ஒற்றை ரோஜாச்செடி

worriedman-headontable

பெருநகரமொன்றின் முப்பது கிலோமீட்டர் தொலைவில் இருந்தது அந்த அழகான சிறு ஊர். ஒரு புகைவண்டி நிலையம். ஒரு பேருந்து நிலையம். இரண்டு சினிமா தியேட்டர்கள்!. அவற்றில் ஒன்று ஊருக்கு வெளியே தென்னந்தோப்புக்கு முகப்பில் இருந்த ஒரு டூரிங் டாக்கிஸ். பெரும்பாலும் கறுப்பு-வெள்ளை படங்களே திரையிடப்படும். தீபாவளி – பொங்கலுக்கு மட்டும் வண்ணத்திரைப்படங்கள். சரியாக பராமரிக்கப்படாத நகராட்சி பூங்கா. பூங்காவிற்கு நடுவில் ஒர் அறை. அதற்குள்ளிருக்கும் வானொலிப்பெட்டியில் வரும் ஆறு மணி தமிழ் செய்திகள் பூங்காவில் பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபெருக்கிகள் மூலம் எல்லோரும் கேட்கும் படியாக ஒலி பரப்பப்படும். அவ்வறைக்கு வெளியே நாலா புறமும் போடப்பட்டிருந்த பெஞ்சுகளில் முதியோர்கள் உட்கார்ந்து செய்திகளை கேட்பார்கள். பூங்காவிற்கு வெளியே ஒரு சாக்கடை தன் குறுகிய கரைகளை மீறி ஓடும். லாங்-ஜம்ப் செய்தபடிதான் பூங்காவிற்குள் நுழைய வேண்டும். ஒரு முனிசிபாலிடி உயர் நிலைப்பள்ளி.. ஒரு சிவன் கோயில். இரண்டு தெருக்களுக்கு ஒன்று என்ற கணக்கில் ஒரு பிள்ளையார் கோயில். மசூதி தெருவில் ஒரு பள்ளிவாசல். ஒரே ஒரு மெயின் ரோடு. இரு புறமெங்கும் மளிகை கடைகள், டெக்ஸ்டைல் கடைகள். எந்நேரமும் மயிர்கூச்செரியும் ஒசை எழுப்பும் மாவு மில். ஒரு ஸ்டேட் பாங்கு கிளை. ஒரு கூட்டுறவு நிலவள வங்கி.

ரமணியின் வீடு நிலவள வங்கியின் பின் புறத்தில் உள்ளது. சந்து என்றில்லாமல், தெருவும் என்றில்லாமல், சில இடங்களில் குறுகியும் சில இடங்களில் அகன்றும் இருக்கும் சந்து-தெருவில் இருந்தது ரமணியின் வீடு.

ரமணியின் தாத்தா அக்காலத்தில் வாங்கிய வீடு. வீட்டின் இரு பக்கங்களிலும் மூன்று மாடி கொண்ட வீடுகள் இருப்பதால் ரமணியின் ஹாலும் கிட்சனும் இருள் சூழ்ந்ததாக காணப்படும். வீட்டின் பின்புறம் முக்கால் கிரவுண்ட் அளவுள்ள கொல்லை புறம் இருந்தது. ரமணி இளைஞனாக இருந்த போது தன் நண்பர்களுடன் கொல்லைப்புறத்தில் வாலிபால் விளையாடிக்கொண்டிருப்பான். திருமணமாகிவிட்ட பிறகு வாலிபால் விளையாடுவது நின்றுவிட்டது. எல்லா நண்பர்களும் வேலைக்காக வேறு ஊர்களுக்கு சென்றுவிட்டார்கள். ரமணி வேறெங்கும் செல்லத்தேவையில்லாதபடி உள்ளுர் ரயில் நிலையத்தில் புக்கிங் கிளர்க் பணி கிடைத்துவிட்டது. ரமணியின் தாத்தா உள்ளூர் நீதி மன்றத்தில் எழுத்தராக இருந்தார் ; அப்பா தபாலாபீசில் வேலை பார்த்தார் ; இவன் ரயில் நிலையத்தில். தாத்தா, அப்பாவைப்போல ரமணியும் அலுவலகத்துக்கு நடந்தே செல்வான். அப்பாவைப்போல செய்தித்தாள் படிக்காதிருத்தல். இரட்டை சக்கர வாகனம் வாங்காதிருத்தல். ரியல் எஸ்டேட் எதிலும் முதலீடு செய்யாதிருத்தல். ஒரே ஒரு வங்கிக்கணக்கு. சேமிப்பு எல்லாம் சேவிங்ஸ் அக்கவுன்டிலேயே. அப்பாவின் உண்மையான மகனாக இருந்தான்.

