அணு ஆற்றலின் அரசியல் – இறுதிப் பகுதி

ஃபுகுஷீமா பேரிடர் ஜப்பானின் சரித்திரத்தில் மிக துக்ககரமான நிகழ்வு. ஃபுகுஷீமா மற்றும் அதன் அக்கம்பக்க மாவட்டங்களின் மக்கள் பேரளவிலான கதிர்வீச்சால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்களில் பலரும் தங்கள் வீடுகள் மற்றும் வாழ்வாதாரத் தொழில்களை கடும் அணு மாசு காரணமாய் இழந்திருக்கிறார்கள், இன்னும் பலர் பல காரணங்களால் வெளியேற முடியாமல் மாசுபட்ட இடங்களிலேயே இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். அழிக்கப்பட்ட அணு உலைகளை அப்புறப்படுத்துவதற்கு அசாதாரண முயற்சிகள் தேவைப்படும் நிலையில் நிலமும் நீரும் பல பத்தாண்டுகளுக்கு மாசுபட்டவையாயிருக்கும். பேரிடர் நடந்து ஓராண்டுக்குப் பின் அதன் விளைவுகளின் பரிமாணம் இன்னும் முழுமையாய் வெளிப்படவில்லை.

அதே நேரத்தில், ஃபுகுஷீமா பேரிடர் ஜப்பானிய மக்களுக்கு அணு ஆற்றலை நம்பியிருக்கும் தம் நிலை , கொள்கை உருவாக்கத்தில் அரசாங்கத்தின் ஆதிக்கம், இன்னும் பல விஷயங்களிலும் நன்மை தீமைகளை ஆராய்ந்து சிந்திக்க ஒரு “வாய்ப்பை”க் கொடுத்திருக்கிறது. இன்னொரு வகையில் சொன்னால், ஃபுகுஷீமா பேரிடர் போன்ற பெருநாசத்துக்குக் காரணமான பழைய அமைப்பைத் தொடர்வதா, அல்லது முன்னேற உதவும் ஒரு புது அமைப்புக்கு மாறிச் செல்வதா என்ற முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நிலையில் ஜப்பானை நிறுத்தியுள்ளது. மார்ச் 11, 2011லிருந்து ஜப்பானிய அரசாங்கம், டெப்கோ, அணு ஆற்றல் தொழில்துறை, அணு ஆற்றலைப் படிப்படியாய் கைவிடக் கோரும் இயக்கம் – இவற்றிடையே ஜப்பான் அடுத்து தேர்ந்தெடுக்கவேண்டிய பாதையைத் தீர்மானிக்க ஒரு கடும் இழுபறி நடக்கிறது. தற்போதைய போராட்டங்கள் அணு உலைகளைத் திரும்பவும் துவக்குவதைச் சுற்றி நடப்பவை. அணுப்பேரிடருக்குப் பின்பு அதிகரிகப்பட்டுள்ள கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் காரணமாய், ஏப்ரல் 2012ன் தொடக்கத்திலிருந்து ஜப்பானின் 54 அணு உலைகளில் ஒன்றைத்தவிர மற்றவை எல்லாம் பராமரிப்பிற்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவற்றில் ஒன்றும் திரும்பத் துவக்கப்படாவிடில் மே மாத ஆரம்பத்தில் டோமரி அணு உலையும் நிறுத்தப்படும்போது, ஜப்பான் அணு ஆற்றல் அற்ற நாடாகிவிடும்.[1] ஆனால் இந்த இழுபறியெல்லாம் வெறுமே அணு உலைகளின் மறுதுவக்கத்தைப் பற்றியது மட்டும் அல்ல, இவை ஜப்பானின் மொத்த ஆற்றல் உற்பத்தி அமைப்பின் எதிர்காலத்தைப் பற்றியது. இந்த இறுதிப் பகுதியில், மூன்று மையக் கொள்கைப் பிரச்சினைகளை ஆய்வுக் கோணத்தில் நோக்கி, சூழலியல் பார்வையில் நீடித்த ஜீவத்துடிப்புள்ள ஒரு சமுதாயத்தை உருவாக்கும் வகையில் ஜப்பான் எப்படி இப்பிரச்சினைகளை தீர்க்கலாம் என்பதைப் பற்றி ஆராயப் போகிறேன்.

அணு எரிபொருள் சுழற்சி -ஒரு மறுபரிசீலனை

ஃபுகுஷீமா பேரிடருக்குப் பின் ஜப்பானிய அரசாங்கம் தனது ஆற்றல் கொள்கையை மறுபரிசீலனை செய்யத் தொடங்கியது. அரசாங்கம், ஜப்பான் அணு ஆற்றலை நம்பி இருப்பதைக் குறைக்கவும் புதிப்பித்துக்கொள்ளும் தன்மை உள்ள ஆற்றல் வகைகளை மேம்படுத்தவும் திட்டமிடுவதற்காக ஆற்றல் மற்றும் சூழல் ஆணையத்தையும் (Energy and Environment Commission), இதுவரை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாத விபத்துகளால் ஏற்படும் நாசங்களையும் உள்ளடக்கினால் (மாறப்போகும்) அணு ஆற்றலின் உள்ளடக்க விலையை மறு கணக்கிடுவதற்காக ஒரு உள்ளடக்கவிலை மறுபரிசீலனை ஆணயத்தையும் ஏற்படுத்தியது.

