அணு ஆற்றலின் அரசியல் – பகுதி 4

நான் முந்தைய இதழில் குறிப்பிட்டிருந்ததைப்போல, ஜப்பானில் அணு ஆற்றலைக் கைவிடக்கோரும் இயக்கத்துக்கு அரசின் கொள்கைகளை தனக்கு சாதகமாய் திருப்புவதற்கான ஆற்றல், ஆணைக்குழுக்களின் சிபாரிசின் அடிப்படையில் கொள்கைகளை வடிக்கும் செயல்முறைமையால் பெரிதும் குறைக்கப்படுகிறது. இந்த இயக்கத்துக்கும் அரசுக்கும் இடையேயான பேச்சுவார்த்தைக்கான வெளியைக் குறைக்கும் இந்த முறைமைகள், இவ்விரு சாராரிடமும் நிபுணத்துவத்தில் இருக்கும் வேறுபாடுகளுக்கு இணையானதாய் இருக்கின்றன. இந்தப் பகுதியில் நிபுணத்துவத்தில் இருக்கும் இந்த வேறுபாடுகள் ஜப்பானியக் கல்வி முறையின் கட்டமைப்பில் வேர்கொண்டுள்ளவை என்பதை விளக்க விரும்புகிறேன்.

ஜப்பானிய அணுப் பாதுகாப்பு ஆணைக்குழுவின் உறுப்பினர்களின் இயல்புகளில் துவங்கலாம். இக்குழுவில் அணுசக்தி தொழில்நுட்பத்தைப்பற்றியும் அணு உலைகளின் பாதுகாப்புக்கான தடுப்பமைவுகள் பற்றியும் அரசாங்கத்துக்கு ஆலோசனை கூறுவதற்காக 5 பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் இதர பலருடன் இருக்கிறார்கள், ஃபுகுஷீமா பேரிடரை அடுத்து வந்த நாட்களிலும் வாரங்களிலும் இக்குழுவின் உறுப்பினர்கள் பிரதமர் நவொடோ கானுக்கும் அவரது மந்திரிசபைக்கும் ஆலோசகர்களாய் இருந்தனர். ஜப்பானின் அணுப்பாதுகாப்புக்குப் பொறுப்பான இந்த அமைப்பின் 5 உறுப்பினர்களில் 4 பேர் ஜப்பானில் மிக உயர்ந்தவை என மதிக்கப்படும் இரண்டு பல்கலைகளான டோக்யோ மற்றும் க்யோடோ பல்கலைகளில் படித்தவர்கள்.

மேலும், 2010ல் அமைச்சகங்களிலும் முகமையகங்களிலும் பணி செய்யும் பிரமுக அரசுநிர்வாகிகளாய் ஆவதற்கான தகுதிப் பரீட்சைகளில் தேர்ந்த 1314 பேரில் 428 பேர்கள் (32.5%) டோக்யோ பல்கலைக்கழகத்திலிருந்தும், அடுத்ததாய் 157 (11.9%) பேர்கள் க்யோடோ, 71 பேர்கள் (5.4%) வசேடா, 61 பேர்கள் (4.6%) டொஹோகு, 58 பேர்கள் (4.4%) கெய்யோ, 43 பேர்கள் (3.3%) ஓஸாகா, 37பேர்கள் (2.8%) ஹொக்கைடோ, 35 பேர்கள் (2.6%) க்யூஷூ மற்றும் 29 பேர்கள் (2.2%) நகோயாவிலிருந்தும் பட்டம் பெற்றவர்கள். [1] உயர்நிலை அரசு நிர்வாகிகளின் படிப்புப் பின்புலம் சமீப காலத்தில் பலவகைப் பட்டதாக இருந்தாலும், ஜப்பானில் மிகவும் மதிக்கப்படும் டோக்யோ பல்கலைக்க்கழகத்தின் பட்டதாரிகள் ஜப்பானின் நவீன சரித்திரம் முழுவதிலும் அரசு நிர்வாகத்துறையிலும் பாராளுமன்றத்திலும் அதிக அளவில் ஆதிக்கத்துடன் இருந்து வருகிறார்கள். மேலே குறிப்பிடப்பட்ட இதர பல்கலைக்கழகங்களின் வரிசைமுறை, இப்பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் சேருவதற்கான தெரிவுமுறையின் வரிசைமுறைக்கான படிநிலையை அண்மையாய் ஒத்து இருக்கிறது.. வேறு விதமாய் சொன்னால், ஜப்பானின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டதாரிகள் அரசில் திட்ட ஆலோசகர்களகவும், முக்கிய அரசு நிர்வாகிகளாகவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள்.

