சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள் – சதகம் – பகுதி 13

சதகம்

சதம் எனில் நூறு. சதம் எனும் சொல் சம்ஸ்கிருத மொழிச் சொல் என்கிறார் பேராசிரியர் அருளி. சதமானம், சதவீதம் எனும் சொற்கள் அதில் பிறந்தவை. நூறு வயதானவருக்கு சதாபிஷேகம் செய்வார்கள். தற்போது அது எண்பது வயதில் நடக்கிறது. ஒரே நேரத்தில் நூறு செயல்கள் ஆற்றுபவரை சதாவதானி என்பர். கோட்டாறு சதாவதானி செய்குத் தம்பி பாவலர் எனும் மேதையைச் செம்மொழித் தமிழ் கூறு நல்லுலகம் காணாமற் போக்கி விட்டது.

சதகம் எண்பது நூற்றகம் என்கிறார் அருளி ஐயா. நூறு பாடல்களைக் கொண்ட நூல் சதகம் என்றழைக்கப்பட்டது. சதம் எங்ஙனம் சதகம் ஆயிற்று என்பீர் உடன் தானே! இருங்கள், வருகிறேன்!

‘கொங்கு மண்டல சதகம்’ நூலின் உரையாசிரியர், முனைவர் ந. ஆனந்தி தனது முன்னுரையில் இது பற்றித் தகவல் தருகிறார். “சதம் எனும் சொல்லின் இடையில் -க- என்றொரு எழுத்துக் கூடி சதகம் என்றாகின்றது. இடையில் -க- எனுன்று ஓர் எழுத்து கூடி வருதலை, வடமொழியில் ‘கப்ம்பிரத்யயம் என்பர். ‘பாலன்’ எனும் சொல் ‘க’ப்பிரத்யயம் பெற்றுப் ‘பாலகன்’ என்று ஆனது போல், சதம் என்ற சொல்லும் ‘க’ப்பிரத்யாம் பெற்றுச் சதகம் என்றாகின்றது”.

எனக்கொன்று தோன்றுகின்றது. அப்பளம் எனும் தீந்தமிழ்ச் சொல்லை நாங்கள் பப்படம் என்போம். இரண்டும் சில தன்மைகளில் வேறுபட்டவை என்றாலும். மலையாளிகளும் பப்படம் என்பார்கள். சிலர் அதனையே பற்படம் என்பர். மேலும் சிலர் அதனை பற்படகம் என்பதுண்டு. இதே சூத்திரம்தானா என்று யாரேனும் ஆய்ந்து சொல்லலாம். அதுபோல் வடகம் எனும் சொல் திரிந்து வடாம் ஆயிற்றா அல்லது வடாம் எனும் சொல் ‘க’ப்பிரத்யயம் பெற்று வடகம் ஆயிற்றா என்பதனையும்.

‘உள்ள சோலியையே ஒழுங்காப் பார்க்க ஆளில்லை’ என்று யாரோ முனகுவதும் கேட்கிறது.

அகப்பொருள் அல்லது புறப்போருளை அடிப்படையாகக் கொண்டு, ஏதாவது ஒரு பொருள் மேல் நூறு பாடல்களால் அமைவது சதகம் என்பது பொது விதி. விதிகளும் மீறல்களும் இலக்கியத்துக்கு முரணானவை அல்ல.

தமிழில் சதகம் எனும் இலக்கிய வகை எழுவதற்குச் சில நூற்றாண்டுகள் முன்னரே, வடமொழியில் சதகம் எனும் இலக்கிய வகை தோன்றி இருந்தது. ‘வடமொழியில் உள்ள சதகங்கள் தர்மம், காமம், மோட்சம் ஆகிய பொருட்களை விளக்கி, நூறு சுலோகங்களால் தனித்தனியே அமைக்கப்பட்டவை. தர்மத்தைக் கோரும் சதகங்கள் நீதி சதகங்கள் என்றும் காமத்தைக் கூறும் சதகங்கள் சிருங்கார சதகங்கள் என்றும் மோட்சத்தைக் கூறும் சதகங்கள் வைராக்கிய சதகங்கள் என்றும் பெயர் பெற்று விளங்குகின்றன. பெருங்கவிஞன் பர்த்ருஹரி எழுதிய நீதி சதகமும் சிருங்கார சதகமும் வைராக்கிய சதகமும் கி.பி. ஆறாம் நூற்றாண்டாகும் என்கிறார் முனைவர் ச. ஆனந்தி.

