மகரந்தம்

பணத்தை மறுசுழற்சி செய்!

பழைய, கிழிந்த, அழுக்கான கரன்ஸி நோட்டுகளை என்ன செய்வது? இந்தியாவில் இவற்றை கிழிக்கும் எந்திரங்களில் போட்டுக் கிழித்து எரிக்கிறார்கள் என்று தோன்றுகிறது. ரிசர்வ் வங்கியிடம் கேட்டால் சொல்வார்கள். அமெரிக்காவில் என்ன செய்கிறார்களாம்? தினசரி சுமார் 4000 கிலோ எடையுள்ள நோட்டுகளைத் துகளாக்கிக் கொண்டிருக்கிறார்கள். இது காகிதம். இதை வீணடிப்பானேன் என்கிறது ஃபோர்டு கார் நிறுவனம். இந்தத் தூளாக்கப்பட்ட் காகிதக் கிழிசல்களைக் களிமண் போலப் பிசைந்து காகிதக் கட்டைகளை உருவாக்கி அவற்றை கார்களில் சப்தம், உஷ்ணம் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தும் அடைப்பானாகப் (insulation) பயன்படுத்தப் போகிறதாம் இந்த நிறுவனம். பணத்தைக் குப்பை என்று கருதும் இந்திய ஞானிகளுக்கு இந்தச் செய்தி உவப்பாக இருக்கும். ’அடப் பாவிகளா’ என்று சொல்லும் யாரும் பணப் பைத்தியமாகவே இருப்பார்கள் என்பது நிச்சயம். பணத்தைக் கரியாக்காதேடா என்று கத்தும் முதியோரை லட்சியம் செய்யாமல் கார் வாங்கித் தள்ளும் இளைஞர்கள், அப்பா அம்மாக்களிடம் சொல்லலாம். கரியாக்கல்லையே, காராக்கி இருக்கிறேன். இந்தக் கார்களைப் பொருத்து அது நிஜமாகக் கூட இருக்கும்.

http://www.gizmag.com/ford-renewables-recycling-retired-paper-money/22393/


மூளையின் மின் அலைகள் கணிணித் திரையில்!!

மூளையில் மின் அலைகள் உண்டு. மூளையே பெருமளவு மின் சக்தியால் இயங்குகிறது. சமீபத்தில் மூளையைப் பயன்படுத்தி, சிந்தனை மூலம் கணினித் திரையில் ஓடும் ஒரு பந்தின் வடிவத்தை அடித்து விளையாடும் ஒரு ஆட்டத்தை, பயிற்சியை பல்கலை ஆய்வாளர்கள் உருவாக்கினர். அந்த சோதனை முயற்சியை விளக்கும் கட்டுரையும், அந்த சோதனையைக் காட்டும் விடியோ ஒன்றையும் இங்கு பார்க்கலாம்.

http://www.slate.com/blogs/future_tense/2012/05/03/pong_played_with_brain_waves_and_the_movement_to_give_patients_their_own_data_video_.html


பிரான்ஸ் நாட்டின் இருண்ட பகுதி

முன்னேறிய நாடுகளில் ஒன்றாக கருதப்படும் பிரான்ஸ் நாடு தன்னுள் வெளியுலகம் அறியாத பகுதி ஒன்றை கொண்டிருக்கிறது. இந்தப் பகுதியில் ஒழுங்கான வேலை இல்லாமல் சிறு சிறு குற்றங்கள் புரிவோர் இருக்கிறார்கள். அங்கங்கே நிற்கும் வாகனங்களை திருடி அதை கள்ளச் சந்தையில் விற்கும் திருடர்கள் இருக்கிறார்கள். வார இறுதிகளில் இவர்கள் நடைபாதைகளை முழுக்க ஆக்ரமித்து தாங்கள் திருடிய பொருட்களை விற்பார்கள். பட்டப் பகலில் நடுவீதியில் சிறுநீர் கழிப்பார்கள். இந்தப் பகுதிகளில் சூரியன் மறைந்தவுடன் பெண்களால் சுதந்திரமாக நடமாட முடியாது. இவர்களை கண்காணிக்க வேண்டிய காவல்துறையும் தங்கள் கடமையை சரியாக செய்வதில்லை.

ஆம்…இதெல்லாம் நடப்பது ஒரு மூன்றாம உலக நாட்டில் இல்லை. பிரான்ஸ் நாட்டில் தான்.