இதற்கு மாறாக, இந்தத் தலைசிறந்த பலகலைக்கழகங்களின் பட்டதாரிகள் ஜப்பானின் அணு சக்தி எதிர்ப்பு இயக்கத்தில் மிகக் குறைந்த சிறுபான்மையில் இருக்கிறார்கள். காட்டாய், இயற்கை வளம் மற்றும் ஆற்றல் பற்றிய விரிவான ஆராய்ச்சிக்கான ஆணையத்தின்.(Commission for Comprehensive Research on Natural Resources and Energy) 25 உறுப்பினர்களில் மஸாரு கனெகோ ஒருவர் மட்டுமே அணு சக்தியை எதிர்ப்பதுடன் பெருமை உள்ள பல்கலைக்கழகங்களின் பின்னணி உள்ளவரும் ஆவார்; இவர் டோக்யோ பல்கலைக்கழகத்தில் படித்தவர், தற்போது கெய்யோ பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத்துறையில் பேராசிரியர். க்யோடோ பல்கலைக்கழகத்தின் அணுக்கரு இயற்பியல் மற்றும் பொறியியல் துறைப் பேராசிரியர்களைக் கொண்ட ஒரு சிறிய குழுவும் அணு ஆற்றலை எதிர்ப்பதில் சுறுசுறுப்புடன் இயங்கி வருகின்றது. ஆயினும் ஜப்பானில் இது போன்ற மேல்நிலை பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்கள் அணு எதிர்ப்பு இயக்கத்துக்கு ஆதரவளிப்பது விதிக்கு விலக்காகவே இருக்கிறது. பிரதியாய், அணு எதிர்ப்பு இயக்கத்துக்கு ஆதரவாய் இருக்கும் பேராசிரியர்கள் அத்தனை உயர்வாய் கருதப்படாத பல்கலைக்கழகங்களிலிருந்து வருபவர்களாய் இருக்கிறார்கள், உண்மையில் குடிமக்கள் அணுத் தகவல் மையம் மற்றும் புதிப்பித்துக்கொள்ளும் ஆற்றலுக்கான கொள்கைகள் போன்றவற்றின் உறுப்பினர்களாய் இயக்கத்தின் ”நிபுணர்கள்” எனக்கருதப்படும் பிரபல அணுஎதிர்ப்புப் போராளிகள் அரிதாகத்தான் மதிப்பு மிக்க பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளாகவோ அல்லது. அணுவியல் சார்ந்த அணுக்கரு பொறிஇயல், பொதுக் கொள்கை (public policy) போன்றவற்றில் முதுகலைப்பட்டம் அல்லது முனைவர் பட்டங்கள் பெற்றவர்களாகவோ இருக்கிறார்கள்.

இதன் உட்கருத்து அணு ஆற்றலை படிப்படியாய் கைவிடக் கோரும் இயக்கத்துக்குச் சார்பான நிபுணர்கள் அரசாங்கத்தில் இருக்கும் நிபுணர்களை விட திறமைக் குறைவானவர்கள் என்பதல்ல. மாற்றாய் இந்த நிபுணர்கள் மிகுந்த விவரம் மிக்கவர்கள், நுண்ணாய்வு சிந்தனையில் தேர்ந்தவர்கள். ஆயினும் இவர்களிடையே கல்வித் தகுதிகளில் இருக்கும் அகண்ட பிளவு, நடைமுறை நிலையை ஆதரிக்கும் அரசு சார்பான நிபுணர்களுக்கு எதிரான இந்த இயக்கத்தின் கொள்கைப் பரிந்துரைகளும் கோரிக்கைகளூம் சிறந்த மாற்று வழிகளாய் இருக்க வாய்ப்பில்லை என்ற எண்ணத்தை உருவாக்குவதின் மூலம் இந்த இயக்கத்துக்கு பிரதிகூலமாய் இருக்கின்றது.

இதற்குக் காரணம் பல்கலைக்கழகங்களுக்கிடையே இருக்கும் இத்தகைய ஒரு தெளிவான, இறுக்கமான படிநிலை அமைப்பை அவற்றின் பட்டதாரிகளின் திறமைக்குப் பிரதியாய் ஒப்புக்கொண்டிருக்கும் ஜப்பானிய கல்விமுறை.

ஜப்பானிய உயர் கல்வியின் இறுகிய படிநிலைகள்

பல்கலைக்கழகங்களின் நுழைவுத் தேர்வுகளுக்குப் தேசிய அளவில் மாணவர்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் (cram schools) தங்களது ஒத்திகை தேர்வுகளின் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களின் அடிப்படையில் ஜப்பானிய பல்கலைக் கழகங்களுக்கிடையில் ஒரு வரிசையை உருவாக்கியுள்ளன. இவ்வரிசையின்படி எப்போதுமே டோக்யோ பல்கலைக் கழகம் மாணவர்களை வடிகட்டிப் பொறுக்குவதாகக் கருதப்பட்டு வந்துள்ளது. 1886ல் ஆரம்பிக்கப்பட்ட முதல் தேசிய பல்கலைக்கழகமான டோக்யோ பல்கலைக்கழகம் அரசியல், தொழில்துறை, சட்டம்,கலைகள் மற்றும் விஞ்ஞானத் துறைகளில் பல தலைவர்களை உருவாக்கி இருக்கிறது. 2004ல் தேசிய பல்கலைக்கழகங்கள் ஓரமைப்பாக கூட்டப்பட்ட பின்பும், டோக்யோ பல்கலைக்கழகம் ஜப்பானிய அரசாங்கத்திடமிருந்து மற்றப் பல்கலைக்கழகங்களை விட அதிகமான அளவு நிதி ஒதுக்கீடு பெற்று வந்துள்ளது. உயர் கல்வி நிறுவனங்களின் இந்தப் படிநிலையில், டோக்யோ பல்கலைக்கழகத்தை அடுத்து 6 முன்னாள் தேசிய பல்கலைக்கழகங்களும் (ஹொக்கைடோ, டொஹோகு, நகோயா, க்யோடோ, ஓஸாகா, க்யூஷூ) தலையாய தனியார் பல்கலைக்கழகங்களும் (உதாரணமாய்: கெய்யோ வசேடா) இருக்கின்றன.

