அர்னல்டூர் – ஐஸ்லேன்ட் குற்றப் புனைவு எழுத்தாளர்

நிகழ் காலத்தில் பாடப்படும் கதைக்கும் தனக்குமுள்ள கால இடைவெளியை இந்தக் கவிதையின் குரல் உண்மையென்று நம்பச் செய்கிறது என்பதை நாம் பார்த்தோம் – இவ்வகையில் இந்தக் கதை ஒரு சரித்திரமாகிறது; அதே நேரம் கவிஞனுக்கும் கவிதையை செவிப்பவர்களுக்கும் அவர்கள் வாழும் காலத்திலேயே இந்தக் கதை முக்கியமானது என்பதை வெளிப்படுத்தி விடுவதால், கவிதை சமகாலத்துக்குரியதாகவும் ஆகிறது. மூன்றாவதாக, கடந்த காலத்திலிருந்து நிகழ் காலத்துக்குச் செல்லும் ஒரு தொடர் இயக்கமாக மனிதர்களின் அறச் செயல்பாட்டை உறுதி செய்கிறது, மிகை வடிவங்களிலும் சூத்திரங்களிலும் தன் கவலைகளுக்கு ஓர் உருவம் கொடுக்கிறது இக்கவிதை. மனித அறிவின் குறைகளும் அது அறிந்து கொள்ளக்கூடியதன் எல்லைகளும் எத்தகையவை, அதன் சாத்தியங்கள் எவ்வகைப்பட்ட இயல்பு கொண்டவை என்று அறிவின் தன்மை மற்றும் அந்திமகால அக்கறைகளை இக்குரல் வெளிப்படுத்துகிறது. இக்காட்சியோடெழும் ஆழம் காண்பதற்கில்லாது அப்பாலிருப்பதன் தரிசனத் திகைப்பை வெளிப்படுத்துகிறது இக்குரல். காலத்தையும் அறிவையும் குறித்த இப்பார்வைகள் துண்டிக்கப்பட்டவையல்ல; அவை ஊடாடுகின்றன, லேயர்ல் மற்றும் பலர் அண்மையில் சுட்டிக் காட்டியதுபோல் கவிதையின் பிற தன்மைகளும் இவற்றோடு ஊடாடுகின்றன. மனித அனுபவம் வரலாற்றுமுகமாக உணரப்படுதலை இவை சுட்டுகின்றன – சமகாலத்தில் இருந்து பேசும் இக்குரல் தனக்கும் தன் மானுட அனுபவத்துக்கும் கடந்த காலத்தோடு தொடர்பும் நெருக்கமும் உள்ளதை வெளிப்படுத்திக் கொள்கிறது. இந்த அனுபவத்தின் இயல்பு மானுட அறிதலுக்கு அப்பாற்பட்ட புதிர் தன்மை கொண்டதாக இருக்கிறது, அது ஆன்மிக அனுபவங்களுக்குரிய மர்மம் கொண்டதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மனிதனின் அறச் செயல்பாட்டுப் பழக்கங்கள் கதைகளாக இருக்கும் தன் கடந்த காலத்திலிருந்து நீண்டு விரிவதை இந்தப் பார்வைகள் உணர்த்துகின்றன – அறியப்படும் நிகழ் காலச் செயல்களுக்கும், பேசப்படவும் அறியப்படவும் முடியாத தன்மை கொண்ட கடந்த காலத்துக்கும் நீள்கிறது சமகால வரலாறு.

– P.197, The Beowulf Reader – Peter Stuart Baker

ஐஸ்லேன்ட் என்றவுடன் நினைவுக்கு வருவது என்ன? எங்கும் பனி படர்ந்த பிரதேசம், கடுங் குளிர், மக்கள் தொகையும் குறைவாக உள்ளதால் அதன் தனிமையும் வெறுமையுமே நம் நினைவுக்கு வருகின்றன. மற்றபடி அந்நாட்டை பற்றி நமக்கு அதிகம் தெரியாது, அந்த நாட்டு இலக்கியம் குறித்தும் நாம் பெரிய அளவில் அறிவதில்லை. ஆனால் இந்நாட்டிற்கு நீண்ட இலக்கியப் பாரம்பரியம் உண்டு. பண்டைய ஐஸ்லேன்ட் மொழியில் எழுதப்பட்ட வைகிங்குகள் (Viking) மற்றும் இந்நாட்டில் மக்கள் குடியேற்றம் குறித்த பெருங்கதைகள் மிக முக்கியமான இலக்கிய ஆவணங்களாக உள்ளன. கடலெங்கும் பயணித்த இவர்கள், பல ஐரோப்பிய நாடுகளில் குடியேறினர் (குறிப்பாக, ஸ்காண்டிநேவிய நாடுகள் மற்றும் இங்கிலாந்து). இந்தப் பகுதியின் ஆதி குடிகள் இவர்கள். இவர்களை நாகரீகமற்றவர்களாக, வன்முறையாளர்களாக சித்தரிக்கும் போக்கு இன்று இருந்தாலும் அவற்றை முற்றிலும் உண்மை என்று ஏற்பதற்கில்லை. காரணம் – பழைய ஆங்கிலத்தில் (Old English) எழுதப்பட்ட மிக பழமையான/முக்கிய படைப்பான ‘Beowulf’. ஸ்காண்டிநேவிய நிலப்பரப்பு, வைகிங்குகள், அவர்களின் சாகசங்கள் பற்றிய படைப்பு இது. இதைச் சார்ந்து நாவல்களும், திரைப்படங்களும் வந்துள்ளன. வைகிங்குகளை மையப்படுத்தி ‘Hägar the Horrible’ என்ற மிக புகழ் பெற்ற காமிக் தொடர்கூட உண்டு.

மற்ற நாடுகளைப் போலவே இங்கும் குற்றப் புனைவுகள் சற்றே கீழான இலக்கிய வகையாகவே பார்க்கப்பட்டன. அதை மாற்றி குற்றப் புனைவுகளில் ஒரு புதிய பாதை படைத்த ‘Arnaldur Indriðason'(அர்னல்டூர்) படைப்புக்களை இந்த கட்டுரையில் நாம் பார்க்கப்போகிறோம்.

