பெண்கள், பெண்கள்!

(1)

அந்த தாட்டியான பெண்மணி மணலைச் சுமந்து வந்து சரிந்து நின்றிருந்த சல்லடையில் சட்டியைச் சரித்துக் கொண்டிருந்தாள். அஷ்வின் அவள் குழந்தைகளுடன் அவள் பின்னாலே ஓடிக் கொண்டிருந்தான்.

”கவனிச்சியா. அந்தம்மா கட்டிட்டு இருக்கற புடைவை உன்னுது மாதிரியே இருக்கு”

“கிழிஞ்சிது. கிருஷ்ணகிரி. போன தடவை வந்தப்போ நாந்தான் நாலு புடைவை என்னுது கொண்டு வந்து தந்தேன், நினைவில்லையா?”

“ஓ ரைட். மறந்துட்டேன்”

“அந்த பில்டருக்கு இன்னொரு தடவை போன் பண்ணுங்களேன். எவ்ளோ நேரந்தான் இங்கயே உக்காந்துட்டு இருக்கறது. இவனையும் சமாளிக்கவே முடியலை”

“சார், நான்தான் சார். சரி சார்… ஓகே உள்ளே எல்லாம் பார்த்துட்டு வந்துடறோம். கொஞ்சம் ஸ்லாப் எங்க எப்படி வெக்கணும்னு பேசலாம்னுதான் வந்தேன். வந்துர்றீங்களா? ஓகே ஓகே பாத்துட்டு வெயிட் பண்றோம் சார், வாங்க”, என்று போனை கட் செய்து, ”வா உள்ள போயி பாத்துடலாம். அவனை தூக்கிக்கோ”, என்றேன்.

“அய்யோ! எனக்கு இடுப்பே ஒடஞ்சிடும் போலருக்கு. நீங்க தூக்கிட்டு வாங்க சாமி”

”பாப்பாவை நாங்க பாத்துக்கறோம்ணா. நீங்க மேலே போயிட்டு வாங்க”, அவள் அந்தபெண்மணியின் பெரிய மகளாக இருக்க வேண்டும்.

”இல்லைம்மா, நீ உன் தங்கச்சி பாப்பாவை பாத்துக்கோ. நான் தம்பியை தூக்கிட்டுப் போறேன். ரெண்டு பாப்பாவை நீ எப்பிடி பாத்துப்ப”.

“சார், வுட்டுட்டுப் போ சார். நா இருக்கன்ல. பாத்துக்கறேன்”, அந்தப் பெண்மணி உறுதி சொன்னாள்.

சரி என நாங்கள் மாடிப்படி ஏற, எங்களோடே சேர்ந்து அவள் பார்வையும் படியேறியது.

“அஸ்வின் மொத புள்ளையாம்மா உங்களுக்கு?”, தலை உயர்த்தி எங்களைப் பார்த்துக் கேட்டாள்.

“மொத புள்ள, கடைசி புள்ள, ஒரே புள்ள எல்லாம் அவன்தான்”, இவள் பதில் தந்தவாறே, “வாங்க போலாம்”, மேலே ஏறினாள்.

இரண்டே நிமிடத்தில் அஸ்வினைத் தூக்கமாட்டாமல் தூக்கிக் கொண்டு பெரியவள் மேலே வந்துவிட்டாள்.

“அங்கிள், அப்பா அப்பான்னு தம்பி அழறான்”. ”அப்ப” என்றால் அஷ்வின் பாஷையில் குடிக்கத் தண்ணீர். வழக்கம்போல புறப்பட்ட அவசரத்தில் தண்ணீர் கொண்டு வர மறந்துவிட்டிருந்தோம்.

”தண்ணியா அங்கிள். நான் உங்களைத்தான் தேடறானோன்னு நெனச்சேன். இருங்க வர்றேன்”, என வெளியில் ஓடினாள்.

“இந்தத் தண்ணி தம்பிக்கு குடுங்க ஆண்ட்டி”, கையில் வாட்டர் பாக்கெட்டுடன் வந்தாள்.

”இல்லை, வேணாம் பாப்பா. தம்பிக்கு இந்தத் தண்ணியெல்லாம் ஒத்துக்காது”

“பாவம், எங்க போயி வாங்கினாளோ. பாசமா குடுக்கறா வாங்கிக்கோ. கொழந்தையும் தாகம் தாங்க மாட்டான். என்ன பண்ண. பரவால்லை குடு”, என்றேன்.