ஆயினும் ஜப்பானிய அரசாங்கம் மிகக் கடினமான ஒரு பிரச்சினையை இன்னும் சமாளிக்கவில்லை: அது, அணு எரிபொருள் சுழற்சி பற்றியது. ஆரம்பத்திலிருந்தே ஜப்பானிய அரசாங்கம், ஏற்கனவே உபயோகித்த அணு எரிபொருளை மறுபடி பயன்படுத்தும் ஒரு அமைப்பை உருவாக்கத் திட்டமிட்டிருந்தது. இந்த மறுசுழற்சித் திட்டத்தை பின்வருமாறு சுருக்கிச் சொல்லலாம்: (1) சாதாரண நீர் அணு உலைகளை ((light water reactor) இயக்க யுரேனியத்தை உபயோகிப்பது (2) பயன்படுத்திய எரிபொருளை மறுவடிவமைப்பு முறைக்குட்படுத்தி ப்லூடோனியத்தை பிரித்தெடுப்பது (3) துரித ஈனுலைகளை (Fast breeder reactors) இயக்க ப்லுடோனியத்தை உபயோகிப்பது (4) ஏற்கனவே எரிந்த ப்லுடோனியத்திலிருந்து மேலும் ப்லுடோனியத்தைப் பிரித்தெடுத்து துரித ஈனுலைகளுக்கு எரிபொருளாய் உபயோகிப்பது. ஜப்பான் இயற்கை வளத்தில் குறைவாய் இருந்ததால் ஜப்பானிய அரசாங்கம் இத்தகைய மறுசுழற்சி செயல்முறையைப் பற்றிய கனவு கண்டது. கருத்தளவில் இந்த மறுசுழற்சி முறையில் ப்லுடோனியத்தை மீண்டும் மீண்டும் பிரித்து உபயோகித்து துரிதமாக ஈனும் அணுஉலைகளை இயக்கிக்கொண்டே இருக்கலாம். இன்னொரு காரணத்துக்காகவும் ஜப்பானுக்கு இந்த முறை தேவைப்பட்டது. சாதாரண நீர் அணு உலைகள் யுரேனியத்தை எரிபொருளாய் உபயோகிக்கையில், அவை ப்லுடோனியத்தை தயாரிக்கின்றன. – இதை உபயோகித்து அணுகுண்டைத் தயாரிக்கலாம். ஜப்பான் அணு சக்தி பயன்பாடு பரவாமை ஒப்பந்ததில் கையெழுத்திட்டிருப்பதால், அது ப்லுடோனியத்தை சமாதானக் காரணங்களுக்காக மட்டுமே உபயோகிக்கும் நிலையில் இருக்கிறது.

ஜப்பானின் ஆற்றல் கொள்கையின் எதிர்காலம் தற்போதுள்ள மறுசுழற்சித் திட்டம் என்னவாகிறது என்பதைப் பொறுத்து இருக்கிறது. நிஜத்தில், இந்த மறுசுழற்சித் திட்டம் மொத்தமாய் உடைந்த நிலையில் உள்ளது. துரித ஈனுலையான மோஞ்சு வேலை செய்யாமல் இருக்கிறது.[2] எரிபொருளை மறுசெய்முறைக்குட்படுத்தும் நிலையமும் உபயோகத்தில் இல்லை. உபயோகித்த எரிபொருளை சேமித்து வைக்க சரியான இடம் இல்லாததால், மின்சக்தி நிறுவனங்கள் அதை அணுசக்தி நிலையங்களின் உள்ளேயே சேமித்து வைத்திருக்கின்றன. காட்டாய் ஒரு ஹைட்ரஜென் வெடிப்பு ஃபுகுஷீமா டாயிசீயின் 3வது அணு உலையைத் தாக்கியபோது, அதன் உள்ளே சேமிக்கப்பட்டிருந்த முன்பே உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருள் எரிந்து பெரிய அளவில் கதிர்வீச்சை வெளிப்படுத்தியது. இருந்தும், ஜப்பானிய அரசாங்கம் மறுசுழற்சித் திட்டத்தைக் கைவிடத் தயாராய் இல்லை, ஏனெனில் அப்படிச் செய்தால் இதுவரை இந்த முயற்சிக்காக செலவழித்த ஒரு ட்ரில்லியன் யென்களுக்கு மேலான செலவு தண்டம் என்று பொருள்படும். உண்மையில், ஜப்பானிய அரசாங்கம் ஜப்பான் முழுவதிலும் உள்ள அணு உலைகளை மறுபடியும் துவக்கி, மறுசுழற்சித் திட்டத்தைத் தொடர்ந்து செயற்படுத்தத் திட்டமிட்டுள்ளது. இந்நிலையில்,மறுசுழற்சி நிலையம் பற்றிய முழு உண்மைகளையும் வெளியிட்டு, ஜப்பானியக் குடிமக்களை அணு மின்சாரத்தின் பொருளாதார நிலையேற்றுத்தன்மையை ஆதாரபூர்வமாய் விவாதங்களில் ஈடுபடுத்துவது ஜப்பானிய அரசாங்கத்தின் முக்கிய பொறுப்பாகும்.

புதிப்பித்துக்கொள்ளும் ஆற்றல் வகைகளுக்கு ஊக்கக் கட்டணம்

ஜப்பான் அணு ஆற்றலின் மேலுள்ள சார்பைக் குறைக்கும்வகையில் நகர்ந்துகொண்டிருக்கும் இந்த நேரத்தில், புதிப்பித்துக்கொள்ளும் ஆற்றல் வகைகளை ஆதரிப்பது தவிர்க்கமுடியாத ஒன்று. ஆயினும், மின்சக்தி நிறுவனங்கள் தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ள அணு உலைகளுக்கு ஈடாய் அதிக படிவ எரிபொருட்களையும் (fossil fuel), எரிவாயுவையும் பயன்படுத்துவதால் கார்பன் டை ஆக்சைட் வெளியீடு அதிகமாகி உள்ளது. அணு சக்தியை படிப்படியாய் கைவிடுவது மட்டுமே தன்னியக்கத்துடன் ஜப்பானை நீடித்துக் கிட்டும் ஆற்றல் உடைய சமுதாயமாய் மாற்றிவிடாது என்பதை இது காட்டுகிறது: அணுசக்தியைப் படிப்படியாய் கைவிடும் முயற்சி புதிப்பித்துக்கொள்ளும் வகை ஆற்றல்களை மேம்படுத்தும் முயற்சிகளுடன் இணைந்து செயல்படுத்தப்படவேண்டும். புதிப்பித்துக்கொள்ளும் வகை ஆற்றல்களை மேம்படுத்துவதில் ஊக்கக் கட்டணம் (Feed in Tariff-FIT). எனப்படும் மின்கட்டண அமைப்பு மிக முக்கியமானது. எளிமையாய் சொன்னால், FIT எனப்படும் கொள்கை முறையில் அரசாங்கம் புதிப்பித்துக்கொள்ளும் வகை மூலங்களின் வழியே உற்பத்திசெய்யப்பட்ட மின்சாரத்துக்கு ஒரு குறைந்தபட்ச கொள்முதல் விலைக்கு உறுதி அளிக்கும். மின்சார உற்பத்தியாளர்கள் புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றலுற்பத்தித் தொழில்நுட்பங்களை உபயோகித்து லாபம் அடையும் வகையில் இந்த குறைந்த பட்ச கொள்முதல் விலை நிர்ணயிக்கப்படுவதால், மின் உற்பத்தியாளர்களுக்கு புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றல் கூடங்களில் முதலீடு செய்து அவற்றை விரிவாக்க ஊக்கம் கிடைக்கிறது. இந்த வகை கட்டண அமைப்பு ஜெர்மனி, டென்மார்க் மற்றும் பல ஐரோப்பிய நாடுகளில் கடந்த பத்து ஆண்டுகளில் புதுப்பித்துக்கொள்ளூம் ஆற்றல்வகைகளின் பங்கை அதிகரிப்பதில் பலனளித்திருக்கிறது.

