மேல் போவது ஏற்காது. அந்த வேகத்தை அடைய கொஞ்சம் எஞ்சின் இயக்கத்தை உயர்த்தினால் போதும். இடையில் இரண்டு ஸ்டாப் போர்டுகளுக்காக நின்று தொலைக்க வேண்டும். அப்போது மறுபடி அக்ஸிலரேட்டரை அழுத்தித்தான் கிளம்பி வேகம் பெற முடியும்.
யாருக்கோ தன் வீட்டு வாயிலில் வாகனங்கள் விரைவது பிடிக்கவில்லை, வேகக் குறைப்புக்கு ஸ்டாப் போர்ட் வைக்கச் சொல்லி நகரசபையை வற்புறுத்தி இருக்கிறார்கள். விளைவு நூற்றுக் கணக்கான கார்கள் இந்தத் தெருவில் தேவை இன்றி கூடுதல் பெட்ரோலைப் பல தடவை செலவழிக்க வேண்டி வரும். இப்படித்தான் சிறு அளவுத் தேக்கங்களைத் தனி மனிதர் தமக்குத் தெரிந்த அறிவு பூர்வமான நடவடிக்கைக்காக உற்பத்தி செய்கிறார்கள். பெருந்திரள் அளவில் இவை பெரும் நஷ்டங்களை உண்டாக்குகின்றன. எனில் எதற்கு இத்தனை வாகனங்கள்? உள்ளூரில் பயணம் போக சைக்கிள் போதாதா என்று கேட்கலாம். இப்படி ஒரு கேள்விக்குப் பல பதில் கேள்விகள். கேள்விக் காடுகளில் உலவிடும் நாம் திக்குத் தெரியாத காட்டில்தான் வாழ்கிறோம். உண்மையான இயற்கையான திக்கு மயக்கம் தரும் காடுகளை விட்டு நீங்கி, கருத்துக் காடுகளை விரும்பி வாழ்கிறோம்.

அந்தக் கோடி வரை துல்லியமாகத் தெரிந்தது, இன்று காலை. முக்கியமாக, காற்று சுவாசிக்க சிறிது ஈரமாக, அவ்வளவு சுத்தமாக, உள்ளே சென்றதும் குளிர்வித்து புத்தியை தீட்டிக் கூர் செய்தது. அதெல்லாத்தையும் விட அருமை, பல குரல்களில் பறவைகள் நாற்புறமிருந்தும் கூவிக் கொண்டிருந்தன. ஒரே வகைப் பறவைகளும் இல்லை. நான் இதுவரை கேட்டிராத கூவல்கள். இதெல்லாம் இத்தனை நாளுமே இருந்திருக்கும். எனக்குத்தான் காது செவிடாக இருந்திருக்கிறது.

அப்போது ஒரு எண்ணம் மனதிலோடி, செவிளில் அறைந்த மாதிரி இருந்தது. பெர்ன்ட் ஒரு குளத்தங்கரையில் நின்று பனியின் பல தன்மைகள், நீரின் தன்மை, கரையில் உள்ள மரங்கள், நீர் எலிகள், வாத்துகள், என்று எதையெல்லாமோ வருணிக்கிறார். ஒவ்வொன்றும் எப்படித் தொடர்புள்ளன என்று சுலபமாக ஒரு சிக்கலும் இல்லாமல் எழுதிப் போகிறார். எனக்கு இத்தனை கூவல்களில் ஒன்றைக்கூட இனம் காண முடியவில்லை. காது மட்டுமல்ல, புத்தியும் செவிடுதான்.

சரிதான், பெரிய மகிழ்ச்சி நடுவே எப்படித் துக்கப்படுவது என்று தேடிக் கண்டு பிடிக்கும் நபர் நான் என்று கருத வேண்டாம்- இவ்வளவு வருடம் என்னதான் கற்று, என்ன அனுபவித்திருக்கிறேன்? இத்தனை பிரமாதமான இயற்கை சுற்றிப் பாடி, ஆடி, காற்றாக ஊதி, மணமாக வீசி இருந்திருக்கிறது. இது போன்ற சூழலில் சுமார் 25 வருடங்கள் இருந்திருக்கிறேன். எப்போதோ ஓரிரு தினங்கள் மட்டுமே இந்த அருமை புத்தியில் உறைத்திருக்கிறது. இத்தனைக்கும் இயற்கையிடமிருந்து பயந்தோடும் நபரும் இல்லை. நகரங்களே எனக்கு ஏற்காதவை. சிறு ஊர்களும், ஆளில்லாத அத்துவானங்களும் என்னைப் பயமுறுத்துவதில்லை. விருப்பமானவைதான்.

முன்பெல்லாம் பல மலைக்காடுகளில் கூடாரமடித்துக்கூட தங்கியிருக்கிறேன்., வருடத்துக்கு ஓரிரு முறையாவது, பல காலம் நடந்த ஒரு விஷயம் அது. அது எனது 40களின் இறுதி வரை நடந்தது. இல்லை, இல்லை, சுமார் ஆறு வருடம் முன்பு வரை கூட குடும்பத்தோடும் நண்பர்கள் சூழவும் இருந்து அதைச் செய்திருக்கிறோம். சிறுவர்களையும், பதின்ம இளைஞர்களையும் நகர வயிற்றுப் பையிலிருந்து எடுத்து இப்படி மலைக்காடுகள் நடுவே தங்க விட்டால், திக்பிரமித்து விட்டு, பின் பூச்சிகள், பறவைகள், தாவரங்களோடு பரிச்சயத்தை உண்டாக்கி, புதுப்பித்துக் கொண்டு தாமும் இன்னொரு காட்டு விலங்கு போலத்தான் என்று புரிந்து கொள்கிறார்களே அது காணக் கிட்டுவது விலை மதிக்கவொண்ணா அனுபவம். ஒரு சிறு நீர்வீழ்ச்சியில் குளிப்பது கூட மனதில் நெடுங்காலம் நின்று ஜொலிக்கும் மரகதமாகவே இருக்கும்.

