வாசகர் மறுவினை

மாண்புமிகு ஆசிரியருக்கு,

மைத்ரேயன் எழுதிய “பார்த்தும் போர்ஹேவும் பின்னே டயரும்” என்ற கட்டுரையைப் படித்தேன். இது என்ன எல்லாரையும் போல சொல்வனமும் பின்னே ஞானும் என்று தலைப்புப் பஞ்சத்தைப் போக்கிக் கொள்ளத் தரம் தாழ்ந்து விட்டதே என்று ஒரு கணம் துணுக்குற்றேன்.

ஆனால் பார்த் சுயம் உட்பட அனைத்தையும் பிரதி வாசிப்பாகப் பார்த்தவர் என்று தொடங்கி, போர்ஹே அனைத்து பாத்திரங்களிலும் வாசகன் தன்னைப் பார்ப்பதான புரிதலைத் தருகிறார் என்று சொல்லி, டயர் பார்த் இருந்த இடத்திலிருந்து போர்ஹேவின நிலைப்பாட்டுக்கு வந்திருக்கிறார் என்பதை மைத்ரேயன் எவ்வளவு அழகாக விவரிக்கிறார். இதைவிட அருமையான, பொருத்தமான தலைப்பு இந்தக் கட்டுரைக்கு இருக்கவே முடியாது என்ற எண்ணம் எழுகிறது.

I is not an innocent subject, anterior to the text என்ற சூத்திரத்தின் இருமுனைக் கூர்மையையும் தலைப்பில் உள்ள ‘பின்னே டயரும்’ என்பதில் மறைந்திருந்து தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் ‘பின்னே ஞானும்’ என்பதான தன்னிலை எவ்வளவு சுருக்கமாகச் சுட்டி விடுகிறது.

இந்தத் தலைப்பைப் புரிந்து கொண்டவனுக்குக் மைத்ரேயனின் கட்டுரை, கட்டுரையானது கட்டற்ற உரை என்ற பொருளில், பல உள்ளுறை விஷயங்களை உணர்த்துவதாக இருக்கிறது.

கட்டுரையைப் பதிப்பித்த சொல்வனத்துக்கு வாழ்த்துகள். இது தமிழ் இலக்கிய வரலாற்றில் மாபெரும் திருப்புமுனையாக இருக்கும். மைத்ரேயனின் அடுத்த கட்டுரையை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

நாச்சிமுத்து பழனியப்பன்