ஹென்னிங் மான்கெல் – பன்முக ஆளுமை கொண்ட முன்னோடி

mank600

இதுவரை இந்தத் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த எழுத்தாளர்களைப் பார்த்தோம். இந்தக் கட்டுரையில் ஸ்காண்டிநேவிய நாடான ஸ்வீடனுக்குச் செல்லலாம். இந்தத் தொடரின் முதல் கட்டுரையில் சொன்னது போல் இன்றைக்கு குற்றப் புனைவுகளின் தலைமையகமாக ஸ்காண்டிநேவிய நாடுகள் உள்ளன. ” ஸ்காண்டிநேவிய’ என்ற பதம் இங்கு ஸ்வீடன், டென்மார்க், பின்லெண்ட், நோர்வே, ஐஸ்லன்ட் ஆகிய நாடுகளில் எழுதப்படும் குற்றப் புனைவுகளை குறிக்கிறது. பூகோள ரீதியாகப் பார்த்தால் இந்த நாடுகளை நோர்டிக’ (nordic) என்று குறிப்பிடுவதே சரி, ஸ்காண்டிநேவிய நாடுகள் என்பது ஸ்வீடன், டென்மார்க், நோர்வே, ஆகிய மூன்றை மட்டுமே குறிப்பது என்று சொல்பவர்கள் உண்டு,

முதலில் இந்த நாடுகளில் குற்றப் புனைவுகளின் ஆரம்பத்தையும், அதன் பொதுக் கூறுகளையும் பார்ப்போம். மய் க்ஹுயவால், பெர் வாலூ (Maj Sjöwall &Per Wahlöö)என்ற ஸ்வீடன் நாட்டை சேர்ந்த தம்பதியர் இணைந்து எழுதிய மார்டின் பெக் (Martin Beck) என்ற முக்கிய பாத்திரத்தைக் கொண்ட பத்து நாவல்களில் துவங்கலாம். இத்தொடர் நாவல்கள் காவல்துறை புலனாய்வு முறை (police procedural) என்கிற வகைப் புனைவுகளின் முன்னோடி. அதுவரை ஆங்கில பாணியில் (யார் செய்திருப்பார்? -whodunnit?) அமைந்த குற்றப் புனைவுகளே பெருமளவு எழுதப்பட்டன. அதிலிருந்து ஒரு பெரும் மாற்றத்தை இந்தத் தம்பதியரின் புனைவுகள் கொணர்ந்தன. இவற்றில் ஒரு முக்கிய அம்சம்- சமகால சமூக, அரசியல் விழிப்புணர்வைக் கதையில் சித்திரித்தமை. உதாரணத்துக்கு ரோஸான்னா (Roseanna) என்ற இவர்களின் முதல் நாவலில் வரும் ஒரு வாக்கியத்தைப் பார்க்கலாம்.

“ஜூலை ஐந்தாம் நாள் காலை ‘தி பிக்’, போரேன்ஷுல்ட்டை அடைந்து நங்கூரம் பாய்ச்சப்பட்டதைச் சுற்றிலுமிருந்த சிறுவர்களும் வியட்நாமிய சுற்றுலாப் பயணி ஒருவரும் பார்த்தார்கள்.” (“On the morning of 5 July The Pig arrived and moored at Borenshult as the neighborhood children and a Vietnamese tourist looked on”)

இந்த வரியில் அப்படி என்ன சிறப்பு இருக்கிறது? கதையில் இந்த வாக்கியத்துக்கு தனிப்பட்ட முக்கியத்துவம் எதுவும் இல்லை என்றபோதும் ஒரு வியட்நாமியர் இங்கு குறிப்பிடப்படக் காரணம் என்ன? இந்தப் புத்தகம் 1965ஆம் ஆண்டு வெளிவந்தது. வியட்நாம் போர் மூர்க்கமாக இருந்த காலம். அந்த நாட்களில் வியட்நாமியர் ஸ்வீடனில் இருந்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு, இருந்தும் தன் சமகால அரசியல் சூழ்நிலைக்கு ஒரு சிறிய எதிர்வினையாக இதை சேர்த்திருக்கிறார்கள் என்று, இந்த நூலின் மறுபதிப்பு ஒன்றுக்குத் தான் எழுதிய முன்னுரையில் சுட்டுகிறார்  ஹென்னிங் மான்கெல். அவருக்குத் தான் வரித்துக் கொண்ட மரபைச் சிலாகிக்கவும், வெளிப்படையாக அங்கீகரிக்கவும் முடிகிறது. இந்த மரபு வழி (legacy) தான் ஸ்காண்டிநேவிய எழுத்தாளர்களுக்கு இந்த தம்பதியரின் கொடை எனலாம். ஹென்னிங் மான்கெல் முதல் இன்று மிக பிரபலமாக உள்ள மில்லெனியம் (ஸ்டீக் லார்ஷொன்) படைப்புகள் வரை இந்தக் கூறுகளை நாம் காண முடியும்.

இந்தப் புனைவுகளின் இன்னொரு பொது அம்சம் குற்றத்தை யார் செய்தது (whodunnit), ஏன் செய்யப்பட்டது போன்றவற்றைவிட அதன் தாக்கம் (whydunnit) சற்று அதிகமாகப் பேசப்படும் என்பதுதான். இதுவரை நாம் பார்த்த மற்ற எழுத்தாளர்களிலின் படைப்புகளிலும் இந்த இயல்பு உண்டென்றாலும், ஸ்காண்டிநேவிய குற்றப் புனைவுகளில் இது சற்று தூக்கலாகவே உள்ளது. காரின் ஃபோஸம் (Karin Fossum) என்ற நோர்வே நாட்டு எழுத்தாளரின் ’காலிங் அவுட் ஃபொர் யு (Calling Out For You) என்ற நாவலில் ஒரு இந்தியப் பெண் நோர்வே வந்தவுடன் கொல்லப்படுகிறார். அந்தச் சிறிய கிராமத்து மக்கள் மீது காவல்துறைக்கு சந்தேகம் வருகிறது. அதைவிட முக்கியமாக இந்த நாவலில் கிராம மக்களில் ஒருவர் மேல் இன்னொருவருக்கு ஏற்படும் சந்தேகம், பல ஆண்டுகாலம் நட்பாகப் பழகியவர்கள் புதிய கண்ணோட்டத்தில் ஒருவரை ஒருவர் பார்ப்பது, கிராமத்தில் பரவும் வதந்திகள் என இறுக்கமான சூழ்நிலையில் எழும் பேதலிப்புகளை (a different kind of claustrophobia) ஃபோஸம் நம் முன் கொண்டு வருகிறார். இதில் அதிக சந்தேகத்திற்கு ஆளாகிறவர்கள் எங்கு சென்றாலும் அவர்களை ஊர் மக்களின் பார்வை தொடர்ந்து கொண்டிருக்கிறது. அவர்கள் வாழ்க்கை உண்மை குற்றவாளி கண்டுபிடிக்கப்படும்வரை- குற்றவாளி அவர்களாக இல்லாத பட்சத்தில்- நரகம்தான்.

