சிறுகதை

ஒரு நள்ளிரவு. காரணமறியாக் கண்விழிப்பு இட்டுச் சென்ற சிறுகதைப் புரட்டல். தொகுப்பின் பெயரோ, எழுத்தாளரின் பெயரோ கூடப் பொருட்டில்லாத திருப்பல். வாசிக்கவோ ? தூங்கவோ ? சிறுகதை கோரும் நுண்ணிய உணர்தலை உறுதியாகத் தவற விடும் அலட்சிய வாசிப்பில் பெறுவது என்னவாக இருக்க முடியும் என்பதை உள்ளம் அறிந்திருந்தாலும், ஊன்றிப் படிக்க வைக்கும் அதிசயத்தை எழுத்தின் திராணிக்கோ, எழுத்தாளரின் வல்லமைக்கோ விட்டுவிட்டு, சாய்ந்து புரட்டிக் கொண்டிருந்த என்னைப் புரட்டிச் சாய்த்தது அந்தச் சிறுகதை.

சொல்லப் போனால் சாதாரணமான தலைப்பு. முதலிரு வரிகளும் கூட சம்பிரதாயமான கதை சொல்லி வகையறா . மூன்றாவது வரி கூறிய செய்தி தான் கூரிய அம்பெனப் பாய்ந்தது. எட்டாவது வயதில் எனக்கு மட்டுமே தெரிந்ததென நான் கருதிக் கொண்டிருந்த சிறு திருட்டு, அதற்கான மனக்கிளர்ச்சி , கலக்கம் எல்லாம் விலாவாரியாக. அதைத் தொடர்ந்து நான் சொன்ன பொய்களும், உருவாக்கிய சூழ்நிலைத் தயாரிப்புகளும் அப்படியே !! வேண்டுமென்றே பேனாவுக்குப் பதில் பென்சில் என மாற்றப் பட்டிருந்தது. மாறுவேடம் போடவேண்டிய கதாபாத்திரத்திற்கு மரு ஒட்டினால் போதும் என்ற அளவிற்கு மட்டுமே வேறுபாடுகள்.

எனக்கு வியர்த்து விறு விறுத்தது என்றால் அது சாதாரணமான விவரணை. அடுத்தடுத்த கதைச் சம்பவங்களும் அவ்வண்ணமே என் வாழ்விலிருந்தே எழுத்துருக் கொண்டன. நினைத்துப் பாருங்கள் தூக்கம் வராமல் சிறுகதையைப் புரட்டிக் கொண்டிருந்தவன் கையில், தூங்கவே முடியாதபடி தன் வாழ்வே நீள் சிறுகதையாய்.

வாசிக்க வாசிக்க, திகில் கூடிக் கொண்டே வந்தது. அடுத்தது அதுவாக இருக்குமோ என்று நினைக்கும் போதே எழுத்துக்கள் கூடிச் சொல்லாகி, சொற்றொடராகி பத்திகளில் அதே சம்பவங்களாகின. கதைக்காக, நடந்தவைகளில் ஒரு நூல் வித்யாசம்.

கெட்ட சம்பவங்கள் மட்டுமல்ல. வெவ்வேறு காலகட்டங்களில் வெவ்வேறு ஊர்களில் நான் செய்த நல்லவைகளும் கூட வரிகளில் வரத் துவங்கின. சொல்லில் கைவைத்தால் விரியும் சிறுகதை இன்னொரு அடுக்கைக் கொடுத்தது. நிறைய நல்லவைகளும் அடுக்கின் இடுக்குகளில் மிளிர்ந்தன. இப்பொழுது நல்லதா, கெட்டதா என்பதல்ல பிரச்சனை. என் வாழ்வின் ரகசியங்கள் யாரோ ஒரு எழுத்தாளருக்கு எப்படித் தெரிந்தது? யார் அவர்?

ஆற்றொழுக்கென ஓடிய சிறுகதையை உருளச் செய்யும் நிகழ்ச்சிகள் எல்லாம் என் மீதே உருண்டன. என் மனத்தை மட்டுமல்ல அந்த அந்த நிகழ்ச்சிகளின் போது ஏனையோர் என்ன நினைத்தார்கள் என்பதும் வரத் தொடங்கியது. அது தான் இன்னும் இன்னும் முகத்தில் அறைந்தது. பயம் என்ற சொல்லின் முழுப் பரிமாணமும், அதன் உச்சமும், வீச்சும் என்னை நடு நடுங்க வைத்தன. மனக் கலக்கத்தை , அத்து மீறல்களை, சிறுமையை , பெருந்தன்மையை, காமத்தை , குரோதத்தை , யாருமறியாப் பழிவாங்கல்களை, அன்பை , காதலை , காதல்களை யாரோ ஒளிந்திருந்து பண்ணிய ஒளிப்பதிவை எழுத்தில் பார்ப்பதென்றால்…பயம் பீதியானது.

