புதை சேறு

நடனம் உடல் அசைவுகளைக் கொண்டது. உடல் முழுவதையும் அசைவுகளுக்கு உட்படுத்தி தாளத்துக்கு உட்பட்டும் தாளத்தை முறித்தும் கூட செய்யப்படுவது. டொரொண்டோவில் இன்.டான்ஸ் (Indance) என்ற நடனக் குழுவின் மூலம் தன் படைப்பாக்கங்களை, பார்வையாளர்களுடன் தொடர்ந்து பகிர்ந்து கொள்ளும் நடனக் கலைஞர் ஹரிகிருஷ்ணன், பரத நாட்டியம், மற்றும் நவீன நடனம் அறிந்தவர், அவற்றை நன்கு உணர்ந்தவர். சிருங்காரம் எனப்படும் காதலையும், இச்சையையும் வெளிப்படுத்த இன்றைய உலகில் வாழும் மனிதன் எதிர்கொள்ளும் தடைகளைப் பற்றின நடனம் இது.இந்த நடன நாட்டியத்தை இயக்கி வடிவமைத்த ஹரி கிருஷ்ணன் தமது எண்ணங்களை தெளிவான விதத்தில் நிகழ்கலையாக அமைத்திருந்தார்.

உயரமான நீலநிறத் திரை அரங்கத்தை மூடியிருக்கும்போது நமக்கு முன்னரே பரிச்சயமான நாட்டியத்தில் ஒரு பகுதியான இசை ஒலிக்கக் கேட்கிறோம். மேடையின் திரை விலகுகிறது. அரங்கின் ஒருபகுதியில் ஒளிப்பெட்டி போன்ற ஒளிச் சதுரத்திற்குள் பரத நாட்டியம் புரியும் பெண் பிம்பம் நிழல் வடிவில் தரையோடு ஒட்டி ஆடுவது பார்வையாளருக்குத் தெரிகிறது. ஒளிப்பெட்டிக்குள் ஆடும் பெண் நிழல்மீது ஈர்ப்போடு உயிரும் உடலும் கொண்ட ஒரு ஆண் நடனம் ஆடுகிறார். இவ்விருவரின் இணைந்த நடனத்தினை தள்ளி நின்று கவனிக்கும் ஒரு ஆண்.

‘காதலர் தினம்’ என்று வர்த்தகமாக்கப்பட்ட மனித உணர்வுகள் சிருங்காரம் என்ற மெல்லிய உணர்வாக முன்னர் அறியப்பட்டிருந்தன. இந்தச் சிருங்கார உணர்வு, அரங்கத்தில் நவீன நடனத்தின் மூலம் மிகத் தேர்ந்த கலைஞர்களின் உடல் அசைவுகளைக் கொண்டதாக வெளிப்படத் தொடங்கியது. இடையூறுகளையும் காதலையும் இணைத்து, இன்றைய மனிதனின் உணர்வுகளை மேலும் எட்டு ஆண் நடனக் கலைஞர்கள் தமது ஆட்டத்தின் மூலம் வெளிப்படுத்தத் தொடங்கினார்கள்.

மனித உணர்வுகள் ஒன்பது பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளதையும், இன்றைய நவீன வாழ்வில் எதிர்கொள்ளப்படும் பல்வேறு நிகழ்வுகளைக் கொண்டும், நவீன நடனம் மற்றும் தன்னுடைய சொந்த உருவாக்கலான உடல் அசைவுகளின் மூலமும் பரத நாட்டியம் அல்லாத மற்ற நடனங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களின் உடல்கள் மூலம் உருவாக்கப்பட்ட சொந்த உடல் அசைவுகள் மூலமும் வடிவமைக்கப்பட்ட நடனம் ஹரிகிருஷ்ணனின் ‘க்விக் சாண்ட்’ (புதை சேறு) என்ற நடன நிகழ்வு.

