ஜிப் லாக்கில் அரை நாள்

சில வருடங்கள் முன்பு வரை என்னை தட்ப வெப்பம் மாறும் காலங்களான வசந்தம், கோடை  இத்தியாதி எல்லாம் ஒன்றும் செய்யாது. சென்ற இரு வருடங்களாக சென்னை வந்தால், (ஜூன் – ஆகஸ்டு இடைவெளியில்), ஒரு தடவையாவது ஜலதோஷம், ஜுரம் வருகிறது. சமீப காலங்களாக பருவகாலங்கள் மாறுகையில், குறிப்பாக குளிர்காலம் வந்தவுடன் மூக்கில் உட்புறம் உலர்ந்து விடுகிறது.. அதனால் அவ்வப்போது தும்மல் வருகிறது. சில நேரம் கைக்குட்டையில் சிறிது ரத்தக் கறை கூட தெரிகிறது.

ஏழெட்டு ஆண்டு முன்பெல்லாம் குளிர்காலம் நீங்கி வசந்தம் வருவது தெளிவாகத் தெரியும்.  ஒரு பத்து நாட்கள் தோட்டம், தெருக்கள், சூழலில் இருக்கும் பல தோப்புகளில் எங்கும் பூத்துக் குலுங்கும்.  இலைகள் மறுபடி பெருமளவில் தோன்றுமுன்பு செடி, மரங்களை மறைத்துப் பூக்களே தெரியும். இந்த வருடம் அப்படி ஒரு தெளிவான வசந்தக் கடப்பு இல்லை. குளிரே சென்ற வாரம் வரை நீங்கவில்லை.  குளிர் போன நாட்களில் மழை அல்லது மூட்டமான வானம். கடந்த சில நாட்களாக குளிர் போய், வானமும் கொஞ்சம் தெளிந்திருந்தது. இந்த ஞாயிறன்று காலையிலிருந்து மிதமான வெய்யில் அடித்து வெளி ஒளிர்ந்தது.

அதனால், இன்று தோட்ட வேலை நாள். நான் ஒரு சிற்றூரில் சிறுவனாக இருக்கையில் இருந்த நாட்களில், இலை, தழை, புல், மாட்டுச் சாணம், வைக்கோல் கழிவு, வீட்டுக் காய்கறிக் கழிவு, குப்பை -அப்போது ப்ளாஸ்டிக் பையெல்லாம் இல்லை- என்று எல்லாவற்றையும் வீட்டுப் பின் மதில் அருகே உள்ள பெரிய குழியில் போட்டு வைப்போம். உரக்குழி என்று நம் ஊரில் சொல்வார்கள். வருடத்துக்கொரு தடவை அல்லது இரண்டு வருடத்துக்கொரு தடவை குடியானவர்கள் அதை வெட்டி வண்டியிலேற்றி எடுத்துப் போவார்கள். அது வயலுக்கு உரம். அப்போது எனக்கு அதன் மகத்துவம் தெரியவில்லை.

வீட்டில் உள்ளவர்கள் அதை மதித்தார்கள், ஆனால் அதன் அற்புதத்தைச் சொல்லித் தரவில்லை.  அந்தக் குப்பையை அற்புதமாக்கும் மண்புழுவைத் தெய்வம் போல மதிக்கவேண்டும் என்பது தெரியவில்லை. அதை உபாதை செய்யக் கூடாது என்று பெரியவர்கள் அடித்துச் சொல்லிக் கொடுப்பார்கள். எந்தப் பூச்சியையும் கொல்லக் கூடாது என்பதும் வீட்டில் சொல்லித் தருவார்கள். நட்டுவாக்கிளியும் தேளும், பூரான்களும் மட்டும் விதிவிலக்கு. வீடுகளில் அவை நுழையக் கூடாது. மற்றபடி பாச்சைகள், எறும்புகள், ஈக்கள், பலவிதமான தோட்டத்துப் பூச்சிகள் வீடுகளில் உலவும். அவற்றுக்கென பல்லிகள் வீடெங்கும் உலா வரும். சமையல் உள்ளில் மட்டும் அவற்றை உலாவ விடுவதில்லை. சாமி உள் எனப்படும் பூஜை உள்ளில் பல்லிகளுக்கு பூரண சுதந்திரம். அங்கு கரப்புகள் அவ்வப்போது நடமாடும் என்பதால் இருக்கலாம்.

நம் ஊர் சாமிகளுக்கும் கரப்புகளுக்கும் ஏதோ கரிசனம் கலந்த உறவு. இருவரும் அனேகமாக இருட்டு அறைகளில் இருப்பதால் இப்படி சொந்தம் ஏற்பட்டதோ என்னவோ. இருவரிடமும் மனிதருக்குக் கொஞ்சம் பயமும் உண்டு என்பதும் இருக்கவே இருக்கிறது. அணு குண்டும் அழிக்க முடியாத சக்திகள் எனச் சொல்லப்படுகிற பொதுக் குணமும் கருதப்பட வேண்டியது.