பத்திகள் ஒவ்வொன்றாகக் கிளம்பி மறையும் போதே நான் சொல்லமுடியாத அச்சத்தில் ஆழ்ந்தேன். கடுமையான காய்ச்சலில் பிதற்ற ஆரம்பிப்பவன் போல் முணுமுணுக்க ஆரம்பித்தேன். கண்டிப்பாக எனக்குத் தெரிந்தவர்களுக்குத் தெரியாத அந்தப் பெரிய ரகசியம் கதையில் வந்துவிடுமோ என்ற அச்சம் மேற்கொண்டு படிக்கவிடாமல் தடுத்தது. நீயும் புத்தகமும் தானே. அப்பட்டமாக இருந்தால் கூட என்ன பிரச்சனை என்று தோன்றிய போது மழையால் அரிக்கப்பட்ட தண்டவாளத்தில் ரயில் ஊர்வது போல் கதையை மெது மெதுவாக வாசித்தேன். வரக்கூடாது என்று வேண்டிக் கொள்ளும் போதே, வரத்தான் போகிறது என்ற உள்ளத்தின் குரலும் எதிரொலிக்க கதை வாசிப்பைத் தொடர்ந்தேன். என் வாழ்வில் நான் காண்பிக்காத , காட்ட விரும்பாத, நானே அசை கூடப்போடாத மறைப்புகள் எப்படி இவருக்கு கிடைத்தது?

ஐயோ …! அந்த மறக்க முடியாத .. மறக்க விரும்பும் , ஒட்டு மொத்த வாழ்வையும் மனதை அரிக்கும் சம்பவம் கதையில் வரும் அறிகுறிகள் தென்படுகின்றதே…கதை மெதுவாக அந்தத் தெருவுக்குள் நுழைகிறதே.. இன்னும் என்ன பயம் ..முழுவதும் நனைந்தாகி விட்டது. இனி பயப்பட்டும் என்ன ஆகப் போகிறது…சிறுகதை மெதுவாக அந்த வீட்டுக்குள் நுழைந்து விடுமோ !!! நுழைய விடாமல் தடுத்து விடலாமா ? ச்சே என்ன அபத்தமான யோசனை. …..அப்படித்தான் நடக்கும். அப்படித்தான் நடந்தது. வேறு வழியில்லை. தவிர்க்க முடியாதவற்றைத் தாங்கித் தான் ஆகவேண்டும். புத்தகத்தை மூடி வைத்து விடலாமா ? கதையைப் படிக்காமல் இருக்கும் அதிகாரம் என் கையில் தானே இருக்கிறது. ஹா! ஹா! என்ன அதிகாரம் முடிந்தால் புத்தகத்தை மூடிப்பார்…..மனம் ஆசைப்பட்ட மாதிரி புத்தகத்தை மூட யத்தனித்த போது மனம் மீண்டும் சிரித்தது. படித்துத் தான் பாரேன். என்ன ஆகி விடப்போகிறது. யாருமறியாச் சூழலில் செய்யும் தவறின் கிளர்ச்சி கதை படிப்பதிலும் இருப்பது போல் பட்டது. அஞ்ச வேண்டியதற்கு அஞ்சாமல் அதைப் படிக்க அஞ்சுவதா ?

ஓ!! அந்த வீட்டுக்குள் கதை நுழைந்தே விட்டது. போர்வையை நனைத்தது வியர்வை…வாய் ஒட்டிக் கொண்டது. பேய்க்குப் பயப்பட்டால் கூடத் தாயத்தோ, திருநீறோ, மந்திரமோ…கதைக்குப் பயப்படுவதை என்ன சொல்லிப் புரிய வைக்க.. என்ன செய்து தடுக்க முடியும்.

ஓவ்வொரு வரியும் சொல்லும், எழுத்தும், ஏன் இடைவெளியும் கூட என்னைச் சொல்வதாய்ப் பட்டது. என்னைக் கொல்வதாய்ப் பட்டது. விவரமறிந்த பருவம் தொட்டு நாளது தேதிவரை வாழ்வின் ரகசியங்கள் தொகுக்கப்பட்டது போன்று துளைத்தது கதை.

இனிப் பயப்பட்டுப் பயனில்லை. கதை என்ன நடந்ததோ அதன் பிரதியாய், சாயலாய், நிழலாய், பிம்பமாய், நகலாய் படிகளாய் வரிகளில் நீந்தியது. வலியும் வேதனையும் இன்பமும் ஒரு சேர அனுபவித்த விதமாய் கதை என்மேல் படர்ந்து, நசுக்கி, அறைந்து என்னை ஏதோ ஒன்றில் திளைக்க வைத்தது. கதை அதன் உச்சத்தை இலக்கணப்படி அடைந்து முடிவில் நான் கதைக்குப் பயந்த இடத்தில் நின்றது. நிற்கவில்லை. நான் நிறுத்திக் கொண்டேன். இனி வரும் வரிகள் எதிர் காலமாய் இருக்குமோ ? என் விரல்கள் நின்ற வரிகளைத் தாண்டி வருங்காலத்தைத் தரிசிக்க ஆரம்பிக்கையில் புத்தகத்தைத் தூக்கி எறிந்தேன்.. கடந்த காலங்களை ஆண்டாண்டுகளாய் அதன் வலியோடு தாங்கிக் கொள்ள முடிந்த போது வருங்காலத்தின் ஒரு நொடியை அதன் பரவசத்தோடு கூடத் தாங்க முடியவில்லை. இனித் தாங்கிக் கொள்ளவே முடியாது…

