ரோமாக்கள் – அந்நியர்கள் ஆக்கப்பட்ட வரலாறு

அண்மையில் வந்த ஒரு சொல்வனம் இதழில் அ.முத்துலிங்கம் குறித்து வெங்கட் சாமிநாதன் கட்டுரையொன்று எழுதியிருந்தார், “ஒரு வித்தியாசமான புலம் பெயர்ந்த ஈழத் தமிழ்க்குரல்”. அதில் வெங்கட் சாமிநாதன், “தமிழும் அழிந்துதான் போகும். ஒரு சில மில்லியன் பேரே பேசும் மால்டீஷ், (மால்டா), திவேஹி (மாலத்தீவு), ஐஸ்லாண்டிக் (ஐஸ்லாந்து) இவையெல்லாம் அழியாது. ஆனால் தனக்கென ஒரு நாடு இல்லாத தமிழ் அழிந்துவிடும்” என்று சொல்லும் இராக்கியை மேற்கோள் காட்டுகிறார் (‘சுவருடன் பேசும் மனிதர்’ என்ற அ.முத்துலிங்கம் எழுதிய சிறுகதை). அ.முத்துலிங்கமோ, வெங்கட் சாமிநாதனோ ஒவ்வொரு மொழிக்கும் ஒரு நிலப்பரப்பு இருப்பதென்பது சாத்தியமில்லை என்பதை அறியாதவர்களல்ல. தமிழ் மீது கொண்ட அக்கறையால் மட்டுமே இதைப் பேசுவதாக இருக்க வேண்டும். ஏனெனில் இந்தத் தர்க்கத்தை நீட்டித்துச் சென்றால் தமிழகத்தில் உள்ள, தமிழகத்துக்கு உரிய. தமிழைவிடத் தொன்மையான, தமிழைவிட அழிவுக்கு மிக அருகில் உள்ள மொழிகளுக்கும் தமிழகத்தையும் துண்டாக்கித் தர வேண்டியிருக்கும்.

இன்றைய பண்பாடும், ஆட்சிமுறையும், மையத்தில் தம் அதிகாரத்தைக் குவித்து வைத்திருக்கின்றன. நம் நாகரிகம் இந்தக் குவிமையத்தை நோக்கி நம்மைச் செலுத்துவதாக இருக்கிறது. நிலத்தை வரையறையாகக் கொண்ட தேசிய அமைப்பொன்று மொழி, பண்பாடு, மற்றும் இன அடையாளங்களைக் காக்கும் என்பது எதிர்பார்ப்பு. இதில் உண்மையும் இருக்கலாம்.

ஆனால், வேலிகள் காப்பதோடு பிரிக்கவும் செய்கின்றன. புதிதாய் அமைக்கப்படும் வேலிகள் ஒரு சமூகத்தின் பெரும்பான்மை மக்களுக்குப் பாதுகாப்பளிக்கும் அதே நேரத்தில் ஒரு புதிய சிறுபான்மையினரை உருவாக்கி, அவர்களுக்கும், அவர்களுடைய மொழி, பண்பாடு, இனம் மற்றும் வாழ்வுமுறைகளுக்கும் அச்சுறுத்தலாகவும் இருக்கின்றன. இன்றைய தலைமுறைக்குச் செல்லப்பிள்ளைகளாக இருக்கும் சிறுபான்மையினர் நாளைய தலைமுறையின் வெறுப்புக்கும் காழ்ப்புக்கும் ஆளாகக்கூடிய சாத்தியத்தை நீக்க வழியில்லை. அதிகாரக் குவிமையங்களைக் குலைக்க வேண்டுமேயல்லாமல், புதிய குவிமையங்கள் உருவாவது சமூகப் பிரச்சினைகளுக்குத் தீர்வாகாது.

எங்கும் சிறுபான்மையினர் நிறைந்துள்ள இந்தியாவின் பிரச்சினைகள் வேறென்றாலும், ஒன்றுபட்ட ஐரோப்பா குறித்த விவாதங்கள் இந்திய ஒருமைப்பாட்டின் சிக்கல்களைப் புரிந்து கொள்ள ஓரளவு உதவுவதாக இருக்கின்றன. நாமறிந்த நவீனத்துவம் ஐரோப்பியக் கொடையாக இருக்கிறது. நம் சாபங்களில் பலவும் ஐரோப்பிய நவீனத்துவம் அளித்த வரங்களின் பக்க விளைவுகளே.

