(1)
காணாமல் போன காடு
இருளில்
குகையில்
இருள்.
அது
புலி குகை.
எப்போது
வெளியேறிப் போனது
புலி?
கூர் கொண்டு
காத்திருப்பவை
பாறை விளிம்புகளா?
புலியின் நகங்களா?
உட்கவிந்திருக்கும் நெடி
குகையின் நெடியா?
புலியின் மூச்சா?
குகை இடுக்குகளில்
ஊடுருவும்
நிலவின் ஒளி
புலியின்
தீக்கோளக் கண்களைத்
தேடியா?
எப்போது
வெளியேறிப் போனது
புலி?
இப்போது
தூறலும்
தேடி வந்து விட்டதா?
தூறல் வலுத்து
மழையடிக்கும்.
மின்னல்
மாறி மாறிச்
சாட்டை சொடுக்கும்.
ஓ!
குகை அலறுகிறதா?
இல்லை
புலி கர்ஜிக்கிறதா?
மின்னும்
மின்னலில்
குகை சுற்றிக்
காணாமல் போன காடு
தெரியும்.
(2)
நட்சத்திரங்களை விரும்புவதற்கு காரணங்கள்
நட்சத்திரங்களை
நான் விரும்புவதற்குப்
பல காரணங்கள் இருக்கின்றன.
நான் அற்பமில்லை என்று
அவை ஆறுதல் தருகின்றன.
என் தனிமையின் தொலைவு
என்னை அவைகளிடம்
இட்டுச் செல்கின்றன.
சூழும் வெறுமையை மீறி
மேலும் நம்பிக்கையை
‘மினுக் மினுக்’கென்று காட்டுகின்றன.
ஒவ்வொரு முறையும்
எனக்குப் புதியவையாகின்றன.
ஒவ்வொரு முறையும்
என்னிடம் பிரியமாய்ச் சிரிக்கின்றன.
இரவில் உறக்கம் கெட்டு
அலையும் என் தனிமையில்
விட்டுப் போகாது துணையாகின்றன.
அவற்றை விரும்புவதற்கு
எனக்கு மட்டுமான
நட்சத்திரங்களாயில்லாமல்
நட்சத்திரங்களாகவே காரணமாகின்றன.