இங்கு (அமெரிக்கா) இரண்டு வருடமாக வீட்டுத் தோட்டத்தின் கடைசியில் உரக்குழி துவங்கி இருக்கிறோம். அதைக் குழியாகத் தோண்டிச் செய்யவில்லை. அப்படியே வேலி கட்டி வேலிக்குள் உரக் குவியல். தோட்டப் புல் வெட்டி அங்கு கொட்டுவோம். அன்றாட காய்கறிக் கழிவுகள், பழத் தோல், சில சமயம் ரொட்டித் துண்டுகள், கொஞ்சம் செய்தித்தாள் குப்பைகள் (மண் புழுக்களுக்கு இவை ரொம்பப் பிடிக்குமாம், அரசியலா, ஸ்போர்ட்ஸா, காமிக்ஸா எந்தப் பக்கங்கள் பிடிக்கும் என்று கேட்க வேண்டும். ரொட்டித் துண்டு ஒன்றைக் கடித்தபடி காமிக்ஸ் பக்கத்தைப் படிக்கும் எறும்பு ஒன்றைக் கற்பனை செய்தால் நன்றாகத்தான் இருக்கிறது. இப்போதைக்கு ஜன்னல், கதவுக் கண்ணாடியை எல்லாம் துடைத்த பக்கங்கள் அங்கு போகின்றன) அப்புறம், காஃபி, டீத்தூள் கழிவுகள். தோட்டத்தில் இலையுதிர் காலத்தே உதிரும் பெரும் குப்பையான உலர்ந்த இலைகளில் ஒரு பகுதியை மட்டுமே இங்கு போடுகிறோம். ஏனெனில் அவை ஒரு சிறு குன்றளவு சேர்ந்து விடும். மரக்குச்சிகள், கிளைகளைப் போடுவதில்லை. உலர்ந்த மரம் கரையான்களை ஈர்க்கும் என்கிறார்கள் பூச்சித் தடுப்பு நிபுணர்கள்.

இந்தக் குவியல் நல்ல வெயில் வரும் இடத்தில் சேமிக்கப்படுகிறது. அந்த வழியில் இங்கு சில செடிகள் நடும் வாய்ப்பு போய் விடுகிறது. வீடு கொஞ்சம் சரிவான நிலப்பகுதியில் அமைந்திருப்பதால் வீட்டின் கோடி மூலையில் நீர் அதிகம் சேரும் பகுதியின் மேல் இந்தக் கழிவுக் குவியல் இருக்கிறது. இந்த மடிசல் குவியலை நன்கு பராமரிப்பது எப்படி என்று சொல்லித் தரும் நிபுணர்கள், அரசு ஊழியர்கள் இங்கு உண்டு.

மடிசல் குவியல் வேலியைத் தாண்டி வளரும் முயற்சியில் வேலிக் கம்பிகள் வெளிப்புறமாகப் பிதுங்கிப் பிய்யத் துவங்கின. அதனால் இன்னொரு குவியலைத் துவங்க வேண்டியதாயிற்று. நாற்புறமும் மரச் சட்டங்களை பூமியில் புதைத்து, இடையில் சிறு குச்சிகளைக் கொடுத்து,, சுற்றிலும் மெல்லிய வலைக் கம்பியைச் சுற்றினோம். அந்தக் கம்பிகளைக் கட்டைகளோடு மெல்லிய கயிறால் பிணைத்தோம். பிறகு கொஞ்சம் வெட்டிக் குவிந்திருந்த புல்துண்டுகளை நிலத்தில் அரை அடிக்குப் பரப்பினோம். இரும்பாலான முள் கம்பி போன்ற காம்போஸ்ட் ஃபோர்க் எனப்படும் கருவியால் பழைய குவியலில் இருந்து கொஞ்சம் கழிவுகளைக் குத்தி எடுத்து வந்து இங்கு பரப்பினோம். அந்தக் குவியலில் இருக்கும் தடித்த மண்புழுக்களை இங்கு கொஞ்சம் கொண்டு வருவது அவசியம், அவை மடிசல் உரமாகும் வேகத்தை அதிகரிக்கும்.

இந்த வேலையைச் செய்ய ஒரு மணி போல ஆயிற்று. பழைய மடிசல் குவியலை அவ்வப்போது புரட்டி விட்டிருந்தால் இலைகள், தழைகள் அதிக வெப்பத்தில் கூழாக ஆகாமல் மடிசலாக, மண் போலாகியிருக்கும். குளிர் காலத் தோட்டத்தில் முழங்கால் அளவுக்குப் பனித்தூள் படிந்து கிடக்கும் அங்கு. தலைகாட்டும் சிறு வெயிலில் மேற்பரப்பு உருகி, மறுபடி உறைந்து, கெட்டித்து இறுகி இருக்கும். அதில் நடந்து போய் அன்றாடக் குப்பைகளை மடிசல் குவியலில் கொட்டுவதே பெரும்பாடு. அந்தக் குவியலைப் புரட்டிக் கொடுக்க நிறைய உடல்வலுவும், இளமையான உடலின் இயல்பான உஷ்ணமும், தோட்ட வேலையில் பெரும் ஈடுபாடும் இருக்க வேண்டும். அது எதுவும் இல்லாத புத்தகப் புழுவான நான் அந்த குவியலைப் புரட்டிக் கொடுத்திருக்கவில்லை. அதனால் இந்தக் குவியல் அடிப்புறங்களில் கொஞ்சம் பச்சைக் கூழாக, கருப்புக் கூழாகக்கூட இருந்தது. இதை ஸ்லரி என்று இங்கிலீஷில் சொல்கிறார்கள். இது இயற்கை உரத்துக்குப் பயன்படும் என்று என் நண்பர் ஒருவர் தெரிவித்தார். இவர் இந்திய விவசாயிகளின் உரக் கூட்டுறவு நிறுவனத்தில் வேலை செய்தவர்.

இன்று அந்தக் குவியலை நிறையப் புரட்டிக் கொடுத்து மண்புழுக்களை நிறையக் கண்டேன். மனமும் ஏனோ நிறைவாக இருந்தது. என்ன ஒரு அற்புதமான ஜந்துக்கள். தன் போக்கில் உலகுக்குத் தொடர்ந்து நன்மை செய்து பூமியை வளமாக்கும் அதிசயங்கள். ஒப்பீட்டில் நான் ஒரு கரையானாக இல்லாவிட்டாலும், காளான். ஆனால் என்னிடமோ இது போன்ற ஜந்துக்கள் மீது அபரிமிதமான சக்தியும், அதிகாரமும் குவிந்து இருக்கிறது. இயற்கையில் நீதி உண்டு என்று யார் சொன்னது?

