பூண்டு – ஒரு கவிதை

சொல்ஜாலம் அதிகம் இல்லாமல், சொல்லால் மனிதர் எப்படி விடுவிக்கப்பட முடியும், எதார்த்தம் சூழலில் எத்தனை கடுமையாக இருந்தாலும் ஒரு சொல் ஜாலம் ஏதோ செய்து விடுவிப்பைக் கண நேரமாவது கொணரும் என்று சொல்லும் கவிதை.

இக்கவிதையை எழுதியவ்ர் ஒரு பஞ்சாபி. அதை வாசிப்பவர் ஓவியம்/ கலை ஆகியவற்றைப் பற்றி அதிகம் எழுதி, பேசிப் பிரபலமான ஒரு புனைகதை எழுத்தாளர் ஜான் பெர்ஜர். கவிதை, வார்த்தைகள் மற்றும் மொழியைப் பற்றியது. ஆனால் பணம்/மூலதனம்/பேராசை ஆகியவற்றைச் சாடுகிறது.

பெர்ஜர் ஒரு இடதுசாரி. அவரோ இந்த ஊடகங்கள், புனைகதை ஆகியவற்றை நம்பிப் பிழைப்பவர். அதாவது எந்த மூலதனம், முதலியம் ஆகியவற்றைச் சாடுகிறாரோ, அவை இல்லாமல் இந்த மாதிரி கவிதைகளைப் பற்றிப் பேசி காத்திரமான/ஆழமான ஏதோ ஒன்றை சொல்லி விட்டதாகத் தோற்றம் அளிக்க அவரால் முடியாது. எந்த மாற்று சமூக அமைப்பிலும் இந்த வசதி அவருக்குக் கிட்டி இருக்க வாய்ப்பில்லை. ஆனால், இல்லாத ஒன்றைப் பற்றிக் கனவு காணவும், அதையே மக்கள் முன் ஆழ்ந்த சிந்தனை போலக் காட்டுவதும் ஒரு கதாசிரிய/கவிஞ/எழுத்தாளனின் உரிமை/ வேலை இல்லை என்றால் வேறென்னதான் செய்யப் போகிறார் அவர்? களைக் கொத்தை எடுத்து கழனியைத் திருத்தப் போகிறாரா? பயிரையும் பூண்டையும் ஒரே நேரம் நாசம் செய்து சாப்பாட்டுக்கு வழி இல்லாமல் செய்து தொலைப்பார். தோட்ட வேலை செய்யத் தெரிந்த எழுத்தாளர்கள் மிகக் குறைவு.