தற்சமயம், ஜப்பானிய அரசாங்கமும், அணு ஆற்றலைப் படிபடியாய் கைவிடக் கோரும் இயக்கமும், புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றல்வகைகளுக்கு இத்தகைய கட்டண அமைப்பை எப்படி செயல்படுத்துவது என்பதைப் பற்றி சண்டையிட்டுக் கொண்டிருக்கிறர்கள். ஆகஸ்ட் 2011ல், அணுசக்தி சார்பான அரசியல்வாதிகள் மற்றும் அரசு அதிகாரிகளின் ஆதிக்கம் அதிகம் உள்ள அரசாங்கம், மின்சார நிறுவனங்கள் அணு ஆற்றலைத் தொடர்ந்து பயன்படுத்த அனுமதிக்கும் வகையிலான ஒரு FIT கட்டண அமைப்பை உருவாக்கினர்.: இந்தப் புதுச் சட்டத்தின் ஒரு விதியில் மின்சார நிறுவனங்கள் ”நியாயமான காரணங்களுக்காக” புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றல் வகைகளை அவர்களது மின்தொகுப்புகளுடன் இணைப்பதை மறுக்க அதிகாரம் அளிக்கப் பட்டுள்ளது. (புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றல்வகைகளின் உற்பத்தி அளவு பருவநிலையைப் பொறுத்து வேறுபடுவதால் இது நிலையாய் மின்சாரத்தை வழங்குவதில் தடைகளை ஏற்படுத்தக்கூடும் என்ற காரணம் காட்டி மின் தொகுப்புகளின் உள்ளே செலுத்தப்படும் இத்தகைய ஆற்றல் வகைகளுக்கு மின்சார நிறுவனங்கள் ஒரு வரம்பு விதிப்பதும் இத்தகைய ”நியாயமான காரணங்களில்” ஒன்றாகும்) டெப்கோவும், ஒன்பது இதர மின்சார நிறுவனங்களும் ஜப்பான் முழுவதும் உள்ள மின் தொகுப்புகளுக்கு ஏகபோக உரிமையுடன் இருப்பதால், ஏதோ ஒரு “நியாயமான காரணத்தை”க் காட்டி புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றல்வகைகளை நசுக்க இந்த விதி அவர்களுக்கு ஒரு கருவியாக இருக்கக்கூடும். மேலும், புதிப்பித்துக்கொள்ளும் ஆற்றல் வகைகளுக்கான குறைந்தபட்ச கொள்முதல் விலையை நிர்ணயிக்க மெடி (METI) கொள்முதல் செலவுகளுக்கான மதிப்பாய்வு ஆணையத்தை (Procurement Costs Evaluation Commission) உருவாக்கியது. மெடி ஆரம்பத்தில் தேர்வு செய்த 5 ஆணையக்குழு உறுப்பினர்களில் 3 பேர் இதற்கு முன்பு FIT கட்டணமுறையை எதிர்த்தவர்கள். அணு ஆற்றலைப் படிப்படியாய் கைவிடக் கோரும் இயக்கம் தீவிரமாய் இத்தகைய பாரபட்சமான உறுப்பினர் தேர்வுக்கு எதிராய் ஆதரவு தேடியபின், உறுப்பினர் தேர்வு நிறுத்திவைக்கப்பட்டது. புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றல்வகைகளை விரிவுபடுத்த, குறைந்தபட்ச கொள்முதல் விலைகளை ஒழுங்கான முறையில் அமைப்பது மிக முக்கியமானது.