இவன் அப்பா செய்யாத ஒன்றை செய்தான் என்றால் அது ஒன்றுக்கு மேல் குழந்தை பெற்றுக்கொண்டதுதான். ரமணிக்கு மூன்று பெண் குழந்தைகள். ஒரு வருட இடைவெளியில் மூன்று பெண்கள். ரமணியின் மனைவி பானு திருமணத்திற்கு முன் பக்கத்து பெரு நகரத்தில் வாழ்ந்தவள்.

ரமணியின் தந்தையார் சில வருடங்களுக்கு முன்னர் காலமானதிலிருந்து ஒரு பழக்கம் அவனை தொற்றிக்கொண்டது. காலையில் ட்யூட்டிக்கு கிளம்புவதற்கு முன்னரும் ஐந்து ஐந்தரைக்கு வீடு திரும்பிய பிறகும் கொல்லைப்புறத்தில் குளியலறைக்கு பக்கத்தில் ஒரு ஈசிசேரில் உட்கார்ந்து கொல்லையை பார்த்துக்கொண்டிருப்பதை நித்ய கர்மானுஷ்டமாக வைத்துக்கொண்டிருந்தான். அவன் அப்பாவும் அதை செய்வது வழக்கம். குடும்ப பாரம்பரியத்தை தொடர்பவன் போல் அவனும் வேலை நேரம் தவிர மற்றெல்லா நேரத்தையும் கொல்லைப்புறத்தில் அமர்ந்து கடத்தி வந்தான்.

குழந்தைகள் மூவரும் வயதுக்கு வந்துவிட்ட பிறகு மனைவி பானுவிடம் ஒரு நாள் பேச்சு கேட்டான். ”கையை சேருக்கு மேல போட்டு தினமும் சோம்பல் முறிக்கிறீங்களே? உங்க குழந்தைகளின் எதிர்காலத்தை பற்றி கொஞ்சமாவது கவலைப்படணும்னு தோணுதா? குழந்தைகளை படிக்க வைக்கணும். கல்யாணம் பண்ணி வைக்கணும்னு யோசனை இருந்தால் உருப்படியா நாலு பைசா பார்க்க ஏதாவது செய்வீங்க….ஹ்ம்ம் எல்லாம் என் தலைவிதி… என் தங்கை வூட்டுக்காரரை பாருங்க…மாஸ்கோல வேலை கிடைச்சு போன வாரம் கெளம்பிப்போனாரு. ரெண்டு மாசத்துல தங்கையும் அவள் குழந்தைகளும் கூட கெளம்பிப்போயிடுவாங்க….நீங்க என்னன்னா ரயிலடியும் இந்த கொல்லைப்புறமும் தான் நிரந்தரங்கிற மாதிரி ஒரே மாதிரியா கொஞ்சம் கூட மாத்தமில்லாம புள்ளையாராட்டமா உக்கார்ந்துகிட்டு இருக்குறீங்க…” தன் மனத்தாங்கலை வார்த்தைகளால் வடித்தெடுத்தாள்.

மனைவியின் வார்த்தைகள் ரமணியை வெகுவாக பாதித்திருக்க வேண்டும். ட்யூட்டி முடிந்ததும் எப்போதும் போல வீடு திரும்பாமல், கால்நடையாக ஒர் இலக்கில்லாமல் எங்கோ நடந்தான். என்றும் இல்லாத மாதிரி சாலையோர டீக்கட்டையொன்றில் தேனீர் குடித்தான். கால் இலேசாக வலிக்க ஆரம்பித்த போது ஊரெல்லையில் இருந்த அய்யனார் கோவிலின் வாசலில் கட்டிட வேலைக்கென கொட்டப்பட்டிருந்த மணலில் அமர்ந்தான். மெயின் ரோட்டில் இல்லாத அமைதியை ரசித்தான். இருட்டிய பிறகு, தன் வீடு நோக்கி நடக்கலானான். பாதத்தில் அணிந்திருந்த ரப்பர் ஸ்லிப்பரையும் தாண்டி ஏதொவொன்று குத்தியது. தெரு விளக்கின் வெளிச்சத்தில் பார்த்தபோது, அது ரோஜாச்செடியின் முள்ளென்று தெரிந்தது. ஒற்றை முள்ளில்லை. வெட்டப்பட்ட ரோஜா செடியின் கிளை அது. ரோஜாத்தண்டை கவனமாக கையில் ஏந்திய படி வீடு திரும்பினான்.