மகாகவி பர்த்ருஹரி, காளிதாசனுக்கு இணையானவர். ஆனால் காளிதாசனைக் கேட்டிருக்கும் தமிழன் பர்த்ருஹரியைக் கேட்டதுண்டா என்று தெரியவில்லை. காளிதாசனின் ரகுவம்சம், மேக சந்தேசம், என்பனவற்றைத் தாண்டி எம்.கே.தியாகராஜா பாகவதரின் காளிதாஸ் எனும் திரைப்படமும் காரணமாக இருக்கலாம்.

பர்த்ருஹரியின் ‘சுபாஷிதம்’ எனும் நூல் 2005-ல் வடமொழியில் இருந்து தமிழுக்கு வந்துள்ளது. வெளியீட்டாளர், இது போன்ற நூல்களைத் தேடித் தேடிப் பதிப்பிக்கும் நண்பர் நடராஜன், சந்தியா பதிப்பகம். மொழிபெயர்ப்பாளர் ராஜபாளையத்தைச் சேர்ந்த கவிஞர் மதுமிதா. பன்மொழிப் புலவர் மூ.கு. ஜகன்னாத ராஜா அளித்துள்ள நுட்பமான தகவல்கள் கொண்டது. பர்த்ருஹரி எனும் தலைப்பில் மதுமிதா எழுதிய ஆராய்ச்சிக் கட்டுரை, காளிதாஸ் போன்று பர்த்ருஹரி என்று திரைப்படம் ஒன்று எடுக்கும் அளவுக்கு சுவாரசியமானது.

நீதி சதகம், சிருங்கார சதகம், வைராக்கிய சதகம் என மூன்று சதகங்கள், முன்னூறு பாடல்கள் கொண்டது ‘சுபாஷிதம்’. சுபாஷிதம் எனில் நல்மொழிகள் என்று பொருள் என்றும், சுபாஷித த்ரிசதி, சுபாஷித சதகத்ரயம் என்று இந்நூலுக்கு மாற்றுப் பெயர் உண்டென்றும் அறிகிறோம். சதகத்ரயம் எனில் மூன்று சதகங்கள் என அறியலாம். சித்தர் பாடல்களில் ‘பர்த்ருஹரியின் மெய்ஞானப் புலம்பல்’ பாடிய பட்டினத்தடிகளின் சீடரும் மகாகவி பர்த்ருஹரியும் ஒன்றல்ல என்கிறார் மதுமிதா.

வடமொழியில் இருந்து சமீபத்தில் மொழிபெயர்பாகித் தமிழில் வந்திருப்பதாலும், அந்த நூலின் முக்கியத்துவம் கருதியும், இந்தக் கட்டுரை சதக இலக்கியம் பற்றியது என்பதாலும் ‘சுபாஷிதம்’, நவீன வாசகர் அறிந்து கொள்ளுதல் நன்று என்பதாலும் சில பாடல்களை – மதுமிதா மொழிபெயர்ப்பில் – சொல்லிச் செல்லலாம்.

பர்த்ருஹரியின் பாடல் ஒன்று, சில பதிப்புகளில் நீதி சதகத்திலும் சில பதிப்புகளில் வைராக்கிய ச்தகத்திலும் காணப்படுவதாகக் கூறும் மதுமிதா, தன்னடைய மொழிபெயர்ப்பின் சதகங்களில் அந்தப் பாடலைச் சேர்க்கவில்லை என்று கூறி முன்னுரைக் கட்டுரையில் அதனைத் தனியாகத் தந்துள்ளார். பாடல் சுவாரசியமானது.