அர்னல்டூர் தந்தை இன்ட்ரிடி 1955ல் எழுதிய “டாக்ஸி 79” என்ற நாவல் வாசகர்களின் வரவேற்பைப் பெற்ற ஒன்று; 1962ல் செய்யப்பட்ட அதன் திரையாக்கம் ஐஸ்லேண்ட் திரைப்பட வரலாற்றில் ஒரு திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. 1961ல் பிறந்த அர்னல்டூர் வரலாற்றில் தேர்ச்சி பெற்றபின் ஒரு பத்திரிக்கையில் நிருபராகப் பணியாற்றினார். திரைப்பட விமர்சகராகவும் இருந்துள்ளார். அந்நாட்டின் தலைநகரமான ‘Reykjavik’ நகரில் நடப்பதாக எர்லேன்டூர் (Erlendur) என்ற முக்கிய பாத்திரத்தைக் கொண்ட குற்றப் புனைவுத் தொடரை எழுதி வருகிறார் அர்னல்டூர். இதுவரை இந்தத் தொடரில் 11 நாவல்கள் வந்துள்ளன. இதைத் தொடராக எழுதும் எண்ணம் தனக்கு எழுந்தது குறித்து அவர் சொல்கிறார்:


“எர்லேன்டூரை மையப்படுத்தி ஒரு தொடர் எழுத வேண்டும் என்ற எண்ணம் எனக்கு இருக்கவில்லை. ஆனால், மற்றவர்களிடம் அக்கறையுள்ள ஒரு சுவாரசியமான பாத்திரத்தைப் படைத்து, அந்தப் பாத்திரத்தை அசாதாரணமான, ஆபத்து மிகுந்த சூழ்நிலைகளை எதிர்கொள்ளச் செய்ய நினைத்தேன். இவர்கள் எந்த நிலையையும் சமாளிக்கக் கூடிய அதிநாயகர்களல்ல, அற்புத மனிதர்களல்ல, குழப்பத்தின் மத்தியில் சிக்கிக்கொண்ட பரிதாபத்துக்குரிய சாதாரணர்கள் – உன்னையும் என்னையும் போன்றவர்கள்.”

“Writing a series about Erlendur hadn’t occurred to me, but I wanted to create an interesting character who cared about people, and then put him into unusual and dangerous circumstances. These are not superheroes or superhuman people who can deal with anything, but ordinary people like you and me who unfortunately find themselves in the middle of chaos. This is what I set out with. In the second book Dauðarósir (Silent Kill), Erlendur had become a very interesting character and by then I had decided to create a series round him.”

முதலில் இந்த நாவல்களை வெளியிடப் பதிப்பாளர்களும் அதிக ஆர்வம் காட்டவில்லை, அவை பெரிய அளவில் புகழடையவுமில்லை.

“எல்லாருக்கும் இது குறித்து மிகுந்த அவநம்பிக்கை இருந்தது – பதிப்பாளர்கள், வாசகர்கள், எழுத்தாளர்கள் என்று அனைவருக்குமே. ஐஸ்லேண்டும் ரெய்ச்சவிக்கும் குற்றப் புனைவுகள் படைக்கப்பட முடியாத களங்கமின்மை கொண்டவை என்று நினைத்தார்கள். இதனால்தான் நாங்கள் மிகத் தாமதமாக ஆட்டத்தில் நுழைந்தோம், இதனால்தான் மரபு என்று சொல்லத்தக்க வகையில் குற்றப் புனைவு எதுவுமே இல்லை என்று சொல்லும்படி மிகக் குறைவான படைப்புகளே எங்களிடம் உள்ளன. இந்த இடம் பரபரப்பான இடம் என்றும் குற்றம் நடந்த இடமாக இதை விவரித்து இங்கும் அப்படிப்பட்ட சம்பவங்கள் நிகழ்வதாக எழுத முடியும் என்று வாசகர்களை நம்ப வைக்க வேண்டியிருந்தது. இது இப்போது சாத்தியமாகியிருக்கிறது. இன்று ஐஸ்லேண்டின் குற்றப் புனைவுகள் மிகப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன”

(“Everybody was very sceptical, publishers, readers and writers alike. They thought Iceland and Reykjavík was too innocent a place for crime novels. This is the main reason why we got so late to the game and why we have little or no tradition in crime writing. You had to convince the readers that the locale was exciting and that things could happen on the crime scene worth writing about. We have managed that now. Icelandic crime novels are hugely popular these days.”)

பொதுவாக நாம் இதுவரை பார்த்த குற்ற புனைவுகளில் சமூகத்தில் தற்போது (அல்லது நாவல் வந்த காலகட்டத்தில்) பேசப்படும் சிக்கல்கள் குறித்த எதிர்வினைகள் இருந்தன. அர்னல்டூர் நாவல்களிலும் இவை இருந்தாலும், சமூகத்தில் புரையோடிய, சமூகத்தின் அங்கமாக, ஏன் வாழ்க்கையின் அங்கமாகவே பாவிக்கப்படும் பிரச்சனைகள் குறித்தும் இவரது நாவல்கள் பேசுகின்றன என்பது இவரது எழுத்தின் சிறப்பு. இவற்றை நுண்ணிய அளவிலும் இந்த நாவல்கள் பேசுகின்றன.

இந்த தொடரின் அறிமுக கட்டுரையில், “குற்றப்புனைவுகள் சமூகம் பற்றி பேசினாலும், கதையின் முக்கிய இழை குற்றம் அல்லது குற்றவாளியாகத்தான் இருக்கும். ஒருபோதும் அதன் முக்கியத்துவம் குறையாது.” என்று கூறி இருந்தேன். இவரின் நாவல்கள் இந்த வகைப்பட்டதாக இருந்தாலும், இதுவரை பார்த்த எழுத்தாளர்களைவிட மிக விரிவாக, குற்றம், அதன் காரணிகள், பாதிப்பு ஆகியன பற்றி எழுதுபவர் அர்னல்டூர்.

இதுவரை பார்த்த தொடர்களில், 30 அல்லது 40 சதவீதம் குற்றத்தின் பிற அம்சங்கள் பேசப்பட்டால், இதில் ஒரு 50 சகவீதம் அல்லது அதற்கும் மேலும் பேசப்படுகின்றது என்று சொல்லலாம். இதை அவர் எடுத்தாளும் கதை கூறல் முறை மூலம் சாதிக்கிறார். எப்படி?

இந்த நாவல்களை ‘இருண்ட கடந்த காலத்தினூடே ஒரு பயணம்’ என்று வாசிக்க முடியும். நாவலின் ஒரு இழை நிகழ்காலத்தில் புலன் விசாரணையை விவரிக்க, இன்னொரு இழை கடந்த காலத்தில் நடந்த சம்பவங்களை விவரிக்கின்றது. இதில் வரும் பாத்திரங்ளும் சம்பவங்களும் நிகழ்காலத்தில் நடந்துள்ள குற்றத்துடன் தொடர்புள்ளவை. கடந்த காலத்தினூடே பயணம் என்பது ஒரு குடும்பத்தின் சிதைவையும், குடும்பப் பெருமை/ சமூக அந்தஸ்து போன்ற காரணங்களால் மறைக்கப்படும் உண்மைகளையும், அந்த பெருமைக்காக ஒடுக்கப்படும்/ விருப்பத்திற்கு மாறாக வளைக்கப்படும் குழந்தைகள்/ மனிதர்கள் பற்றியும் நமக்குத் தெரிவிக்கின்றது. இந்த இரு இழைகள் இணையும் இடத்தில் நாவல் முடிவடைகின்றது.