மேலும் இந்த நாவல்களின் முக்கிய பாத்திரங்கள் அதிபுத்திசாலிகள் அல்ல. குற்றம் பற்றித் தெரிந்தவுடன், முதலில் சற்று அதிர்பவர்களும் உண்டு. எப்படி முன் செல்வது என்று முதலில் திகைத்து, பின் அடி மேல் அடி வைத்து வழக்கை முன் நகர்த்துகிறார்கள். பொதுவாக இந்தப் புனைவுகளில் காவல் துறை அதிகாரிகளிடம் காணக்கிடைக்கும் அசாத்திய தன்னம்பிக்கை இதில் சற்று குறைவு. குற்றத்திற்கான விடையும் ஒரு பொறிதட்டிக் கிடைப்பதில்லை, சில நேரம் விசாரிப்பவர் தன பாணியில் விசாரித்துக் கொண்டிருக்க, குற்றவாளி தான் செய்த வேறேதோ தவறால் தானே மாட்டிக் கொள்வதும்கூட நடப்பதுண்டு.

கதைச் சூழல் இப்படி அமைய ஒரு காரணம் உள்ளது. இந்தப் புனைவுகளில் பல தொடர்கள், சிறு நகரங்கள்/ கிராமங்களில் நடப்பவை, ஒப்பீட்டளவில் கிராமம் என்பது நகரத்தைப் பார்க்கையில் சற்று அமைதியான இடம்தான் அல்லவா? எனவே அதிகம் குற்றம் நிகழாத இடமாக இருப்பதால், அங்குள்ள காவல்துறையினருக்கும் இந்த மாதிரி வழக்குகளில் அதிக அனுபவம் இருப்பதில்லை. எனவேதான் அவர்கள் முதலில் சற்று தடுமாறுகிறார்கள். மேலும் சிறு கிராமத்தில் அனைவரும் கிட்டத்தட்ட ஒருவரை ஒருவர் அறிந்திருப்பதால் ஒருவருக்கு ரகசியம், தனிமை, அந்தரங்கம் போன்றன இருப்பது கடினம்தான். எப்படியாவது ஒருவரைப் பற்றிய விஷயங்கள், முழுதாக இல்லாவிட்டாலும் சற்று உருமாறியாவது வெளிவந்து விடுகின்றன. எனவேதான் நாம் மேலே பார்த்த வதந்தி, பொறணி பேசுதல் போன்றவையும் கதையின் முக்கிய அம்சங்களாக உள்ளன. இப்படி நகரம் சார்ந்து இல்லாமல் சிறு நகரங்களில் இந்த நாவல்கள் நடப்பதற்கான காரணத்தையும், இந்தச் சிறு நகர மையப் போக்கு எப்படி ஆரம்பித்தது என்பதையும் கட்டுரையில் பின்னர் பார்ப்போம்.

மய் க்ஹுயவாலும், பெர் வாலூவும் ஸ்வீடனில் பிரபலமடைந்தாலும், உலகளவில் ஸ்காண்டிநேவிய குற்றப் புனைவு அலையை உருவாக்கியவர் என்று ஹென்னிங் மான்கெல்லையே (Henning Mankell) சொல்லலாம். இந்த கட்டுரையில் அவர் படைப்புக்கள் குறித்துதான் பார்க்கப் போகிறோம்.

author_mankell_swedenஸ்வீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் 1948ஆம் ஆண்டு பிறந்த மான்கெல் தன் சிறுவயதை ஸ்வியெக் (sveg) என்ற சிறு நகரத்தில் கழித்தார். தன் பதினாறாவது வயதில் பாரிஸ் சென்ற மான்கெல், அதன் பின் கப்பலில் பணிபுரிந்தார். மீண்டும் 1966ஆம் ஆண்டு பாரிஸ் வந்து, வறுமையான சூழலிலிருந்தாலும், சமூக மற்றும் அரசியல் இயக்கங்களிலும் விவாதங்களிலும் ஈடுபட்டார். மீண்டும் ‘ஸ்டாக்ஹோம்’ வந்தவர் அங்கு அரங்கமைப்பு உதவியாளராகப் பணிபுரிந்தார். இந்தக் கட்டத்தில் நாடகம், மற்றும் குற்றப் புனைவல்லாத தன் முதல் நாவலை, 1973இல் எழுதினார். மேலும் சில நாவல்களை எழுதியவர், நாடக அரங்கில் தன் வேலை காரணமாக 1984 முதல் 1990 வரை எந்த நாவலும் எழுதவில்லை.

இந்த காலகட்டத்தில் அவர் ஆஃப்ரிக்கா கண்டத்தில் நீண்ட நாட்கள் வாழ்ந்தார். சிறுவயதிலிருந்தே தான் படித்த புத்தகங்கள் வாயிலாக ஆஃப்ரிக்காவின் மேல் அவருக்கு ஈர்ப்பிருந்தது. முதல் முறை ஆஃப்ரிக்கா சென்றபோது தனக்கேற்பட்ட அனுபவத்தை அவர் இவ்வாறு சொல்கிறார், “ஆஃப்ரிக்காவில் விமானத்திலிருந்து இறங்கியவுடன், ஏனோ என் வீடு திரும்பியதுபோன்ற ஒரு விளக்கவியலாத உணர்வேற்பட்டது.”

ஆஃப்ரிக்காவின் மொஸாம்பீக் நாட்டின் மாபூட்டொ (Maputo) நகரில் உள்ள தியேட்ரோ அவெனீதா (Teatro Avenida) என்ற நாடக அமைப்பின் கலை இயக்குனராகப் பணியாற்றினார். இப்போதும் ஒவ்வொரு ஆண்டும் ஆறு மாதங்களை அங்கு செலவிடுகிறார். ஒரு கேரள நாடகக்குழுவும்கூட இங்கு கூடியாட்டம் என்ற பண்டை சம்ஸ்க்ருத நாடக மரபில் வந்ததொரு நிகழ்வை நடத்தியிருக்கின்றனர். இது போன்ற பன்னாட்டு அரங்கக் கலைகள் இங்கு மேடையேற்றப்படுகின்றன.

தன் பணி குறித்து மான்கெல் கூறும்போது தியேட்ரோ அவெனீதா-வில் (Teatro Avenida) என் பணி, என் வாழ்க்கையின் மிகப் பெரிய சவாலாக இருந்தது. பல்வேறு கலாச்சாரங்களிலிருந்து வரும் மக்களுடன் பணியாற்றும்போது நம்மைப் பிரிக்கும் விஷயங்களைவிட இணைப்பவையே அதிகமென்று உணர்கிறோம்” என்கிறார்.

1990ஆம் ஆண்டு ’நட்சத்திரங்களுக்கொரு பாலம்’ (அ ப்ரிட்ஜ் டு த ஸ்டார்ஸ்- A Bridge to the Stars) என்ற சிறாருக்கான நாவலை எழுதினார். இது அந்த ஆண்டிற்கான சிறந்த சிறார் நாவல் விருது பெற்றது. இதன் பின்னர் அவர் எழுதியவை ஒரு தொடர் சிறார் நாவல்களாக (series) உருவெடுத்தன. இதைத் தவிர வேறு இரண்டு சிறார் நாவல் தொடர்களையும் அவர் எழுதியுள்ளார்.

