கவிதைகள்

காத்திருந்து காத்திருந்து

இன்னும்
அவன் வரவில்லை.

ஒரு விநாடிக்குள்
யுகங்கள் கடக்கும்.

கடலலைகள்
மனசில் புரளும்.

வாசலைத் திறக்க
ஆகாயவெளிக் கடலில்
கால உப்பு
கரைந்து கிடக்கும்.

இன்னும்
அவன் வரவில்லை

செல்லும்
ஒவ்வொரு விநாடியும்
செல்லாது நெருக்கடிக்கும்.

சதா நினைப்பு வலைகள்
சூழ்ந்து விலகும்.

மனக் குளிரிரவில்
மாயா சந்தேகங்கள் மின்னும்.
வருவானா?

இன்னும்
அவன் வரவில்லை.

இருள்
இடிந்து விழுந்திருக்கும்
அகால வேளை.

ஒரு காகமும்
’விசுக்’கென்று
‘காத்திருக்கும்’ மரத்தில்
வந்தடையும்.

இன்னும்
அவன் மட்டும் வரவில்லை.

கு.அழகர்சாமி

-o00o-

அவன் பார்க்கக் கூடாத கதவு

திறக்கப்போவதில்லை
என்ற தெளிவின்றிப்
பூட்டப்பட்ட கதவு அது.

யாரேனும்
முன் வந்தால் –
திறக்கத் தோதாக
நிலையின்மேல் சாவி கூட
இருக்கிறது.

இந்த வளைவுகளையும்
கொண்டிகளையும்
செதுக்கி கோர்த்தவனுக்குத்
தெரியாது,
உரிமையாளனின்
ஆன்மாவை -அதில்
தொங்கவிடப் போவது…

அந்த வளையம் ,
அழுத்தமாகத் தாழிடத்
தோதாக -தன்னை
இழுத்துப் பிடித்துக்கொள்ளும்
விரல்களின்
ஸ்பரிசத்துக்காகவே
காற்றில் அசைந்து அசைந்து
முனகுகிறது.

வீடுமறந்து
அயல்மண்ணில் நிலைகொள்ள
முயலும்
தோழன் கண்ணில்
படாதிருக்கட்டும்
இந்தக் கதவின் படமும்
என் வரிகளும்…..

உமா மோகன்

-o00o-

உலர்ந்த மலர்

மூன்று சுவர்களும்
முறைத்துப் பார்க்கின்றன.

மூலையில்
அமர்ந்திருக்கும் நாற்காலியின்மீது
எவருமில்லை.

சாத்திய கதவுக்கு வெளியே
காத்துக் கிடக்கின்றன
காலணிகள்.

குப்பைத் தொட்டிக்குள்
தீர்ந்து போன நேற்றுகள்.

மேலே
ஓயாமல் அரற்றியபடி சுழல்கிறது
ஓர் அரதப்பழைய மின்விசிறி.

பற்றிய கயிற்றின் மேல்
ஆடும் உடுப்புகள்.

தரை மீது
தேங்கி நிற்கிறது
ஈரத்துணி சொட்டிய தண்ணீர்.
அதிலாடுகிறது
இன்றுலர்ந்த ஒருமலர்.

எம்.ராஜா