மகரந்தம்

வருங்காலத்தில் உணவுப் பஞ்சத்தை எப்படி கையாளப் போகிறோம்?

தட்ப வெப்பநிலை மாற்றங்கள் என்ற சொல் (Climate Change) இன்று ஒருபுறம் அறிவியலாகவும், மறுபுறம் கருத்தியலாகவும் (Ideology) பார்க்கப்படுகிறது. மரபணுக்களை சோதனைச்சாலையில் மாற்றித் தயாரிக்கப்படும் தானிய/ காய்கறிகளைப் பயன்படுத்துவதை ஒரு சாரார் அறிவியல் முன்னேற்றம் என்றும், இன்னொரு சாரார் அது வணிகம் செய்யும் பம்மாத்து, பாரம்பரியமாக மனித குலம் உருவாக்கிய விதைகளின் தொடர்ச்சியை அறுத்துச் செய்யும் அறியாமையில் விளையும் விபரீதம் என்றும் பார்க்கிறார்கள்.

இங்கு ஒரு கட்டுரையில் அறிவியல் அணுகல் என்பது தட்ப வெப்ப நிலைகளில் ஏற்பட்டு வரும் மாறுதலால் உலகெங்கும் வரப்போகிற பெரும் உணவுப் பஞ்சத்தைச் சமாளிக்க வெறும் மரபணு மாறுதலால் கிட்டும் விதைகளை மட்டும் நம்பிப் பயனில்லை. நாம் இன்னும் என்னென்னவோ விதங்களில் நம் உணவு உற்பத்தி முறையை மாற்ற வேண்டும் என்று எழுதுகிறார் ஒரு அறிவியலாளர். குறிப்பாக தொழில்முறையில் விதைகளை உற்பத்தி செய்து விற்கும் நிறுவனங்களை நம்பிப் பலனில்லை. நாம் மொத்த விவசாய முறைகளை மாற்ற வேண்டும் என்கிறார். என்ன மாறுதல் என்றுபார்த்தால், மேற்கில் பல பத்தாண்டுகளாகப் பயன்படுத்தப்படும் பெரும் தொழில் முறை விவசாயம் (Industrial agriculture) கைவிடப்பட்டு, மாற்று முறைகள் கொணரப்பட்டு விவசாயம் சூழலியல் கண்ணோக்கில் நடத்தப்பட வேண்டும் என்கிறார்.

தொழில்முறைப்பட்ட விவசாயம் குறைப்பார்வையோடு பரந்த வகைகள் கொண்ட விவசாயத்தை மிகச் சில வகைகளான விதைகளில் குறுக்கி நாசத்தைக் கொணரவிருக்கிறது. நாம் பாரம்பரிய விவசாயத்தை முற்படுத்தி பன்முகப்பட்ட விளைச்சல் முறைகளைக் கொணர்வது மிக மிக அவசியம் என்று வாதிடுகிறார். இந்தியாவின் பாரம்பரிய விவசாயிகள் வெகு காலமாக இதைச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நகரத்தின் அறிவாளர்கள் அவர்களை இளக்காரமாகப் பார்த்து இந்திய விவசாயத்தை பெருமளவு நாசம் செய்திருக்கிறார்கள். இனியொரு தலைமுறை எழுந்து வந்து இந்திய விவசாயப் பாரம்பரியத்தைப் புதுப்பிக்க வேண்டும். செய்வார்களா? செய்வோமா?

http://www.slate.com/articles/technology/future_tense/2012/04/heat_resistant_seeds_ecological_agriculture_growing_food_after_climate_change_.single.html