அந்த வேலையைச் செய்து விட்டு, அங்கு இருந்த மிளிரும் பச்சை நிற ராஸ்ப் பெர்ரி செடியை நட்போடு பார்த்துத் தடவி கொடுத்து விட்டு, அந்த உரக்குவியலைப் புரட்டும்போது அதில் இருந்த நிறைய பூச்சிகளை நோட்டம் விட்டோம். அதிர்ச்சி தரும் விதமாக அதில் எறும்பு போன்ற பூச்சிகள் நிறைய ஊர்ந்தன. இந்த ஊரில் கரையான்கள்- வெள்ளை எறும்பு அல்லது மர எறும்புகள் என்பன- வாழ்விடங்களுக்குப் பெரும் எதிரிகள். இங்கு வீடுகளில் பெரும்பாலானவை மர வீடுகள் என்பதை நினைத்துப் பாருங்கள். வீடுகளின் நாற்புறமும் மேற்படிமரத்துக்கு எதிரிப் பூச்சிகள் வராமல் பார்த்துக் கொள்ள வருடத்துக்கு 250 டாலர் கொடுத்து ஒரு கரையான் தடுப்பு நிறுவனத்தை அமர்த்தி இருக்கிறோம். இது வீட்டுக் காப்பீட்டுத் திட்டம் ஒன்றில் பங்கெடுக்க காப்பீட்டு நிறுவனம் கேட்கும் ஒரு முன் நிபந்தனை. வீட்டை விற்க முயன்றால் தொடர்ச்சியாக இந்த கரையான் பாதுகாப்பு இந்த வீட்டுக்கு இருந்ததா என்று கேட்பார்கள் வாங்க வருபவர்கள். எனவே இந்த வருடாந்தர தண்டம் 250 டாலர் அவசியம் கட்டியாக வேண்டிய வரி போல.

அந்த பூச்சியில் ஒன்றை ஒரு பிளாஸ்டிக் பையில் எடுத்து (ஜிப்லாக் பை) பூட்டி வைத்தோம். பிறகு அங்கு அருகில் இருந்த சிறு நீல நெல்லிச் செடியை நோட்டம் விட்டோம். கொஞ்சம் சோர்வாகத் தெரிந்தது. செடிகளில் மகிழ்ச்சி அற்ற செடிகள் என்று உண்டா?  பூனை நாய் போலச் செடிகள் ஏதோ கொஞ்சம் குரல் கொடுத்தாலென்ன?  சும்மா சுணக்கமாக இருந்தால் நமக்கு என்ன புரிகிறது?  எல்லாரும் ஜகதீஷ் சந்த்ர போஸாக இருக்க முடியுமா? அங்கிருந்து இன்னொரு மூலைக்கு இடம் மாற்றினால் நன்றாக வளரும் என்று தோன்றியது. எதிர் மூலையிலும் நிறைய வெய்யில் வரும். கொஞ்சம் நிழலும் இருக்கும். அந்த மூலை சமீபத்தில்தான் காலியாகியது. அதில் ஒரு பகுதியைத் தயார் செய்யத் துவங்கினோம்.

முன்பு அந்த இடத்தில் ஒரு சிலை இருந்தது. கான்கிரீட் அடித் தளமெல்லாம் போட்டு ஆழத்தில் பீடம் புதைந்து எழுந்து நின்றிருந்தது வெண் சிலை. சோகச் சித்திரமான அது சிலருக்குப் புனிதமாகக் கூடத் தெரியலாம். புனிதங்களிடம் இருந்து தூர ஒதுங்கும் குணம் கொண்ட எங்களுக்கு அப்படி ஏதும் தெரியவில்லை.ஆனாலும் பத்தாண்டுகள் போல அது பாட்டில் இருக்கட்டும் என்று விட்டு வைத்திருந்தோம். முந்தைய வீட்டுக்காரர்களின் அபிமானச் சிலை போலிருக்கிறது. எதையும் வணங்கும் குணம் கொண்ட தலைமுறை என் அம்மாவின் தலைமுறை. அவர் இந்தச் சிலையிடமும் அவருக்கு முடிகிற நாட்களில் ஏதோ வணங்கி விட்டு பிரார்த்தித்துக் கொண்டு வருவார். அவருக்காகவும் இது இருக்கட்டும் என்று பொறுத்திருந்தோம்.  நல்ல வெய்யில் வீசும் அந்த மூலையில் செடிகள் நடுவது மேலாக இருக்கும் என்று சமீபத்தில் தோன்றியிருந்ததாலும், அந்த மூலையில் நீர்வடிப்பிற்காகத் தரையடிக் குழாய் ஒன்றைப் புதைக்க நேர்ந்ததாலும், சிலையை நீக்க நினைத்தோம். அந்த வேலையைச் செய்ய ஒரு ஒப்பந்தக்காரரை நியமித்தோம். அந்த ஒப்பந்தக்காரர், நாங்கள் முதுகுக்குப் பின்னே மூச்சு விட்டு மேற்பார்வை செய்யாததால், குறுக்கு வழியைக் கடைப்பிடித்திருந்தார்.