மான்கெல் வெறும் குற்றப் புனைவு எழுத்தாளர் மட்டுமல்ல, அவரின் ஆளுமை இன்னும் விரிவானது. ஒரு முழுமையான பார்வையைத் தரவேண்டும் என்பதற்காக அவருடைய நாடகப்பணி, பிற எழுத்துக்கள் பற்றி இத்தனை விரிவாகச் சொல்கிறேன். இன்ஸ்பெக்டர் வலாண்டர் தொடரைத் தவிர, தனி நாவல்கள், சிறாருக்கான இரு தொடர் நாவல்கள், நாடகங்கள், திரைக்கதைகள் என பலவற்றில் மான்கெல் ஈடுபட்டுள்ளார். மான்கெலே அடிக்கடி சொல்வது போல் வலாண்டர் நாவல்கள் அவருடைய எழுத்துப்பணியில், 25 சதவீதம்தான். இருந்தும் இந்தத் தொடர் அவருக்கு மிகுந்த புகழைத் தந்தது மட்டுமல்லாமல், இன்றுவரை நீடிக்கும் ஸ்காண்டிநேவிய குற்றப் புனைவு அலையும், தொடர்ந்து அறிமுகமாகும் புதிய எழுத்தாளர்களும் உருவாகக் காரணமாக இருந்திருக்கிறது.

இப்படி பலதரப்பட்ட புனைவுகளை எழுதிக்கொண்டிருந்த மான்கெல் 1991ஆம் ஆண்டு தன் முதல் குற்றப் புனைவான ‘முகமற்ற கொலையாளிகள்’ (Faceless Killers) என்ற நாவலை எழுதினார். அவருடைய மிக புகழ் பெற்ற பாத்திரமான குர்ட் வலாண்டர் (Kurt Wallander) அதில் அறிமுகமானார். முதல் புனைவிலேயே தன் சமூகப் பார்வையை பதிவு செய்ய அவருடைய செயல்பாடுகளும் ஒரு காரணமாக இருந்தது. இந்த நாவலில் ஒரு முதிய தம்பதியர் பண்ணை வீடு ஒன்றில் கொடூரமாகக் கொலை செய்யப்படுகின்றனர். இறக்குமுன் அந்த மூதாட்டி, ‘வெளி நாட்டுக்காரன்’ (foreigner) என்று பொருள் படும் வார்த்தையை கூறுகிறார் என்ற செய்தி வெளிவந்தவுடன் இந்த கொடூரக் குற்றத்தால் ஏற்கனவே கொதிப்படைந்துள்ள மக்கள், அகதிகள்மீதும் அவர்கள் தங்கும் முகாம்கள் மீதும் தாக்குதல் நடத்துகின்றனர். உண்மையில் ஒரு அகதிதான் இந்தக் குற்றத்தை செய்தார் என்பது நிறுவப்படாவிட்டாலும், ஊடகங்களில் வெளியாகும் செய்தியைச் சார்ந்து இனவெறி எப்படி மேலெழுகிறது என்பதற்கு இது ஓர் உதாரணம். வலாண்டர் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதோடு மட்டுமல்லாமல், இந்த இனவெறித் தாக்குதல்களையும் கட்டுப்படுத்தி நிறுத்த வேண்டும். தன் பணி பற்றி வலாண்டர், ‘ நீதி என்பது குற்றமிழைத்தவர் தண்டிக்கப்படுவது மட்டுமல்ல, அது நாம் உண்மையைத் தேடுவதை ஒருபோதும் கைவிடக் கூடாது என்பதுமாகும்,’ என்று கூறுகிறார். சராசரி குற்றப் புனைவுகளின் இலக்கணங்களை முதல் நாவலிலேயே மான்கெல் மீறிச் சென்றுள்ளார். முதல் முதலாக குற்றப் புனைவு எழுத நேர்ந்ததை பற்றி மான்கெல் இவ்வாறு கூறுகிறார்.

“ஸ்வீடனை விட்டு சில காலம் வெளியே தங்கியிருந்தேன். திரும்பி வந்த போது இனவெறி வெடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து அது பற்றி எழுத முடிவு செய்தேன். எனக்கு இனவெறியும் ஒரு குற்றம்தான், எனவே இதற்குக் குற்றப் புனைவைப் பயன்படுத்திக் கொள்ள முடிவு செய்தேன். பிறகு எனக்கு (நாவலுக்கு) ஒரு காவல்துறை அதிகாரி தேவை என்று உணர்ந்து, வலாண்டர் என்ற பெயரை தொலைபேசி முகவரிப் பட்டியலிலிருந்து எடுத்தேன். மே 20, 1989இல் குர்ட் பிறந்தார் .”

வெள்ளைப் பெண்சிங்கம் (‘The White Lioness’) என்ற நாவல் அரசியல் சதிக்கொலை (political assasination) பற்றியது. 1993இல் வெளிவந்த இந்த நாவலில் நெல்சன் மண்டேலாவைக் கொல்ல சதித்திட்டம் தென் ஆப்பிரிக்காவில் தீட்டப்படுகின்றது . இதனிடையே ஸ்வீடனின் யூஸ்டாட் (Ystad) நகரத்தில் ஒரு பெண் கொலை செய்யப்படுகிறார். இரண்டிற்கும் உள்ள தொடர்பு என்ன, கொலையாளி/ மண்டேலாவைக் கொலை செய்ய முயல்பவர் யார், அவருக்குப் பின்னணியில் உள்ளவர்கள், அவர்களுக்கான அரசியல் காரணங்கள் என்று பல அலசப்படுகின்றன. இந்த நாவல் எழுத நேர்ந்தது குறித்து மான்கெல் இவ்வாறு கூறுகிறார், ”வெள்ளைப் பெண்சிங்கத்தை, தென் ஆஃப்ரிக்கத் தேர்தலின்போது எதுவும் கெடுதலாக நிகழக்கூடாது என்று வேண்டி, ஒரு பிரார்த்தனை போலவே எழுதினேன்.”