அந்தக் காடுகளில் இயற்கையைப் பார்த்துப் பிரமிக்காமல் இருக்க முடியாது. ஒன்றுமில்லை என்றால், அந்த பிரும்மாண்டத்தின் முன் நம் பொடி உருவே அந்த வியப்பைத் தட்டி மனதெங்கும் வியாபிக்க வைத்து விடும். கடல்கரையில் நின்று தம் பொருட்படுத்தவியலாத சிற்றுருவை உடனே தரிசிக்காத மனிதர் யார்? தினம் கடலோடும் மாலுமிகள் கூட கடலைப் பார்த்து அதிசயிக்காமல் இருக்க வாய்ப்பில்லை.

இன்று காலை போன ஒரு மணி நேர நடையில் கொஞ்ச தூரம் போனதும் தோன்றியது, மலை, காடு என்று தேடிப் போக வேண்டாம், இந்த நகரத்தின் மையத்திலேயே இத்தனை இயற்கை வளம் இருக்கிறது இதை எப்படி அனுபவிப்பது என்று தெரிந்தால் போதும் அதுவே பெரும் உத்வேகத்தைத் தரும் என்று தோன்றியது. இனி பறவைகளைக் கூவலை வைத்து அவற்றை எப்படி இனம் காணுவது என்று பார்க்க வேண்டும். அதோடு அவை இந்த நகர் நடு மரங்கள், புல் வெளிகள், மைதானங்களில் என்ன கண்டெடுத்துக் கொத்திக் கொத்தித் தின்னும் என்றும் அறிய முடிந்தால் அது ஒரு புதுப் பயணமாகவே இருக்கும் என்று தோன்றியது.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி சொன்னது நினைவிருக்கிறது. அனுபவத்தைப் பகுத்து, சொற்சிறையில் அடைத்துத்தான் அதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்றில்லை, சும்மா சொல்லில்லாமல் வெறும் செவி அனுபவமாகத் துய்த்தாலும் ஒரு அனுபூதி கிட்டும் என்பார். ஆனால் அந்த மாதிரி நான் இப்படி அதிகாலையில் இயற்கையைத் துய்க்கப் போகவில்லை என்பதைச் சொல்லி விடுகிறேன். துய்ப்பது என்பதை விழிப்போடு செய்ய எனக்குத் தெரியவில்லை. அது தன்னியல்பாக நடப்பதையே விரும்புகிறேன். மாறாக அனுபவிப்பதைப் பிரித்துப் பகுப்பது இயல்பாகச் செய்யத் தோன்றுகிறது. இப்படி ஒரு மனச்சாய்வை முன்பு மேற்கத்திய மனோபாவம் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். இன்றைய காலவெளியில் ஏராளமான இந்தியரின் மனோரயில்களும் இந்த நிலையத்தில் வந்து சேர்ந்தாயிற்று, நாள் தோறும் இந்தியக் கல்வி நிறுவனங்களில் இருந்து இறங்கி வருகிற இளைஞர்கள் இதே விலகல் மனோபாவத்தில் வந்து கலக்கிறார்கள் போலிருக்கிறது.

***    ***   ***

சமீபத்து வாரங்களில் பகலில், கண்ட நேரத்தில் அயர்ச்சி வந்து வீழ்த்தி விடுகிறது. இப்படி இத்தனை வருடங்களாக ஆனதில்லை. இத்தனைக்கும் சென்ற வருடங்களில் ஏதேதோ உடல் உபாதை எல்லாம் இருந்தன. தோள் வலி இத்தியாதி. இந்த வருடம் அத்தனை இல்லை. குறிப்பாக லாப்டாப் பயன்படுத்தத் துவங்கியதில் இருந்து முதுகுவலி, தோள்வலி எல்லாம் எந்நேரமும் இருப்பது மிகக் குறைந்து விட்டது. மாறாக குளிர் காலம் போய் வசந்தம் வருகையில் ஒரு மனவெழுச்சி வரும், அதை இந்த வருடம் காணவில்லை. அல்லது அது ஒவ்வொரு நாள் வந்து அறியப்படாமல் காணாமல் போய் விடுகிறது. ஒவ்வொரு பத்தாண்டைக் கடக்கும்போதும் மனிதர் எதெதையோ பயணச் சோர்வில் கை நழுவ விடுகிறார்கள் போலிருக்கிறது.

நேற்று ஒரு கட்டுரையிலோ, டிவி ப்ரொக்ராமிலோ பார்த்தது. இல்லை, சைண்டிஃபிக் அமெரிக்கனில் படித்தேன் என்று நினைக்கிறேன். ஒரு ஆய்வில் 10 இளைஞர்களுக்கு ஒரு தொகை கொடுத்து, இரண்டு மாதமோ என்னவோ நாளில் பெருநேரம் படுத்த படுக்கையாய் இருக்கச் சொன்னார்களாம். முன்னும் பின்னும் சோதித்ததில், இரண்டு மாதத்தில் அவர்களுக்கு தசை வலு இழப்பும், எலும்புத் திணிவு (bone density)யும் குறைந்திருந்ததோடு, நீரிழிவு நோய்க்கு முந்தைய நிலையில் அவர்கள் உடல் வந்து சேர்ந்திருந்ததாம்.

