கஹானி

சமீபகாலத்தில் இந்திய சினிமா தொடர்பான செய்திகளில், “என்ன செய்தாலும் தியேட்டருக்கு மக்கள் வருவதில்லை, அதனால்தான் ஸ்டார் வேல்யூ, பஞ்ச் டயலாக், ஐட்டம் சாங், அபத்த காமெடி எல்லாம் தேவையா இருக்கு,” என்று திரைத்துறையினர் அலுத்துக் கொள்வதைப் பார்க்க முடிகிறது. ஆனால் இது எதுவுமே இல்லாமல் வெறும் திரைக்கதையையும், தேர்ந்த நடிப்பையும் மட்டும் முக்கியமாக வைத்து எடுக்கப்படும் படங்கள் பெறும் வெற்றியும், ஷாரூக் கான் போன்ற சூப்பர் ஸ்டார்கள் கூட கோடிக்கணக்கில் செலவு செய்து படமெடுத்து, ஒரு வருடம் விளம்பரப்படுத்தி எடுக்கும் படங்கள் படுதோல்வியும் அடைவதைப் பார்க்கும்போது இவர்கள் இன்னும் எத்தனை நாட்களுக்கு இந்தப் பொய்யைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள் என்று ஆச்சரியப்படவைக்கிறது.

குறைந்த பட்ஜெட்டில் நல்ல திரைக்கதையை மட்டும் நம்பி விறுவிறுப்பாக எடுக்கப்பட்ட ஸ்ரீராம் ராகவனின் படம் ‘ஜானி கத்தர்’ மாபெரும் வெற்றியடையவில்லையென்றாலும், நல்ல வெற்றியையும், சினிமா ஆர்வலர்களின் கவனிப்பையும், விமர்சகர்களின் ஆதரவையும் பெற்றது. அதே ஸ்ரீராம் ராகவன் ஸாயிஃப் அலி கான் என்ற நட்சத்திரத்தை வைத்து அறுபது கோடி ரூபாய் செலவில் எடுத்து சமீபத்தில் வெளியான ‘ஏஜண்ட் வினோத்’ போட்ட காசைக்கூடத் திருப்பிக்கொடுக்கவில்லை. வெளியான வேகத்தில் திரும்பிச் சென்றுவிட்டது. ‘ஏஜண்ட் வினோத்’ ஓடும் தியேட்டர் ஒரே வாரத்தில் காற்றாடிக்கொண்டிருக்க, அதே மல்டிப்ளெக்ஸில் இன்னொரு தியேட்டரில் வெறும் எட்டுகோடி ரூபாய் செலவில், திரைக்கதையையும், வித்யா பாலனின் நடிப்பையும் மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட ‘கஹானி’ சக்கைபோடு போட்டுக்கொண்டிருந்தது. (இதுவரை ஆகியிருக்கும் மொத்த வசூல் 75 கோடி ரூபாய் என்று சொல்கிறது விக்கிபீடியா.) இந்திய வணிக சினிமாவின் சமீபத்திய ஆச்சரியம் இந்தப்படம்.

‘கஹானி’ என்றால் கதை என்று அர்த்தம். ஏழுமாதக் கர்ப்ப வயிற்றை ஏடாகூடமாய்த் தாங்கிக்கொண்டு வித்யா பக்ச்சி என்ற பெண் கொல்கத்தா பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து வெளியே வந்து நேரே காளிகாட் போலிஸ் ஸ்டேஷனுக்குப் போகிறார். “வேலை விஷயமாய் போன மாசம் லண்டனிலிருந்து கொல்கத்தா வந்த என் கணவனைக் காணோம்,” என்று புகார் கொடுக்கிறார். விசாரிக்கும் இடமெல்லாம் ‘அப்படி ஒரு ஆளே கிடையாது,” என்கிறார்கள். ”கிடைப்பான். ஆனால் முயற்சி பண்ணனும்,” என்று துர்காபூஜா திருவிழாக்கோல கொல்கத்தாவில் வித்யா தானே கிளம்பிவிடுகிறார். அவரது கணவனின் முகஜாடை உளவுத்துறையின் பரம ரகசியமான ஓர் ஆளின் முகஜாடையோடு ஒத்திருப்பதைக்கண்டு இந்திய உளவுத்துறையும் கதைக்குள் குதிக்கிறது. கணவன் கிடைக்கவேண்டும் என்று வித்யா அதிகாரிகளுடன் ஒத்துழைக்கிறார். இதற்கு நடுவே அரசாங்கத்தினுள்ளேயே உயர் அளவில் தீவிரவாதத்துக்கு துணை. இதுவும் வித்யாவின் தேடலில் குறுக்கிடுகிறது. தேடப்படுபவரின் தொடர்புகளை போலிஸ், வித்யா, உளவுத்துறை கூட்டணி சுறுசுறுப்பாய்க் கண்டுபிடிக்க, அதே வேகத்தில் எதிர்தரப்பு அவற்றை ஒன்றொன்றாய்த் துண்டித்துக்கொண்டே வர , சுவாரசியமான திருப்பங்களுடன் விறுவிறுப்பாய் கதை ஓடுகிறது.