மின்சாரச் சந்தையை தாராளமயமாக்குதல்

ஜப்பான் புதிப்பித்துக்கொள்ளத்தக்க ஆற்றல் வகைகளை விரிவுபடுத்துவதில் வெற்றி பெறுமா என்ற கேள்வி மின்சாரச் சந்தையில் எப்படி சீர்திருத்தங்கள் கொண்டுவருவது என்ற பிரச்சினையோடு இடைவெட்டுகிறது. பத்து மின்சார நிறுவனங்களின் ஏகபோக உரிமை ஒத்துக்கொள்ளப்பட்ட ஒரு விஷயமாய் கருதப்படுவதால் தற்போதைய சட்டத்தில் பல பிரச்சினைகள் இருக்கின்றன. டெப்கோவைத் தவிர கிழக்கு ஜப்பானின் பெரும் தொழில்நிறுவனங்கள், அரசு அமைச்சகங்கள், முகமையகங்கள், நகராட்சிகள் போன்று பெரிய அளவில் மின்சாரம் நுகர்பவர்களுக்கு மின்சாரத்தை விற்க பிபிஎஸ் எனப்படும் மாற்று வழி மின் உற்பத்தியாளர் மற்றும் வழங்கல் நிறுவனங்களுக்கும் அதிகாரம் அளிக்கப்பட்டிருக்கிறது. இந்த வகையில் பெரிய அளவு நுகர்வாளர்களுக்கான மின்சார சந்தை பகுதியாய் தாராளமயமாக்கப்பட்டுள்ளது. (தனிநபர் நுகர்வாளர்களுக்கான மின்சார சந்தை டெப்கோவின் ஏகபோக உரிமையில் இருக்கிறது.) கிழக்கு ஜப்பானின் அனைத்து மின்தொகுப்புகளும் (power distribution grid) டெப்கோவுக்குச் சொந்தமாய் இருப்பதால் பிபிஎஸ் (PPS) நிறுவனங்கள் மின்தொகுப்புகளுடன் இணைக்க டெப்கோவுக்கு கட்டணம் செலுத்தவேண்டும். பிபிஎஸ்கள் வழங்கும் மின்சாரத்தின் விலை குறைவாய் இருப்பதால், பல பெரிய நுகர்வாளர்கள், மெடி உட்பட, டெப்கோவிடம் அல்லாமல் பிபிஎஸ்களிடம்தான் வாங்குகிறார்கள். எனினும் இந்த அனுகூலம் எப்போது வேண்டுமானாலும் இல்லாமல் போய்விடலாம். ஏனெனில் டெப்கோ எப்போது வேண்டுமானாலும் பிபிஎஸ்கள் மின் தொகுப்புகளில் இணைப்பதற்கான கட்டணத்தை உயர்த்தலாம்.

மின்தொகுப்புகளின் மீதுள்ள ஏகபோக உரிமையோடு இணைந்தது ஜப்பானிய அரசாங்கம் மின்சார நிறுவனங்களுக்கு அனுமதி அளித்திருக்கும் முழு அடக்கச் செலவு அடிப்படையில் விற்பனைக்கான விலையைத் தீர்மானிக்கும் (full cost pricing) முறை. இது மின்சாரம் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் தங்களின் நிலையான சொத்துக்களின் மதிப்பில் மூன்று சதவிகிதத்துக்கு இணையான தொகையை லாபமாக அடைய வழிசெய்கிறது. இத்தகைய விலை நிர்ணய முறையில் இரண்டு முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றன. முதலில், இந்த அமைப்பு மின் நிறுவனங்கள் தங்கள் இயங்குமுறைகளை நியாயப்படுத்தக் கட்டாயப்படுத்துவதில்லை, ஏனெனில் அவர்கள் எவ்வளவுதான் எரிபொருள், பணியாளர்கள், விளம்பரம் போன்றவற்றுக்காக செலவழித்தாலும் அவர்களின் லாபத்தொகை உறுதிப்பட்டு இருக்கிறது. உண்மையில் மின் நிறுவனங்களை மின்சார உற்பத்திக்காக அதிகம் செலவழிக்கத் தூண்டுவதாய் இந்த முறை இருக்கிறது. இரண்டாவதாய், இந்த விலை நிர்ணய முறை மின் நிறுவனங்களை தங்கள் நிலையான சொத்துக்களின் மதிப்பை அதிகரிப்பதற்காக அணு உலைகள் போன்ற செலவு அதிகமான. கூடங்களைக் கட்ட ஊக்கம் தருகிறது. (உபயோகப்படுத்தப்பட்ட எரிபொருளும் மொத்த நிலையான சொத்துக்களின் ஒரு பகுதியாய் கணக்கில் கொள்ளப்படுகிறது.) மின்சார நிறுவனங்கள் மின் உற்பத்திக்காக எத்தனை அதிகம் செலவழிக்கின்றனவோ அத்தனை லாபம் அவர்களுக்குக் கிடைக்கும்.

இங்கு சூழலின் நிலைத்தன்மை பற்றிய பிரச்சினை பொருளாதார ஒப்புரவு பற்றிய பிரச்சினையுடன் பிணைந்து கிடக்கிறது. மின் சக்தி நிறுவனங்கள் மின் தொகுப்புகளுக்கான எதேச்சாதிகார உரிமத்தையும் , முழு அடக்க விலை சார்ந்த விற்பனை விலையையும் தொடர்ந்து கைக்கொண்டிருந்தால் அணு உலைகளுக்கு பதிலாய் சாதாரணக் குடிமக்களைப் பற்றிக் கவலைப்படாமல் லாபம் ஈட்டுவதற்கு எளிதில் பிரம்மாண்டமான சூரிய ஒளி சார் மின்நிலையங்களையும், காற்றுப் பண்ணை சார் மின்நிலையங்களையும் இந்த நிறுவனங்களால் உருவாக்க முடியும். மேலும், புதிப்பித்துக்கொள்ளக்கூடிய வழி ஆற்றல் உற்பத்தி செய்வதன் சிறப்பு குணாம்சம் அது ஜனநாயக முறையில், சமுதாயம் சார்ந்த வகையில் அரசாங்கம் நடத்துவதற்கு உகந்தது என்பதே. இந்த வகை ஆற்றல் உற்பத்தியால் ஜப்பானிய மக்களுக்குக் கிடைக்கக்கூடிய ஆதாயங்களை பெரு நிறுவனங்களின் கூட்டமைப்பு கிடைக்காமலாக்கி விடும்.

