அமெரிக்க-பாகிஸ்தான் உறவு – எங்கே செல்லும் இந்தப்பாதை?

பாகிஸ்தான் என்கிற தேசம் உருவான நாள் முதல், அமெரிக்க-பாகிஸ்தான் நட்புறவு இன்றிருக்கும் அளவுக்கு என்றைக்குமே சிதிலமடைந்த நிலையை அடைந்ததில்லை என்று சொல்லி விடலாம். அமெரிக்க வெறுப்பு என்பது என்றைக்குமே பாகிஸ்தானிய மதவாத அரசியலின் அடிநாதமாக எப்போதுமே இருந்திருக்கிறது. உதாரணத்திற்கு 1979-இல் வஹாபிய அடிப்படைவாதிகளால் மெக்கா மசூதி கைப்பற்றப்பட்டபோது, அந்த நிகழ்வில் எந்த தொடர்பும் இல்லாத அமெரிக்கர்களையே பாகிஸ்தானிய மதவாதிகள் முதல் குற்றவாளிகளாகப் பார்த்தார்கள். அதைத்தொடர்ந்த கலவரங்களில் பாகிஸ்தானில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு வீரர் கொல்லப்பட்டார். பாகிஸ்தான் அரசும், உளவுத்துறையும், ராணுவம் வேடிக்கை பார்க்க, பாகிஸ்தானின் அமெரிக்க தூதரகம் முற்றுகையிடப்பட்டு எரியூட்டப்பட்டது. சோவியத்திற்கெதிரான போராட்டத்தில் அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் பாகிஸ்தானும் இணைந்து நிகழ்த்திய நிழல் யுத்தத்தில் பாகிஸ்தான் வழியாக அனுப்பப்பட்ட பெருமளவு நிதி பாகிஸ்தான் ராணுவத்தால் கையகப்படுத்தப்பட்டது. ராணுவத் தளவாடங்களில் மூன்றில் ஒரு பங்கு காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு மடைமாற்றப்பட்டது. இன்னொரு மூன்றில் ஒரு பங்கை சர்வதேச ஆயுத கறுப்புச் சந்தையில் கொள்ளை லாபத்துக்கு பாகிஸ்தான் ராணுவம் விற்றது. இவ்வாறு வெளி மார்க்கெட்டில் புசிந்த துப்பாக்கிகள் வேறு சில இடங்களில் கைப்பற்றப்பட்டபோது அவை அமெரிக்க ராணுவ தளவாடங்களின் சீரியல் எண்களாக இருப்பது கண்டறியப்பட்டு, அமெரிக்கா தான் அனுப்பிய ஆயுதங்களின் கிடங்கை சோதனையிட ஒரு குழுவை அனுப்பியது. அந்தக்குழு பார்வையிட வருவதற்கு முன்பே அந்தப்பெரும் கிடங்கு “தீ விபத்தில்” வெடித்துச்சிதறியது. அதில் கராச்சியின் நூறு அப்பாவிகள் செத்துப்போனார்கள். ஆனால் ஆப்கானிஸ்தானில் சோவியத் ரஷ்யாவை தோற்கடிக்கும் முனைப்பில், பாகிஸ்தானிற்கான அமெரிக்க நிதி உதவியும் ஆயுத உதவியும் நின்றபாடில்லை. 1989-இல் சோவியத் உடைந்தபின் அந்த ஆயுதங்களும் பயங்கரவாதிகளும் காஷ்மீருக்கு திருப்பிவிடப்பட்டனர். காஷ்மீர் தெருக்களில் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர். காஷ்மீர் பண்டிட்டுகள் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த இடத்தை விட்டு டெல்லியில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர். தன் நாட்டு பிரஜைகளை தன் நாட்டு எல்லைக்குள்ளேயே காக்க முடியாமல் அகதிகளாக்கிய பலவீன அரசாக இந்தியா ஆனது.

1984-இலேயே அணுகுண்டு சோதனையை பாகிஸ்தான் சீனாவில் வைத்து நடத்தியபோது, ரீகன் அரசு அதைக் கண்டும் காணாமல் விட்டது. ஏனென்றால், இந்த செய்தி உண்மையென்றானால், பாகிஸ்தானிற்கான அத்தனை நிதி மற்றும் ஆயுத உதவியையும் அமெரிக்கா நிறுத்திக்கொள்ள வேண்டி வரும். சோவியத்துக்கு எதிரான நிழல் யுத்தத்தில் உதவிக்கொண்டிருந்த பாகிஸ்தானிற்கு எதிராக அன்றைய அமெரிக்க ரீகன் அரசு எவ்வித நிலைப்பாட்டையும் எடுக்கத்தயாராக இல்லை. இன்றோ அதே சீனாவின் உதவியுடன் 250 அணு ஆயுதங்களை பாகிஸ்தான் கைவசம் வைத்திருப்பதாகச்சொல்லப்படுகிறது. ஆனால் இவை எப்போது வேண்டுமானாலும் பயங்கரவாதிகள் கையில் விழுந்து விடலாம் என்று மிரட்டி, பயங்கரவாதிகளைக் கட்டுக்குள் வைக்க தொடர்ந்த பண உதவி தேவை என்று அமெரிக்காவை நெருக்கிக்கொண்டிருக்கிறது.

