கைக்கு எட்டிய வானம் அல்லது காட்சிப்பிழை அல்லது ஜூஜூ தவளை சொன்னகதை

சேற்றில் கால்களை ஒவ்வொரு சமயம் ஊன்றும்போது ஒரு நீர்குமிழி பொளக் என்று வெளியேறியது. அதை கவனித்தபடி கால்களைத் தொடர்ந்து ஊன்றுவது மிகுந்த உற்சாகத்தை அளித்தது. சேறு கால்களில் அப்பி அழகான‌ கரும் ஜோட்டு ஒன்று அணிந்தது போல ஆகிவிட்டிருந்தது. தவளைக் குட்டியோ, மீன் குஞ்சோ திடீரென எம்பி வந்து சமயங்களில் கால்களை தொட்டு கிச்சுகிச்சு மூட்டிவிட்டு ஓடுயது. அந்த‌ ஒரு கணத்தில் கையில் பிடித்திருந்த‌ ஒரு சின்ன மீன் அவனிடமிருந்து தப்பி வேறு ஒரு இடத்திற்கு பாய்ந்து சென்றுவிட்டது. விடாமல் துரத்தியும் அது அவன் கைகளில் அகப்படாமல் ஓட முயற்சித்தது. இந்தவிளையாட்டு அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அவனுக்கு முன்பு பாண்டி, செந்தில், அக்காவு சென்று கொண்டிருந்தார்கள் அவர்களின் கால்சிராய்களில் இங்க் தெளித்துபோல சேறுகள். புள்ளி கோடுகளாக பரவியிருந்ததை அவர்கள் அதை அறியாமல் நடந்து செல்வதைப் பார்த்து சிரித்துக் கொண்டான் சங்கர்.

வீட்டிற்கு போனதும் வசைகளும் அடிகளும் மாறிமாறி கிடைக்கப் போவதை நினைத்துப் பயம் ஏற்பட்டது ஆனாலும் சந்தோஷம் அவ‌னை நெட்டித் தள்ளியும், முன்னோக்கி இழுத்தபடியும் இருந்தது. கணுக்கால் அளவு இருந்த‌ சேறடர்ந்த கலங்கிய நீரானது சில இடங்களில் சற்று பள்ளமாகவும் சில இடங்களில் மேடாகவும் இருந்தது. பிடிக்கப்பட்ட மீன்களை சேகரிக்க ஆங்காங்கே நீரில் அமுங்கிய கூடை வெறித்துப் பார்க்கும் கோழியின் கண்கள் போல காட்சியளித்தன. அலைகள் தளும்பும் நீருடன் பார்த்து பழகியிருந்த குளம் அது, இறைத்தபின் நீரற்று இருக்கும் பரப்பை அதன் உள்ளிருந்து பார்ப்பதே ஒரு பிரம்மாண்ட உணர்வை ஏற்படுத்தியது. காதைக் கிழிக்கும் விசித்திர ஓலிகளுடன் மாலைநேர வெப்பமே தெரியாமல் சில்லென்று காற்று வீசிக் கொண்டிருந்தது. குளம், அதன் நாலுபக்கம் மதில் சுவர்களுடன் கரிய நிறத்தில் சேறுபடர்ந்த அதன் உடலை பார்ப்பதே பழக்கமான பெரிய மிருகத்தின் அருகில் ஒரு சிறு துணிவுடன் செல்வது போல‌ அச்சத்தை ஊட்டியது.

