சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- தக்கயாகப் பரணி

பகுதி 12

தக்கயாகப் பரணி

கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் யற்றியது இது. என்பால் இருக்கும் பதிப்பு, சென்னை முல்லை நிலையம் வெளியீடு.

பரணி நூல்களில் புகழ்பெற்ற கலிங்கத்துப் பரணி நூலுக்குப் பல உரைகள் வந்துள்ளன. ஆனால் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் இயற்றிய தக்கயாகப் பரணி நூலுக்கு, சிறந்த எளிமையான தெளிவுரை நூல்கள் கிடைக்கப் பெறவில்லை. எனவே உரைவேந்தர் அவ்வை துரைசாமிப் பிள்ளை அவர்களின் மருமகனும் பச்சையப்பன் கல்லூரி முன்னாள் தமிழ்ப் பேராசிரியருமான முனைவர் இரா.குமரவேலர் அவர்களின் உரையை வெளியிடுவதாகப் பதிப்புரையில் கூறுகிறார்கள்.

உரையாசிரியர், ஒட்டக்கூத்தர் வரலாறு பற்றி விரிவான அறிமுகக் கட்டுரை எழுதியுள்ளார். அதிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் சுருக்கமாகக் கீழ்வருமாறு:

ஒட்டக்கூத்தர் சீர்மிகு செங்குந்தர் மரபினர். மலரி எனும் ஊரினர். இவ்வூர் இன்று திரு எறும்பூர். கூத்தர் இவர் இயற்பெயர் என்றும் கலைமகளையும் காளியையும் வழிபட்டவர் என்றும் கலைமகள் இவர் நாவில் எழுதியதாலும் நாவால் உமிழ்ந்ததாலும் கவியாகும் வல்லமை பெற்றவர் என்றும் செய்திகள் உண்டு.

இங்கு எனக்கு இரு ஐயங்கள் உண்டு! ஒன்று, நாமும் வாயைத் திறந்து வைத்துக் கொண்டு உறங்கலாமா? இரண்டு, சமகால அரசியல்காரர்கள் நாவில் பொய்யும் வஞ்சமும் சூதும் துரோகமும் கயமையும் பேச யார் எழுதி இருப்பார்கள்?

விக்கிரம சோழனுக்கு அவைப்புலவராகவும் அவன் மகன் குமார குலோத்துங்கனுக்கு ஆசிரியராகவும் அவன் மகன் இரண்டாம் இராசராசனுக்கு அவைப்புலவராகவும் இருந்திருக்கிறார். இம்மூவரைப் பற்றியும் ‘மூவருலா’ பாடியவர். இம்மூவரும் கி.பி. 1118 முதல் 1163 வரை ஆண்டவர்கள்.

இராமாயணத்தின் ஏழாவது காண்டமான உத்தரகாண்டம், குலோத்துங்கன் கோவை, அண்டத்துப் பரணி, ஈட்டி எழுபத்து, குலோத்துங்கன் சோழன் உலா, குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ், விக்கிரம சோழன் உலா, இராசராச சோழன் உலா, காங்கேயன் நாலாயிரக் கோவை, அரும்பைத் தொள்ளாயிரம், தக்கயாகப் பரணி உட்படப் பல நூல்களையும் பல தனிப்பாடல்களையும் இயற்றியுள்ளார்.

இராமாயணத்தின் முதல் ஆறு காண்டங்களையும் கம்பன் பாடினான் என்பதை நினைவுறுத்துகிறேன்.

கம்பன் ஏர் எழுபது பாடினான். இவர் ஈட்டி எழுபது பாடியுள்ளார். ஏர் எனில் கலப்பை, ஈட்டி போரில் எறிந்து கொல்லும் ஆயுதம்.