கொஞ்சம் சுணக்கத்தோடேயே அந்தத் தண்ணீரை இவள் அஷ்வினுக்குப் புகட்டினாள்.

“இந்த சிமிட்டில்லாம் எங்க அப்பாதான் பூசினாருக்கா”, சொன்னவளை பதிலேதும் சொல்லாமல் ஒரு புன்னகைப் பார்வை பார்த்தோம்.

“பின்னாடி பாத்தீங்களா அந்த மூணு வூடும் கட்டுனது எங்க அப்பாதான். அப்போல்லாம் நான் குட்டிப் பாப்பாவா இருந்தேன். அந்த வீட்டு மாமா மூணு பேருமே ஏரோப்ளேன் ஓடுமே அங்க வேலை பாக்கறாங்க. அந்த வீட்டுல கூட நான் வெளையாடியிருக்கேன்.”, நாங்கள் கேட்கிறோமா என்கிற அக்கறையின்றி அவள் சொல்லிக் கொண்டே போனாள்.

“உன் பேரு என்னம்மா?”

“சங்கீதா”

“படிக்கிறியா?”

“ஆமாண்ணா. எலிமிட்ரி ஸ்கூல்ல மூணாவது படிக்கறேன்”

“குட்”

“அஸ்வின் பட்டாசுல்லாம் வெடிப்பானா அக்கா?”

“இல்ல குட்டி. அவன் சின்ன பாப்பாதானே. வெடிக்க மாட்டான்”

“அப்போ பட்டாசு வாங்க மாட்டீங்களா?”

”வாங்குவோம். நாங்களே அவனுக்கு வெடிச்சிக் காட்டுவோம்”

“எங்க அப்பா கூட பட்டாசு வாங்கித் தருவாரு. தங்கச்சிப் பாப்பாவுக்கு வெடியத் தெரியாது. நான்தான் அவளுக்கும் வெடிச்சி காட்டுவேன்”

“தீபாவளிக்கு எங்க வீட்டுக்கு வர்றியா?”

“உங்க வீடு எங்க இருக்குக்கா?”

“மடிப்பாக்கம்”

“அது எங்க இருக்கு?”

“உனக்கு எந்த ஊர் தெரியும்?”

“எனக்கு பல்லாவரம் தெரியும்க்கா. அப்புறம் திருவண்ணாமலை தெரியும்”

“பல்லாவரம் தாண்டி மடிப்பாக்கம் இருக்கு. வர்றியா?”

“நான் நாளைக்கு திருவண்ணாமலை போயிடுவேன்க்கா. அடுத்த தின்க்கெழமதான் வருவேன். அப்புறம் வர்றேன்”

”பாப்பா, என்ன அங்கிள் ஆண்ட்டியை தொந்தரவு பண்றியா? கீழே போய் இருக்கணும்”, என்றபடியே பில்டர் வந்தார்.

”அதெல்லாம் இல்லை சார்! நல்ல பொண்ணு”.

பத்து நிமிடங்கள் பில்டருடன் பேசி முடித்துவிட்டு கீழே இறங்கினோம். பையில் இருந்து இரண்டு நூறு ரூபாய்கள் எடுத்து இவளிடம் பார்வையால் அனுமதி வாங்கிக்கொண்டு, “சங்கீதா, இந்தா தீபாவளிக்கு ட்ரெஸ் வாங்கிக்கோ”, என நீட்ட…

“அண்ணா, எனக்கும் பாப்பாவுக்கும் பில்டர் மாமா ட்ரெஸ் வாங்கித் தந்துட்டாரு”.

“சுட்டி….! பரவால்லை இந்தா துப்பாக்கியும் ரோல் கேப்பும் வாங்கிக்கோ”, அவள் அம்மாவைப் பார்த்துவிட்டு தயக்கத்தோடு வாங்கிக் கொண்டாள்.

வெளியே வந்து வண்டியை உதைத்துக் கிளப்ப, “அஸ்வின் பை பை டாட்டா” என அக்காவும் தங்கையும் வழி அனுப்பினார்கள்.

பக்கத்தில் வந்து நின்ற சங்கீதாவின் அம்மா, “இன்னொரு புள்ள பெத்துக்கம்மா. அஸ்வினுக்குத் தொணையாருக்கும்”, என்றாள்.