ஒப்பந்தக்காரர் ஒரு முன்னாள் க்யூபா நாட்டுக்காரர். இந்தியர்களிடம் பழகிய அனுபவம் இருந்தது போலும். சகஜமாகப் பழகியதோடு, என்னென்ன செய்வார், எப்படி என்பதை முழுதும் விளக்கினார்.  அந்த நம்பிக்கையில் வேலையை இவரிடம் ஒப்படைத்தோம். கான்க்ரீட் பீடத்தை உடைத்து சிலையை அப்புறப்படுத்தும் வேலையை இந்த நாட்டில் குடியேற முயலும் ஹிஸ்பானிக் தொழிலாளிகளிடம் கொடுத்து விட்டிருந்தார்.சிலையை அகற்றுவது கடினமாக இருக்கும் என்று நான் நினைத்தேன். அவர்கள் அதன் பாதத்துக்குச் சற்று கீழே செஞ்சதுரமாக இருந்த ஒரு பீடத்தைத் தட்டிப் பார்த்து விட்டு, அதன் கீழே ஒட்டுப் போட்டிருந்த சிமெண்டை சுத்தியலால் தட்டி நொறுக்கினர். பிறகு இரண்டு புறம் கடப்பாறை போன்ற கருவிகளால் நெம்பவும் சிலை சரிந்தது.அவர்கள் சிலையைப் பத்திரமாக எடுத்துப் போய் தம் ட்ரக்கில் துணி சுற்றி வைத்துக் கொண்டனர். கீழே முழங்கால் உயரம் இருந்த பீடத்தை உடைக்க சில மணி நேரம் ஆகியிருந்தது.  அதை அகற்றி எடுத்துப் போயிருக்க வேண்டும், ஒப்பந்தப்படி. ஆனால் அந்தத் தொழிலாளிகள் சுருக்கு வழியாக, பீடத்தின் உடைந்த பெரிய துண்டுகளை அந்தக் குழியிலேயே புதைத்திருப்பார்கள் போலிருக்கிறது.

செடி நடக் குழி தோண்டுகையில் மண் வெட்டி பல இடங்களில் டங் டங்கென்று ஒலித்தது. கவனமாகத் தோண்டி, ஐந்து ஆறு பெரிய காங்கிரீட் கல் துண்டுகளை நெம்பி எடுக்க வேண்டி இருந்தது. இதற்கு சுமார் முக்கால் மணிக்கு மேலாயிற்று. இனி அந்தக் கல் துண்டுகளை என்ன செய்வது? குப்பை லாரியில் அதை எடுத்துப் போக மாட்டார்கள். வேறெங்கு போடுவது என்று யோசிக்க வேண்டும்.

அந்தக் கற்களை நீக்கிய பின் பார்த்தால், குழியெங்கும் குறுக்கும் நெடுக்குமாக தடி வேர்கள் ஓடிகொண்டிருந்தன. அவை அடுத்த வீட்டில் வேலிக்கருகே இருக்கும் ஒரு பெரும் மரத்தின் வேர்கள். அந்த மரம்தான் எங்கள் உரக்குழிக்கு அடித்தளமிடும் பெரும் குவியலான இலைகளை வருடா வருடம் எங்கள் வீட்டுத் தோட்டத்துக்குத் தரும் மரம். இலையுதிர் காலத்தில் எங்கள் கோபத்துக்கு ஆளானாலும், கோடையில் பெரும் நிழலாகவும், பார்க்க ரம்யமான கரும்பச்சையால் எங்கள் வீட்டுப் பின்வெளியை நிறைப்பதாலும் அந்த மரத்தின்பால் எங்களுக்கு நட்புதான் அதிகம். நட்புள்ளவர்களிடம்தானே கோபித்துக் கொள்ளவும் முடியும்? இந்த க்ஷணம் அந்த மரத்தின் மேல் கோபம். வேரும் இல்லாது, ஓரிடத்தில் நிலைத்துத் தங்குவதும் இயலாத  நாடோடியான எனக்கு இப்படி வேர் பாய்ச்சி, ஒரே இடத்தில் பல பத்தாண்டுகள் நின்று சலிக்காமல் வருடா வருடம் இலைகளை உதிர்த்து, குளிரில் வெறும் குச்சிக் கிளைகளோடு நின்று பரிதவித்தாலும், பிடிவாதமாக  உயிர் வாழ்ந்து, குளிர் போனதும், மறுபடி ஏராளமாக துளிர் விட்டு, இலை விரித்துக் கிளைத்து வாழும் இந்த மரங்கள் மீது ஒரு மரியாதை, பரிவு, வியப்பு.சிறு தோல்விக்கெல்லாம் உயிரை விட்டு விடவே தோன்றுகிற மனிதர்கள் நடுவே பொறுமையை, நிலைப்பை, பிடிவாதத்தை நடத்தையால் உயர்த்திக் காட்டுகிற  உயிரினங்களைப் பார்த்தால் வியக்காமல் என்ன செய்வது?

நாங்கள் நீல நெல்லி (blue berry) செடியை அங்கு நட்டால் அதன் வேர்கள் இதை வளர விடுமா? வேறு வழியில்லாமல் அந்த வேர்களில் பலவற்றை அறுத்தோம். பிய்த்தோம். பல பத்தாண்டுகள் அங்கு வளர்ந்து வாழ்ந்த மரம். என்னை விட மூத்ததாகத்தான் இருக்கும். அதன் பாதத்தில் ஒரு பகுதியை உடைத்திருக்கிறேன்.’ஏம்பா, உனக்கு இவ்வளவு பெரிய தோட்டத்தில் வேறெ எடமே கெடக்கில்லியா? ‘என்று அந்த மரம் கேட்கிற மாதிரி பிரமை.  ‘தோட்டத்தில் பாதியை வேர் விட்டு அடைச்சிருக்கியே, நான் என்ன செய்ய?’ என்று நினைத்துக் கொண்டேன். மரத்திடம் பேசினால், ஏற்கனவே பித்தன் என்று நம்மை நினைத்திருக்கும் இளைய தலைமுறைக்கு இன்னும் இளக்காரமாகப் போய்விடும். அவனோ அருகில் நின்று கொத்திக் கொண்டிருந்தான்.

