பிச்சி

மத்தியானம் இரண்டு மணி இருக்கும். கோடையின் உக்கிரம் மெல்ல தலையைக் காட்ட ஆரம்பித்திருந்தது. மின்சாரத் தட்டுப்பாடு என்பதால் அரங்கத்தின் கதவுகளைத் திறந்து விட்டிருந்தார்கள். சாலையில் இருந்து அரங்கம் அமைந்திருக்கும் வளாகத்துக்குள் நுழையும் போதே “பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை” என்று காம்போதியில் திருவாரூர் பதிகத்தை ஓதுவார் பாடிக் கொண்டிருப்பது தெளிவாகக் கேட்டது. பதிகத்தை விருத்தமாகப் பாடி, வரிக்கு வரி காம்போதியின் ஜீவ சுரங்களை பிடித்து அசைத்து முழுத் தொண்டையையும் திறந்து பாடிக் கொண்டிருந்தார். “அன்னம் வைகும் வயற்பழனத்தனை ஆரூரானை மறக்கலுமாமே” “ஏ ஏ” என்று நீட்டிக் கொண்டிருந்த போது நான் உள்ளே நுழைந்தேன். அரங்கில் இருள் கவிழ்ந்திருந்தாலும். சட்டென ஒரு உற்சாகம் தொற்றி, உடல் முழுவதும் பரவுவதை உணர முடிந்தது. இசையின் தாக்கமா அல்லது அண்மைக்காலமாக நம்ப ஆரம்பித்திருக்கும் கடவுள் மீதான காதலின் வெளிப்பாடா என்று தெரியவில்லை.

அரங்கத்தில் கூட்டம் அதிகமில்லை. நிறைய நாற்காலிகள் காலியாகவே இருந்தன. பட்டைப் பட்டையாக திருநீறு பூசிக் கொண்டு, அறுபதைத் தாண்டியவர்கள் தலையை அசைத்துக் கொண்டிருந்தார்கள். சிலருடைய கழுத்தில் ஒற்றை உத்திராட்சம் தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு அம்மையார் கண்ணை மூடி லயித்துக் கொண்டிருந்தார். அவரைத் தாண்டி இடது பக்கம் உள்ள நாற்காலி வரிசையில் அமர்வதற்காகச் சென்ற போது இலேசாக உற்றுப்பார்த்தேன். மஞ்சள் நிறத்தில் துணிப்பையை வைத்திருந்தார். ரிஷப வாகனத்தில், உமையொருபாகர் அமர்ந்திருக்க, அதற்கு மேல் திருச்சிற்றம்பலம் என்ற வார்த்தைகள் அச்சிடப்பட்டிருந்தன. அம்மையாரின் கண்களில் மாலை மாலையாக கண்ணீர் வடிந்து கன்னங்களை நனைத்துக் கொண்டிருந்தது.

குளிர்சாதன வசதி உள்ள அரங்கம்தான். மின்தட்டுப்பாட்டால் அந்த வசதி இல்லை. உள்ளே இலேசான புழுக்கம். வளாகத்தில் நான்கு வேப்ப மரங்கள் தளைத்து நின்றாலும் ஒரு அசைவில்லை. காற்று தன்னுடைய செயலை முற்றிலுமாக நிறுத்தியிருப்பது போன்ற ஒரு தோற்றம். மேற்கூரையில் இருந்து நாற்காலிகளில் உட்கார்ந்திருப்பவர்களின் தலையைத் தொடும் அளவுக்கு தொங்க விடப்பட்டிருந்த மின் விசிறிகள் பயமுறுத்திக் கொண்டே சுழன்று கொண்டிருந்தன. மின் விசிறி தலைக்கு மேல் இல்லாத இடமாகப் பார்த்து அமர்ந்தேன். முன்னால் இரண்டு வரிசையிலும் பின்னால் மூன்று வரிசையிலும் யாரும் இல்லை. சுற்றும் முற்றும் பார்த்தேன். எல்லோரும் அச்சிட்ட காகிதத்தை கையி்ல் வைத்துக் கொண்டிருந்தார்கள். ஓதுவார் “மாதர்ப் பிறை கண்ணியானை” என்று திருவையாறு பதிகத்தைத் தொடங்கியதும், அரங்கில் இருந்தவர்கள் அச்சிட்ட காகிதத்தைப் பார்த்து அப்படியே பாட முயற்சி செய்தார்கள். அன்று பாடப்படும் பதிகங்களை அச்சிட்டு அவையில் அமர்ந்திருந்தவர்களுக்கு கொடுத்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. நான் அதை வாங்கியிருக்கவில்லை.

