பழக்கம்

கடைசியாக உங்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று எப்போது முடிவெடுத்தீர்கள்? அதற்காக என்னவெல்லாம் செய்தீர்கள்? இதே முடிவை அதற்கு எத்தனை முறை எடுத்திருப்பீர்கள்? எத்தனை முறை வெற்றி? உங்கள் குழந்தைகள் ஒரு செயலைச் செய்யாமல் இருக்க என்னவெல்லாம் செய்திருப்பீர்கள்? எத்தனை அடி? எத்தனை திட்டு? இருந்தும் ஒன்றும் மாறவில்லையே ஏன்? இந்திரனுக்கு உடம்பு சரியில்லைனு சந்திரனுக்குக் கொடுத்தால்? நம்முடைய நடவடிக்கைகளில் பெரும்பாலானவை ஆழ்மனத்தில் கட்டுக்குள் இருப்பவை, ஆனால் இந்த கவுன்சிலிங்க், அறிவுரை, யோசனை, திட்டு, அடி எல்லாம் பிரக்ஞப்பூர்வ மனத்தையே குறிவைக்கின்றன.

பழக்கங்களின் சக்தி அளப்பெரியவை. பழக்கங்களை, உருவாக்குவதன் மூலமோ உருமாற்றுவதன் மூலமோ, தனிநபர் முதல் மொத்த சமூகம் வரை பயனடைய முடியும். ஒவ்வொரு நாளும் கணிணி முன் உட்கார்ந்ததும் எந்த யோசனையும் இல்லாமல், பயர்ஃபாக்ஸைத் திறந்து ஜிமெயில், கூகுள் ரீடர், ஆபிஸ் மெயில் பிறகு ட்விட்டர் என்று செல்வது எனக்கு வாடிக்கை. நிறைய வேலை இருக்கிறது ட்விட்டர் பக்கமெல்லாம் போகக்கூடாது என்று முடிவெடுத்து, ஒரு நாள் இருக்கலாம், இரண்டு நாள் இருக்கலாம். ஆனால், மூன்றாவது நாள் என்னை அறியாமலேயே ட்விட்டரை திறந்து வைத்துக் கொண்டு உட்கார்ந்திருப்பேன்.

நம்முடைய மூளை/ மனம் இரண்டு நிலைகளில் இயங்குகிறது. ஒன்று பிரக்ஞைப் பூர்வமானது (conscious) மற்றொன்று ஆழ்மனம் (sub-conscious) சார்ந்தது. பிரக்ஞைப் பூர்வ மனதால் ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையை மட்டுமே செய்ய முடியும். ஆனால் அதே நேரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆழ்மனதின் கட்டுப்பாட்டில் பல வேலைகள் நடந்து கொண்டிருக்கும். நீங்கள், ஒரு கணக்கைச் செய்ய, ஒரு புதிய முகவரியைக் கண்டுபிடிக்க பிரக்ஞைப்பூர்வ மனம் வேலை செய்ய வேண்டும், ஆனால் தினமும் மாலை உங்கள் வீட்டுக்குத் திரும்ப அந்த மனம் வேலை செய்ய வேண்டியதில்லை. நாட்டைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டே நீங்கள் உங்கள் வீட்டுக்கு பத்திரமாகத் திரும்பிவிடலாம்.

ஒரு காரியம் மீண்டும் மீண்டும் செய்யப்படும்போது, அது மூளையில் பதிவாகி விடுகிறது. அதுவே அடிக்கடி சீராகச் செய்யப்படும்போது, அது ஒரு பழக்கமாக மாறி, தேவைப்பட்ட நேரத்தில் ஆழ்மனதால் செயல்படுத்தப்படுகிறது. இவன் பிள்ளையார் கோயில் ஸ்டாப்பில் இறங்கினால், இடதுகைபக்கம் திரும்பி, நேராக பத்தடி நடந்து, பெட்டிக்கடையில் ஒரு சிகரெட் வாங்கி பத்தவைத்துக் கொண்டு, இன்னும் ஐம்பது அடி நேராக நடந்து, ஊதா நிற வீட்டின் இரண்டாவது மாடிக்குத்தான் செல்வான், என்பதை உங்கள் ஆழ்மனம் அறியும்.