அடுத்த நாள் காலை வழக்கம் போல ஈசி சேரில் உட்காராமல், எதிர்வீட்டுக்காரரிடமிருந்து மண்வெட்டியை இரவல் வாங்கி கொல்லைப்புறத்தில் வளர்ந்திருந்த புற்களையும் களைகளையும் ஒரு ரோஜாத்தண்டை நடும் அளவிற்கு வெட்டியெறிந்தான். கொஞ்சம் நீர் தெளித்து கத்தியால் கொத்தினான். குழி பறித்து முந்தைய நாளிரவு காலில் குத்திய தண்டை நட்டான். மண்ணை மூடி, கொஞ்சம் நீரூற்றினான்.

நட்ட செடி வேகமாக வளர்ந்தது. இரண்டு மாதங்களில் ஏழு மீட்டர் வளர்ச்சி. பானு “என்னங்க ! இவ்வளவு வேகமா வளருது?” என்றாள். ஆறு மாதங்களானது. ஒரு ரோஜா கூட பூக்கவில்லை. ஸ்டேஷன் மாஸ்டர் ரங்கநாதன் தன் வீட்டில் பெரிய பூந்தோட்டம் வைத்திருக்கிறார். அவரின் ஆலோசனை படி, ”ரோகார்” மருந்தடித்தான். ஒன்றும் பயனில்லை. சில மாதங்களுக்கு பிறகு, செடியின் இலைகளில் துளை விழ ஆரம்பித்தன. ”ஏதாவது நோயாய் இருக்கும்” என்றார் ரங்கநாதன். நோயுற்ற கிளைகளை வெட்டினான். செடியின் உயரம் குறைந்தது. மீண்டும் நெடிந்து வளர்ந்தது. மரமோ என்று வியக்குமளவிற்கு.

பானுவிற்கு ரமணி எப்படி முன்னரெல்லாம் கொல்லைப்புறத்தில் வெட்டியாக உட்கார்ந்திருந்தது பிடிக்கவில்லையோ, இப்போது அந்த ரோஜாச்செடியிடம் காட்டும் கவனமும் பிடிக்கவில்லை. “என்னங்க ஏதாவது உருப்படியா செய்யலாமில்லையா…காலை மாலைன்னு அந்த மலட்டு ரோஜாச்செடிக்கு மேல இவ்வளவு கவனம் தேவையா?” என்றாள். அன்று மாலையும் அவன் ஊரெல்லை வரை வாக்கிங் போனான். அய்யனார் கோவில் கட்டிட வேலை முடிந்திருக்க வேண்டும். உட்கார மணல் கிடைக்கவில்லை. கொஞ்சம் தள்ளி இருந்த தென்னந்தோப்பு டூரிங் டாக்கீஸ் வரை நடந்தான். மாலை ஷோவுக்கு இன்னும் டிக்கட் கொடுக்க ஆரம்பிக்கவில்லை. மூடப்பட்டிருந்த டிக்கட் கௌண்டர் முன் நான்கைந்து பேர் காத்திருந்தனர். தியேட்டர் வாசல் கடையில் இரண்டு கை முறுக்குகளை வாங்கித்தின்றான்.

இரவு இல்லம் திரும்பியதும் பானுவிடம் சொன்னான் : ”நான் என்ன பண்ணாலும் உனக்கு பிடிக்காமல் இருக்கலாம்….சொல்லு…கேட்டுக்கறேன்..ஆனால் நான் வளர்க்கிற ரோஜா செடியை மட்டும் மலடு என்று சொல்லாதே…அது சீக்கிரமே பூக்கும் பாரு” பானு எந்த ஆர்வத்தையும் காட்டாமல் “சரி சரி சாப்பிட வாங்க” என்றாள்.

சில நாட்களில் ஒரே காம்பில் இரு மொட்டுகள் முளைத்தன. அதை பார்த்ததும் பானுவிடம் சொல்லிக்காட்ட வேண்டுமென்ற எண்ணம் தோன்றியது. வேண்டாம், பூ வந்ததும் அவளே பார்த்துக்கொள்ளட்டும் என்று விட்டுவிட்டான்.