இந்தப் படிநிலை ஜப்பானிய உயர் கல்வியின் மாணவர்கள், ஆசிரியர்கள் இருவர் பக்கத்திலும் மிகத் தெளிவாகவும் இறுக்கமானதாகவும் இருக்கிறது. ஒரு தொழில்துறை போல் நடத்தப்படும் தயாரிப்புப் பள்ளிகள், தம் பயிற்சித் தேர்வுகளில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்கள் அடிப்படையில் அவர்கள் எந்தப் பல்கலைக்கழகத்தில் நுழையத் தகுதியானவர் என்று பல்கலைக்கழகங்களிடையே ஒரு வரிசை அமைப்பை ஏற்படுத்த, மாணவர்களும் தம் மதிப்பெண்களுக்கு எந்த பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்த வரிசை அமைப்பை உபயோகித்தே தீர்மானம் செய்கின்றனர். உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களும் (பெற்றோர்களும்) இந்த வரிசை அமைப்பைக் குறிப்பிட்டு மாணவர்களை வழிநடத்தும் அளவுக்கு இந்த முறை சக்தி வாய்ந்ததாய் இருக்கிறது. உயர்நிலைபள்ளி மாணவர்களில் பெரும்பாலோர் தயாரிப்புப் பள்ளிகளில் பதிவு செய்து கொள்ளுகிறர்கள், உயர்நிலைப் பள்ளிகளும் பயிற்சி நுழைவுத் தேர்வுகளை நடத்த கல்லூரிக்குத் தயார் செய்யும் தொழில் துறையை நம்பி இருக்கின்றன. இதன் விளைவாய் ஜப்பான் முழுவதும் உள்ள மாணவர்கள் பல்கலைக்கழகங்களின் படிநிலையை உள்வாங்கிக் கொள்கின்றனர் இவ்வாறு ஒரு மக்கள் கூட்டத்தின் மனதில் ஒரு பொதுவான தோற்றத்தைப் பதியவைப்பது அமைப்பாய் வகுக்கப்பட்ட கல்வி முறையின் முக்கியமானதொரு விளைவாகும் தேசிய பாடத்திட்ட வழிகாட்டுகளின் காரணமாகவும் கல்வி அமைச்சகத்தின் பலவித உத்தரவுகளினாலும் K-12 என்று அறியப்படும் பாலர் பள்ளியிலிருந்து பள்ளி இறுதி வரையிலான 12 வருடக்கல்வி ஜப்பான் முழுவதும் ஒரே விதமாய் இருப்பதால் இந்தகைய அமைப்பாய் வகுக்கப்பட்ட கல்வியின் விளைவு ஜப்பானில் பலமாய் இருக்கிறது.

இரண்டாவதாய், ஆசிரியர்கள் புறத்தில், பல்கலைக்கழக தரவரிசையில் உச்சநிலையில் இருக்கும் பல்கலைக்கழகங்கள் அங்கு படித்த மாணவர்களையே ஆசிரியர் பதவிகளுக்கு நியமிப்பது ஜப்பானில் நெடுங்கால வழக்கமாய் இருந்து வருகிறது. புதிதாய் முனைவர் பட்டம் பெற்ற பட்டதாரிகளை அவர்களது பல்கலைக்கழகங்களிலேயே துணைப் பேராசிரியராய் எடுத்துக்கொள்ளக்கூடாது என்ற விதிமுறை உடைய அமெரிக்காவைப் போலன்றி, ஜப்பானின் தலை சிறந்த பல்கலைக்கழகங்களில் இத்தகைய ”உட்பக்க நியமனம்” வரவேற்கப்படுகிறது. இந்த மரபின் விரும்பத்தகாத மறுபக்கம் ஜப்பானிய உயர் கல்வியில் மிகக்குறைந்த அளவிலான போட்டி. உயர்தர பல்கலைக்கழகங்கள் அவர்களது மாணவர்கள் முனைவர். பட்ட ஆராய்ச்சியை முடித்த உடனேயே அவர்களுக்கு வேலை கொடுப்பதால், பொதுமக்களிடையே விளம்பரப்படுத்தப்பட்ட உத்தியோகத் தேடல் வழமையானதாய் அன்றி விதிவிலக்காக இருக்கிறது. மேலும் உத்தியோகத்தில் நியமிக்கப்பட்ட பின்பு ஆசிரியர்களின் பதவி உயர்வு அவர்களது சாதனைகளின் அடிப்படையில் அல்லாது பதவிக்கால அளவின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.. பொருளாதார உலகமயமாக்கல் என்பது நெகிழ்வுடைய அமெரிக்க முறைகளான, தகுதிக் கணிப்பீட்டின் அடிப்படையில் நியமனம் செய்தல், பதவி உயர்வு தருதல் ஆகியன ஜப்பானில் அறிமுகமானதில், வாழ்நாள் முழுவதும் நீடிக்கும் உத்தியோகங்களும், வேலைக்கால அனுபவ அடிப்படையில் செய்யப்படும் பதவி உயர்வுகளும் அரிக்கப்பட்டு குறைந்து வந்தாலும், இவை உயர் கல்வியிலும் (அரசு நிறுவனங்களிலும்) இன்னும் குறைபடாது அப்படியே இருக்கின்றன. இதன் விளைவாய், தரத்தில் குறைவாய் மதிக்கப்படும் நிலையில் இருக்கும் பல்கலைக்கழகங்களில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றவர்கள் உயர் தரத்தில் இருக்கும் பல்கலைக்கழகங்களுக்கு நகர்ந்து தங்கள் பல்கலைக்கழகங்களின் தரவரிசையை மேலே கொண்டு போவது கிட்டத்தட்ட சாத்தியம் இல்லாததாய் இருக்கிறது ஆனால் எதிர்புறமாய் நகர்வது இதைவிட எளிது. ஜப்பானிய உயர் கல்வி உத்தியோகங்களில் நியமனம் செய்யும் இந்தமுறை தற்போது பல்கலைக்கழகங்களுக்கிடையே இருக்கும் படிநிலையை இன்னும் வலுவாக்குகிறது.