இப்படி பழக்கப்பட்ட ஆழமானச் செயல்பாட்டுக்கு அதிகமாகச் சொல்லப்படும் உதாரணம், காரை பின்நோக்கி இயக்குவது. பின்னாடி எந்த இடைஞ்சலும் இருக்கிறதா என்று பார்க்க வேண்டும், பக்கவாட்டில் இருக்கும் இரண்டு கண்ணாடிகளையும் பார்க்க வேண்டும், பிரேக்கை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவேண்டும், அப்புறம் ரிவர்ஸ் கியரைப் போட்டு, கண்ணாடிகளைப் பார்த்து, அவற்றில் தெரியும் தூரத்தை தோராயமாகவாவது கணக்கிட்டு, காரைப் பின்நோக்கி இயக்க வேண்டும். அப்படி இயக்கும்போது வேகம் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இவ்வளவையும் செய்துதான் காரை பின்நோக்கி இயக்குகிறோம். முதல் சில தடவைகள் இதற்குக் கூர்மையான கவனம் தேவை. ஆனால், பழகப் பழக அநாயசமாக இதத்தனையும் செய்துவிடுவோம்.

ட்யூக் பல்கலை செய்த ஆராய்ச்சியில், ஒரு நாள் முழுவதும் நாம் செய்யும் செயல்களில் 45 சதம், பிரக்ஞை தேவையே இல்லாத பழக்கங்கள்தான் என்று கண்டுபிடித்தனர். நீங்கள் எப்படிப்பட்டவர், எப்படிச் சாப்பிடுபவர், எடுத்த இடத்தில் பொருளை வைப்பவரா, சோம்பேறியா- எல்லாமே பழக்கம்தான் இருக்கிறது. உங்கள் பழக்கம் உங்களுக்கு நிறைய நல்லது செய்கிறது. அதே நேரத்தில் மற்றவர்களுக்கும் நல்லது செய்கிறது.

நீங்கள் மளிகை வாங்கும் கடையில் ஒருமுறை 200கி லியோ காபித்தூள் ‘ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம்’ என்று போட்டிருந்தார்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். இதென்னவோ புதிதாக இருக்கிறதே என்று பிரக்ஞை விழித்துக் கொண்டு லாப நஷ்ட கணக்கு போட்டு அதை வாங்கிவிடும். அடுத்த முறை அதே கடைக்குப் போகும்போது, ‘போன வாட்டி லியோ காபி வாங்கினாயே’ என்று பிரக்ஞைக்குத் தகவல் விரையும். இப்போதும் பிரக்ஞை கணக்கு போடும்- அதே ஒன்றுக்கு ஒன்று சலுகை இருந்தால், அதை வாங்கிவிடும். அடுத்த முறை போகும்போது, லியோ காபியைத் தானாகவே கை தேடிச் செல்லும். இனி சலுகை எதுவும் இருக்காது, ஆனாலும் லியோ காபி உங்களை விடாது. மேலே பார்த்தது யாருக்கோ நடந்ததல்ல. எங்கள் வீட்டில் நடந்தது. கும்பகோணம் காபிதான் உசத்தி என்று அங்கிருந்தே காபி பொடி இறக்குமதி செய்து கொண்டிருந்தவர்கள், இப்போது லியோ காபி குடிக்கிறோம்.

நம்மில் பெரும்பாலானவர்கள், சூப்பர் மார்க்கெட்களுக்குச் செல்லும்போது, ஆழ்மனதாலேயே இயக்கப்படுகிறோம் என்கிறார்கள். ஒரு தயாரிப்பை மீண்டும் மீண்டும் பயன்படுத்துபவர்கள், அதைத் தவிர்த்து வேறு தயாரிப்புகளுக்குச் செல்வதில்லை. எனவே லியோ மட்டுமல்ல. இன்னும் அனைத்து நிறுவனங்களுமே உங்கள் பழக்கத்தை உடைத்து. அதில் அவர்கள் தயாரிப்புகளை நுழைக்கவே இலவசம், விளம்பரங்கள் என்று இந்தப் பாடு படுகிறார்கள்.