நாற்புறமும் இரண்டடி அகலம், ஒன்றரை அடி ஆழமிருக்கும் அந்தக் குழியில் இருந்த பொடிக் கற்களை எல்லாம் அகற்றி, அதன் அடிப்பகுதியில் அமிலச் சத்து நிறைந்த உரம் ஒன்றை அரை அங்குலம் பரப்பினேன். நீல நெல்லிக்கு அமிலச் சத்து பிடிக்குமாம். பின்னர் அதன்மேல் ஏற்கனவே வாங்கி வந்திருந்த மேல் மண் எனப்படும் ஒரு வித நல்ல மண்ணை ஒரு அடி பரப்பினேன். இலேசாக இருக்கும் மண் இது. ஏற்கனவே கொஞ்சம் ஈரமாகத்தான் இருந்தது. பொலபொல எனத் துகளாகவும் இருந்தது. இந்த வகை மண்ணைத் தயாரித்து விற்க இந்த நாட்டில் பெரும் நிறுவனங்களே உண்டு. அடுத்தபடியாக, தோண்டிப் பக்கவாட்டில் குவித்திருந்த மண்ணைக் கொஞ்சம் பரப்பி விட்டு, நீல நெல்லிச் செடியை முன்பிருந்த இடத்திலிருந்து கவனமாக வெட்டி எடுத்து வந்து ஏற்கனவே பரப்பி இருந்த மென் மண் தளத்தில் வைத்தோம்.

அதன் மேல் பரப்பில் ஒரு கருப்புப் ப்ளாஸ்டிக் திரை போன்ற ஒன்றை நடுவில் பெரிய கிழிசல் ஒன்றைச் செய்து போர்த்தினோம். இது ஒரு சிறப்புத் தயாரிப்பு. இதையும் தோட்டப் பொருட்கள் விற்கும் கடைகளில் வாங்க முடிகிறது. இந்தக் கிழிசல் வழியே அந்தச் செடியின் இலைகள் தண்டுகள் மட்டும் வெளியே நீட்டும்படியாகப் பரப்பட்டது அந்தப் போர்வை. செடியின் வேர்கள் இந்தப் பிளாஸ்டிக் திரையின் கீழ் இருக்கும். அங்கு இதர பூண்டுகள், ஒட்டுண்ணித் தாவரங்கள் சில மாதங்களாவது வளராமல் தடுப்பதாக இந்தப் ப்ளாஸ்டிக் இருக்கும். அதன் மேல் தயார் மண்ணையும், குழிக்குள்ளிருந்து முன்பு எடுத்த மண்ணையும் பரப்பி மேற்புறத்தில் சிறிது அமிலச் சத்தை மறுபடித் தூவி விட்டு வேலை முடிந்த களைப்பில் நகர்ந்தால், போட்டிருந்த தோட்ட வேலைக்கான பூட்ஸின் அடிக் கட்டை பிய்ந்து தடக் சபக்கென்று காலில் அடித்தது. ஒரு நல்ல ஷூ போச்சு. நான்கைந்து வருடமாக  நன்கு உழைத்த ஷூ. காலுக்கும், மனதுக்கும் பழகிய ஷூ.இதை மறுபடி தைக்கவும் முடியாது. அடியில் ப்ளாஸ்டிக் சதுரம் ஒன்றால் ஒட்டி இருந்தார்கள் என்று தெரிந்தது.

செடி நட்ட மகிழ்ச்சியை இந்த சம்பவம் ஒரு கால் பங்கு குறைத்து விட்டது. வயதாகிறதே, சிறு இழப்புகள் கூடத் தீவிரமான இழப்பு போல உறைக்கின்றன. வெளிக் காட்டாமல் இருக்குமளவு அறிவு முதிர்ச்சி இருக்கலாம், உள் மனதில் அது தாக்கமாகத்தான் இருக்கும். மேலும், உடல் இந்த திடீர் வேலையைச் செய்யும் வரை தாக்குப் பிடித்து விட்டு இப்போது பெரிய குறைகளைச் சொல்லத் துவங்கியது. அதன் குரல் பெரிதாகுமுன் அங்கு எடுத்துப் போயிருந்த தோட்ட வேலைக்கான கருவிகள்- மண்வெட்டி, கிளறும் முள் கம்பி, உரப் பை, ’தயார்’ மண் இருந்த பை, கையுறைகள் எல்லாவற்றையும் எடுத்து வந்து தோட்டத்தில் இருக்கும் சிறு மரவீட்டில் வைத்தோம். இது ஒரு கூடாரம் போல. தோட்டப் புல் வெட்டும் எந்திரம், பனித் துகளை அள்ள உதவும் எந்திரம். செடிகளுக்குத் தண்ணீர் பாய்ச்ச உதவும் நீர்க்குழாய்ச் சுருள், கையுறைகள், பல கருவிகள், பழைய நாற்காலிகள், வீட்டில் வேலை செய்து எஞ்சிய மரப் பலகைகள், சிறு சட்டங்கள். என்று நிறைய தட்டு முட்டு சாமான்களை வைக்கும் இடம். அதை ஷட்டர் போட்டு மூடி விட்டு, ஏற்கனவே நீர்க்குழாயில் பொருந்தி புல்வெளியில் சுருண்டு கிடந்த நீர்க்குழாய்ச் சுருளைப் பிரித்து, குழாயைத் திறந்து நீரைச் சிறிது தொலைவில் இருந்து நீலநெல்லிச் செடி, தக்காளிச் செடி, லிலிப் பூஞ்செடி, ராஸ்ப் நெல்லிச் செடி என்று பல செடிகளுக்கும் நீர் பாய்ச்சி விட்டுக் காலில் அடி பிய்ந்த ஷூ சடப் சடப்பென்று அடிக்கக் கொஞ்சம் தள்ளாடி வீட்டுக்குள் நுழைந்தேன்.

