‘சாதாரண மனிதன்’ – நூல் வெளியீடு

சென்ற வாரம் மே முதல் தேதி மணிக்கொடி எழுத்தாளர் காலம்சென்ற திரு சிட்டி அவர்களின் வாழ்க்கை வரலாற்று நூலின் ஆங்கில வடிவம் வெளியிடப்பட்டது. திரு நரசய்யா அவர்கள் தமிழில் எழுதிய சாதாரண மனிதன் என்ற நூலை சிட்டியின் மூத்த மகன் விஸ்வேஸ்வரன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்திருக்கிறார்.

சிட்டியின் பேத்திகள் ஜானகி – சுபாஷிணி ஆகியோரின் இறை வணக்கத்துடன் கூட்டம் தொடங்கியது.

நூலை முன்னாள் டி.ஜி.பி. திரு ராமகிருஷ்ணன் வெளியிட முதல் பிரதியை தஞ்சாவூர் பல்கலைத் துணை வேந்தர் திரு. ராஜேந்திரன் பெற்றுக்கொண்டார். திரு. ராமகிருஷ்ணன் பேசுகையில் சில ஆண்டுகளுக்கு முன் தமிழ் நூலையும் தானே வெளியிட்ட அனுபவத்தை நினவு கூர்ந்தார். ஆங்கில வடிவத்தையும் வெளியிட வாய்ப்பு கிடைத்ததற்கு தாம் மகிழ்ச்சி அடைவதாகத் தெரிவித்தார். திரு ராஜேந்திரன் அவர்கள் சிட்டியுடன் தாம் பழகிய அனுபவங்களை நெகிழ்வுடன் விவரித்தார். சிட்டியின் நகைச்சுவை பற்றிப் பேசிய திருப்பூர் கிருஷ்ணன் சிட்டியின் புதல்வர்களை சி(ட்)டிசன்ஸ் என்று குறிப்பிட்டு கலகலப்பூட்டினார். பதிப்பாளர் பத்ரி சேஷாத்ரி அவர்கள் இலக்கிய உலகில் தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் புலமை கொண்ட மொழி பெயர்ப்பாளர்கள் அதிகமாக இல்லாதது பற்றி ஆதங்கப்பட்டார். நரசய்யா அவர்கள் தான் தமிழில் சிட்டியின் வரலாற்றை எழுதியது பற்றி மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.

உரையாற்றிய அனைவரும் சிட்டியின் ஆளுமையையும் விரிவான புலமையையும் வியப்புடன் எடுத்து உரைத்தனர். விடுதலைப் போராட்ட வீரர் மேயர் சத்தியமூர்த்தியின் பேரன் சீனிவாசமூர்த்தி நிகழ்ச்சியை அற்புதமாக தொகுத்து வழங்கினார்.

சிட்டியின் புதல்வர்கள் மொழிபெயர்ப்பாளர் விஸ்வேஸ்வரனின் ஏற்புரையையும் வேணுகோபலனின் நன்றியுரையையும் தொடர்ந்து நிகழ்ச்சி இனிதே நிறைவடைந்தது.