உண்மையில் பழக்கங்களை உருவாக்குவதும் கடினம். அவற்றை உடைப்பதும் கடினம். ஒரு பழக்கத்தை எடுத்துக்கொண்டால் அதில் மூன்று விஷயங்கள் அடங்கியிருக்கின்றன. அவை, குறிப்பு, செயல், பரிசு. குறிப்பு என்பது ஒரு பழக்கம் எப்போது செயல்படுத்தப்பட வேண்டும் என்பதற்கானது. ஆபிஸ் போய் உட்கார்ந்தவுடன் பயர்பாக்ஸைத் திறக்க வேண்டும் என்பது குறிப்பு. அதைச் செயல்படுத்தும்போது டிவிட்டரில் நீங்கள் ரீட்வீட் செய்யப்பட்டிருப்பதை அறிவதுதான் பரிசு. பதற்றமாக உணர்வது குறிப்பு, சிகரெட் குடிப்பது செயல், பதற்றம் குறைவது பரிசு.

எந்த ஒரு பழக்கத்திற்கும் ஒரு மாற்றுப் பழக்கத்தை உருவாக்கலாம். பதற்றமாக உணர்வதையும், பதற்றம் நீக்குவதையும் அப்படியே வைத்துக் கொண்டு, செயலை மட்டும் மாற்றிக் கொள்ள முடியும் என்கிறார்கள். நண்பர்களுடன் அரட்டையடிப்பது, சுவாசத்தை இழுத்துவிடுவது, உங்கள் குழந்தைகளுடன் விளையாடுவது உங்கள் பதற்றத்தை குறைக்கக்கூடும். இதை மறுபடி மறுபடி செய்வதன் மூலம் முந்தைய புகைப்பழக்கம் பின்னுக்கு தள்ளப்பட்டு, குழந்தைகளுடன் விளையாடுவதோ, அரட்டையடிப்பதோ புதிய பழக்கமாக உருவாகிவிடும். புகைபழக்கத்தை விடும் சிலர், அதற்கு மாற்றாக, நாக்கு நமநமக்கும் போதெல்லாம் ஏதாவது சாப்பிடத் தொடங்குகிறார்கள். ஒரு நாளைக்கு பத்து சிகரெட் குடிப்பவர், அதை நிறுத்திய பின்பு பத்து முறை சாப்பிடுகிறார். நேரங்கெட்ட நேரத்தில் சாப்பிடும் நொறுக்குத் தீனிகளாலேயே அவர்கள் உடல் பெருத்துவிடுகிறது. சிகரெட்டை நிறுத்தும் பலருக்கு உடல் பெருப்பதற்கான காரணம் இது தான். ஆனால், புகைப்பழக்கம் என்பது மங்கியிருக்குமே தவிர, மூளையில் பதிந்தது அழிந்துவிடாது. என்றாவது ஒருநாள் பதற்றமாக இருக்கும்போது சிகரெட்டை கையில் எடுத்தால் மங்கியிருந்த பழக்கம் மீண்டும் தொடரத் தொடங்கிவிடும்.

நம் வாழ்க்கையில் சில மாற்றங்கள் நிகழும்போது, நாம் நம்மைப் பற்றிய விஷயங்களைப் பரிசீலனை செய்து, பெரும்பாலும் மாற்றிக்கொண்டு விடுகிறோம். வாழ்க்கையில் மாற்றமென்பது சந்தோஷமானதாகவோ துக்கமானதாகவோ இருக்கலாம். எனக்குத் தெரிந்த புது மாப்பிள்ளைகள், சட்டையை டக் இன் செய்யத் தொடங்குவார்கள், காபியெல்லாம் உடம்புக்கு கெடுதல், க்ரீன் டீ குடி என்று அட்வைஸ் செய்வார்கள். கர்ப்பிணிகள் இன்னும் கவனமாக இருப்பார்கள், தாங்கள் என்ன சாப்பிடுகிறோம் என்பதில் அதிக அக்கறை செலுத்துவார்கள். அதுவரை பயன்படுத்திக் கொண்டிருந்த  பொருட்களை விட்டுவிட்டு அதைவிட சிறப்பாக ஏதாவது இருந்தால் அதற்கு மாறத் தயாராக இருப்பார்கள். இந்த நிலையை பயன்படுத்திக் கொள்ள வேண்டியது விற்பனையாளர்களின் திறமை.