ஒட்டக்கூத்தர் பிரபந்தம் பாடுவதில் வல்லவர் என்பதினால், ‘கோவை, உலா, அந்தாதிக்கு ஒட்டக்கூத்தர்’ எனப் புகழ் பெற்றவர். ஆனால் இவர் பாடிய அந்தாதி எதுவும் கிடைக்கப் பெற்றிலோம். ‘ஒட்டக்கூத்தர் பாட்டுக்கு இரட்டைத் தாழ்ப்பாள்’ என்று கர்ண பரம்பரைக் கதை ஒன்று உண்டு. ஊடி நின்று, மணியறைக் கதவம் தாழிட்டுக் கொண்ட சோழன் தேவியை சமாதானம் செய்ய ஒட்டக்கூத்தர் போனார் என்றும் அவள் ஒட்டக்கூத்தரின் சமாதானப் பாட்டைப் பொருட்படுத்தாமல் அவரையும் கிடந்து கொண்டு இரட்டைத் தாழ்ப்பாள் போட்டுக் கொண்டாள் என்பது கதை. அதற்கு ஆதாரம் ஏதும் இல்லை என்பதால் இவர் பாடல்கள் கடினமானவை, திறக்க சிரமமானவை என்பதால் அந்தப் பழமொழி வந்தது என்றும் கருதுகிறார்கள். இரண்டாவது ஏற்றுக் கொள்ளும்படியாக உள்ளது.

தம் காலத்துப் புன்கவிகள் பலரின் தலைகளை இரக்கமின்றி அறுத்தவர் ஒட்டக்கூத்தர் என்றும் சொல்லப்படுகிறது. அதற்கான ஆதாரம், ‘இரண்டொன்றாய்த் தலைமுடித்து இறங்கப் போட்டு வெட்டுதற்கோ கவி ஒட்டக்கூத்தன் இல்லை’ எனும் தனிப்பாடல் வரி. இன்றும் ஒரு ஒட்டக்கூத்தன் இருந்து, மோசமாக எழுதினால் தலை வெட்டலாம் எனும் அதிகாரமும் அவனுக்கு இருக்குமானால், நாஞ்சில் நாடன் முண்டமாகவே அலைந்து கொண்டிருப்பான். என்னைத்தானே நான் சொல்ல முடியும்!

ஓட்டக்கூத்தருக்கான மேலும் சில சிறப்புகள், மொன்று முடிமன்னர்கள் காலத்தில் வாழ்ந்தவர். முதல் பிள்ளைத் தமிழ் நூல் இவரால் இயற்றப்பெற்றது. இறைவன் மீதே பரணி பாடிய முதல் புலவர். நானூறு பாடல்களுக்கு மேற்பட்டதான நாலாயிரக்கொவை பாடியவர்.

தக்கன் மகள் தாட்சாயணி, சிவனின் தேவி. தக்கனுக்கும் சிவபெருமானுக்கும் நடந்த போர் பற்றி அறிய ‘திருவிளையாடல்’ சினிமா பாருங்கள். தக்கனுக்கு, அவனை அழிக்க சிவன் படைத்து அனுப்பிய வீரபத்ரனுக்கும் நடந்த போரில், வீரபத்திரன் பெற்ற வெற்றியைப் போற்றிப் பாடப்பட்டதே தக்கயாகப் பரணி.

கலிங்கத்துப் பரணியில் பதினான்கு பகுதிகள் எனில் தக்கயாகப் பரணியில் பதினோரு பகுதிகளே. கலிங்கத்துப் பரணியில் காணப் பெறும் இந்திரசாலம், இராசப் பாரம்பரியம், அவதாரம் என்பன தக்கயாகப் பரணியில் இல்லை. கலிங்கத்துப் பரணியில் 596 தாழிசைகள் எனில் தக்கயாகப் பரணியில் 814 தாழிசைகள் இடம் பெற்றுள்ளன.

முதலாம் குலோத்துங்க சோழனுக்கு பாடப் பெற்றது கலிங்கத்துப் பரணி எனில் இரண்டாம் இராசராசனைப் பாடுவது தக்கயாகப் பரணி.இவன் இரண்டாம் குலோத்துங்கன் மகன். பரணியும் உலாவும் பெற்ற ஒரே சோழன் இவன்.

தக்கயாகப் பரணியின் முதற்பகுதி கடவுள் வாழ்த்து. வைரவக் கடவுள் காப்புப் பாடலிலேயே ஒட்டக்கூத்தரின் பாடலின் கடினம் புலப்படுகிறது. இதோ, யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையம்.