2001 இரட்டைக்கோபுர தகர்ப்பிற்குப்பின் அமெரிக்கா ஆப்கானிஸ்தான் மீது போர் தொடுக்க, அதிலும் பாகிஸ்தான் ராணுவம் பணம் சுருட்டத்தொடங்கியது. பாகிஸ்தானிய ராணுவத்திற்கு வருடத்திற்கு 300 மில்லியன் டாலர்கள் அளவுக்கு அமெரிக்கா ஆயுத தளவாடங்கள் வாங்க நிதியுதவி தருகிறது. இது தவிர பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் உதவி என்கிற பெயரில் வருடத்திற்கு ஒரு பில்லியன் டாலர் என்கிற கணக்கில் இன்று வரை 14.2 பில்லியன் டாலர்களை பாகிஸ்தானுக்கு தாரை வார்த்துள்ளது.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை பயங்கரவாதம் என்பது பொன்முட்டையிடும் வாத்து. அதற்கு நன்றாக தீனி போட்டு வளர்த்தால் அது அமெரிக்க டாலர்களாக கொட்டிக்கொடுத்துக்கொண்டே இருக்கும் என்பதை ஆப்கன் போரின் வழியாக பாக் ராணுவமும் உளவுத்துறையும் அரசும் தெளிவாக அறிந்துவைத்துள்ளன.

அமெரிக்காவிற்கு பாகிஸ்தானின் இந்த வேஷம் கடந்த சில வருடங்களாகவே பெரும் பிரச்சனைகளை உருவாக்கி வருகிறது. பாகிஸ்தான் ஜிஹாதிகளின் அமெரிக்க வெறுப்பு என்பது ஆப்கன் நேட்டோ படைகள் மற்றும் அமெரிக்கர்களை நோக்கிய தாக்குதலாக கடந்த பத்தாண்டுகளில் பெருமளவு வளர்ந்து விட்டது. 2002-இல் கராச்சியில் அமெரிக்க தூதரகத்தின் முன் குண்டுவெடித்ததில் பனிரெண்டு பேர் இறந்தார்கள். 2003-இல் அமெரிக்க தூதரகத்தின் பாதுகாவலர்கள்மீது துப்பாக்கித்தாக்குதல் நடத்தப்பட்டது. 2006-இல் அமெரிக்க தூதரகத்துக்கு அருகிலிருக்கும் மரியாட் ஹோட்டலில் தூதரக அதிகாரி குண்டு வீசி கொல்லப்பட்டார். 2007-இல் அமெரிக்க ராணுவ அதிகாரிகள் வெளிப்படையாகவே அமெரிக்கப்பணத்தை பாகிஸ்தான் அரசும் ராணுவமும் பெருமளவில் கையாடுவதாகக் குற்றம் சாட்டினர். அமெரிக்கப்பணம் இந்தியாவுக்கு எதிரான செயல்களுக்கு உபயோகப்படுத்தப்படுவதாகவும், பொய்க்கணக்கு மூலம் ஏராளமான அமெரிக்க நிதியை பாகிஸ்தான் கையாடுவதாகவும் குற்றம் சாட்டினர். 2010-இல் பெஷாவரில் உள்ள அமெரிக்க தூதரகம் குண்டுவீசித் தாக்கப்பட்டது.

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா பதவிக்கு வரும் முன்பே, ”தேவைப்பட்டால் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் எல்லைக்குள் புகுந்து கூட அமெரிக்கா அழிக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார். பராக் ஒபாமா பதவிக்கு வந்ததிலிருந்து பாகிஸ்தான் பகுதிக்குள் ராணுவ ஹெலிகாப்டர் தாக்குதல்கள் (”ட்ரோன்” தாக்குதல்கள்) முடுக்கி விடப்பட்டன. 2004-இல் சிறிய அளவில் தொடங்கப்பட்ட ட்ரோன் தாக்குதல்கள், 2008-இல் மாதத்திற்கு 12 தாக்குதல்களை நடத்தும் அளவுக்கு விரிவுபடுத்தப்பட்டன. பாகிஸ்தானின் உளவுச்செய்திகளை நம்பாமல், அமெரிக்க உளவறிதல் வழியாகவே தாக்குதலுக்கான குறிகள் முடிவு செய்யப்பட்டன. 2008-இல் காபூலில் உள்ள இந்திய தூதரகம் தாக்கப்பட்டதில் 58 பேர் கொல்லப்பட்டனர். இது பாகிஸ்தானின் உளவுத்துறையான ஐஎஸ்ஐயின் வழிநடத்தலில் நிகழ்த்தப்பட்ட கொடூரம் என்று அமெரிக்க உளவுத்துறை குறிப்பிட்டது. இந்தியா பாகிஸ்தான் ராணுவத்தின் பெஷாவரில் உள்ள 324வது உளவுப்பிரிவினால் நடத்தப்பட்ட தாக்குதல் இது என்று அறிவித்தது.