ஏதேச்சையாக வலது கைப் பக்கம் பார்க்கும் போது அவள் உட்கார்ந்திருந்தாள். அவள் அமர்ந்திருந்த வரிசையிலும் நாற்காலிகள் காலியாகத்தான் இருந்தன. தனியே வீட்டில் அமர்ந்திருப்பது போன்ற உணர்வு. ஒரு காலை மடித்து நாற்காலியில் வைத்து விட்டு, இன்னொரு காலை தொங்க விட்டுக் கொண்டிருந்ததாள். சேலையை முட்டி வரை உயர்த்தியிருந்ததால் ஒரு கால் பளி்ச்சென தென்பட்டது.. தீர்க்கமான சதைப்பிடிப்புடைப்புடன், பார்த்த மாத்திரத்திலேயே கிளர்ச்சியூட்டும் வடிவமைப்பு. கண்களைத் திருப்பிக் கொண்டாலும். மனம் குரங்காகத் தாவ ஆரம்பித்தது. இன்னொரு காலையும் பார்க்க முடியாதா?

தலை தானாகவே அவள் பக்கம் திரும்பியது. இப்போது இருள் கண்களுக்குப் பழகியிருந்ததால் கால்கள் இன்னும் தெளிவாகத் தெரிந்தன. ஆலந்தளிர் நிற மெல்லிய மயிர்கள் கண்ணுக்குப் புலப்பட்டன. மணிகள் இல்லாத வெள்ளிக் கொலுசு காலை ஆரத்தழுவியபடி கிடந்தது. கணுக்காலின் கருப்பு, காலின் நிறத்தை சற்று எடுப்பாகக் காட்டியது.

“புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா” என்று பைரவியில் பதிகத்தைத் தொடங்கினார் ஒதுவார். மேடையை நோக்கி காதுகளைத் திருப்பினேன். காத்திரமான குரல். அதில் சற்றே கம்மல் இழையோடியது. ஆனால் உருக்கத்துக்கு குறைவில்லை. இராகத்தின் குழைவுடன் விருத்தத்தைக் கேட்ட காலங்களில் எழுந்த சிலிர்ப்புக்கும் இப்போது எழும் உணர்வுக்கும் வித்தியாசம் பிடிபட ஆரம்பித்தது. இது பக்தியல்ல. வெறும் காமம். இராவணனின் பத்துத் தலைகளைப் போல் கிளர்ந்து நிற்கிறது. இரசிப்பது போல் பாவனை செய்து விட்டு, மீண்டும் அவள் பக்கம் பார்வையைப் போக விட்டேன். இப்போது இருள் முற்றிலுமாக கண்ணுக்குப் பழகிவிட்டிருந்தது. ஏறக்குறைய என்னுடைய வயதுதான் இருக்கும். அழகி என்றாலும், சட்டனெ அதை வெளிப்படுத்தாத முகம். ஒரு தடவைக்கு இரண்டு தடவை பார்த்தால்தான் அதன் வசீகரம் புலப்படும். சாந்துப்பொட்டுக்கு மேல், நெற்றியில் லேசான திருநீற்று கீற்று. வெகுநேரமாக அரங்கில் அமர்ந்திருப்பதால், அது வியர்வையில் நனைந்திருந்தது. புது நிறத்துக்கும் மேலான நிறம். சின்ன மூக்குத்தியில் வைரம் ஒளிர்ந்தது. ஒற்றைச் சடைப் பின்னல். அதைத் முன்புறமாக எடுத்து மடியில் போட்டிருந்தாள். அதன் உச்சியில் மல்லிகைச் சரம். ஒரு பக்கமாக இலேசாகத் திரும்பி உட்கார்ந்திருந்ததால், வியர்வையின் ஈரம் ஜாக்கட்டை இலேசாக நனைத்து, உள்ளாடை உடலை இறுகப் பிடித்திருப்பது தெரிந்தது.

இடம் காலம் தெரிந்தா வக்கிரம் உருக்கொள்கிறது. மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. அதிலிருந்து தப்ப ஒரே வழி எழுந்து சென்று விடுவதுதான். அப்போது பாட்டை நிறுத்தி விட்டு ஓதுவார் பேச ஆரம்பித்தார்.

