ஆயிரம் தெய்வங்கள் – ஜேசனும் ஆர்கோஸ் வீரர்களும்

ஜேசனும் ஆர்கொஸ் வீரர்களும்

கிரேக்க இலக்கியத்தில் வீர சாகசக் கதைகளில் ஜேசனும் ஆர்கோநாட்ஸும் மிகவும் சுவை நிரம்பியது. ஹெலன் ஆஃப் ட்ராய் போல் ஜேசன் அண்ட் த ஆர்கோநாட்ஸ் என்றொரு ஹாலிவுட் திரைப்படம் அந்த நாளில் வந்திருக்கிறது.அயோல்கஸ் நகரை ஆண்டு வந்த ஏசன் வஞ்சிக்கப்பட்டுக் கொல்லப்படுகிறான். க்ரீத்தியாவுக்கும் டைரோவுக்கும் பிறந்த ஏசனின் தாய்மீது மோகம் கொண்ட பாசிடான், பீலியஸ் என்ற மகனையும் டைரோவுக்கு வழங்கினான். பீலியஸ் தன் அண்ணனைக் கொன்று அவனது அரசைக் கைப்பற்றி ஏசனின் மகனான ஜேசனை அனாதையாக்கினான்.

ஜேசனும் ஹீராக்ளீஸைப் போல ஒரு தெய்வக்குழந்தை என்பதால் அவன் சைரான் பொறுப்பில் விடப்பட்டான். ஹீராக்ளீஸுக்கு சைரான் குருவாக இருந்த காரணத்தால் ஜேசனும் அவனைப் போலவே பயிற்சி பெற்று ஒரு மாவீரனாக் வளர்ந்தான். ஜேச்னுக்கு வயது வந்ததும் அயோல்கசை ஆண்டு வந்த தன் சித்தப்பனிடம் தனக்கு உரிமையான அரசாட்சி உரிமையைத் திரும்பத் தரும்படி கேட்கச் சென்றான்.

அந்த நேரத்தில் பீலியஸ் ஒரு யாகம் வளர்த்து ஆண்டவனை மகிழ்வித்துக் கொண்டிருந்தான். ஆண்டவன் பீலியஸின் கனவில் தோன்றி, “யாராவது ஒற்றைச் செருப்பை அணிந்து வந்தால் அவனிடம் எச்சரிக்கையாக இரு,” என்று எச்சரித்திருந்தார். அதற்கேற்றபடி, ஜேசன் ஒரு சிறுத்தைத் தோலை அங்கியாகப் போர்த்து, இரு கைகளிலும் ஈட்டிகளை ஏந்திய தோற்றத்துடன் வலது காலில் மட்டும் செருப்பணிந்த நிலையில் தன் அரசுரிமையைக் கோரி அவைக்குள் நுழைந்தான். தன் ஆட்சிக்கு ஆபத்து வந்துவிட்டது என்று புரிந்து கொண்ட பீலியஸ் ஜேசனை முகம் நிறைந்த சிரிப்புடன் இறுகத் தழுவிக்கொண்டான்.

ஜேசன் தனக்கு அரசுரிமை உண்டு என்பதற்குரிய சரியான அடையாளத்தைக் காட்டிவிட்டால் அவனை அரசனாக்கத் தான் தாரகா இருப்பதாகச் சொன்னான் பீலியஸ். அந்த அடையாளம் எது என்று கேட்டான் ஜேசன். தங்கள் முன்னோர் அணிந்திருந்த தங்கக் கம்பளி மேலங்கியை எடுத்து வந்து காட்டும்படிச் சொன்னான் பீலியஸ். ஜேசனும் அதற்கு ஒப்புக் கொண்டான்.

அந்தத் தங்கக் கம்பளியை மீட்பது இயலாத காரியமாகும். அது அயோக்கஸ் நகருக்கு வெகு தொலைவில் கருங்கடலுக்கு அப்பாலிருந்த கால்க்கீஸ் கடற்கரையில் இருந்த ஒரு புனித ஓக் மரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அப்புனித மரம் ஏரஸ் தெய்வத்துக்கு அர்ப்பநிக்கப்பட்டிருந்த மரமாகும். ஏரஸ் சூரியனின் ஒரு அம்சம். ஏரசின் மகன் எயீட்டஸ் கால்க்கீசின் அரசனாக் இருந்தான். அந்தத் தங்கக் கம்பளிக்குப் பல தலைகளுள்ள ஒரு ராட்சத நாகத்தைக் காவலுக்கு வைத்திருந்தான்.

அப்படிப்பட்ட அரிய கம்பலத்தைக் கவர்ந்து வர ஒரு திட்டம் தீட்டப்பட்டது. அதன் முதல் கட்டமாக கால்க்கீஸ் நகரை அறிந்த ஒருவனைத் தேடிக் கண்டுபிடித்தான். அவன் பெயர் ஃப்ரிக்ஸ். ஃப்ரிக்ஸ் இறந்துவிட்டதால் அவனுடைய மகனை ஆர்கோஸிடம் யோசனை கேட்டான். ஆர்கோஸ் எத்தினாவின் அருள் பெற்றவன். இச்செயலில் பங்கேற்க எத்தினாதேவியின் உத்தரவு கிடைத்ததும் கால்க்கீஸ் செல்வதற்கான கப்பலைக் கட்டிக் கொடுத்தான்.