உலகிற்கே நாகரிகத்தையும் ஜனநாயகத்தையும் போதித்ததாக சொல்லிக்கொள்ளும் இவர்கள் தங்கள் குடிமக்களை ஆளும் லட்சணம் இது. கீழே இருக்கும் கட்டுரையை படியுங்கள். பிரான்ஸ் நாட்டின் வரலாற்றை குறித்த ஒரு குறுக்கு-வெட்டுத் தோற்றம் உங்களுக்கு கிடைக்கும்.

http://bygonebureau.com/2012/04/25/the-rust-belt-of-france-montpellier/


க்ருஷ்சாவும் மாஓவும்

ஒருவர் ரஷ்யா கம்யூனிஸ்ட், மற்றொருவர் சீன கம்யூனிஸ்ட். முதலாமவர், லெனின், ஸ்டாலினிய வருடங்களில் ரஷ்ய கம்யூனிச ஆட்சியின் அராஜகங்களை, பெரும் படுகொலைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தார். மற்றொருவர் அந்த அராஜகங்களை மிஞ்சும் வண்ணம் சீனாவில் தன்னுடைய ‘சம நீதி’ ஆட்சியை பெரும் கொலைகளின் நடுவே நடத்திக் காட்டினார். இருவருக்கும் ஒரே சித்தாந்தம் தான். ஆனால் இவர்களிடையே இருந்த உறவு எப்படிப்பட்டது, இவர்களின் ஆளுமை என்பது எப்படிப்பட்டது என்பதை ஒரு குறுக்கு வெட்டுத் தோற்றமாக இந்தக் கட்டுரை முன்வைக்கிறது. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அப்படி ஒரு பயங்கரங்களைத் தம் நாட்டு மக்கள் மீது திணித்த ஆட்சிகளின் இரு அதிபர்களால் இப்படி சிரிக்க முடிவது என்பதே மனிதரின் புறத் தோற்றம் எப்படி நம்பத் தக்கதல்ல என்று நிரூபிக்கிறது.

இவர்களிடையே நடந்த ஒரு சந்திப்பில் ஒருவர் மற்றவரை ஏளனம் செய்கிறார். தன் நாட்டு மக்களின், உலக மக்களின் வாழ்க்கை குறித்தும் சிறிதும் அக்கறை இல்லாத அதிகாரப் போட்டிகளே இவர்களின் நடவடிக்கைகள். இவர்களுடைய ஆட்சிகளை வணங்கி வழிபடத்தான் எத்தனை பேர் நம் நாட்டில். பேதமைக்கு எல்லை இல்லாத நாடு நம்முடையது.

http://blogs.smithsonianmag.com/history/2012/05/khrushchev-in-water-wings-on-mao-humiliation-and-the-sino-soviet-split/

மனிதர்கள் அனைவரும் குறைபாடு மிக்கவர்கள் தான். ஆனால் தன்னை உலக ரட்சகராகவும், மனித குல மீட்பராகவும் முன்வைக்கும் ஆளுமைகள் பலரும் அற்பர்களாக இருப்பதைத் தான் நாம் வரலாற்றில் காணமுடிகிறது. இந்தக் கட்டுரையைப் படிக்கையில் இந்த இருவரும் கூட அப்படித் தானே என்று தோன்றுகிறது.