உரக கங்கணம் தருவன பணமணி
உலகடங்கலும் துயிலெழ வெயிலெழ
உடை தவிர்ந்ததன் திரு அரை உடை மணி
உலவி ஒன்றோடொன்று அலமார விலகிய
கரதலம் தரும் தமருக சதிபொதி
கழல் புனைந்த செம்பரிபுர ஒலியொடு
கலகலன் கலன்கலன் என வருமொரு
கரிய கஞ்சுகள் கழலினை கருதுவாம்

உரையாசிரியர் எழுதுகிறார்: “கைகளில் கங்கணமாகக் கட்டி இருக்கிற பாம்பு தன் விரிந்த படங்களால் கக்கும் மாணிக்கக் கற்கள உலகம் முழுவதும் விழித்தெழுமாறு ஒளிவீசி நிற்கும். ஆடை அணியாத தன் இடுப்பினில் உள்ள மணிகள் ஒன்றோடு ஒன்று மோதி ஒலி எழுப்பும். கையில் உள்ள தமருகம் என்னும் உடுக்கை எழுப்பும் தாள ஓசை, தன் களில் பொருந்திய சிவந்த சிலம்பின் ஒலியோடு சேர்ந்து கலன், கலன் என்னும் இனிய நாதம் உண்டாகும். இதைக் கேட்கும் அடியவர் தாழ்ந்து பணிந்து நிற்கும் வண்ணம் காட்சி தரும் கரிய ஆடை அணிந்த வைரவர் ஆகிய கடவுளின் இணைந்த திருவடிகளை நெஞ்சில் நிறுத்தி வணங்குவோம்.

இந்த நூலின் பாடல்களுக்கு னான் கையாளும் உறை அனைத்தும் பேராசிரியர் இரா. குமாரவேலன் அவர்களுடையது.

மிக எளியதான வாழ்த்தும் பாடுகிறார் ஒட்டக்கூத்தர்.

இறைவாழி, தரை வாழி, நிரை வாழி
இயல்வாழி, இசை வாழியே!
,மறைவாழி, மனுவாழி, மதிவாழி,
ரவி வாழி, மழை வாழியே!

இதற்குப் பொருளே சொல்லத் தேவையில்லை. நிறை + ஆநிரை, பசுக்கூட்டம் என்பது தெரிந்தால் போதும்.

இரண்டாம் பகுதியாகக் கூத்தரும், ‘கடைதிறப்பு’ பாடுகிறார்.

தார் மார்பமும், முகவிம்பமும் நும் காதலர் தர, நீர்
சேர் தாமரை இறையான் அடிபணிவீர்! கடை திறமின்!

திருமால் தனது மாலை அணிந்த மார்பினையும், பிரமன் தனது அழகிய முகத்து நாவினையும் (திருமகளுக்கும் நாமகளுக்கும்) இடமாகத் தந்துள்ளனர். நீவிர் இருவரும் முறையே செந்தாமரை மலரையும் வெண்தாமரை மலரையும் (திருமகளும் நாமகளும் வீற்றிருக்கும் மலர்கள்) இறையாள் ஆகிய உமையம்மையின் திருப்பாதங்களில் தூவிப் பணிகின்றீர். உங்கள் வாயிற் கதவுகளைத் திறப்பீர்களாக.

வெல்லும் பொருளதிகாரம் அலங்காரம், விளங்கச்
சொல்லும் பொருள் பகரும் குழல் மடவீர்! கடை திறமின்!

எழுத்ததிகாரத்தையும் சொல்லதிகாரத்தையும் வெல்லும் போருலதிகாரமும் அணியலங்காரமும் உங்களைப் புகழ்ந்து சொல்ல, அச்சொற் பொருளாய் விளங்கும் கருங்கூந்தலை உடைய மகளிரே, வாயிற் கதவுகளைத் திறப்பீர்களாக!

கடை திறப்பில், புறப்பொருளினுள் அகத்துறை பாடும் இடத்தும் தொல்காப்பியத்தை நினைவுபடுத்துகிறார் புலவர்.

உருகுவார் உயிர்படு படா முலை
உழறு மேல் உலகிலும் எனத்
திருகுவார் முசிவிசி விடாதவர்
திறமினோ! கடை திறமினோ!