நீடித்திருக்கக் கூடிய, உயிர்த் துடிப்புள்ள ஜனநாயக அமைப்பை நோக்கி

இருபதாம் நூற்றாண்டின் துவக்க ஆண்டுகளிலிருந்தே பெரிய மின்சார நிறுவனங்கள் ஆற்றல் உற்பத்திமீது மையக் கட்டுபாடு செலுத்த ஜப்பானின் அரசாங்கம் உதவியாய் இருந்திருக்கிறது.. காட்டாக, அணு ஆற்றலை ஊக்குவிக்க முயலும் அரசாங்கம், குறைந்துகொண்டிருக்கும் மக்கட்தொகையும், சரிந்துகொண்டிருக்கும் பொருளாதாரமும் உள்ள சிறிய கிராமப்புற நகராட்சிகளைக் குறி வைத்தது. அணு உலைகளின் கட்டுமானமும், இயக்கமும் வேலைவாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கும் என்பதால், இவை அவற்றை எதிர்க்க வாய்ப்பு குறைவு. அணு உலையால் ஏற்படும் பொதுத் தீமைக்கு ஈடாய் அரசாங்கம் இந்த நகராட்சிகளுக்கு பெரும் மானியங்களை வழங்கியது. இந்த மானியங்கள் நாளடைவில் குறைக்கப்படும் வகையில் வடிவமைக்கப் பட்டிருந்தன. நகரசபைகள் அரசாங்க மானியங்கள் மற்றும் அணு சக்தி சார்ந்த வேலைவாய்ப்புகளை சார்ந்து போனதும், மேலும் மேலும் அணு உலைகளுக்கு இடம் கொடுத்துக் கொண்டிருந்தன.. ஆறு அணு உலைகளை கொண்ட ஃபுகுஷீமா டாயிச்சி இதற்கான ஒரு எடுத்துக் காட்டு. தலைவர்களும், நகராட்சிகளின் குடிமக்களும் அணு ஆற்றலின் மூலம் கிடைத்த பணத்துக்கு அவ்வளவு பழகிப் போய் அவர்களால் வேறு வகைப் பிழைப்புகளைப் பற்றி யோசிக்க முடியவில்லை என்பதை இது காட்டுகிறது.

இருப்பினும் அணு சார்புக்காக உள்ளாட்சி நகராட்சிகளை மட்டும் குற்றம் சாட்டமுடியாது. உள்ளாட்சி நகரசபைகளின் அணு உலைகள் டோக்யோ ஒஸாகா போன்ற நகர்புற மையங்களூக்கு மின்சக்தி வழங்குவதில் முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன. நகர்ப்புற குடிமக்கள் அவர்களது மின்சாரம் எங்கிருந்து வருகிறது என்பதைப் பற்றி கேள்வி கேட்பது அரிது. உள்ளாட்சி நகரசபைகள் அவர்களுக்காக, தம் மக்களுக்குக் கேடானவற்றை ஏற்றுக்கொண்டிருப்பதைக் கூட அவர்கள் உணரவில்லை. சுருக்கமாய், மக்கள் அவர்களது சமூக வாழ்வின் அடிப்படைப் பரிமாணமான தற்போதைய ஆற்றல் உற்பத்தி முறையைப் பற்றி வினா எழுப்பவில்லை. (இத்தகைய நிலைமை – பொதுக்கேடான விஷயங்களை சிறிய இடங்களில் குவித்து அவற்றைப் பெரும்பான்மை மக்களின் கண்ணுக்குப் புலப்படாமல் செய்வது – ஜப்பானில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் விஷயத்திலும் காணப்படுகிறது. பெரும்பான்மையான ஜப்பானிய மக்கள் அமெரிக்கா ஜப்பான் இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தினால் பயனடைகிறார்கள் ஆனால் அவர்கள் ஒகினாவா மக்கள் சுமக்கும் அளவுகடந்த பொதுக்கேட்டைப் பற்றி நினைப்பதில்லை.)
எனினும், அணு உலைகளுக்கு இடம் கொடுத்துள்ள நகராட்சிகளில் மட்டுமல்லாது நகரங்களிலும் ஜப்பானின் ஆற்றல் அமைப்பைப் பற்றி விமர்சன பூர்வமாகச் சிந்திக்க ஃபுகுஷீமா பேரிடர் ஒரு வாய்ப்பை கொடுத்துள்ளது. ஃபுகுஷீமா மாவட்டம் அணுப் பேரிடருக்குப் பின், அணு ஆற்றலைப் படிப்படியாய் குறைத்து, புதுப்பித்துக்கொள்ளூம் ஆற்றல்களையும் தொழில்முறைகளையும் ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதாரத்தை மீண்டும் மேம்படுத்தும் திட்டங்களை மேற்கொள்ளப்போவதாய் அறிவித்துள்ளது. ஜப்பானின் மற்ற பகுதிகளில் உள்ள மக்களும் தாங்கள் அணு ஆற்றலை எந்த அளவு சார்ந்திருக்கிறோம் என்பதை உணர்ந்து அவர்களும் புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றல் வகைகளின் மேல் அக்கறை கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்.

புதுப்பித்துக்கொள்ளும் ஆற்றல் ஜப்பானியர்களை ஜனநாயக சமுதாயத்தில் சுறுசுறுப்பாக, திறனாய்வுடன் ஈடுபடும் அங்கத்தினர்களாகச் செய்யும் திறன் உள்ளது. புதிப்பித்துக்கொள்ளும் ஆற்றல் தொழில்வகைகள் சிறு தொழிலாக, பரவலாக்கிய நிர்வாகத்துடன் நடத்த உகந்தவை. அவற்றின் இந்த தன்மை உள்ளூர் வாசிகள் ஒவ்வொருவரும் கொஞ்சம் முதலீடு போட்டு, காற்று விசையாழி போன்றவற்றைப் பொருத்தி, அவற்றைக் கூட்டாய் நிர்வகித்து நடத்த அனுமதிக்கிறது. ஒவ்வொரு இடத்திலும் கிடைக்கும் ஆற்றலுக்கான வசதிகள் நிலவியலைப் பொருத்து வேறுபடும், சில இடங்களில் அதிக சூரிய ஒளி மூலம் ஆற்றல் பெற முடியும், சில இடங்களில் காற்றுவழி ஆற்றல் வாய்ப்புகள் அதிகமாய் இருக்கும். இது குடிமக்களைத் தாம் எந்த வகை ஆற்றல் தொழில்முறையை மேம்படுத்தவேண்டும் , எப்படி என்பதைப்பற்றி எல்லாம் கூட்டாக யோசிக்க ஊக்குவிக்கிறது. சுருக்கமாய் சொன்னால், புதிப்பித்துக்கொள்ளும் ஆற்றல் வகைகள் ஆற்றல் நிர்வாகத்தை அதிக ஜனநாயகமுறையிலும் சம்பந்தப்பட்டவர்களாலும் நடத்த வைக்க முடியும்.