பயங்கரவாத வகைகள், அவர்கள் கையாளும் வழிமுறைகள், அவற்றுக்கு எதிராய் நிர்வாகம் உபயோகிக்கக்கூடிய பலம், பலவீனம் இவையெல்லாம் (துயரகரமாய்) இப்போது சின்னப்பசங்களுக்கும் புரிகிறது. அதுவே இதுபோன்ற வித்தியாசமான திரைக்கதைகளை வெகுஜனப்படத்துக்கு உபயோகிக்கும் தைரியத்தை இயக்குனர்களுக்குக் கொடுத்திருக்கிறது. பயங்கரவாதத்தின் பின்னணியில் நடக்கும் த்ரில்லெர் வகைப்படம் என்று இதைச் சொல்லலாம். துப்பாக்கி, அடிதடி, ஹெலிகாப்டர் சண்டை என்றில்லாமல் இங்கே நடக்கும் ஆக்ஷன் ஒரு வித செஸ் ஆட்டம்.  நிறைய சைக்காலஜி, தந்திரம், புத்திசாலித்தனம், உபயோகித்து ஒவ்வொருவரும் அடுத்தவரை விளையாட்டின் அடுத்தகட்டத்துக்கு நகர்த்திக்கொண்டு போவது. அந்த வகையில் இதை ஒரு சைகலாஜிகல் த்ரில்லெர் என்றும் சொல்லலாம். [கிட்டத்தட்ட இதேபோல் ஒரு புத்திசாலித்தனமான ஆட்டம் சிலவருடங்களுக்கு முன் ‘எ வென்ஸ்டே’ (தமிழில்:  உன்னைப்போல் ஒருவன்) என்று வந்தது.]

விமானதளத்தில் சவாரி பிடிப்பதற்கு டாக்ஸிக்காரர்களிடையே அடிபிடி, ரோட்டோர  டீக்கடையில் சுடச்சுடப் பொரித்தெடுக்கப்படும் லூச்சி, ஜலேபி, துர்கா பூஜை பந்தல்கள், சிவப்புக்கரையுடன் வெள்ளைபுடவையில் வங்காளிப் பெண்கள், எத்தனைதரம் திருத்தினாலும் வித்யாவை ‘பித்தா” என்றே கூப்பிடும் மக்கள், ஒரு கோலின் இரு முனைகளிலும் பால், தயிர் கொண்டு செல்லும் வியாபாரி என்று ‘Incredible India’ போஸ்டர்கள் போல கொல்கத்தாவின் அன்றாட அதிசயங்கள் மனதைக் கவர்கின்றன. தினசரி வாழ்வின் ட்ராஃபிக் சப்தம், சைக்கிள்மணி ஒலி, பழைய இந்திப்பாடல்கள் என்று பின்னணி இசையும், ஒலியும் கொல்கத்தாவின் இயல்பான வாழ்க்கையைப் பிரதிபலிக்கின்றன.