ஒரு தனி இழையே குற்றத்தின் காரணிகளைப் பற்றி பேசும்போது என்ன நடக்கின்றது? குற்றப்புனைவுகளின் முடிவில் படிப்பவருக்கு கிடைக்கும் ஒரு ஆசுவாசம், நீதி நிலை நாட்டப்பட்டது என்ற எண்ணம், அல்லது ஒரு புதிரை விடுவித்த மன எழுச்சி போன்றவற்றைவிட ஒரு துயரே மிஞ்சுகிறது. கதையில் வரும் பாத்திரங்களும் அவர்களின் துயரங்களும் நம்மை ஆழமாக பாதிக்கும் நிலையில், குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டு தண்டனை அனுபவித்தால்தான் என்ன, நடந்த எதையும் சரி செய்ய முடியாதே என்ற ஒரு கையறு நிலையில் நாம் இருத்தப்படுகிறோம். இதுதானே நிஜத்தில் குற்றத்தால் பாதிக்கப்பட்டவருக்கும் ஏற்படும் மனநிலை? ஒரு முடிவு கிடைத்தாலும், நடந்த துயரத்தைத் தன் வாழ்நாள் முழுவதும் அவர் சுமக்க வேண்டுமல்லவா? இந்த மனநிலை ஏற்படுத்தலை பல ஸ்காண்டிநேவிய எழுத்தாளர்களின் படைப்புக்களில் நாம் பார்க்க முடியும். இது மற்ற நாடுகளின் குற்ற புனைவுகளுக்கும் இந்த புனைவுகளுக்குமான ஒரு முக்கிய வித்தியாசம். மற்றவை முடிவுடன் பெரும்பாலும் நின்றுவிடுகின்றன, இந்தப் புனைவுகள் அதன் பின்னரான வாழ்க்கை பற்றியும் நம்மை யோசிக்கத் தூண்டுகின்றன. ஒரு காதல் கதை சுபத்தில் முடிவதற்கும், இன்னொன்று கல்யாணத்திற்கு பின்னரான வாழ்க்கை குறித்தும் பேசுவதற்குமான வித்தியாசம் போல்தான் இதுவும். ‘they lived happily ever after’ என்பது புனைவுகளுக்கு மட்டுமே பொருந்தும் அல்லவா?

இதுவரை பார்த்தத் தொடர்களில் மிகவும் இருண்ட தொடர் இதுவே. இங்கு ‘இருண்ட’ என்ற சொல்லால் நாம் குற்றத்தின் பயங்கரத்தையோ, குற்றவாளிகளின் இருண்மை மனநிலையையோ (உ.ம் வால் மக்டர்மிட் நாவல்கள் போல) குறிக்கவில்லை, மாறாக நம்மைப்போல, நாம் பார்க்கக்கூடிய, பழகக்கூடிய மனிதர்களின் வாழ்க்கையில் நடக்கும் துயர சம்பவங்கள் நம்மை எப்படி பாதிக்குமோ, எப்படிப்பட்ட மனநிலையை ஏற்படுத்துமோ அதை குறிக்கிறது.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் ஐஸ்லேன்ட் நாட்டில் அதிக அளவில் குற்றங்கள் நிகழாமல் இருப்பதும் இந்த நாவல்களின் போக்கைத் தீர்மானிக்கின்றன. மக்கள் எளிதில் தொடர்பேற்படுத்திக் கொள்ளக்கூடிய நாவல்களாக இருக்க வேண்டுமென்பதால் ரத்த விரயம், இருண்மையான மனநிலை என்பதெல்லாம் இல்லாமல், குடும்பம் சார்ந்து நடக்கும் குற்றங்களை சமூக பொது வெளியில் பொருத்தி இந்த நாவல்கள் எழுதப்படுகின்றன.

இரண்டாம் இழை மூலமாக வாசகன் குற்றத்தை பற்றி யூகிக்க முடிந்தாலும், இது விசாரிப்பவருக்குத் தெரியாது. எனவே இவற்றைத் திறந்த இயல்பு கொண்ட மர்ம நாவல்கள் என்றும் கூறலாம். இந்த இரு இழைகளுக்குள்ளே சில நகாசு வேலைகளும் இருக்கும். உதாரணமாக, இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு கிராமங்களிருந்து நகரங்கள் நோக்கி நிகழ்ந்த இடப்பெயர்ச்சி, அதனால் ஏற்பட்ட இடங்களுக்கான விலை உயர்வு கதையின் போக்கில் காட்டப்படும். விசாரணைக்கு இது முக்கியம் இல்லை என்றாலும், ஒரு காலகட்டத்தை, அப்போது நடந்த சமூக மாற்றத்தை நமக்கு உணர்த்துகின்றது. இவருடைய சில நாவல்கள் பற்றி சற்றே விரிவாக பார்க்கலாம்.

‘கல்லறை அமைதி’ (silence of the grave) இவருடைய மிக முக்கியமானதும் சிறப்பானதுமான நாவல் என்பேன். இதில் நகரின் புறநகர் பகுதிகளில் புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கான இடத்தில் ஒரு எலும்புக்கூடு கிடைக்கிறது. இதை எர்லேன்டூர் மற்றும் அவருடைய குழுவினர் விசாரிக்கிறார்கள். இன்னொரு இழையில் குடும்ப வன்முறையால் மிகவும் பாதிக்கப்படும் ஒரு பெண்ணின் துயர்மிகு சித்திரம் நமக்கு தெரிய வருகிறது.

குடும்ப வன்முறை என்பதை சமூக அங்கமாகவே நினைக்கும் அவல நிலை இன்று உள்ளதல்லவா? (“ஆம்பளை கோவத்துல அடிக்கத்தான் செய்வான், பொண்டாட்டி தான் கொஞ்சம் பொறுத்துக்கணும்.” என்பது போன்ற அபத்தமான சொல்லாடல்கள் நமக்குப் புதிதல்ல). நம் மனதை கனக்கச் செய்யும் நிகழ்வுகள் இவை. இந்த வன்முறையால் பெண்கள் மட்டுமல்ல, குழந்தைகளும் எப்படி பாதிக்கப்படுகின்றார்கள் என்பதையும் இந்த நாவல் நுணுக்கமாகப் பதிவு செய்கிறது. ஒரு குழந்தை தனக்குள்ளேயே சுருங்கி பாதிக்கப்பட, நேர் மாறாக இன்னொரு குழந்தை தந்தையின் நடத்தையைப் பார்த்து, வளர்ந்தவுடன் தானும் பெண்களிடம் வன்முறையாக நடந்து கொள்கிறது. இப்படி ஒருவரின் தவறு ஒரு குடும்பத்தை சிதைப்பது மட்டுமல்லாமல், இன்னொருவருக்குத் தவறான முன்னுதாரணத்தையும் ஏற்படுத்தி சமூகத்தில் அவர் மோசமாகச் செயல்பட ஒரு காரணியாகி விடுகிறது.