பட்டத்தின் கௌரவத்தை வைத்துத் திறமையைக் கணிப்பது பரவலாக உள்ளமை

1990களில் ஜப்பானின் பொருளாதாரம் இரண்டாம் உலகப் போருக்குப் பின் மிக மோசமான பொருளாதாரத் தேக்கத்தில் வீழ்ந்ததில் ஜப்பானிய மக்களுக்கு அரசாங்கத்தின் மேல் இருந்த நம்பிக்கை குறைந்தபோதிலும், ஜப்பானியப் பல்கலைக்கழகங்களிடையே இந்தத் தெளிவான இறுக்கமான படிநிலை அரசாங்க நிர்வாகத்தின் ஆற்றலைப் பற்றிய பிரமையான உயர்ந்த அபிப்பிராயத்தை உருவாக்குவதில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. மேல்மட்ட அரசாங்க நிர்வாகிகள் உயர்தர பல்கலைக்கழகங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுவதால், தேசிய அளவில் அரசாங்கக் கொள்கைகளை வடிவமைப்பதற்குத் தேவையான, சிக்கலான பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆற்றலில் இவர்கள் மிகத் தேர்ந்தவர்கள் என ஜப்பானிய மக்கள் நினைக்க தலைப்படுகிறார்கள். அமைச்சகங்களுக்கும், அரசாங்க முகமையகங்களுக்கும் வெளியே அரசுக்கொள்கைகளை வடிவமைக்கும் நிபுணர்களைத் தயார் செய்யும் அமைப்புகள் இல்லாதது அரசாங்கத்துக்கும், அணு ஆற்றலைக் கைவிடக் கோரும் இயக்கத்துக்கும் இடையே திறமை வித்தியாசத்தை மக்கள் கற்பித்துக் கொள்வது இன்னும் அதிகரிக்கிறது. நாட்டின் பிரச்சினைகளையும், அதன் மேம்பாட்டுக்கான கருத்துக்களையும் விவாதித்து பின் தங்கள் சிந்தனைகளையும் மாற்றுகருத்துக்களையும் திட்ட ஆலோசனைகளையும் அரசாங்கத்துக்கு பரிந்துரைக்கும் தனிப்பட்ட நிபுணர் குழுக்களான சிந்தனை வட்டங்கள் (think tank) போன்ற அமைப்புகள் ஜப்பானில் மிகக் குறைவு. வட அமெரிக்கா, மேலை ஐரோப்பா இவற்றின் பாடத்திட்டங்களுடன் ஒப்பிடுகையில் ஜப்பானில் சமூகவியல், சட்டம், பொதுக்கொள்கை போன்ற பட்டப்படிப்புகளின் பாடத்திட்டங்கள் அத்தனை செழுமை பெறாமல் இருக்கின்றன. தேர்ந்தெடுக்கப்பட்ட மேல்நிலை அரசாங்க நிர்வாகிகள் அவர்களது உத்தியோகப்பயிற்சியின் ஒரு அங்கமாய் வட அமெரிக்கா மற்றும் மேலை ஐரோப்பாவில் முதுகலைப்பட்டங்களைப் படிக்க அரசாங்கச் செலவில் அனுப்பப்பட்டாலும், அரசாங்கத்துக்கு வெளியே வெகு சிலருக்கே அந்த அளவுக்கு கொள்கை வடிவமைப்பில் தகுதியும் அனுபவமும் பெறும் வாய்ப்புகள் கிட்டுகின்றன.

ஃபுகுஷீமா பேரிடரை அரசாங்கம் கையாண்ட விதத்தைக் குறை கூறும் குடிமக்கள் மற்றும் போராட்டக்காரர்களிடையேயும் அரசாங்க நிர்வாகத்தின் திறமையை பற்றிய தவறான புரிதல் இருக்கிறது. காட்டாய், யமாகூச்சி மாநகர் சூழலிலிருந்து (நாட்டின்முக்கியத் தீவுப்பகுதியின் மேற்கு மூலையில் இருக்கும் இந்த இடத்தில் சூகோக்கு மின்சக்தி நிறுவனம் ஒரு அணு மின் நிலையத்தைக் கட்ட இருக்கிறது) வந்த போராளி ஒருவர் அணு உலைகளை திரும்பவும் ஆரம்பிக்கும் விஷயத்தில் அரசுசாரா அமைப்பு தரப்பில் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டிருந்த முக்கிய பிரதிநிதிகளுக்கு அரசாங்க அதிகாரிகளில் சிறந்தவர்கள் எனக் கருதப்படுபவர்கள் பதிலளித்த விதத்தைக் கண்டு வெறுத்துப் போனார். அவர் தன் கையை உயர்த்தி, பின் எழுந்து, கோபத்தினால் நடுங்கும் குரலில் சொன்னார்: “இத்தகைய கடுமையான விவாதம் எனக்குப் புரியவில்லை. இந்த விஷயத்தில் ஒப்பந்தப்பேச்சு நடத்துவது எனக்கு மிகக் கடினமாய் இருக்கிறது. ஆனால் மனித இதயம் கொண்ட ஒரு மனிதராய், அழிவு உண்டாக்கக்கூடிய அணு உலையை நீங்கள் விட்டொழிக்கக்கூடாதா?’ இன்னொரு விதமாய் சொன்னால், அந்தப் பெண் அரசாங்கத்தின் கொள்கையை எதிர்த்தார் ஆனால் தனக்கு கையாள ”மிகக்கடினமான” இந்த விஷயத்தைக் கையாள அரசாங்க உயர் அதிகாரிகளுக்கு போதிய அளவு திறமை இருப்பதாய் அவர் நம்பினார்.