பயங்கரவாதியைத் தேடும் கதை என்றாலும் மெல்லிய மனித உணர்வுகளைக் கதை ஓரங்கட்டிவிடவில்லை. சமயத்தில் கதாபாத்திரங்களிடையே பரவும் உணர்விழைகள் கதைக்கருவின் பாரத்தை இளக்குகின்றன. உதாரணமாய், இன்ஸ்பெக்டர் ரானாவுக்கு வித்யாமேல் ஏற்படும் பாசம் கலந்த அனுதாபம். (“ஆர்னோப்தா கண்டிப்பாய்க் கிடைப்பார் வித்யா மேடம், அன்று இந்தப் புடவைக்கான பணத்தை அவரிடம் கண்டிப்பாய்  வாங்கிக் கொள்வேன்.”) வித்யா மீது ரானாவுக்கு இருக்கும் உணர்வைக் காதல் என்று விஸ்தரித்து கனவுக்காட்சியாக்காமல், சின்னச்சின்னப் பார்வைகளிலும், பரிவான பேச்சிலும் மட்டுமே அதை லேசாய்த் தொட்டுவிட்டுப் போயிருக்கிறார் சுஜய் கோஷ்.  அதேபோல் ஓட்டலில் வெந்நீர் எடுத்து வரும் சின்னப் பிள்ளையுடன் வித்யாவின் உணர்வுப் பரிமாற்றங்கள், வழக்கமான பெரிய தொப்பை போலீஸ்காரராக இருந்தாலும் அவருடைய சின்னச் சின்ன உரையாடல்கள், ஆஸ்த்மா இளைப்போடு குமாஸ்தாவாக வேலை செய்யும் கொலைகாரன் போன்ற விஷயங்களும் படத்தின் சுவாரசியம் குலையாமல் பார்த்துக்கொள்கின்றன.

இயக்குநர் சுஜோய் கோஷுக்கு இது நான்காவது படம். முதல் படம் இசையில் ஆர்வம் கொண்ட மூன்று இளைஞர்களைப் பற்றிய இளமை துள்ளும் படம். ‘ஜன்கார் பீட்ஸ்’ என்று பெயர். கவனிக்கப்பட்டது. ஓரளவு வெற்றியும் அடைந்தது. அடுத்த இரண்டு படங்களும் (ஹோம் டெலிவரி ஆப்கோ கர் தக், அலாதின்) படு தோல்வி. இந்தப்படம் ஜெயிக்காவிட்டால் வேறு வேலை தேட வேண்டிய நிலை. அபாரமாய் ஜெயித்துவிட்டார். திரைக்கதை அவருக்கு காலை முன் வைக்கும் பலத்தைக் கொடுத்திருந்தாலும், திருப்பங்களை யூகிக்க விடாமல் சம்பவங்களை சாமர்த்தியமாய்க் கோர்த்துக்கொண்டு போய் கதையைத் திறமையாய் சொல்லி இருக்கிறார். திரைக்கதை வலுவாய் அமைந்து, ஒவ்வொரு பாத்திரத்துக்கும் சிறப்பான நடிகர்கள் அமைந்து விட்டதில் இயக்குனரின் வேலை சுலபமாகிவிட்டது.