நான் பல மாதங்களாக நடை போவதில்லை. உடற்பயிற்சி செய்யவில்லை. சமீபத்தில் நிறைய நேரம் தூங்கி விடுகிறேன். இதைச் சரி செய்ய வேண்டும் என்று நேற்று நினைத்தேன். நடு இரவில் விழித்துத் தொடர்ந்து படித்தபடியே இருக்கையில் இன்று காலை 5 மணி ஆகி விட்டது. உறக்கம் வரவில்லை, ஆனால் அயர்ச்சியாக இருந்தது. சரி என்று திடீர் முடிவில் ஒரு மணி நடக்க உத்தேசித்தேன். தினம் ஒரு மணி நடந்து கொஞ்சம் தெம்பு வந்த உடன், தேகப்பயிற்சிகளைத் துவங்கலாம் என்று நினைப்பு.

பெர்ண்ட் புத்தகம் படித்ததில் இந்தப் பறவைகளின் பெரும் கூவல் உற்சாகமாக இருந்தது. ஆனால், பறவைகள் மட்டுமா கூவின? தெருவில் எங்கும் கண்டவை பூனைகள். பல வீடுகளில் பூனைகள் வீட்டுக்குள்ளிருந்து வெளி வந்தும், வீடு திரும்பும் நோக்கோடும், சாலைகளிலும் உலவின. அதைப் பார்த்து வருத்தமாக இருந்தது. ஏனெனில் அமெரிக்கருக்கு இருக்கும் அபத்தமான, பூனை மீதான காதல் என்பது, வருடந்தோறும் மிலியன்கள் கணக்கில் சிறு பறவைகளின் சாவுக்குக் காரணமாகின்றது என்று சென்ற வாரம்தான் படித்தேன். இந்தப் பூனைகள் வீடுகளில் நல்ல தீனியைத் தின்று விட்டுக் குண்டாக இருப்பவை. இவற்றுக்குப் பறவைகள் உணவுக்காகவோ, பசிக்கோ தேவை இல்லை. ஆனால் பூனையின் குணமான வேட்டையாடும் உந்துதலுக்காக இவை சிறு பறவைகளை, அணில்களை எல்லாம் வேட்டையாடிக் கொல்கின்றன. அவற்றைத் தின்பதும் இல்லை. ஆனாலும், மிருகங்கள் இப்படி பசிக்காக, உணவுக்காக இல்லாது வேட்டையாடுவது ஸேடிஸம் என்று சொல்ல முடியாது. [நண்பரொருவர் கடிதத்தில் இதை ஜூஸேடிஸம் (Zoosadism) என்று சொல்லலாமா என்று கேட்டிருந்தார்.]

ஸாட்(Sade) என்பாரின் பெயரை ஒட்டி வந்த சொல் ஸேடிஸம். ஃப்ரெஞ்சுப் புரட்சியின் நாயகர்களில் இவர் ஒருவர். இது குறித்துத் தனியாக இன்னொரு தடவை எழுத வேண்டும். ஸேட் பாலுறவு முயற்சிகளில் பெண்களிடம் குரூரமாக நடந்தவர் என்று சொல்லப்படுகிறது. இதை வரலாறை எழுதியவர்களின் ஒழுக்கப் பார்வையில் கிட்டிய முடிவாக மட்டும் பார்த்து ஒதுக்க முடியவில்லை. அவர் இப்படி வன்முறை செய்து கொடுமைப்படுத்தியதாக, அடிக்கடி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் வளர்ந்ததோ கிருஸ்தவ பாதிரி, கன்னியாஸ்திரீக்கள் நடுவே. படித்ததும் ஒரு ஜெசுவட் பள்ளி/ கல்லூரியில். இந்தச் சூழலே அவரை மேற்படி அபரிமிதமான நடத்தைகளில் ஆழத் தூண்டியது என்று கூட சில ஆய்வாளர்கள் கருதுகிறார்கள். கட்டுப்பாட்டாலோ, அடைத்து வைக்கப்பட்டதாலோ அவர் இப்படி புத்தி பேதலித்தார் என்று சொல்லி விட முடியாது. ஏனெனில் இவருடைய பிள்ளைப் பிராயச் சூழலில் இருந்த பாதிப்புகளில் வோல்டேய்ர் எனப்படும் ஃப்ரெஞ்சு சிந்தனையாளரும் ஒருவர் என்று தெரிகிறது.

சூழல்தான் இவரை இப்படி வன்முறையாளராக்கியது என்று சொல்ல முடியுமா என்றால், அவ்வளவு சுலபமான சமன்பாடுகளுள்ள உயிரினமா மனிதர்? சிலர் பிறப்பிலேயே இப்படி வக்கிர புத்தியோடு பிறக்கிறார்கள் போலிருக்கிறது. இவரும் சரி, இவர் போன்றவர்களும் சரி அனேகமாகச் சக மனிதர்களைக் குரூர வதைகளுக்கு உட்படுத்துவதில்தான் மகிழ்ச்சி காண்கிறார்கள். மிருகங்களைக் கொடுமைப் படுத்துவதை ஜூஸாடிஸம் என்று சொல்வது மிருகங்களை அனாவசியமாக இன்னொரு சாக்கடையில் ஆழ்த்துவது என்று நினைக்கிறேன். மிருகங்களிடம் என்னென்னவோ பிரச்சினையான நடத்தைகள் உண்டு. அதற்காக நம் உளைச்சல்கள், மனப்பிறழ்வுகளை அவற்றின் மீது சுமத்துவது பயன் தராத செயல். மேலும் சாடுடைய பெயரை மேன்மேலும் உயிர்ப்பித்து அதன் மீது சேறு பூசுவது நமக்கு ஒரு பயனும் கொடுக்காத செயல்.

அது எப்படியோ போகட்டும். இங்கிலீஷ் மொழியை நம்மால் திருத்த முடியாது.