சல்லடைக் கண்களாய் இருந்த வேலிகள் சிறைக்கம்பிகளாய் உருமாற்றம் பெற்ற வரலாறே ஐரோப்பிய தேசியவாதத்தின் வரலாறு என்றும் சொல்லலாம். வரலாற்றில் நவீனத்துவத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சியோடு தேசியவாதமும் பிணைந்திருப்பது தற்செயல் நிகழ்வல்ல – பெரும்பாலும் ஐரோப்பிய காலனியாதிக்கத்துக்கு உட்பட்ட தேசங்கள்தான் தமக்குள்ளும் வெளியிலும் தீவிரமான எல்லைப் போர்களைச் சந்திக்கின்றன. தேசியவாதத்தின் வேர்கள் நவீனத்துவத்தில் இருக்கின்றன. நாகரிகம் வளர்ச்சியுற்று தேசியமாக உருவாகி, ஐரோப்பிய மண்ணில் எல்லைக் கம்பங்களை நட்டு, அதன் வரைபடங்களில் எல்லைக் கோடுகளைக் கீறியது. தேசியம் நிலப்பரப்புக் கோட்பாட்டைத் தழுவி, ஒரே மொழி, ஒரே சமயம், ஒரே மக்கள் என்ற ஒருமைப்பட்ட பண்பாட்டைத் தோற்றுவித்தது.

பண்பாட்டை நிலம் சார்ந்த வரைகள் கொண்டதாக நவீனத்துவ சிந்தனை கருதியது. இதையொட்டி நிலத்தில் நிறுவப்பட்ட வேலிகள், மொழிகளையும், சமயங்களையும், பண்பாடுகளையும், இனங்களையும் வெவ்வேறாக, வெவ்வேறு நிலப்பரப்புகளுக்கு உரியனவாகப் பிரித்தன. கண்முன் நிற்கும் வேலிகள், கண்ணுக்குத் தெரியாத வேலிகளுக்கு இருபுறமும் மக்களை எதிரெதிர் நிறுத்தின. இதன் விளைவுகள் மிகக் கொடுமையாக இருந்தன. இந்தப் பிரிவினையின் உச்சம்தான் போர்.

தேசியங்களுக்கு இடையான வேற்றுமையைத் தீர்க்க, போர் ஒரு பொதுமொழியாய் அமைந்ததால், இந்த தேசிய வேலிகளுக்குள் அகப்பட்ட சிறுபான்மையினர் மேல் தினமும் தொடர்ந்து போர் நிகழ்த்தப்பட்டது. அனைத்து தேசங்களிலும் இருந்ததால், அவற்றின் வேலிகளுக்குள்ளும், தமக்கென்று தேசிய உரிமை கோர எந்த நிலப்பரப்பும் இல்லாததால் தேசிய வேலிகளுக்கிடையிலும், சிக்கிக் கொண்ட ரோமாக்களின் வரலாறு ஐரோப்பிய நவீனத்துவத்தின் மீதான கடுமையான விமரிசனமாக அமைகிறது.

கம்யூனிச கிழக்காகவும், ஜனநாயக மேற்காகவும் பிளவுபட்ட ஐரோப்பா இன்று ஒருமைப்பாட்டைத் தேடுகிறது. பல்வேறு மொழிகளாகவும், தேசிய இனங்களாகவும் அறியப்பட்ட ஐரோப்பியர்கள், பொருளாதார நிர்பந்தங்களால் ஒன்றுபட்ட ஐரோப்பிய அமைப்பை உருவாக்கும் அவசியத்தை உணர்ந்திருக்கிறார்கள். தொழில்நுட்பம், பொருளாதாரம், அரசியல் நெறிமுறைகள் மட்டும் மக்களை இணைப்பதில்லை – இவற்றைத் தாண்டியும் அனைவரையும் ஒன்றுபடுத்தக்கூடிய பொதுப் பண்பாட்டை அடையாளம் காணும் முயற்சி தொடர்ந்தபடியே இருக்கிறது.

பொது ஐரோப்பிய வரலாறு என்ற ஒன்றை நோக்கி இக்கால விவாதங்கள் செல்வதாக இருக்கின்றன. வரலாற்றால் ஒன்றுபட்ட மக்களே எதிர்காலத்தை ஒருமித்த உணர்வுடன் அணுகக்கூடியவர்களாக உள்ளனர். பொதுத்தன்மை கொண்ட ஐரோப்பிய மக்களை ஒன்றிணைக்கும் நோக்கத்தில் இன்று அனைவருக்கும் பொதுவான ஒரு ஐரோப்பிய வரலாறு உருவாக்கப்படுகிறது. ஆனால், நம்மவர் என்ற பேச்சு அன்னியரை அடையாளப்படுத்துவதாகவும் இருக்கிறது. பொதுப் பண்புகளைக் கண்டறிதல், தனிப் பண்புகளை மறைப்பதாகவும் இருக்கிறது. இங்கு சட்டங்களைக் கொண்டும் அரசியல் நடைமுறைகளைக் கொண்டும் ஒருமித்த ஐரோப்பிய அமைப்பை உருவாக்கும் முயற்சிகள் எதிர்பார்த்திராத சிக்கல்களைச் சந்திக்கின்றன.

