மகரந்தம்

48 துண்டுக் காட்சிகளும் காட்சித் துல்லியமும்

சினிமாவில் தொடர்ந்து தொழில் நுட்பம் முன்னேறுகிறது. முப்பரிமாணக் காட்சிகள் என்ற பெயர் கொண்ட 3-டி படங்கள் இப்போதுதான் அறிமுகமாகி பரவலாகி வருகின்றன. படச்சுருளை நம்பிப் படம் எடுப்பது குறைந்து டிஜிடல் முறையில் படமெடுப்பது பெரிதும் அதிகரித்து விட்டது. இப்போது படச்சுருளில் படம் யாரும் எடுக்கிறார்களா என்பதே ஐயம்தான். இவை ஒரு புறம் நடந்திருக்கையில் பீடர் ஜாக்ஸன் என்ற இயக்குநர்- லார்ட் ஆஃப் த ரிங்ஸ் (3 படங்கள்), கிங்காங், டின் டின்னின் சாகசங்கள் (தயாரிப்பு) என்று நமக்குத் தெரியவந்தவர்- இப்போது டோல்கைனின் இன்னொரு நாவலான த ஹாப்பிட்டை படமாக்கி முடிக்கவிருக்கிறார். இந்தப் படம் வழக்கமான வேகத்தில் படத் துண்டுகளை நகர்த்தாமல் முன்னைப் போல இரட்டை மடங்கு வேகத்தில் படத் துண்டுகளை ஓட்டுகிறது. முன்பு இருந்த வேகப்படி ஒரு வினாடிக்கு 24 துண்டுக் காட்சிகள் (ஃப்ரேம் என்பார்கள் இதை) திரையில் ஓடி தொடர்ந்த இயக்கமாக நமக்குப் பிரமையைத் தரும். இப்போது பீடர் ஜாக்ஸன் கொண்டு வருகிற படத்தில் வினாடிக்கு 48 துண்டுக் காட்சிகள் ஓடும். இதில் காட்சித் துல்லியம் எக்கச் சக்கமாகக் கூடுகிறது, நகர்வுகளில் வேகமான சண்டைக் காட்சிகளில் கூட மசமசப்பு மிகக் குறைந்து நமக்கு நேரில் பார்ப்பதான பிரமை கூடுகிறது என்கிறார்கள். இது சினிமாவை மேலும் எதார்த்தத்தோடு குழப்பிக் கொள்ளும்படி ஆக்கி விடுமா? தமிழ்ப் படங்களைப் பொறுத்து அந்தப் பிரச்சினை இல்லை. அவை என்றுமே எதார்த்தத்தோடு உறவற்றுதான் அமைக்கப்படுகின்றன. ஆனாலும் நம் ரசிகர்கள் எதார்த்தத்தைத் தமிழ்ப்படம் போல ஆக்க முயல்கிறார்கள். நம் கடந்த 40 ஆண்டு அரசியல் பண்பாட்டு இயக்கங்கள் இப்படிப்பட்டவைதானே? இனி இந்தச் செய்தியைப் படித்து சினிமாவில் வரப்போகும் அடுத்த சூனாமியைப் பற்றி அறியுங்கள்.

http://www.wired.com/underwire/2012/04/fast-frame-rate-movies/all/1


முப்பரிமாண அச்சடிப்பு

3டி சினிமாதான் உண்டா? இல்லை 3 டி அச்சடிப்பும் உண்டு என்கிறார்கள் இந்தத் தொழில் நுட்பத்தை விற்கும் நிறுவனங்கள். அச்சடிப்பு என்றால் ஏதோ காகிதத்தில் எழுத்தை அச்சடிப்பது அல்ல. பொருட்களையே இந்த அச்சடிப்பு எந்திரங்கள் நேரே கணினியில் உருவான டிஸைனை வைத்து உருவாக்கி விடுமாம். இதில் உருவாகிற பல பொருட்கள் மருத்துவத் துறையில் பயன்படத்துவங்கி இருக்கின்றன. சில ஃபாஷனாக இருக்க உடைகள், பொருட்களைத் தயாரிக்கின்றன. சில விளையாட்டுப் பொருட்களைத் தயாரிக்கப் பயன்படுகின்றன. படங்களை இங்கே பாருங்கள்.

