இது, லாரன்ஸ் க்ரௌஸ் (Lawrence M Krauss) லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் நாளேட்டில் எழுதிய ‘எ யூனிவர்ஸ் வித்தவுட் பர்பஸ் (A universe without purpose)’ என்ற கட்டுரையின் தமிழாக்கம்.
லாரன்ஸ் க்ரௌஸ் ஒரு கொள்கைநிலை இயற்பியலாளர் (Theoretical Phycist) மற்றும் அண்ட அறிவியலாளர் (Cosmologist.). எ யூனிவர்ஸ் ஃப்ரம் நத்திங் (A universe from nothing) என்ற நூலையும் எழுதியிருக்கிறார். தற்போது, அரிஸோனா மாநிலப் பல்கலையில் (Arizona State University) துவக்கங்களை ஆராயும் திட்டத்துக்கு தலைமை இயக்குநராகப் பணியாற்றி வருகிறார்.
இயற்கையில் ஏதோ குறிக்கோளும், செயல் திட்டமும் நிச்சயம் இருப்பதாக நம்பும் காட்சிப்பிழை அல்லது கருத்துப்பிழைதான் அறிவியல் அன்றாடம் எதிர்கொள்ளும் மகத்தான மாயை (illusion). எங்கு பார்த்தாலும் இவ்வுலகம் மனிதகுலம் செழுமை பெறவேண்டி வடிவமைக்கப்பட்டதாகவே நமக்குத் தென்பட்டு வருகிறது.
சூரியனிலிருந்து சொகுசான தொலைவில் வலம் வருவதுடன், அங்ககப் (organic) பொருட்களும், நீரும், இணக்கமான தட்ப-வெப்பமும் கொண்டதாக உள்ள பூமியில், உயிரினம் எழ, வாழத் தக்க சூழல் உள்ளது. இருப்பினும்,நீர் மற்றும் ஹைட்ரஜன்,கரிம மூலகங்கள் நிறைந்த 100 பில்லியன் சூரியமண்டலங்களைக் கொண்டுள்ள நம் விண்மீன்திரளில் (galaxy), ஏதோ ஒரு இடத்தில் உயிர் வாழும் சூழல் அமைந்து விட்டதில் அதிசயமேதுமில்லை. பல்லுயிர் தோன்றியதிலும் அதிசயம் ஏதுமில்லை- திட்டமிடல் ஏதுமின்றியே, இயற்கைத்தேர்வு முறையில், உயிர்வடிவங்கள் பன்மயத்தன்மையும், ஒழுங்கும் கொண்டவையாக உருவாகும் என்பது, டார்வினால் 150 ஆண்டுகளுக்கு முன்னரே விவரிக்கப்பட்டு, அதன் பின்னர் பல்வேறு கள ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்ட உண்மையாகும்.
பூமியும்,உயிர்களும்,பிரபஞ்சமும,அவற்றின் இயக்க விதிகளும் இருப்பதற்கு ஒரு ஆழ்ந்த காரணம் இருக்க வேண்டும் என்று அனுமானிப்பது மனிதர்களின் ஆழ்மனத் தேவையாக இருப்பது தான் இந்தத் தோற்றமயக்கங்களின் ஊற்றுக்கண். இது, பிரபஞ்சத்தின் தோற்றம், அதன் உருமலர்ச்சி(evolution) போன்றவற்றை ஆராயும் அண்ட அறிவியலாளனாகிய(cosmologist) எனக்கு வருத்தந்தரும் நிதர்சனம். படைப்பாளியுமின்றி, எந்தக் குறிக்கோளும் இல்லாது இயங்கி வரும் பிரபஞ்சத்தில் வாழ்வது, நிறைய பேருக்கு நினைத்தும் பார்க்க முடியாத ஒன்று.