*** ^^^***

பூனைகள் பறவைகளைக் கொல்வது அவற்றின் இயல்பான வேட்டையாடும் குணம். பசிக்கோ, உணவுத் தேவைக்கோ எனக் கொல்லாமல், சும்மா கொல்வது, இப்பூனைகளின்  ‘நாகரீகப்பட்ட’ வாழ்வில் உள்ள  அபரிமித உணவு அளிப்பில் வேட்டையாடி உண்ண இடமில்லை என்பதால் எழும் பிரச்சினை. இதைத் தெரிந்த அமெரிக்கரும், யூரோப்பியரும் பூனைகளை வெளியில் போய் வர அனுமதிக்கிறார்கள். இல்லையேல் அவை வீட்டில் உள்ள சோஃபா, மேலும் இதர ஆசனங்களை தம் நகங்களால் பிராண்டிக் கிழித்து பெரும் நாசத்தை விளைக்கும். ஆனால் சில பூனைகள் வீட்டுப் பூனைகள். அவை வீட்டை விட்டு வெளியில் போக விரும்புவதில்லை. பொதுவாகப் பெரும்பாலான பூனைகள் வீட்டை விட்டுச் சிறிது நேரமாவது வெளியில் போகவே விரும்புகின்றன.

என் எதிர் வீட்டுப் பூனை வெளிப் பூனை. தம்பதிகள் நாள் பூராவும் வேலைக்குப் போகிறவர்கள். அவர்கள் காலை 7 மணிக்குப் போகிற போது பூனை வெளியே வந்து விடுகிறது. நாள் பூரா திரிகிறது. வீட்டுப் பின் கதவில் சிறு திறப்பு உண்டு. அது இரு புறமும் திறக்கும் ஒரு அசையும் கட்டையால் மூடப்பட்டிருக்கும். பூனை அதைத் தள்ளினால் உள்ளே திறக்கும், பூனை வீட்டுக்குள் போய் இருக்கலாம், உள்ளிருந்து தள்ளினால் வெளியே திறக்கும், பூனை வெளியே வந்து விட முடியும்.

இந்தப் பூனை அத்தனை சாமர்த்தியமானதில்லை என்று தோன்றுகிறது. ஏனெனில் பல நேரம் வீட்டுப் பின் கதவில் இந்தத் திறப்பு இருப்பது தெரியாமல் முன் கதவருகே உட்கார்ந்து தம்பதியரில் யாராவது வீடு திரும்பக் காத்திருக்கும். அல்லது காலியான வீட்டில் இருப்பது அதற்குப் பிடிக்கவில்லையோ என்னவோ. பல நேரமும் எங்கள் தோட்டத்திலோ அருகாமைத் தோட்டங்களிலோ அணில், பறவைகளை வேட்டையாட இது முயல்கிறது. இது வெற்றி பெற்று நான் பார்க்கவில்லை. அதைத் துரத்த, அல்லது இங்கிருந்து அகற்ற என்னால் முடிவதில்லை.

இப்படித் தெருவில் நெடுக- ஒரு மைல் நீளத் தெருவில் சுமார் 100 வீடுகளிருக்கும்- பூனைகள் உலவுவதால் என்ன விளைவுகள் என்று சமீபத்தில்தான் எனக்கு உறைத்தது. பூனைகள் அமெரிக்காவில் லட்சக்கணக்கான சிறு பறவைகளைக் கொல்கின்றன என்று படித்த போதுதான் எனக்குப் பிரச்சினையின் பரிமாணம் தெரிந்தது. லெனினியம்/ஸ்டாலினியம் எத்தனை லட்சம் பேரைக் கொன்றன என்பதை மொத்தமாகத் தொகுத்துப் பார்த்தால்தானே புரிகிறது? கம்யூனிசத்தின் பலிகளை லட்சிய பலிகள் என்று சொன்னால் முதலிய அமைப்பு இந்த மாதிரியான பலிகள் குறித்து அலட்சிய பாவம் கொண்டு, அது சம்பந்தமான குற்ற உணர்வு எழக்கூட வழியில்லாத குழந்தைமை தன்னுடையதெனப் பாவித்துக் கொண்டிருக்கிறது.

அலட்சிய வன்முறை என்பது மிகவும் கவனிக்கப்பட வேண்டிய ஒரு நடத்தை. நிகொலாய் சௌஷெஸ்கு, மாஓ, ழான் க்ளோட் செவாலியே (ஹைட்டி நாட்டு சர்வாதிகாரி), ஆர்ஜண்டினிய ராணுவ ஆட்சியாளர்கள், பினோஷே இப்படி ஏராளமான ஆட்சியாளர்களும், அவர்களுக்கு உதவிய சாதாரணக் கொலையாளிகளும் அலட்சிய வன்முறையில் ஊறியவர்களாக இருக்கிறார்கள். இடதும், வலதும் என்று சாரி வகுத்த இவர்களை நம்மால் தண்டிக்க முடிகிறதோ இல்லையோ, ஏதோ ஒரு காலத்தில் இவர்களது குற்றங்களைக் கணக்கெடுத்து உலகமகாக் கொலையாளிகள் பட்டியலில் இவர்களுக்குரிய இடத்தை நிர்ணயிக்க முடிகிறது.ஒவ்வொரு நாடும் இப்படிப்பட்ட கொலையாளிகளை ஏதோ செய்து மறைக்கவோ, மறக்கவோ முயல்கிறது என்பது ஒரு பிரச்சினையே.

ஒப்பீட்டில், அலட்சியத்தால், தானும் மடிந்து பல சகபயணிகளையும் மாள்விக்கிற இளைஞரகள் அமெரிக்காவில் பல்லாயிரம். இவர்களில் பெரும்பங்கு மிதமிஞ்சிய குடிபோதையில் கார் ஓட்டுவதால் இப்படிக் கொலைஞர்களாகிறார்கள். இவர்களில் அனேகமான பேர், சிறை தண்டனையை அனுபவிப்பதோடு, வாழ்வில் பெரும் நாசத்தைச் சந்திக்கிறார்கள்.