ஜப்பானியக் குடிமக்களால் புதுப்பிக்க முடியும் ஆற்றலையும் ஜனநாயகத்தையும் முன்னேற்ற முடியவேண்டுமானால், அவர்கள் குறைந்தது மூன்று மாறுதல்களைச் சாதித்தாக வேண்டும். முதலாவது, ஜப்பானிய ஊடகங்கள் சுதந்திரமாய் செயல்பட்டு அரசாங்கத்தையும், மின்சக்தி நிறுவனங்களையும் திறனாய்வுடன் அலச வேண்டும். ஃபுகுஷீமா பேரிடருக்குப் பின்னான முதல் சில மாதங்களை விட மைய ஊடகங்கள் அரசாங்கத்தையும் டெப்கோவையும் பற்றி அதிக விமரிசன நோக்குடன் தற்போது செய்தி வெளியிடுகிறார்கள் என்பது நிச்சயம். காட்டாக, பிரதமர் யோஷிஷ்கோ நோடாவுக்கும், அணுப் பாதுகாப்பு ஆணைக்குழுவின் தலைவர் ஹருகி மடாரமிக்கும் அணு உலைகளின் மறுதுவக்கத்துக்குத் தேவையான முன்னேற்பாடுகளைப் பற்றி கருத்துவேறுபாடு இருந்த பொழுது, மடாரமி முதல் சுற்று அழுத்தப் பரிசோதனைகள் பாதுகாப்பான மறுதுவக்கத்துக்கு உறுதியளிக்கப் போதுமானவை அல்ல என்று கூறி இன்னும் முழுமையான மதிப்பீட்டைக் கோரினார். ஃபுகுஷீமா பேரிடரைப் பற்றிய இறுதி அறிக்கையை சார்பற்ற விசாரணை ஆணைக்குழு (Independent Investigation Commission) சமர்ப்பிக்கும் வரை மறுதுவக்கம் காத்திருக்கவேண்டும் என்று சில மாவட்டங்களின் ஆளுனர்களும் வாதிட்டுள்ளனர். [3] எனினும் நோடாவின் அரசு அணு ஆலைகளுக்கு இடம் கொடுத்துள்ள உள்ளாட்சி நகரசபைகள் ஒப்புதல் அளித்தால் முதல் சுற்று அழுத்தப் பரிசோதனைகளுக்குப் பின்பே அணு உலைகளை மீண்டும் துவக்க முடிவு செய்தது. இம்முறை, மைய ஊடகங்கள் இக்கருத்து வேறுபாடுகளை வெளியிட்டு, அரசாங்கம் தான் திட்டமிட்டுள்ள செயலுக்கு போதுமான நியாயங்களைக் கொடுத்துள்ளதா என்று கேட்டன. இத்தகைய விமரிசன அலசல்கள் ஃபுகுஷீமா மற்றும் அணுசக்தி தொடர்பான பல்வகையான பிரச்சினைகளைப் பற்றியும் ஊக்குவிக்கப்படவேண்டும்.

இரண்டாவதாய், ஒரு பிரச்சினை பல கோணங்களிலிருந்து முனைப்போடு விவாதிக்கப்படவேண்டுமானால் ஜப்பானிய அரசாங்கம் தனது கொள்கை வகுக்கும் அமைப்புகளை, உறுப்பினர் தேர்வு உட்பட, சீர்திருத்தவேண்டும். தற்சமயம் அணு ஆற்றலைப் பற்றி கேள்வி எழுப்புபவர்கள் ஆற்றல் தொடர்பான ஆணையக் குழுக்களிலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள் அல்லது குழுக்களின் உள்ளேயே ஓரங்கட்டப்படுகிறார்கள். மேலும் ஆணையக் குழுக்களின் மூலம் கொள்கைகளை வடிவமைக்கும் முறை அதன் தன்மையினாலேயே நிபுணர்கள் அல்லாத சாதாரண குடிமக்கள் போன்ற பல பங்குதாரர்களை கொள்கை வடிவமைப்பிலிருந்து விலக்கி வைக்கிறது.. மேலும் பல பங்குதாரர்களையும் பலவித கோணங்களையும் உள்ளடக்குவதன் மூலம் பிரச்சினைகள் பற்றிய ஒரு விவாதம் செயல்விளக்கத்துடன் இன்னும் பலனளிக்கும் கொள்கைகளை நோக்கி செல்லக்கூடும்.

பல கோணங்களுக்கும் பங்குதாரர்களிடையே விவாதங்களுக்கும் இடம் கொடுக்கும் கொள்கை வகுக்கும் முறையுடன், மாவட்ட,உள்ளூர் நகராட்சி அரசாங்கங்கள் தங்களுடைய கொள்கைகளை தாமே முடிவு செய்யும் திறமையை வளர்த்துக்கொள்ள வேண்டும். மாவட்ட,உள்ளூர் நராட்சி அரசாங்கங்களுக்கு மத்திய அரசைச் சாராமால் சுயேச்சையாய் கொள்கைகளை அமைக்க அதிக அதிகாரங்களைக் கொடுப்பதற்கான சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கும் போதிலும், டோக்யோ, ஒஸாகா போன்ற பெரிய மாவட்டங்களைத் தவிர இதர மாவட்ட, நகராட்சி அரசாங்கங்களிடம் அவர்களுக்குப் புதிதாய் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களை உபயோகித்துப் பயனடையும் வகையில் போதுமான திறமையான பணியாளர்கள் இல்லை.. இதன் விளைவாய் மாவட்ட, நகராட்சி அரசாங்கங்கள் இன்னும் மத்திய அரசோடு ஒட்டி இருக்கின்றன. புதிப்பித்துக்கொள்ளக்கூடிய ஆற்றல் வகைகள் உள்ளூர் அளவில் ஆற்றல் நிர்வாகத்தை செழுமையாக்க, மாவட்ட, உள்ளூர் நகராட்சி அரசாங்கங்கள் தங்கள் பணியாளர்களுக்குச் சிறப்பாய் தேர்ச்சி அளித்து அவர்கள் உள்ளூர் குடிமக்களுக்கு பலனுடன் பணிபுரியும் வகையில் மாற்ற வேண்டும்.