ஒரிரு நாட்கள் கழித்து விடியற்காலை பொழுது இயற்கையின் அழைப்பை ஏற்று கொல்லைப்புறம் வந்தபோது ரமணி அந்த அதிசயத்தை கண்டான். இரு மொட்டுகளும் ஜோடி ரோஜாக்களாக பூத்திருந்தன. ஒன்று ரோஸ் நிற ரோஜா. இன்னொன்று கறுப்பு நிற ரோஜா. கறுப்பு ரோஜாவை முதலில் வாடி உதிருகையில் நிறமிழந்த ரோஜாவென்று நினைத்தான். அருகே சென்று லேசாக வருடிப்பார்க்கையில் அது புதிதாக மலர்ந்த இயற்கை ரோஜாவென்று புரிந்தது. ஒரே செடியில் எப்படி இரு நிறத்தில் ரோஜாக்கள் பூக்கும்? இரு வெவ்வேறு நிற ரோஜாச்செடியை ஒட்டுப்போடும் போது ஒரு புது நிறத்தில் ரோஜா பூக்கும். ஆனால் ஒரே செடியில் இரண்டு நிறத்தில் பூக்குமா? இது ஒரே செடியா அல்லது இரண்டு செடிகளா? உன்னிப்பாக அந்த செடியை உற்று நோக்கினான். இல்லை ஒரு செடிதான். அக்கம்பக்கத்தில் ஒரு செடியுமில்லை. ஒரே புற்களும் புதர்களும் மட்டுமே மண்டியிருந்தன.. செடியின் அடி தண்டுகளை நன்றாக பார்த்தான். ஒன்றும் வித்தியாசமாக தெரியவில்லை.

blackrosesஅன்று மாலை வீடு வந்ததுமே, மூத்தமகள் “அப்பா, அந்த ரோஜா செடியை போய் பாருங்களேன்…ரொம்பவும் அதிசயமா இருக்கு” என்றாள். “ரெண்டு நிற ரோஜாவை சொல்கிறாயா? அதான் காலையிலேயெ பார்த்தமே!” என்றான் ரமணி. ”இல்லப்பா….இது வேற” என்றாள். கொல்லைப்புறம் போய் அவன் கண்ட காட்சி அவனை வியப்பின் உச்சிக்கு தூக்கிச்சென்றது. மலர்களை வண்ணத்துப்பூச்சி மொய்ப்பது புதிதில்லை. இரண்டு மலர் மட்டுமே பூத்திருக்கும் ஒற்றைச்செடியை எத்தனை வண்ணத்துப்பூச்சி மொய்க்கும்? இரண்டு? மூன்று? பத்து? இருபது? நூறு? ரமணி வளர்த்த இருநிற ரோஜாச்செடியை விதவிதமான நிறத்தில் எண்ணிலடங்கா வண்ணத்துப்பூச்சிகள் மொய்த்துக்கொண்டிருந்தன. அவன் பார்வை உறைந்துபோனது. இப்படி ஒரு திருஷ்யத்தை அவன் திரைப்படங்களில் கூட கண்டதில்லை. பானுவும் கூட மௌனமாகிவிட்டாள். முழுக்குடும்பமே ரோஜாச்செடியையும் அதைச்சுற்றி மொய்த்த ஏராளமான வண்ணத்துப்பூச்சிகளை பார்த்துக்கொண்டிருந்தது.

ரமணியின் பள்ளி தினங்களில் மூன்று பட்டையான நீளக்கண்ணாடிகள், வண்ண கண்ணாடி வளையல் துண்டுகள் மற்றும் அட்டைகள் கொண்டு கலைடாஸ்கோப் செய்வான். ஒற்றைக்கண் கொண்டு கலைடாஸ்கோப்புக்குள் பார்க்கும்போது வளையல் துண்டுகள் உருண்டும் கண்ணாடிப்பட்டைகளில் பிரதிபலித்தும் பல்வேறு நிற வடிவங்களைக்காட்டும். அதிசய ரோஜாச்செடியை மொய்க்கும் பல்லாயிரம் வண்ணத்துப்பூச்சிகளும் அத்தகையதொரு விளைவைத்தான் பார்ப்பவரின் கண்களுக்கு தந்துகொண்டிருந்தன.