நம் நாட்டில் குடிவெறியில் நடைபாதையில் உறங்குவோர் மீது காரை ஏற்றி கொன்ற பல ‘நட்சத்திரங்கள்’, தொழிலதிபர்களின் பிள்ளைகள் என்று ஒரு பட்டியலே போட முடியலாம். இவர்கள் ஏதோ ஒரு நியாயத்தைக் கற்பித்து நீதி மன்றத்தில் என்னவோ வாதாடி, இறுதியில் சுதந்திரமாகத் திரிகிறார்கள். இவர்கள் அமர்த்தும் உயர்ந்த விலை வழக்கறிஞர்கள் வாதப் பிரதி வாதங்களால்  இவர்களை விடுவிப்பதை எந்தக் குற்ற உணர்வுமில்லாமல் சகஜமாகச் செய்து விட்டுத் தம் மாளிகைகளுக்குத் திரும்புகிறார்கள்.

இந்த வகை அலட்சியத்தால் கொல்வதன் இன்னொரு வடிவம்தான் ஆஃப்கனிஸ்தான் இராக் போனற நாடுகளில் அமெரிக்க ராணுவத்தினர் பல பத்து பேர்களைத் திடீரென்று சுட்டுக் கொல்வது, நார்வே நாட்டில் பல பத்துக் குழந்தைகளைச் சுட்டும் குண்டெறிந்தும் ஒரு நார்வீஜிய இனவெறியன் கொன்றது, தொடர்ந்து பல நூறு குண்டு வெடிப்புகளை நிகழ்த்தி வஹ்ஹாபியர்களும், அல்-கைதாவினரும் பல நூறு மக்களைக் கொல்வது,இந்தியாவின் மாவோயிஸ வியாதிகள் தினமும் பலரைக் கொல்வது போன்றன எல்லாம். இவர்களில் யாரைக் கேட்டாலும் ஏதோ ஒரு இலட்சியத்தை முன்வைத்து அதற்காகக் கொல்வதாக வாதிடுவதோடு, ஒரு குற்ற உணர்வும் இல்லாது மார் வீங்கித் திரிவார்கள். இதற்கு இவர்களை நாயகர்களாகச் சித்திரிக்க ஒரு கூட்டம் அறிவிலிகள், ‘அறிவாளிகள்’ என்ற பெயரோடு உலவுவது மேலும் பெரிய அபத்தம்.

தனி மனிதனாகக் குடித்துவிட்டு காரையோட்டி நடைபாதையில் உறங்கும் ஏழை பாழைகளைக் கொல்லும் பணக்கார வாலிபர்களோடு, ஆதர்சங்களுக்காக ஆயுதமேந்தி காடுகளில் கொல்லும் மாவோயிஸ்டுகளை ஒப்பிடுகிறேன் என்றால் இதுதான் காரணம் : தாம் கருதும் மதிப்பீடுகளுக்கு மொத்த ஜனத்திரள் இணங்க வேண்டும், அடிபணிய வேண்டும் என்ற உருப்பெருத்த தன்மையச் சிந்தனை, அந்தச் சட்டகத்துக்கு வெளியே இருப்பவர்களின் நியாயங்களைக் கண்கொண்டும் பாராத அலட்சியம். இவை ரோபஸ்பியரின் நீட்சி, அந்தச் சிந்தனையின் மூலகர்த்தாக்களின் ஆழ்ந்த அலட்சியத்தின் இன்றைய வெளிப்பாடு என்று எளிதாகவே இனம் காணமுடியும் இந்த மனநோயாளிகளை.

அதே நேரம் பிறரின் மதிப்பீடுகள் பற்றிய அலட்சியத்தால்தான் ஆள்வோரும், சிந்தனையாளரும் வன்முறையை மேற்கொள்கிறார்/ ஆதரிக்கிறார் என்று சொல்ல முடியாது. அவர்கள் பெரும் திரள் மனிதர்களையே மதிப்பதில்லை. அதில் ஒரு விசித்திரம் என்னவென்றால் அந்த மக்களை விடுவிக்கவே தாம் பிறந்திருப்பதாகக்கூட இவர்கள் நம்புகிறார்கள். ‘False consciousness’ என்ற கருத்துருவே இப்படி ஒரு சால்ஜாப்பைக் கைக்கொள்ள உருவான கருத்தாக்கம்தான். மரபுச் சிந்தனையில் ‘அதை நாயென்று அறிவித்துத் தூக்கிலிடு’ என்று ஒரு வழக்கு உண்டு. அதை இவர்கள் எளிதாகவே செய்வார்கள். எதிர்ப்புரட்சிக்காரர் என்று அறிவித்து, ரோபஸ்பியரின் கும்பல் பல்லாயிரக்கணக்கான பாட்டாளிகளை, விவசாயிகளைக் கொன்றது. அதே முறைகள்தான் ‘சோசலிசக் குடியரசுகளால்’ கையாளப்பட்டன. இன்று மேற்கண்ட இந்திய மனநோயாளிகளும் இதே கருத்தைத்தான் முன்வைப்பார்கள்.

இதற்கு நேரெதிர் நிலைப்பாடு க்வேக்கரியக்கத்தினருடையது. குழுவில் அனைத்து நபர்களும் ஒத்துக் கொள்ளும் வரை அவர்கள் ஒரு முடிவை ஏற்க மாட்டார்கள், நடைமுறைப்படுத்த மாட்டார்கள். பெரும்பான்மையிசம் இங்கு கிடையாது. ஆனால் குழு முழுதும் ஒத்துக் கொள்ளும் வரை கூட்டத்தை நிறுத்தவும் மாட்டார்கள். பலப் பல நாட்கள் கூடினாலும் சர்ச்சித்துக் கொண்டே இருப்பார்கள். இடைவிடாமல் இல்லை. கூட்ட நேரம் முடிந்ததும் கலைந்து, அடுத்த நாள் கூடி இப்படித்தான். இந்த வழிமுறையை மெச்சியவர்களில் காந்தி ஒருவர். அதனால்தான் புனா ஒப்பந்தத்துக்கு அம்பேத்கரை இழுக்க உண்ணாவிரதத்தை மேற்கொண்டார். அதை ஒரு வித வன்முறை, blackmailing என்று பார்ப்பவர்களும் உண்டு.

