ஆயிரம் தெய்வங்கள் – தேசீயஸ்

தேசீயஸ்

ஹீராக்ளீஸ் தெய்வத்திற்கு எவ்வளவு வலிமை உள்ளதோ அதே அளவு வலிமையையும் வல்லமையும் உள்ள தேசீயஸ் ஏதேன்ஸின் ஹீராக்ளீஸ் என்று அழைக்கப்படுகிறான். தேசீயஸ் ஜனனத்தைப் பற்றிய மாறுபட்ட கதைகள் உண்டு.

ஏத்திகா, அதாவது ஏதென்ஸை ஏஜியஸ் ஆண்டு வந்தான். ஏஜியஸ் பிள்ளைப் பேற்றுக்கு வழியில்லாமல் டெல்ஃபியில் குறி பார்த்தபோது குறிகளின் சமிக்ஞையைப் புரிந்து கொண்ட குறிசொல்லி பீத்தியாஸ் ஏஜியஸ் குடிபோதையில் இருந்தபோது தன் மகள் ஏத்ராவை அனுப்ப அவள் மூலம் தேசீயஸ் பிறந்தான். ஏஜியஸ் மன்னனை பல்லான்டிக் என்ற அரக்கியர் கூட்டம் ஆட்டிப் படைத்ததால் தனது வாரிசாகக் கருதப்பட்ட தெசீயஸையாரும் அறியாதவாறு காட்டில் ரகசியமாக வளர்த்தான்.

மற்றொரு மரபில் ஏத்ராவின் கனவில் ஆண்டவர் வந்து ஒரு வனாந்தரத் தீவில் பலி வழங்கத் தனியாக வர வேண்டுமென்றுக் கூற அடஹி நம்பிச் சென்ற ஏத்ராவை பாசிடான் என்ற கடல் தெய்வம் கெடுத்துவிட தேசீயஸ் பிறந்தான். தேசீயஸ் பிறந்த விஷயத்தைப் பரம ரகசியமாகக் காப்பாற்றுபடி ஏத்ராவிடம் கூறிய ஏஜியஸ், தன்னுடைய உடைவாளையும் காலணிகளையும் த்ரோசன் வனப்பகுதியில் ஒரு பாறைக்கடியில் ஒளித்து வைத்தான். தேசீயஸ் பெரியவனானதும் இவற்றை அணிந்து கொண்டு அரண்மனைக்கு வந்தால் தான் அடையாளங்களைப் புரிந்துகொண்டு தேசீயஸை ஏதென்ஸ் இளவரசனாக அறிவிப்பதாக ஏத்ராவிடம் வாக்களித்துவிட்டு ஏதென்ஸ் திரும்பி விடுகிறான்.

தேசீயசுக்குப் பதினாறு வயதானதும் பலசாலியாகத் திகழ்ந்து வருகிறான். பாறையைப் புரட்டும் பலம் வந்துவிடுகிறது. உடைவாளையும் காலணியையும் அணிந்து கொண்டு ஏதென்ஸ் செல்லும் வழியில் – எவ்வாறு விசுவாமித்திரரால் அயோத்தியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட ராம லட்சுமணர்கள் கட்டில் தவசிகளைத் துன்புறுத்திவந்த அரக்க அரக்கியர்களை வதம் செய்தார்களோ, அவ்வாறே ஏதென்சைச் சுற்றியிருந்த வனப்பகுதியிகளில் மக்களுக்குத் தீங்கு செய்துவந்த பெரிஃபீட்டஸ், டமாஸ்ட்டஸ், யூரோக்ரஸ்டஸ் போன்ற கொள்ளையர்களைக் கொன்றான். தேசீயஸ் இவ்வாறு பல சாகசங்களைப் புரிந்துவிட்டு ஏதென்ஸ் அரண்மனைக்குள் புகுந்தான்.

அங்கு ஏஜியஸை மெடியா என்ற மந்திரக்காரி அவனது ஆண்மைக்குறைக்கு மருந்து தருவதாகக்கூறி ஏமாற்றித் தன் வலைக்குள் சிக்க வைத்திருந்தாள். தேசீயஸ் யார் என்று புரிந்து கொண்ட மெடியா அவன் ஏஜியஸ் அருகில் நெருங்க விடாமல் தந்திரம் செய்தாள். விருந்தில் விஷம் வைத்துக் கொல்லவும் சதி செய்தாள்.விருந்துக்கு வந்த தேசீயஸ் ஒளித்து வைக்கப்பட்டிருந்த உடைவாளையும் காலணிகளையும் அணிந்துவரவே, ஏஜியஸ் அடையாளம் கண்டு கொண்டதுடன், உணவில் விஷம் வைத்தக் குற்றத்துக்காக மெடியா நாடு கடத்தப்பட்டாள். ஏதென்ஸின் வாரிசுகளாகத் தங்களைக் கூறிக் கொண்டு ஏஜியஸைப் படாதபாடு படுத்தி வந்த பல்லன்டிட் சகோதரர்களையும் லியோ என்ற தன் காவலன் உதவியால் வஞ்சித்துக் கொன்றான்.