பூத்திருந்த ஒரு ஜோடி மலர் உதிர்ந்த பிறகே அடுத்த ஜோடி மலர் பூத்தது. ஒரே சமயத்தில் ஒரு ஜோடிக்கு மேல் பூப்பதில்லை. செடியில் மலர்கள் இல்லாத நாட்களில் வண்ணத்துப்பூச்சிகள் மொய்ப்பதில்லை. அத்தனை வண்ணத்துப்பூச்சிகளும் எங்கு போகின்றன, எப்படி ரோஜாக்கள் மலர்ந்தவுடன் தோன்றுகின்றன என்பது பெரும் புதிராக இருந்தது.

ரங்கநாதனுக்கு தெரிந்தவர் ஒருவர் – இருதயராஜ் – பக்கத்து பெரு நகரில் உள்ள வேளாண் பல்கலைக்கழகத்தில் தோட்டவியல் துறை பேராசிரியராக இருந்தார். அவர் ஒரு நாள் மாலை சில ஆராய்ச்சியாளர்களுடன் ரமணியின் வீட்டுக்கு வந்தார். அவர் வந்தபொழுது, ஏற்கனவே பானுவின் நண்பிகளும் அவர்களின் குழந்தைகளும் அதிசய ரோஜாச்செடியை கண்டு ரசித்துக்கொண்டிருந்தார்கள்.

பானு கொண்டுவந்த காபியை வாங்கிக்கொண்டே “என்ன ரமணி, டிக்கட் போட்டு எல்லோரையும் உள்ளே விடலாம் போலிருக்கிறதே” என்றார் ரங்கநாதன்.

“தெரியவில்லை சார், பேராசிரியர் பார்த்தாரென்றால் அறிவியல் பூர்வமான காரணத்தை கண்டுபிடித்துக்கூறி விடுவார். அப்படிக்கூறிவிட்டாரென்றால் எல்லோருக்கும் ஆர்வம் குறைந்துவிடும்” என்றான் ரமணி.

பேராசிரியர் இருதயராஜ் ரோஜாச்செடியை நீண்ட நேரம் பார்த்தவாறு நின்றார். இலைகள் சிலவற்றை பறித்தார். சிறிதாக தண்டு சாம்பிளை எடுத்துக்கொண்டார். பல்கலைகழகத்தில் உள்ள பாலி ஹௌஸில் வைத்து செடியை வளர்க்க முயலப்போவதாக சொன்னார்.

“இயற்கையில் கறுப்பு ரோஜா இல்லையென்றே அறிவியலாளர்கள் கருதுகின்றனர். உங்கள் வீட்டில் பூத்திருக்கும் கறுப்பு ரோஜா அதிசயம் தான்” என்றார்.

“ரோஜாப்பூவிற்கு நிறம் எதனால் கிடைக்கிறது?” – ரங்கநாதன்

கனைத்துவிட்டு ஒரு அறிவியல் லெக்சர் கொடுத்தார் இருதயராஜ்

“ரோஜாச்செடிகளில் இருக்கும் பிக்மென்ட் அல்லது நிறமிகளே அவற்றின் பூக்களுக்கு நிறத்தை தருகின்றன. ரொஜாச்செடிகள் மூன்று விதமான நிறமிகளை உற்பத்தி செய்கின்றன. இவற்றில் இரண்டு நிறமிகள் – ஊதா மற்றும் மஞ்சள் – எல்லா ரோஜாச்செடியிலும் இருப்பன. அவற்றின் அளவு வேறுபடுதலே அவைகள் தரும் பூக்களின் ஷேட்களை நிர்ணயிக்கின்றன. இரத்த சிவப்பு நிறமி அபூர்வமாக சில ரோஜா வகைகளில் இருக்கின்றன. நிறமிகளின் சேர்க்கையின் விகிதத்தை பொறுத்து பூக்களின் நிறச்செறிவு வேறுபடுகிறது”

“அப்படியானால் கறுப்பு நிற பிக்மென்டும் இருக்கலாமல்லவா?” – பானு

“கறுப்பு நிற ரோஜாக்கள் இயற்கையில் இதற்கு முன்னர் இருந்ததில்லை. ஏற்கெனவே சொல்லப்பட்ட மூன்று நிறமிகளால் கறுப்பு வண்ணத்தை உருவாகுதல் சாத்தியமில்லை. குறுக்கு இனப்பெருக்கம் வாயிலாக DNA மரபணுக்களை மாற்றுதல் மூலம் தாவரவியலாளர்கள் ஆய்வுக்கூடங்களில் மட்டும் இதுவரை கறுப்பு வண்ண ரோஜாக்களை உருவாக்கியிருக்கிறார்கள்”

“ஒரே செடியில் இரு வண்ண ரோஜாக்கள் பூப்பது சாத்தியமா?” – ரங்கநாதன்.