ஐரோப்பிய வரலாறு பல்வகைகளில் தனித்துவம் கொண்ட சமூக, அரசியல் அனுபவங்களின் தொகுப்பாக இருக்கிறது. ஒன்றுபட்ட ஐரோப்பா என்ற லட்சியத்தின் பெயரால் இவற்றைப் பின்னுக்குத் தள்ளி ஒற்றைத்தன்மை கொண்ட, அனைத்தினும் மேலாதிக்கம் செலுத்தும் வரலாற்றை எழுத முற்படுவது ஆபத்தானது. தேசிய எல்லைகளுக்கு அப்பாற்பட்ட வரலாற்று, சமூக, பண்பாட்டு போக்குகள் பேசப்படுவதே இந்த சிக்கல்களைப் புரிந்து கொள்ள உதவுவதாக இருக்கும்.

கடந்த காலம் குறித்த வேறுபட்ட பார்வைகள் நிகழ்காலத் தாக்கம் கொண்டவை. இவை எதிர்காலத்தையும் தீர்மானிக்கக் கூடியவை. இவற்றை எப்படி எதிர்கொள்ள முடியும், தற்சார்பு கொண்ட பண்பாட்டுத் தளத்தை அமைப்பது எத்தகைய அறச் சிக்கல்களுக்கும் வரலாற்றுப் பிழைகளுக்கும் காரணமாக இருக்க முடியும் என்பதை இந்தக் கட்டுரை விவாதிக்கிறது.

ஒற்றுமையும் வேற்றுமையும்

ஐரோப்பாவின் கிழக்கையும் மேற்கையும் ஒரு பொது ஐரோப்பியக் வரலாற்றில் இணைக்கக்கூடிய “மாபெரும் கதையாடல்” இன்று முயற்சிக்கப்படுகிறது. இதை சாதிப்பது எப்படி என்பது அண்மைக் காலங்களில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. இதன் அங்கமாக ஐரோப்பாவின் கிழக்கு-மேற்கு என்ற வரலாற்றுப் பிளவைக் குறித்து கேள்விகள் எழுப்பப்படுவதை நாம் இன்று காண்கிறோம். இந்தக் கேள்விக்கு அப்பாலும் ஐரோப்பிய வரலாற்றை விரித்துப் பேசத் தூண்டும் ஒரு புதிய கவனக் குவிப்பாக ஒரு கட்டுரையை யூரோஸைன் வெளியிட்டிருக்கிறது.

சரித்திர மற்றும் சமீபத்திய நிகழ்வுகளைப் பற்றிய நம் முரண்படும் புரிதல்கள் சமகாலச் சூழலில் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்துவனவாக இருக்கின்றன? எவ்வகையில் இவை ஐரோப்பாவை ஒரே சமயத்தில் இணைக்கவும் பிரிக்கவும் செய்கின்றன? இந்தக் கேள்விகளுக்கான பதில்கள் எவையாக இருக்கக்கூடும் என்பதைப் பேச இந்தக் கட்டுரை ரோமாக்களின் வரலாற்றை எடுத்துக் கொள்கிறது.

நாஜி இனஒழிப்பு நிகழ்ந்த காலகட்டத்தில்தான் ரோமாக்கள் ஐரோப்பிய அரசியல் வரலாற்றில் முதல் முறையாக இடம் பெறுகின்றனர் – இன்றைய ஆய்வுகள் இத்தகைய ஒரு முடிபை நிறுவ முற்படுகின்றன. ஆனால் இந்தப் பார்வை ரோமாக்களின் தனித்துவம் கொண்ட அறுநூறாண்டு கால வரலாற்றை அலட்சியப்படுத்துவதாக இருக்கிறது.

நீண்ட காலம் நாடோடிகளாக வாழ்ந்த ரோமாக்கள், எழுத்தைப் பயன்படுத்தும் பண்பாட்டுக்கு உரியவர்களாக இருக்கவில்லை. அதன் காரணமாகவே அவர்கள் தங்கள் வரலாற்றை ஆவணங்களாகப் பதிவு செய்யத் தவறினார்கள். ரோமாக்களின் பாரம்பரியத்தில் அதற்கான இடமில்லை. தீவிர அடக்குமுறைக்கு (persecution) ஆளாகித் தங்கள் தாய் மண்ணைவிட்டு வெளியேற்றப்பட்ட பிரஞ்சு ஹ்யூகோநாட்டுகளை எடுத்துக் கொண்டால், அவர்களுக்கென்று ஒரு வரலாறு இருக்கிறது. அவர்களுடைய வரலாற்றை அணுகுவதுபோல் ரோமாக்களின் வரலாற்றை நாம் அணுக முடியாது.