இருட்ட ஆரம்பித்ததை அவன் அறிந்த ஒரு சம‌யத்தில் தெளிந்த நீராக இருந்த ஒரு பகுதியில் கால்களைக் கழுவிக் கொண்டு சட்டென்று வீட்டிற்குப் பறந்தான் சங்கர். உள்ளே போகும்போது அம்மா கவனிக்கவில்லை என்று நினைப்பது பிழை என்பதை மனதில் நினைத்துக் கொண்டு, எப்போதும்போல‌ ஒருமுறை உள்ளே சென்று மீண்டும் கைகால்களை கழுவிக் கொண்டு வந்த நேரத்தில் அது உறுதிப்பட்டது. தான் சென்றிருந்த இடத்தை மூன்றாம் வீட்டு மேகலா அக்கா பார்த்துவிட்டு அம்மாவிடம் கூறியிருப்பாள். அவளுக்கு இதுதான் வேலை. அவன் பக்கம் திரும்பாமல் இருப்பது, வேகவேகமாக வேலைகளைச் செய்வது போன்ற அம்மாவின் பாவனைகளே உணர்த்தின. வழக்கமற்று சுத்தமாக‌க் கவனிக்காமல் இருப்பதுபோல‌ இருந்தால் அதற்கு வேறொரு அர்த்தம் இருக்கிறது என்று பொருள். மெல்ல புத்தகங்களை எடுத்துக்கொண்டு உள்அறைக்குச் சென்று அமர்ந்து கொண்டான். அந்த இடம் குளிர்ச்சியாக இருந்தாலும் வேர்த்துக் கொட்டியது அவனுக்கு. வேகமாக பக்கங்களை புரட்டி அவனுக்குப் பிடித்த ஒரு பக்கத்தின் நடுவில் கைகளால் குத்தி சமன்படுத்தி சம்மணப்படுத்திய கால்களுக்கு கீழ் வைத்துக்கொண்டு படிக்க ஆரம்பித்தான்.

தங்கை விஜி அறைவாசலில் நின்று எட்டிப் பார்த்தாள். அப்படி அவள் பார்ப்பதே அருவருப்பாகவும் எரிச்சலாகவும் இருந்தது. உள்ளே வந்தவள் ஏதோ எடுக்க வந்த மாதிரி, அவன் பக்கத்தில் நின்று ‘எங்க போயிருந்த,’ என்றாள். அவளைப் பிடித்துத் தள்ளிவிட வேண்டும் போலிருந்தது. பின் அதற்கும் அடிவாங்குவதைத் தவிர்க்க, பேசாமல் ஏதோ ஒரு வேலையில் தீவிரமாக இருப்பது போலிருந்தான். ஆனால் அவன் செவி அவள் என்ன சொல்லபோகிறாள் என்பதைக் கூர்ந்து கவனித்தது. ‘அம்மா கோவமா இருக்காங்க,’ அவளைக் கவனிக்க அவன் முயற்சி செய்யாது வேகமாக ஏதோ படிப்பதுபோல் பாவனை செய்தபோது ‘அப்பா வந்தோன்ன உனக்கு அடியிருக்கு,’ என்று சொல்லியபடி தன் கடமையைச் செவ்வனே முடித்ததாக நினைத்து உடனே அங்கிருந்து அகன்றாள்.

அவளை முடியைப் பிடித்துக் குனியவைத்து முதுகில் நாலு சாத்து சாத்த வேண்டுமெனத் தோன்றியது. அவள் போன பின்பும் கோபமும், இயலாமையும் தலைக்குமேல் ஏறியபடி இருந்தது. புத்தகங்கள்பால் அவன் கவன‌ம் செல்லவில்லை. இடமாறி அமர்ந்தும் இலக்கற்று கவனிப்பதுமாக இருந்தான். பிறகு மெதுவாக அடுப்படி சென்று அம்மா பக்கத்தில் அமர்ந்துகொண்டான். இப்போதே சமாதானப் படுத்தி விடுவது மேல் என்று அவனையும் அறியாமல் தோன்றியது. அடுப்படியில் ஒருகால் உயர்த்தி சம்மணம் கட்டி அமர்ந்த அம்மாவின் கால்களை தலைகுனிந்தபடி கவனித்துக் கொண்டிருந்தான். உருளைக்கிழங்கு கறி தயாரித்துக் கொண்டிருந்தாள், அவளின் வேகத்திற்கு கால்விரல்கள் அசைந்து கொண்டிருந்தன. சமைத்துக் கொண்டிருந்த‌ அம்மாவின் கைகள் சில சாமான்களை எடுப்பதும், பொத் என்று வைப்பதுமாக இருந்தன‌. அதன் வேகம் அந்த இடத்தில் அர்த்தமற்று இருந்தது. நடுவே ’அம்மா,’ என்று ஈனக்குரலில் அழைத்தான். அது அவனுக்கே சரியாகக் கேட்கவில்லை போல் தோன்றியது. ஒரு சில விநாடிகள் என்பதுகூட‌ ஒரு நீண்ட மெளன இடைவெளி போன்று அவஸ்தையாக இருந்தது அப்போது. சட்டென ஒரு கணத்தில் திரும்பி ‘எங்க போயிட்டு வர்ற,’ என்றாள். மீண்டும் பழையபடி திரும்பிய முகம், கைகள் அதே வேகத்தில் இயங்க தொடங்கியிருந்தது.. மனதில் தயாரித்து வைத்திருந்த‌ பதிலை அவனால் தற்போது சொல்ல‌ முடியாதது அவனுக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘வந்து வந்து,’ என்றுதான் முழுங்கியவன். ‘அப்பா வந்தோன்ன சொல்லாதம்மா,’ என்றான் பரிதாபமாக. நிதானமாக திரும்பிய அம்மா முகத்தில் கருமையாக‌ படர்ந்த கோபம் முகத்தைக் கிட்டத்தில் மேலும் பெரிதாக அகோரமாக‌க் காட்டியது. சுளித்த உதடும், சுருங்கிய கண்ணுமாக ‘கண்டிப்பா சொல்லத்தான் போறேன்,’ என்றவளின் உதடுகளிலிருந்து தொடர்ந்து வார்த்தைகளாகத் தெறித்தன. அந்த இடத்தில் அவைகளுக்கு எந்த பொருளும், தேவையும் இருப்பதாகத் தெரியவில்லை. அந்த முகம் அவன் அம்மா முகமல்ல என்று வெறுப்புடன் தோன்றியது. முகத்தில் கிட்டத்தில் பார்க்கும்போது தெரிந்த பருக்கள், மேடுபள்ளங்கள் தற்போது அருவருப்பூட்டின. தங்கை அவனையே கவனித்துக் கொண்டிருந்தது இன்னும் எரிச்சலாக‌ இருந்தது.