இதன் ஒரு வடிவை நான் சமீபத்தில் ஒரு குழுவில் உறுப்பினராக இருந்த போது அனுபவித்தேன். மூன்று நாட்களுக்குப் பிறகு அந்த அறையில், கூட இருந்தவர்களைப் பார்க்கவும் சலிப்பாகவே இருந்தது. ஆனால் நல்ல வேளையாக முக்கால் பங்கு உறுப்பினர் ஒத்துக் கொண்டால் போதும் என்று சொல்லப்பட்டிருந்தது. 12 பேரில் 10 பேரை ஒரு முடிவுக்கு அழைத்து வர நான்கு நாட்கள் ஆயின. நான்காம் நாளின் நடுவில் ஒப்புதல் கிட்டிய போது பெரும்பான்மைக்கும் மகிழ்ச்சி இல்லை, சிறுபான்மைக்கும் மகிழ்ச்சி இல்லை. எல்லாரும் இந்த முடிவுக்கு வருவதைத் தாண்டி வேறு வழி அப்போதைக்கு இல்லை என்பதை நன்கு அறிந்திருந்தார்கள். சலிப்பால் வெல்லுதல் என்பது இதுதான் போலும். அந்த நேரம், அந்தத் தகவல்களின் அடிப்படையில், அந்த விதிமுறைகளின் கீழ் அந்த முடிவுதான் அணுகிப் பெறக்கூடியதாக இருந்தது. விதிமுறைகளையே உடைப்போம் என்று துவங்கினால்?

யாருக்காக, யார் என்ன விதிமுறைகளை உடைப்பது? மாற்றாக முன்வைக்கப்படும் விதிமுறைகளின் நியாயத்தை யார் சோதித்தது? அதுவுமே என்னென்ன நிலைகளில் இப்படிக் குறைப்பட்ட, மூளியான நியாயங்களைக் கொடுக்கும் என்று உடைக்கச் சொல்வோருக்கு எப்படித் தெரியும்?

க்வேக்கர் (Quaker) என்கிற சொல்லின் வேர் விசித்திரமானது. கடவுளின் முன் இறுதி நாளின் போது தம்மை விசாரித்த உள்ளூர் நீதிபதி நடுங்க வேண்டி இருக்கும் என்று இந்தக் குழுவின் தலைவர் ஒருவர் வாதிடுகிறார். அதிலிருந்தும், பிரார்த்தனையில் உடல் நடுங்கப் பிரார்த்திப்பவர்கள் என்ற அர்த்தத்திலும் இந்தப் பெயர் வந்திருக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.

இங்கு துவக்கத்தில் பார்த்தபடி, இந்தப் பிரார்த்தனை மனோபாவத்தால் சுயத்துக்கு ஏதும் மகிழ்வு, அல்லது சமாதானம் கிட்டலாமே தவிர புற உலகின் உறவிணைப்புகளின் சிக்கலை வெளிப்படுத்தும் திறன் கிட்டுமா என்பது ஐயமே. பிரார்த்தனை என்பதைச் சுயக் கட்டுப்பாட்டுக்குப் பயன்படுத்துவார் நிறைய உண்டு. பிறரைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்துவாரும் உண்டு. பிறரை அச்சுறுத்தப் பயன்படுத்துவாரும் உண்டு. க்வேக்கர்கள் பெரும்பாலும் தன்னைக் கட்டுப்படுத்தவும், குழுவை ஒன்றிணைக்கவும் பிரார்த்தனைகளைப் பயன்படுத்தி இருப்பதாகத் தெரிகிறது.இந்த இரண்டு உத்திகளும் அக்குழுவுக்கு அத்தனை உதவியதாகத் தெரிகிறதா? இத்தனை ஆண்டுகளில் அக்குழு வளரவில்லை என்பதும், அதன் கிளைப்புகள் படிப்படியாக, ஊடகங்களின் வளர்ச்சியே போல வடிவுகள் மாறி இன்று ஜனநாயகப்பட்ட, திரள் பண்பாட்டு வடிவுகளையே நம்பி இயங்குகின்றன என்பதும் பல வகை முடிவுகளை நமக்குச் சுட்டுகின்றன.

மொத்தத்தில் பார்த்தால் மதிப்பீட்டு அலட்சியத்தில் வெறுப்பு/ கொலைவெறி பிறக்கிறது என்பது கூடதிகமாகக் கருத்துகளுக்கு வலிமை கொடுக்கும் அணுகல். பல நேரம் நடத்தை, வாழ்நிலைகள், முன்னனுபவங்கள், வெறும் அதிகாரத் திமிர், எளியார் மீது வென்றவருக்கு எழும் அலட்சியம், கற்பனை வறட்சி (அத்தனை பெரிய திரளின் துன்பங்களைப் பார்க்க முடியாமை) போன்ற ஏராளமான காரணங்கள் இருக்கலாம்.

இன்றைய நிலையில் லட்சியத்திற்காகக் கொலைகளுக்கோ, அலட்சியத்தாலெழும் பலிகளுக்கோ எதிராக நானும் நீங்களும் தீனமாக, ஆனால் விடாமல் குரலெழுப்புவதைத் தவிர வேறு எதுவும் செய்வதற்கில்லை.