இந்நிலையில் 2008 டிசம்பரில் பாகிஸ்தானின் ஐ எஸ் ஐ உதவியுடன் லஷ்கர்-இ-டய்பா பயங்கரவாதிகள் மும்பையில் பயங்கரவாத வெறியாட்டத்தை நிகழ்த்தினர். இதற்கான ஆதாரங்கள் அனைத்தையும் இந்தியா அமெரிக்க அரசுடன் பகிர்ந்து கொண்டது. மும்பை பயங்கரவாதத்தைத் திட்டமிட்டதில் ஒருவனான டேவிட் ஹெட்லீ லஷ்கர் இ டய்பாவின் தொடர்பை பகிரங்கமாக்கினான். லஷ்கர் இ டொய்பா அமைப்பிற்கும் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் பல மட்டங்களில் உள்ள தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது. இந்த அடுத்தடுத்த நிகழ்ச்சிகள் பாகிஸ்தான் அரசிற்கும், ஜிஹாதி பயங்கரவாதத்துக்கும் உள்ள தொடர்பை மறுக்கவியலா வகையில் உலக நாடுகளுக்கு வெளிச்சம் போட்டு விட்டன.

பயங்கரவாதிகளை ஒழிக்கவோ ஆப்கானிஸ்தானில் அமைதியை நிலைநாட்டவோ பாகிஸ்தான் தரப்பை நம்ப முடியாது என்ற முடிவுக்கு அமெரிக்கா வந்து விட்டிருந்தது. இதன் முக்கியமான நிகழ்வாக, பாக். ராணுவப்பயிற்சி முகாம் உள்ள அபோடாபாத் என்கிற நகரத்தில் ஒரு வசதியான பங்களாவிற்குள் 2011 மே-மாத இரவொன்றில் அமெரிக்க ராணுவ “சீல்கள்” பிரிவு ரகசிய தாக்குதல் நிகழ்த்தி ஒஸாமா பின்லாடனைக் கொன்றது. அமெரிக்காவிடமிருந்து தொடர்ந்து பணம் கறக்கும் பொருட்டு, பின் லாடனை பாக் ராணுவமும் உளவு அமைப்புமே பாதுகாத்து வைத்திருந்ததாக செய்திகள் வெளிவந்தன. பாகிஸ்தான் தரப்பின் மேல் அமெரிக்க அதிகார வட்டம் முழுமையாகவே நம்பிக்கை இழந்து விட்டிருப்பதை இந்த நிகழ்வு அடிக்கோடிட்டது.

ஜூன் மாதம் காபூலில் ஹோட்டல் இண்டர்காண்டினண்டல் தற்கொலைத் தாக்குதலுக்குள்ளானது. நேட்டோ தளவாடங்கள் தாக்கப்பட்டு பலர் கொல்லப்பட்டனர். இந்தத்தாக்குதல் அனைத்தும் பாகிஸ்தானின் ஹக்கானி பயங்கரவாத கும்பலால் ஐ எஸ் ஐ உதவியுடன் நடத்தப்பட்டது என்று அமெரிக்க உயரதிகாரி Chairman of the Joint Chiefs of Staff அட்மிரல் மைக்கேல் முல்லன் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.

பயங்கரவாத ஜிஹாதிகளின் சதவீதம் என்று எடுத்துக்கொண்டால் பாகிஸ்தானில்தான் இன்று உலக அளவிலேயே அதிக பயங்கரவாதிகள் இருக்கிறார்கள். பாகிஸ்தான் ராணுவமே நான்கு பயங்கரவாத அமைப்புகளுக்கு விதையாக, அரணாக, உரமாகச் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்புகளுக்கு ஆயுதப்பயிற்சி தருவதிலிருந்து, தொலைதொடர்பு, உளவு, நிதியுதவி என்று எல்லா வகையிலும் உதவுகிறது. இந்த நான்கு அமைப்புகளைக்குறித்து அமெரிக்க தூதரக அதிகாரி பேட்டர்ஸன் அனுபிய ரகசிய கேபிள் விக்கிலீக்ஸ் தளத்தால் வெளியிடப்பட்டது. அந்த அமைப்புகள் வருமாறு: ஆப்கன் தாலிபான், ஹக்கானி குழு, ஹெக்மட்டியார் குழு, லஷ்கர்-இ-டொய்பா (அ) ஜமாத்-உத்-தவா.