நான் எப்பொழுதும்
யாரை என்னுடையவளென
நினைத்துக் கொண்டிருக்கிறேனோ
அவள் என்னை விரும்பவில்லை

அவள் அதிகமாக
யாரை நேசிக்கிறாளோ
அவன்
வேறொரு பெண்ணை
விரும்புகிறான்

என்னிடம் மகிழ்ச்சி காண்கிறாள்
வேறொரு பெண்

இந்தப் பெண்ணையா
நான் விரும்பும் பெண்ணையா
அவள் விரும்பும் அவனையா
என்னையா
அல்லது மன்மதனையா
இதற்கு
யாரை
நொந்து நிந்திப்பது….!

பர்த்ருஹரி காலம்தொட்டு இன்றைய மெகாசீரியல் காலம் ஈறாக இதுதான் ஆண் பெண் சிக்கல் போலும்.

எனக்கு வடமொழி தெரியாது. எனினும் ஆறாம் நூற்றாண்டு வடமொழிக்கும் தமிழ் போலவே, கவிதைக்கு என, வடிவ- சந்த – ஒழுங்கமைதி இருந்திருக்க வேண்டும். அதிலும் பர்த்ருஹரி எனும் மாக்கவிஞன் கவிதை எனில் கேட்க வேண்டுமா? காலம் மாறிவிட்டது, கவிதை நவீனமாகி விட்டது, இலக்கணம் பழைய தினத்தாள் கட்டு ஆகிவிட்டது என்பன எல்லாம் நாம் அறிவோம். எனினும் வான்மீகிக்கு கம்பன் செய்தது போல் பெரியதொரு சேவையை பர்த்ருஹரிக்கு தமிழ் ஆற்றவில்லை. ஏன், காளிதாசனுக்கும் கூட.

சுபாஷிதத்தின் மூன்று சதகங்களும் பத்துப் பத்தென கொத்துக்களாய் ஆனவை. அந்த வகையில், சங்க இலக்கியமான பதிற்றுப் பத்தும் – 10 x 10 = 100 – ஒரு சதக இலக்கிய முன்னோடி என்று கருதுகிறார்கள்.

நிற்க. இனி, பர்த்ருஹரியின் சதக நூல்களில் இருந்து, மொழிபெயர்ப்பின் சில மேற்கோள்களைப் பார்ப்போம். நவீன கவிதை என்பதால் நான் உரை எழுதி மெனக்கெடவும் அவசியம் இல்லை.

நீதி சதகத்தில் இருந்து சில சுவையான கவி வரிகள்:

மெல்லிய தாமரைத் தண்டினால்
மதம் பிடித்த யானையைக் கட்ட
நினைப்பதும்
அனிச்ச மலரின் மெல்லிதழால்
வைரத்தை அறுக்க
முயல்வதும்

கடல் நீரின்
உப்புக் கருப்பை
தேன் துளிகளாய்
இனிப்பாக மாற்ற நினைப்பதும்

அமிர்தமான
நற்சொல்லினால்
முட்டாளை
நல்வழிப்படுத்த விரும்புவதும்
வீண் வேலை

எனது அதிகப் பிரசங்கித்தனமான உரையாக, வேண்டுமானால், இலங்கை அரசை இந்திய அரசு மனித உரிமை போதித்து நல்வழிப்படுத்த முயல்வதும், என்றும் சேர்த்துக் கொள்ளலாம்.

புழுக்கள் நெளியும்
எச்சிலில் நனைந்த
துர்நாற்றமுள்ள
அருவருக்கத்தக்க
மாமிசமில்லாத
கழுதை எலும்பை

நாய்
ஒப்பில்லாத ருசியுள்ளது போல்
ஆவலுடன் சுவைத்து உண்ணும் பொழுது
அருகில் இருந்து
தேவர்களின் தலைவன்
இந்திரன்
பார்த்துக் கொண்டிருப்பது
தெரிந்தாலும்
கொஞ்சமும் வெட்கப்படுவதில்லை

இழிந்த உயிர்கள் தாம்
அடைந்த பொருள்கள்
இழிவானதா இல்லையா என
அறிவதில்லை

நீதி சதகம் பல நீதிகளை மொழிகின்றது.