ஒவ்வொரு உணர்வுக்கும் நவரசத்தின் பெயரைக் கூறாமல், அதனைச் சார்ந்த வாழ்க்கைச் சூழல்களை தலைப்பிட்டு, ரசங்கள் வடிவக்கமைக்கப் பட்டதைக் காண முடிந்தது. (பொல்யூஷன்) மாசு என்ற தலைப்பில் ஒரு பெரிய கருப்புக் குப்பைத் தொட்டி மேடையில் வைக்கப்பட, நடனம் செய்பவர் ஒரு கையில் கருப்பு பிளாஸ்டிக் குப்பை பை, (குப்பை நிரப்பப்பட்டது,) மற்றொரு கையில் நிறமற்ற பிளாஸ்டிக் பாட்டில்கள் நிரப்பட்ட பை ஒன்றையும் நடனம் செய்து இரு வேறு கருப்புப் பைகளையும் ஒரே குப்பைத் தொட்டிக்குள் போட அதில் கையை விட்டு வெளியே எடுக்கும் போது கை முழுவதும் மாசு அப்பிக் கொள்ளப்பட்டது போன்ற உடல் மற்றும் முக அசைவுகள். குப்பைத் தொட்டியில் போடப்பட்ட குப்பை மேடையில் தரையில்; பிரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒளிப்பெட்டியிலும் சேர்ந்து அப்பிக்கொள்ள, ஒளிக்கட்டத்தினுள் நுழைந்த நடனம் ஆடுபவர் தரையோடு சேர்ந்து இரு கைகளாலும் குப்பையை ஒளித் திரையிலிருந்து நூல் போல் எடுக்கிறார். அது, பூமியில் எங்கோ போடப்பட்ட மாசுப் பொருட்கள் வேறு எங்கோ ஒரு பகுதியைச் சென்றடைவதையும், மனிதர்கள் பெரிய கிரேன்களில் குப்பையை அள்ளிப் போடுவதையும் போன்ற உணர்வையும் அளித்தது. உடல் நடன அசைவுகளும், மனிதனின் அருவருக்கத்தக்க செயலைக் காட்டியது.

மதர் தெரசாவின் புகைப்படத்தோடு கருணை ரசத்தை நடனம் செய்தவர்கள், அதைத் தொடர்ந்து செய்த அசைவுகளிலும் நடனத்தையும், இசையையும் சேர்ந்து பார்வையாளர்களின் சிரிப்போசையும் கேட்க அங்கு ஹாஸ்ய ரசம் நடனத்தில் வெளிப் படுத்தப்பட்டது. ஒரு ஆள் காலில் மிகவும் உயரமான (குதி உயர்ந்த) சிவப்பு நிற காலணி அணிந்து, பெண் போன்ற ‘ஹிப் ஹாப்’ உடல் நடன அசைவுகளைச் செய்ய மேடையில் இருந்த மற்ற அனைத்து ஆண்களும் பார்வையாளர்களின் மிக அருகில் அமர்ந்து உதட்டுச் சாயம் பூசி மிகவும் அதிகப்படுத்தபட்ட பெண் போன்ற முக அபிநயம் ஒவ்வொன்றையும் தெளிவான செயற்கையுடன் பல வினாடிகள் புகைப்படம் போல முகத்தில் நிறுத்தி மாற்றி செய்த அசைவுகள் ஹாஸ்யம் என்ற ஊடகம் வழியாக சொல்லப்பட்டாலும் இன்றைய உலகல் சினிமா மற்றும் பாப் போன்றவைகள் எப்படி மக்களின் அன்றாட வாழ்க்கைத் தரத்தை நிர்ணயிக்கின்றன என்று சொல்வதை உணர முடிந்தது. அந்தப் பிரபலங்கள் கூறும் அவர்கள் அழகு, ஆண்மை ,பெண் உடலமைப்பு, அந்த ஆண்கள் உடமைப்பு, ஆண் அல்லது பெண் இல்லாது மற்ற சக மனிதர்களை விமர்சிக்கும், தரம் பிரிக்கும் இந்த கிளாமர் மாய உலகிற்கு மக்கள் அடிமையாகும் விதம் பற்றிக் கூறுவதைப் பார்வையாளர்கள் சிரித்துக் கொண்டே உணருமாறு வெளிப்படுத்தப்பட்டது

‘அரப் ஸ்ப்ரிங்’ என்று எகிப்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சியை வீர ரசத்திற்கு உருவகப்படுத்தப்பட்டது பார்வையாளரான என்னிடம் சரியாக வந்து சேரவில்லை. ஹெச்.ஐ.வி. என்ற வலையில் விழுந்த பின் எழ இயலாமல் அதன் பிடியில் மாட்டிக் கொண்ட மனித குலத்தின் போராட்டம், அதனால் ஏற்படும் பயம் என்பன மிகவும் நன்றாக நாட்டிய வடிவம் அமைக்கப்பட்டு இருந்தன.