“பண்களின் அடிப்படையில் பாடுவதுதான் பதிகங்களின் சிறப்பு. இராகங்களின் அடிப்படையில் பாடினாலும் குற்றம் இல்லை. கர்நாடக சங்கீதத்தில் இராகத்தை ஆலாபனை செய்து விட்டு, அதே இராகத்தில் கீர்த்தனைகளைப் பாடுகிறார்கள். நாம் ஒரு பண்ணிலோ இராகத்திலோ விருத்தம் பாடி விட்டு, அதைத் தொடர்ந்து இன்னொரு விருத்தத்தை அதே இராகத்தில் தாளத்துடன் பாடுகிறோம். நட்டப்பாடை என்றால் என்ன இராகம் என்று தெரியுமா?” அரங்கில் இருந்தவர்களைப் பார்த்துக் கேட்டார்.

ஒருவித அமைதி.

என் காதுகளில் மட்டும் யாரோ “கம்பீர நாட்டை” என்று சொல்வது கேட்டது.

திரும்பிப் பார்த்தேன்.

முதல் முறையாக கண்கள் சந்தித்தன. லேசான வெட்கத்துடன் தலையைத் திருப்பிக் கொண்டாள். அவள் முகம் இன்னும் அழகாக இருப்பதாகத் தோன்றியது.

“சத்தமாகச் சொல்லியிருக்கலாமே” என்று நினைத்துக் கொண்டேன்.

மனம் குதியாட்டம் போட்டது. மீண்டும் தலை அவளை நோக்கித் திரும்பியது. தான் கவனிக்கப்படுகிறோம் என்பதைப் பெண்களால் எப்படி உடனே கண்டு பிடிக்க முடிகிறது? தன்னுடைய சுதந்திரம் பறிபோன உணர்வு அவளுக்குள் எழ ஆரம்பித்திருக்க வேண்டும். மேலே உயர்ந்திருந்த சேலையை கீழே இறக்கி விட்டு காலை மூடினாள். இத்தனை நேரமும் நான் அவள் கால்களை கவனித்திருப்பேனா என்ற நினைத்தாளோ என்னவோ, மறுபடியும் நான் பார்க்கிறேனா என்று என்னை நோக்கினாள்.

அதுவரை அவளைப் பார்த்துக் கொண்டிருந்த நான், அவள் பார்வையைத் தவிர்த்து மேடையை நோக்கினேன்.

“வெண் படைத்த புகழ் தில்லை அம்பலத்தான் எவர்க்கும் மேலானான்” என்று இராமலிங்க வள்ளலாலாரின் அருட்பாவை முகாரியில் எடுத்தார் ஓதுவார். இனி முகாரியாவது சங்கராபரணமாவது. எதுவும் மண்டைக்குள் ஏற வாய்ப்பில்லை. கண்களை மூடிக் கொண்டு, அருட்பாவை இரசிப்பது போல் மீண்டும் பாவனை செய்ய ஆரம்பித்தேன். ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற உத்தமர்தம் உறவு வேண்டும் என்ற வள்ளாலாரின் வரிகள் நினைவுக்கு வந்ததும், மனதுக்குள் ஒரு நகைப்பு. அரங்கில் அமர்ந்திருப்பவர்கள் உத்தமர்களாகத்தான் இருக்க வேண்டும். இவளும் உத்தமிதான். அவர்கள் உறவை வேண்டிதான் நானும் வந்தேன். தொடர்ந்து நடக்கும் பண்ணிசை விழாவில் நாள்தோறும் கலந்து கொள்வதுதான் எனது எண்ணமும். ஆனால் முதல்நாளே என் மனம் நிலையழிந்து நின்றால் அதற்கு நான்தான் பொறுப்பு. ஆனால் எனது மனதில் எந்த குற்ற உணர்ச்சியும் எழாதது எனக்கே ஆச்சரியமாக்ததான் இருந்தது. ஓதுவார் பாடுவது எதுவும் காதிலும் விழவில்லை. மனம் மெதுவாகத் தாவி தாவி அவள் அருகே உள்ள நாற்காலியில் அமர்ந்து கொண்டிருந்தது.