தந்தையைப் பார்த்து மகனும் பெண்களிடம் வன்முறையாக நடந்து கொள்ள, அவனைப் பார்த்து அவன் மகனும் அப்படி நடக்க இந்த சுழற்சி பின் எப்படி முடியும்?. இன்னொரு மகன் அப்படி இல்லையே என்று கேட்கலாம், ஆனால் அவனின் வாழ்க்கையும் இன்னொரு விதத்தில் பாழாகி விட்டது. இந்த நாவலில் இன்னொரு சிறு இழையாக குடும்பப் பெருமைக்காக மறைக்கப்படும் உண்மைகளும் பேசப்படுகின்றன. பாசத்தைவிட பெருமையே முக்கியமாகி விடும் அவலத்தை இதில் நாம் பார்க்கிறோம். இவர் எழுதிய நாவல்களில் கண்டிப்பாகப் படிக்கப்பட வேண்டிய நாவல் இது.

‘குரல்கள்’ (Voices) நாவல் பெற்றோர் தங்கள் ஆசைகளைக் குழந்தைகள் மீது திணிக்க, அதனால் ஏற்படும் மோசமான விளைவுகள் பற்றியது. ஒரு தந்தை தன் மகன், ஒரு கலையில் மிகுந்த திறமைசாலி என்று அந்த சிறுவனை அவன் விருப்பத்திற்கு மாறாக ஈடுபடுத்துகிறார். மகனும் தந்தையின் திருப்திக்காக அதில் தன் விருப்பங்களைக் கொன்று ஈடுபடுகிறார். ஒரு கட்டத்தில் தாங்கள் எதிர்பார்த்த அளவு முன்னேற்றமும் புகழும் கிடைக்காது என்பது புரிய வர, அதனால் ஏற்படும் பிணக்கு எப்படி ஒரு குடும்பத்தைப் புரட்டிப் போடுகின்றது என்று நாவல் சொல்கிறது.

ஒரு மிக மோசமான இறுக்கமான வீட்டில் வளரும் சிறுவனின் மனநிலையும் அந்த நினைவுகளை சிலுவையாக வாழ்க்கை முழுதும் சுமந்து செல்லும் அவனுடைய சோகமும் நம் மனதைக் \கண்டிப்பாக உருக்கும். இதில் இன்னொரு கோணத்தை மிக நுணுக்கமாக அர்னல்டூர் காட்டுகிறார். மகன் விருப்பமில்லாமல் ஈடுபட்டாலும், தன்னையறியாமல் அவன் மனதிலும், தான் மிகப்பெரும் பேரும் புகழும் பெறுவோம் என்ற எண்ணம் தந்தையால் விதைக்கப்பட்டு, அந்த ஆசை அவனுள் உருவாகி விடுகிறது. எனவே அந்தக் கனவுகள் கலையும்போது அவன் இன்னும் சிதைந்து விடுகிறான். ஒரு பக்கம் விருப்பமில்லாமல் ஒன்றை பல ஆண்டுகாலம் செய்த துயரமென்றால், இன்னொரு பக்கம் அதனால் கிடைக்கும் என்று நினைத்திருந்ததும் கிடைப்பதில்லை எனும்போது அவன் மனம் எப்படி துடித்திருக்கும்? சிறுவன்தானே, அந்த வயதில் எதுவும் முழுதாக புரியாதல்லவா? அவன் எப்படி அதை எதிர்கொண்டிருக்க முடியும்? இந்த சிறுவனது உணர்வுகளை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் அர்னல்டூர்.இந்த இரண்டு நாவல்களிலும் உள்ள சமூக சிக்கல்கள் நம் நவீன வாழ்க்கையின் அங்கமாக நாம் கிட்டத்தட்ட ஏற்றுக்கொண்ட ஒன்றல்லவா?

இனவெறி, கண்காணிப்பு அரசாங்கம், வல்லாதிக்கப் போர்கள் போன்ற சிக்கல்கள் போல் இவை புனைவுகளில் அதிகம் பேசப்படுவதில்லை. அபுனைவுகளே குடும்ப வன்முறை, குழந்தைகள் மேல் செலுத்தப்படும் மன அழுத்தம் பற்றி அதிகம் பேசுகின்றன. இவற்றை குற்றப் புனைவின் வரைவுக்குள் வைத்து எழுதி இருப்பது ஒரு சிறப்பு. மேலும் இந்த சிக்கல்கள் வளர்ந்த மற்றும் வளரும் உலக நாடுகள் என எங்கும் உள்ள சிக்கல்கள் அல்லவா எனவே இவற்றின் முக்கியத்துவம் அதிகரிப்பதுடன், இந்த நாவல்களின் உணர்வுகளுடன் நாம் நம்மை எளிதில் இணைத்துக் கொள்ளவும் முடிகிறது.

‘ஆர்டிக் குளிர்’ (Artic Chill) நாவல் குடியேறிகள் மேல் நிகழ்த்தப்படும் இனவெறி குறித்த பார்வை உடையது. இதில் தாய்லாந்து பெண்ணிற்கும், ஐஸ்லேன்ட் ஆணிற்கும் பிறந்த ஒரு சிறுவன் கொல்லப்பட அது இனவெறித் தாக்குதல் என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. இதிலும் அர்னல்டூர் தனித்துவமான பார்வையைத் தருகிறார். இனவெறி குறித்த நாவல்களில் பொதுவாக, நீயோ-நாஜிக்கள் வேலை இல்லாமல் சுற்றி திரிகிறவர்கள், குறிப்பாக இள வயதுடையவர்களே இந்த வன்முறையில் ஈடுபடுவதாக வரும். இதில் சிறுவன் படித்த பள்ளியில் உள்ள ஆசிரியர் இன வெறி கொள்கையோடு உள்ளார்,

அவர் மேல் சந்தேகம் வருகிறது. மெத்தப் படித்தவர்கள்கூட இதற்கு விதிவிலக்கல்ல என்று நமக்கு தெரிய வருகிறது. விசாரணையின் போக்கில், குடியேற்றம் குறித்த ஒரு விவாதத்திற்கான ஆரம்பத்தையும் இந்த நாவல் செய்கிறது, இன்னொரு ஆசிரியர் மூலமாக. இவர் குடியேற்றத்தை எதிர்க்கவில்லை. இவரின் விவாதம் வேறு வகையிலானது என்பது தெரிய வருகிறது. பள்ளியில் இவர் பழமையான ஐஸ்லேன்ட் கலாச்சாரப் பாடலை பாட வேண்டும் என்கிறார் (அது மதம் சார்ந்த பாடல் அல்ல) ஆனால் பல ஐஸ்லேன்ட் நாட்டு பெற்றோர்களே அதை எதிர்க்கிறார்கள், காரணம் அப்படி பாடுவது அந்நாட்டின் பன்மைப் பண்பாட்டியல்பைச் சிதைத்து விடும் என்கிறார்கள். ஆசிரியர் இதை ஒப்புக்கொள்வதில்லை. அவர் வாதம், யார் வேண்டுமானாலும் குடியேறலாம், அவர்கள் நாட்டு வாழ்க்கை முறை, மதம் போன்றவற்றைப் பின்பற்றலாம், ஆனால் அதற்காக ஐஸ்லேன்ட் நாட்டு கலாச்சாரத்தை விட்டு விட முடியாது/கூடாது என்பதே. இப்படி இருந்தால்தான் மக்கள் ஒரு ghetto மனநிலையை விட்டு வர முடியும் என்கிறார்.