நிஜத்தில் அரசாங்க நிர்வாகத்தின் திறமை பற்றிய இத்தகைய பிரமையான புரிதலால் மட்டுமன்றி நடுநிலை பற்றிய புரிதலாலும் அரசாங்கம் லாபமடைகிறது. நாட்டின் பிரதமர்களும், ஆளும் கட்சிகளும் மாறிக்கொண்டே இருக்கையில் அரசாங்க நிர்வாகிகள் மாறாமல் இருப்பதால், இவர்களை அரசியல்வாதிகளிடமிருந்து வேறுபட்டவர்களாய் பார்ப்பது வழக்கமாகிவிட்டது. அரசாங்க நிர்வாகிகள் நாட்டின் நலனுக்காக உழைக்கும் பொதுச் சேவகர்கள் என்றும், அரசியல்வாதிகள் சுயநலவாதிகள்,அதிகாரத்தின் பின் ஓடுபவர்கள் என்றும் பார்க்கப்படுகிறார்கள். அரசாங்க அதிகாரிகளின் நடுநிலை பற்றிய தோற்றமும் அரசுசாரா அமைப்புகளுக்கு எதிராய் வேலை செய்கிறது.

திமிங்கில வேட்டைக்கு எதிரான க்ரீன்பீஸ், ஸீ ஷெப்பெர்ட் (Green Peace, Sea Shepherd) போன்ற அமைப்புகளின் நடவடிக்கைகளுக்கு விரிவான ஊடகப் பிரசித்தம் இருப்பதால், சூழல் சார்ந்த விஷயங்களில் அக்கறை கொண்ட அரசு சாரா அமைப்புகள் மிகவும் ஒருதலைப் பட்சமானவையாய் பார்க்கப்படுகின்றன. பெருவாரியான மக்கள் இவர்களின் நடவடிக்கைகள் அத்துமீறியவை என்று நினைப்பதால், அவர்கள் சூழல் சார்ந்த அரசு சாரா அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கும் அணு ஆற்றலைக் கைவிடக் கோரும் இயக்கத்தோடு ஒப்பிடுகையில் அரசாங்க நிர்வாகம் நடுநிலையானது என நினைக்க முற்படுகிறார்கள். ஜப்பானிய மக்கட்தொகையில் பெரும்பான்மையானோர் ஃபுகுஷீமா பேரிடருக்குப்பின் அரசாங்க அதிகாரிகளின் பயனற்ற எதிர்வினைகளால் ஏமாற்றம் அடைந்திருக்கலாம்; எனினும், சூழல் சார்ந்த அரசு சாரா அமைப்புகளை போதுமான திறமை உடையவை, நடுநிலையானவை என மக்கள் உணராததால் இவற்றை ஒரு பயன் தரும் மாற்றாய் அவர்கள் பார்க்கவில்லை.

அணு உலைகளை திரும்பவும் துவக்குவது பற்றிய பேச்சு வார்த்தைகளின் போது சில போராளிகள், குறிப்பாய் அரசு சாரா அமைப்புகளின் தரப்பில் நிபுணத்துவம் உள்ள முக்கிய பிரதிநிதிகள், அரசாங்க உயர் அதிகாரிகளின் நிபுணத்துவத்தைப்பற்றிய அவநம்பிக்கையும், கொள்கை ஆணைக்குழுக்களில் இருந்த விஞ்ஞான நிபுணர்கள் அரசாங்கம் மற்றும் மின்சக்தி நிறுவனங்களின் ஆதாயங்களுக்கு சார்புள்ளவர்களாக இருக்கிறார்கள் எனச் சந்தேகமும் கொண்டிருந்தனர் என்பதில் ஐயமில்லை. அணு உலைகளை திரும்பத் துவங்குமுன் தீர்க்கவேண்டிய சில தொழில்நுட்பப் பிரச்சினைகளைப் பற்றி இந்தப் போராளிகள் மீண்டும் மீண்டும் அரசின் அதிகாரிகளிடம் சவாலான கேள்விகள் எழுப்பினர். எனினும் “ஆணையக்குழுக்களில் இருக்கும் நிபுணர்கள் இவற்றை எல்லாம் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் பரிந்துரைகளின் பேரில் நாங்கள் தீர்மானம் செய்வோம்,” என்று சூத்திரம் போன்ற ஒரே பதிலையே சொல்லிக்கொண்டிருந்த அரசு அதிகாரிகளை அவர்களால் சிக்க வைக்கமுடியவில்லை, போராளிகளால் செய்ய முடிந்ததெல்லாம் “ஆனால், நீங்களும் நிபுணர்கள்தானே?” என்று கேலியாய் கேட்பது மட்டும்தான்.