கடைசியாய், இதுவும் முக்கியம், குடிமக்கள் சமூகத்தை விமரிசன நோக்கில் ஆராய்ந்து, வேறு பட்ட கருத்துக்களை அலசி சமூகப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளைக் கண்டறிய குடிமக்களுக்கு உதவும் வகையில் ஜப்பானியக் கல்விமுறை மேம்படுத்தப்படவேண்டும். ஜப்பானிய மக்களிடையே பகுத்து ஆராயும் திறனையும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையான சிந்தனையையும் மேம்படுத்துவது என்பதில்தான் சூட்சுமம் உள்ளது. இது, மைய ஊடகங்களை மேலும் விமரிசனப்பாங்கோடு செயல்பட ஊக்குவிக்கும்; கொள்கைகள் வகுக்கும் முறையில் பங்குதாரர்களிடையே மேலான உரையாடல்களின் அவசியத்தை நிலை நாட்டும். உள்ளாட்சித் தளத்தில் கொள்கை அமைப்பாளர்களும், குடிமக்களும் மேலும் அதிகாரம் பெற்று, புதுப்பித்துக்கொள்ளக்கூடிய ஆற்றல் வகைகளின் அனுகூலங்களை நன்கு பயன்படுத்திக் கொண்டு, உள்ளாட்சியில் நீடித்திருக்கக் கூடிய, ஜனநாயக சமுதாயத்தை உருவாக்க உதவும்.

கல்விமுறை சீர்திருத்தத்தில் அதிகம் கூர்ந்து கவனிக்க வேண்டிய துறை சூழல் மற்றும் ஆற்றல் பற்றிய கல்வி என்பது தெளிவு. தற்சமயம் சூழல் மற்றும் ஆற்றல் பற்றிய கல்வி விஞ்ஞானம் அல்லது அறநெறிக்கல்வியைப் போல பயிற்றுவிக்கப்படுகிறது. விஞ்ஞானமாய் பயிற்றுவிக்கையில், மாணவர்கள் மின்சாரம் உருவாகக் காரணமான தட்பவெப்ப நிலை மாற்றங்களின் இயற்பியல் இயக்கங்களைப் பற்றி அறிந்து கொள்கிறார்கள். அறநெறிக் கல்வியாய் பயிற்றுவிக்கப்படுகையில், மாணவர்கள் ”எதிர்காலத் தலைமுறையினருக்காக இயற்கையைப் பேண வேண்டுவது முக்கியமானது”, “ஆற்றலை சேமிப்பது முக்கியம்” போன்ற சுற்றுச்சூழல் சார்ந்த விழுமியங்களை உள்வாங்கக் கோரப்படுகிறர்கள். இவ்விரண்டிலுமே, சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகளுக்குக் காரணமாய் இருந்து குறிப்பிட்ட வகை ஆற்றல் வகை அமைப்புகளை உருவாக்கும் அரசியல் மற்றும் பொருளாதார இயக்கமுறைகளை ஆராய மாணவர்கள் கற்பதில்லை. ஃபூகுஷீமா பேரிடரும் அதன் பின்விளைவுகளும், சுற்றுச்சூழல் மற்றும் ஆற்றல் தொடர்பான வினாக்கள் அடிப்படையில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தோன்றியவை என்பதைத் தீர்மானமாய் காட்டியுள்ளன. வேறு வகையாய் சொன்னால், புதிப்பித்துக்கொள்ளும் ஆற்றல் வகைகளும், சுற்றுச் சூழல் பற்றிய விழுமியங்களைக் கற்பதும் மட்டுமே ஒரு நீடித்த, துடிப்பான ஜனநாயகத்தை உருவாக்க ஜப்பானிய மக்களுக்கு உதவி செய்யாது.. அவர்களுக்குத் தேவையானது ஜப்பானிய அரசியலையும், பொருளாதாரத்தையும் புதிதாய் கற்பனை செய்து அவற்றை அடையப் புதுப் பாதையில் செல்லும் கொள்கைகளை வடிவமைக்கும் திறன். இத்தகைய சமுதாய மாற்றத்துக்கு ஜப்பானிய மக்கள் அவர்களது கல்வித் திட்டத்தில் மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும்.

கடந்த சில மாதங்களில் நான் கூடங்குளம் அணு மின் நிலையத்தைச் சூழ்ந்த நிலமையைப் பார்த்து வருகிறேன். ஒரு அணு விபத்து விளைவிக்கக் கூடிய பிரச்சினைகளையும், சூழலியல் தொடர்பாய் நிலையான சமூகத்தையும், துடிப்புள்ள ஜனநாயகத்தையும் உருவாக்க மக்கள் விரும்பும்போது அவர்கள் அரசியல் மற்றும் அமைப்புமுறை இவற்றிலிருந்து எதிர்நோக்க வேண்டிய தடைகளையும் ஃபூகுஷீமா பேரிடரைப் பற்றிய எனது அறிக்கைகள் தமிழ்நாட்டின் மக்களுக்குத் தெரிவித்திருக்கும் என நம்புகிறென்.

ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் ஜப்பான் அமைப்பில் ஆர்வலனாய் பணி செய்தது எனக்கு ஒரு பெரும் கற்றல் அனுபவம். சமூகவியலாளன் என்ற முறையில் நான் பெரிதும் வளர்ச்சியடைய அது எனக்கு உதவியிருக்கிறது. சொல்வனத்துக்கு விசேஷ அறிக்கைகளைப் பங்களிப்பதும் எனக்கு மகிழ்ச்சி அளிப்பதாய் இருந்துள்ளது. இந்த இதழுக்காக எழுதுவது கல்வியுலகம் என்னும் தந்தகோபுரத்துக்கு வெளியேயுள்ள பொதுமக்களிடம் கருத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடுவதின் முக்கியத்தை எனக்குப் புரியவைத்துள்ளது.