வித்யா பாலன் – இவரைப் பற்றி என்ன சொல்வதற்கு இருக்கிறது? இத்தனை கனமான ஒரு கதையைத் தனியாய்த் தன் நடிப்பால் மட்டுமே நடத்திச்செல்லும் திறமை இன்று இந்தியாவில் வேறு எந்த  நடிகைக்கு இருக்கிறது? கவிதை போனற முகம், சிரித்தாலும், அழுதாலும், கோபத்தில் வெடித்தாலும், சோர்வில் துவண்டாலும் மிகையில்லாமல் நிஜமாய்த் தெரியும் உணர்வுப் பிரதிபலிப்பு. ஆங்கிலம், இந்தி இரண்டிலும் சரளமான உச்சரிப்பு. “பன்னிரண்டு வயது பையனுக்கு அம்மாவா, சரி. சில்க் ஸ்மிதாவாய் நடிக்க பருமனாக வேண்டுமா, ஓ தயார்.  கண்ணாடி போட்டு, கவர்ச்சியே இல்லாத சாதாரணப் பெண்ணா, ரெடி,” என்று உடல் பற்றிய இமேஜ், தன் ஸ்டார் அந்தஸ்து என்றெல்லாம் கவலைப்படாமல் பாத்திரத்துக்கு என்ன வேண்டுமோ அதற்காக உழைக்கத் தயாராய் இருக்கும் அர்ப்பணிப்பு. “வித்யாவின் சமீப வெற்றிகள்தான் ரசிகர்களை எதிர்பார்ப்புடன் இந்தப்படத்தைப் பார்க்க  இழுத்து வந்தது என்றாலும், படம் முடிந்து வெளியே போகையில் அவர்கள் மனதில் இருந்தது கஹானியின் கதை. இது கதைக்கு மட்டுமல்லாமல் வித்யா என்ற நடிகையின் வெற்றி.” என்று ஒரு நேர்காணலில் சொல்கிறார் சுஜய் கோஷ். நட்சத்திர அந்தஸ்து என்ற வலையில் சிக்கி எல்லா கதாபாத்திரங்களிலும் அந்தப் பாத்திரத்தின் தன்மையை மீறி அந்த ஹீரோவைப் பார்க்கும் அவல நிலையில் இன்றைய சினிமா இருக்கிறது. இதில் வித்யா போன்றவர்கள் தனித்து நிற்கிறார்கள்.

இன்ஸ்பெக்டர் ரானாவாக வரும் பரம்ப்ராதா சக்ரவர்த்தி மிக இயல்பாக நடிக்கிறார். அப்பாவியான சின்னப்பையன் போன்ற இவரது தோற்றம் அந்தப் பாத்திரத்துக்கு கச்சிதமாய்ப் பொருந்துகிறது. உளவுத்துறை அதிகாரியாய் வரும் நவாஸுத்தின் ஸித்திக்கி – அதிகாரம், அவசரம், மிடுக்கு,  தோரணை, திமிர், அகம்பாவம். என்னமாய் நடிக்கிறார். நேஷனல் ஸ்கூல் ஆஃப் ட்ராமாவில் பயின்ற இந்த சிறந்த நடிகருக்கு இத்தனை வருடம் கழித்து அவர் திறமையை  வெளிக்காட்ட ஒரு அவகாசம் கிடைத்திருக்கிறது. சாஸ்வதா முகர்ஜி (வேறு எந்த மொழியில் எடுத்தாலும் இவர் போல் நடிப்பதற்கு ஆள் கிடைப்பது கஷ்டம்),  சத்யஜித் ராயின் ‘ப்ரதித்வந்தி’ நாயகன் த்ரீதிமன் சாடர்ஜீ, காரஜ் முகர்ஜி, சாந்திலால் முகர்ஜீ, அபிர் சாடர்ஜீ போன்ற வங்காள நடிகர்கள் இப்படம் மூலம் பரவலாக அறிமுகமாகியிருக்கிறார்கள்.

பின்னணி இசை விஷால்-சேகர். அடக்கி வாசித்திருக்கிறார்கள். கதையோடு ஒன்றிய  மிதமான இசை. அமிதாபின் குரலில் தாகூரின் எக்லா சோலோரெ பாட்டு கேட்க சுகம். சேதுவின்  காமெரா நெரிசலான சாலைகள், ரிக்ஷாக்கள், ட்ராம், பழைய கட்டடங்கள், ரோட்டோர டீக்கடைகள், துர்கா பூஜை பந்தல்கள் என்று கல்கத்தாவின் நிதான வேகத்தில் பயணித்து கல்கத்தாவின் ஆத்மாவைக் கண்முன் காட்டுகிறது.

