ஐ பி எல், கூடைப்பந்து மற்றும் கேலிக்கூத்து முரண் புதிர்

முதலில் சில விளக்கங்கள்:

எனக்கு ஐ பி எல் மீது ஒரு வெறுப்பும் கிடையாது.

2008-ல் ஐ பி எல் பந்தயங்கள் ஆரம்பித்ததிலிருந்து ஆர்வத்துடன் நான் பின்தொடரும் முதல் சீஸன் இதுதான்.

நான்கு ஆட்டங்களை முழுவதுமாய் பார்த்திருக்கிறேன், மற்றவைகளை அவ்வப்போது பெரும் பகுதிகளில் பார்த்ததுண்டு.

இப்போது என்னுடைய சில கருத்துக்கள்:

1. பந்தயத்தின் உச்சமாய் நான் கருதுவது திஷாந்த் யக்னிக், ஷன்பாஸ் நதீம் போன்றஆட்டக்காரர்கள் தனித்து நிற்பது. இது அவர்களுக்கு ஒரு அற்புதமான மேடை/அரங்கம். பத்துவருடங்களுக்கு முன் பன்ஸ்வாரா, பொகாரோ போன்ற இடங்களிலிருந்து வந்த கிரிக்கட் ஆட்டக்காரர்கள் பிதுங்கி வழியும் அரங்குகளில் ஆடுவதைப் பற்றிக் கனவில் கூட நினைத்ததில்லை. செய்தித்தாள்களில் தங்கள் பெயர்கள் பரவலாய் காணப்படும் நாள் வரும் என்றும் அவர்கள் கற்பனை செய்திருக்கவில்லை. அவர்கள் நிறைய பணம் சம்பாதிக்கவில்லை. அவர்கள் விரைவில் மறக்கப்பட்டனர்.

பீஹாரின் ரமேஷ் ஸக்ஸேனா இந்தியாவுக்காக ஒரு டெஸ்ட் விளையாடினார் ஆனால் அவர் சென்ற வருடம் இறந்ததை எத்தனை பேர் கவனித்திருப்பார்கள்? இத்தனைக்கும் 89-ல் தெண்துல்கரை தேர்ந்தெடுத்த தேர்வுக்குழுவில் அவரும் இருந்தார். நதீமுக்கு அவரைத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அவரது கடைசி காலத்தில் ஸக்ஸேனா ஜார்கண்ட் கிரிக்கெட் கழகத்தின் செயலாளராய் இருந்தார். ஆட்ட நாயகன் விருதைப் பெற்றுக்கொள்ளும் தருணத்தில் நதீம் அவரைப் பற்றி நினைத்திருப்பாரா?

நதீம்
நதீம்

ஒவ்வொரு முறை நதீம் பந்து வீசும்போதும் நான் அவரை ஊக்குவித்து கைதட்டுவேன். ஸக்ஸேனா, ஹரி கித்வானி, சபா கரிம், சுப்ரோதொ பேனர்ஜி, மிஹிர் திவாகர் போல் அந்தப்பகுதியிலிருந்து வந்து பெரும்பாலும் மறக்கப்பட்ட அத்தனை கிரிக்கெட் ஆட்டக்காரர்களுக்கும் உரியது அந்த கைதட்டல். நான் தோனியை இங்கு சேர்க்கவில்லை ஏனெனில் அவர் இந்தக் கூட்டத்துக்கு வெளியே இருப்பவர். அவரது சொந்த ஊர் எதுவாக இருந்திருந்தாலும் தோனி இந்தியாவுக்காக விளையாடி இருப்பார்.

80-களின் இறுதி வருடங்களில் கித்வானி தொடர்ச்சியாய் ஐந்து ரஞ்சி சதங்கள் அடித்துள்ளார். மித வேகப்பந்து வீச்சாளர் திவாகர் 90-களில் கடமையே கருத்தாய் தன் பணியை சிறப்பாய் செய்தார். இவர்களில் பலருக்கும் தெரியும் தேசீய அளவில் தாங்கள் கவனிக்கப்படவில்லை என்று. அது தெரிந்தும் அவர்கள் மைதானத்தில் இறங்கினர். சிறப்பாய் ஆடினர். அவர்களுக்கு வருமான ரீதியான பாதுகாப்பு இருக்கவில்லை. ஆட்டத்தின் மீதுள்ள நேசம் மட்டுமே இருந்தது. அதற்காக மட்டுமே விளையாடி, அந்தகாரக் கடலில் விழுங்கப்பட்டுக் காணாமல் போனார்கள்.

2. ஐ பி எல் செல்வத்தின் ஒரு பகுதி தங்க வேட்டையைத் தவற விட்ட சில முன்னாள் கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுக்கு உதவ ஒதுக்கப்பட்டுள்ளது என்பதைக் கேட்க சந்தோஷமாய் இருந்தது.