இந்தியாவிலும் சரி, மற்ற அனைத்து நாடுகளிலும் இது தானே சொல்லப்படுகிறது? தன் தனித்துவத்தை இழக்காமல் புதுமையை செரிக்க வேண்டும் என்பதுதானே இங்கும் சொல்லப்படுகிறது?. இரு கலாச்சாரங்கள்/இனக்குழுக்கள் ஒன்றிணைந்து சமூகத்தில் தங்கள் தனித்தன்மையை இழக்காமல் வாழ்வது எப்படி என்பது இன்றைய பல நாடுகளில் உள்ள பிரச்சனை அல்லவா?

இன்னொரு நாட்டில் குடியேறுபவர்கள் அந்த நாட்டின் மொழியை கற்காமல் இருப்பதை பற்றியும், தன் தாய்நாட்டு மக்களிடம் மட்டுமே பழகுவதும், அவர்களுடன் சேர்ந்து ஒரு குழு அமைப்பது பற்றியும் இந்த நாவல் பேசுகிறது. ஐஸ்லேன்ட் நாட்டில் பிறக்கும் பிள்ளைகளும், விவரமறியாத வயதில் வரும் பிள்ளைகளும், தங்கள் தாய் நாட்டை பற்றி அதிகம் அறியாததால், அவர்கள் சமூகத்தில் இணைவது சற்றே எளிதானது அல்லவா?. ஆனால் வேறு நாட்டில் பிறந்து வளர்ந்து, தன் பதின் பருவத்தில் ஐஸ்லேன்ட் வரும் சிறுவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள், மொழி/கலாச்சார வேறுபாடுகள், புதிய முகங்கள் என அதிகம்தான். அவர்கள் சமூக நீரோட்டத்தில் இணைவது சற்று கடினாமாக உள்ளதை, நாவல் கனிவாகப் பார்க்கிறது. அர்னல்டூர் தன் நாட்டு மக்களையும் விடுவதில்லை, டென்மார்க் சென்று அந்நாட்டு மொழியை கற்காமல் இருக்கும் தன் நாட்டு மக்களையும் எதிர்மறையாக விமரிசிக்கிறார்.

இந்த இடத்தில் முன்னாள் இங்கிலாந்திய கிரிக்கெட் தலைவர், ‘நசெர் ஹுசைன்’ (Nasser Hussain ), பல ஆண்டுகளுக்கு முன் ஆசிய-இங்கிலந்தியர், இங்கிலாந்தை ஆதரிக்காமல், இந்திய, பாகிஸ்தான் நாடுகளை ஆதரிப்பதைப் பற்றி வருத்தப்பட்டதை நினைவுகூரலாம். ஹுசைனும் ஆசிய-இங்கிலந்தியர்தான் என்பது இங்கு முக்கியம். அவர் கூறியதை கீழே தருகிறேன் :


“இங்கு பிறந்தவர்களும் என்னைப் போல் மிக இளம் வயதில் இங்கு வந்தவர்களும் இங்கிலாந்தை ஏன் ஆதரிப்பதில்லை என்பது எனக்கு நிஜமாகவே புரியவில்லை”, என்று அவர் எழுதினார். “இங்கிலாந்தின் முன்னேற்றத்தைப் பின்தொடர்வதுதான் சரியான வழியாக இருக்க முடியும்”

அண்மையில் இங்கிலாந்து பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடிய ஆட்டத்தைக் குறித்து ஹுசேனது புலம்பல், “நம் பெயர்களுக்கு பதிலாக பாகிஸ்தான் ஆட்டக்காரர்கள் பெயர்களைத் தாங்கிய பச்சை சட்டைகள் கடலாக நிறைந்திருந்தது ஏமாற்றமளிப்பதாக இருந்தது. 1999ல் நாம் இந்தியாவை எட்ஜ்பாஸ்டனில் விளையாடிய உலகக் கோப்பை ஆட்டத்தை எனக்கு இது நினைவுறுத்தியது. அது ஒரு வெளியூர் ஆட்டத்தைப் போல் இருந்தது, அத்தனை பேர் அவர்களுக்கு ஆதரவாக இருந்தனர்” என்பதாக இருக்கிறது.

(“I really cannot understand why those born here, or who came here at a very young age like me, cannot support or follow England,” he wrote. “Following England has got to be the way.”

Referring to England’s recent match against Pakistan, Hussain moaned: “It was disappointing to see a sea of green shirts with the names of Pakistani players instead of ours. It reminded me of when we played India at Edgbaston in the World Cup in 1999. It was like an away game because so many people supported their side.”)

இங்கு நாவலில் வரும் ஆசிரியரையோ, ஹுசைனையோ இனவெறி பிடித்தவர்கள் என்று ஒற்றைத்தன்மையாக கூற முடியுமா? அதே நேரத்தில் இந்த சிக்கலின் இன்னொரு பகுதியையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். எளிதில் விடை கிடைக்கக்கூடிய ஒன்றில்லை இது. இந்த நாவல் அதற்கு ஒரு தொடக்கப் புள்ளியாக அமையலாம்.

மேலே உள்ள மூன்று நாவல்களிலும் பார்த்தோமானால், சிக்கலை ஒரு கோணத்தில் மட்டும் பார்க்காமல், அதன் பல அடுக்குகளையும் நம் முன் அர்னல்டூர் விவரிக்கிறார் என்பதை நாம் அறியலாம். இந்தப் பன்முக பார்வைதான் அவரின் இன்னொரு மிகப்பெரிய பலம். அவருடைய மற்ற நாவல்களிலும் இதை நாம் உணர முடியும்.