எறும்புகளுக்கும் கரையான்களுக்கும் வெவ்வேறு – எதிர் திசையில் செல்லும் எதிர்காலங்கள்- காத்திருக்கின்றன என்பது கூகுள் தேடலில் தெரிகிறது. நான் பிடித்து வைத்திருந்த எறும்பும், அதை ஒத்த வடிவு கொண்ட கரையானும் ஏலேட்டுகள் என்று என்டமாலஜிஸ்டுகளால்- பூச்சியியலர் என்று தமிழாக்கம்- அழைக்கப்படுகின்றன. எறும்புகளும் கரையான்களும் தங்கள் வாழ்க்கைச் சுழலில் பாலுறவுக்குத் தகுதியான முதிர்ச்சி அடைந்த நிலை ஏலேட் நிலையாக அறியப்படுகிறது. தாம் வாழும் காலனியை விட்டு வெளியேறும் காலத்தில் அவற்றுக்குச் சிறகுகள் முளைக்கின்றன. சீதோஷ்ண நிலவரத்தில் வெப்பம், பளீரென்ற சூரிய ஒளி, மெல்ல வீசும் காற்று போன்ற புறச் சூழல் மாற்றத்தை உணரும்போது அவை காலனியை விட்டு வெளியேறுகின்றன. ஒரு காலனியை விட்டு ஏலேட்டுகள் இவ்வாறு வெளியேறுவது பரவலாக்கம் என்றும் மணநாள் ஓட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. தகு;ந்த துணை கிடைக்கும்போது தங்கள் சிறகுகளை உதிர்த்துவிட்டு ஆண் ஏலேட்டுகளும் பெண் ஏலேட்டுகளும் புணர்கின்றன. இந்த ஏலேட்டுகளில் கரையான்கள் ஈரமான மரக்கட்டை அல்லது ஈரமண்ணைத் தேடி அங்கு தங்கள் புதிய காலனியை அவை உருவாக்குகின்றன. ஆனால் எறும்புகளிலோ பெண் எறும்பு சினையுண்டாகியதும் ஆண் எறும்பு இறந்து விடுகிறது; பெண் எறும்பு தன் காலனியை உருவாக்கத் தகுந்த இடத்தைத் தேடிச் செல்கிறது.

தம் வாழ்விடத்தில் நிலைமை சகிக்க முடியாமலோ, துன்பமாகவோ ஆனால் மனிதர் கூட்டை விட்டு, ஊரை விட்டு வெளியேறுகிறார்கள். பூச்சிகளோ கூட்டை விட்டு வெளியேற சூழல் நிலை நன்றாக இருந்தால்தான் வெளியேறுகின்றன.இரண்டு ஜீவராசிகளும் எதிர்காலத்தை நினைத்துத்தான் வெளியேறுகின்றன. என்ன ஒரு வேறுபாடு நடைமுறையில்!

ஒரு வலைத் தளத்தில் மேலும் விவரங்களை நல்ல வேளையாகப் படங்களோடு கொடுத்திருந்தார்கள். அதன்படி, நான் ஜிப் லாக் பையில் வைத்திருந்த எறும்பு கரையானல்ல: எறும்புகளின் மீசை ‘ப’ வடிவில் மடங்கியிருக்கும்; கரையான்களின் மீசையோ பாசி மணி கோர்த்தது போன்ற வடிவு கொண்டது. இறகிருக்கும் எறும்புகளின் முன்னிறகுகள் பின் இறகுகளைவிடப் பெரியவை: கரையான்களில் இவை சம அளவு கொண்டிருக்கும். இவையனைத்தையும்விட முக்கியமாக, எறும்பின் இடை சிறுத்திருக்கும் : கரையானுக்கோ இடை வால்புறம் என்பது வேறுபாடு தெரியாமல் பெருத்திருக்கும். இத்தனைக்கும் கரையானும் எறும்பு போல ஓயாமல் வேலை செய்கிறது. என்ன செய்ய, உடம்பு வாகு போலிருக்கிறது? கரையானுக்குக் கொலெஸ்ட்ரால் அளவும் கூடுதலோ என்று வலைத்தளம் தெரிவிக்கவில்லை.

சுவாரசியமான தகவல்கள், மேலும் படிக்க வேண்டும் போலிருந்தது. எனக்குப் பூச்சிகளென்றால் ரொம்பப் பிடிக்கும் என்று இத்தனை வருடங்கள் கழித்துத் தெரிந்து கொண்டிருக்கிறேன். புழுக்களையும் எனக்கு ரொம்பப் பிடித்திருக்கிறது. இளம் வயதில் இதெல்லாம் தெரிந்திருந்தால் எப்போதோ எண்டமாலஜிஸ்ட் ஆகப் போயிருந்திருப்பேன். மடையன், இதைக் கூட கல்லூரியில் படிக்கும்போது தெரிந்து கொள்ளவில்லை. பூச்சி, புழுக்கள், பறவைகள் மீது என்னுள் புதைந்த ஆர்வத்தை எனக்குக் காட்டிக் கொடுத்தவர் பெர்ண்ட் ஹைன்ரிஹ் என்னும் ஜெர்மனியர். இவர் அமெரிக்காவில்  வெர்மாண்ட் பல்கலையில் பேராசிரியராக இருக்கிறார். இவரே ஒரு ஆச்சரியமான மனிதர்தான். [1] இவருடைய குளிர்கால உலகம் பற்றிய புத்தகத்தை ஒன்றரை வருடம் முன்பு, 2011 இல் குளிர்நாள் ஒன்றில் புத்தகக் கடையில் மேய்ந்த போது கண்டெடுத்தேன். என் பர்ஸின் மெலிவுக்குத் தக்க விலையாகத் தள்ளுபடி விலையில் வந்திருந்தது புத்தகம். அதில் பார்த்த ஒரு தகவலில் தெரிதது, குளிர்காலக் காக்கைகள் எப்படி அமெரிக்காவில் எக்கச் சக்கமாக எண்ணிக்கையில் பெருத்து விட்டன, ஓக்லஹோமா மாநிலத்தில் 1933-45 வருட இடைவெளியில் சுமார் பத்தாண்டுகளில் 30 லட்சம் காக்கைகளை அந்த மாநிலத்தின் அரசு இதற்கெனத் தயாரிக்கப்பட்ட பொறியில் பொருத்திய கண்ணி வெடிகளிலிருந்து வெடிப்பால் சிதறும் சிறு உலோக ரவைகளால் கொன்றது என்ற தகவல்களோடு, காக்கைகளுக்கும் ஆந்தைகளுக்கும் உள்ள விரோதத்தையும் பதிவு செய்கிறார்.