அந்தக் கப்பலின் முகப்புப் பகுதி டோடோனாவில் ஸீயஸ்ஸுக்கு அர்ப்பணிக்கப்பட்ட புனித ஓக் மரத்தைக் கொண்டு கட்டப்பட்டது. அந்த ஓக் மரம் நடக்கப்போவதை முன்கூட்டியே உரைக்கும் ஆற்றல் கொண்டது. இந்தக் கப்பல் பயணத்தில் ஜெசனுடன் தங்கக் கம்பளத்தை மீட்கச் சென்ற போர் வீரர்கள் ‘ஆர்கோநாட்ஸ்’ என்று அழைக்கப்பட்டனர். இந்த ஆர்கோநாட்ஸ் வரிசையில் ஹீராக்ளீஸும் இடம் பெற்றிருந்தான், ஆனால் அவன் வழியிலேயே கப்பலிலிருந்து இறங்கிப் பிரிந்து சென்றுவிட்டான். ஹீராக்ளீஸுக்கு அடுத்தபடியாக, டைஃபஸ், துடுப்பு போட்டவண்ணம் பாடக்கூடிய ஓர்ஃபியஸ், குறி சொல்வதில் வல்லவனான ஈத்மான், கேஸ்டர், பாலிட்யூசஸ், ஐதாஸ், லைன்சியஸ் போன்ற தேவகுமாரர்களும் ஆர்கோநாட்ஸ் வரிசையில் இடம் பெற்றிருந்தனர். தங்கக் கம்பள வேட்டை துவங்கியது.

அயோல்கஸிலிருந்து நல்ல சகுனம் வந்தபின்னர் புறப்பட்ட ஆர்கோஸ் கப்பல் லெம்னோஸில் நிறுத்தப்பட்டது. அது ஒரு விசித்திரமான தீவு. அங்கு ஆண்களே கிடையாது. ஆண்கள் அனைவரும் அயோக்கியர்களாகவும் பெண்களுக்கு அநீதி இழைப்பவர்களாகவும் இனங்கண்டு கண்ட அஃப்ரோடைட் அளித்த சாபத்தால் அங்கிருந்த ஆண்கள் அனைவரும் பெண்களால் கொலை செய்யப்பட்டிருந்தனர். இந்தத் தீவுக்கு சாப விமோசனம் வழங்கிய பெருமை ஜெசனின் ஆர்கோநாட்ஸுக்கே உரியது. இனப்பெருக்கம் இல்லாமல் தவித்த லெம்னோஸ் பெண்கள் ஆர்கோநாட்டுகளை ஆவலுடன் வரவேற்று அவர்களுக்கு விருந்து படைத்து, அவர்களுடன் உற்சாகமாகச் சல்லாபித்தனர். இதன் பலனாக லேம்னோஸ் தீவில் உள்ள பெண்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டி, ஆண் வாரிசுகள் பிறந்து அவர்களது பரம்பரை புத்துயிப்பு பெற்றது.

ஆர்கோநாட்ஸின் கப்பல் அடுத்ததாக சமேத்ராஸ் என்ற தீவுக்குச் சென்றது. அங்கு அப்போது விமரிசையாகக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்த கேபேரித் திருவிழாவில் அவர்கள் பங்கேற்றனர். அதன் பின் அவர்கள் மீண்டும் கப்பலில் பயணித்து ஹெல்லாஸ் தீவை அடைந்தனர்.ஹெல்லாஸ்போண்ட் தீவில் டோலையோனஸ் ஆர்கோநாட்டுகளை வரவேற்று தங்கள் மன்னன சைஸிக்கஸிடம் அழைத்துச் சென்றான். சைஸிக்கஸ் மன்னன் அவர்களை முழு மரியாதையுடன் உபசரித்து வழியனுப்பி வைத்தான். பயணம் தொடர்ந்தது.