தி பவர் ஆஃப் ஹாபிட் என்ற புத்தகத்தில் சார்ல்ஸ் துகிக், இப்படிப்பட்ட ஒன்றை விளக்குகிறார். அமெரிக்காவின் பெரிய சில்லரை விற்பனை நிறுவனத்தில் குழந்தைகளுக்கான பொருட்களின் விற்பனை அத்தனை சிறப்பாக இல்லை. அங்கு வருபவர்கள் காய்கறி வாங்குகிறார்கள், மளிகை வாங்குகிறார்கள் ஆனால் குழந்தைகள் சம்பந்தமான பொருட்களை அங்கு வாங்குவதில்லை. அங்கு மற்ற பொருட்கள் வாங்குபவர்களையும் குழந்தைகளுக்கான பொருட்களை வாங்க வைக்க வேண்டும். அவர்களிடம் தங்கள் கடைக்கு வருபவர்களைப் பற்றிய தகவல்கள் இருக்கின்றன. பெயர், என்ன வேலை, எங்கு வேலை, சம்பளம் எவ்வளவு என்பது போக, உங்களுடைய கடன் அட்டை, நீங்கள் அடிக்கடி பார்க்கும் வலைதளங்கள், நீங்கள் படிக்கும் பத்திரிகைகள், நீங்கள் என்னென்ன பிராண்ட் பொருட்களை விரும்புகிறீர்கள், என்ன கார் வைத்திருக்கிறீர்கள் என்று இதற்கும் மேல் தகவல்களை வைத்திருக்கிறார்கள். சில தகவல்களை அவர்களே சேகரிக்கிறார்கள், சிலவற்றை வெளியிலிருந்து வாங்குகிறார்கள்.

இந்தத் தகவல்களை வைத்து, உங்களுக்கு ஏற்ற சலுகைகளை அவர்கள் தருகிறார்கள். குழந்தைகள் பொருட்களை நோக்கி வாடிக்கையாளர்களை இழுக்க, முதலில் அவர்கள் ஒரு பதிவை உருவாக்குகிறார்கள். தான் கர்ப்பமாக இருப்பதை ஒருவர் வெளியே சொல்ல விரும்பினால் அவர் அந்தப் பதிவில் தன் பெயரை பதிந்து கொள்ளலாம். இப்படி தானாக முன்வந்து பதிந்து கொண்டவர்கள் என்னென்ன வாங்குகிறார்கள் என்பதை ஆராய்ச்சி செய்கிறார்கள். அவர்களுடைய ஆராய்ச்சியில், ’மகப்பேறு காலத்தின் முதல் 20 வாரங்களில் பெண்கள் அதிகமான கால்சியம், மெக்னீசியம் மற்றும் சிங்க் விட்டமின்களை அதிகமாக வாங்குகிறார்கள்’ என்பது தெரியவந்தது. அதோடு, அவர்கள் இப்போது வாசனையில்லா சோப்களையும் கைகழுவும் லோஷன்களையும் வாங்கத்தொடங்குகிறார்கள். மகப்பேறுக்கான நாள் நெருங்கும் போது அவர்கள் இந்த வாசனையில்லா லோஷன்கள் மற்றும் சோப்புகளை அதிக அளவில் வாங்குகிறார்கள்.