இங்கும், அரசாங்க அதிகாரிகள் ஆணைக்குழுவில் இருந்து கொண்டு, பெரும்பாலும் அணு ஆற்றலுக்கு சார்பாக உள்ள விஞ்ஞானிகளுக்குத் தம்மை விட மேல்நிலையாக உள்ள அதிகாரத்தைப் பற்றிப் பேசியவுடன், அணு ஆற்றலைக் கைவிடக் கோரும் இயக்கத்தால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஜப்பானின் அணு உலைகள்.பெரும் நிலநடுக்கங்களையும் சூனாமியையும் எதிர் நோக்கும் வல்லமை உடையவை என்ற அரசாங்கத் தரப்புக் கூற்றுக்கு சவாலாய் அரசு சாரா அமைப்புகளிலிருந்து பேச்சுவார்தைகளில் ஈடுபட்டிருந்தவர்கள் எத்தனைதான் திறமையுடன் வாதம் செய்தாலும், அவர்களால் நிபுணர் குழுக்களின் மூலம் கொள்கைகளை வடிவமைக்கும் முறையைத் தவிர்த்து தாண்டிச் செல்ல எதுவும் செய்ய முடியவில்லை. இந்தப் பேச்சு வார்த்தைகளைப் பற்றிய செய்திகளை திரள் ஊடகங்கள் வெளியிடும்போதும், அரசாங்கத்துக்கும் அணு ஆற்றலைக் கைவிடக் கோரும் இயக்கத்துக்கும் இடையே விஞ்ஞான நிபுணத்துவத்திலும், மதிப்பு வாய்ந்த பட்டங்களிலும் இருக்கும் சமமின்மை காரணமாய் பெரும்பான்மையானவர்கள் எதிர்ப்பு இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசத் தயங்குகிறார்கள்.

ஜப்பானின் கல்வியமைப்பின் தோல்வி

ஆயினும் பட்டத்தின் கௌரவத்தின் அடிப்படையில் திறமை எனக் கருதப்படுவது நிஜமான திறமை அல்ல. உண்மையில் ஃபுகுஷீமா பேரிடரும் அதன் பின் நடந்த நிகழ்வுகளும் அரசாங்க அதிகாரிகளிடம் இருப்பதாய் எண்ணப்பட்ட திறமைக்குக் குழிபறித்தன. அணு உலைகள் பாதுகாப்புடன் இயங்குவதை மேற்பார்வை செய்யும் பொறுப்பைக் கொண்டிருந்த மெடியின் கீழ் இருந்த அணு மற்றும் தொழில் பாதுகாப்பு முகமையகம் (the Nuclear and Industrial safety Agency) ஃபுகுஷீமா-டயிசி அணு நிலையத்தை நில நடுக்கத்திலிருந்தும், சூனாமியிலிருந்தும் பாதுகாத்திருக்கக்கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளை டெப்கோவை செய்யக் கட்டாயப்படுத்தத் தவறியது. இந்த முகமையகமும், அணுப் பாதுகாப்பு ஆணைகுழுவும் ஃபுகுஷீமா நகரத்தில் ஃபுகுஷீமா-டயிசி அணு நிலையம் பெருமளவு கதிர்வீச்சை வெளியிட்டு மாசுபடுத்திய இடங்களில் குடியிருந்தவர்களை சீரான முறையில் வெளியேற்றவும் தவறின. மேலும் மெடி தொழில்நுட்பவகையில் வெகுகாலம் சமாளிக்க முடியாததும் பொருளாதார ரீதியில் விலை அதிகமானதும், சூழலுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியதுமான ப்ரீடர் எரிபொருள் சுழற்சி (Breeder Fuel Cycle) என்ற முறையை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. ஜப்பானிய அரசாங்கம் ட்ரில்லியன் யென்களை முதலீடு செய்துள்ள ப்ரீடர் எரிபொருள் சுழற்சியும், மறுபதனிடும் விசையகமும் தற்போது வேலை செய்யவில்லை, விரைவில் அவை செயல்பாட்டுக்கு வரக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படவில்லை.

ஃபுகுஷீமா பேரிடருக்கு அரசாங்கத்தின் இத்தகைய குழப்பமான, மந்தமான, பலனற்ற எதிர்வினைகள் ஜப்பானிய கல்வித்திட்டத்தில் ஆழமாய் புதைந்துள்ள பிரச்சினைகளை பிரதிபலிக்கின்றன. சமுதாயத்தைத் திறனாய்வுடன் ஆராய்வது, பிரச்சினைகளையும் அவற்றின் தீர்வுகளையும் கருத்து வேற்றுமைகளுக்குட்படுத்தி விவாதிப்பது போன்றவற்றில் மக்கள் தம் திறமைகளை வளர்த்துக் கொள்வதைத் தடுக்கும் வகையிலேயே அது உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் பிரச்சினைக்கு ஜப்பானியக் கல்வித் திட்டத்தின் இரண்டு ஒன்றோடொன்று தொடர்புள்ள கட்டமைப்புகள் காரணமாய் இருக்கின்றன.