ஆனால் ரோமாக்களுக்கான சான்றுகள் நம் கலைகளிலும் இலக்கியங்களிலும் காணக் கிடைக்கின்றன. குடியுரிமை கொண்ட (settled), ப்யூடலிய அமைப்பில் தன்னையும் ஒருங்கிணைத்துக் கொண்ட ஐரோப்பிய மக்கள்திரள் தனக்கு அச்சுறுத்தலாய் உணர்ந்த ஒரு வாழ்க்கை முறையை எதிர்கொண்ட அனுபவத்தை நாம் அறியக்கூடிய ஆதாரங்களாக இவை இருக்கின்றன. ஐரோப்பியர்கள் தம்மைத் தற்காத்துக் கொள்ள அமைத்துக் கொண்ட ‘திருகல்’ கதைகளும் காட்சிகளும்தான் இவை. இருப்பினும் ஐரோப்பிய ரோமாக்களின் அறுநூறு ஆண்டுகால வரலாற்று ஆய்வுக்குத் துணை செய்ய இவை போதுமான ஆதாரங்களாக இருக்கின்றன.

அதிலும் குறிப்பாக, இனப்பகுப்பைத் (segregation) தன் இயல்பாய்க் கொண்ட பண்பாட்டுக் கைப்பற்றுதல் (cultural appropriation) என்ற அளவில் ஐரோப்பிய வரலாற்றைப் புரிந்து கொள்ள இத்தரவுகளே போதுமானவையாக இருக்கின்றன. ரோமாக்கள் உணர்ந்த உலகின் மிச்சம் மீதிகளை அவர்களுக்கு முழுக்க முழுக்க அன்னியர்களாக இருந்தவர்களின் ஆக்கங்களைக் கொண்டே நாம் அறிமுகப்படுத்திக் கொள்ள முடிகிறது. சித்தரிக்கப்பட முடியாதவை என்று கருதப்பட்ட பகுதிகளை இவற்றைக் கொண்டுதான் நாம் கற்பனை செய்தாக வேண்டும். ஜிப்சிக்கள், ஜிக்யூனர், டோடெம், சிகானி, ஜின்ஜெனெலர் என்று பலவாறு அழைக்கப்பட்டனர் ரோமாக்கள். இவர்களைக் குறித்த புறவயப்பட்ட பண்பாட்டு விவரணைகளே நம்மிடம் உள்ளன. ரோமாக்களின் ‘அழிக்கப்பட்ட’ அடையாளங்களும், அடையாளப்படுத்தப்பட்ட பண்பாட்டு இயல்புகளும் (cultural attributes) சீரற்ற அலகுகளாகக் கிடைக்கின்றன. ஐரோப்பியப் பண்பாட்டைச் சேர்ந்தவன் தன்னை உலகில் நாகரிக முன்னேற்றத்தைப் பரப்பும் கருவியாக (civilising agent) உருவாக்கிக் கொண்டதன் மறைபகுதிதான் ஜிப்சியின் உருவாக்கம் (invention).

துவக்கம் முதற்கொண்டே ரோமாவின் நிலை தனித்துவமிக்க ஒன்றாக இருந்தது. அவர்கள் இடையே நுழைந்தவர்கள், அழையாமல் வந்தவர்கள். எனவே மறைய வேண்டியவர்கள். ‘எங்கும் மறைத்திருக்கிறார்கள்,’ புரிந்துகொள்ள முடியாத விதிகளைப் பின்பற்றி வந்து போகிறார்கள், என்பனவற்றைக் காரணங்களாகக் கொண்டு அவர்கள் தீயவர்களாகக் கருதப்பட்டனர். இது புலப்பாட்டுக்கும் எதிர்கொள்தலுக்கும், காழ்ப்புக்கும் ஈர்ப்புக்கும் சமகணம் தருவதாக இருந்தது. வெகு காலம் முன்னரே, இடைக்காலம் முதல் நவீன காலம் வரையான இடைப்பட்ட காலத்தில் ரோமாக்கள் குறித்த கருத்துகள் பழகிய வார்ப்புகள், தோற்றங்கள், வடிவமைப்புகள், நடைமுறைப் போக்குகள் மற்றும் முதற்கதைகளின் தொகுப்பாகத் தோற்றம் பெற்றுவிட்டது (A repository of stereotypes, images, motifs, behavioural patterns and legends). வேரோடு அழிப்பது குறித்த கற்பனைகள் திரும்பத் திரும்ப அழிப்புச் செயல்களாக நடந்தேறின.