ஆனால் நினைக்கமுடியாதனவற்றையும் சிந்தித்துப் பார்க்க விஞ்ஞானம் நமக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறது. ஏனெனில் ஆதாரமற்று உருவான மனச்சாய்வுகள், நம்பிக்கைகள், பயங்கள் அல்லது அபிலாசைகளை எல்லாம் தவிர்த்து விட்டு, இயற்கையின் வழிகாட்டலை ஏற்கும்போது நாம் நமக்கு சௌகர்யமான வட்டத்தை விட்டு வெளியேற வேண்டி வருகிறது. பரவெளி(cosmic space) மற்றும் கால(time) அளவுகள் அறுதியானவை அல்ல; அவை பார்வையாளர்-சார்புடையவை என்று ஐன்ஸ்டீன் உணர்த்தியதில் தொடங்கி, பின்னர் குவாண்டம் விசையியலைப்(Quantum mechanics) பயன்படுத்தத் துவங்கியபோது, பண்டைத் தர்க்கத்தின் தூண்கள் ஒவ்வொன்றாக விழுந்தன. க்வாண்டம் விசையியல் நாம் சோதனைகள் மற்றும் அனுபவங்கள் மூலம் பெறக்கூடிய அறிவின் எல்லை வரம்புக்குட்பட்டது என்பதை நமக்கு உணர்த்தி, மூலத் துகள்களும், அவற்றால் அமைக்கப்படும் அணுக்களும் லட்சக்கணக்கான அதிசயச் செயல்களை ஒரே நேரத்தில் உடனடியாகச் செய்து முடிக்கின்ற அளவுக்குச் செயலூக்கம் கொண்டவை என்று நிரூபணம் செய்தது.
இருபத்தியோராம் நூற்றாண்டு, பேரண்ட அளவைகளில்(cosmic scale) புதிய புரட்சிகளையும், புதிய தரிசனங்களையும் கொண்டு வந்துள்ளது. இன்று எண்பது வயதைக் கடந்தவர்கள் தம் வாழ்நாளில் பார்த்திருக்கையில் நடந்து, பிரபஞ்சம் பற்றிய நம் புரிதலில் ஏற்பட்டுள்ள பெரும் மாற்றங்களோடு ஒப்பிட்டால், மனித சரித்திரத் தொடக்கம் முதல் நம் புரிதலில் ஏற்பட்டிருந்த மாறுதல்கள் சொற்பமானவை எனலாம். 87 ஆண்டுகளுக்கு முன்பு நாம் அறிந்த வரை, பிரபஞ்சம் என்பது ஒற்றை விண்மீன்திரளும் (galaxy), நமது பால்வீதியும்(milky way) அவற்றைச் சூழ்ந்து முடிவற்ற, அசைவற்ற, ஏதுமற்ற, வெற்றிடமும் மட்டுமே எனக் கருதப்பட்டது. ஆனால், 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெருவெடிப்பால் உருவாகிப் பெருகிவரும் இதே பிரபஞ்சத்தில், நம் கண்ணில் தெரியும் பகுதியிலேயே, 100 பில்லியன் விண்மீன்திரள்கள் இருப்பதாக இன்று அறிகிறோம். (பெருவெடிப்புக்கு முந்திய) ஆரம்ப நொடிகளில், இன்று நாம் பிரபஞ்சமாகக் காண்பவையும் இன்னும் பலவும், ஒரு அணுவிலும் சிறிய கொள்ளளவுக்குள் இருந்தது.