http://www.wired.com/design/2012/04/10-things-3d-printers-can-do-now/?pid=163


நாய் டிவி

நம் ஊரில் நாளைக்கு எட்டு மணி நேரம் மின்வெட்டு, காஸ் சிலிண்டர் பற்றாக் குறை, மண் எண்ணெயும் கிடைக்க மாட்டேனென்கிறது. பெட்ரோல் விலை ஏறிக் கொண்டே போகிறது. அட ஒரு பலாப்பழம் ஆயிரம் ரூபாய்ங்கிறான் என்று பல குறைகளைச் சொல்கிறோம். மேற்கில் வேறு என்னென்னவோ பிரச்சினைகள். அங்கு வறுமை இல்லையா என்று கேட்காதீர்கள். வரவர மேற்கில் எல்லா நாட்டிலும் வறுமை, இருக்க வீடில்லாத மனிதர்கள், தெருவில் பெஞ்சில் தூங்கும் மனிதர்கள் என்று அப்படி மனிதர் எண்ணிக்கை கூடி வருகிறது. அது ஒரு பக்கம் இருக்க, வியாபாரிகள் வேறு என்னென்னவோ யோசிக்கிறார்கள். இதைப் பாருங்கள். வீட்டில் நாயை விட்டு விட்டுப் போனால் நாய் சோஃபாவைக் கடித்து, திரைகளைக் குதறி கலாட்டா செய்கிறதா. அதை வீட்டை விட்டு வெளியே விட்டும் போகமுடியவில்லையா? எளிய மாற்று : நாய் டிவிதான் அது. இதில் நாய்களுக்கென்று நிகழ்ச்சிகள் தயாரிக்கிறார்களாம். அது என்னது நாய்களுக்கென்று டிவி நிகழ்ச்சி என்கிறீர்களா? இந்தச் செய்தியைப் படித்தால் தெரியும்.

http://well.blogs.nytimes.com/2012/04/25/should-your-dog-be-watching-tv/


அதிகரிக்கும் நியுயார்க் நகர கட்டுப்பாடு

நியுயார்க் நகரில் காண்ட்ராக்டர்கள் இப்போது கடுமையாகக் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாகிறார்களாம். வீட்டுச் சொந்தக்காரர்களும் கூட. ஏப்ரல் மாதம் மழை பெய்யும். ஊரில் தண்ணீர் தேங்கும் இடங்களில்- நீச்சல் குளம், குட்டைகள், ஏரிகள் ஆகியனவற்றில் கொசு வளராமல் இருக்க நகர நிர்வாகம் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்கிறது. வீடுகளிலோ, கட்டிடம் கட்டுமிடங்களிலோ தண்ணீர் தேங்கி இருந்தால் வீட்டுக்காரர்களுக்கும், காண்ட்ராக்டர்களுக்கும் 1000 டாலர் வரை கூட அபராதம் விழும். (50,000 ரூபாய்)
ஒரு காண்ட்ராக்டர் பறவைகள் குளிக்கவென சிறு தொட்டி போல ஒன்றை நிறுவி இருந்தார். தினம் அதில் நீரை மாற்றவும் செய்தாராம். நிறைய பறவைகள் அங்கு வந்து குளித்துப் போயின என்கிறார். ஆனால் நகர நிர்வாகம் அவருக்கு அபராதம் விதித்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

http://www.nytimes.com/2012/04/23/nyregion/new-york-city-cracks-down-on-birdbaths-to-fight-west-nile-virus.html?_r=1

செய்தியை மேலும் படித்தால் நகர நிர்வாகமும் அப்படி ஒன்றும் முட்டாள்தனமாக விதிகளை அமல் செய்யவில்லை என்று தெரியும். இந்த அளவு யோசித்து நடைமுறைப்படுத்தினால் நம் ஊரிலும் விதிகளை மக்கள் பின்பற்றத் துவங்குவார்களா என்பதுதான் நமக்கு எழ வேண்டிய கேள்வி. இதில் வாசகர்கள் கருத்து என்ன? விதிமுறைகளை இந்தியாவில் ஒழுங்காகச் செயல்படுத்த நம் அரசுகளோ, அரசு அதிகாரிகளோ முன் வருவார்களா? இது நடக்கும் காலம் உடனே வருமா இல்லை இன்னும் பல ஆண்டுகள் ஆகுமா? வரவே வராதா? கடிதம் எழுதுங்கள். மின்னஞ்சல் அனுப்ப எத்தனை நேரம் ஆகி விடும்?

இவ்வளவு கடுமையாக கட்டுப்பாடு செய்யும் நகர நிர்வாகம் சென்னைக்கோ, இந்திய மாநகரங்களுக்கோ தேவையா? அப்படிக் கட்டுப்பாடு கொணருவது சாத்தியமா? நகர நிர்வாகமே ஒரு கட்டுப்பாடும், ஒழுங்குமின்றி நடக்கையில் மக்களைக் கட்டுப்படுத்த முடியுமா? அல்லது கட்டுப்பாடு என்பது அதிகாரி/அரசியல்வாதிகளைக் கொழுக்க வைக்கும் வாய்ப்பு மட்டுமா?