முதலாவது, ஜப்பனியக் கல்வித்திட்டம் சமூக அறிவியலுக்குக் குறைவான முக்கியத்துவத்தை அளிக்கிறது. உலக அளவில் பல்கலைக்கழகங்களை தரத்துக்கேற்ப வரிசைப்படுத்தும் க்யூ எஸ் உலக பல்கலைக்கழக வரிசைப்பாட்டை (QS World University Rankings), அவற்றில் குறைகள் இருப்பதை அங்கீகரித்துக் கொண்டு, ஒரு உதாரணமாக எடுத்துக்கொள்வோம். பொதுவாய், டோக்யோ பல்கலைக்கழகம் போன்ற ஜப்பானிய பல்கலைக்கழகங்கள் இயற்கை அறிவியல், தொழில்நுட்பப் படிப்பு போன்றவற்றில் தரத்தில் உயர்மட்டத்தில் இருக்கின்றன. ஆனால், மிகக் குறைவான ஜப்பானியப் பல்கலைக்கழகங்கள் சமூக அறிவியலில் உயர்வரிசையில் இருக்கின்றன: காட்டாய், ஒரு ஜப்பானியக் கல்லூரியும் சமூகவியலில் தரமான முதல் 200க்குள் இல்லை. ஜப்பானில் சமூக அறிவியலில் இந்த இருண்ட நிலைக்குக் காரணம் போதுமான அளவு நிதியுதவி இல்லாதது. ஜப்பானியக் கல்லூரிகளில் அறிவியல் துறைகளுக்குப் போதுமான நிதியுதவி இல்லாததால், அவை சிறப்பான பட்டப்படிப்புத் திட்டங்களை உருவாக்குவதில் கடுமையாய் நொடிந்து போயிருக்கின்றன. இதன் விளைவாய், சமூக அறிவியலில் பெரும்பான்மையான பேராசிரியர்கள் முனைவர் பட்டம் பெற்றவர்கள் இல்லை. ஆராய்ச்சிக்கான தயாரிப்புக் கட்டத்தை (ABD- all but dissertation) முடித்து ஆசிரியர்களாய் பயிற்றுவிக்க ஆரம்பித்தவுடனேயே ஜப்பானிய பட்டப் பயிற்சி முடிந்து போகிறது. ஜப்பானிய அமைச்சகங்கள் தங்களின் மிகச் சிறந்த உறுப்பினர்களை ஜப்பானிய பட்டப் படிப்புக்கு அனுப்பாததற்கு இதுவும் ஒரு காரணம். மாறாக, இந்த அமைச்சகங்கள் அவர்களை வட அமெரிக்கா, மேலை ஐரோப்பா போன்ற இடங்களில் உள்ள துறைமைச் சிறப்புக் கல்லூரிகளுக்கு ( காட்டாய், பொதுக் கொள்கை, வர்த்தக நிர்வாகம்) அவர்களது உத்தியோகப் பயிற்சியின் ஒரு அங்கமாய் அனுப்புகின்றனர்.

குறைவான நிதியுதவி மட்டுமல்லாமல், கலாச்சார தளத்திலும் சமூக அறிவியல் ஓரங்கட்டப்படுகிறது. உயர்நிலைப் பள்ளியில் மாணவர்கள் கலை அல்லது விஞ்ஞானம் இவற்றில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள். ஜப்பானைப் பொறுத்த வரையில் “கலைகள்’ என்பன சரித்திரம், இலக்கியம் போன்ற துறைகள், விஞ்ஞானம் என்றால் இயற்கை அறிவியல். இதே போன்ற பாதைகள் உயர்கல்வியிலும் காணப்படுகின்றன. இந்தப் பகுப்பில், சமூக அறிவியல் தன் சுயகாலில் நின்று நிலைபெற்ற ஆராய்ச்சிக்குத் தகுதியுடைய ஒரு களமாய் அனுமதிக்கப்படுவதில்லை. பதிலாய் ஜப்பானியப் பல்கலைக்கழகங்களில், சமூக அறிவியல்கள் கலைகளின் கீழ் பகுக்கப்பட்டு மானுடவியல் படிப்புகளின் ஒரு பகுதியாய் கருதப்படுகின்றன. பல்கலைக்கழக அளவில் அவற்றுக்கு இருக்கும் நலிந்த நிலையினால் K-12 அளவிலும் சமூகவியல்கள் நலிவாய்தான் இருக்கமுடியும். ஜப்பானில் சமூகவியல் பாடங்கள் சரித்திரம், பொருளாதாரம், அரசாங்கம் சம்பந்தமான விஷயங்களை உருப்போடுவதில்தான் வெகுவாய் கவனம் செலுத்துகின்றன. சமூகவியல் படிப்பில், சமூகத்தின் இயக்கத்தை ஆராய்வதற்கான திறமைகளை வளர்த்துக்கொள்ள –பிரச்சினைகளை ஆய்வுநோக்குடன் பார்த்து, அவை எப்படி உருவாகின என்பதை ஆராய – மாணவர்களுக்கு மிகக்குறைவான் அளவு அவகாசமே இருக்கிறது.

சமூகவியல் மற்றும் சமூகப் பாடங்களின் வலுக்குறைவு ஜப்பானிய கல்வித்திட்ட அமைப்பின் இரண்டாவது பிரச்சினையுடன் பிணைந்தது: ஒழுக்க நெறிக்கல்விக்குக் கொடுக்கப்படும் அழுத்தமான முக்கியத்துவம். ஜப்பானின் கல்வி அமைச்சகம் ஒழுக்கநெறிக் கல்வியைப் பள்ளிப் பாடத்திட்டத்தின் மையத் தூண் என்று விவரிக்கிறது. அமைச்சகத்தின் பாடத்திட்ட வழிகாட்டுகள், ஒழுக்க நெறிக்கல்விக்காக வாராந்திர வகுப்புகளை ஒதுக்குவது மட்டுமல்லாமல், ஆசிரியர்கள் மற்றப் பாடங்களிலும் ஒழுக்க நெறிக்கல்வியின் கூறுகளை சேர்த்துப் படிப்பிக்கவேண்டும் என்றும், பள்ளியின் ஒவ்வொரு முக்கிய நிகழ்சிகளிலும் அவை இடம்பெறவேண்டும் வேண்டும் என்றும் கட்டாயப்படுத்துகின்றன. ஒழுக்க நெறிக்கல்வி மனித வளர்ச்சிக்கு இன்றியமையாத ஒன்று என்பது நிச்சயம்; ஆனால் நடைமுறையில் இது மாணவர்களை அதிகாரத்துக்குக் கடுமையாய் கட்டுப்பட்டு இருக்கவும், குழு அளவிலான இலக்குகளுக்காக ஒத்துழைக்கவும் வற்புறுத்துகிறது.