“உனைப் பாடாத நாளெல்லாம் பிறவாத நாளே” என்ற வரிகள் அழுத்தமாக என் மனதுக்குள் ஒடிக் கொண்டிருந்த வக்கிரத்தை தாற்காலிகமாக நிறுத்தின. கண்களைத் திறந்து பார்த்தேன். இராகம் பிடிபடவில்லை. கமாஸா? ஹரிகாம்போதியா?. எத்தனை முறைக் கேட்டிருக்கிறேன். இன்று ஏன் இந்தக் குழப்பம்? மீண்டும் அவள் இருந்த திசையை நோக்கினேன். எல்லோரும் கையில் அச்சிட்ட காகிதத்தை வைத்திருந்தாலும், இவள் மட்டும் ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டு வாயால் மெல்லப் பாடிக் கொண்டிருந்தாள்.

சட்டென ஒரு எண்ணம் தோன்றியது. எழுந்து அவள் அருகே சென்று அமர்ந்தேன். இலேசாகத் திடுக்கிட்டு, என்ன வேண்டும் என்பது போல் பார்த்தாள். வியர்வையில் கலந்த மெல்லிய மல்லிகை மணம் அவள் மேல் இருந்து வீசியது. அது சுர்ரென நாசியில் ஏறி மூளைக்குள் புகுந்தது. தலை இலேசாகக் கிறுகிறுத்தது. நானும் அவளும் மட்டுமே தனியாக இருப்பது போன்ற ஒரு உணர்வு. என் உடலில் ஒரு நடுக்கம்.

“இது என்ன விருத்தம். என்ன இராகம். உங்கக்கிட்ட இருக்கும் புத்தகத்தைப் பார்க்க முடியுமா” என்று மெல்லிய குரலில் கேட்டேன்.

“கோயில் பதிகம். ஹரிகாம்போதி” என்று சொல்லிக் கொண்டே புத்தகத்தை நீட்டினாள். என் நடுக்கம் அவளுக்குப் புலப்பட்டு விடுமோ என்ற பயத்திலேயே கையை நீட்டினேன்.

அவள் கை நீண்ட நேரத்தில், சேலை தலைப்பு இலேசாக விலகி, கட்டுக்கடங்க மறுத்து, கீழ்நோக்கி சரிந்து கிடக்கும் மார்பகங்கள் என் கண்களைத் தொட்டு விலகின. புத்தகத்தை வாங்கிக் கொண்டு என் இடத்துக்கு வந்து பாடல் முழுவதையும் ஒரு நோட்டுப் புத்தகத்தில் எழுதினேன்.

மீண்டும் எழுந்து அவள் இருக்கைக்கு சென்று அமர்ந்தேன். கையை நீட்டி அவள் புத்தகத்தை வாங்கிய போது மீண்டும் அதே தரிசனம். என் பார்வை மேலும் கீழே நகர்ந்து, அவளின் மெல்லிய தொப்பையை பார்த்து விட்டு திரும்பியது. அரக்கு நிறத்தில், மயில் கண் பார்டர் உள்ள காட்டன் சேலை மறைப்பில் நான் முழுவதுமாக விழுந்து எழுந்தேன். மீண்டும் என்னுடைய இருக்கைக்கு வந்தேன். இனி அங்கு அமர்வது சாத்தியமி்ல்லை என்று மனது சொல்ல ஆரம்பித்தது. நோட்டுப் புத்தகத்தை பையில் நுழைத்து விட்டு, தோளில் மாட்டிக் கொண்டு அவளைப் பார்க்காமல் நடந்தேன். வெளியே வராந்தாவுக்கு வந்து, சிறிய கம்பி வலை போட்டிருந்த சன்னல் வழியாக உள்ளே உற்று நோக்கினேன். உள்ளே இருந்து இரண்டு கண்கள் என்னைச் சந்தித்தன.

என்னுடைய வண்டி நிறுத்தப்பட்டிருந்த இடத்துக்கு வந்து, ஹெல்மெட்டை மாட்டிக் கொண்ட போது, அரங்கத்தை தாங்கிப் பிடிக்கும் பெரும் தூண்களை நோக்கி என்னை அறியாமல் கண்கள் சென்றன. கூரைக்கும் தூணுக்கும் உள்ள இடைவெளியில் தன்னுடைய கூட்டுக்கு அருகே “குடு குடும் குடு குடும்” என்று மினுங்கும் கழுத்துப் புடைக்க பெட்டையை வசியம் செய்து கொண்டிருந்தது ஒரு ஆண்புறா. அதற்கு போக்குக் காட்டிக் கொண்டே ஒரு தூணில் இருந்து இன்னொரு தூணுக்குத் தாவிப் பறந்து கொண்டிருந்தது பெட்டை. வண்டியை உதைத்துக் கொண்டு வெளியே வந்தேன்.