-o00o-


புத்தக வரிசை பத்து

வலை உலகு பெரிதாகப் பெரிதாக, உலகெங்கும் மக்களின் குரல் முன்னெப்போதும் இல்லாத அளவு பொதுவில் கேட்கத் துவங்கி இருக்கிறது. இன்னமும் வலை வெளி அனைத்து மக்களின் குரல் ஒலிக்கும் இடமாக ஆகவில்லை என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். எப்படியுமே எழுதத் துவங்குபவர்கள், அல்லது துணிபவர்கள் எந்த ஜனத்திரளிலும் குறைவான எண்ணிக்கையானவர்களாகத்தான் இருப்பார்கள். கடிதம் எழுதவே நம்மில் பலர் யோசிப்பவர்கள். ஆனால் இப்போது பத்திரிகை அலுவலகத்தில் இருக்கும் பல ஊழியர்களோ, தொலைக்காட்சி/ சினிமா/ வானொலி நிலையங்களில் உள்ள ஊழியர்களோ, பிரசுரங்களில் உள்ள பதிப்பாளர்களோ இடையில் இருந்து தொல்லை செய்யாத வெளி இது. அதே போல அரசியல் கட்சிகளின் அடுக்கு அமைப்புகளோ, பல தன்னார்வக் குழுக்களில் உள்ள பலவகை சமூகக் குழு அரசியலோ தடையாக இல்லாத வெளி இது. அனேகமாக, வலையில் உலவத் தேவையான சில கருவிகள், வலைத் தளங்களுக்குப் போகத் தேவையான தொடர்பு வசதி, கொஞ்சம் மின் சக்தி இருந்தால் எவரும் கதை/ கட்டுரை/ நாடகம்/ கவிதை எழுதுபவராகப் பொதுவில் உலவலாம். படமெடுப்பவராக, க்ராஃபிக்ஸ் ஓவியராக,  நடிகராக, ஏன் சினிமாப்படம் தயாரிப்பவராகக் கூட வெளிப்படலாம்.

இந்த வகை பரவலான வசதியை ஜனநாயகப்படுத்தப்படும் பொது அரங்கு என்று சமூகவியலாளர்கள் வருணிக்கிறார்கள்.  இது எத்தனைக்கு ஜனநாயகத்தை வளர்க்கிறது என்பது சந்தேகத்துக்கு உரியது. பெரிய  சக்திகளாக வளர பயங்கரவாதிகள், கொரில்லாப் படையினர், மதவெறியர்கள், இனவெறியர்கள் போன்றாரும், பல நாடுகளின் உளவு அமைப்புகளும், அரசியல் சதிகாரர்களும், திருடர்கள், மோசடிக்காரர்கள், பாலுறவுகளில் வக்கிரத்தை நாடுபவர்கள், ஏமாற்றி அழிக்க நினைப்பவர்கள் என்று மனித  குலத்துக்கு உரிய அனைத்து இருண்ட சக்திகளும் இதே பொது வெளியில் உலவுகிறார்கள் என்பதைப் பார்க்க நம் குலத்தால் எதையும் நல்லதாக விட்டு வைக்க முடியாது என்பது புலனாகிறது.

ஒரு சற்றே விசித்திர விளைவு. பலவகைப் பட்டியல்கள் வலையில் எங்கும் கிட்டுவது. 10 சிறந்த புத்தகங்கள், 10 சிறந்த சினிமாக்கள், பாட்டுகள் என்று பலவகைப் பட்டியல்கள் வலையில் கிட்டுகின்றன. குறிப்பாக இங்கிலீஷில் இத்தகைய பட்டியல்கள் ஏராளம்.  இங்கு ஒரு தளம் பல எழுத்தாளர்களைக் கேட்டு அவர்களின் பத்து சிறந்த புத்தகங்களின் பட்டியலைத் தொடர்ந்து பதிப்பிக்கிறது.

http://www.toptenbooks.net/

-o00o-


உலகின் பெரிய வரைப்படப் புத்தகம்

உலக வரைபடப் புத்தகங்களை இனி யார் வாங்கப் போகிறார்கள் என்று எண்ணக் கூடும் நாம். உலகில் பல மூலை முடுக்குகளிலும் பிரபலமாக இருந்த என்சைக்ளோபீடியா புத்தகத்தையே கதவை இழுத்து மூடும் நிலைக்குக் கொணர்ந்து விட்டது டிஜிடல் உலகம். அகராதிகளுக்கும் இதே நிலை இன்னும் சில ஆண்டுகளில் வரலாம். தற்போதைக்கு இன்னும் பெரும் எண்ணிக்கையில் மக்கள் கணினிகளை வீட்டில் வைத்துக் கொள்ள இயலாத நிலையில் உள்ளனர் என்பதால் இந்தப் புத்தகங்களுக்கு ஏதோ கொஞ்சம் மவுசு இருக்கிறது. ஆனால் சமீபத்தில் வெளிவரத் துவங்கி இருக்கும் டாப்லெட் என்னும் சிறு கணினிகள் இந்த ஓய்வான மனநிலைக்கு வேட்டு வைக்கின்றன.