பதற்றமும் பயமும் அதிகரிக்க அம்மாவின் வசைகளுக்கு நடுவே எவ்வளவு நேரம் உட்கார்ந்திருந்தான் எனத் தெரியாமல் மீண்டும் உள்அறைக்குச் சென்று அமர்ந்து கொண்டான். ஏன் பதற்றம் அதிகரிக்கிறது எனச் சட்டென புரியாமல் போனது. தன்னையறியாமல் அடிக்கடி கடிகாரத்தைப் பார்த்துக்கொண்டான். புத்தக‌த்தை விரித்ததும் அதில் தெரிந்த எழுத்துக்கள் நீரில் ஓடும் மலர்கள் போல ஒடியதில் அவன் கண்கள் கண்ணீரில் மிதப்பதை உணர்ந்தவனாக‌ லேசான கோணல் வாயுடன் கவனித்தான்.
திடீரென‌ ஊர் அமைதியடைந்தது மாதிரி இருந்தது. எந்த ஒலியும் துல்லியமாக கேட்டதும், புலன்கள் கூர்மையடைந்து உடல் சிலிர்ப்பதையும் உணர்ந்தான். அப்பாக்கு வரும் கோபம் அவன் அறிந்திருக்கிறான். கொஞ்சம்கூட யோசிக்காமல் அவரால் எப்படி அடிக்கமுடிகிறது என்பது தெரியவில்லை. அடித்து வெறுப்பேற்றப்பட்ட கொடூர‌ விலங்கு ஒன்று பாய்ந்துவருவது போல பாய்ந்துவந்து என்ன ஏது என்றுகூட‌ கேட்காமல் கண்ணுமண்ணு தெரியாமல் அடிப்பார். அவருடைய முதல் இலக்கு முன்நெற்றியில் இருக்கும் முடிகள்தான். அதைப் பற்றிக்கொண்டார் என்றால் பின் கன்னம், கழுத்து, முதுகு என்று அடிக்க ஏதுவாக இருக்கும். உதட்டு ஓரத்தில் இருந்த தழும்பு அவரால் தான் உருவானது. அப்பா என்ற பேருக்கு இருக்கும் தான் நினைக்கும் ஒரு விசேஷம் அவருக்கு ஏதுமில்லாமல், எந்த‌ விசயத்திலும் பொண்டாட்டி பேச்சை அப்படியே கேட்கும் சாதாரண மனிதன் தான் என்ற எண்ணம் அவனுக்கு உண்டு.