ஆக, நாம் தொடர்ந்து வியப்படைந்து வருகிறோம். கண்டங்கள் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டு வரவர, பூமியின் தரைப்படத்தைத் திருத்தி வரைந்துகொண்டிருந்தார்களே முன்னாள் நிலப்பட தயாரிப்பாளர்கள், அவர்களைப் போன்ற நிலையில் நாமிருக்கிறோம். பூமியின் வடிவம் தட்டையல்ல என்ற அறிதலை அவர்கள் எதிர்கொண்டதைப் போலவே, ஆதார கருத்தாக்கங்களாக நாம் முன்பு ஏற்றுக் கொண்டிருந்தவற்றை மாற்றும் இன்றைய உண்மைகளை எதிர்கொள்ள வேண்டும். நாம் சூன்யம் என்று குறிப்பிடும் ‘ஏதுமற்ற’ நிலையின் விளக்கமும் இப்போது மாற்றமடைந்திருக்கிறது
நாம் காணும் பிரபஞ்சத்தின் சக்தியில் பெரும்பகுதி, விண்மீன்திரள்களுக்குள்ளிருந்து வரவில்லை என்றும், மாறாக, அவற்றிற்கு வெளியேயுள்ள வெற்றிடத்திலிருந்து வருகிறது என்றும் இன்று நமக்குத் தெரியும். இந்த வெற்றிடம் ஏன் ’கனக்கிறது’ என்று இன்னும் அறியப்படவில்லை என்பது ஏன் என்று நமக்கு இன்னும் தெரியாது. வெற்றிடத்து ஆற்றல் ஈர்க்கும் தன்மை கொண்டதல்ல; புவி ஈர்ப்பு விசையைப் போல ஆனால் எதிர்த்து விலக்கித் தள்ளும் தன்மையுடையது; எனவே, ‘கனம்’ என்ற வார்த்தைப் பிரயோகமே தவறானது. இந்த வெற்றிடத்து சக்தியே நமக்கு வெகு தொலைவிலுள்ள விண்மீன்திரள்களை தொடர்ந்து கூடிவரும் வேகத்தோடு தொலைவுக்குத் தள்ளிவிடுகிறது. அதன் காரணமாக, அவை ஒளிவேகத்தையும் விடக் கூடுதலான வேகத்தில் விலகி, நாம் காண வழியில்லாத தொலைவில் மறையும்.
இது எதிர்காலம் பற்றிய நம் எதிர்பார்ப்புகளை மாற்றும், அது இப்போது நிறையவே வறண்டதாகத் தெரிகிறது. நாம் காத்திருக்கும் காலம் நீண்டால், வர வர மிகக் குறைவான அளவு பிரபஞ்சமே கண்ணில் படும். பல நூறு பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர், (பூமியும்,சூரிய மண்டலமும் அப்போது சுவடற்று அழிந்திருக்கும்), இங்கிருந்து மிகத் தொலைவில் உள்ள ஏதோ ஒரு நக்ஷத்திரத்தைச் சுற்றிவரும் ஏதோஒரு கிரகத்தில் அப்போது வாழும் வானவியல் வல்லுனர்கள் பார்க்கப்போகும் பிரபஞ்சப் பெருவெளி பற்றி அவர்களுக்குக் கிட்டும் கருத்து, நாம் சென்ற நூற்றாண்டு முடிவில் கொண்டிருந்த பிரபஞ்சப் பார்வையைப் போன்று, குறைபாடு உடையதாக இருக்கும்; தாமிருப்பது முடிவற்ற, இருண்ட, மாறுதலற்ற பிரபஞ்சத்தில் மூழ்கியுள்ள ஒற்றை விண்மீன்திரளாக அவர்களால் காணப்படும் பிரபஞ்சத்தைப் பேரளவில் பார்க்கையில் கிட்டும் இந்த முற்றிலும் புதிய பிம்பத்திலிருந்து, மிகச் சிறு அளவில் உள்ளனவற்றைப் பற்றிய இயற்பியலுக்கும் புதுச் சிந்தனைகள் கிட்டியுள்ளன. பெரிய ஹாட்ரான் இடிப்பான் (Large Hadron Collider) என்னும் துகள் வேகமுடுக்கி எந்திரம், பொருள்திணிவின் (mass) மூலாதாரம் பற்றி நம் ஆவலைத் தூண்டும் அறிகுறிகளைக் காட்டிள்ளது. அதாவது பருண்மையாக நாம் காண முடிவதெல்லாம், ஒருவகையான அண்டவெளி விபத்து என்பதாகத் தெரிகிறது. வேகமுடுக்கிப் பரிசோதனைகள், ஹிக்ஸ் பரப்பின் ( Higg’s Field) இருப்பிற்கு ஆதரவான ஆதாரங்களை வழங்கியுள்ளன-அதாவது, திடீரென்று இப்பரப்பு பிரபஞ்சமெங்கும் உருவானதாகக் கருதப்படுகிறது. எல்லா அடிப்படைத் துகள்களும் இந்தப் பரப்போடு ஊடாடுவதால்தான், அவை நாம் பொருள்திணிவென்று அறிகிற தன்மையைப் பெறுகின்றன.