காட்டாக, வேறொரு அலட்சிய பலி இருக்கிறது. இதில் பலியாகுபவர்களுக்கு யாரும் அழுவதில்லை. இந்த பலிகளுக்கு யாரையும் சிறையில் அடைக்க முடியாது. ஒரு வகையில் குரூரம் என்றே சொல்லலாம்- பலியாகும் இவர்கள் நம் சந்ததியர், இருந்தாலும் நாம் விருந்துகளில் இந்த பலிகளைக் கொண்டாடுகிறோம்.

ஸ்டீவ் ஜோன்ஸ் என்ற அறிவியலாளர் 2025ல், இங்கே அமெரிக்காவில் மூன்றுக்கு இரண்டு பேர் மிகை எடை கொண்டவர்களாக இருப்பார்கள் என்று கணிக்கிறார். இதற்கு நாம் உண்ணும் உணவு, உடற்பயிற்சியின்மை போன்றவை முக்கிய காரணங்களாக இருந்தாலும், நம் மரபணுக்களுக்கும் பங்குண்டு. நம்மில் அனைவரும் அளவாக உணவு உட்கொள்ளக்கூடியவர்களாகவோ மிகை உணவை செரிக்கக் கூடியவர்கலாகவோ இல்லை. நம்மில் பலருடைய மரபணு இந்த விஷயங்களில் நம்மைத் தோற்கடித்துவிடுகிறது – இவர்கள் மற்றவர்களைக் காட்டிலும் விரைவில் மிகை எடை சேர்க்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். இதனால் நீரிழிவு, இதய நோய் போன்ற பல மருத்துவப் பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். இன்று அமெரிக்காவின் மருத்துவ பட்ஜெட்டில் ஆறில் ஒரு பங்கு நீரிழிவு தொடர்பான பிரச்சினைகளுக்கு செலவு செய்யப்படுகிறது.

அதிக எடை கொண்ட ஆண்களுக்கு மற்றவர்களைக் காட்டிலும் கால் பங்கு குறைவான விந்தணுக்களே இருக்கின்றன. பெண்கள் கருத்தரிப்பதிலும் பிரசவத்திலும் பிரச்சினைகளைச் சந்திக்கின்றனர். டார்வினின் இயற்கைத் தேர்வு இங்கே வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது என்கிறார் ஸ்டீவ் ஜோன்ஸ். அதிக எடை கொண்டவர்களின் மரபணுக்கள் காலப்போக்கில் வடிகட்டப்பட்டுவிடும் என்று அவர் கணிக்கிறார். இவர்கள் ஒழுங்காக நடைப் பயிற்சி முதற்கொண்டு உடற்பயிற்சி செய்து வந்து உணவில் கட்டுப்பாட்டை கடைப்பிடித்திருந்தால் தங்கள் வம்சத்தைக் காப்பாற்றியிருக்கலாம். அபரிமிதம் வசீகரமாக இருக்க, அலட்சியம் வசதியாகி விடுகிறது.

இதைப் பேசும் ஸ்டீவ் ஜோன்ஸ் ஒரு சுவாரசியமான தகவலையும் தருகிறார். ஃபிரெஞ்சுப் புரட்சியில் ஸாட் போன்ற லட்சியவாதிகளின் கோபத்துக்குப் பலியான ராணி மேரி ஆண்ட்வாநெட், ஏழைகளைக் கேக் சாப்பிடச் சொன்னார், அப்படி ஒரு திமிர் பிடித்தவர் என்பதாக ஒரு கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அதைக் கொஞ்சம் துருவிப் பார்த்தால் கிட்டும் தகவல்- அந்த ’கேக்’ என்பது, நாம் உண்டு கொழுக்கும் பல அடுக்குகளைக் கொண்ட க்ரீம் பொதித்த ஆடம்பர சங்கதி இல்லையாம். ரொட்டி போன்றவற்றைச் செய்யும்போது அதன் மேற்பரப்பில் க்ரஸ்ட் என்ற பகுதி கெட்டித்துக் கிடக்கும் (நாம் மர்மக் கதைகளில் caked blood மற்றும் crusted bloodஐ எதிர்கொள்கிறோம் இல்லையா, அங்கு சொற்கள் இன்றும் இந்தப் பொருளில் புழங்குகின்றன). வழக்கமாக வீண் செய்யப்படும் துண்டுகள். அதைத்தான் ராணி ஏழைகளுக்குப் பரிந்துரைத்திருக்கிறார். ஃப்ரெஞ்சுக்காரர்களைப் பற்றித் தெரிந்தவர்களுக்கு அவர்கள் ரொட்டி (bread) உண்ணுவதில் எத்தனை தீவிரமானவர்கள் என்பதும், ஃப்ரான்ஸின் எந்த குக்கிராமத்திலும் முக்கியமான ஒரு நபர் ரொட்டி சுட்டுத் தரும் நபர் (baker) என்பதும் தெரிந்திருக்கும். ஃப்ரெஞ்ச் ப்ரெட் என்பதே உள்புறம் மிருதுவான ரொட்டிதான்.  கெட்டித்த ரொட்டித் துண்டுகளை மக்கள் உண்ணாமல் வீணடிக்கிறார்கள் என்பது மேரி ஆண்ட்வாநெட்டின் கருத்து. இன்றும் எனக்குத் தெரிந்து அனேகம் பேர் இந்தத் துண்டுகளை உண்ணாமல் வீணடிக்கிறார்கள். வீடுகளில் உணவு குறித்து விழிப்புணர்வு உள்ளவர்களே இந்த இரு இறுதித் துண்டுகளை வீசி விடாமல் உண்கிறார்கள். மேரி ஆண்ட்வாநெட் குறித்து எழுந்த பின்னாளைய புராணக் கதைகளில் ஏன் இந்த சம்பவம் அப்படி முக்கியமாகிறது என்பது ஃப்ரெஞ்சு மக்களின் விருப்பத் தேர்வு மிருதுவான ரொட்டி என்பதாலா என்று நாம் யோசிக்க வேண்டும்.