திகைப்பு விலகிட நான் விக்கித்து நின்றேன். நிகழ் காலத்தில் நின்றேன். கதையும் கடந்த காலத்தைப் படித்தது . கதை படித்ததும் கடந்த காலமானது.. வேதனையும் பரவசமும் முடிந்த பின் என்னை இன்னொரு பயம் பீடித்தது. நிச்சயமாய் இன்னொரு முறை இந்தப் புத்தகத்தில் இந்தக் கதையைப் படிக்கப் போவதில்லை. ஆனால் எனக்குத் தெரிந்தவர்கள் படித்து விட்டால்.?

படித்தால் புரிந்து விடுமா ? எனக்கு மட்டுமே தெரிந்த சம்பவங்களை வாசிப்பவர்கள் இது என் வாழ்வின் ரகசியங்கள் என்று கண்டுபிடித்து விட முடியுமா ? ஹா ! ஹா ! உன்னைத் தவிர யாரும் புத்திசாலி இல்லையா. ஒன்றாம் சம்பவம் நடந்த இடத்தையும் மூன்றாம் சம்பவம் நடந்த இடத்தையும் படிக்கும் போதே உன்னைக் கையும் களவுமாகக் கண்டு பிடித்துவிடலாமே..நீ என்னவோ நெருப்புக் கோழி மாதிரி தரைக்குள் முகத்தைப் புதைக்க முயல்கிறாய். கதை மூடிய அட்டைக்குள் சிரித்தது .

வேறு வழியில்லை. புத்தகத்தை மறைத்துத் தான் ஆகவேண்டும். பிறர் கைக்குச் சிக்கிப் பிடிபட்டு கை கட்டி நிற்கவேண்டியதைச் சகித்துக் கொள்ள முடியாது. எப்படி மறைப்பது ? எப்படி வந்ததென்றே தெரியவில்லை. நதிமூலம், ரிஷிமூலம் பார்க்க நேரம் இல்லை. எரித்து விட வேண்டியது தான். முடிவெடுத்து விட்ட பின் சாதுர்யங்கள் தானாக ஒட்டிக் கொள்ளும். முடிவெடுக்கத்தான் குழப்பம். தீக்குச்சி தீப்பெட்டியுடனான ஒரு தீற்றலில் புத்தகம் சாம்பலானது. கதையும். படித்த கடந்த காலமும் படிக்காமல் விட்ட எதிர்காலமும் கண்ணெதிரே….சாம்பற் துகள்களாய் கொஞ்ச நேரத்தில் தூசியாய்க் காற்றில்……காற்றாய்…

தூக்கம் தேடி, தூக்கத்தைத் தொலைத்துப் பின் நீண்ட அசைக்குப் பின் தூக்கத்தைக் கண்டடைந்தேன். முற்றிலுமாய் உறங்கிப் போனேன். எழும்போதும் சம்பவங்களின் அழுத்தத்தால் கனத்தபடி எழுந்து மறந்து விட வேண்டும் என மறக்காமல் நினைத்துக் கொண்ட பின் வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன் என் இடம் விட்டு வெளி வந்தேன். மெல்ல அடுத்த அறைக்குள் பார்த்தேன். அங்கும் சாம்பல். புத்தகச் சாம்பல். எல்லோர் அறைகளிலும் புத்தகச் சாம்பல். எல்லோர் கண்களும் என்னுடையதைப் போன்றே… எங்கும். எங்கெங்கும் சாம்பல். களுக் என்று சிரிக்கும் போதே இன்னொரு பயம் என் சாம்பலையும், கண்களையும் இவர்கள் பார்த்திருப்பார்கள் தானே !! எனக்குப் புரிந்த மாதிரி அவர்களுக்கும் புரிந்திருக்கும் தானே…மீண்டும் அறைக்கு ஓடி வந்தேன். எரிந்து சாம்பலான அதே புத்தகம் புத்தம் புதியதாய் மேஜையில் இருந்தது. அமைதியாய்ச் சிரித்தது. என்ன காரணத்தினாலோ பயம் விலகப் பெற்றவனய் மீண்டும் கதையைப் படிக்க விரும்பினேன். மெல்ல எடுத்துப் புரட்டினேன் …… அந்தக் கதையை மட்டும் காணவில்லை.