இந்த இடத்தில் இதே கருவைக் கொண்டு ஃப்ரெட்ரிக் ஃபோர்ஸைத் (Fredrick Forsyth) எழுதிய விறுவிறுப்பான த்ரில்லர் நாவலான ’நரியின் தினம்’ (The Day of the Jackal) என்பதைச் சற்று பார்ப்போம். ஒரே கருவென்றாலும் இதில் முக்கிய கொலைச் சதிகாரன் ’நரி’ (Jackal) என்ற புனைபெயர் கொண்டவன், கிட்டத்தட்ட ஒரு பழங்கதைப் பாத்திரமாகவே உள்ளான். கொலைக்கான அரசியல் காரணிகள் நாவலின் ஆரம்பத்தில் பேசப்பட்டாலும், எந்த சமூகக் குறிப்புகளும் அதன்பின் நாவலில் வருவதில்லை. மிக பரபரப்பான தொடர் வேட்டைதான் நாவல் முழுதும் நடக்கின்றது. ’நரி’யைத் தேடும் க்ளொவ்ட் லெபெல் (Claude Lebel) என்பவரின் பாத்திரமும் மிகுந்த புத்தி சாதுரியமுள்ள பாத்திரம். தர்க்கரீதியாகச் சில ஓட்டைகள் இருந்தாலும், நாவலின் வேகம் நம்மை அதிகம் சிந்திக்க விடாது . ஆனால் மான்கெல்லின் நாவலில் இத்தகைய பரபரப்பு தொனி இல்லை. ’நரி’யை விட மான்கெல்லின் கொலையாளியும் ஓரளவுக்கு நாம் நெருங்கக்கூடிய பாத்திரமாக உள்ளார், அதேபோல் வலான்டரும் மிகுந்த அறிவாளியெல்லாம் இல்லை, தட்டுத்தடுமாறிதான் முன்செல்கிறார். தென் ஆஃப்ரிக்கா செல்லும் வலான்டரின் பார்வையில் அந்த நாட்டின் கறுப்பின மக்களின் வறுமையும், அந்த காலகட்டத்தின் சமூக நிலைகள் பற்றிய தனிமனித உணர்வுகளும் வெளிப்படுகின்றதன. இது இரண்டு நாவல்களுக்கிடையான ஒப்பீடு இல்லை, ஒரே கருவை இருவேறு விதமாக அணுக முடியும், இரண்டையும் சிறப்பாகச் செய்ய முடியும் என்பதற்காக இதைக் கூறுகிறேன். ஃபோர்ஸைத், மான்கெல் இருவரின் நோக்கங்கள் வேறு, அவரவர் பார்வையில் அதைச் சிறப்பாகச் செய்துள்ளார்கள்.

ரீகாவின் நாய்கள் (The Dogs of Riga) என்கிற 1992ஆம் வருடத்து நாவலில் விசாரணை சம்பந்தமாக வலாண்டர் சோவியத் அமைப்பில் இருந்த கிழக்கு யூரோப்பிய நாடுகளில் ஒன்றான லாட்வியாவுக்குச் செல்ல வேண்டி வருகிறது. அந்தக் கட்டத்தில் அங்கு நிலவிய சர்வாதிகார ஆட்சிமுறை, அந்த நாடுகளில் அப்போது இருந்த ஆழ்ந்த சமூகக் கண்காணிப்பு ஆகியன குறித்த அவதானிப்புகளும் இந்த நாவலின் மைய இழையோடு வரும்.

109868

மேலே சொன்ன மூன்று நாவல்களும் அது எழுதப்பட்ட காலங்களையும் பார்த்தால், அந்தக் கட்டத்தில் தன் சமூக நோக்கைச் சார்ந்தே அவற்றை எழுதி உள்ளார் மான்கெல் என்பது புரியும். இந்தத் தொடரின் மற்ற நாவல்களும் குற்றம், சமூகம், அரசியல் என்ற மூன்று கூறுகளைக் கொண்டுள்ளன.

அதிகாரம் மற்றும் பணம் படைத்த வயதானவர்கள் தங்கள் மன விகாரங்களுக்கு, ஏழை குடியேறிகளை (immigrants) பாலுறவு அடிமைகளாக (Sexual Slavery) வைத்திருப்பதை இன்னொரு நாவல் பேசுகிறது. அதே போல் மதக் குறுங்குழுக்கள் (religious cults) பற்றியது இன்னொரு நாவல். கடந்த சில ஆண்டுகளில் வெளியான ஒரு நாவல், வெளிவந்த காலத்திற்கு ஏற்புடையதாக நவீனத் தொழில்நுட்பம் சார்ந்த குற்றம் பற்றியும், அதே நேரம் ஏழ்மை, மூன்றாம் உலக நாடுகளுக்கும் /உலக வங்கிக்கும் இடையே உள்ள உறவு என்றும் சமகாலப் பார்வையை முன்வைக்கிறது. ”சமூக மாற்றத்துடன் குற்றங்களும் மாறுகின்றன, எனவே குற்றப் புனைவுகளும் தம்மைப் புதுப்பித்துக் கொள்ளும்,” என்கிறார் மான்கெல். மேலும், “இது உலகின் ஆகப் பழைய இலக்கிய மரபுகளில் ஒன்று. எனக்கு எது ஊக்கம் கொடுக்கிறது என்று கேட்டால், நான் பண்டை கிரேக்க நாடகங்களுக்குப் போகிறேன் என்பேன். எவ்ரிபீடிஸின் (Εὐριπίδης- Euripides), ’மீடியா’ (Μήδεια- Medea) நாடகம் வேறெதைப் பற்றியது? ஒரு பெண் தன் குழந்தைகளைப் பொறாமையால் கொல்வது. இன்று என்ன வித்தியாசம் என்றால் இன்றைய குற்ற நாவல்களில் நாம் போலிஸ் அதிகாரிகளைக் கொண்டு வருகிறோம்.”

இந்தத் தொடரில் ஒரு நாவலைத் தவிர மற்ற அனைத்திலும் இந்தப் பார்வை உள்ளது என்று சொல்லலாம். முந்தைய கட்டுரைகளிலும் சரி, இந்தக் கட்டுரையிலும் சரி, சில இடத்தில் நாவல்கள் பெயரைச் சொல்லி இருப்பேன், சில சமயம் வேண்டுமென்றே விட்டுள்ளேன். குற்றப் புனைவைப் பற்றியோ, அல்லது படத்தைப் பற்றியோ சொல்ல நேரும்போது கதை ருசியைக் கெடுக்காமல், எவ்வளவு சொல்லலாம் என்ற தயக்கமே இதற்கு காரணம். இந்தக் கட்டுரையில் முதலில் சொன்ன மூன்று நாவல்களில் முதலிலேயே கதையின் போக்கு நமக்கு தெரிந்து விடும் என்பதால் குறிப்பிட்டுள்ளேன்.
இந்த நாவல்களின் போக்கு பரபரப்பு, அதிரடித் திருப்பங்கள் என்று செல்லாது. முன்பு நாம் பார்த்த தொடர்களில் இருந்து அந்த வகையில் இது மாறுபட்டது. சற்றே மெதுவாக நகர்வது போல்கூட தோன்றும், சில நாவல்களில் ஐம்பது பக்கங்கள் சென்றபின்தான் குற்றமே நிகழும். அதற்காக சலிப்பாக இருக்கும் என்று எண்ண வேண்டாம், இறுக்கமாகவும், அழுத்தமாகவும் இருக்கும். ஒரு விதத்தில் முந்தைய தொடர்களைவிட நிஜத்திற்கு வெகு அருகில் இருக்கும் தொடர் இது எனலாம், நிஜம் எப்போதும் சிறிது ஏமாற்றம் அளிப்பதுதானே? எனவே கொலை மட்டுமே குற்றப் புனைவு என்பது போன்ற நம்மிடையே முன்கூட்டியே உண்டான எண்ணங்களை சற்றே மாற்றிக் கொள்ள வேண்டியிருக்கும் அவ்வளவுதான்.