இதில் குறிப்பாக லஷ்கர்-இ-டொய்பா அமைப்பு உலகளாவிய மிகப்பெரும் வலைப்பின்னலாக தனது பயங்கரவாத அமைப்பின் வீச்சை விரிவாக்கியுள்ளது. உலகின் பல நாடுகளிலும் உள்ள இஸ்லாமிய தொண்டமைப்புகளின் மூலம் லஷ்கர்-இ-டய்பாவிற்கு நிதி குவிகிறது. 2008-ஆம் வருடத்தில் மட்டும் 100 மில்லியன் டாலர் அளவுக்கு லஷ்கர் அமைப்புக்கு நிதி திரண்டதாக அமெரிக்கா கணக்கிட்டுள்ளது. இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை, நேபாளம் என்று பல நாடுகளிலிருந்தும் பயங்கரவாதத்திற்கு ஆள் சேர்க்க லஷ்கர் அமைப்பால் முடிகிறது. ஆயுதப்பயிற்சி பெற்ற 50,000 ஜிஹாதிகளைத்தன்கையில் வைத்திருக்கும் லஷ்கர் அமைப்பை பாக் ராணுவம் ஒரு ரிஸர்வ் ராணுவம் போல, தன் நிழல் யுத்தத்திற்கு வசதியாகப்பயன்படுத்திக்கொள்கிறது. நேபாளத்தில் மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு வைத்து அதன்மூலம் இந்தியாவிற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளை அதனால் தொடுக்க முடிகிறது. லஷ்கர் அமைப்புக்கு பாகிஸ்தான் ராணுவம், சவுதி அரேபியா ஆகிய நாடுகளின் ஆதரவு இருக்கிறது. பாகிஸ்தான் அணுஆயுத திருட்டு புகழ் ஏ.க்யு. கான் லஷ்கர் இ டொய்பா அமைப்பின் வருடாந்திர மாநாடுகளுக்கு தவறாமல் செல்பவர். மாலத்தீவுகளில் வஹாபிய ஆட்சி நிறுவப்பட்டு ஜனநாயகம் ஒடுக்கப்பட்டதில் சவுதி அரேபியாவின் பங்கு கணிசமானது. மாலத்தீவில் இஸ்லாத்தைத்தவிர பிற மதங்களைப் பிரசாரிப்பது குற்றமென அறிவிக்கப்பட்டுள்ளது. மாலத்தீவுகளின் மதகுருமார்கள் சவுதியால் பயிற்சி அளிக்கப்படுகிறார்கள். பங்களாதேஷ், மலேசியா போன்ற நாடுகளுக்கு நேர்ந்த கதி மாலத்தீவுக்கும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. லஷ்கரின் முக்கிய தீவுக் கேந்திரமாகவும், இந்தியாவின் மீது நிகழ்த்தப்படப்போகும் எதிர்காலத்தாக்குதல்களின் மையமாகவும் மாலத்தீவு வருங்காலத்தில் உருவெடுக்கும் அபாயம் தெளிவாகத்தெரிகிறது.

இந்த அமைப்புகள்- குறிப்பாக லஷ்கர் அமைப்பு, பாகிஸ்தான் எல்லைக்குள் இதுவரை எந்த பயங்கரவாத செயலையும் நடத்தவில்லை என்பது கவனிக்க வேண்டிய ஒன்று. அல்-கொய்தாவின் வீழ்ச்சிக்குப்பின் உலகளாவிய பெரும் பயங்கரவாத அமைப்பாக லஷ்கர்-இ-டொய்பா உருவெடுத்திருக்கிறது. மிகத்தெளிவாகவே எல்லை தாண்டிய பயங்கரவாத செயல்களை மட்டுமே புரியும் ஒரு அமைப்புக்கு பாகிஸ்தான் அரசும், ராணுவமும், உளவுத்துறையும் உதவி செய்து ஆதரவளித்து வளர்த்து வருகின்றன. அதாவது, பயங்கரவாத அரசு என்று சொல்லத்தக்க அத்தனை குணாம்சங்களும் வெளிச்சம் போடப்பட்ட நாடாக பாகிஸ்தான் இன்று ஆகியிருக்கிறது.