தம்மை நினைத்து உருகுவார் உயிர் இறந்து போகவும், தமது சாயாது நிமிர்ந்து இருக்கும் மார்பகங்கள் வெளியே காட்சி தருமாயின் உலகம் அழியும் எனக்கருதி எப்போதும் கச்சின் முடிச்சு அவிழாதவாறு இலங்கும் மகளிரே, உங்கள் வாயிலின் பொற்கதவைத் திறப்பீர்களாக (முசிவிசி விடாத – கச்சு முடிச்சு அவிழாத)

எளிவரும் கொழுநர் புயமும் நுங்கள் இரு
குயமும் மண்டி எதிர் எதிர் விழுந்து
எளிவரும் கலவி புலவிபோல் இனிய
தெய்வ மாதர்! கடை திறமினோ!

உங்கள் இரு மார்பகங்களால் எளியோராகிய கணவரின் தோள்களைத் தாக்கிப் போரிடுதளால், உங்கள் கலவியே புலவி போல் மிக்க இன்பம் தரத் துய்க்கும் இனிய தேவ மாதர்களே, உங்கள் வாயிற் கதவுகளைத் திறப்பீர்களாக (புயம் – தோள்; குயம் – மார்பகம்)

பிசை அகன்று உயரும் நாக்கில், மருங்கும் குடி
அடி பதிந்தது அழவிடும் எனத்
திசை அகன்றளவும் அகல் நிதம்ப தடம்
உடைய மாதர்! கடை திறமினோ!

மேலே அகன்று பருத்த மார்பகங்களை அவற்றின் பாரம் தாங்காமல் இடை முறியும் நேரத்தில், நாம்தானே தாங்க வேண்டும் என்று இரக்கம் கொண்டு திசை எலாம் அகல வளரும் பரந்த அல்குலை உடைய மாதர்களே, உங்கள் இனிய வாயிற்கதவைத் திறப்பீர்களாக (நகில் – மார்பு, நிதம்ப தடம் -அல்குல்).

மூன்றாம் பகுதி, ‘காடு பாடியது’

நெடுங்குன்றம் ஏழும், பிலம் ஏழும்,
நேமிக் கிரியும், கடல் ஏழும்,
ஒடுங்கும் பாகத்து உறை மோடி
உறையும் காடு பாடுவோம்

என்று தொடங்குகிறது.

நெடிய மலைகள் ஏழு. பாதாளங்கள் ஏழு. சக்கரவாளக் கிரி ஒன்று, கடல்கள் ஏழு என இவை அனைத்தும் இறுதியில் சென்று ஒடுங்கும் சிவபெருமானது இடப் பாகத்தின்கண் தங்கி இருக்கும் மோடியாகிய துர்க்கையின் காட்டினது இயல்புகளை இனிப பாடுவோம் என்று தொடங்குகிறார் புலவர்.

பாலை நிலத்தின் தன்மை விரிவாகப் பேசப்படுகிறது.

சிரத் தெரிந்தன அழிந்து அழிந்து இவை
செய்து பைரவர்கள் செந்நிலம்
பரத்து எரித்து பொடி செய்ய, மற்றவை
பரிக்க வந்தவர் சிரிப்பரே!

வைரவ மதத்தினர் நலம் கொய்து கொண்டு வந்த தலைகளை இறைவியே துர்க்கைக்குப் பூக்களாக அருச்சனை செய்து போவர். மறுநாள் அவற்றை அப்புறப்படுத்துவதற்காக வரும் மாணாக்கர் பாலை நிலா வெப்பத்தால் அவை தீய்ந்து சாம்பலாகிப் போனதை எண்ணித் தமக்குள் சிரிப்பர்.

ஓலக் கடல் நெருப்பின் உலகேழும் உருகும்
காலக் கடையினும் கொடிய கண்கடைகளே

என்று காடு பாடும்போது நயம் பாராட்டுகிறார் புலவர். தெய்வ மங்கையரின் கடைக்கண்கள் ஊழித் தீயினும் கொடியான. அவை ஆரவாரம் எழுப்பும் ஊழிக் கடல் நெருபினைப் போல் ஏழு உலகங்களையும் உருகச் செய்யும்.