காட்டாய், ஜப்பானில் பள்ளி நடவடிக்கைகள் ஆசிரியர் போன்ற மூத்தவர்களுக்கு மரியாதை கொடுப்பதை மாணவர்கள் மனதில் பதிய வைக்கின்றன. குழு நடத்தையுடன் ஒத்துப் போகும் வகையில் தனிநபர் நடத்தையை திசைதிருப்புவதையும் பள்ளி நடவடிக்கைகள் புகட்டுகின்றன. இதன் விளைவாய், ஜப்பானியப் பள்ளிகளில் மாணவர்களுக்கான நடவடிக்கைகள் மாணவர்கள் நடைமுறை நிலைமையைத் தட்டிக்கேட்கும் திறமையை வளர்த்துக்கொள்வது குழுவின் மற்றவர்களுக்கு எதிராய் தம் சிந்தனைகளைத் தெளிவாய் வெளியில் சொல்வது போன்றவற்றைத் தடுக்கின்றன. ஜப்பானியக் கல்வி அதிகாரத்துக்கு அடிபணிவதை வலியுறுத்துவதால், அதிகாரிகளின் உத்தரவுகள் நியாயமானவையோ இல்லையோ, அவற்றைத் தட்டிக்கேட்க ஜப்பானிய மாணவர்களுக்குப் பயிற்சி இல்லை. குழுவின் மற்ற அங்கத்தினர்களுடன் வேறுபடவும் அவர்களுக்குப் பயிற்சி இல்லை. ஏனெனில் குழு மட்டத்திலான இலக்குகளுக்கும் கூட்டமைப்பின் ஒற்றுமைக்கும் முக்கியத்துவம் கொடுக்கக் கற்பிக்கப்பட்டிருக்கிறர்கள், ஆசிரியர்களைக் கேள்வி கேட்பவர்கள் மரியாதைக் குறைவானவர்களாகவும், வேறுபட்டக் கருத்துக்களைச் சொல்பவர்கள் சுயநலமிகளாகவும் கருதப்படுகிறார்கள்.

இப்படி சமூக அறிவியல்களின் சோகைத்தனத்தாலும், ஒழுக்க நெறிக்கல்வியின் ஆதிக்கத்தினாலும், முறையாய் நடைமுறை நிலையை விமரிசனரீதியில் பரீட்சிக்காமல், சமூகப்பிரச்சினைகளை பிறருடன் விவாதிக்காமல், வேறுபட்டக் கருத்துக்களை விவாதித்து அவற்றின் பின் கூட்டாய் பிரச்சினைகளைத் தீர்க்கும் முறையைப் பயிலாமலும் பல ஜப்பானியர்கள் வயதில் பெரியவர்களாகின்றனர். ஃபுகுஷீமா பேரிடர் ஜப்பானிய சமூகத்தின் அடித்தளத்தின் பிரச்சினையை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்திருக்கிறது – சமூகப் பிரச்சினைகளை எதிர்கொண்டு, அவற்றை அலசி, அவற்றைப் பயனுள்ள முறையில் சமாளிக்கும் திறன் இல்லாமைதான் அது.

அதே நேரத்தில், ஜப்பானின் ஆற்றல் மற்றும் சூழல் கொள்கைகளை சீர்திருத்தும் பல முயற்சிகளுக்கு விசையாய் இருந்தும், அரசாங்கத்துக்கும் குடியாட்சி சமுதாயத்துக்கும் இடையேயான அதிகார இயக்கவியலின் காரணமாகவும் ஃபுகுஷீமா பேரிடர் மக்களுக்கு நடைமுறை நிலையில் இருந்த நம்பிக்கையை உலுக்கித்தான் இருக்கிறது. வரும் கடைசிப் பகுதியில், தொடக்க நிலையில் உள்ள இத்தகைய மாற்றங்களை விவாதித்து, சூழலியல் தொடர்பாய் நீடித்த ஒரு சமுதாயத்தை உருவாக்குவதில் அவற்றின் பங்கைப் பற்றி ஆராய்வேன்.

(தொடரும்)

குறிப்புகள்

[1] இவை அனைத்துமே ஜப்பானின் பல்கலைகளில் பெருமை வாய்ந்த முதல் 15 பல்கலைகள் என்ற பட்டியலுக்குள் அடங்குபவை. ஜப்பானின் முதல் 30 பல்கலைகளின் பட்டியலை இங்கே காண்க: http://www.nigelward.com/top30.html

அவற்றில் முதல் 15 இவை :

1 University of Tokyo
2 Kyoto University
3 Osaka University
4 Tokyo Institute of Technology
5 Tohoku University
6 Keio University
7 Kyushu University
8 Nagoya University
9 Hokkaido University
10 Tsukuba University
11 Kobe University
12 Chiba University
13 Waseda University
14 Hiroshima University
15 Kanazawa University

அரசுப் பரீட்சையில் தேறியவர்களில் கிட்டத் தட்ட 70% பேர் இந்தப் பட்டியலில் உள்ள முதல் 12 பல்கலைகளில் இருந்து வருபவர்கள்.