அடிப்பதைத் தவிர வேறு எதுவும் அவருக்கு தெரியாது. எதிரே இருக்கும் இந்த ஓவியத்தைக் கூடப் புரிந்து கொள்ள அவரால் முடியாது. ஏன் வண்ணத்தின் பெயரைக்கூட அவரால் சரியாக கூறமுடியாது. எதிரே தான் வரைந்து ஒட்டியிருந்த ஓவியத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோது சட்டென மனம் அமைதியடைந்து, எல்லா அப்பாக்களும், அம்மாக்கள் அப்படித் தான் என தோன்றியது. அந்த ஓவியத்தை வரைந்த போது கமலியுடனும், வசந்தனுடனும் நடந்த வேடிக்கை நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தன‌. மூவரும் சேர்ந்துதான்  வண்ணங்களைத் தேர்ந்தெடுத்தார்கள். ஒவ்வொன்றையும். அதன் தூரங்களை விள‌க்க அடர், வெளிர் நிறங்களை தேர்தெடுத்தார்கள். கூட சில மரங்களோடு முன்பக்கம் சற்று தாழ்ந்த மலையும், பின்னால் சற்று உயர்ந்த மலையும் அதன் மேலே மறையும் சூரியனுடன், அதை உணர்த்த மற்ற பொருட்களின் நிழல்கள் சாய்வாய் வரையப்பட்டன. அதில் செம்பழுப்புப் புற்கள் காற்றில் அசைந்தபடியிருக்கும். புற்களின் மேற்பகுதியில் சூரியஓளி மினுமினுக்கும். வலது பக்கத்தில் இருக்கும் தூங்குமுஞ்சி மரம் அடர்ந்த பல கிளைகளுடன் படத்தின் மேல்பக்கம் முழுவதும் இடப்பக்கம் கொஞ்சமும் நீட்டியபடி நிழல் பரப்பி அந்த இடம் குளிர்ச்சியாய் மாற்றி இருக்கும். மரங்களில் தூங்குமூஞ்சி மரம் அவனுக்குப் பிடித்தது. அந்தப் பேரே அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. அதன் இலைகளும், சிதறிக் கிடக்கும் செம்பழுப்புப் பூக்களும் அவனுக்கு எப்போதும் மகிழ்ச்சியளிப்பவைகள்.

அவனுடன் கமலியும், வசந்தனும் ஆளுக்கொரு சின்ன‌ சைக்கிளில் பலவிதக் கூச்சல்களுடன் அந்த மலையைக் கடந்திருக்கிறார்கள். நடுவில் வரும் ஒரு பள்ளத்தாக்கில் கீழ்நோக்கி இறங்கி மறைந்துபோய் சற்றுநேரம் கழித்து மேலேறியிருக்கிறார்கள். உயரமான‌ இரண்டாம் மலையின் உச்சியில் நின்றபடி மேலே படர்ந்திருந்த நீலவானத்தை, நீரில் கைகளை அலையவிடுவதுபோல், அலைய விட்டிருக்கிறார்கள். கமலி வைத்திருக்கும் காமிக்ஸ், அறிவியல் புத்தகங்கள்படி வானம் மேலே முழுவதும் கருமையே என அவன் அறிந்திருந்தான். ஆனாலும் அந்த கற்பனை அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. கற்பனைகள் எல்லையற்றும் அவரவர்களுக்குத் தோன்றிய புதிய‌ கற்பனைகளை கூறிக் கொள்வதில் இருக்கும் போட்டியே அந்த ஓவியத்தை பலவண்ணத்தில் வளர்த்தெடுத்தது.