இருந்தாலும் அட்லாஸ் எனப்படும் உலகவரைபடப் புத்தகம் ஒரு அளவாவது பெரியதாக இருந்தால்தான் அதில் ஒரு திருப்தி கிடைக்கும். ஒரு நாட்டை பெரிய புத்தகம் ஒன்றில் படமாகப் பார்க்கையில் நமக்கு ஏதோ மனதில் ஊன்றி விட்டதான நினைவு இருக்கிறது. பல நூறாண்டுகள் முன்பு யாரும் இப்படி ஒரு வரைபட வடிவில் தாம் வாழும் நிலப்பரப்பின் வடிவை அறிந்திருக்க மாட்டார்கள் என்று நாம் யோசிக்கையில் அவர்களுக்கு அதனால்தான் ஒரு நாடு நம்முடையது என்ற பெரும் பற்றுதல் இல்லாது அன்னியருக்குக் கதவு திறந்து வைத்த வகை வாழ்வு வாழ்ந்தனரோ என்று தோன்றலாம்.

ஆக பெரிய புத்தக அட்லாஸுக்கு இன்னும் கொஞ்சகாலம் உயிர் இருக்கிறது என்றுதான் நான் கருதுகிறேன். இதைப் போலத்தான் மிலென்னியம் பிரசுரகர்த்தர்களும் நினைக்கிறார்கள் போலிருக்கிறது. அவர்களுக்குத் தம் இந்த எண்ணத்தின் பேரில் அசாத்திய நம்பிக்கை இருக்கும் போலிருக்கிறது.

அட்லாஸில் இருப்பதில் பெரியது என்றால், ஒரு விரித்த செய்தித்தாள் அளவு பெரியதான அடலாஸைத்தான் நான் இதுவரை பார்த்திருக்கிறேன். அதுதான் அதிக பட்ச சைஸ் எனக்குத் தெரிந்து. பெரும்பாலானவை மடித்த செய்தித்தாள் அளவு அல்லது ஒரு ஆங்கில வாரப்பத்திரிகை சைஸில் இருந்து பார்த்திருப்பீர்கள்.  அதைத் தாண்டி ஒரு சிறிய மேஜை அளவு பெரிய அட்லாஸ்களை பல்கலைக் கழக நூலகங்களில், அல்லது தேசிய நூலகங்களில் ஓரிரு பிரதிகளாக நாம் பார்க்க முடியும். மிலென்னியம் பிரசுரகர்த்தர்களோ தம் அசாத்திய நம்பிக்கையை மூலதனமாகக் கொண்டு ஒரு பிரும்மாண்ட அட்லாஸைப் பிரசுரித்திருக்கிறார்கள். அது ஒரு உயரமான மனிதரை விட உயரம், பருமன். படத்தையும் செய்தியையும் இங்கே பாருங்கள்.