இப்படி தானாக முன்வந்து தரப்படும் தகவல்களைக் கொண்டு, மற்ற வாடிக்கையாளர்களையும் கவனிக்கிறார்கள். யாராவது ஒருவர் அதிகளவு வாசனையில்லா லோஷன் வாங்கினால் அவர் வாங்கிய மற்ற பொருட்களையும் கொண்டு, அவர் கருத்தரித்திருக்கலாம் என்று முடிவு செய்கிறார்கள். பின் அவருக்கு மற்ற சலுகைகளுடன் சில குழந்தைகள் பொருட்களுக்கான சலுகைகளையும் அனுப்புகிறார்கள். அந்தப் பொருட்களை அடுத்தமுறை வரும்போது அவர் வாங்கினாரென்றால், அவருக்கு இன்னும் சில சலுகை கூப்பன்கள் அனுப்புகிறார்கள். அதிலும் குறிப்பிட்ட நேரம் பார்த்து கூப்பன்களை அனுப்புகிறார்கள். ஒவ்வொரு சனிக்கிழமையும் கடைக்கு வரும் வாடிக்கையாளர் என்றால், அவருக்கு வெள்ளிக்கிழமை மின்னஞ்சலில் இந்தக் கூப்பன்கள் அனுப்பிவைக்கப்படும். நாங்கள் லியோ காபிக்கு மாறியது போல் அந்த வாடிக்கையாளரும் கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கடையில் குழந்தைகளுக்கான பொருட்களை வாங்கத் தொடங்கிவிடுவார்.

ஒரு தயாரிப்பை, வாடிக்கையாளர் அடிக்கடி பயனப்டுத்த வேண்டுமானால், அதை பயன்படுத்த தேவைப்படும் பிரக்ஞை குறைவாக இருக்க வேண்டும், அல்லது இருக்கவே கூடாது. ஆழ்மனம் தானாகவே அதை பயன்படுத்தும் போதுதான் அது பயன்படுத்த இலகுவாக இருக்கிறது என்று சொல்ல முடியும். இல்லையென்றால் அதை தூக்கிப் போட்டுவிடுவார்கள். விலங்குகளை பயிற்றுவிப்பதில் நிபுணராக கேரன் ப்ரைரொர், “ஒரு செயல் நடக்கும் வரை பயிற்சியாளர் காத்திருக்க வேண்டும். அது நடந்தால் அதைப் பழக்கமாக்கிவிடலாம்” என்கிறார்.

இந்தப் பழக்கம் பொருள் கொள்முதலோடு மட்டும் நின்றுவிடுவதில்லை. சில பொறிகள் பயன்பாட்டிலும் ஆதிக்கம் செலுத்துகிறது. ஐபாட் ஷஃபுலை எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு வட்டம். அதில் நான்கு பக்கமும் ஒவ்வொரு பொத்தான். நடுவில் ஒன்று. மொத்தமே ஐந்து பொத்தான்கள்தான். அதை இயக்க, உங்கள் பார்வை தேவையே இல்லை. பராக்குப் பார்த்துக் கொண்டே நீங்கள் அதை இயக்கலாம்.

பழக்கப்பட்ட விஷயங்களில், மாற்றங்கள் திணிக்கப்படும் போது, அவை வாடிக்கையாளர்களை கோபமடையச் செய்கின்றன. ட்விட்டர், ஃபேல்புக் போன்றவற்றில் பயனர் முகப்பு மாற்றப்படும் ஒவ்வொருமுறையும் எரிச்சல் வெளிப்படுவதைப் பார்க்கிறோம். ஆனால், ட்விட் செய்யும் பழக்கம் மிகவும் வலுவாக இருப்பதால், இந்த மாற்றமெல்லாம் சில நாட்களில் பழக்கப்பட்டுவிடுகிறது.

குழந்தைகள் வளர்ப்பும் இந்த பழக்கங்களை ஒட்டியே அமைகிறது. உங்கள் குழந்தை ஒரு வேலையைத் தவறாகச் செய்யும்போது அதை தண்டிப்பதால், மறுமுறை ஒழுங்காகச் செய்துவிடப்போவதில்லை. குழந்தைகள் ஒரு வேலையைச் சரியாக செய்யும்போது அவர்களை பாராட்டுவதன் மூலமே அந்தப் பழக்கத்தை உருவாக்க முடியும்.சார்ல்ஸ் தூகிக், சொல்வது போல் ஒரு வேலையை எத்தனை வழிகளில் வேண்டுமானாலும் தவறாகச் செய்யலாம். ஆனால் ஒரே வழியில் மட்டுமே அதைச் சரியாகச் செய்ய முடியும்.