துவக்கங்களின் ரகசியம்

1400-ஆம் ஆண்டையொட்டிய காலத்தில் ரோமாக்கள், வெவ்வேறு வழிகளில் ஐரோப்பா வந்தடைந்தனர். அவர்கள் எந்த இடத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறித்து இருந்த தெளிவின்மை, ரோமாக்களை ‘ஏற்றுக் கொள்வதற்கு’ ஒரு தடையாக இருந்தது. ஜெர்மன்கள், கால்கள், ஆங்கல்கள் மற்றும் சாக்சன்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியையொட்டித் தங்கள் வருகைக்கும் ஆக்கிரமிப்புக்கும் நியாயம் கற்பித்துக் கொண்டனர். அவர்கள் தங்கள் இருப்பை உறுதி செய்து கொள்ளும் வகையில் தமக்குரிய தேசிய துவக்கம் மற்றும் அதிகார அமைப்பை வலுப்படுத்தும் தொன்மங்களைக் கட்டமைத்துக் கொண்டார்கள். ஆனால் ரோமாக்களைக் குறித்த முதற்கதைகள் (legends) அவர்களின் தொலைதூரத் துவக்கங்களையும் குடியேறத் தவறியமையையுமே பேசின. ரோமாக்களின் வம்சாவளி குறித்த ஊகங்கள் அவர்களை வகைமைப்படுத்த முயன்ற முதல் முயற்சிகளுக்கு வழி செய்தன. ரோமாக்களே சொல்லிக் கொண்டதுபோல், ரோமாக்கள் கிறித்துவின் காலத்தில் எகிப்தில் வாழ்ந்தார்கள் என்பதும் அவர்கள் எகிப்திலிருந்து ஐரோப்பாவுக்குக் குடிபெயர்ந்தார்கள் என்பதும் உண்மையாக இருந்தால், ‘எகிப்தியர்கள்’ தங்கள் மூதாதையர்களின் மண்ணான எகிப்துக்கே திரும்பிச் செல்ல வேண்டும் என்பது ரோமாக்கள் அழையாமல் குடிபுகுந்த ஐரோப்பிய தேசங்களின் வாதமாக இருந்தது.

அக்காலத்தில் அடிப்படைக் கேள்வியாக இருந்த சமயச் சார்புடன் ரோமாக்களின் பாரம்பர்யம் குறித்த விசாரணை நெருங்கிய தொடர்பு கொண்ட ஒன்றாகவும் இருந்தது. ரோமாக்களின் சமுதாய அமைப்பு திருச்சபை, பாதிரியார், தேவாலயம் என்ற வகையிலான நிறுவனப்படுத்தப்பட்ட கிருத்துவத்தைப் பின்பற்றுவதாயில்லை. எனவே ரோமாக்களின் சமயம் குறித்து மூவகைப்பட்ட நம்பிக்கைகள் தோற்றம் பெற்றன.

முதன்மையான நம்பிக்கை – ரோமாக்கள் கிறித்தவ நம்பிக்கைகளை மேம்பாக்காக மட்டுமே ஏற்றுக் கொண்டனர் என்பதாக இருந்தது. பரிசுப் பொருட்களையும் ஆவணங்களையும் பெற்றுக் கொள்ள பலமுறை ஞானஸ்நானம் பெற்றுக் கொள்வதை ரோமாக்கள் வழக்கமாக வைத்திருந்தனர் என்று மார்டின் லூதர் உட்பட பலரும் நம்பினார்கள். ரோமாக்கள் துருக்கிய உளவாளிகள் என்ற குற்றச்சாட்டு இரண்டாம் வகை நம்பிக்கைக்கு ஆதாரமாக இருந்தது. இதனால் ரோமாக்கள் இஸ்லாமியர்களாகக் கருதப்பட்டனர். மூன்றாம் வகை நம்பிக்கை மிகத் தீவிரமானது. ரோமாக்கள் தெய்வநம்பிக்கையற்றவர்கள் (heathen), சாத்தான் சடங்குகளை ரகசியமாக நிகழ்த்தி வழிபட்டனர் என்ற நம்பிக்கைதான் அது. ரோமாக்களின் குறிசொல்லல், மருத்துவ மந்திரங்கள் மற்றும் சபித்தல்கள் இதற்கான ஆதாரங்களைத் தருவதாக எண்ணப்பட்டது. இதே காரணங்களை முன்வைத்து, மனிதர்களை உண்பவர்கள் என்ற குற்றச்சாட்டு ரோமாக்களின் மீது திரும்பத் திரும்ப சுமத்தப்பட்டது. இருபதாம் நூற்றாண்டிலும் இந்த மூன்று ஊகக் கருத்துகளும் (theories) நம்பிக்கைக்குரியனவாக இருந்தன.