1. கிணற்றில் நீர் எடுத்தாலும், கடலில் நீர் எடுத்தாலும்
குடம் சம அளவு நீரையே எடுக்கும்

2. அபகீர்த்தி வந்து விட்டதால்
மரணம் வரத் தேவையில்லை

3. உலகில் ஒரு காரணமும் இல்லாமல்
பகையுடன் இருக்கின்றனர்

என்பன போன்று.

நீதி சதகத்துக்கும் வைராக்கிய சதகத்துக்கும் இடையே சிருங்கார சதகம் எனும் வைப்பு முறை எனக்குப் புரியவில்லை. ஏதேனும் காரணம் இல்லாமல் இருக்காது.

தீபம் உண்டு
நெருப்பு உண்டு

சூரிய சந்திர
நட்சத்திரங்கள் உள்ளன

ஆனால்
மலர்விழியாள் இல்லாது
இவ்வுலகில்
இருள் சூழ்ந்துள்ளது

என்கிறது ஒரு பாடல். மற்றொரு பாடலோ

பாபம் போக்குவதற்கு
கங்கை நதிக்கரையில்
வசிக்க வேண்டும்
அல்லது

மனத்தைக் கொள்ளை கொள்ளும்
மாலையணிந்த மங்கையின்
மார்பகங்களில்
வசிக்க வேண்டும்

என்கிறது.

அழகிய பிருஷ்டங்களையுடைய
அவளை விடுத்து
அமிர்தமோ விஷமோ இல்லை

இணைந்திருக்கையில்
அமிர்தக்கொடி அவளே

விலகியவுடன்
விஷக்கொடியும் அவளே!

எனும் ஒரு பாடல்.

மங்கையின் தேகம்
அடர்ந்த வனம்
அதில் அலையாதே
மன வழிப்போக்கனே

அங்கே

மார்பக மலைக் கோட்டையில்
மன்மத திருடன் உள்ளான்!

என்றும் எச்சரிப்பது ஒரு கவிதை.

குளிர் காலத் தென்றல்
காமமிக்க காதலனைப் போல்
அழகிய பெண்களிடம் விளையாடுகிறது

எனப் பற்பல வரிகள் மேற்கோள் காட்டலாம்.

ஒன்றெனக்குப் புரிகிறது. சிற்றிலக்கியத் தமிழ்ப் புலவனுக்குப் பெருமுலை மீது தணியாக் காமம் எனில் பர்த்ருஹரிக்குப் பெரும் புட்டங்கள். மேலும் எம்மொழிக் கவிஞன் ஆனாலும் பெண் அவனுக்கு மதுக்குடமாகவே தெரிகிறாள். மாந்தி மாந்தித் தீரவில்லை, போதையும் தெளியவில்லை.

மூன்றாம் பகுதி வைராக்கிய சதகம்.

முகத்தில்
சுருக்கங்கள்

நரைகண்ட தலைமுடி
நடுங்கும் உடல்

ஆசைமட்டும்
இன்னும்
ஓயவில்லை

என்றும்

புலியைப் போல்
பயமுறுத்துகிறது முதுமை

விரோதியைப் போல்
உடலைத் தாக்குகிறது வியாதி

உடைந்த பானையிலிருந்து
வழியும் நீர்போல்
ஒழுகுகிறது ஆயுள்

இருந்தும் மனிதன்
நற்செயல்கள் செய்யாதிருக்கிறான்
இது அதிசயமே!

என்றும் நிலையாமை பற்றிப் பேசுகிறது.

எனினும் வடமொழிச் சதகதுக்கும் தமிழிலுள்ள சதகதுக்கும் பெயரன்றிப் பிற ஒப்புமை இல்லை என்கிறார்கள்.

தமிழில் சைவக்குரவர் நால்வரில் திருச்சதகம் பாடிய மாணிக்க வாசகர்தான் தசகம் எனும் சொல்லை ஆதியில் ஆண்டிருக்கிறார். திருவாசகத்தின் ஒரு பகுதி திருச் சதகம். திரு என்பது அடைமொழி. திருச் சதகம் நூறு பாக்களால் ஆனது.

(தொடரும்)