3. ஐ பி எல் என்பது கிரிக்கெட்டா? டி 20 என்பது கிரிக்கெட்டா? இவை எல்லாம் சுவாரசியமான சர்ச்சைகள்தான். ஆனால் இந்தப் பந்தயத்தைப் பார்க்கும்போது நான் இது எதையும் யோசிக்கவில்லை. நீங்கள் முதல்முறை கிரிக்கெட் பார்த்ததை நினைவுபடுத்திப் பாருங்கள். அது என்ன என்று உங்களுக்குத் தெரிந்திருந்ததா? யாரேனும் கிரிக்கெட் என்பதை உங்களுக்கு வரையறுத்தார்களா? தெருச்சந்துகளில் சிலர் ஆடுவதைப் பார்த்து அவர்களைப் பின்பற்றப் பார்த்தீர்கள், சரிதானே? அதனால் இப்போதைக்கு அந்த சர்ச்சையை விட்டு விலகி இருக்கிறேன். ஐ பி எல் பந்தயம் கிரிக்கெட் ஆட்டத்தின் மேல் ஏற்படுத்தி இருக்கும் விளைவுகளைப் பற்றி எழுதும்போது அதற்கு வருகிறேன்.

4. ஐ பி எல் கிரிக்கெட் அல்ல என்ற குற்றச்சாட்டை கேட்டு மக்களுக்குக் கோபம் வருவதைப் பார்த்து எனக்கு வேடிக்கையாக இருக்கிறது. நான் இதற்கு நேர் எதிர். ஐ பி எல் கிரிக்கெட் இல்லை என்பது ஒரு சுதந்திர உணர்வைக் கொடுப்பதாய் நினைக்கிறேன்.

ஐ பி எல்-லை நான் நேசிக்கும் இன்னொரு விளையாட்டான கூடைப்பந்தைப் பார்ப்பதைப் போலப் பார்க்கிறேன். நான்கு ரன்கள் அடிக்கப்படுகையில் என் எதிர்வினை கூடைப்பந்தில் டூ பாயிண்டருக்கு இருப்பதை ஒத்து இருக்கிறது, ஆறு ரன்கள் மூன்று பாயிண்டரைப் போல, விக்கெட் என்பது ஃபவுல். உங்களுக்கும் இது போன்ற ஒப்புமைகள் இருக்கலாம், இது போன்ற இணைக்கோடுகள் விஷயத்தை எளிதாக்குகின்றன.

ஐ பி எல்லின் ஆறு ரன்களை டெஸ்ட் மாட்சின் ஆறுடன் ஒப்பிடுவதை நான் நிறுத்திவிட்டேன். பந்து வீச்சாளருக்கு எதிராய் அடிக்கப்பட்ட ஒன்றாய் அதை நான் ஒதுக்குவதில்லை. வர்ணனையாளர்கள் ஐ பி எல்லின் ஒவ்வொரு ஆறும் உலகம் முழுதும் கேட்கப்படும் ஒலி என்பது போல பேசுவதைக் கேட்டு நான் உணர்ச்சி வசப்படுவதில்லை. (திரு.டேனி மோரிஸன், உங்கள் காதில் விழுகிறதா?) 19 வயதுக்குக் குறைந்த ஆட்ட அணியிலிருந்து இப்போதுதான் ஆட வந்திருக்கும் சின்னப்பையனின் பந்துவீச்சை க்ரிஸ் கெயில் அதிரடியாய் ஆடுவது “நம்பமுடியாத” ஒன்றல்ல என்று எனக்குத் தெரியும். அது “பரபரப்பான”தும் அல்ல, “திகைக்க வைப்பதும்” அல்ல.

5. கூடைப்பந்தாட்டத்தைப் பார்ப்பது போலவே, அந்தக் கணத்தை ரசிக்கிறேன். ஆனால் உடனே என் கவனம் அந்த 4, 6 அல்லது விக்கெட்டை மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதில் செல்கிறது. சில கணங்களே அந்த பந்து எப்படி அடிக்கப்பட்டது என்பதில் என் கவனம் ஈர்க்கப்படுகிறது ஸச்சின் அடித்த ஒரு ஸிக்ஸரை அலசிக்கொண்டிருந்தாலன்றி என் மனம்ஆட்டத்தின் தாக்கத்தை நோக்கி நகர்கிறது. மிட்விக்கெட்டின் மீதான ஸிக்ஸருக்கு ஃபீல்ட் செய்துகொண்டிருக்கும் அணித்தலைவரின் எதிர்வினை எப்படி இருக்கிறது? பந்து வீச்சாளர் அடுத்து என்ன செய்வார்? பாட்ஸ்மன் மீண்டும் அதே போல் அடிக்க முயற்ச்சிப்பாரோ? ஃபீல்டிங் மாற்றங்களை அவர் கவனிக்கிறாரா?

இவை எல்லாம் எனக்குப் போதுமான அளவு கிடைப்பதில்லை.

காரணம் :

6. ஐ பி எல் தொலைக்காட்சியில் காட்டப்படும் விதம். நான் திரையின் மேல் தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் விளம்பரங்களைப் பற்றிக் கூட சொல்லவில்லை. காமெரா வேலையைப்பற்றி பேசுகிறேன். சில சமயங்களில் ஒரே பவுண்டரியை மூன்று முறை காட்டுவதில் அர்த்தமே இல்லை. ஒவ்வொரு ஸிக்ஸரையும் திரும்பத் திரும்பக் காண்பிக்கத் தேவையில்லை. சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் சியர்லீடர்களுக்கு அருகில் காமெரா போவது கேலிக்குரிய விஷயம்.