ஆனால் இந்த மூன்று நம்பிக்கைகளையும் விட அறிவியலுக்கு நெருக்கமான நான்காவது காரணம், ரோமாக்கள் இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் என்பது. மரபியல் ரீதியான ஆராயச்சிகள் மூலம் ரோமாக்கள் இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்த ஜாட் இனத்தவர்கள் என்று உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. ரோமாக்களின் மொழியில் இந்திய மொழிகளின் பல வார்த்தைகள் புழங்குகின்றன. அவர்களின் கடவுள்களுக்கு சிவன், அனுமன் என்றெல்லாம் பெயர்களிருக்கின்றன. ஆனால் இவர்கள் இவ்வாறு இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்ததற்கு வரலாற்று ரீதியான தரவுகள் எதுவும் கிடைக்கவில்லை. கஜினிமுகமது இந்தியப் படையெடுப்புக்குப் பின் அடிமைகளாகக் கூட்டிச் சென்று அவனால் கைவிடப்பட்ட மக்களாக இருக்கலாம் என்று ஒரு யூகம் இருக்கிறது. ரோமாக்களிடையேயும் பலருக்குத் தாங்கள் இந்தியாவிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் என்ற நம்பிக்கை வழிவழியாக உண்டு. 2009-ஆம் ஆண்டு உறுதிப்படுத்தப்பட்ட மரபியல் முடிவுக்குப்பின் இந்த நம்பிக்கை இன்னும் தீவிரமாகத் தொடங்கியிருக்கிறது.

ரோமாக்களின் சமூக அமைப்பு மிக எளிமையான ஒன்றாகக் கருதப்பட்டது. அதன் ஆட்சியாளர்களின் குடும்ப வரலாறுகள் ஆய்வுக்குரியனவாக மதிக்கப்படவில்லை. ஒருபுறம் முத்திரை (insignia) மற்றும் உடையால் ‘அரசர்’ அல்லது ‘ட்யூக்’ என்று அடையாளம் காட்டப்படக்கூடிய ஒரு தலைமை இருந்தது. பதினைந்தாம் நூற்றாண்டிலும் இவர்கள் சுதந்திரமான சிற்றரசர்கள், பேரரசர்கள் மற்றும் போப்புகள் தங்களுக்கு அளித்திருந்த பிதுரார்ஜித (patrimony) மற்றும் பாதுகாப்பு ஆவணக் கடிதங்களை வைத்திருந்தனர். மறுபுறம் அவர்களுடைய மக்கள் இருந்தனர். இவர்கள் அதிக பட்சம் சில டஜன் நபர்கள் என்ற அளவில் மட்டுமே இருந்தனர்.

ரோமாக்களைக் கருதும்போது, தவறான அவதானிப்புகளும் அக்கறையில்லாத விவரணைகளும் கொண்ட ஒரு கவனம் குலைந்த வெளியையே இடம் பெயர்ந்தவர்களைப் பேசும் ஆவணங்களும் இலக்கியப் படைப்புகளும் உருவாக்குகின்றன என்பதை நாம் காண்கிறோம். இவற்றில் மாற்றார் விவரிக்கப்படுவதில்லை, புதிதாய்ப் படைக்கப்படுகிறார்கள்.

தேசமற்று, வீடற்று, இடமற்று

ரோமாக்கள் எந்த ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்புக்கும் உரியவர்களாக இருக்கவில்லை. அவர்கள் ஐரோப்பியர்களால் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இது இன்னுமொரு தடையாக இருந்தது. பெரும்பான்மையான ரோமாக்கள் துவக்க காலங்களில் நாடோடி வாழ்க்கை முறையைக் கடைபிடித்ததால் அவர்கள் அகதிகளாகவும் யாத்திரிகர்களாகவும் அடையாளம் காணப்பட்டு, பின் விரைவில் கைவிடப்பட்டனர். மிகக் குறைவான அளவிலிருந்தாலும், நம்மிடமுள்ள தரவுகளின் அடிப்படையில் இதை அறிய முடிகிறது.

நவீன காலகட்டத்தின் துவக்கங்களில் தேசிய நிலப்பரப்புக் கோட்பாடு வலுப்பெற்றது. அதன் அடித்தளமாக இருந்த நிலப்பரப்பு சார்ந்த சிந்தனை அமைப்பு ரோமாக்களின் வாழ்க்கை முறையை குலைவுத் தன்மை கொண்டதாக எண்ணி அச்சமுற்றது. ஏனெனில், ரோமாக்கள் சமூக, சட்ட, பொருளாதார, பண்பாட்டுப் பிணைப்புகளிலிருந்து தங்களைத் துணித்துக் கொள்ள முற்பட்டனர். நிலம் உட்பட, பூமியில் உள்ளவை அனைத்தும், யாரோ ஒருவருக்கு உரியது என்றும், எதற்கும் உரியவர் ஒருவர் உண்டு என்றும் நவீன நிலப்பரப்புச் சிந்தனை கருதலாயிற்று. இதனால், இயல்பாய் அமைந்த நிலப்பரப்புடன் உணர்வு அடிப்படையிலான சுய அடையாளம் நிலைபெற்றது.

