வாசகர் மறுவினை

‘குறிக்கோளில்லாத பிரபஞ்சம்’ கட்டுரை குறித்து…

பிரபஞ்சம் தொடர்பாக நான் கொண்டிருந்த எண்ணக்கரு, தெளிவாகவும் கோவையாகவும் வாசிப்பதற்கு எளிதாகவும் விளக்கி எழுதப்பட்டிருப்பதனைக் காண்கையில் நான் பெருமகிழ்ச்சி கொள்கிறேன். உண்மையில், ஆன்மீகவாதிகளின் படைப்புவாதம், கடவுள், ஆன்மா, கர்மாக்கள், மறுபிறவி, முக்தி போன்ற விடயங்களைப் படிக்கும்போதெல்லாம் இவை எல்லாம் தேவையற்றவை, இக்கருத்துக்களின் துணையின்றியே நாம்வாழும் பிரபஞ்சமானது தோற்றம் பெற்று இயங்குவதற்கு சாத்தியம் இருக்கும்போது, ஏன் நமது ஆன்மீகவாதிகள் இதையெல்லாம் போட்டு குழப்புகிறார்கள்? எனும் கேள்வி என்னும் எழுந்துவந்தது. ஆனால் நானோ, ஒருவேளை என்னால் புரிந்துகொள்ள முடியாத அளவிற்கு ஆன்மிகம் புனிதமானதாகக்கூட இருக்கலாம் எனவும் எண்ணியிருந்தேன். இன்று, எனது கருத்துக்கு இயைபாக கோட்பாட்டு இயற்பியலாளரும் தன் கருத்தினை முன்வைத்திருப்பதுகண்டு மகிழ்கின்றேன்.

அகிலம் என்றால் என்ன, அது எப்படி இயங்குகின்றது என்பதை விளக்குவது விஞ்ஞானம், ஆனால்
அகிலம் ஏன் இயங்குகின்றது என வினவுவதே மெய்ஞ்ஞானம் எனும் கூற்றினை நான் கேள்விப்பட்டிருக்கிறேன். மறுதலித்துமிருக்கிறேன்.. அகிலம் ஏன் இயங்குகின்றது என்பது கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருப்பது போல ஒரு அர்த்தமற்ற கேள்வி.. உயிர்களின் சிக்கல்தன்மையினையும், ஒரு கிரகத்தில் உயிர்களின் உருவாக்கத்திற்கு மிகச்சொற்ப வாய்ப்பே காணப்பட்டிருக்கின்றது எனும் கருத்தையும் மேற்கோள் காட்டி, இவ்வளவு சிக்கலான அகிலம் ஏன், எப்படி தானாகவே உருவாகியிருக்கக்கூடும் என வினவும் ஆன்மீகவாதிகள், அப்படியான வாய்ப்புக்களில் சிறிதேனும் பிசகியிருந்தால், இந்தக் கேள்வியை நாம் கேட்பதற்குப் பதிலாக, வேறொரு கிரகத்திளிருக்கும் உயிர் கேட்க, இன்னொரு உயிர் அதற்கு பதிலளித்துக்கொண்டிருக்கலாம் அல்லது, இந்தக் கேள்வியே எழுப்பப்படாமல் இருந்திருக்கலாம் என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், இக்கேள்வி கேட்கப்படுவதற்காகத்தான் அகிலம் உருவானது எனும் வாதமும் மிகவும் அபத்தமானதாகும்.

அதுமட்டுமல்லாது, ஆன்மிகம் எனும் பெரும் மாயையில் சிக்குண்டு நமது கிழக்கத்திய நாகரீகங்களின் முன்னோர்கள், பல்லாயிரம் ஆண்டு காலமாக தமது புத்தியையும், பொன்னான நேரத்தையும் இவ்வாறான அபத்தக் கேள்விகளை எழுப்புவதிலும், அவற்றிற்கு எந்தவித ஆதாரங்களுமில்லாமல் பதிலளிப்பதிலுமே வீணாகச் செலவு செய்திருக்கின்றார்கள் என்பதை உணர்கையில் மிகவும் வருந்துகின்றேன்.

இவ்வாறான பொதுப்புத்திக்கு எதிரான, உண்மையை நேரடியாக விளக்கும் ஒரு கட்டுரையை
பதிப்பித்ததற்கு சொல்வனம் ஆசிரியர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

அபராஜிதன்

-o00o-

‘மதப்பிளவும் தேசப்பிரிவினையும்’ கட்டுரை குறித்து…

இந்திய வரைபடத்தில் உதவியாளர் ஒருவரிடம் இந்து, சீக்கிய, முஸ்லீம் மக்கள் தொகையின் கணக்கீடுகளைக் கேட்டுக்கொண்டே தோராயமாகக் கோட்டை வரைகிறார். அவர் வரைபடத்தில் வரைந்த கோடு புதிதாக உருவாகும் இரண்டு நாடுகளின் தலைவிதியாகவும், லட்சக்கணக்கான மக்களின்
வாழ்க்கைக்கு முடிவு வரியாகவும் ஆகிறது.

இப்போதும் மாவட்டங்களை இரண்டாகப் பிரிக்கும் பொழுது இப்படிதான் நடக்கிறது

சமீபத்தில் சென்னை மாநகராட்சி, காஞ்சி மாவட்ட எல்லை பிரிக்கையில், மாவட்ட ஆட்சியாளர் அலுவலகதில் அமர்ந்து கொண்டு வரை படம் மூலமே பிரிக்கப் பட்டது . ஒரே ஆறுதல் மாறுபட்ட மத பிரிவினைகள் உருவாகவில்லை.

ராம்ஜி யாஹூ