“வெவ்வேறு ஷேட்கள் கொண்ட ரோஜாக்கள் செடியின் வெவ்வேறு பகுதிகளில் பூப்பது சாத்தியம். ஆனால், ரோஸ் நிறம் மற்றும் கறுப்பு நிறம் கொண்ட ரோஜாக்கள் ஒரே காம்பில் பூப்பது சாத்தியமில்லை என்றே எண்ணுகிறேன்”

“வண்ணத்துப்பூச்சிகள்?” – ரமணி

“இந்த ஏரியாவில் நிறைய வண்ணத்துப்பூச்சிகள் இருக்கலாம்..இல்லையேல் இம்முறை ப்ரீடீங் சீசனில் வண்ணத்துப்பூச்சிகளின் தொகை பெருகியிருக்கலாம்.”

ரங்கநாதனும் இருதயராஜும் கிளம்பிச்சென்ற பின்னர் கொல்லைப்புறம் சென்று ரோஜாச்செடிக்கு நீரூற்றினான். கொஞ்ச நேரம் அமைதியாக அங்கேயே நின்று கொண்டிருந்தான். இருட்டிவிட்டபடியால், வண்ணத்துப்பூச்சிகள் செடியை மொய்க்கவில்லை. அவைகள் எங்கே போயிருக்கக்கூடும்? மாயமாய் மறைந்துவிட்டனவோ? சமையலறையில் பானு பாத்திரங்களை உருட்டும் சத்தம் பலமாய்க்கேட்டது.

ரமணியை டெபுடேஷனில் திண்டுக்கல் அனுப்பிவைத்தார்கள். பதினைந்து நாட்கள் திண்டுக்கல்லில் இருக்க வேண்டியதாயிற்று. மீண்டபொழுது, ரோஜாச்செடியை யாரோ ட்ரிம் செய்தது போலிருந்தது. பல்கலைக்கழகத்திலிருந்து ஆய்வு மாணவர்கள் வந்து பல சாம்பிள்கள் கேட்டதாயும், ஒரு சாம்பிள் ரூ 100 வீதம் தந்ததாகவும் பானு சொன்னாள். புத்திரிகள் புதிதாக அணிந்திருந்த ஆடைகள் எங்கிருந்து வந்தன என்று ரமணி கேட்கவில்லை. ரோஜாச்செடி குடும்பத்தலைவனாகி விட்டதோ? ரமணியும் ரோஜாச்செடி போலவோ?. ஒரே ஊர் ஒரே வீடு என்று இருப்பதில். ரோஜாச்செடியும் எங்கும் நகர்வதில்லை.

இருதயராஜ் ஒரு நாள் போன் செய்து ரமணியை பல்கலைக்கழகம் வருமாறு அழைத்தார். அவர் எடுத்து சென்றிருந்த தண்டு பாலி-ஹௌஸில் நன்கு வளர்ந்து பூத்திருந்தது. ஒரே சமயத்தில் ஒரு பூ தான் மலர்கிறதாம். வெறும் ரோஸ் நிற ரோஜாதான் மலர்கிறதாம். எடுத்த சாம்பிளின் DNA-வும் பாலி-ஹௌஸில் வளர்ந்த செடியின் DNA-வில் ஒரு மாறுதலும் இல்லையாம். அவருடைய மாணவர்கள் பானுவிடமிருந்து விலைக்கு வாங்கிய தண்டுகள் எல்லாம் வேவ்வேறு இடங்களில் நடப்பட்டிருக்கிறதாம். ஆராய்ச்சியை தீவிரப்படுத்தியிருப்பதாக இருதயராஜ் கூறினார்.

“ரமணி, ஒன்று கேட்கலாமா? நீங்கள் இருக்கும் இடம் உங்களுக்கு சொந்தமானதா? அல்லது வாடகைக்கு இருக்கிறீர்களா?” என்று கேட்டார் இருதயராஜ்.

“எனக்கு சொந்தமானது தான்” என்று பதிலளித்தான் ரமணி.