படத்தில் சறுக்கல்களே இல்லாமல் இல்லை. கதையின் முதல் புள்ளியிலேயே கோணல் இருக்கிறது. கதையைச் சொல்லாமல் இதை விவாதிக்க முடியாது என்பதால் இங்கேயே விட்டுவிடுவோம். தேடப்படுவதாய் சொல்லப்படும் நபரின் விலாசத்தை வித்யா ஒரே நாளில் கண்டுபிடித்துவிடுகிறார். அவரைத்தேடிக்கொண்டிருந்த உளவுத்துறையால் அது முடியவில்லை. எதையும் சந்தேகப்படுவதை போலிஸ்காரன் புத்தி என்பார்கள். ஆனால் இந்தப்படத்தில் போலிஸ்காரர்கள் தேவைக்கும் குறைவாகவே சந்தேகப்படுகிறார்கள். அரசாங்கத்தின் கம்ப்யூடரை, அதுவும் உயர் அரசாங்க விஷயங்கள் உள்ள கம்ப்யூடரை அத்தனை சுலபமாய் உடைத்து உள்ளே போய்விடமுடியுமா?. ஹேர்பின்னை வைத்து எல்லா பூட்டையும் திறப்பது போல கீபோர்டைத் தட்டி அரசாங்க உளவுத்துறையின் கணிணிக்குள்ளேயே நுழைகிறார்! துறை உள்ளேயே துரோகிகள், தகவல்களுக்கும் பாதுகாப்பு இல்லை – நாட்டின் பாதுகாப்பை நினைத்தால் கொஞ்சம் பயமாக இருக்கிறது. படத்தை அசைபோட்டுப் பார்க்கையில் ஃப்ளாஷ் பேக் காட்சிகளில் கொஞ்சம் ஏமாற்றப்பட்ட உணர்வு வருகிறது.

விமரிசனம் என்று படத்தை விரிவாய் பிரித்து அலசுவதில் இப்படி சில குறைபாடுகள் தெரிந்தாலும் சமீப காலங்களில் வந்த ஹிந்திப் படங்களில் இது சிறப்பாக எடுக்கப்பட்ட படம். ரசிகர்களை மித போதையில் வைக்கும் அளவுக்கான கேளிக்கை அம்சங்களை ஒரு பொட்டலமாய்க் கட்டி இரண்டரை மணி நேரத்துக்கு அவர்களை யோசிக்கவே விடாமல் மழுங்க அடித்து, அவர்கள் பாக்கெட்டில் இருக்கும் பணத்தைப் பிடுங்கும் தொழிலாய்த்தான் இன்றைய வணிக சினிமா இருக்கிறது. இத்தகைய படங்களின் நடுவே ஒரு நிஜ ஊரில் நிஜ மனிதர்களுக்கு நடக்கக்கூடிய விஷயங்களை புத்திசாலித்தனத்துடன் காட்டும் இதுபோன்ற படங்கள் ஹிந்திப்படங்களின் தரத்தை ஓரளவு முன்னேற்றும் முயற்சி. பாலிவுட் குப்பைப்படங்களை இடம்பெயர்க்க இதுபோன்ற படங்களுக்கு மக்கள் பழகவேண்டும். ஒரு பெண்ணை புத்திசாலியாய்க் காட்டுவது பிராந்தியப்படங்களில் ஒரளவு ஏற்கனவே நடந்துகொண்டிருந்தாலும், பாலிவுட்டில் இன்னும் பெண்கள் முக்கியமாய் உடற்கவர்ச்சிக்கே பயன்படுத்தப்படுகிறார்கள்.

பெரிய பெரிய நட்சத்திர அந்தஸ்துள்ள நடிகைகள்கூட கான் நடிகர்களின் கையில் இருக்கும் அலங்கார பொம்மைகள் போலத்தான் பெரும்பாலும் பயன்படுத்தப்படுகிறர்கள். இந்தவகையில் வித்யாவுக்கு வழக்கமரபில் கவர்ச்சி எனக்கருதப்படும் லட்சணங்கள் இல்லாததே அவரது பாத்திரங்கள் ஒரு நிஜமான, இயல்பான புத்திசாலிப்பெண்ணாய் அமையக் காரணமாகிவிட்டன. சிந்திக்கும் திறனுடைய இளைஞர்கள் ஒரு புத்திசாலிப் பெண் தரக்கூடிய ஈர்ப்பை அவர் மூலம் அறிந்துகொள்கிறார்கள் என்று தோன்றுகிறது. இது போன்ற படங்களின் வெற்றி நல்ல சினிமாவில் உழைப்பையும், பணத்தையும் முதலீடு செய்ய இன்னும் பல படைப்பாளிகளை ஊக்குவிக்கவேண்டும்.