ஒரு வாசனை பவுடர் எப்போதும் போட்டுவருவாள் பக்கத்துவீட்டு கமலி. அவளின் கைவிரல்கள் பீன்ஸ்போல குண்டுகுண்டாக முடிச்சுகளுடன் இருக்கும். அவள் கையைப் பற்றி விளையாடும்போது ரம்மியமாக இருப்பதை உணர்ந்திருந்தான். அதேபோல் எதிர்வீட்டு வசந்தன் ‍புதுப்புது பேனாக்கள், பென்சில்கள் வைத்திருப்பான் குட்டையாக இருக்கும் அவன் செய்யும் சேட்டைகள், அவனின் கருத்த பளிங்கு கண்களை உருட்டி பேசுவது அழகு என நினைத்துக்கொள்வான். கமலியும், வசந்தனுமே எப்போதும் அவனுக்கு பிடித்த நண்பர்கள். இருவருடன் சேர்ந்து பக்கத்திலுள்ள‌ பிள்ளையார் கோயில் குளக்கரையில் அம‌ர்ந்து அவர்கள் உருவாக்கிய கதைகள் ஏராளம். காற்றில் கைகளை அசைத்து வண்ணங்கள் உருவாக்குவதுபோல‌‌ ஒவ்வொரு சமயமும் கதைகள் புதிய செய்திகளையும், திருப்பங்களையும் கொண்டு அவர்களையே ஆச்சரியப்படுத்தும். அதில் அவனுக்கு பிடித்த‌ விசித்திரமான‌ பிள்ளையாரைப்பற்றிய கதையும் ஒன்று. வெறும் சுண்டல் மட்டுமே படைக்கப்பட்டதால் பிள்ளையார் கோபத்தில் திரும்பி அமர்ந்து கொள்கிறார். முதுகுகாட்டி அமர்ந்த‌ பிள்ளையாரைக் கண்டு அதிர்ந்த  ஊர்மக்கள், பிள்ளையாரை திருப்ப முயன்று முடியாமல் போக மேலும் அதிர்ந்து போகிறார்கள். ஒவ்வொருவரின் கனவிலும் வந்து தான் திரும்பி அமர‌ தன‌க்கு பிடித்த‌ கொழுக்கட்டை வேண்டுமென்று கேட்கிறார். உடனே ஊர்மக்கள் கொழுக்கட்டைகளை படைத்து வைத்த்தும் திரும்பிவிடுகிறார் பிள்ளையார். ஊர்மக்கள் சந்தோஷமடைகிறார்கள். இதை எண்ண‌‌ற்ற வகைகளில்  அவகளால் நீட்டியும், சுருக்கியும் கூறமுடிந்தது. அதைக் கதையாகவும் எழுதி அனைவருக்கும் காட்டி மகிழ்ந்தான்.

இந்த களிப்பையும் சந்தோஷத்தையும் பற்றித் தெரிந்து கொள்ளாமல் வெறும் அறிவிலிகளாக இந்த அப்பா அம்மாக்கள் இருப்பது சங்கருக்கு வெறுப்பாக இருந்தது. சின்னவயதில் இத்தனை அனுபவங்கள் கூடிவரும்போது, இந்த பெருவயதில் எத்தனை இருக்கவேண்டும். அவர்கள் மூளையைப் பயன்படுத்தாமல் இருப்பதாக அவனுக்கு தோன்றியதும் உண்டு..

புத்தகத்தைப் பிரித்திருந்த பக்கம், பள்ளியிலும், டியூசனிலும் பலமுறை படித்திருந்ததுதான். ஒரு படத்தில் நேராகவும், மற்றொன்றில் நீரினால் வளைந்தும் காணப்படும் கண்ணாடித்தண்டு காட்சிப்பிழையை விவரிக்கிறது. அதைக் குறித்து பல தடவைகள் பேசியும், எழுதியும், சிந்தித்தும் அதைத் தாண்டி வந்துவிட்டான். ஆனாலும் புதிய செய்தியாக‌ எதுவும் இல்லாமல் ஒவ்வொரு தேர்விலும் அதையே தொடர்ந்து படித்து வரிமாறாமல் எழுதுவது அவனுக்கு மிகவும் எரிச்சல் அளிக்கும் விசயமாக இருந்தது.

பள்ளிப் புத்தகம் தவிர வேறு புத்தக‌ங்களைப் படிப்பதை இந்த அப்பாககள் அம்மாக்கள் வெறுக்கத்தக்கதாக பார்ப்பதை அவன் வெறுத்தான். சிறுவர் பத்திரிக்கை ஒன்றிற்கு அனுப்ப, கதை ஒன்றை எழுதியபோது அவனைச் சுற்றியுள்ளவர்கள் அடைந்த கோபத்தையும், அதிர்ச்சியையும் முழுமையாகவே வெறுத்தான். தான் அமர்ந்திருந்த அறையில் இருந்த‌ மேஜைக்கு அடியில் அப்புத்தகம் கிடந்தது. அதைப் புரட்டியபோது அதில் ஒரு பக்கத்தில் தவளை படம் இருந்தது, அது ஜூஜூவின் ஞாபகத்தை கிளறி விட்டது.