அமெரிக்காவின் ஆயுதவிற்பனையும் உலக நாடுகளின் கலக்கமும்

அமெரிக்கா பலவகைகளில் இறங்குமுகத்தில் உள்ளது என்று வெளி நாட்டு ஆய்வாளரும், பத்திரிகைகளும் சொல்லவும், விரிவாக எழுதவும் துவங்கி உள்ளன. இந்த இதழில் பாகிஸ்தானின் துள்ளல் குறித்து எழுதப்பட்டிருக்கும் கட்டுரையும் பாகிஸ்தானுக்கு இத்தனை துணிச்சல் எப்படி வந்தது, அமெரிக்கா தொண்டையில் குத்திய முள்ளை மெல்லவோ, விழுங்கவோ முடியாமலும், துப்பவும் இயலாமலும் தத்தளிப்பதைச் சொல்கிறது, கவனித்திருப்பீர்கள். தன் காலை மிக மிக அகல வைத்து விட்டுக் கீழே விழுந்து மூக்கை, தாடையை உடைத்துக் கொள்ளாமல் எப்படிப் பின் வாங்குவது என்று யோசிக்கிறது அமெரிக்க ராணுவ/தொழிற்துறை கூட்டணி. சந்தையில் விற்க அமெரிக்காவிடம் இந்நாளில் உள்ளவை பெரும்பாலும் பாதுகாக்கப்பட்ட ‘அறிவுரிமை’களும், கேளிக்கைப் பொருட்களும், கொஞ்சம் தொழில் துறை உற்பத்திப் பொருட்களும். நிறைய பேருக்குத் தெரியாத வேறு இரண்டு பொருட்கள் முக்கியமானவை. ஒன்று விவசாயப் பொருட்கள்- உணவு, புகையிலை, சோளத்திலிருந்து தயாராகும் பொருட்கள் இத்தியாதி. இன்னொன்று உலகைக் கொலைக்களமாக்கும் ஆயுதங்கள், தளவாடங்கள். ராணுவத் தளவாடங்களை அமெரிக்கா வெகு காலமாகவே விற்றுக் கொண்டிருக்கிறது. இரண்டாம் உலகப் போரின் போதே முதல் சில வருடங்களில் அமெரிக்கா தளவாட விற்பனையில் ஏகப் பொருள் ஈட்டியது. சமீபகாலங்களில் அமெரிக்கா ராணுவத் தளவாடங்களை விட அதிகமாகக் கவனம் செலுத்த விரும்புவது தனியாருக்கு ஆயுதங்களை விற்பதில்தான். இப்படியாகத்தானே உலக மக்களைக் கொலைகாரர்களாகவும், குற்றம் செய்யத் துணிபவர்களாகவும் ஆக்க அமெரிக்கா தயாராகிக் கொண்டிருக்கிறது என்று அமெரிக்காவின் இடது சாரி சஞ்சிகைகளில், குறிப்பாக தொழிலாளர்களுடைய நலன்களைப் பாதுகாக்கவென கவனம் செலுத்தும் ஒரு பத்திரிகையான ‘இன் தீஸ் டைம்ஸ்’ (In These Times) எழுதுகிறது. சரிதான், இடதுசாரிப்பத்திரிகை வேறென்ன எழுதும் என்று தள்ளாமல், இதில் எத்தனை உண்மை, எவ்வளவு பாதகங்கள் இதனால் ஏற்படும் என்று யோசிப்பது நல்லது. ஒரு நாடு ஏற்கனவே இந்த ஏற்றுமதியால் மிகத் துன்பப்பட்டுக் கொண்டிருக்கிறது. அது அண்டை நாடான மெக்ஸிகோ. இந்த ஏற்றுமதிகள் பெருகினால் பெரும் அவதிக்குள்ளாகும் நாடுகளில் ஒன்றாக இந்தியாவும் இருக்கும். ஏன் என்று யோசியுங்கள்.

http://www.inthesetimes.com/article/our_guns_and_butter_economy/


விதி: தொழில் நுட்பத்தின் விலை கூடக் கூட, மனித உயிரின் மதிப்பு குறைந்தபடி இருக்கும்.

தொழில் நுட்பம் உயர்ந்த சமுதாயத்தை அண்ணாந்து பார்த்துப் பழகிய மூன்றாம் உலகத்து மக்கள் நாம். நம்மைக் காலனியத்துக்கு ஆட்படுத்தி, நசுக்கிச் சுரண்டிக் கொழுத்த யூரோப்பிய நாடுகள் மீது நமக்கு இன்னும் அழியாப் பக்தி இருக்கிறது. சந்தேகமிருந்தால் புரட்சியே நம் வாழ்வு என்று தினம் குரலெழுப்பும் மார்க்சியர்களைக் கேட்டுப் பாருங்கள், இத்தனை கொடுமைகளுக்குப் பிறகும் இந்தியாவை நாகரீகப்படுத்தியது யூரோப்பியர் என்று தப்பாமல் சொல்வார்கள். அப்போது எத்தனை பக்தி யூரோப்பியர் மீது அவர்களுக்கு என்பது தெரியும். மார்க்ஸ் பெயரை உச்சரிக்காமல் ஒரு மிடறு விழுங்கக்கூட முடியாது அவர்களுக்கு.

அதே போலவே மறுபக்கம் அமெரிக்காவைத் தெண்டனிடும் ‘புத்திசாலிகளும்’ நம் ஊரில் நிறைய. அமெரிக்காவின் சரிவு ஆரம்பிக்கத் துவங்கிய சில வருடம் முன்பு வரை அங்கு எப்போது போவோம் என்று கனவு காணாத தொழில்துறை ஊழியரே இருந்திருக்க மாட்டார். அந்த பொறிநுட்பப் பொன்னுலகின் குணம் எத்தகையது?  அந்த நாட்டின் மாபெரும் ராணுவம், பொறி நுட்பத்தின் உச்சியில் உள்ள ஆயுதங்களைப் பிற பராரி மக்கள் மீது பிரயோகிப்பதில் எந்தத் தயக்கும் காட்டாத ராணுவத்தில் வேலை செய்யும் சாதாரணர்களின் நிலைதான் என்ன?