ஏதென்ஸ் நகர்மீது ஒரு சாபம் இருந்தது. குற்றம் இழைக்காத மைனாஸின் மகன் ஆன்ரோக்கியஸை மன்னன கொலை செய்ததால் மைனாஸ் ஆண்டுதோறும் ஏழு கன்னியரையும் ஏழு காளையரையும் மைன்னோத்தார் என்ற எருமை அரக்கனுக்கு பலி கேட்டான். இந்த நரபலிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடிவு செய்து அங்கு புறப்பட்டுச் சென்றான் தேசீயஸ். அது அவ்வளவு எளிதல்ல. மைனோத்தாரின் மரண ரகசியம் தெரிய வேண்டும். இதை அறிய மைனாசின் பெண்ணைக் காதலிக்க வேண்டிய கட்டாயம் எழுந்தது. அரக்கனுடைய உயிர் நிலை அதிசய நூல் கண்டில் உள்ளதை அறிந்த தேசீயஸ் அந்த நூல் கண்டை மைனாஸ் அறியாதபடி கவர்ந்து வந்து கொடுத்தால் மணம் செய்து கொள்வதாக வாக்களித்தான். மாய நூல்கண்டும் வந்தது.

மைனோத்தார் உறங்கும் குகையைக் கண்டுபிடித்து அந்த காளை அரக்கனைக் கொன்ற சூட்டோடு மைனாசின் மகள் எரியாத்னாசைக் கடத்திச் சென்று நச்சோஸ் தீவில் வைத்தான்.அங்கு டையோனைசஸ் எரியாத்னாவை மதி மயக்கி தெசீயஸை நச்சோஸ் தீவை விட்டு வெளியேற்றினான். எரியாத்னாவை இழந்த தேசீயஸ் மனம் வெறுத்துப் போய் தன் கப்பலைத் தாறுமாறாகச் செலுத்தினான். மகன் ஏதன்ஸுக்குத் திரும்பாததால் அவன் இறந்துவிட்டதாகக் கருதி ஏஜியஸ் அதே கடலில் தற்கொலை செய்து கொண்டான். இதன் காரணமாக அந்தக் கடலுக்கு ஏஜியன் கடல் என்று பெயர் சூட்டப்பட்டது. டையோனைசஸ் விண்ணிலிருந்து வெள்ளி ரத்தத்தில் வந்து நச்சோஸ் தீவில் மதி மயங்கியிருந்த எரியோத்னாவை விழிக்க வைத்து விண்ணுலகுக்குக் கொண்டு ச்நேறு அவளுக்கு இந்திர லோகத்தில் பதவி வழங்கினான்.

ஏஜியஸ் மறைவுக்குப் பின் கிரேக்க மன்னனாக அமர்ந்த தேசீயஸ் பல ஆலயங்களைக் கட்டினான்.கிராமங்களும் விவசாயிகளும் வளமுறச் செய்தான். அரசியலமைப்பு சட்டத் திட்டங்களை உருவாக்கி தங்க நாணயங்களை வெளியிட்டு வணிகத்தை வளர்த்த கதையெல்லாம் புராணமல்ல, வரலாற்று உண்மைகளே. ஆனாலும் புராண அடிப்படையில் ஏதென்ஸ் நகருக்கு சாப விமோசனம் ஏற்படவே இல்லை. அரசனின் மனக்குழப்பங்கள் தொடர்ந்தன. அவன் நிலை ஏதன்ஸ் மன்னனாக உயர்ந்தாலும் அவன் தன் பெண் வேட்டையை விட்ட பாடில்லை.

லாப்பித் இளவரசன் பெயர்த்தோஸ் தேசீயஸ் மன்னனின் உயிர் நண்பனானான். இருவரும் ஸீயஸ்ஸின் பெண்களைக் கடத்தி மணம் புரிய உபாயம் வகுத்தனர். ஸீயஸ்ஸின் பெண்களில் ஒருத்தி ஹெலன். இவள் சீனியர் ஹெலன். பாரிஸ் கடத்திய ஹெலன் அப்போது குழந்தை. அவளல்ல இவள். சீனியர் ஹெலனைக் கடத்திக் கொண்டுவந்து ஏத்ராவைக் காவல் வைத்தனர். ஆனால் ஹெலனின் சகோதரனான டையோஸ்க்யூரியான் கேஸ்டரும் பாலிக்யூடஸும் ஹெலனை விடுவித்துக் கொண்டுபோய் விட்டனர்.