உதாரணமாக, விசாரணை நடக்கும் விதம், காலகட்டம் பற்றி பார்க்கலாம். வலாண்டர் ஒரு குழுவின் தலைவர், குற்றம் நடந்து விசாரணை ஆரம்பித்ததும், அனைவரும் அடுத்த கட்டம் பற்றி விவாதிப்பார்கள். அடுத்த நாள், ஏதும் முன்னேற்றம் நடக்காமல் மீண்டும் கூடி வழக்கை அலசுவார்கள். இப்படி நாட்கள், ஏன் வாரங்கள்கூடச் செல்லும். படிப்பவருக்கு என்னடா இது, இவ்வளவு நாளாகுதா கண்டுபிடிக்க என்று தோன்றலாம், ஆனால் அது பொதுவாக குற்றப் புனைவுகளை படித்து நமக்கு ஏற்படும் கால மயக்கம்தான் . காலத்தின் போக்கு பொதுவாக இந்த வகைப் புனைவுகளில் வெளிப்படையாகச் சொல்லப்படுவதில்லை, அதாவது குற்றம் நடந்ததில் ஆரம்பித்து, குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டார் என்று முடியும் நாவல், அதைக் கண்டுபிடிக்க எத்தனை நாட்கள் கழிந்தன என்பதைப் பற்றிப் பேசாது. ஆனால் நிஜ வாழ்க்கையில் எத்தனை குற்றங்கள் அவை நிகழ்ந்தவுடன் கண்டுபிடிக்கப்படுகின்றன? பல வருடங்கள் சென்ற பிறகு கூட குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படுவதை நாம் படித்துள்ளோம். அது தான் இந்த தொடரிலும் நடக்கிறது.

இந்த யுத்தியை மய் க்ஹுயவால்/ பெர் வாலூ தம்பதியரின் நாவல்களில் இருந்து தான் எடுத்துக்கொண்டதாக மான்கெல் கூறுகிறார்.
“…அனேகமாக காலம் தெளிவாகவே ஒரு பெரும் அங்கம் வகிக்கும்படி அமைந்த குற்ற நாவல்களில் முதல் சிலவற்றில் இது ஒன்று. சில சமயம், அங்கு நெடுநாட்களுக்கு ஏதுமே நடக்காத நிலை இருக்கும், ரோஸான்னாவைக் கொன்று கோடா கால்வாயில் அவளை வீசியவர் யாரெனக் கண்டு பிடிக்கும் வழக்கு அசையாமல் அப்படியே நிற்பதாகத் தோன்றும்; அப்புறம் அந்த வழக்கு சில சென்டி மீட்டர்கள் நகரும், மறுபடி நின்று விடும்…. கொலையை விசாரிப்பவரில், பொறுமை இல்லாதவருக்கு முக்கியமான ஒரு திறமை இல்லை எனலாம்.”

நாவல்களின் நம்பகத்தன்மைக்காக தான் எடுத்துக்கொண்ட முயற்சிகள் பற்றி மான்கெல் இவ்வாறு கூறுகிறார், “யூஸ்டாட் போலிஸாருடன் நான் நிறைய நேரம் செலவழித்தேன். அந்த சூழ்நிலையை, அந்தக் களவிவரணையை எதார்த்தத்துக்கு எத்தனை அருகில் கொணர முடியுமோ அத்தனையை அடைய நான் பெருமுனைப்போடு இருந்தேன்.”

ஸ்வீடனில் மாறி வரும் சமூகமும், பெருகி வரும் குற்றங்களும் இந்த நாவல்களில் திரும்பத் திரும்ப பேசப்படும் கருத்துகள். தன் சிறுவயதில் இருந்த ஸ்வீடன் இப்போது மாறி வருவதைப் பார்த்து, அதைத் தடுக்க முடியாமல், அதே நேரம் எப்படியோ போகட்டும் என்று விட்டு விடவும் முடியாமல் வலாண்டர் தவிக்கிறார். இந்த மாற்றத்தை கிட்டத்தட்ட அனைத்து நாவல்களிலும் யோசிக்கிறார்.
”சமூகம் குரூரமாக வளர்ந்திருக்கிறது. தங்களுடைய நாடுகளிலேயே தாம் விரும்பத் தகாதவர்களாகவோ, வேண்டாதவர்களாகவோ கருதப்பட்டதாக உணர்ந்தவர்கள் வலுவாக அதற்கு மறுவினை தெரிவித்தார்கள். பொருளில்லாத வன்முறை என்று ஏதும் இல்லை. ஒவ்வொரு வன்செயலுக்கும் அதைச் செய்யும் நபரைப் பொறுத்தவரை ஏதோ அர்த்தம் இருக்கிறது, இந்த உண்மையை நாம் ஒத்துக் கொள்ளத் துணிந்தால்தான், சமூகத்தை இன்னொரு திசையில் திருப்ப நம்மால் முடியும்.”

இந்த நாவல்களை ஸ்வீடனின் ஸ்கோன (Skåne) என்ற மாவட்டத்தில் (county) உள்ள யூஸ்டாட் என்ற சிறு நகரத்தில் அமைத்துள்ளார். இதற்கான காரணமாக அவர் கூறுவது இதுதான்:”முன்பெல்லாம் குற்றப் பாங்கை , ஸ்டாக்ஹோமைப் போலப் பெரிய நகரத்தில்தான் நாம் காண்போம். இப்போதோ சிறு நகரங்களில் கூட நாம் போதைப் பொருட்களை வாங்க முடியும். யுஸ்டாட் எங்கே இருக்கிறது என்று பாருங்கள். ஸ்வீடனில், தெற்கே, கீழே, யூரோப்பிய கண்டத்துக்கு அருகே எல்லைப் பகுதியில் இருக்கிறது- பால்டிக் கடல்தான் நம்முடைய ரியோ க்ராண்ட் என்று சொல்லலாம்.”   [ரியோ கிராண்ட் என்பது அமெரிக்காவுக்கும் மெக்ஸிகோவுக்கும் இடையே ஓடும் ஒரு பேராறு. இது சில பகுதிகளில் இயற்கையாக இரு நாடுகளைப் பிரிக்கும் எல்லைப் பகுதியாக உள்ளது.]

”ஸ்வீடன் முடியும் இடத்தில் ஸ்கோன இருக்கிறது- ஒரு பால்டிக் டெக்ஸாஸ் போல. எல்லைப்பகுதிகளுக்கு அவற்றுக்கே உரித்த இயக்கம் உண்டு: அவை நம்மிடம் ஒரு கலக்கத்தைத் தூண்டுகின்றன.”