அதன்பின் பிரஞ்சுப் புரட்சியும் அதன் கோரிக்கைகளில், கோட்பாடுகளில், கோஷங்களில் முன்னிலைப்பட்ட விடுதலை சமதர்மம் தோழமை போன்ற நோக்கங்கள், இன்று வரை காவு கொள்ளும் பல லட்ச லட்சிய பலிகளின் முன் இன்றும் நம் தார்மீகக் கோபத்துக்கு இலக்காய் இருக்கும் அந்த ராணியின் ஓருயிர் ஒன்றுமில்லைதான்.

இத்தனைக்கும் அந்த வாசகத்தை மேரி ஆண்ட்வாநெட் சொன்னதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று நம் காலத்து வரலாற்று ஆய்வுகளில் சொல்லப்படுகிறது. அவர் கொல்லப்பட்டதற்கான காரணங்களில் முக்கியமானது அனேகமாக வேறொன்றாக இருக்கலாம்- அவர் ஃப்ரெஞ்சுக்காரர் இல்லை, ‘அன்னியர்’ என்ற கருத்து.

அறிதலுக்கும், புரிதலுக்கும் இடையே இடைவெளி உண்டென்பதை நாம் அறிவோம், அதே போல பரிதலுக்கும், அறிதலுக்கும் இடையேயும் இடைவெளி உண்டு, பரிதலுக்கும் புரிதலுக்கும் இடையேயும் இடைவெளி உண்டு. பரிவென்பது ஓர் நடத்தையாகவே மாறுகையில் அம்மனிதர் தன்னளவில் ஆபத்தற்றவராகலாம், ஆனால் மானுட வாழ்வில் எண்ணி விட முடியாத விளைவுகள் நல்லெண்ணத்திலிருந்தும் கிளைக்கின்றன என்பதைக் கருதியே தீர வேண்டி இருக்கிறது.பரிதல் ஒரு பண்பாடாகவே, கூட்டத்தின் இயற்கைத் தேர்வாகவே ஆகுமென்றால் அந்தக் கூட்டம் எளிதில் சீர்குலைக்கப்படும் ஓர் கூட்டமாகும் என்பது இயற்கையின் பாடமாக எப்போதும் முன்னே நிற்கிறது. இது வரலாற்றிலும் பாடமாக முன்னே நிற்கிறது.

ஆனாலும், இறுதியில் மனித மிருகத்தைக் கட்டுப்படுத்த சாத்வீக சிந்தனைகள் அறநெறியாகப் போதிக்கப்பட்டுப் படிவதைத் தாண்டி வேறு வழியில்லை என்றே தோன்றுகிறது. இந்த சாத்வீக சிந்தனைகளுக்கு முன்பு சரியான தர்க்க அடிப்படை இல்லாமல் இருந்திருக்கலாம். இன்று உடற்கூறு சார் சூழலியல் (Physiological Ecology) என்பது நன்கு வளர்ந்தால் அது ஒரு வலுவான தர்க்க அடிப்படையைக் கொடுக்கும் என்று தோன்றுகிறது. இதில்தான் பெர்ண்ட் ஹைன்ரிஹ் பேராசிரியர், ஆய்வாளர். பெர்ண்ட் அந்தத் துறையில் முன்னோடி இல்லை. அவருக்கு இத்துறையைக் காட்டிக் கொடுத்த ஒரு பேராசிரியருக்கு இவர் நன்றி சொல்கிறார். பீடர் சிங்கர் என்ற மிருக உரிமைகளுக்குக் குரல் கொடுக்கும் ஒரு தத்துவயியலாளர் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். அவருடைய பல கருத்துகள் அறிவியலில் தளம் கொண்டவை. இவர்கள் முன்னிலைப்படுத்தும் அறிவியல் புரிதல்களில் துவங்கி அறச் சிந்தனைக்குக் கோடிழுத்தாக வேண்டும்..

ஜ்யார்க் ஸிம்மெலைக் (Georg Simmel) கேட்டால் உடனே தெரிவிப்பார், ‘அன்னியன்’ ஆக்கப்படுவது எத்தனை எளிதானது என்று. அதைச் செய்யாத சமூகங்கள் வரலாற்றில் இல்லை என்பதை அவர் அறிந்திருந்தார். அவர் சொல்லித்தான் நமக்குத் தெரியும் என்றில்லை, ஆனால் அவர் தொகுத்துச் சொன்னபின் அதை ஒதுக்க நம்மால் முடியாமல் போயிருக்கிறது. எனவே இந்த ‘உண்மையை’ அதன் பல நீர்த்த வடிவுகளிலாவது இன்று உலகெங்கும் நாம் அறிவோம், ஆனால் இந்த எளிய உண்மையை யாரும் அனேகமாக லட்சியம் செய்வது இல்லை.
அதே போல நாம் அனேக நேரம் அலட்சியம் செய்வது இன்னொன்று- அது, லட்சிய வெறியர்களின் பெருநாயகர்களுக்கு யாரையும் ‘அன்னியராக’ ஆக்குவது எப்படி என்பது மிகச் சுலபமாகக் கைவரும் கலை, என்பது. அவர்கள் பெருநாயகர்களாவதே அந்தக் கொடும் கலையை அவர்கள் அறிவியல் போல வார்னிஷ் பூசிக் காட்டுவதில் வல்லவர்கள் என்பதால்தான், ஆனால் அஃதொன்றும் நம்மை உறுத்துவதே இல்லை. ஏன் என்பது நாம் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டிய ஒரு கேள்வி.