ஒரு மழைநாளில் அவனும் வசந்தனும் சேர்ந்து பிடித்தார்கள் ஜூஜூவை. முதலில் கற்களால் அடித்து கொல்லவே முயற்சித்தார்கள். இருட்டில் தத்தி வந்த பெரிய தவளையை ஒவ்வொரு கல்லாக எடுத்து அடித்தும் அது தப்பித்தபடி இருந்தது. ஒருசமயத்தில் கல்லென நினைத்து தவளையே பிடித்துவிட்டான் சங்கர். முதலில் உதறியவன், கையில் சொறி வரும் என வசந்தன் பயமுறுத்தினாலும், பிறகு அதனிடம் அவனுக்கு பயமேற்படவில்லை. அதைப்பிடித்து வந்து யாருக்கும் தெரியாமல் கொல்லைப்புர இடிந்த சின்ன மதில் சுவரின் மீது வைத்திருந்தான். அதன் பின்னங்கால்கள் அடிப்பட்டிருந்ததால் அதனால் குதித்து ஓடமுடியவில்லை. கால்களை உதறி இடப்பக்கம் திரும்ப முயற்சி செய்தபோது வலப்பக்கமாக சென்றது. இந்த குழப்பத்தினால் வலம் இடம் என்று மாறிமாறி திரும்பி நின்றதாக தோன்றியது.
அது தன் தலையைத் தூக்கி கண்களை சிமிட்டி அவனையே பார்த்தது. ‘உனக்கு ஒரு பெயர் வைக்கிறேன். அது என்ன தெரியுமா’ என்றான். தொண்டையை அசைத்து உதடுகளை விரித்து சிரித்தது, ‘ஜூஜூ’ என்றான். அதற்கும் உதடுகளை விரித்து புன்முறுவல் காட்டி தலையசைத்து ஏற்றுக் கொண்டது. அடிப்பட்ட கால்களுக்கு மருந்து தடவினான். இருநாட்கள் அங்கேயே இருந்தது. அந்த இரண்டாம் நாளில் தான் கதை ஒன்றை சொன்னது.

ஒரு அரசன் தன் அழகான மகளுக்கு அவள் விருப்பபடி ஒரு தவளைக்கு மணம் முடித்து வைத்தான். கொஞ்சநாளில் ஒரு தேவதையின் ஆசிர்வாதத்தால் அது ஒரு அழகிய இளம் வாலிபனாக மாறியது. அரசனுக்குப் பின் அவனே இளவரசியை மணந்து அரசாண்டு வந்தான். இந்த கதை பிடித்ததற்கு காரணம். அதில் வந்த இளவரசி மீது அவள் அப்பா கொள்ளும் பாசப் பிணைப்புதான். தன் அப்பா அடிப்பதைப் ப‌ற்றி ஜூஜூவிடம் குறைகூறிக் கொண்டபோது அது சொல்லியது ‘நீ உன் அப்பாவை திருப்பி அடித்துவிடு,’ என்று. அது சொன்னதுபோல் ஒருமுறை அடித்துவிட்டால் பிறகு அவரால் திருப்பி அடிக்கவே முடியாது என்று தோன்றியது. ஜூஜூ அவனுடன் இருப்பதை அவன் அம்மா பார்த்துவிட்டதால் அடுத்தநாள் அது தானாகவே சென்றுவிட்டது. அவள் கொண்ட முகச்சுளிப்பை இன்றும் அவனால் மறக்கமுடியவில்லை. இடுக்கிப் பார்த்த கண்களை இடக்கையால் இறுக மூடிக்கொண்டாள். அடுப்படி வாசலில் உள்ள நிலைப்படியில் இருபக்கமும் கால்களை வைத்து கைகளால் ஊன்றி மேலேறுவதைப் பார்த்தால் வெறுப்பதைப் போல அது இருந்தது. படிப்பை தவிர வேறு எந்த புதிய திறன்களையும் அம்மாக்கள், அப்பாக்கள் விரும்புவதில்லை என கண்டுகொண்டான். ஒருவாரம் அவன் பக்கம் வரவேயில்லை என்பதிலிருந்து இதைப்புரிந்துகொண்டான்.