கட்கடைகளே எனும் செய்யுளின் தொடரைக் கண்கடைகளே எனப் பிரித்துல்லேன் .முன்பே பார்த்துள்ளோம், வேறொரு புலவர் கடைக்கண்ணார் என்பதைக் கட்கடையார்- கண்கடையார் எனப் பயன்படுத்தியதை. இல்முன் என்பதை முன்றில் எனப் பயன்படுத்தும் தமிழ் இலக்கணம். அதுபோல் கடைக்கண் என்பது கண்கடை – கட்கடை என்று பயன்படுத்தப்பட்டுள்ளது.

பிறமொழிச் சொற்களைச் சற்றுத் தாராளமாகப் பயன்படுத்துகிறார் ஒட்டக்கூத்தர். அதைப் பல பாடல்களில் கண்ணுறலாம். மேற்கோள் காட்டி நான் காலம் கடத்த விரும்பவில்லை. சில பிரயோகங்கள் இன்னும் எம்மூரில் வாழும் தன்மைத்தன. பத்துப் பத்துப் பேராக வாருங்கள் என்பதற்குப் “பப்பத்துப் பேரா வாங்க” என்பார்கள். புலவர், பப்பத்தினரே என்று வழங்குகிறார், ஒரு பாடலில்.

நாலாம் பகுதி, ‘தேவியைப் பாடியது’

கொடும் புரிசை நேமியோ! கொற்றப் போர் நேமியே!
இடும் திலகம் மான் மதமோ! எண் திசைய மான் மதமே!

என்கிறது ஒரு பாடல்.

தேவியினது கோயில் மதிலை சக்கரவாளக்கிரி என்று கூறுவோமோ என்றால் அது பொருந்தாது. அஃது அவளது ஆணைச் சக்கரமே எனச் சொல்ல வேண்டும். அவளுக்கு நெற்றியில் இடப்படுவது கஸ்தூரிப் போட்டோ எனில் இல்லை. அஃது எட்டுத் திசைகளில் உள்ள யானைகளின் மத நீரால் ஆகிய திலகம் ஆகும்.

புரிசை – மதில, நேமி – சக்கரம், கொற்றம் – அரசு, மான்மதம் – மான் கஸ்தூரி, எண் திசைய மான் மதம் – எட்டுத் திசை யானைகளின் மத நீர்.

ஐந்தாவது பகுதி, ‘பேய்களைப் பாடியது’. தேவியின் பரிவாரங்கலாகிய பேய்களின் பெற்றம் பாடுவது இந்தப் பகுதி. பேய்களின் இயல்புகளைப் பாடிய பின்னர் கூத்தர், மகளிர் தேவியின் கோயிலைச் சிறப்பித்துப் பாடுவது, ‘கோயில் பாடியது’.

கீழும் ஏழுநிலை; மேலும் ஏழு நிலை;
கோயில் வாயில் இரு கிரியுமே
சூழும் ஏழ் கடலும் அகழி, சக்ரகிரி
புரிசை; காவல் ஒரு சூலமே!

கோயிலின் கீழே அடித்தளம் ஆவன. கேழ ஏழு உலகங்கள். மேலே தூபிகளாக இருப்பனவும் மேல் ஏழு உலகங்கள். கோயில் வாயில்களாக இருப்பன கிழக்கில் உதயகிரி, மேற்கில் அத்தமனகிரி என்னும் மலைகள். ஏழ்கடலால் சூழப்பட்டது போன்ற அகழியினை உடைய கோயிலின் மதிலோ சக்ரவாள கிரி போன்றது. இத்தகைய கோயிலை இங்கு காவல் புரிவது ஒரு சூலாயுதமே!