F-22 ராணுவ விமானி ஒருவர், அந்த விமானத்தின் ஒரு காற்று வடிகட்டிப் பகுதி, சுவாசக் காற்றை நச்சுக் காற்றாக மாற்றுகிறது, அது தனக்கு பறக்கையில் மயக்கத்தைத் தந்து  உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகச் சொல்கிறார். அவர் மட்டுமல்ல, பல விமானிகளும் இதே போன்ற மூச்சுத் திணறலும், மயக்கமும் தமக்கும் நேர்ந்ததாகச் சொல்கிறார்களாம்.

இந்த ஒரு ’அற்பக்’ காரணத்திற்காக விலை அதிகமான ஒரு விமானத்தை மாற்ற முடியுமா? சத்தம் போடாம இரு என்று அமெரிக்க ராணுவம் சொல்கிறது. அவரை ராணுவ ஒழுக்கத்தை மீறியதாக குற்றம் சாட்ட முயற்சி நடக்கிறது. ஒரு வழியாக ‘Whistleblower Act’ மூலம் அவரை இப்போதைக்கு காப்பாற்றியிருக்கிறார்கள்.

இதில் இருக்கும் ஒரு விஷயம் : விலை உயர்ந்த ராணுவ தளவாடத்திற்கு பதிலாக ஒரு மனித உயிரை விலை பேசலாம் என்ற எண்ணம். எதிர்கால மனித சமூகத்திற்கு முதலியத்தின் கொடை இது.இந்த இதழில் ஜப்பானில் விலை உயர்ந்த அணுசக்திப் பொறி நுட்பத்திற்காக ஜப்பானிய அரசாங்கமும், உயர் தொழில் வல்லுநர்களும், பெரும் மின்சக்தி நிறுவனங்களும்,  சாதாரண மக்களை எப்படி எல்லாம் அலட்சியமாகக் காவு கொடுத்தன என்பதைச் சொல்லும் கட்டுரை ஜப்பானிய சமூக  ஆய்வாளரின் வழியாகவே நமக்குக் கிட்டுகிறது. உயர்கல்வியும், பெரும் செல்வமும், மக்களை மதிக்கக் கற்றுக் கொடுப்பதில்லை, அவர்களைச் சுரண்டுவதை மேலும் சாமர்த்தியமாகச் செய்யவே கற்றுக் கொடுக்கின்றன என்று கட்டுரையில் தெரிகிறது. தம் நலன்களைத் தாமே காக்க மக்கள் விழிப்புணர்வோடு இருந்து ஜனநாயக அமைப்புகளைப் பேணாவிட்டால் எந்தக் கருத்தியலாலும் அவர்களுக்கு ஒரு விடுதலையும் கிட்டாது என்பதே நாம் கவனிக்க வேண்டியது.

மேலும், வருங்காலத்தில் இந்த விமானங்கள் இந்தியா போன்ற நாடுகளுக்கு விற்கப்படலாம். தனக்கு  நல்ல லாபம் கிடைக்கும்பட்சத்தில் நம்மை ஆளும் ஒட்டுண்ணிக் கூட்டம் எதைப் பற்றியும் கவலைப் படாமல் இத்தகைய குறைபட்ட தொழில்நுட்பத்தை அப்படியே பெரும் விலைக்கு வாங்கிக் கொள்வார்கள். ஸ்விஸ் வங்கிக் கணக்கில் அவர்களுக்கு ஒரு வெட்டு வெட்டினால் மட்டும் போதும். இந்த ஒட்டுண்ணிகள் ஸ்விஸ் கணக்கில் பணம் சேர்ந்ததும் இந்த நாட்டில் வாழப்போவதில்லை என்று கனவு காண்கிறார்கள். யூரோப்பியரோ வெள்ளை நிறமலலாதவர்கல் பொறுக்கிகள் உள்ளே விடுவதே தவறு என்று சொல்லும் புது நாஜி இயக்கங்களுக்கு வாக்களித்து பாராளுமன்றங்களுக்கு அனுப்பத் துவங்கி இருக்கிறார்கள்.

எது எப்படி ஆனால் என்ன, இறுதியில் இந்திய ராணுவ வீரனின் வாழ்க்கை பாழாகும். இந்திய ராணுவத்தின் பலம் குறையும். இந்த வகைக் கருவிகள் பாதுகாப்பு தருவதை விட விளைக்கும் நாசமே கூடுதல்.

நாம் கவலைப்படத்தான் உலகில் எவ்வளவு விஷயங்கள் உள்ளன!! இந்தக் கட்டுரையைப் படியுங்கள்.

http://www.wired.com/dangerroom/2012/05/air-force-stealth-pilot/