இந்தத் தொடரில் யூஸ்டாட் நகரும் ஒரு பாத்திரமாக உள்ளது. அந்த இடத்தின் குளிர், பெய்து கொண்டே இருக்கும் மழை, பசுமையான நிலவெளி என அந்த சிறிய நகரம் நமக்கு மிக நெருக்கமாகி விடுகிறது. இப்படி யூஸ்டாடில் பொதுவாக நிலவும் அமைதிக்கு நேரெதிராக நடக்கும் குற்றங்களே இந்த நாவல்களின் புறச்சூழலை மனதில் பதியும்படிச் செய்கின்றன. இந்த தொடரில் மட்டுமல்ல, ஸ்காண்டிநேவிய குற்றப் புனைவுகள் பலவற்றில் காணும் இந்த அமைதி (எதிர்) வன்முறை/ குற்றம் என்ற கருத்தாக்கம்தான் இந்த வகைப் புனைவுகளின் வரவேற்பிற்கு இன்னொரு காரணம். உதாரணமாக ஐஸ்லாந்தை எடுத்துக்கொண்டால், குளிரும், தனிமையுற்று இருக்கும் அத்வானமான இடங்களும் நாவலின் கதையைப்போலவே முக்கியமானவை.

குற்றம் என்பது எங்கும் நடப்பது என்றாலும், குளிர்ந்த, அதிக அரவமில்லாத, தனிமையான இடங்களில் நடக்கும் குற்றம் என்பது நம்மை ஒரு மிகுந்த வெப்பமிக்க, ஜனத்திரள் மிக்க இடத்தில் நடக்கும் குற்றத்தைவிட ஈர்க்குமல்லவா?. முதலாவதில் கிடைக்கும் ஒரு சூழலுணர்வு பின்னதில் கிடைப்பதில்லை அல்லது இதுவரை சரியாக நாவல்களில் உருவாக்கப்படவில்லை . வலாண்டரின் காலடிகளைப் பின்பற்றி (In the footsteps of Wallander) என்ற இலவச ஐபோன்/ஆண்டிராய்டு செயலுத்தி (App) ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தொடர் நாவல்களின் வாசகர்களும் தங்கள் புத்தகத்தில் படித்த இடங்களை பற்றி இன்னும் தெரிந்து கொள்ள இதை உபயோகிக்கலாம்.

இந்த கட்டுரைத் தொடரில் நான் நாவல்களும் பாத்திரங்களும் உருவான விதத்தைப் பற்றியும் மேற்கோள்களைத் தந்து வருகிறேன். ஒரு கதையைப் படிப்பதற்கு இணையாக, கதை உருவான கதை/ பொறி, பாத்திரத்தின் ஆரம்பம், பரிமாண வளர்ச்சி இவற்றைப் பற்றி படிப்பதும் எனக்கு எப்போதும் உவப்பானதாக இருந்துள்ளது. ஒரு எழுத்தாளரின் மனதை அறியவும், அவரின் உந்து சக்திகளை தெரிந்து கொள்ளவும் இவை உதவுகின்றன. மான்கெல்லின் ஒரு மேற்கோளை கீழே பார்ப்போம்.

“மனித வாழ்வைப் பற்றி கதைகள் சொல்ல குற்றப் புனைவு என்பது ஒரு திறமையான வழி! அதில் கொலை என்று இருக்க அவசியம் இல்லை; அது சிறு குற்றத்தைப் பற்றிக் கூட இருக்கலாம். இழுபறிகளில் நாடகத் தன்மை எப்போதுமே உண்டு; மஹாபாரதத்தைக் கொஞ்சம் பாருங்கள், அது எதைப் பற்றியது? அதைத்தான் நானும் சொல்கிறேன்: (உலக) விஷயங்களுக்கு குற்றப் புனைவு ஒரு கண்ணாடி போன்றது.”

கிட்டத்தட்ட இதே கருத்தை ரான்கின் சொல்லியிருப்பதை இந்தத் தொடரின் முதல் கட்டுரையில் பார்க்கலாம். வெவ்வேறு நாடுகளில் உள்ள, வெவ்வேறு பாணிகளில் புனைவுகள் எழுதும் இருவரின் மனதில் தோன்றும் ஒரே மாதிரியான எண்ணத்தை எப்படி பார்ப்பது, வெறும் தற்செயல் என்று விட்டு முடியாதல்லவா? யார் எங்கிருந்தாலும் சில ஆதார உணர்வுகள் ஒன்றுதான் என்று நமக்குத் தெரிய வருகிறது.

தொடரின் ஆரம்பத்தில் வலாண்டர் மத்திய வயதினராக அறிமுகமாகிறார். அவருக்கு விவாகரத்து ஆகிவிட்டது, அவர் மகள் அவருடன் பேசக்கூட விரும்புவதில்லை. இந்த இடத்தில், தொடரின் முந்தைய கட்டுரையைப் படித்தவர்களுக்கு, என்னடா இது எல்லா பாத்திரங்களும் ஒரே மாதிரி விவாகரத்து, குடிப் பழக்கம் என சலிப்பான உத்தியாக (கிளிஷேவாக) இருக்கிறதே என்று தோன்றலாம். மேலோட்டமாக பார்த்தால் அது உண்மைதான், ஆனால் இந்தத் தொடர் நாவல்களை படிப்பவர்களுக்கு அந்தப் பாத்திரங்களுக்கிடையில் உள்ள வித்தியாசங்கள், விசேஷ குணங்கள்/ தனித் தன்மைகள் தெரியவரும். உதாரணமாக ரீபஸ், மோர்ஸ் ஆகிய இருவரும் பணியில் தன்னிச்சையாக செயல்படுபவர்கள் என்றால், டோனி ஹில், வலாண்டர் இருவரும் குழுவோடு பணியாற்றக்கூடியவர்கள். மோர்ஸ் கிளாசிகல் இசைப் பிரியரென்றால், ரீபஸ் சமகால இசைப் பிரியர். ரீபஸ் அவநம்பிக்கை (cynical) ஆசாமி என்றால் வலாண்டர் ஆயாசமாக உணர்ந்தாலும் செயலூக்கம் கொள்பவர் (world weary but still with some hope) இப்படி பாத்திரப்படைப்பின் நுணுக்கமான வித்தியாசங்கள்தான் இந்தத் தொடர்களைத் தனித்துக் காட்டுகின்றன. இருப்பினும் புற்றீசல் போல் வெளிவரும் பல படைப்புகளில் இந்த சலிப்பான உத்திகள் அப்படியே உபயோகிக்கப்படுகின்றன என்பதும் உண்மைதான். விவாகரத்தான, குடிகாரரான அதிகாரி என்ற ஒற்றைத் தன்மையுடன் இந்த பாத்திரங்கள் முடிந்து விடுகின்றன.