அபாரமான உயர்வு நவிற்சியும் கற்பனையும் கொண்ட பாடல்கள் பல. தேவியின் வலிய பழைய கோயிலினுள் அகில உலகங்களுக்கும் தலைவியாகிய நாயகி வீற்றிருக்கும் ஒரு தெய்வீக ஆலமரம் இருக்கிறதாம். அதன் சிறப்புக்கு ஒரு பாடல்

சதுமுகன் முடித்த ஊழி ஒரு
சருகிலை உதிர்ந்து தூர் புனலின்
இதுமுதல் இயைந்த பூதம் என
இருநிலம் வழங்கும் சோபையது

பிரமனின் வாழ்நாள் முடிந்தால் இந்த ஆளின் ஒரு சருகு உதிரும். அவ்வாறு பல சருகுகள் உதிர்ந்து கடலின் ஒரு பகுதி மேடாகிவிட்டது. அதனையே உலகத்தார் இன்று பூமி என்று வழங்குகிறார்கள்.

“எல்லை ஒன்று இன்மை எனும் பொருள் அதனைக் கம்பன் குறிகளால் காட்டிட முயலும் முயற்சியைக் கருதியும்’ எனக் கம்பனைப் பாரதி ஏற்றிப் பாடுவான். கம்பனின் மிகையையும் சிறு குன்று எனச் செய்து விடுவார் போலும் ஒட்டக்கூத்தர்.

மேற்சொன்ன பாட்டில் நமக்குத் தெரிய வருவது, அந்த ஆலமரத்தின் ஆயுள் என்ன? அதன் கீழ் வீற்றிருக்கும் தேவியின் ஆயுள் என்ன? யோசித்தால் மலைப்பு ஏற்படுகிறது.

தக்கயாகப் பரணியில் காரணகாரியமாற்று திருஞான சம்பந்தர் சமணரை வென்ற கதை 52 பாடல்களில் விவரிக்கப்படுகிறது. கம்ப ராமாயணத்தில் இரணிய வதைப் படலம் போல. மன்னர் கேட்டிருப்பார், புலவர் யாத்திருப்பார். எனினும் பரநியுடன் ஒட்டாமல் நிற்கிறது இந்தப் பகுதி.

ஏழாவது பகுதி, ‘பேய் முறைப்பாடு’.

பேய்கள் தம் பசிப்பிணி ஆற்ற மாட்டாலம்ல் எடுத்துக் காலியிடம் விளம்புவது இப்பகுதி.

வையம் உண்ணோம்; கடல் மடோம்
மற்றும் புவனம் முற்றும் போய்
ஐயம் உண்ணோம்; கடல் நஞ்சு
குடியோம் உங்கள் அடியோமே!

என்கிறது ஒரு பேய். நியாயம்தானே! திருமாலைப் போல் பேய்களால் பூமியை எடுத்து விழுங்க முடியாது. அகதியனைப் போலக் கடலைக் குடிக்கவும் முடியாது. சிவனைப் போல உலகெலாம் நடந்து திருந்து பிட்சை வாங்கி உண்ண முடியாது. பாற்கடலில் திரண்டு வந்த நஞ்சினை வாரி உண்ணவும் முடியாது. என்ன அவலம் பாருங்கள். பேய்கள் எத்தனை நாட்கள்தான பசியோடிருக்கும்?

காளியையும் அவள் மக்களையும் குற்றம் சட்டுவதைப் போல குகனும் கணபதியும் அய்யனாரும் யாவற்றையும் எடுத்து விழுங்கி விடுகிறார்கள். நாங்கள் எதைத் தின்பது என்ற வகையில் சில பாடல்கள், நிந்தாஸ்துதியாக.

கார்மலையச் சந்தனமும் வட இமயக் கார் அகிலும்
போர் மலையக் கடவதொரு பிள்ளைக்கும் போக்கினையே!
எப்பயிறும் எக்கனியும் எக்கிழன்கும் எத்தேனும்
தொப்பை ஒரு பெருவயிற்றுப் பிள்ளைக்குச் சுமத்துதியே!
மிக்கள்ளும் கறி அநந்தமிடாப் பலவும் தடாப்பலவும்
எக்கள்ளும் ஒரு பிள்ளை மருந்தாட எடுக்குதியே!

என்பது பேய்களின் வருத்தம்.

வெற்றியே உடம்பு இழந்தோம், மற்றொரு மானிட உடம்பு
பற்றியே நின்று அடியோம் பணி செய்யப் பணி, வாழி!