அதற்கு பதிலாய், பந்து வீச்சாளரை அருகில் காட்டலாம், ஃபீல்டை வான்வெளியிலிருந்து படம் பிடித்துக் காட்டலாம், ஃபீல்ட் செய்யும் அணித் தலைவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைக் காட்டுவதில் சற்று கவனம் செலுத்தலாம். தனது அணி ரன் குவிப்பதை ஆர்வத்துடனோ பதற்றத்துடனோ பார்த்துக் கொண்டிருக்கும் பெவிலியனில் அமர்ந்திருக்கும் சகவீரர்களைக் காட்டலாம், வர்ணனையாளர்கள் ஆட்டத்தின் நெளிவுசுளிவுகளுக்குக் கொஞ்சமாவது சம்பந்தம் இருக்கும் விஷயங்களைப் பற்றிப் பேச முயற்சி செய்யலாம். நடந்துகொண்டிருப்பது ஒரு பந்தய ஆட்டம்(திருவிழா அல்ல), என்று நம்மை உணர வைக்கவும் தயாரிப்பாளர்கள் சற்று அக்கறை எடுக்கலாம்.

7. சில மாதங்களுக்கு முன், ஆஸ்திரேலியாவின் பிக் பாஷ் லீக் (big bash league) பந்தயத்தின் சில பகுதிகளைப் பார்த்தேன். ஐ பி எல் ஒளிபரப்போடு ஒப்பிடுகையில் அவர்களின் காமெரா வேலை உயர் தரமாய் இருந்தது – அவர்கள் நமக்குத் தெரிவித்த தகவல்கள் சிறப்பாய் இருந்தன, காமெரா கோணங்கள் ஆட்டத்தின் நடப்புகளை விளக்கும் வகையில் இருந்தன. வர்ணனை மனிதர்களின் காதுகளுக்கு அனுகூலமானதாக இருந்தது. வர்ணனையின் தரம் சேனல்9-ன் தரத்துக்கு அருகில் கூட இல்லை என்றாலும் நம்முடையதை விடப் பல மடங்கு சகித்துக்கொள்ளக்கூடிய வகையில் இருந்தது. ஒவ்வொரு வினாடியும் உபயதாரர்களின் பெயரால் தொடர்தாக்குதல் நடக்கவில்லை. தொலைக்காட்சியின் ஒலியைக் குறைப்பதற்காக அடிக்கடி ரிமோட்டை நாட வேண்டி இருக்கவில்லை.

8. மேலும் பிக் பாஷ் லீக்கில், கூட்டத்தின் சத்தங்கள் தெளிவாய் இருந்தன, மட்டையின் மேல் பந்து பட்ட சப்தம் இயல்பாய் கேட்டது. சில சமயங்களில் என்னால் காற்றைக் கூட கேட்க முடிந்தது. ஐ பி எல் லில் ஒவ்வொரு ஆட்டத்திலும் ஒரு உரத்த ரீங்காரம் இருக்கும். நான் சொல்வதைப் புரிந்துகொள்ள கண்களை மூடிக் கொண்டு சப்தங்களைக் கேளுங்கள். ஆட்டத்தின் செவிப்புலத் தரம் எத்தனை குறைவாய் இருக்கிறது என்பதை உணர்வீர்கள்.

9.  திரும்பத் திரும்பக் காட்டப்படும் ஆட்டத்தருணங்களிலும், சத்தமான ஐ பி எல் வர்ணனைகளின் இடையேயும் ஆட்டத்தின் நுட்பவேறுபாடுகள் தொலைந்து போய் விடுகின்றன. இப்படி சொல்வதற்காக நீங்கள் என்னைக் கேலி செய்யலாம் – “இதுவும் ஒரு ஆட்டம்? இதில் நுட்பம் வேறு இருக்கிறதா?” என்று. இதற்கு என் அழுத்தமான பதில்,”ஆமாம், இருக்கிறது.”

நுட்பங்கள் நிறைய இருக்கின்றன. உங்கள் தொலைக்காட்சித் திரைகளில் அவற்றை நீங்கள் பார்ப்பதில்லை, உங்கள் வர்ணனையாளர்களிடமிருந்து அவற்றைப்பற்றி தேவையான அளவு கேட்பதில்லை, அவற்றைப் பற்றி உங்கள் செய்தித்தாள்களிலும், இணையதளங்களிலும் அதிகம் படிக்கக் கிடைப்பதில்லை.

ஐ பி எல் போட்டியை கேலிக்கூத்து என்று சொன்னால் யாரெல்லாம் கொதிப்படைகிறார்களோ அவர்களில் சிலர்தான் மொத்தப் பந்தயமும் ஒரு கேலிக்கூத்து என்று உங்களை நம்பவைக்கிறார்கள்.

என்ன ஒரு முரண் புதிர்?(Paradox)