இது போன்ற ஹெச்.ஐ.வி. மற்றும் மாசு போன்ற விஷயங்களை பரத நாட்டிய வடிவில் கூற முடியுமா என்று நான் கேட்டதிற்கு ஹரிகிருஷ்ணன், ‘இல்லை, முடியாது.. அதனால்தான் நான் சொந்த உருவாக்கத்தில் தயாரித்த உடல் அசைவுகளைக் கொண்டு நாட்டிய வடிவமைப்பை செய்ய முற்படுகின்றேன்,’ என்று தன் சொந்தக் கருத்தைச் சொன்னார்.

ஒரு மடிக்கணினி (லாப்டாப்) வழியாக பல்கலைக்கழகப் பாடங்கள் அனைத்தும் அடங்கிவிடும் அதிசயத்தை மேடையில் தொடர்ந்து ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒளிப் பெட்டியின் ஒளிக்குள்ளே இயங்கிக் கொண்டிருக்கும் மடிக்கணினியை வைத்து, அதைக் கருத்தில் கொண்டு நடனம் அமைக்கப்பட்டிருந்தது.

முறிக்கப்பட்ட நம்பிக்கைகளால் ஏற்படும் கோபம், எரிச்சல், ஏமாற்றம் மிகவும் அழுத்தமாக சீனத் தற்காப்புக் கலையான ‘யூஷூ’ உடல் அசைவுகளைச் சார்ந்த நடனமாகக் கொடுக்கப்பட்டிருந்தது, மிகவும் காரமான கோபத்தைக் காட்டியது. இன்றைய உலகில் பொது மக்கள் அரசாங்கத்தால், பணக்காரர்களால், மாபெரும் கார்பொரேட் கம்பெனிகளால் என்று பெரிய பெரிய நிறுவனங்களில் ஆரம்பித்து சிறு சிறு விஷயங்களிலும் ஏமாற்றப்படுவது என்று சொல்லப்பட்ட விதம் மிக ஆழமான கோபமாக அதை வெளிப்படுத்தியதாக எடுத்துக் கொள்ளத் தோன்றியது. மதர் தெரசாவின் அன்பு, காருண்யம் ஆகியனவற்றைக் காட்ட உபயோகித்த மலர் கொத்தைக் கையில் எடுத்து உடலிலும் கண்களிலும் கோபம் சிதறி வழிய மலர் கொத்துடன் ‘யூஷூ’ உடல் அசைவையும் சேர்த்துக்கொண்டு கோபம் மிக அதிகமான க்ரோதமாக மாற மலர்க் கொத்தைத் தரையில் வேகமாக அடித்து, சிதறும் இதழ்கள் எங்கும் சிதறி இறைந்து கிடந்தது, மேடையில் ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஒளிப்பெட்டியில்.

இசை அமைப்பு மாற, ஒளி அமைப்பு மாற, சிதறிக் கிடந்த மலர்கள் இப்போது ஒளிப்பெட்டியில் தரையில் கிடந்த மலர் இதழ்கள் ஒளிப்பெட்டியில் உருவான நீர் நிலையில் மெல்ல மிதக்கும் மலர் இதழ்களாக மாற அமைதியும், சாந்தமும் சார்ந்த உடல் அசைவுகள் மேடையில் பல உடல்களின் மூலம் உருவாக்கப்பட, நடனம் ஆடுபவர்களின் ஒரு சீரான நிதானமான அதே சமயத்தில் பலமாகக் கேட்கும்படி அமைந்த சுவாசக்காற்று அரங்கம் முழுவதிலும் அமைதியை நிரப்பியது.

வார்த்தைகள், எழுத்துக்கள் கொண்ட பாடல்கள் இல்லாத நாட்டியம். ஆனால் பல தளங்களில் சிந்தனைகளை, உள்ளங்களை, உணர்வுகளை நவீன அசைவுகளின் மூலமும், அதனுடன் கூடிய முக உணர்வுகளைக் கொண்டு வெளிப்படுத்தினார்கள். உடல் முழுவதும் உணர்வுகளைத் தேக்கி உணர்வுகள் வழிய வழிய அசைவுகளைக் கொடுத்ததும் மிகவும் நேர்த்தியாக இருந்தது. ஆடிய அனைவரும் ஆண்களாக, அனைவரும் இந்தியர் அல்லாத ஒவ்வொருவரும் நவீன நடனத்திலும் மற்ற பல நடனங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களாக இருந்தாலும், இந்திய நிகழ்த்துக் கலையில் சிறிதளவே பரிச்சயம் பெற்றவர்கள். இத்தகைய இளைஞர்களைக் கொண்டு ஒரு இந்திய கலைக்கண் வழியே (நவரசம்) உருவாக்கியிருந்த நடன நிகழ்வு நிறைவானதாக, வகுத்துக் கொடுக்கப்பட்ட ஒரு  கட்டத்திற்குள் அமையாமலும், புதிய பரிமாணத்துடன் இருந்தது.