-o00o-

(2)

”கொஞ்சமான அறிவிருக்காடா உனக்கு”, உள்ளேயிருந்து அம்மாவின் குரல் கேட்டது.

“என்னாச்சும்மா”

“இங்க வா வா வா”, ரௌத்ரக் குரல் உள்ளிருந்து. சமையல்கட்டில் சட்டுவத்திற்கு அடங்காத தோசையைப் பிய்த்துப் பிராண்டிக் கொண்டிருந்த இவளின் உக்கிரப்பார்வை திரும்பிப் பார்க்காமலேயே என்னைச் சுட்டது. எழுந்தவன் சமையலறைப் பக்கம் திரும்பும் திராணியின்றி உள்ளே அறைக்குப் போனேன்.

“எத்தனை தடவை சொல்றது உனக்கு உன் சாக்ஸை எல்லாம் கொண்டுவந்து தொவைச்ச துணியோட சேர்க்காதேன்னு?”

“சரிம்மா சரிம்மா… எடுத்திடறேன்”

“என்ன எடுத்திடறேன். உனக்கா அறிவு இருக்கணும் இதெல்லாம் ஹைஜீன் இல்லைன்னு”,

“சரி சரி எடுத்திட்டேன். நான் எழுதிட்டு இருக்கேன். கொஞ்சம் சும்மா இரு”

”சரி போ. சாப்டியா?”

“அவ இப்பதான் தோசைட்ட மல்லுக்கு நிக்கறா. எனக்கு இன்னும் ஒரு பத்து நிமிஷம் ஆகும். நீ சாப்ட்டுடு”, அறையை விட்டு வெளியே வந்தேன். சமையலறை கடக்கையில் மீண்டும் உஷ்ணப்பார்வையைக் கடக்கமாட்டாமல் கடந்தாயிற்று. இப்போதும் அந்தப்பக்கம் திரும்பிப் பார்க்கவில்லை. வந்து கம்ப்யூட்டர் முன்னே உட்கார்ந்தாயிற்று.

சட்டுவத்தில் “நொட் நொட் நொட் நொட்” என்று நான்கு முரட்டுத்தட்டல்கள் தோசைக் கல்லுக்கு. என்னை அழைக்கிறாள் என்பது அதன் அர்த்தம். திரும்பிப் பார்த்தால் தலையை மேலிருந்து கீழாக ஒரு லேசான அசைவு அசைத்து ”இங்கே வா”, என்று அழைப்பு. மீண்டும் எழுந்து என்ன ஏதோ என முன்கூட்டியே புரிந்துவிட்ட ஒரு சம்பாஷனையில் பங்கேற்க சமையல்கட்டிற்கு நடந்தேன்.

”எதுக்கு அப்படிப் பேசறாங்க அவங்க?”

“யாரு”

“இப்போ யாரு பேசினா உங்ககிட்ட?”

“ஓ!”, புரியாததைப் புரிந்து கொண்டவன்போல் ஒரு ஒற்றைவார்த்தை வார்த்தை சமாளிப்பு தர…

“அப்படியே புரியலை மைனருக்கு. இப்போ எதுக்கு அவங்க அப்படியெல்லாம் திட்டறாங்க. உங்களுக்கும் ஒரு மரியாதை இருக்கு. நீங்க அம்பது பேரை ஆபீஸ்ல மேய்க்கற மேனேஜர்”

“ஆபீஸ்லதான?”

“அதுக்குன்னு கொஞ்சமான அவங்களுக்கா தெரிய வேணாம் இப்படியெல்லாம் பேசக்கூடாதுன்னு?”

அம்மா என்னை இன்னும் திட்டுவாள். கல்யாணத்திற்குப் பின் “கட்டேல போறவனே, கழிசடையே”, என்பது போன்ற அவள் இயல்பான திட்டல்களை எல்லாம் ரொம்பவே கஷ்டப்பட்டு நிறுத்திவிட்டாள். அதில் எனக்கேகூட உள்ளூர வருத்தம்தான் இருந்தாலும் எப்போதாவது இதுபோல எரிச்சல்களில் இப்படிப்பட்ட திட்டல்கள் வந்து விழுவதுண்டு.

“உங்களையும் சொல்லணும். எதுக்கு அவங்க வாய்ல விழறாப்போல நடந்துக்கறீங்க”

“ம்ம்ம்”

“என்ன உம்…? கொஞ்சம் கூட அறிவில்லைங்க உங்களுக்கு”