அதேபோல் குப்புறப்படுத்து வானத்தை தூளாவிக்கொண்டிருப்பது எத்தனை அலாதியானது என்பதை இவர்கள் அறிந்திருக்கவில்லை. சங்கர், வசந்தன், கமலி மூவரும் மாலை வேளைகளில் கோயில் திட்டுகளில் படுத்துக் கொண்டு எத்தனை முறை நட்சத்திரங்களை எண்ணியிருக்கிறார்கள். கீழே விழும் நட்சத்திரங்கள், பறந்து செல்லும் பறவைகளின் வரிசைகள், சிலசமயங்களில் மேகங்கள் பொங்கி வரும் நுரையைப் போலவும், சிலசம‌யங்களில் தூவப்பட்ட‌ பஞ்சுப்பொதிகளைப் போலவும் காணப்படும். சில சமயங்களில் வானம் கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்குவதுபோல காணப்படும். சிலவேளைகளில் அதுவே எட்ட போய்க்கொண்டே இருக்கும். தேங்காய் துருவலாக மேகங்களும், சீனித் துகள்களாக நட்சத்திரங்களும் அப்பமாக நிலாவும் அத்தனை ரம்மியமாக காட்சி தருகின்றன. பொட்டுக் கடலையும் சீனியும் பேப்பரில் வைத்து அரைத்து சாப்பிடுவது மாதிரி இந்த தேங்காய் துருவலையும் சீனியையும் சேர்த்துச் சாப்பிட வேண்டும் என‌ மூவரும் நினைத்துக் கொள்வார்கள். அதே மேகம் வெள்ளித் தகடாக இருந்து கொஞ்சம் கொஞ்சமாக‌ தங்கத் தகடாக மாறுவதை எத்தனை ஆச்சரியமாக பார்த்திருக்கிறார்கள்.

அவனுக்கு மரங்கள் தங்களுக்குள் பேசிக்கொள்வதாக தோன்றும், நாய்கள், கோழிகள், பூனைகள் தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன, ஆனால் மனிதர்கள் மட்டும் தங்களுக்குள் பேசிக் கொள்வதில்லை. மாறாக சண்டை இட்டுக்கொள்வதாகத் தோன்றும். இடத்திற்காகவும், பொருளுக்காகவும், தண்ணீருக்காகவும், பணம், பதவி, அந்தஸ்திற்காகவும் தொடர்ந்து சண்டையிட்டுக் கொள்கிறார்கள். அதைத்தாண்டி அவர்கள் யோசிப்பதாக அவனுக்கு தெரியவில்லை. இரவில் அனைவரும் தூங்கியபின், எல்லோரும் ஒவ்வொருவராக செத்து போவதாக யோசித்து, யாரும் அதைப்பற்றி கவலையில்லாமல் தூங்கிக் கொண்டிருப்தை நினைத்து அவன் மனம் வருந்தி அழுதிருக்கிறான்.

இந்த மனிதர்களுக்கு ஒரு சுபாவம் இருப்பதாக அவனுக்கு தோன்றும். இவர்கள் எதற்கும் மனம் உருகி வருந்துவதில்லை. பசியோடு வரும் மனிதர்களுக்கு உணவளிப்பதில்லை. குஞ்சுக் குருவிகளை கொண்ட குருவிகளின் கூட்டை கலைக்க தயங்குவதில்லை, ஆட்டையும், கோழியையும் வெட்டிச் சாப்பிடத் தயங்குவதில்லை. பூக்கள் மலர்வதைக் கவனிப்பதில்லை, பிறந்த ஆட்டுக்குட்டியின் துள்ளல்களை நின்று ரசிப்பதுகூட இல்லை என நினைத்துக்கொள்வான். கடைசியாக, மனிதர்களாகப் பிறந்த இவர்கள் மனிதர்களாக மட்டும் வாழ்வதில்லை என நினைத்துக் கொண்டான்.