அடுத்த முயற்சி பேரழகி பெர்ஸிஃபோனைக் கவர்தல். ஏற்கனவே பெர்ஸிஃபோனை ஸீயஸ் சம்மதத்துடன் கடத்தி சித்தப்பனாகிய ஹேடஸ் எலுசிஸ் நரகத்தில் வைத்திருக்கும் நிலையில் அவளை இவர்கள் கடத்துவது சாத்தியமா? எலுசிஸ் சென்று திரும்ப முடியுமா? எலுசிஸ் வந்த தெசீயஸுக்கும் பெயர்த்தோஸுக்கும் முதலில் ராஜ மரியாதை கிடைத்தது. இவர்களின் உள்நோக்கத்தை அறிந்தே ஹேடஸ் அவர்களை நாற்காலிகளில் அமர்த்தினான். மாய சக்தியுள்ள அந்த நாற்காலிகளில் அமர்ந்தவர்கள் மீண்டும் எழவே இயலாது. உயிர் பிரியும்வரை அமர்ந்த நிலையிலேயே இருந்து அமர நிலை எய்தியாக வேண்டும். எனினும் எலுசிஸ் வந்த ஹீராக்ளீஸ் ஸீயஸ்ஸின் உத்தரவு பெற்று தேசீயஸ்ஸை மட்டும் விடுவித்தான்.

எலுசிஸ் பயணத்தை முடித்துக் கொண்டு ஏதென்ஸ் திரும்பிய தேசீயஸுக்கு அதிர்ச்சிகள் காத்திருந்தன. அவன் மனைவி போயேத்ரா ஆண்ட்டியோப்பின் பிள்ளை ஹிப்போலைட்டசை விரும்பினாள். ஒரு விதத்தில் இருவருக்கும் தாய் செய் உறவு இருந்தது. இதனால் ஹிப்போலைட்டஸ் அவளுடன் உடலுறவு கொள்வதைத் தவிர்த்தான். இதனால் ஆத்திரமடைந்த போயத்ரா, அசோக் குமார் திரைப்படத்தில் கண்ணாம்பா எம் கே தியாகராஜ பாகவதரைப் பழி வாங்கியதைப் போல், தன் உள்ளாடைகளையும் மார்புத் துகிலையும் தானே கிழித்துக் கொண்டு ஹிப்போலைட்டஸ் தன்னை பலவந்தப்படுத்த முயற்சித்தான் என்று குற்றம் சாட்டினாள். இதனால் தன் அன்புக்குரிய மகன் ஹிப்போலைட்டஸை தேசீயஸே கொன்றுவிட வேண்டியதாகிறது.

ஹிப்போலைட்டஸ் மாண்டதும் அந்த துக்கம் தாளாமல் தேசீயஸ்ஸின் மனைவி போயத்ரா தற்கொலை செய்து கொள்கிறாள்.மன்னன் தேசீயஸுக்கு இது இரண்டாவது அதிர்ச்சியாக அமைகிறது. மகன் மனைவி இருவரையும் ஒருசேர இழந்த அதிர்ச்சியிலிருந்து மீள முடியாமல் ஏதன்ஸ் நகரை விட்டு வெளியேறுகிறான் தேசீயஸ். ஸ்கைரஸ் தீவில் உள்ள லைகோமீடஸிடம் தஞ்சம் புகுகிறான். அவன் தேசீயஸைத் தந்திரமாக ஒரு மலை உச்சிக்கு அழைத்துச் சென்று அங்கிருந்து கடலில் தள்ளிக் கொலை செய்து விடுகிறான். மன்னனைக் காணாத ஏதன்ஸ் மக்கள் டெல்பியில் குறி கேட்டு உண்மையை அறிகிறார்கள். தேசீயஸின் உறவினர்கள் அவனது உடலை மீட்டு அதன் அஸ்தியை ஏதன்ஸ் நகருக்குக் கொண்டு வருகின்றனர். இத்தோடு தேசீயஸ் வரலாறு முடிவுக்கு வருகிறது. அடுத்து மிகவும் சுவை மிகுந்த ஜேசன் ஆர்கோனாட்ஸ் கதைக்குச் செல்வோம்.

(தொடரும்)