சவுதி அரசால் இரண்டு வருடம் ரியாத் நகரில் வஹாபி மதவாதப்பயிற்சி அளிக்கப்பட்டு 1985-இல் பாகிஸ்தான் திரும்பிய ஹஃபீஸ் முஹமது சயீத் தொடங்கிய அமைப்புகள்தான் ஜமாத்-உத்-தவாவும் லஷ்கர் இ டொய்பாவும். சேவைப்பணியென்ற பெயரில் ஜமாத்-உத்-தவா இருந்தாலும் உண்மையில் அது லஷ்கர் -இ-டொய்பாவின் பினாமி அமைப்பே. 2001 பாராளுமன்ற தாக்குதல், 2008 மும்பை பயங்கரவாதம், 2010 காஷ்மீர் விமானநிலையத்தாக்குதல் என்று பல தாக்குதல்களை இந்தியாமீது நிகழ்த்திய அமைப்பு இது.

2009-இல் இண்டர்போல் நிறுவனம் ஹஃபீஸ் மீது சர்வதேச அரெஸ்ட் வாரெண்ட் பிறப்பித்தது, அதைத்தொடர்ந்து பாகிஸ்தானில் காவலில் வைக்கப்பட்ட ஹஃபீஸ் 2011 அக்டோபரில் (அதாவது பின் லாடன் கொலையைத் தொடர்ந்து பாக்-அமெரிக்க உறவு மிகவும் சீர்கெட்ட நிலையில்) பாகிஸ்தானின் கோர்ட்டால் விடுவிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்டவுடன் ஆப்கானிஸ்தானில் உள்ள நேட்டோ படைக்கு தளவாடங்கள் கொண்டு செல்லும் லாரிகளைத் தாக்கச்சொல்லி அறைகூவல் விடுக்க, இவ்வளவு நாள் தூங்கிக்கொண்டிருந்த அமெரிக்கா துள்ளியெழுந்து (இப்போதாவது) ஹபீஸின் கைதுக்கு உதவுபவர்க்கு 10மில்லியன் டாலர் என்று விலை அறிவித்தது. அமெரிக்க அறிவிப்பு வந்தவுடன், பாகிஸ்தானில் பத்திரிகையாளரைக்கூட்டி ஹஃபீஸ், ”நானொன்றும் குகையில் மறைந்து வாழவில்லை, வெளியில் சுதந்திரமாகத்தானே இருக்கிறேன். அந்த பத்து மில்லியனை எனக்கே தரவேண்டும்” என்று நையாண்டி செய்து முடிந்தால் பிடித்துக்கொள்ளுங்கள் என்று சவால் விடும் விதமாகப்பேசினார். ஹக்கானி, ஹெக்மட்டியார், லஷ்கர் ஆகிய அமைப்புகளெல்லாம் அமெரிக்காவால் சோவியத்துக்கு எதிரான ஜிஹாத் போருக்காக தீனி போட்டு வளர்க்கப்பட்ட பயங்கரவாதக்குழுக்களே. இன்று அவையனைத்தையும் அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளுக்கு எதிராகக் களமிறக்கி அமெரிக்காவை மிரட்டி பணம் கறப்பதில் பாகிஸ்தான் ராணுவமும் அரசும் முனைந்து வருகின்றன.

நேட்டோ தளவாடங்களின் மீதான தாக்குதல் பாகிஸ்தான் ராணுவ உதவியுடனேயே நடத்தப்படுகிறது. 2008-இல் 160 நேட்டொ தளவாட லாரிகள் கொளுத்தப்பட்டன. 2009-இல் மட்டும் 25 முறை நேட்டோ தளவாட லாரிகள் தாக்கப்பட்டுள்ளன. 2011-இல் இந்த எண்ணிக்கை 111-ஆக உயர்ந்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் போருக்கு தளவாடங்கள் கொண்டு செல்லும் பல லாரிக்கள் “காணாமல்” போய் விடுகின்றன. ஆப்கன் போருக்கு அனுப்பப்பட்ட தளவாடங்களில் 29000 லாரி லோடு தளவாடங்கள் ”காணாமல்” போயிருக்கின்றன. இவ்வாறு காணாமல் போன தளவாடங்கள் சில பெஷாவர் அருகில் உள்ள கர்கோனோ என்கிற இடத்தின் தெரு மார்க்கெட்டில் விற்பனைக்கு வந்திருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க மிலிடரி ஸாக்ஸ்களுடன் சேர்ந்து அமெரிக்க பாதுகாப்புத்துறையின் ரகசிய ஆவணமான மிலிடரி ஆபரேஷன் கையேடுகளும் தெருவில் விற்பனைக்கு கிடைக்கின்றன. ஆயுதங்கள், துப்பாக்கி உதிரி பாகங்கள், குண்டுகள் மட்டுமன்றி பாகிஸ்தானிற்கு விற்பனை செய்ய தடைவிதிக்கப்பட்டுள்ள இருட்டில் பார்க்க உதவும் துல்லியமான மிலிடரி பைனாகுலர்களும் கிடைக்கின்றன. 2009-இல் அமெரிக்க ராணுவ தொழில்நுட்பப்பிரிவு ராணுவ ஆயுதங்களுக்காக உபயோகப்படுத்திய diagnostics அடங்கிய மடிக்கணிணி கூட இந்த மார்கெட்டில் கிடைக்கிறது. அந்த மடிக்கணினியில் உள்ள தகவல்களில் ராணுவ மென்பொருள், அமெரிக்க ராணுவ வீரர்கள் குறித்த தகவல்கள் ஆகியவற்றுடன், ஆப்கனில் உள்ள அமெரிக்க ராணுவ வாகங்களின் பலவீனங்கள் பற்றிய தகவல்களும் அடக்கம். இவையனைத்தும் அடங்கிய மடிக்கணிணி விலை 650 டாலர் மட்டுமே.