‘Draining Lake’ நாவல் cold-war காலத்தில் நடந்த சில நிகழ்வுகள் சார்ந்த ஒரு குற்ற புனைவு. ஒரு இழை வழக்கம் போல் கடந்த காலத்தை விவரிக்க, இன்னொன்று நிகழ்கால விசாரணையை விவரிக்கின்றது. cold-war காலத்தில் கிழக்கு ஜெர்மனிக்கு மேற்படிப்பு படிக்கச் சென்ற சிலர், அவர்களின் காதல், துரோகம், இலட்சியவாதம், அதன் சிதைவு, கிழக்கு ஜெர்மனியின் ‘Stasi’ உளவுத்துறையின்கீழ் கண்காணிப்பு சமூகத்தில் வாழ்க்கை போன்றவை நாவலின் முக்கிய பகுதிகள். யாரை நம்புவது என்று தெரியாமல், எப்போதும் பயத்துடன், எதைப் பேசினாலும் பல முறை யோசித்து, யாரும் தப்பு கண்டுபிடிக்க முடியாது என்ற நம்பிக்கை எழுந்தால் மட்டுமே பேசும் ஒரு சமூக அமைப்பைக் காட்டுகிறார். (சென்ற கட்டுரையில் பார்த்த மன்கேல்லின் ஒரு நாவலிலும் இதே இழை உள்ளது). இதை நிகழ்காலத்தில் விசாரிக்கப்படும் குற்றத்துடன் இணைக்கிறார்.

இந்தத் தொடரின் முக்கிய பாத்திரம் எர்லேன்டூர் (Erlendur). இவர் ஒரு குழுவின் தலைவர். விவாகரத்தானவர். அட இவருமா, எல்லா தொடரிலும் இப்படியே உள்ளதே, காவல்துறையில் மணமானவர்களே கிடையாதா என்று நினைக்காதீர்கள். இவர் குழுவில் உள்ளவர்கள் மணவானவர்கள்தான். எர்லேன்டூர் பாத்திரம் ஒரு கிளிஷேவாக உருவாக்கப்படவில்லை. அவரின் திருமண முறிவிற்கு பெரிதாக எதுவும் காரணமில்லை. ஒரு பெண்ணை பார்த்து பழகுகிறார், அப்பெண் சொல்படி திருமணமும் செய்கிறார். சில ஆண்டுகள் கழித்து ஏன் அப்படி செய்தோம் என்று தோன்றுகிறது, தன் விருப்பமில்லாமல், எந்த இலக்குமின்றி இதைச் செய்யவேண்டும் என்று செய்துவிட்டதாக எண்ணி மணவிலக்கு பெறுகிறார்.

இது நியாயமில்லைதான். இதனால் அவர் இழப்பதும் மிக அதிகம். அவர் மனைவி அன்பின் நேர் எதிர் நிலையான அதீத வெறுப்பிற்கு சென்று அவர் குழந்தைகளுடன் (ஒரு மகன்/மகள்) பழக/பார்க்க தடை செய்கிறார். அவரைப் பற்றி பொய்யான தகவல்கள் கூறி மிக மோசமான எண்ணங்களை பிள்ளைகள் மனதில் ஏற்படுத்துகிறார். பிள்ளைகள் வளர்ந்து, அவரை மீண்டும் சந்திக்கும்போது தன் அந்த சூழ்நிலையை வேறு வகையில் எதிர்கொண்டிருக்கலாம் என்று எர்லேன்டூர் நினைக்கிறார். அவர் இப்படி தனி வாழ்க்கையில் இலக்கில்லாமல் இருப்பதுடன், ஐஸ்லேன்ட் நாட்டு பனிப்பொழிவுகளில் காணாமல் போனவர்கள், அதில் சிக்கி மீண்டவர்கள் பற்றிய புத்தங்களை மிக அதிகமாக படிக்கும் விநோதமான ஆர்வமுடையவர். அதற்கான காரணம் தொடரின் போக்கில் தெரிய வருகிறது. அதற்கும் அவரின் ஒருவித பொறுப்பற்ற இலக்கின்மைக்கும் உள்ள தொடர்பு நாம் யோசிக்க வேண்டிய ஒன்று.

எர்லேன்டூர் மகன்/மகள் இருவரும் உடைந்த குடும்பத்தின் விளைவுகள். போதை பொருள் அடிமை, கட்டற்ற வாழ்க்கைமுறை என இருப்பவர்கள். அவர் மகள் ‘Eva Lind’ சிக்கலான பத்திரம். ஒருபுறம் தந்தையை வெறுத்தாலும், அவரைப் பார்க்க அவ்வப்போது வருவார். இருவரின் உரையாடல்கள் பெரும்பாலும் சண்டையில் முடிந்து பிரிந்து செல்வார். தந்தை தங்களை விட்டு விட்டுச் சென்ற தவறுக்காக அவரை தண்டிக்கவே அந்தப் பெண் சண்டையிட்டு செல்கிறார் என்று தோன்றுகிறது. எர்லேன்டூர் அனைத்தையும் தாங்கி, தன்னால் முடிந்த உதவியை செய்பவராக இருக்கிறார்.

சிகுர்டுர் ஒலி (‘Sigurdur Oli’), எலின்போர்க் (Elinborg) என அவர் அணியில் இரு அதிகாரிகள் உள்ளனர். அவர்களின் பாத்திரப்படைப்பும், தனிப்பட்ட வாழ்க்கையும் நன்கு வார்க்கப்பட்டுள்ளது. சிறு சிறு சம்பவங்கள் மூலம் அவர்களின் பிரச்சினைகள், அவர்கள் வேலையை அவை எப்படி பாதிக்கின்றன என்று தெரியப்படுத்துகிறார். ‘சிகுர்டுர்’, மணம் முடிக்காமல் ஒரு பெண்ணுடன் வாழ்கிறார். அப்பெண் மணம் செய்ய விரும்புகிறார், குழந்தை பெற்றுக் கொள்ளவும் விரும்புகிறார். இரண்டிலும் சிகுர்டுருக்கு ஈடுபாடில்லை. இதனால் ஏற்படும் சிக்கல்கள் தொடரின் நாவல்களில் நமக்கு தெரிய வருகிறது. ‘எலின்போர்க்’ மூன்று பிள்ளைகளுடன் இரண்டாம் திருமணத்தில் உள்ளார். நாற்பது வயதானவர். சின்னச் சின்ன சம்பவங்கள் மூலம் அவர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தெரிகின்றன. ஒரு குற்ற இடத்தைப் பார்வையிடச் செல்லும்போது, தன் பிள்ளை அன்று உடல் நலம் குன்றி இருந்ததை எண்ணுகிறார், கிருஸ்துமஸ் சமயத்தில் நடக்கும் ஒரு விசாரணையின்போது, கிருஸ்துமஸ் விருந்துக்கான உணவுகள் தயாரிப்பது தடைபடுவதைப் பற்றி அங்கலாய்க்கிறார். காவல்துறை அன்றாட வாழ்க்கையில் எதிர்கொள்ளும் யதார்த்த சிக்கல்கள் பற்றி நமக்கு இவ்வாறு தெரிய வருகிறது, குறிப்பாக பெண்கள் சந்திக்கும் சில பிரத்யேக சிக்கல்களும் பேசப்படுகின்றன.