“ஹெய்மத்” (அகம்) என்ற பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஜெர்மானியக் கோட்பாடு இதன் உச்சத்தைத் தொடுவதாக இருந்தது. ‘சொத்து’, ‘அகம்’ போன்ற தற்சார்பில் எழும் உணர்வுகளின் தன்மைகள் சட்டத்தாலும் அதிகாரத்தாலும் நிறுவப்பட்டு, அத்தாட்சியளிக்கப்பட்டு, அதன் எல்லைகள் வகுக்கப்பட்டு வரைமுறைப்படுத்தப்பட்டாக வேண்டும் என்ற நிலை உருவாயிற்று. தனக்குரிய வாழ்க்கை முறையே இயல்பு நிலையின் முழுமையான வரையளவாக அறியப்படுவதை உறுதி செய்யும் புரிதலாக நிலப்பரப்புக் கோட்பாடு மாற்றம் பெற்றது. இப்படிப்பட்ட சூழலில் தெருக்கள், தரிசுகள், மக்களற்ற வனாந்தரங்கள், ஐரோப்பிய நாகரிகத்தின் வாழமுடியாத விளிம்புகளாக உள்ள சதுப்புகளும் பாலைகளுமன்றி வேறெங்கு ரோமாக்களுக்குரிய இடம் தரப்பட முடியும்?

ஐரோப்பிய நிலஅமைப்பு குறியீட்டு வலுப்பெறலும் நிலப்பரப்பு சார்ந்த புதிய அதிகார அமைப்பும் ரோமாக்களின் ஒதுக்கத்தை அதிகரித்தன. பொதுவாகச் சொன்னால், பல தலைமுறைகளாக குறிப்பிட்ட ஒரு புவி ஆரத்தையொட்டி அவர்கள் வாழ்ந்திருந்தாலும் தமக்கென்று ஒரு அகமோ இடமோ அற்ற அன்னியர்களாக மட்டுமே அறியப்பட்டனர். 1650க்கும் 1750க்கும் இடையே நிலப்பரப்புச் சிந்தனை ரோமாக்களுக்கு எதிரான அரசமைப்பின் பயங்கரவாதமாக மாறிற்று. ‘ஊர்சுற்றிகள்’ என்று கேவலப்படுத்தப்பட்ட ரோமாக்கள் பெரும்பாலான அரசுகளில் இனியும் அனுமதிக்கப்படவில்லை. எல்லைகள் சிலவற்றில் அவர்களுக்காகவே தனியாக ஜிப்சி பலகைகள் அமைக்கப்பட்டன. வாசிக்கத் தெரியாதவர்களுக்கான அந்தப் படங்கள் அத்துமீறி நுழைபவர்களுக்காகக் காத்திருக்கும் தண்டனைகளைப் படம் போட்டுக் காட்டின: அடித்தல், சூடு வைத்தல் என்று துவங்கி முறி சக்கர மரணம் வரையான அனைத்தும்.

தேசிய நிலப்பரப்புகளுக்குள் நுழையக்கூடாது என்ற கட்டுப்பாடுகள் தொடர்ந்த துன்புறுத்தல்களுக்கும் வெளியேற்றங்களுக்கும் காரணமாயின. இதனால் தொலை நோக்கு திட்டமிடல் ரோமாக்களுக்கு சாத்தியமில்லாமல் போனது. நடைமுறையில் ஏழ்மையாலும், சத்துணவுப் பற்றாக்குறையாலும் உடல்நலமின்மையாலும் ரோமாக்களின் ஆயுட்காலம் குறைபட்டது. பதினெட்டாம் நூற்றாண்டில், ஸ்பெயின், மரியா தெரஸியா மற்றும் இரண்டாம் ஜோசப்பின் ஆஸ்திரியா போன்ற தேசங்கள் கட்டாயக் குடியமர்த்தலால் ரோமாக்களின்பால் நிலபரப்புக் கோட்பாட்டைத் திணிக்க முயன்றன. இந்த நடவடிக்கைகள் நாடோடி வாழ்க்கை முறையைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தன. தங்கள் மொழியைக் கைவிட்டு கத்தோலிக்க சமயத்தை ஏற்கும்படி ரோமாக்களைக் கட்டாயப்படுத்தின.

ஜிப்ஸி கூடாரங்களுக்கும் அதன் அச்சுறுத்தும் மக்களுக்கும் இருந்த உருவம் ‘அகம்’ என்பதைத் தலைகீழாக்கியது. காடுகளில் உள்ள திருடர்களின் குகைகளிலிருந்து ஐரோப்பாவின் தென்கிழக்கு பாலைகளின் ரோமா க்ரால்கள் (கூடாரங்கள்) வரையும், ஸ்பானிய கிடானோக்களின் குகைக் குடியிருப்புகள் முதல் ஆஷ்விட்ஸ்-பிர்கனாவில் தனித்து அமைக்கப்பட்ட ஜிக்யூனர்டாகர் வரையும் ரோமாக்களின் வசிப்பிடங்கள் விரிந்திருந்தன. அவர்களின் வாழ்விடங்கள் மரியாதைக்குரிய தனித்துவம் கொண்டவையாகவும் நினைக்கப்படவில்லை, பாதுகாக்கப்படவேண்டிய மதிப்பு கொண்ட பண்பாட்டு சொத்துகளாகவும் நினைக்கப்படவில்லை. மாறாக அவற்றின் அழிப்பை நாகரிகப்படுத்தும் செயலாக எண்ணற்ற இலக்கியப் படைப்புகள் போற்றின.