பாகிஸ்தான் நடத்தும் மறைமுக யுத்தத்தில் அமெரிக்காவின் ஆயுதத்தையும் நிதியையும் ஒரு புறம் பெற்றுக்கொண்டே அமெரிக்கத்தரப்பும் நேட்டோ படைகளும் பாகிஸ்தானால் காட்டிக்கொடுக்கப்படுகின்றன. பயங்கரவாதம் என்பதை ஒரு பணம் கறக்கும் கலையாக செம்மைப்படுத்தி விட்டிருக்கிறது பாகிஸ்தான். அதற்கு முக்கிய ஆதரவாக இருப்பது சவுதி அரேபியா. சவுதி அரேபியாவுக்கு பாகிஸ்தான் ஜனநாயகப்பாதையில் திரும்புவது பிடிக்கவில்லை- பாகிஸ்தானின் கனநாயகம் ஷியாக்களுக்கு அரசியலில் இடம் பெற்றுத்தந்து விடும் என்று அஞ்சுகிறது. பாக் பிரதமர் சர்தாரி ஷியா என்பதால் அவரை வெறுக்கிறது. சுன்னி தரப்பிலிருந்து நவாஸ் ஷெரீஃப் பிரதமராவதையும் ராணுவத்தின் கையில் பாக் இருப்பதையுமே சவுதி அரேபியா விரும்புகிறது. இந்த விஷயங்கள் எல்லாம் விக்கி லீக்ஸ் அம்பலப்படுத்திய கேபிள்களிலிருந்து தெரிய வந்திருக்கின்றன. பாகிஸ்தான் சமீப காலத்தில் சீனாவுக்கு நெருக்கமாகி வருகிறது. அமெரிக்கா போலன்றி சீனா பாகிஸ்தானின் நீண்ட கால கட்டுமானப்பணிகளில் பெருமளவு முதலீடு செய்து வருகிறது. சீனாவுடனான நெருக்கத்தை சவுதியும் அமெரிக்காவும் விரும்பாது என்பதே பாகிஸ்தான் சீனாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளும் மிரட்டல் அரசியலின் துருப்பு சீட்டாகவும் ஆகிறது.

வேறு வகையில் சொல்லப்போனால், நல்ல அரசாக இருப்பதற்காக அல்ல, பயங்கரவாத அரசாக இருக்காமலிருக்க தொடர்ந்து பில்லியன் கணக்கில் டாலர்களைக்கொட்டு என்று மிரட்டி கப்பம் வசூலிக்கும் நாடாக பாகிஸ்தான் ஆகியிருக்கிறது. இது உண்மையில் அமெரிக்க ஆதிக்கத்தின் வீழ்ச்சியையே சுட்டுகிறது. அமெரிக்காவிற்கு எதிராக பல சக்திகளைத் திரட்டி அமெரிக்காவைத் தடுமாற்றத்திலேயே வைத்திருப்பதில் பாகிஸ்தான் வெற்றி பெற்று வருகிறதென்றால் அதற்குக்காரணம் கடந்த பத்தாண்டுகளில் அடிவாங்கியிருக்கும் அமெரிக்கப்பொருளாதாரமும், ஈராக், ஆப்கானிஸ்தான் போர்களால் அயர்ச்சியடைந்திருக்கும் அமெரிக்க மனோநிலையும்தான். ஆனால் பாகிஸ்தான் தன் நலன்களுக்கு மிகவும் எதிராகப்போவதாக எண்ணும் ஒரு கட்டத்தில் பாகிஸ்தானையே பல நாடுகளாகப் பிரித்து விடவும்கூட அமெரிக்காவும் மேற்கு நாடுகளும் முனையும். இதற்கு பல உதாரணங்கள் சமீப கால வரலாற்றில் உள்ளன. பாகிஸ்தான் விஷயத்தில் அது எளிதில் நடந்தேறக்கூடியதுதான்.