நிகழ்வின் இரண்டாவது பகுதியாக பரத நாட்டியத்தில் நவரசம் கொடுக்கப் பட்டது. ஒன்பது ஆண்கள், (அனைவரும் இந்தியர்கள் அல்ல.) முழுவதும் சுத்தமான பரதநாட்டிய அலங்காரத்தில் மேடையை முழுவதும் நிரப்பி ஆனால் தனித்தனியே ஒவ்வொரும் ஒவ்வொரு சிறு ஒளிப் பெட்டிக்குள் கட்டப்பட்டு பரத நாட்டியம் என்ற தெளிவான கோடிட்ட கட்டத்திற்குள் தங்கள் ஆடலை ஆரம்பித்தது, அதற்கு முன் கண்ட நிகழ்விலிருந்து முற்றிலும் மாறுபட்டதான உணர்வை, சந்தேகம் இல்லாமல் ஏற்படுத்தினர்.

சங்கீர்ணம் என்ற (தக திமி தக தகிட) ஒன்பது எண்ணிக்கைகொண்ட கணக்குக் கட்டுக்குள், இருக்கும் பரத நாட்டியத்தில் நவரசம் துவங்கியது. ஒவ்வொரு உணர்வும் அதைத் தொடர்ந்து ஜதிகளும், உணர்வும் ஜதிகளும் என்று ஒவ்வொன்றாக அடுக்கி வைக்கப்பட்டன. பரத நாட்டியத்தில் நன்கு தேர்ச்சி பெற்ற எனக்கு, அதற்கு முன்னால் படைக்கப்பட்ட நவீன நடனத்தில் இருந்து இதன் வேறுபாட்டை உற்று நோக்கத் தோன்றியது. பாதங்கள், பூமியோடு அதிகம் உறவில் இருப்பது. பூமியை விட்டுப் பிரியாமல் இருக்கும் நாட்டிய வடிவம். இடுப்பின் கீழ் கால்களுக்கு அதிக வேலை. இடுப்பிற்குக் கீழ் உடல் வேகமாக அசைய இடுப்பிற்கு மேல் உள்ள உடல் மிகவும் கணக்கிடப்பட்ட குறைவான அசைவுகள் கொண்டவை. கால், கை, முகம் வெவ்வேறு வேகத்தில், அதே சமயத்தில் அவை ஒன்றுடன் ஒன்று உறவுடன் அசைவது, இதைப் போன்று பல வித்தியாசங்களை என் சிந்தனை தேடித்தேடி கண்டுபிடித்துக் கொண்டிருந்தது.

நவரசம் பரதநாட்டியத்தில் கொடுத்ததை இன்னும் விரிவாகவும், எப்போதும் கொடுக்கப்படும் இப்படித்தான் இருக்கும் என்று முன்னமே தெரியக்கூடிய வடிவில் இல்லாமல், ஹரி கிருஷ்ணன் என்ற தனிப்பட்ட படப்பாளியின் சிந்தனையோடு கொடுக்கப்படாதது எனக்கு நிறைவைத் தரவில்லை. ஒவ்வொரு ரசத்திலும் இன்னமும் ஹரியை அதிகமாகக் காண முடியாமல் போனது என் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யாததாக இருந்தது.

ஆனால் முழு நிகழ்வும் தொய்வில்லாமல், ஒரே விஷயத்தை, உணர்வுகளை ஒரே மாலையில் இரு வேறு நிகழ்வுகளில் காண்கின்றோம் என்ற சலிப்பைக் கொடுக்காமல், நவீன நடனமும், பரதமுமாகக் கொடுத்தது பரந்த பார்வையாளர்களை வெவ்வேறு தளத்தில் சென்றடைந்தது நிறைவைத் தருவதாக இருந்தது. சிந்திக்கவும் ரசிக்கவும் தக்க ஒரு நல்ல முயற்சி.