எல்லாவற்றையும் விட எதிர்பாராத விளைவு இதுவே- பொது சார்புடைமையின் கருத்துகளோடு, க்வாண்டம் விசையியல் கருத்துகளை இணைத்த பார்வையில், முழுப்பிரபஞ்சம், கருப்பொருள், கதிர்வீச்சு மற்றும் ககன வெளி இவை யாவும், கடவுளின் வெளிப்படையான தலையீடு ஏதுமின்றி , எப்படி சூன்யத்திலிருந்து தன்னிச்சையாக உருவாகலாம் என்று நாம் அறிந்துகொள்ள முடிகிறது. க்வாண்டம் விசையியலின் ஹைஸன்பெர்க் நிலையின்மைக் கொள்கை, வெற்று வெளியாக நாம் நினைக்கும் இடத்தில், யாராலும் அறியப்படாமலே என்னவெல்லாம் நடக்கலாம் என்பதின் சாத்தியக்கூறுகளை விவரிக்கிறது. ஈர்ப்பு விசையும் க்வாண்டம் விசையியலால் நெறிப்படுத்தப்படுமானால், புதியதாக ஒரு முழு பிரபஞ்சமும் தன்னிச்சையாகத் தோன்றலாம் அல்லது மறையலாம். அப்போது நம் சொந்தப் பிரபஞ்சம் தன் தனித்துவத்தை இழந்து, பல பிரபஞ்சங்களின் தொகுப்பில் (multiverse) ஒரு பகுதியாகக் கருதப்படும்.
இன்றைய துகள் இயற்பியல், ஏதோ உள்ள (Something) மற்றும் ஏதுமற்ற (Nothing) என்கின்ற கருதுகோள்களைப் பெருமாற்றத்துக்கு இட்டுச் சென்றிருக்கிறது. ’ஏதோ உள்ள’ என்றால் தொடக்க நிலைத் துகள்களும் அவற்றைப் பிணைக்கும் விசைகளும் என்று அர்த்தம். ’ஏதுமற்ற’ என்றால் வெற்றிடத்தின் இயங்கியல் (dynamics) என்றோ. வெளி இலாத நிலை என்றோ அர்த்தம் கொள்ளலாம். பிரபலமான கேள்வியான ’இங்கே ஏன் ஏதுமில்லாமல் இருப்பதற்கு மாறாக ஏதோ ஒன்று இருக்கிறது?’ என்பது ஒரு புரட்சிகரமான கேள்வியும் கூட. நாம் சார்ந்துள்ள இயற்பியல் விதிகள் கூட அண்டத்தில் நிகழ்ந்த விபத்தினால் உண்டாகி இருக்கலாம்; வெவ்வேறு பிரபஞ்சங்களுக்கு வெவ்வேறு விதிகள் இருக்கையில், இருப்பும், இல்லாமையுமாக நாம் கருதுவது, அனைவருக்கும் பொருந்தாது- திருத்தம் தேவைப்படும். ஏன் நாம், ஏதுமில்லாத பிரபஞ்சத்தில் வாழாமல், ஏதோ சிலவுள்ள இந்த பிரபஞ்சத்தில் வாழ்கிறோம்?- இந்தக் கேள்வி, ஏன் சில மலர்கள் சிவப்பு நிறத்திலும், மற்றவை நீல நிறத்திலுமாக இருக்கின்றன என்று கேட்பதைப் போன்ற அர்த்தமற்ற கேள்வியாகவே தெரிகிறது.