இவற்றை ஒட்டு மொத்தமாகப்பார்க்கையில் ஒன்று தெளிவாகிறது. இந்தியா ஆப்கானிஸ்தானில் தனது இருப்பை பலப்படுத்திக்கொள்ள வேண்டும். மிகப்பெரிய அளவில் பில்லியன் டாலருக்கும் அதிகமாக இந்தியா ஆப்கானிஸ்தான் வளர்ச்சிப்பணிகளுக்கு உதவி வருகிறது. ஆப்கானிஸ்தானமோ பாக் அரசை கடும் எதிரியாகவே பார்க்கிறது. இதனை இந்தியா உபயோகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

இரண்டாவதாக, ஆப்கானிஸ்தானிலிருந்து இன்னும் இரண்டு வருடங்களில் பெரும்பாலான நேட்டோ படைகளும் அமெரிக்கப்படைகளும் திரும்பிச்சென்று விடும். அந்த நிலையில் இப்போது பாக் தரப்பு கொள்ளையடித்து வைத்துள்ள ஆயுதங்களுடன், பயிற்சி தந்து வைத்துள்ள பயங்கரவாதிகள் இந்தியாவுக்கு எதிராகத்திருப்பி விடப்படுவார்கள். அந்த நிலையில் பயங்கரவாதத்தின் முதுகெலும்பை ஒடிக்கும் விதத்தில் இந்தியா மிகக்கடுமையாக பதிலடி கொடுக்க வேண்டும். அந்த வாய்ப்பைப்பயன்படுத்தி பாக் ஆக்ரமிப்பு காஷ்மீர் பகுதியை மீண்டும் கையகப்படுத்திக்கொள்ள வேண்டும். அங்குதான் பெரும்பாலான பயங்கரவாத பயிற்சி முகாம்கள் உள்ளன என்பது இதற்கு மிகச்சாதகமான காரணமாகவும் ஆகும்.

மூன்றாவதாக, கடற்கரைக் காவலையும் கடற்படையும் பலமடங்கு வலுப்படுத்தி எப்போதும் தாக்குதலுக்கு தயாராக வைத்திருக்க வேண்டும் அமெரிக்காவுடன் கூட்டு கடல் தாக்குதல் பயிற்சிகளில் ஈடுபடலாம்.

நான்காவதாக, பாகிஸ்தான் பிரச்சனை அமெரிக்காவாலோ இந்தியாவாலோ தீர்க்கக்கூடியதில்லை. இந்தியாமீது அமெரிக்கா காஷ்மீர் விஷயத்தில் தரும் எந்த அழுத்தத்தையும் கறாராக நிராகரிக்க வேண்டும். பாகிஸ்தானின் மதவாதமும் அதனை உபயோகப்படுத்தி விளையாடும் ராணுவமும் உளவுத்துறையும் அந்த நாட்டின் சாபக்கேடுகள். இஸ்லாத்துக்கான உருவான முதல் நாடு பாகிஸ்தான். எனவே இந்த சாபக்கேடுகள் பாகிஸ்தானின் அடையாளத்தோடு பின்னிப்பிணைந்திருக்கின்றன. மதவாதத்தை அறவே ஒதுக்கிய தேசியமாக தன்னை மறு வார்ப்பு செய்யாதவரை பாகிஸ்தான் உருப்படப்போவதில்லை. அவ்வாறு மறுவார்ப்பு செய்யாதவரை பாகிஸ்தானுடனான எவ்வித இணக்க அணுகுமுறையும் விழலுக்கு இழைத்த நீர்தான் என்பதை இந்தியா உணர வேண்டும்.

அமெரிக்க பாகிஸ்தான் உறவு இன்று சீர்கெட்டிருந்தாலும் பாகிஸ்தானின் தலைவர்கள் பலருக்கு அமெரிக்கா மற்றும் பிரிட்டனுடன் நெருக்கம் அதிகம். பாக் அரசியல்வாதிகள், ராணுவத்தலைவர்கள் பலரது வாழ்நாள் முதலீடுகள் மேற்கு நாடுகளின் வங்கிகளில்தான் உள்ளது. சவுதி அரசும் அமெரிக்காவும் நெருங்கிய நட்பு நாடுகள் என்பதால் சவுதியை வைத்து பாகிஸ்தானை அடக்க அமெரிக்கா நினைக்கலாம். ஆனால் பாகிஸ்தான் சீனாவுடனான உறவு இந்த சமன்பாட்டைக்குலைத்து விடக்கூடும். இலங்கையில் மேற்கு நாடுகளின் எதிர்ப்பையும் மீறி சீனாவின் உதவியோடு ஒரு இன அழிப்பை இலங்கை நடத்த முடிந்திருக்கிறது. இது பாகிஸ்தானால் கவனிக்கப்படாமல் போகாது. மேற்கின் வீழ்ச்சியும் சீனாவின் எழுச்சியும் ஆசியாவில் சில புதிய அரசியல் சமன்பாடுகளை உருவாக்க வல்லது.