ரோபாட்களால் நமக்கு என்ன லாபம்?

ரோபாட்களால் நமக்கு என்ன லாபம் என்று நம் ஊரில் முற்போக்குகள் புலம்புவது சாதாரணமாகக் கேட்கலாம். ராக்கெட்டால் என்ன லாபம் என்று நாற்பதாண்டுகள் முன்பு கேட்டவர்கள் இவர்கள்தான். ரஷ்யாவிடம் அணுகுண்டு இருந்தால் போதும், நமக்கெதற்கு, ரஷ்யா அண்ட வெளியில் உலவினால் போதும் நமக்கெதற்கு, சீனாவிடம் அணுகுண்டு இருந்தால் போதும் நமக்கெதற்கு என்று பொதுவாக நம்மைத் தவிர வேறு யாரிடம் பொறி நுட்பமோ, தொழில் முறைகளோ வளர்ந்தால் போதும் நமக்கெதற்கு என்று ஒப்பாரி வைப்பதில் இந்திய இடதுசாரிகள், முற்போக்குகளை அடித்துக் கொள்ள யாரும் கிடையாது.

விவசாயமே வேட்டையாடி வாழ்ந்த சமத்துவ சமுதாய மனிதர்களுக்கெதிரான அழிப்பு நடவடிக்கை என்று கூட இடதுசாரிகள் சொல்லிக் கேட்டிருக்கிறோம். அத்தனை தூரம் பின்னே போனால்தான் அது முற்போக்கு என்ற விசித்திரவாதிகள் நம் இடது சாரியினர். ஆனால், பல நூறு மிலியன் மக்கள் வேலையே இல்லாமலோ, குறை வேலையோடோ திண்டாடும்போது எதற்கு தானியங்கி எந்திரங்கள், அல்லது ரோபாட்கள் என்ற கேள்வி மேலோட்டமாகப் பார்த்தால் மிகவும் நியாயமாகத் தெரியும்.

இன்றோ தடை என்பதைத் தூரத்தில் பார்த்தால் அல்லது அறிந்தால் காரை, ட்ரக்கை, ரயிலைத் தானாகவே நிறுத்தி விடுமளவு கணினிகளும் தானியங்கி எந்திரங்களும் முன்னேறி இருக்கின்றன. செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தியதால்தான் மூலை முடுக்கெல்லாம் செல்ஃபோன் இன்று இந்தியருக்குக் கிட்டியிருக்கிறது. மாறாக இந்தியத் தொலைபேசி நிறுவனத்தை அரசு நடத்தியவரை தொலைபேசி என்பது மிக மேல்தட்டு மக்களுக்கு மட்டுமே உரித்தானதாக இருந்த மோசமான நிலை இந்த அரைக்குருட்டு முற்போக்கு அரசியலால்தான்.

ரோபாட்களால் உடனடியாக என்ன பெரும் பயன் என்பதை நம்மால் காண முடியாதது, சில பத்தாண்டுகள் முன்பு கணினி எந்திரங்களால் என்ன பயன் என்று இந்திய அரசாலும், இந்திய அரசு அதிகாரிகளாலும், இந்திய முற்போக்குகளாலும் காண முடியாததை ஒத்ததே. பங்களூரில் இன்ஃபோசிஸ் என்று இன்று அறியப்படும் ஒரு நிறுவனத்தைத் துவங்க சில இளைஞர்கள் அன்று முயன்றபோது அவர்களுக்குத் தேவையான ஒரு பெரிய கணினியை இறக்குமதி செய்யத் தடைக்கல்லாக இருந்த ‘பெருமை’ இந்திய அரசையும், அரசு அதிகாரிகளையும் சேரும். அதே காலகட்டத்தில் சீனா அமெரிக்க முதலியத்தின் பயங்கர முதலைகளோடு ஒப்பந்தம் போட்டுக் கொண்டு சகல விதமான முதலியக் குப்பை நுகர் பொருட்களையும் தயாரிக்கத் தன் ‘புரட்சி’ப் படைவீரர்களைத் தயார் செய்து கொண்டிருந்தது. இந்திய மாவோயிஸ்டுகள் அன்றும் இன்றும் எந்த முன்னேற்றத்துக்கும் எதிரிகளே. இந்திய இடதுசாரிகளும் இன்னும் இந்தியாவை வேட்டையாடி வாழும் சமுதாயத்துக்குத் திரும்பச் சொல்லி நச்சரிக்கும் வாதங்களை விடவில்லை.
ரோபாட்களின் ஒரு பிரச்சினை அவை திரும்பத் திரும்ப மனித உருவில் செய்யப்படும் உளைச்சலுக்கு ஆளாவதுதான். இது குறித்து ஆசிமாவ் என்னும் அறிவியல் புனைவெழுத்தாளர் நிறைய கதைகளில் சர்ச்சித்திருக்கிறார். கடவுள் படைத்த மனித உருவில் மனிதர் எதையும் படைக்கக் கூடாது என்று அபத்தமாக மூட நம்பிக்கைகளை இன்னும் பரப்பும் செமிதிய மதங்களின் பிடியில் அன்றும் இன்றும் சிக்கி இருக்கும் யூரோப்பிய நாகரீகங்களின் நடுவில் தன் புனைகதைகளை இயக்கிய ஆஸிமாவுக்கு இந்த வகை உளைச்சலால் ஏற்படும் பல பிரச்சினைகள் நன்றாகவே தெரிந்திருந்ததில் ஆச்சரியம் இல்லை. இணை வைத்தல் என்பதைப் பயங்கரக் குற்றமாகக் கருதும் மதங்கள் உலகில் இன்னமும் கோலொச்சுகின்றன அல்லவா?