http://www.gizmag.com/earth-platinum-atlas/22149/

-o00o-


கலைத்துவம் மிகுந்த விடுதி

உலகில் என்னென்னவோ இடங்களில் சுற்றுலா போகிறார்கள் மனிதர்கள். 15 வயதில் ஒரு டச்சுப் பெண், உலகத்தைத் தனியாக ஒரு பாய்மரப் படகில் சுற்றி வந்து சாதனை படைத்தாள் சென்ற வருடம். எவரெஸ்ட் மலையின் அடிவாரங்களில் நடுமலையில் எல்லாம் தங்க இடங்கள் உண்டு. அதில் ’வசதியாக’த் தங்கும் அனுபவத்தை மறுபடி மறுபடி உணர எவரெஸ்ட் மலையைச் சில முறை ஏறிப் பார்த்த நபர்கள் இருக்கிறார்கள். காடு, மலை, கடல்புறம், பாலைவனம்- மனித எறும்பு ஊர்ந்து போகாத இடமே இல்லை. சமீபத்தில் ஜேம்ஸ் காமெரான் எனப்படும் திரை இயக்குநர் (ஏலியன், டைடானிக், த அபிஸ், அவதார் போன்ற படங்களின் இயக்குநர்) தமக்கு ஆழ்கடலின் மீது உள்ள பேரபிமானத்தை ஒட்டி பலப் பல மைல்கள் கடலின் அடி ஆழத்துக்கு ஒரு நீர்மூழ்கிக் கப்பலில் செல்லத் துணிந்திருக்கிறார். இதுவரை மனிதர் செல்லாத ஆழங்களுக்குச் சென்று ஒரு சாதனை படைத்திருக்கிறார். ஆனால் இன்னும் பசிஃபிக் மகாசமுத்திரத்தின் அடித்தளத்தை குவாம் என்கிற தீவுக்கருகில் உள்ள இடத்தில் அவர் எட்டி விடவில்லை. அதை எட்ட முடியுமா என்பது அவருக்கே தெரியாது. அந்தக் கப்பல் அத்தனை அழுத்தத்தைத் தாங்குமா என்பதும் கேள்விக்குரியது. படிப்படியாக இந்த மூழ்குதலைச் சாதிக்கவிருக்கிறார் இந்தக் கனடியர் (கனடா நாட்டைச் சேர்ந்தவர்.).

கடலடியில் பயணிகள் தங்க விடுதிகள் கட்டுவது பற்றிப் பல நிறுவனங்கள் ஏற்கனவே யோசிக்கத் துவங்கி இருக்கின்றன. விண்வெளிப் பயணத்தை மலிவாக்கி ஏராளமான மனிதர்கள் விண்வெளியில் பயணம் செய்ய ஏற்பாடு செய்யும் வகை வானூர்திகளையும், வானில் விரைந்து செல்லும் மின் தூக்கிகளையும் (Space Elevators) அமைக்கும் வடிவமைப்பாளர்கள் நிறைய பேர் பல நாடுகளில் கனவுகளைக் காகிதங்களில்/ கணினித் திரைகளில் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இவை ஏதும் பலித்தால் மனிதர் விண்வெளியில் தங்க விடுதிகள் கட்ட வேண்டி வரலாம்.

இத்தனை களேபரங்களுக்கு நடுவில் ஜெர்மனியில் பெர்லின் நகரில், ஆம் தலை நகரமான பெர்லினில்தான், ஒரு விசித்திர விடுதியைக் கட்டி இருக்கிறார்களாம். இந்த விடுதியில் சவ அடக்கப் பெட்டிகளில் விருந்தினர்கள் உறங்கலாம். அந்தரத்தில் தொங்கும் கட்டில்களில் படுக்கலாம். சிறைச்சாலை போல கட்டமைக்கப்பட்ட அறைகள் உண்டு. அறையின் மேஜை நாற்காலிகள் எல்லாம் மேல்தளத்தில் பொருத்தப்பட்டு படுக்கை தொங்கலில் இருக்க எல்லாம் தலைகீழாக இருப்பதான பிரமையைக் கொடுக்கும் அறைகள் உண்டு.  இந்த விடுதியின் பலவகை அறைகளின் படங்களை இங்கே பாருங்கள். காமெரான் போன்றார் ஏன் 15 மைல்கள் கடலுக்கு அடியில் போய் விசித்திரங்களைப் பார்க்க விழைகிறார்கள், இங்கேயே மனிதக் கற்பனையிலேயே பார்க்கலாமே என்கிறார்கள் போலிருக்கிறது இந்த விடுதிக்காரர்கள்.

http://www.gizmag.com/worlds-creepiest-hotel/22150/