இந்தப்பின்னணியில்தான் ஆசியாவின் முக்கிய பிராந்திய சக்தியாக இந்தியா உருவெடுத்து வருவதை நாம் பார்க்க வேண்டும். ’இந்தியா பலவீனமான நாடு, அதன் தலைவர்கள் போருக்கு தயாரில்லை’ என்று ஒரு பிம்பம் நம் நாட்டைக்குறித்து பிற நாடுகளுக்கு உருவாகுமானால் அது நம் நாட்டை உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் பலவீனமாக்கும் சக்திகளுக்குத்தான் உதவும். தேசியத்தைப்பொறுத்தவரை ஒற்றுமைதான் வலிமை. மக்களிடையே பாதுகாப்பற்ற உணர்ச்சி வளர்வது, தேசியத்திற்கெதிரான சக்திகளையே வலுப்படுத்தும். தேசத்தின் ஒட்டுமொத்த வலிமைதான் மக்களுக்கு எதிர்காலத்தின் மீது நம்பிக்கையை வளர்க்கிறது. வலிமைதான் வாழ்க்கை.

இந்த நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு. அதில் இந்தியா அதற்கான இடத்திற்கு வளமையுடன் சேர்ந்து தன்னம்பிக்கையுடனும் வலிமையுடனும் வந்தடைய வேண்டும்.

குறிப்புகள்

– லஷ்கர் இ டொய்பா பற்றிய தகவல்கள் வில்ஸன் ஜான்சன் எழுதிய ”The Caliphate’s Soldiers: The Lashkar-e-Tayyeba’s Long War” என்கிற புத்தகத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. உலகிலேயே வலிமை வாய்ந்த பன்னாட்டு பயங்கரவாத அமைப்பு இன்றைய நிலையில் லஷ்கர்-இ-டொய்பாதான் என்கிறார் வில்ஸன் ஜான்சன். லஷ்கர் இ டொய்பாவின் குறிக்கோள் இஸ்லாத்துக்கான புதிய கிலாபத்தை உருவாக்கப்போராடுவதே என்கிறார்.

– விக்கி லீக்ஸ் தளத்தில் பாகிஸ்தான் குறித்த பேட்டர்ஸன் கேபிள்கள் கிடைக்கும்.

– அமெரிக்க தளவாட வாகனங்கள் காணாமல் போவது பற்றிய பிஸினஸ் வீக் கட்டுரையை இந்தத்தளத்தில் காணலாம்: http://www.businessweek.com/printer/magazine/from-pakistan-to-afghanistan-us-finds-convoy-of-chaos-12142011.html

– “Haqqani group carried out Kabul attack with ISI support: US”- http://indiatoday.intoday.in/story/kabul-attack-isi-support-haqqani-network/1/152322.html”

– நியுயார்க் டைஸில் வெளியான கட்டுரை (“Pakistan’s Spy Agency Is Tied to Attack on U.S. Embassy” – http://www.nytimes.com/2011/09/23/world/asia/mullen-asserts-pakistani-role-in-attack-on-us-embassy.html?pagewanted=all) அட்மிரல் முல்லனின் கீழ்க்கண்ட கருத்தை முத்தாய்ப்பாய் வைக்கிறது: Pakistan offcials “may believe that by using these proxies, they are hedging their bets or redressing what they feel is an imbalance in regional power,” he said. “But in reality, they have already lost that bet. By exporting violence, they’ve eroded their internal security and their position in the region. They have undermined their international credibility and threatened their economic well-being.”

– லஷ்கர் அமைப்பின் ஹஃபீஸ் சயீத் குறித்தும் அமெரிக்கா வேறு வழியின்றி பாகிஸ்தானின் ஏமாற்று வேலை தெரிந்தே பணம் தர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையும் திலீப் ஹைரோவின் சலான் வலைத்தளக் கட்டுரையில் காணலாம்: http://www.salon.com/2012/04/17/pakistans_war_on_terror_con/

– ஷான் கிரிகொரி டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் எழுதிய US is paying for Pak protection racket (http://m.timesofindia.com/home/sunday-toi/special-report/US-is-paying-for-Pak-protection-racket/articleshow/7085508.cms) என்கிற கட்டுரை முக்கியமான ஒன்று.