கொல்லைப்புறத்தில் இருந்த ஈசி-சேரை ரொம்ப நாளாக காணவில்லை. ஒரு நாள் மாலை பானு அதை கொல்லைப்புறத்தில் போட்டு உட்கார்ந்திருந்தாள். ரோஜாச்செடி அன்று பூத்திருக்காத காரணத்தால் வண்ணத்துப்பூச்சிகளின் பவனியில்லை. செடியை ஒட்டியிருந்த மண்ணை கொத்திவிட்டுக்கொண்டிருந்தான் ரமணி. மூத்த புதல்வி கொல்லைப்புறத்துக்கு வந்து “அம்மா இதை பாரும்மா..நம்ம ரோஜாச்செடியை பத்தி பத்திரிக்கையில் வந்திருக்கு” என்று பானுவிடம் காண்பித்தாள். இருதயராஜ் எழுதிய கட்டுரை அது. வீட்டுக்கு வந்தபோது எப்போது ரோஜாச்செடியை புகைப்படம் எடுத்தார்? ரமணிக்கு சரியாக ஞாபகம் இல்லை.

பத்திரிக்கையாளர்கள், ஃபோட்டோகிராபர்கள், அறிவியலாளர்கள், தோட்டவியல் நிபுணர்கள், ஊருக்கு புதிதாக வருபவர்கள் என்று தினமும் யாரேனும் வீட்டுக்கு வந்தபடி இருந்தனர். ரோஜாச்செடி பூத்தவண்ணம் இருந்தது. பார்ப்பவர்களின் நெஞ்சத்தை மகிழ்வித்தது. ரமணியின் குடும்பத்தினர் செடியின் மீது மிகுந்த பற்று கொண்டிருந்தாலும், அன்னியர்கள் வீட்டுக்குள் நுழைந்தவண்ணம் இருப்பது அவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியது.

ரமணி மீண்டும் டெபுடேஷனில் அனுப்பப்பட்டான். இம்முறை மதுரையில் ஒரு மாதம் தங்க வேண்டியிருந்தது. மதுரை கோட்ட உயர் அதிகாரி ரமணியை ஒருமுறை தன் வீட்டில் பார்டிக்கு அழைத்தார். ரமணி வசிக்கும் ஊரில் ஒரு வீட்டின் பின்புறத்தில் வளரும் அதிசய ரோஜாச்செடியை பற்றி பத்திரிக்கையில் படித்ததை சொன்னார். அந்த செடி ரமணி வீட்டு கொல்லைப்புறத்தில் தான் வளர்கிறது என்று கேள்விப்பட்டதும் ஆச்சர்யப்பட்டார். டெபுடேஷன் கடைசி நாள் உயர் அதிகாரி ரமணியை தன் அறைக்கழைத்து ஒரு சிறு நினைவுப்பரிசொன்றை தந்தார். மூன்று வருடங்கள் முன்னரே புரோமோஷனுக்கான நேர்முகத்தேர்வில் பங்கு பெற தகுதியிருந்தும் விண்ணப்பிக்காதது ஏனென்று வினவினார். ரங்கநாதனிடம் பேசட்டுமாவென்றும் கேட்டார்.

இத்தனை வருடங்களாக புரோமொஷனே வேண்டாம் என்றிருந்த ரமணி சென்னை சென்று புரொமோஷனுக்கான நேர்முகத்தில் கலந்து கொள்ள தீர்மானித்தான். தீர்மானம் எதன் பொருட்டு என்பதில் ரமணிக்கு தெளிவு இல்லை. ஒரு வருடம் முன்னர் இத்தகையதொரு தீர்மானம் எடுக்கும் எண்ணம் ரமணிக்கு கனவிலும் உதித்திருக்காது. பானுவிடம் சொன்னால் அவள் மகிழ்ந்து போவாள் என்று நினைத்தான். அவளின் முகமோ சுண்டிப்போனது.

“இத்தனை வருஷம் இங்கேயே இருந்துட்டீங்க…புரொமோஷன் கிடைச்சுட்டா வேறு இடத்துக்கு ட்ரான்ஸ்ஃபர் பண்ணிடுவாங்களே….நம்மளால புது ஊர்ல அட்ஜஸ்ட் பண்ணி வாழமுடியுமா? குழந்தைகளின் படிப்பு வேறு பாதிக்குமே?” என்று கவலையுடன் கேட்டாள்.

ரமணி சென்னை சென்று நேர்காணலில் கலந்துகொண்டான். கேள்விகளுக்கு தன்னம்பிக்கையுடன் பதிலளித்தான். தேர்வு செய்யப்படுவோம் என்ற எதிர்பார்ப்பு ரமணிக்கு இருந்தது. முடிவு அறிவிக்கப்பட இரண்டு மாதம் ஆகும் என்று சொல்லப்பட்டது.