மனிதப் பிறப்பு எடுத்தாவது பிழைத்துக் கொள்கிறோம், அதற்கேனும் ஆணையிடு என்கின்றன பேய்கள். தொனிப்பதாவது பேய்ப்பிறப்பைவிட மனிதப் பிறப்பு கீழானது என்பது.

எட்டாவது பகுதி, ‘காளிக்குக் கூளி கூறியது’. இந்தப் பகுப்புகள் யாவுமே கலிங்கத்துப் பரணியை முன்மாதிரியாகக் கொண்டவை. உள்ளடக்கம்தான் வேறுபடுகிறது.

காளியின் ஆணையின்படி, தக்கன் வேள்வியில் நடந்த சம்பவங்களை இப்பகுதி கூறுகிறது. தக்கன் வேல்விக்க் உவந்த குதிரைகளைப் பற்றிய விவரங்களைப் பேசுகிறது ஒரு பாடல்.

மரகதமே எனலாய வனப்பின
குரகதமே பதினாயிர கோடியே
ஏறியதாம் இவை போகிலம் எனவே
கூறிய கற்கிகளே சத கோடியே.
கவளம் உவப்பான, கரிய வனப்பன,
பவளம் வியப்பான பற்பல கோடியே
தரங்கம் நிரைத்தன தரளம் நிரைத்தன
டுரங்கம் நிரைத்தன கோடி தொகுத்ததே.
வெய்யன செக்கர் விசும்பு வெறுக்கச்
செய்யன ஆயிர கோடி திரண்டே.
பைந்துரகங்கள் விசித்த படைப்பரி
கைத்துரகங்கள் கலந்திடை யிட்டே.

மரகதமோ எனும் வனப்புடைய பசுமை வண்ணக் குதிரைப்படை பதினாயிரம் கோடி வந்தது. நம்மீது ஏறிச் செலுத்துவார் எவரும் இலர் எனும் சிறப்புடைய ‘கற்கி’ எனும் வகைக் குதிரைகள் நூறு கோடி வந்தன. காற்றும் வியக்கும் வேகமுடைய கிரய, அழகிய, வனப்புடைய குதிரைகள் பற்பல கோடி கடலலைகள் ஒன்றன் ஒன்றாக மறித்து வருதல் போல் வெண்முத்துப் போன்ற வெள்ளை குதிரைகள் கோடிக் கணக்கில் வந்தன. மாலை நேரத்துச் செக்கர் வானமும் சிவப்பல்ல வெளுப்பே எனக் கூறத்தக்க செங்குதிரைகள் ஆயிரம் கோடியாகத் திரண்டு வந்தன. பல வண்ணக் குதிரைகளின் இடையில் பாம்புகளை வார்களாய் இறுக்கிக் கட்டப்பெற்ற சேணங்கள் கொண்ட குதிரைகள் வந்தன.

மிகை பாடுவதில் கம்பனையும் தோற்கடிப்பார் போலும் கூத்தர். மேற்கண்ட பாடலில் நாம் அறியும் புதிய சொற்கள் பல. குரகதம்- குத்ரி, கவனம் – வேகம், பவனம் – காடூர், தரங்கம் – கடல் அலை, தரளம் – முத்து, துரங்கம் – குதிரை, விசும்பு – பவளம், பைத்துரகம் – பாம்பு, துரகம் – குதிரை.

தாட்சாயணி தனது தந்தையுடன் செய்யும் வாதம், தக்கனிடம் தோற்றுப் போய் அவள் சிவனிடம் சென்று முறையிட்டால், சினந்த சிவன் தக்கன் தருக்கு அடக வீரபத்ரனைப் படைத்தல், வீரபத்திரன் தக்கனுடன் போர் செய்தல் எனத் தக்கயாகப் பரணி நீள்கிறது.

போர் நடந்து, ‘கூழ் அடுதலும் இடுதலும்’, ‘ களம் காட்டல்; எனும் பகுதிகள் செயங்கொண்டாரைப் போலவே விவரிக்கப்படுகின்றன.

போரில் தேவர் படைகளுடன் தேவேந்திரனும் பேய்ப் படைகளுடன் வீரபதிரனும் போரிடும் வீரம் பேசப்படுகிறது பலபட. தேவியின் படைகள் போர் செய்தல் பாடப்படுகிறது. போர் பாடப்படுகிற விதம், காத்சிகள், இந்நூலை ஒரு சைவ இலக்கியம் என்பதைத் தெளிய உணர்த்தும்.