தூக்கத்திலிருந்து சட்டென வெளிவருவதுபோல சைக்கிள் சத்தத்தைக் கேட்டுவிட்டான். தூரத்தில் வரும் அவ்வொலி அருகில் வரவர நாராசமாக ஒலிப்பதாகத் தோன்றியது. எழுந்து பேசாமல் ஒரு ஓரமாக நின்றுகொண்டான். தன்முகத்தை வேறு ஒன்றிலும் கவனம் கொள்ள விடாமல் ஒரே பக்கமாக அறை வாசலையே பார்த்துக் கொண்டிருந்தான். தன் மேலான அன்பின் காரணமாக அவனைக் காட்டிக் கொடுக்காமல் அவள் அம்மா இருக்கக் கூடுமென நினைத்தான். அவர் முகம் கழுவி வந்த வேகத்தில் உடனேயே ‘இவன் இன்னைக்கு என்ன பண்ணினான் தெரியுமா?’ என ஆரம்பித்தாள். அந்த கணத்தில் அம்மாவின் செய்கையை நிச்சயம் எதிர்பார்க்கவில்லை. தன்னை வேண்டுமென்றே சிறுமைப் படுத்தியதாகத் தோன்றியது. சொன்னதைக் கேட்டவுடன் அவனையும் அம்மாவையும் மாறி மாறிப் பார்த்ததில் அவர் முகத்தில் கோபம் ஏறியதை பீதியுடன் கவனித்தான். ‘சரிவிடு, நம்ம புள்ள தானே,’ என கமலியின் அப்பா போல சொல்லப் போகிறார் என நினைத்தது மற்றொரு தவறென அடுத்த வினாடியே அடிக்க ஒரு பொருளை இருபக்கமும் திரும்பி தேடுவதில் தெரிந்துவிட்டது. இல்லை என மறுத்தபடி ஓடிச்சென்று சுவருக்கு பக்கத்தில் நின்றுகொண்டான். அங்கும் பாய்ந்து வந்து அவன் தலைமுடியைப் பிடித்தார். ஜூஜூ தவளை சொன்னது நினைவிற்கு வந்த‌து. ஓங்கிய கையை பலங்கொண்ட மட்டும் தடுத்து, பிடித்த தலைமுடியை பல்லைக் கடித்து விடிவித்துக் கொண்டு அவனே எதிர்பாராத‌ கணப் பொழுதில் ஓடிச்சென்று தரையில் கிடந்த அந்த‌ பத்திரிக்கையை திறந்து சட்டென, ரோட்டில் இருக்கும் சாக்கடை மூடியை திறந்து இறங்குவதுபோல, அதில் குதித்தான். சின்ன பொந்தின் ஒரு கதவுபோல அரவணைப்போடு அவனை மூடிக்கொண்டது.

அவர் எதிர்பார்க்கவேயில்லை. ஒரு நிமிடம் அதிர்ந்துபோனார். மாட்டைப் பார்த்தால் பயந்துவிடுவார், அப்போது எப்படி அதிர்ச்சி காட்டுவார் என அவன் நினைத்தது போலவே நடந்துகொண்டார். கம்பீரமான பெரியதாக‌ இல்லாமல், ஒரு குச்சிமீசை வைத்துக்கொண்டும், உடலுக்கு ஏற்ற அளவாக இல்லாமல், பாவாடை போன்ற பேண்ட் அணிந்துகொண்டும், தொளதொளப்பான பெரிய டயல் இல்லாமல், வளையல்மாதிரி இருக்கமாக வாட்ச் அணிபவரான தன் அப்பாவை கண்டு இனி பயப்படத் தேவையில்லை என நினைத்தான். அவன் காணாமல் போன இந்த அதிர்ச்சி அவர் கண்களிலேயே தெரிந்தது. மனைவி பக்கத்தில் இருக்கிறாளா என பார்த்துக் விட்டு, இல்லையென்றதும், அவசர‌ அவசரமாக ஓடி அந்த பத்திரிக்கையை கையில் எடுத்து திறந்து பார்த்தார். முன்பக்கதிலிருந்து பின்பக்கமாகவும், பிறகு பின்பக்கத்திலிருந்து முன்பக்கமாகவும் காகிதங்களை விரித்தார். உதறினார். அவன் கிடைக்கவில்லை. செய்வதறியாது அப்படியே நின்றார். ஜூஜூ தவளை சொன்னதுபோலவே நடந்துவிட்டதாக அவனுக்கு தோன்றியது.

நரநரவென்று அவர் பல்லைக் கடிப்பதை கரகரவென்ற சைக்கிள் செயின் ஒலிபோல வந்ததை, சிரித்துக்கொண்டு, அந்த புத்தகத்தின் கதகதப்பில் அமர்ந்தபடி கேட்டுக்கொண்டிருந்தான்.