ரோஜாச்செடியில் பூத்த மலர்களை ரமணியின் குடும்பத்தார் தாம் சூட்டிக்கொள்ள என்றுமே பறித்ததில்லை. ரோஜாக்கள் வாடி உதிரும் வரை செடியிலேயே இருக்கும். நான்கு பெண்கள் இருக்கும் வீட்டில் தோட்டத்து ரோஜாக்கள் பறிக்கப்படாமல் போனது நிஜமாகவே இன்னோர் அதிசயந்தான். சென்னையிலிருந்து ரமணி திரும்பிய அடுத்த நாள் இரண்டாம் மகள் “அம்மா, அம்மா கறுப்பு ரோஜாவை பறித்து தலையில் வைத்துக்கொள்ள வேண்டுமென்று ஆசையாய் இருக்கிறது” என்றாள். “அப்பாவிடம் கேட்டுக்கொள்..ரோஜாக்களை பறித்தால் அவருக்கு பிடிக்காது” என்றாள் பானு. உரையாடலை கேட்டுக்கொண்டிருந்த ரமணி “அதற்கென்ன ஒரு ரோஜா என்ன இரண்டு ரோஜாக்களையும் பறித்து தருகிறேன். தலையில் வைத்துக்கொள்” என்றான். செடிக்கு கைதொடும் தூரத்தில் நின்று வண்ணத்துப்பூச்சிகள் விலகும் வரை காத்திருந்தான். வண்ணத்துப்பூச்சிகள் எல்லாம் வண்ணப்புகை மண்டலத்துக்குள் புகுந்து மறைந்தது போன்று ஒரிரு நிமிடங்களில் காணாமல் போயின. கத்திரிக்கோல் கொண்டு இரு ரோஜாக்களையும் பறித்து மகளிடம் தந்தான்.

சாயந்திரம் சில புகைப்படங்கள் எடுக்கவென இருதயராஜ் வந்தார். செடியில் ரோஜாக்கள் பறிக்கப்பட்டுவிட்டதால் செடியை புகைப்படம் எடுக்காமலேயே கிளம்பினார். ரமணியின் புரோமோஷன் இன்டர்வியு பற்றி விசாரித்தார். வேறு ஊரில் போஸ்டிங் கிடைத்தால் ரமணியின் திட்டம் என்ன என்பதை அறிய ஆர்வம் காட்டினார்.

கார் கிளம்புமுன் “ஒரு நிமிஷம்” என்று ரமணியை அருகே அழைத்து “பணி உயர்வு கிடைத்தால் வெளியூர் செல்ல வேண்டியிருக்கும். நல்ல விலை கிடைத்தால் இந்த வீட்டையும் தோட்டத்தையும் விற்க விரும்புவீர்களா?” என்று கேட்டார். ரமணி விடையேதும் அளிக்காமல் மௌனமாயிருந்தான். “இன்ஸ்டிட்யூட் ஒஃப் கார்டன் ரோஸஸ்’ ரிசர்ச்” என்ற சர்வதேச ஆய்வு நிறுவனம் தன் இந்தியா கிளையை அதிசய ரோஜாச்செடி இருக்கும் இந்த இடத்திலேயே ஆரம்பிக்க ஆவன செய்யுங்கள் என்று அவர்களின் ஆலோசகனான என்னை கேட்டுக்கொண்டிருக்கிறார்கள். மார்க்கெட் விலையைவிட கணிசமாக அதிக விலையை உங்களுக்கு நான் வாங்கித்தருகிறேன். என்ன சொல்கிறீர்கள்? யோசித்து சொல்லுங்கள்” இருதயராஜின் கார் கரும்புகையை கக்கியவாறே நகர்ந்தது.

நீண்ட யோசனையில் மூழ்கும் போதெல்லாம் ரமணிக்கு ஏற்படும் வாக்கிங் போகும் உந்துதல் அன்றும் அவனுள் எழுந்தது. இரண்டு தப்படி வைத்ததும் திடீரென மழை தூறத்துவங்கிற்று. வீட்டு வாசலுக்கு திரும்பினான். ஹாலை தாண்டி கொல்லைபுறம் வரை நீண்டு ரோஜாச்செடி மேல் அவன் பார்வை பட்டது. அன்று பூத்த ஜோடி ரோஜாக்கள் பறிக்கப்பட்டதாலும் வண்ணத்துப்பூச்சிகள் இல்லாமலும் வெறுமை படர்ந்து காட்சியளித்தது அவன் வளர்த்த அதிசய ரோஜாச்செடி.