இதை இன்று இக்கட்டுரை எழுதுகையில் மறுபடி பிரித்துப் படித்தேன். ஆந்தையோடு எனக்கேற்பட்ட ஒரு அனுபவம். தஞ்சாவூரில் வேலை நிமித்தம் நான் குடி இருந்த ஒரு அறையில் விடிகாலையில் உறங்கிக் கொண்டிருந்த என் தலையில் திடீரென்று ஏதோ தட்டிய மாதிரி இருந்தது. கையால் என்னறியாமல் வீசியதில் ஏதோ கடினமாகத் தட்டுப்படப் பதறி அடித்து எழுந்தேன். கையில் சிறிது எரிச்சல் இருந்தது.முக்கால் இருட்டில் ஏதும் தெரியவில்லை. ஆனால் அறையில் ஏதோ இருந்தது.  எழுந்து விளக்கைப் போட்டேன். அறையில் இன்னொரு கட்டிலில் உறங்கிய நண்பர், அறையின் இன்னொரு வாசி, பதறி எழுந்தார். தலைக்கு மேலே சுவரில் ஒரு பரண். அந்தப் பரணில் ஒரு பெரிய பறவை இருந்தது. அறைக் கதவைத் திறந்து வைத்து, வராந்தாவில் போய் நின்றோம். என்ன செய்வதென்று தெரியவில்லை. மின் விசிறி ஓடிக் கொண்டிருந்ததை நிறுத்தினோம். பிறகு சிறிது நேரம் கழித்து அறைக்குள் போய் பரணுக்குக் கீழே இருந்த குளியலறையில் நின்று குச்சியால் மேல் தளத்தில் தட்டி ஓசை எழுப்பவும் அந்தப் பறவை ஜிவ்வென்று கிளம்பி திறந்த கதவு வழியே வெளியே மிதந்து போனது ஏதோ கனவு போலிருந்தது.

ஓடிப் போய்ப் பார்த்தோம். அதால் வெளியிலிருந்த சூரிய ஒளியில் அத்தனை எளிதாகப் பறக்க முடியவில்லை போலிருக்கிறது. அல்லது எங்கள் அறையில் நுழையும் முன் அதன் இறகில் மின்விசிறி பட்டு காயம் பட்டிருந்ததோ என்னவோ என்று அன்று நினைத்தோம். ஆந்தைக்குப் பகலில் கண் அத்தனை நன்கு தெரியாது என்பதும் எங்களுக்கிருந்த அபிப்பிராயம். (பெர்ண்ட் ஹைன்ரிஹ் இதை உறுதி செய்கிறார்.)

நாங்கள் இரண்டாம் மாடியில் ஒரு லாட்ஜின் அறையில் குடி இருந்தோம். அந்தப் பறவை ஒரு வெள்ளை நிற ஆந்தை என்பது அடுத்த கட்டிடத்தின் மேல்தளத்தில் அமர்ந்திருந்த பறவையைப் பார்த்ததும் தெரிந்தது. அசைவின்றி இருந்த ஆந்தையை ஒரு சில நிமிடங்களில் பல பத்துக் காக்கைகள் சுற்றிச் சுற்றி வட்டமிட்டன. சில தைரியமான  காக்கைகள் ஆந்தையின் அருகே செல்லத் துணிந்து நெருங்கித் தாக்கும் நோக்கத்தோடு சென்றன. ஆந்தை நோயுற்றிருந்ததோ என்ற ஐயம் எங்களுக்கு. அது தன் முழு இறகையும் விரித்தபோது அது எத்தனை பெரிய பறவை என்று தெரிந்தது. இரு இறகுகளின் விரிப்பு  ஐந்து ஆறடி நீளம் இருக்கலாம்.  காக்கைகள் விரிக்கப்பட்ட இறக்கைகளின் நுனி இறகுகளைக் கொத்திப் பிய்க்க முயன்றன. இறகுகளை உதறிச் சடசடத்தாலும் எழாமல் இருந்தது ஆந்தை. காக்கைகளால் தாக்கிக் கொல்லப்படாமல் அதை விரட்டுவதற்காக நாங்கள் சிறு கற்களை விட்டு எறிந்தோம்.

ஒரு சில தத்தல்களுக்குப் பிறகு அது ஒரே தாவலில் காற்றிலேகி தூரத்தில் இருந்த தோப்பு ஒன்றை நோக்கிப் பறந்து போனது.  அதன் கால் நகம் பட்டுக் கீறிய என் முன்னங்கையில் இருந்த கீறல் குளிக்கும் வரை எரிச்சலாக இருந்தது. ஆனால் அது விட்டுச் சென்ற  ஓரிரு வெண்ணிறகுகளைப் புரட்டிப் புரட்டிப் பார்த்துக் கொண்டிருந்ததில் வேலைக்குப் போகும் நேரம் ஆகி விட்டது புலப்படவில்லை. என்ன ஒரு வெள்ளை அந்த ஆந்தை. [அது கூகை என்றழைக்கப்பட வேண்டுமா என்பது எனக்கு இருந்த ஒரு ஐயம்.]