வலாண்டர் பாத்திரத்தை உருவாக்கும்போது, அது இத்தனை புகழ் பெறும் என்று மான்கெல் எண்ணவில்லை. காவல்துறை அதிகாரியின் வாழ்க்கை எத்தனை கடினமானது என்று காட்டவே அவர் முதலில் விரும்பினார். பின்னர் சின்ன சின்ன நகாசு வேலைகள் மூலம் பாத்திரத்தை முழுமையாக்க முனைந்தார். உதாரணத்துக்கு, வலாண்டரை ஒரு நீரிழிவு நோயாளியாக்கினார். இதனால் அதிக தாகம் எடுத்து, இரவுகளில் எழுந்துகொள்ளவேண்டிய நிலை அவருக்கு. தூக்கமும் கெட்டு, அடுத்த நாள் காலை எழும்போது சோர்வு, தலைவலி, எரிச்சல் என்று உபாதைகளுடன்தான் அவர் வேலை செய்ய வேண்டியுள்ளது. நம் மனதில் இந்தப் பாத்திரங்கள் அழிக்கப்பட முடியாதவர்கள் என்ற தோன்றும் எண்ணங்களை உடைக்கிறார் மான்கெல். “மூன்றாவது நாவலுக்குப் பிறகென்று நினைக்கிறேன், என் அந்த நண்பனுடன் பேசினேன், என்ன மாதிரி நோயை அவருக்கு (வலாண்டருக்கு) கொடுக்கலாம் என்று கேட்டேன். வலாண்டரின் வாழ்வைப் போன்ற ஒரு வாழ்க்கையை நடத்துபவர் அவர். சிறிதும் தயங்காமல் அந்தப் பெண் சொன்னார்: ‘நீரிழிவு நோய்!’ அதனால் அவருக்கு நீரிழிவு நோயைக் கொடுத்தேன், இது அவர் பாத்திரத்துக்கு மேலும் வாசக ஆதரவைக் கூட்டியது. நான் சொல்வதென்னவென்றால், ஜேம்ஸ் பாண்ட் ஒரு இன்சுலின் ஊசி போட்டுக் கொள்வதை நாம் கற்பனை செய்ய முடியுமா, ஆனால் வலாண்டரைப் பொறுத்தவரை அது மிக எதார்த்தமாக இருப்பதாகத் தெரிந்தது.”

வலாண்டர் சட்டென்று கோபப்படக்கூடியவர், தனியாக வாழ்வதால் கண்ட உணவைக் கண்ட நேரத்தில் உண்டு, அதிகக் குடியால் தன் உடல்நிலையைத் தானே மோசமடையச் செய்பவர். தனிமை விரும்பி. என்றாலும் தன் பணி சார்ந்து குழுவாக இயங்குவதில் அவருக்கு பிரச்சினை இல்லை, அந்தக் குழுவின் தலைவரும் அவர்தான். முதல் நாவல்களில், அவர் மகள் லிண்டா அவருடன் பேசவும் விரும்புவதில்லை. லிண்டாவை வலாண்டர் நெருங்க முயற்சித்தாலும் லிண்டா விலகியே செல்கிறார்.

henning20mankell20-20man20who20smiledபதின்ம வயதில் லிண்டா எல்லா கட்டுப்பாடுகளையும் வெறுத்து, மனம் போன போக்கில் செல்கிறார், தற்கொலைக்கும் முயல்கிறார். தொடரின் போக்கில் வயதாகி, அவரும் காவல்துறையில் சேர்ந்து ஒரு நாவலில் வலாண்டருடன் பணி புரிகிறார். ரீபஸ் தொடரைப் போலவே இதிலும், பத்திரங்களுக்கு வயதாவது (real time ageing) உள்ளது. லிண்டாவை முக்கியப் பாத்திரமாக கொண்டு இன்னொரு தொடரை எழுத மான்கெல் எண்ணி இருந்தார். ஆனால் ஒரு சோகமான நிகழ்வால் அந்த முதல் நாவலுடன் நிறுத்தி விட்டார். வலாண்டர் நாவல்கள் தொலைகாட்சி தொடராக வந்தபோது லிண்டாவாக நடித்தவர் தற்கொலை செய்துகொண்டது மான்கெல்லை பாதித்தது. புனைவும் நிஜமும் கலந்துவிட்ட அந்த துயர சம்பவம் குறித்து மான்கெல் கூறும்போது, “ஒருவகையில் அப்பாத்திரத்தை மேலும் தொடர்வது சரியில்லை என்று தோன்றியது. அது ஒரு சோகமான சம்பவம், எனக்கு இன்னும் புரிபடாத ஒன்று. க்ரிஸ்டர் ஹென்ரிக்ஸொன் [வலாண்டரின் பாத்திரத்தை ஸ்வீடிஷ் தொலைக்காட்சித் தொடரில் ஏற்றவர்] என்னோடு தொலைபேசியில் பேசியபோது அந்தச் செய்தியை அறிந்தேன். அவர் ஒரு நாள் விடிகாலையில் கூப்பிட்டார். நம்ப முடியாதபடி வினோதமாக இருந்தது. யார் பேசுகிறார், வலாண்டர்தான் கூப்பிடுகிறாரா அல்லது அந்த நடிகரா? இது உண்மையா இல்லை புனைவா? எனக்கு அப்போது புரிபடவில்லை.”

வலாண்டருக்கும் அவர் தந்தைக்குமான உறவும் வித்தியாசமானது. அவர் தந்தை ஒரு ஓவியர், தொடரின் ஆரம்பத்தில் அவரும் ஏதோ ஒரு காரணத்தால் வலாண்டருடன் பேசக்கூட விரும்புவதில்லை. பின்னர் அவர் வலாண்டர் காவல்துறையில் சேர்ந்ததை விரும்பவில்லை என்று தெரிய வருகிறது. அவர் தன் அரசியலால் காவல்துறை, ராணுவம் போன்றனவற்றுக்கு எதிர்ப்பாளர். பிற்பாடு முதுமையில் அவர் ஆல்ட்ஸைமர் நோயால் (படிப்படியாக நினைவுகளை இழக்கும் நோய்) பாதிக்கப்படுகிறார், ஒரே ஓவியத்தையே (landscape) மீண்டும் மீண்டும் வரைகிறார். தொடரும் நாவல்களில் இருவரின் உறவு சற்று மேம்படுகிறது, இருவரும் சேர்ந்து அவர் தந்தை மிகவும் போக விரும்பிய சுற்றுலா இடத்திற்கும் செல்கிறார்கள்.

வலாண்டர் வாழ்க்கையில் பெண்கள் அதிகம் இல்லை. மனைவி பிரிந்த பிறகு சில மேம்போக்கான உறவுகள் ஏற்படுகின்றன அவ்வளவுதான். ரீகாவின் நாய்கள் (The Dogs Of Riga) நாவலில் அவர் சந்திக்கும் ஒரு பெண்ணோடு மட்டும் சற்று ஆழமான உறவு ஏற்படுகிறது, அதுவும் சில காலத்தில் முடிந்துவிடுகிறது. முதல் சில நாவல்கள் தவிர்த்து அவர் தனியாளாகவே உள்ளார். பெண்களிடம் சற்று கடினமாக நடந்து கொள்பவர் வலாண்டர்.