நன்றி

(முற்றும்)

குறிப்புகள்

[1] ஜப்பானின் கடைசி அணு உலை மே 8,2012 அன்று நிறுத்தப்பட்டது. 1970லிருந்து இந்த நாள் வரை ஜப்பானில் அணுசக்தி இல்லாத நாளே இருந்ததில்லை. இந்த வருடம்தான் முதல் தடவையாக ஜப்பானின் 54 அணு உலைகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ஜப்பானின் மொத்த ஆற்றல் தேவையில் 30% அணு உலைகள் மூலம் தயாராவது என்பதால் இத்தனை உலைகள் மூடப்பட்டமை ஜப்பானில் பெரும் ஆற்றல் பற்றாக்குறையைக் கொணரும் என்று செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பார்க்க:

http://www.shimbun.denki.or.jp/en/news/20120508_01.html

http://www.yomiuri.co.jp/dy/national/T120510006329.htm

இந்தக் கட்டுரைத் தொடரில் முந்தைய பகுதிகளில் ஏற்கனவே பார்த்திருக்கிறோம்- ஜப்பானிய அரசும், ஊடகங்களும், ஆற்றல் உற்பத்தி நிறுவனங்களும் செய்திகளை அணுசக்தி சார்பாகவே வெளியிட முற்படுகின்றன என்று. எனவே இந்தச் செய்திகளில் காட்டப்படும் பற்றாக் குறை எத்தனை நம்பகமானது என்பது ஐயத்துக்குரியது. இருப்பினும் இந்தக் கோடையில் வெப்பம் எத்தனையாக இருக்கிறது என்பதும், மக்களுக்கு அளிக்கப்படும் மின் சக்தி எத்தனை போதாமையோடு இருக்கிறது என்பதும் அடுத்த கட்டத்தில் ஜப்பானிய மக்களும் அரசாங்கமும் பெரும் அணுசக்தி நிறுவனங்களின் மிரட்டல்களை எப்படி எதிர்கொள்ளப் போகின்றனர் என்பதை நிச்சயம் பாதிக்கும்.

[2] ‘மோஞ்சு’ என்பது ஒரு துரித ஈனுலைக்குப் பெயர். மோஞ்சு என்றால் புத்தரின் போதனைகள் அல்லது பௌத்த விதிகளின் மனித உரு. புத்தரின் அவதாரமாகிய போதிசத்துவர்களில் மோஞ்சு என்பது ஞானத்தைக் குறிக்கும் அவதாரம். (மேலும் விவரங்களுக்கு: http://www.onmarkproductions.com/html/monju.shtml) பௌத்தம் அமைதியை முன்வைக்கிறது என்பதாக ஒரு நம்பிக்கை பரவலாக உள்ளது. துரித ஈனுலைகளின் ஒரு தனிச்சிறப்பு அதில் பயன்படுத்தப்படும் ப்ளூடோனியத்தை விட எஞ்சும் ப்ளூடோனியம் அதிகமாக இருக்கும். இதனால் மறுபடி மறுபடி ப்ளூடோனியத்தைப் பயன்படுத்த முடியும் என்று தெரிகிறது. இந்தப் ப்ளூடோனியம் அணுகுண்டு தயாரிப்புக்குப் பயன்படுத்தப்படுவது சாத்தியம் என்றாலும் அணுகுண்டு அல்லது அணு ஆயுதங்களுக்குக் கடும் எதிர்ப்பு உள்ள ஜப்பானில் இந்த உலைக்குப் பெயரே புத்த அவதாரங்களில் ஒன்றான மோஞ்சுவின் பெயரை வைப்பதன் மூலம் இந்த உலை போருக்குப் பயன்படுத்தப்படாது என்று மக்களுக்கு நம்பிக்கை தருவதாக ஜப்பானிய அரசு நினைத்திருக்கலாம். போர் இல்லாமலும் அழிப்பு நேரும் என்பதைச் சமீபத்தில் அனுபவமாக அறிந்த ஜப்பானிய மக்கள் மோஞ்சு மறுபடி செயல்படத் துவங்குவதை விட மூடப்படுவதே மேல் என்று நினைக்கலாம். இந்த மோஞ்சு ஏற்கனவே 14 வருடங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. 2010 ஆகஸ்டு மாதத்தில் எரிபொருளை உலையில் சேர்க்கப் பயன்படும் ஒரு பெரும் எந்திரம், 3.3 டன் எடையுள்ளது, கொதிகலனுக்குள் விழுந்து விட்டபிறகு அதை வெளியில் எடுக்க முடியாமல் சிக்கிக் கொண்டிருந்தது. 2011ஆம் வருடம் ஜூன் மாதத்தில் சிக்கிய இந்தப் பெரும் எந்திரத்தை எடுக்கத் திட்டம் இருந்தது.

http://www.nuc.berkeley.edu/node/4160

அதன்பிறகு கொதிகலன் சேதமாகாமல் இருக்கிறதா என்று சோதித்துப் பார்க்க வேண்டி இருக்கும். ஏற்கனவே அரை பிலியன் டாலர்கள் போல ஜப்பான் இந்த அணு உலைக்காகச் செலவிட்டிருக்கிறது. இந்த உலையால் ஜப்பானுக்கு நஷடம் கூடிக் கொண்டே போகிறது, ஒரு பயனும் இல்லை என்பதால் அறிவியலாளர்களின் குழு ஒன்று இந்த உலையை மூடச் சொல்லி அறிவுறுத்தியிருப்பதாகத் தெரிகிறது. விவரங்களுக்குப் பார்க்க:

http://news.sciencemag.org/scienceinsider/2011/11/iter-and-monju-on-the-chopping.html

[3] இந்த தொலைக்காட்சி விடியோவில், உள்நாட்டு அரசாங்கங்களின் கண்ணோட்டத்தையும் சேர்த்துப் பார்த்தால், ஜப்பானில் அணுசக்தி குறித்த மக்களின், பல மாநில அரசுகளின் நிலை என்னவாக இருக்கிறது என்பது புலப்படும்- http://www.youtube.com/watch?feature=player_embedded&v=Yv9m6U4VM9Y