தொடர்ந்த கப்பல் பயணத்தில் சிறிது தூரம் சென்றதும் கடல் கொந்தளிப்பு கண்டு புயல் காற்று வீசியது. துடுப்புக்கு அடங்காத கப்பல் காற்றின் திசையில் செல்லத் துவன்கியக் கப்பல் அவர்கள் கிளம்பியிருந்த ஹெல்லாஸ்போண்ட் தீவுக்கே திரும்பி வந்துவிட்டது. ஆர்கோநாட்டுகள் கரை சேர்ந்தபோது தீவு கும்மிருட்டில் இருந்தது. ஆர்கோஸ் கப்பலலில் வருபவர்கள் கடற்கொள்ளையர்கள் என்று தவறாகப் புரிந்து கொண்டான் சைஸிக்கஸ். எனவே ஆர்கோநாட்டுகளை சைஸிக்கஸின் போர் வீரர்கள் தாக்கத் துவங்கினர். ஆர்கோஸ் வீரர்களுக்கும் இருட்டில் யாருடன் போரிடுகிறோம் என்று தெரியவில்லை – இருந்தாலும் தீவிரமாகப் போரிட்டனர். இருட்டில் நடந்த இந்த சண்டையில் சைஸிக்கஸ் ஆர்கோநாட்டுகளால் கொல்லப்பட்டான். பொழுது புலர்ந்ததும் உண்மையைப் புரிந்து கொண்ட ஜேசன், மிகவும் வருந்துகிறான். சைஸிக்கஸின் ஆன்மா சாந்தியடைய ஜேசன் அவன் நினைவாக சோக விளையாட்டுகள் சிலவற்றை அங்கே உருவாக்கினான்.

அதன்பின் ஆர்கோஸின் கப்பல் மைசியன் கடற்கரைக்குச் சென்றது. அங்கு ஆர்கோநாட்டுகள் மீண்டும் ஒரு சோதனையைச் சந்திக்கின்றனர். அங்கு ஹீராக்ளீஸின் புதல்வன் ஹைலாஸ் காணாமல் போகிறான். அவனைத் தேடிக் கண்டுபிடிக்க ஹீராக்லீஸ் தன் பயணத்தை ரத்து செய்ய வேண்டியதாகிறது. ஹீராக்ளீஸ் இல்லாத கப்பல் கருங்கடலை நோக்கிப் பயணிக்கிறது.

ஆர்கொஸ் கப்பல் பெர்ரிகேளஸ் கடற்கரைக்குச் சென்று சேர்கிறது. ஸர்ரிகொஸ் மன்னன் ஆமிக்ஸ் கொடுங்கோலன், வழிப்போக்கர்களை வம்புக்கிழுத்து அவர்களுடன் சண்டை போடுவதைத் தன் வழக்காகக் கொண்டிருந்தான்.அவன் ஆர்கோனாட்டுக்களையும் வம்பிழுக்கிறான். பாலிட்யூசஸ் அவனது சவாலை ஏற்றுச் சண்டை போட்டு ஆமிக்ஸ் மன்னனைக் கொன்று விடுகிறான். ஆர்கோஸ் வீரர்களால் இவ்வகையில் ஆமிக்ஸ் மன்னனின் கொடுங்கோலாட்சியிலிருந்து மக்களுக்கு விடுதலை கிடைக்கிறது.

அடுத்ததாக த்ரேஸ் நகரின் கடற்கரைக்கு ஆர்கோஸ் கப்பல் செல்கிறது. அதன் மன்னன் பைனீயஸ் கண்பார்வையற்றவன். அவன் பாசிடானின் மகன். உணவை உண்ண இயலாத நிலையில் இருக்கிறான் பைனீயஸ். அவன் உணவுண்ண அமர்ந்தால், எங்கிருந்தோ ஹார்ப்பீக்கள் என்றழைக்கப்படும் இறக்கை முளைத்த அரக்கியர் அங்கு வந்து அந்த உணவை அசுத்தப்படுத்திவிடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஆர்கோ வீரர்கள் கலாயஸ் மற்றும் சீட்டஸ் ஆகிய இருவருக்கும் சிறகுகள் உண்டு. இம்முறை மன்னன பைனீயஸின் உணவை அசுத்தம் செய்ய வரும் ஹார்ப்பீக்களுடன் இந்த இரு ஆர்கோனாட்டுகளும் பறந்து சென்று சணடை போடுகின்றனர். சண்டையில் தோற்கும் ஹார்ப்பீக்களை சிறை பிடித்து முடக்கிவிட்டு மன்னன பைனீயஸ் உணவுண்ண வழி செய்கின்றனர் இவர்கள். ஹார்ப்பீக்கள் சூரிய குமாரனான ஸ்டைக்ஸ் என்ற தெய்வத்தின் பாதுகாப்பில் இருந்தனர். ஹார்ப்பீக்கள் ஆர்கோ வீரர்கள் குறித்து ஸ்டைக்ஸிடம் முறையிடுகின்றனர். எனவே, இனி மன்னன பைனீயஸுக்குத் தீங்கு செய்வதில்லை என்ற உறுதிமொழியின் பேரில் சிறைபிடித்திருந்த ஹார்ப்பீக்களை ஆர்கோ வீரர்கள் விடுதலை செய்கின்றனர். மன்னன் பைனீயஸ் ஆர்கோ வீரர்களுக்கு நன்றிக்கடன் செலுத்தும் முறையில் எதிர்காலத்தில் அவர்கள் எதிர்கொள்ளவிருக்கும் அபாயங்கள் குறித்து சில சமிக்ஞைகள் அளிக்கிறான்.

(தொடரும்)