‘மரியன்’ (Marion Briem) என்ற எர்லேன்டூரின் ஒய்வு பெற்ற மேலதிகாரி சில நாவல்களில் வரும் பாத்திரம். அவரும் எர்லேன்டூர் போலவே தனியாக வாழ்வதால், ஒய்வு பெற்றும் எர்லேன்டூருக்கு தானே முன்வந்து உதவ நினைக்கிறார். இவர்களிடையே நெருங்கிய உறவோ அன்போ இல்லையென்றாலும், எர்லேன்டூர் அவரை சில நேரம் கலந்தலோசிப்பார். தன் வாழ்க்கை ‘மரியன்’ போல் ஆகி விடும் என்று எர்லேன்டூர் எண்ணலாம்.

இந்த நாவல்களின் மொழி நடை அலங்காரங்களை விலக்கி சற்றே தட்டையாகவே உள்ளது.. ஆனால் சொல்ல வந்ததை மிக வீர்யமாக, அழுத்தமாக சொல்லும் நடை. இது குறித்து அவர் சொல்லும்போது

“எவ்வளவு அதிகம் சொல்ல முடியுமோ, அவ்வளவையும் மிகக் குறைந்த சொற்களில் சொல்வதை நான் ஒரு விதியாக வைத்திருக்கிறேன். அந்த சூழ்நிலையை, அதன் மையக் கருவை, எழுதிக் கொலை செய்யாமல், அதற்கென்று ஒரு வாழ்க்கையைக் கொடுக்கிறேன், அதில் உள்ள இடைவெளிகளை இட்டு நிரப்பும் வேலையை வாசகர்களிடம் விட்டு விடுகிறேன் – வாசகர்கள் தங்களுக்கு விருப்பப்பட்ட கதையைச் செய்து கொள்கிறார்கள். நீங்கள் சகல வகைகளிலும் அழகிய விவரணைகலைக் கொடுத்து சொற்குவியலால் வாசகர்களை ஆட்கொள்ளலாம்.. நன்றாகத் தேர்ந்தெடுத்த சில சொற்களைக் கொண்டும் அதைச் செய்யலாம். என்னைப் பொருத்தவரை இதுதான் நன்றாக செயல்படுகிறது:

(“My rule is to say as much as possible in as few words as possible. Rather than doing it to death writing about the ambience or the essential idea of it, I give it a life of its own and leave it to the reader to fill things in – the reader is left with his own version. You can create all manner of beautiful descriptions and kill them with verbosity, but you can also do it with a few well chosen words. To me, that’s much more effective”)

இதைச் சார்ந்து இன்னொரு முக்கியமான கருத்தை சொல்கிறார்.


“வாசகர்களை நம்புங்கள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். பல பேர் வாசகர்களிடம் நம்பிக்கையில்லாமல் இருக்கிறார்கள். எல்லாவற்றையும் வாசகனுக்காக வாந்தியெடுத்து விடுகிறார்கள். கதையில் குறைந்தபட்சம் பாதி பங்கு வாசகனுக்கு இருக்கிறது”

(“The reader is there, have faith in him. There are so many that don’t trust the reader, regurgitate everything for him. The reader is at least half of the whole thing. “)

நாம் மேலே பார்த்த பழங்காலத்திய படைப்புக்களின் பாதிப்பினால் இப்படி தாம் எழுதுவதாக கூறுகிறார்.

“நம்மிடம் ஆயிரம் வருடங்களுக்கு முந்தைய ஐஸ்லாந்திய பெருங்கதைகள் உள்ளன. நாயக நாயகியர்கள், வஞ்சம் தீர்த்தல், பகைகள், கொலைகள், காதல்கள் என்று அவற்றின் மகோன்னதமான கதைகளின் தாக்கம் என் எழுத்தில் உண்டு. அவை சிக்கனமான முறையில் சொல்லப்பட்டிருக்கின்றன, பெரிய விஷயங்களையும் சொல்ல மிகச் சில சொற்களே பயன்படுத்தப்படுகின்றன. எனக்கு அது பிடித்திருக்கிறது. ஐஸ்லாந்தில் எப்போதும் இருந்ததான சிறு சமூகத்தில் இருக்கக்கூடிய நெருக்கமான நட்புகளையும் குடும்ப வாழ்வையுமே அவை எப்போதும் பேசுகின்றன.”

(“Actually we do have The Icelandic Sagas taking place in and around the year 1000 and they have influenced me a lot with their great stories about heroes and heroines and revenge and feuds and murders and love.The style is very spare, few words are used to describe big things and I like that. And they are all about families and close friendships in this small society Iceland has always been.”)

இதுவரை பார்த்த தொடர்களில் மிக ‘atmospheric’ என்று இதை சொல்லலாம். ஐஸ்லேன்ட் நாட்டின் வெறுமையான பகுதிகள், கடுங்குளிர் காற்று, பனிப்பொழிவு என நம்மை அந்த சூழ்நிலைக்கே கொண்டு சென்று விடுகிறது இந்த நாவல். கடுங்குளிரின் தாக்கம் பற்றிய ஒரு பத்தி கீழே உள்ளது.

“மாலை வீழவும் உறைபனி தன் பிடியை இறுக்கிக் கொண்டது. தென்திசையில் வெறுமையாய் விரிந்திருந்த பனிக்கால நிலப்பரப்பைக் கடந்து வெடித்துச் சிதறிய சில்லிட்ட ஆர்க்டிக் காற்று சாட்டைகளாய் தாக்கிற்று. ஸ்கார்ட்ஷெய்தி மலையின் உச்சியிலிருந்து வீழ்ந்து, எஸ்ஜா மலைச் சிகரங்களைக் கடந்து, உலகின் வடகரையில் இருந்த அந்த ஒளிரும் பனிநகரின் குடியிருப்புகள் விரிந்திருந்த தாழ்நிலங்களைச் சேதித்துச் செல்லும் வழி கண்டிருந்தது குளிர்காற்று. கட்டிடங்களுக்கிடையேயும் வெறிச்சோடியிருந்த சாலைகளிலும் காற்று அலறி ஓலமிட்டது. நகரம உயிரற்றுக் கிடந்தது. ஒரு பிளேக்கின் பிடியிலிருந்தது போல். மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரவில்லை. அவர்கள் கதவுகளைப் பூட்டிக் கொண்டனர், சன்னல்கள் மூடிக் கொண்டனர், சன்னல் திரைகளை இழுத்து மறைத்தனர், இந்தக் குளிர் தாக்கம் விரைவில் முடிவுக்கு வந்துவிடும் என்று நம்பிக்கையைக் கடந்த நம்பிக்கையில்.