ஊர்க்கதைகளில் ஆந்தைக்கும் காக்கைக்கும் விரோதம் என்பதைச் சொல்வார்கள். ஆனால் பெர்ண்ட் ஹைன்ரிஹ்ஹின் புத்தகத்தில்தான் இவற்றிடையே இருந்த விசித்திரப் போட்டியும் காக்கைகள் ஏன் நகரத்தின் மையங்களில் எப்படியோ கூடு கட்டி வாழ்வதை விரும்புகின்றன என்பதும் புரிந்தது. காக்கைகள் வெளிச்சம் இருந்தால் வெல்லும். ஆந்தை இருட்டில் வெல்லும். நகர மையத்தில் காக்கைகளுக்கு இரைச்சலும், எந்நேரமும் ஒளியும், ஏராளமான வகை உணவுகளும் கிட்டுகின்றன. இங்கு ஆந்தைகள் காக்கைக் கூடுகளை வேட்டையாடுவது குறைகிறது. என் அறையில் வந்த ஆந்தை அருகிலிருந்த கட்டிடத்தில், கோவில்களில் இருந்த காக்கைகளை வேட்டையாட வந்து, தவறி எங்கள் அறைக்குள் நுழைந்திருக்கிறது. சம்பவம் நடந்து சுமார் 23 வருடங்களுக்கு மேலாகியும் அந்த ஆந்தையை மறக்கவில்லை. அந்த லாட்ஜ் இருந்த தெருவின் பெயரோ, அந்த லாட்ஜின் பெயரோ நினைவில்லை. அந்த அறைக் கதவு சிமெண்ட் நிறம் என்பது நினைவிருக்கிறது. நம் புத்தி எதை நினைவு கொள்ளும், நீடித்துப் பிடித்து வைக்கும் என்பது தெரிந்தால் நாம் அதை வைத்து என்னவெல்லாம் செய்து விட மாட்டோம்?

ஜிப் லாக்கில் இருந்த எறும்பு குறுக்கும் நெடுக்கும் ஓடிக் களைத்திருந்தது. பாவம் என்ன வேதனைப்படுமோ என்று தோன்ற, எடுத்துப் போய் அந்த உரக்குவியல் மேலேயே பையைத் திறந்து தட்டினேன். விழுந்து விட்டது. அது தன் வரிசையில் தனக்குரிய இடத்தைச் சேர்ந்திருக்கும் என்று நம்புகிறேன். வேலை செய்யாமல் ஊர் சுற்றி விட்டு வந்ததற்கு தோழர்களிடம் அது என்ன சாக்கு சொல்லும் என்று யோசனையாக இருந்தது.

எறும்புகளின் சைகை மொழியை எண்டொமாலஜிஸ்டுகள் புரிந்து கொண்டு விட்டிருக்கிறார்களா? பெர்ண்ட் ஹைன்ரிஹ் எறும்புகளோடு பேச வல்லவரா என்று தொலைபேசியிலோ, மின்னஞ்சலிலோ கேட்டால் பதில் சொல்வாரோ? அவரைக் கேட்பதை விட எட்வர்ட் ஆஸ்போர்ன் வில்ஸனைக் கேட்டால் நிச்சயம் பதில் கிட்டும்.[2] ஆனால் அவரோ பரிணாம வளர்ச்சி பற்றி உரையாற்றத் துவங்கி விடுவார், எறும்புகளுக்கு புராணங்கள் தேவை இல்லை, மனிதருக்குப் புராணமில்லையேல் வாழ்வு ருசிக்காது என்று விளக்கத் துவங்குவார் என்று யோசனையாக இருக்கிறது.

——————————————————–

[1] பெர்ண்ட் ஹைன்ரிஹ் பற்றிய ஒரு ஆவணப்படம் கிட்டுகிறது. இதிலிருந்து சில துண்டுக் காட்சிகளைக் கீழ்க் கண்ட தளத்தில், அதன் ஒரு பக்கத்தில் காணலாம்.

http://www.jancannonfilms.com/berndheinrichfilm.htm

http://www.jancannonfilms.com/berndheinrichvideoclips.htm

தவிர  பெர்ண்ட் ஹைன்ரிஹ் பற்றிய விக்கிபீடியா பக்கத்தைப் பாருங்கள். இவர் வேறென்ன அதிசயங்களைச் செய்திருக்கிறார் என்பது தெரியும். இவர் ஓடுவதில் பல சாதனைகள் செய்திருக்கிறார். 24 மணி நேரம், 12 மணி நேரம் ஓடுவதிலும், 100 கிலோமீட்டர்கள் ஓடுவதிலும் இவர் சாதித்த வேகம் இன்னும் உலகச் சாதனையாக இருக்கிறது என்று விக்கி பக்கம் தெரிவிக்கிறது. இவர் எழுதிய மிகவும் ருசிகரமான, பிரமாதமான தகவலகள் கொண்ட பல புத்தகங்கள் உண்டு. அவற்றில் நான் வாசித்தவை

குளிர்கால உலகம் (Winter World- by Bernd Heinrich/2003-Harper Collins)

கோடைக்கால உலகம் (Summer World- 2010)

[2]  எறும்புகளைப் பற்றிய ஆய்வுப் புத்தகங்களோடு, சிறுகதை,நாவல் எல்லாம் எழுதியவர் எ.ஆ. வில்ஸன். அவரது ஒரு பேட்டியை இங்கு காணலாம்:

http://www.newyorker.com/online/blogs/books/2010/01/wilson-interview.html