‘அழகிய ஜிப்ஸி’ என்ற படிமம் ஐரோப்பியப் பண்பாட்டுக் கருத்தோட்டத்தில் ஆற்றல் மிக்க ஒன்றாக உள்ளது. அது ஐரோப்பிய ரொமாண்டிக் கற்பனையின் விளைவோ, ஆங்கில விக்டோரிய இலக்கியத்தின் விளைவோ அல்ல. செம்பிராக்களும் எஸ்மரல்டாக்களும் கார்மன்களும்தான் நம் பண்பாட்டு நினைவில் அழிக்கமுடியாதபடி நிலைபெற்றுள்ளனர் என்றாலும் இதுதான் உண்மை. 1613ல் செர்வான்டஸ் எழுதிய லா ஜிடரில்லா என்ற குறுநாவல் ‘ஸ்பானிஷ்’ உடையை நினைவு கூர்ந்திருந்தது, தன்னடக்கத்தால் கட்டுப்படுத்தப்படாத ‘தறிகெட்ட’ பெண்மையும் ஆடலும் பாடலும் நமக்குப் பழகிப் போனவை- இவை பின்னர் பரவலாக விரும்பப்பட்டன. ‘அழகிய ஜிப்ஸிக்களை’ எதிர்கொள்ளுதலை நினைத்துப் பார்க்கும் இந்தக் கதைகளில் கவனிக்கத்தாக அம்சம் வேறொன்று: அவர்கள் பெரும்பான்மை சமூகத்தின் ஆண்களை மணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுவதில்லை. இந்தப் பெண்கள் தங்கள் நாடோடி வாழ்க்கை முறையை நிரந்தரமாகக் கை விடுவதுமில்லை. பொதுவாக அவர்கள் வாழ்வின் கதையாடல் உச்சத்தைத் தொட்டு நிறைவடையாமல் முடிகிறது. பொறாமை மேலிட்ட தங்கள் காதலர்களின் கைகளில் இறக்கிறார்கள், அல்லது, சிறையனுபாவமாக உணரப்படும் நாகரிக சமுதாயத்தில் சோபையிழந்து வாடி மறைகிறார்கள்.

கீழை மற்றும் அன்னியப்பாட்டின் ஈர்ப்பைப் பேசும் கதையாடல்களுக்குரிய பொது இயல்பு இது: அவற்றையொத்த “அழகிய ஜிப்ஸி’ ஆணின் பாலுணர்வு விழைவை நிறைவு செய்யும் இலக்காக மட்டுமே இருக்கிறது. பூர்ஷ்வாக்களுக்கு எதிரான நடத்தை, ‘இயல்பான’ பெண்மை, அச்சுறுத்தும் கட்டற்ற தன்மை, ஒழுக்கமின்மை, ஏன், சிறுபிள்ளைக் காதல் கனவுகளும் அவள்மேல் ஏற்றப்படுகின்றன. ‘அழகிய ஜிப்ஸி’ மிக நெருக்கமான பொழுதுகளிலும் ரகசியமானவள், அடையப்பட முடியாதவள், அவள் மறைக்கப்பட்ட, நாகரிகமற்ற அமைப்பினுள்ளோ விலங்கு வட்டத்தினுள்ளோ பின்வாங்கிக் கொள்கிறாள் – இதனால் அவள் தன்னை வேற்றாளாக்கிக் கொள்கிறாள். ஷந்தலா (1889) என்ற ஆகஸ்ட் ஸ்ட்ரின்ட்பர்க்கின் கதையின் நாயகன் குழந்தைப் பருவத்தைக் கடக்காத ஒரு இளம் ஜிப்ஸியுடனான பாலுறவு அனுபவத்தை விவரிக்கிறான்:

“அவன் ஒரு விலங்கைக் கட்டியணைத்திருந்தான். அணைப்புக்குப்பின் அந்த விலங்கு அவனை ஒரு பூனையைப் போல் முத்தமிட்டது. நச்சுக் காற்றை சுவாசிக்க அஞ்சினாற்போல், அந்த உதடுகளின் விலங்கு ஆன்மாவைச் சந்திக்க அவனது ஆன்மா அஞ்சியதுபோல், அவன் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.”

இக்கட்டுரை எழுத உதவியாக இருந்த யூரோஸைன் கட்டுரைகள்:
1.http://www.eurozine.com/articles/2011-02-28-eurozine-en.html
2.http://www.eurozine.com/articles/2012-02-24-bogdal-en.html