(“The frost tightened its grip as evening fell, whipped up by the chill Artic wind that blasted in from the sea and south over the desolate winter landscape. It plunged down from Mount Skardsheidi, past Mount Esja and ravaged its way over the lowlands where the settlement spread out, a glittering winter city on the northernmost shores of the world. The wind howled and shrieked between the buildings and down the empty streets. The city lay lifeless, as if in the grip of a plague. People stayed inside their houses. They locked their doors, closed their windows and pulled the curtains, hoping against hope that the cold spell would soon be over”)

கல்லறையின் அமைதி (Silence of the Grave) நாவலில் வரும் இந்தப் பத்தியை பாருங்கள். கணவன் முதல் முறை அடித்தவுடன், மனைவியின் எண்ண ஓட்டத்தை கூறுகிறது இது.

“இது ஒரு ஒற்றை நிகழ்வாக இருந்திருக்க வேண்டும், என்று அவள் தனக்குள் சொல்லிக் கொண்டாள். அவன் நான் ஸ்னோர்ரியை விரும்புவதுபோல் விளையாடிப் பார்ப்பதாக அவன் நினைத்திருக்க வேண்டும், என்று அவள் எண்ணினாள். மீண்டும் இப்படி நடந்துவிடக் கூடாது என்று நான் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”

(“… It must have been an isolated incident, she told herself. He thought I was flirting with Snorri, she thought. I must be careful not to let that happen again.” )

கணவன் செய்த தவறுக்குக் காரணம் கற்பித்து, தான்தான் அதைத் தூண்டி இருப்போமோ என்று நினைக்கிறார். இதைத்தானே சமூகமும் சரி, பெண்களேகூட பிற பெண்களிடம் சொல்கின்றனர். ஏதோ ஒரு முறை செய்து விட்டான், இனி செய்ய மாட்டான், நான்தான் அதைத் தூண்டினேன் என்று எண்ணி எண்ணியே இந்த விஷயத்தைப் பெண்கள் முளையில் கிள்ளி எறியாமல் வளர்த்து விடுகிறார்கள் என்பதை இந்த பத்தி உணர்த்துகிறது. குடும்ப வன்முறை குறித்த ஆய்வுகளும் இதைதான் தெரிவிக்கின்றன.

இந்த கொடுமை அதிகமானதின் விளைவை பாருங்கள்.

“அவளுக்கு இருந்த கொஞ்ச நஞ்ச சுயமரியாதையையும் அவன் அடித்து நொறுக்கினான்…. அவளவு இருப்பு அனைத்தும் அவனைச் சுற்றியே இருந்தது. அவனது சில்லறை விருப்பங்கள். அவனுக்கு ஊழியம் செய்தல். முன்போல் இல்லாமல் அவள் தன்மீது அக்கறை செலுத்திக் கொள்வதை நிறுத்தியிருந்தாள்… அவளது கண்களின் கீழ் கருவளையங்கள் தோன்றின, அவளது முகம் தளர்ந்தது, அவளின்மேல் ஒரு பழுப்புத்தனம் படர்ந்தது, அவள் கூன் போட்டாள், ஒழுங்காக நிமிர்ந்து பார்க்கும் துணிச்சல் அவளுக்கு இல்லாதது போல் அவளது தலை மார்பில் தாழ்ந்திருந்தது”

“… அது அவளது உள்ளத்தையும் பாதித்தது என்பது வன்முறையின் மோசமான வடிவாக இருக்கலாம். நான் நேற்று ஏர்லெனடூரிடம் சொன்னது போல், அது என் அம்மாவை ஒன்றுமில்லாமல் செய்தது. அவளது கணவன் அவளை வெறுத்ததுபோல் அவளும் தன்னையே வெறுக்கத் துவங்கினாள்”

“He knocked out of her what little self-respect she had………….. Her entire existence revolved around him. His whims. Serving him. She stopped taking care of herself as she once had…. Rings appeared under her eyes, her face went flabby, and a greyness descended upon her, she developed a stoop, her head down on her chest as if she did not dare to look up properly”

“… And it was psychological too, which was maybe a worse form of violence because as I told Erlendur yesterday, it reduced my mother to nothing. She started to despise herself as much as her husband despised her;”

எந்த அலங்கரிப்பும் இல்லாமல் நேராகச் சொல்லும் முறை மூலம், சொல்ல வந்ததை அதிகத் தாக்கத்துடன் சொல்கிறார். இறுதியாக ஒரு நாவலின் முடிவில் குற்றத்திற்கான காரணம் குறித்த ஒரு சிறு உரையாடல். நாவலின் சுவாரசியம் கெடாமல் இருக்க, பேசுபவர் யார் என்பதை கொடுக்கவில்லை, பெயர் வரும் இடத்தில் … என்று குறிப்பிட்டுள்ளேன்.

“அவர்களுக்கு அந்த எண்ணம் எப்படி வந்தது?”

“சும்மா… உங்களுக்கே தெரியுமே’..,,

“ஒன்று தெரியுமா?”

“அவன் அங்கிருந்தான்”

“அதுதான் ஒரே காரணமா?”

“எங்களுக்கு போர் அடித்தது”

(“What had given them the idea.
‘Just, you know,’….. said
‘You know what?’
‘He was there’
‘That was the only reason?’
‘We were bored'”)

ஒரு மிக அபத்தமான காரணம் குற்றத்தில் முடிவதை நாம் மேலே பார்க்கலாம். மொத்த நாவலோடு பார்க்கையில் அதன் தாக்கத்தை நாம் இன்னும் உணர முடியும்.

இவரின் அனைத்து நாவலகளையும் படிக்காத நிலையில் இப்படி சொல்வது சரியா என்று தெரியவில்லை. இருப்பினும் நான் படித்த இவரின் நாவல்கள் சார்ந்து இன்று குற்றப் புனைவுகளின் மிக முக்கிய எழுத்தாளராக இவரைப் பார்க்கிறேன். குற்றப் புனைவுகளில் ரான்கின், மன்கேல் இடத்தில் இவரை நாம் வைக்கலாம். இன்னும் சொல்லப்போனால், சில நேரத்தில் தம் முன்னோடிகளை தன் தனித்துவமான பார்வை/, களங்கள் மூலமாகத் தாண்டியும் செல்லும் அடுத்த தலைமுறையாக அவர் உள்ளார். வாழ்க்கைக்கு மிக நெருக்கமான, நாம் எளிதில் நெருங்கக்கூடிய, உணரக்கூடிய, சிந்தையையும் மனதையும் கனக்கச் செய்யும் குற்றப் புனைவுகளை படைக்கும் இவரை அழுத்தமாகப் பரிந்துரை செய்கிறேன்.

விட்டு விடாதீர்கள்.

(தொடரும்)

One Reply to “அர்னல்டூர் – ஐஸ்லேன்ட் குற்றப் புனைவு எழுத்தாளர்”

Comments are closed.