வச்சிரப் படையும் இந்திரன் படையில்
வந்ததால் அதனை, வல்லவன்
முச்சிரப் படையும் வேறு செய்திளது
நீறு செய்தது எதிர் முட்டியே.

எனும் பாடல் ஒன்று போதும். வசிரப்படை – இந்திரனின் வச்சிராயுதம். முச்சிரப்படை – சிவனின் சூலாயுதம்.

இறுதியாக இந்திரன் தன் முதன்மையான வலிய ஆயுதமாகிய வசிராயுதத்தை ஏவினான். அதனை வல்லவனாகிய வீரபதிரனது திரிசூலம் துண்டு துண்டாக ஆக்காமல் ஒரேயடியாக எரித்துச் சாம்பலாக்கிவிட்டது என்பது பொருள்.

உலகின் தலைவர் அனைவருக்கும் தாய் தந்தையர் உண்டு. ஆனால் பரமசிவனுக்கும் உமைக்கும் தாய் தந்தையைர் இல்லை எனப் பரவுகிறவர்தான் ஒட்டக்கூத்தர்.

தந்தை ஆர்? தாய் ஆர்? தலைவருக்கு;
எந்தை ஆர், யாய் ஆர்? எமக்கே!

எனும் ஒரு பாடலில் அது புலப்படும்.

ஒன்பதாம் பகுதி, ‘கூழ் அடுதலும் இடுதலும்’. கலிங்கத்துப் பரணி போல் அத்தனை விரிவாகவும் கொடூரமாகவும் இல்லை. என்றாலும் மையச் செய்தியில் மாறுபாடு இல்லை.

உந்தியில் முகிந்தன் முன்னாள்
உயிர்த்த தாமரையும் ஈரைந்து
இந்திர தருவும் தந்த
இலைச்சுருள் எடுத்தக் கட்டீர்

எனும் விதத்தில், திருமாலின் தொப்பூளில் முந்தித் தோன்றிய தாமரை இலையில் பத்து வகைக கற்பகத் தருக்களின் வெற்றிலைகளை எடுத்துச் சுருலாகக் கட்டி வைப்பீர் என்பது பாடலின் பொருள்.

பத்தாவது பகுதி, ‘களம் காட்டலும் சிறிய பகுதியே.

பதினோராவது வாழ்த்துப் பகுதியோடு தக்கயாகப் பரணி முற்றுப் பெறுகிறது.

வாழி தமிழ்ச் சொல் தெரிந்த நூல் துறை;
வாழி தமிழ்க் கொத்து அனைத்து மார்க்கமும்;
வாழி திசைக்கு அப்புரத்து நாற்கவி
வாழி கவிச்சக்ரவர்த்தி கூத்தனே

தமிழின் சொற்சிறப்புகளை உணர்த்தும் இலக்கண நூல் துறைகள் வாழ்க. இயல், இசை, நாடகம் என்னும் அனைத்துப் பிரிவுகளும் சேர்ந்த தமிழ்க் கொத்து வாழ்க. திசைகளுக்கு அல்ப்பாலும் சென்று தமிழ் நாற்கவிகளும் வாழ்க. கவிச்சக்கரவர்த்தி கூத்தன் வாழ்க என்று முடிகிறது தக்கயாகப் பரணி.

நாற்கவி – ஆசுகவி, மதுரகவி, வித்தாரகவி, சித்திரகவி எனும் நால்வகைக் கவிகள்.

ஒன்று தெரிகிறது. பரணி பாடுவதற்கு எளிதான நூலினம் அல்ல. பரணி பாடல் பெறும் தலைவர்களும் எளிதானவர் அல்ல. ஆனால் எதையும் மலினப்படுதிப் பார்க்கும் சமகால அரசியற்கவி மரபு வந்தவன், போனவன் ,வழி திகைத்து நின்றவன் எல்லோருக்கும் பரணி பாடிக் கொண்டிருக்கிறது.

(தொடரும்)