குறிப்பாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால், அது, நம் பிரபஞ்சம் சூன்யத்திலிருந்து வந்தது என்பது விஞ்ஞான ரீதியில் நடக்கக்கூடியது மட்டுமல்ல, தனிச்சிறப்புடையதும் ஆகும் என்பதே. சூன்யத்திலிருந்து தோன்றிய பிரபஞ்சம் எத்தகைய பண்புகளைக் கொண்டதாக இருக்கும் என்று கேட்டால் அவை நாம் வாழும் பிரபஞ்சத்தின் பண்புகளை ஒத்ததாக இருக்கும் என்னும் பதில் சரியாக இருக்கலாம்.
இதெல்லாம், நம் பிரபஞ்சமும், அதன் இயக்க விதிகளும் , தெய்வீக வழிகாட்டலோ, குறிக்கோளோ இல்லாமல், தன்னிச்சையாகத் தோன்றின என்பதற்கான நிரூபணமாகிவிடுமா? அல்ல, ஆனால் அப்படியும் நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதையே தெரிவிக்கிறது.
அது சாத்தியம் என்று சொல்வது, நம் வாழ்க்கைக்கு அர்த்தமெதுவும் கிடையாது என்று குறிப்பால் உணர்த்தும் முயற்சி அல்ல. தெய்வீக நோக்கத்திற்கு மாற்றாக, நம் வாழ்விற்கு அர்த்தம் என்பது, நம் உறவுகள், நிறுவனங்கள், மனித அறிவின் சாதனைகள் மூலம் நம்மை எவ்வாறு உருவாக்கிக் கொள்கிறோம் என்பதைப் பொறுத்தும் கிட்டும்.
மேலும் குறிக்கோள் இல்லாத பிரபஞ்சத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதான கற்பனை, நனவுலகை எதிர்கொள்ளும் வலிவை நமக்குத் தருகிறது. இதில் எதுவும் கெட்டு விட்டதாக எனக்குத் தெரியவில்லை. என் இருப்பை நியாயப்படுத்துவதற்காக கண்டுபிடிக்கப்பட்ட கற்பனையான தேவதைக் கதை(fairy tale) உலகில் வாழ்வதைவிட, என் விருப்பங்களையும், நம்பிக்கைகளையும் கருதாமல் தன்னிச்சையாக இயங்கிக்கொண்டிருக்கும் இந்த வினோதமான, தனிச்சிறப்புடைய பிரபஞ்சத்தில் வாழ்வது எனக்கு நிறைய மனத் திருப்தி அளிக்கிறது.
-o00o-
அறிவியல் சொல் விளக்கம்
1)பெரும் ஹாட்ரான் இடிப்பான் என்பது என்ன? இங்கே ஒரு விளக்கம் கிட்டும்- http://public.web.cern.ch/public/en/lhc/lhc-en.html
இதிலிருந்து ஒரு சிறு பத்தி இதோ:
The Large Hadron Collider (LHC) is a gigantic scientific instrument near Geneva, where it spans the border between Switzerland and France about 100m underground. It is a particle accelerator used by physicists to study the smallest known particles – the fundamental building blocks of all things. It will revolutionise our understanding, from the minuscule world deep within atoms to the vastness of the Universe.
2)In particle physics, the Higgs mechanism is the process that gives mass to elementary particles. The particles gain mass by interacting with the Higgs field that permeates all space.
3) The multiverse is the hypothetical set of multiple possible universes (including the historical universe we consistently experience) that together comprise everything that exists and can exist.
4) In quantum mechanics, the Heisenberg uncertainty principle states a fundamental limit on the accuracy with which certain pairs of physical properties of a particle, such as position and momentum, can be simultaneously known. In layman’s terms, the more precisely one property is measured, the less precisely the other can be controlled, determined, or known.
5)Quantum mechanics is the body of scientific principles that explains the behavior of matter and its interactions with energy on the scale of atoms and atomic particles.