தொடரின் மற்ற பாத்திரங்கள் குறித்துச் சொல்ல அதிகமில்லை. அதற்காக வலாண்டர் தவிர்த்து மற்ற பாத்திரங்கள் நன்றாக வார்க்கப்படவில்லை என்று சொல்ல முடியாது. இப்படிச் சொல்லலாம், ரீபஸ் தொடரில், ரீபஸ்,சியோபன் இருவர் பார்வையிலும் நாவல் நகரும்; அது போலவே டோனி ஹில்/ஜோர்டான் மற்றும் மோர்ஸ்/லெவிஸ் தொடர்கள். மேலும் மற்ற பாத்திரங்களின் எண்ண ஓட்டங்களும் நமக்கு சற்று தெரியவரும்.

ஆனால் மான்கெல் இந்த நாவல்களை வலாண்டர் பார்வையிலேயே நடத்திச் செல்கிறார். எனவே வலாண்டர் என்ன பார்க்கிறாரோ, உணர்கிறாரோ அதுதான் நமக்குத் தெரிய வருகிறது. உதாரணமாக அவர் குழுவில் ஒரு பெண் அதிகாரியும் உள்ளார். அவர் திருமணமாகி, குழந்தைகள் உள்ளவர். அவர் வேலையால் குடும்பத்தில் பிரச்சினைகள் ஏற்படுவதாக வலாண்டர் யூகிப்பதாகத்தான் நாவல்களில் உள்ளது, உண்மையில் அவருக்கு என்ன பிரச்சனை? முதலில் பிரச்சினை உள்ளதா? அவரின் எண்ணங்கள் என்ன என்று நமக்கு தெரிவதில்லை. இது மான்கெல் எடுத்துக்கொண்டுள்ள கதை கூறல் முறையின் (narrative style) பக்க விளைவு. இதை இப்படியும் பார்க்கலாம், நம்மில் எத்தனை பேருக்கு நம்முடன் பணியாற்றுபவர்களைப் பற்றி நிறைய தெரியும், அவர்களுடனேயே அதிக நேரம் செலவழித்தாலும் பெரும்பாலும் அலுவலகத்தை விட்டு வந்தவுடன் அந்த உறவு முடிந்து அடுத்த நாள் காலையில்தான் மீண்டும் துவங்குகிறது அல்லவா? இதற்கு கண்டிப்பாக விதிவிலக்குகள் இருக்கும், நான் கூறுவது பொதுவாக நடப்பது. இதை வலாண்டரே ஒரு நாவலில் எண்ணிப்பார்க்கும்படி, சம்பவங்கள் நடக்கின்றன.

இதுவரை நாம் பார்த்த பாத்திரங்களில், நிஜத்துக்கு மிக அருகில் இருக்கும் பாத்திரம் வலாண்டர்தான். மற்ற பாத்திரங்களிலும் சாதக பாதக அம்சங்கள் இருந்தாலும் ஒப்பீட்டளவில் வலாண்டர் அளவுக்கு வேறு யாரும் நமக்கு அருகில் வருவதில்லை. ‘வலாண்டர்’ ஸ்வீடனில் மிகப் பிரபலம். இது குறித்து ஒரு சுவாரஸ்யமான நிகழ்வை முதலில் பார்த்துவிடலாம்.

மான்கெல், புகழ் பெற்ற இயக்குனரான இங்மார் பெரிமானின்(Ingmar Bergman) மகளை மணந்துள்ளார். ஸ்வீடனிலும், உலகளவிலும் புகழ் பெற்ற பெரிமான் வலாண்டர் பற்றி தன்னிடம் இப்படி கூறியதாக மான்கெல் சொல்கிறார்.
”என் மாமனார் இங்மார் பெரிமான் இறப்பதற்குச் சில வருடங்களுக்கு முன் அவருடன் பேசியது ஒன்று நினைவுக்கு வருகிறது. அப்போது அவர் சொன்னார், “அந்தப் பாழாய்ப்போன வலாண்டருக்கு என்னை விட கியாதி கூட இருக்கிறது!”

1999 இல் வலாண்டர் கதைகள், த பிரமிட் (The Pyramid) என்ற சிறுகதைத் தொகுப்பாக வெளிவந்தன – இந்த தொடரின் ஒரே சிறுகதைத் தொகுப்பு இது. பத்து வருடங்கள் கழித்து 2009இல் துன்பத்திலுள்ள மனிதன் (The Troubled Man) என்ற இந்த தொடரின் அடுத்த நாவலை எழுதினார். (மேலே நாம் பார்த்த நடிகையின் தற்கொலையும் இந்த இடைவெளிக்கு ஒரு காரணம்) இந்த நாவலின்போது வலாண்டருக்கு வயது அறுபதாகி விடுகிறது. அவரும் தன் தந்தை போன்று ஆல்ட்ஸைமர் நோயால் பாதிப்படையலாம் என்று குறிப்பால் உணர்த்தப்படுகிறது.

இது தான் இந்த தொடரின் கடைசி நாவல் என்று மான்கெல் கூறியுள்ளார். தன்னுடைய சொந்த வாழ்விலிருக்கும் பயமே இத்தகைய முடிவுக்கு காரணம் என்று மான்கெல் கூறி உள்ளார். ‘என் வாழ்வில் கலையோடு நிஜ வாழ்க்கை அடிக்கடி மோதுகிறது. எனக்கு சாவைக் கண்டு பயமில்லை, ஆனால் ஒரு நாள் காலை விழிக்கையில் என் புத்தி தன் கருக்கை இழக்கத் துவங்கி விட்டது என்று காண்பதைக் குறித்து நான் அடிக்கடி கவலைப்படுகிறேன். அதனால் எனக்குப் பதிலாக வலாண்டரை ஆல்ட்ஸைமர் நோயுலகில் நுழைய விட்டிருக்கிறேன்.”

பின்குறிப்பு:

1. நாவல்கள் வெளியான வருடத்தை சொல்லும்போது மூல மொழியில் வெளியான வருடத்தை குறிப்பிட்டுள்ளேன்.

2. தமிழ் நாட்டிற்கும் மான்கெல்லும் ஒரு சம்பந்தம் உண்டு. கையோடு கை (Hand in Hand) என்ற இலாப நோக்கற்ற அமைப்பு (NGO) நெல்வேலி என்ற கிராமத்தை தத்தெடுத்து அங்குள்ள பெண்களுக்கு பலவகையில் உதவுகின்றது. இந்த திட்டத்தை மான்கெல் ஸ்பான்சர் செய்திருக்கிறார். இது இன்னும் தொடர்கிறது என்று நினைக்கிறேன்.

3. மகாபாரதம் தன்னை மிகவும் பாதித்துள்ளதாக கூறும் இவர், கிரேக்க நாடகமான மீடியா(Medea) மற்றும் இந்தியாவின் மகாபாரதத்தை சிறந்த குற்றப் புனைவுகளாக கருதுகிறார்.

4. இந்த தொடர் நாவல்கள் ஸ்வீடனில் மட்டுமின்றி, பிபிசியாலும் தொலைக்காட்சி தொடராக எடுக்கப்பட்டுள்ளன.