மாறாக மனித உருவில் அல்லாத தானியங்கி எந்திரங்கள் குறித்தும் மனிதருக்கு உளநிலைப் பிரச்சினைகள் இருக்கின்றன என்பது ஆஸிமாவின் கருத்து, புரிதல். அவருடைய ரோபாட் நாவல்களில் இந்தப் பிரச்சினைகள் விரிவாகவே பேசப்படுகின்றன. 50களிலேயே இதைக் கவனித்து எழுதிய ஆஸிமாவ் ஒரு அதிசய மனிதர் என்றே எனக்கு இன்று தெரிய வருகிறார். அவர் இந்தக் கதைகளை எழுதிய காலத்தில் கணினிகளே இன்னமும் சாதாரணமாகத் தெரியவராத கருவிகள். அவற்றை எப்படி தூரக் காலத்தில் உருவகித்தி, மனித உருவுள் அவை புதைக்கப்படும், தானியங்கிகளாக அந்த ரோபாட்டுகள் ஆகும், மனிதர் போலவே யோசிக்க, செயல்படவும் அவற்றால் முடியும், அந்த வகை எந்திரங்களை மனிதர் எப்படி அணுகுவர் என்பதை எல்லாம் அவர் எப்படி யோசித்தார், அவற்றின் உளநிலைப் பிரச்சினைகளை எப்படி ஊகித்தார் என்பதெல்லாம் அதிசயங்களே. ஆஸிமாவுக்குப் பல பத்தாண்டுகள் முன்பே எச். ஜி. வெல்ஸ் இப்படிப்பட்ட எந்திரங்களின் வருகை குறித்து ஊகங்களைக் கொண்ட நாவலை எழுதினார் என்பதும் இன்னொரு அதிசயமே.

சமீபத்தில் ரோபாட்களைத் தயாரிக்க முயலும் ஹாண்டா நிறுவனம், தன் ஒரு நடக்கும் ரோபாட்டுக்கு ஆஸிமாவ் என்று பெயரிட ஒரு காரணம், ஆஸிமாவ் என்ற நாவலாசிரியரின் தொலை நோக்குதான். அந்த ஆஸிமாவ் ரோபாட்டுகள் முதலில் நடக்கத் துவங்கியபோது குழந்தைகளைப் போலத் தள்ளாடித் தடுமாறித்தான் நடந்தன. இன்று அவை ஓரளவு எளிதாக நடக்கின்றன. அந்த ரோபாட்டுகளின் பொறிநுட்பத்திலிருந்து பிறந்த சில கருவிகள் இன்று நடக்கமுடியாமல் தவிக்கும் முதியோருக்கும், பாரிச வாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், மல்டிபிள் ஸ்க்லெரோஸிஸ் என்ற, படிப்படியாக உடலில் தசைகள் செயலிழக்கும் நோயால் அவதிப்படுவோருக்கும் ஓரளவு உதவக்கூடியவையாகக் கிட்டவிருக்கின்றன. அது குறித்த ஒரு செய்தியை இங்கு காணலாம். இக்கருவிகள் இப்போது சோதனைக் கட்டத்தில் இருக்கின்றன. பெருமளவில் சந்தையில் கிட்ட இன்னும் பல வருடங்கள் ஆகும், ஏனெனில் உதவத் தயாரிக்கப்பட்ட கருவிகள் அப்படி உதவுவதற்குப் பதில் மேலும் சோதனையாகாமல் இருக்க வேண்டுமல்லவா?

http://singularityhub.com/2010/09/13/hondas-exoskeletons-help-you-walk-like-asimo-video/