சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 11

எட்டாவது பகுதி, “இராச பாரம்பரியம்” என்று சோழர்களின் குலமுறை கிளத்தும் படலம். முதலாம் இராசேந்திர சோழனைப் பாடும்போது,

களிறு கங்கை நீர் உண்ண, மண்ணையில்
காய் சினத்தோடே கலவு செம்பியன்
குளிறு வெண்திரைக் குரை கடாரமும்
கொண்டு மண்டலம் குடையும் வைத்ததுவும்

என்று பாடுகிறார். மூண்டு எரியும் சினத்துடன் பொருந்திய செம்பியன், மண்ணை எனும் ஊரில் தன் களிறு கங்கை நீர் உண்ணும்படிச் செய்தான். குளிறு வெண்திரைகள் குறைக்கும் கடாரமும் கொண்டு உலகாளும் தன் குடைக்கீழ் கொணர்ந்தான். களிறு – ஆண் யானை, குளிறு – ஒலி, வெண்திரை – வெள்ளலைகள், குரை – ஆரவாரம்.

ஒன்பதாவது பகுதி, “பேய் முறைப்பாடு”. பேய்களாய் பிறந்து கேட்டோம் என்று தம் குறைகளைப் பேய்கள் காளியிடம் முறையிடுதல். பசியாற்றாமல் வாடும் தம் நிலையைக் காளிக்கு எடுத்துரைத்தல்.

சாவத்தான் பெறுதுமோ, சதுமுகன்தான்
கீழ் நாங்கள் மேனாள் செய்த
பாவத்தால், எம் வயிற்றில் பசியை வைத்தான்
பாவியேம் பசிக்கு ஒன்றும் இல்லேம்.

என்று புலம்புகின்றன. சதுமுகன் – நான்முகன் – பிரம்மா, மேனாள் – முன்னாள்.

பேய்களின் புலம்பலை வாசித்தல் அவர்களின் பசி போக்க ஒரு நிவாரண நிதி ஏற்படுத்தத் தோன்றும்.

காளி சொல்கிறாள், இப்பொழுது நடைபெற இருக்கிற கலிங்கத்துப் போரொன்று முன்பு இலங்கையில் நடந்த இராம – இராவண யுத்தத்தைவிட இரண்டு மடங்கு வலியதாகும். அங்கு நீங்கள் பசியாறலாம் என.

பத்தாவது ‘அவதாரம்’ எனும் பகுதி. இதில் கண்ணனே குலோத்துங்கனாக வந்து பிறந்த மாட்சி பேசப்படுகிறது.

பண்டு வாசுதேவன் மகனாகி நிலமாதின்
படர்களையும் மாயன் இவன் என்று தெளிவு எய்தத்
தண்டு, தனு, வாள், பணிலம் நேமி எனும் நாமத்
தன் படைகள் ஆன ஐம்படை தரித்தே.

என்கிறது ஒரு பாடல். முன்பு வாசுதேவன் மகனாகி, நிலமகளின் இடர் கலைந்த மாயன் இவன்தான் என்ற தெளிவிற்காக, தன் படைகள் ஆகில் தண்டு, வில், வாள், சங்கு, சக்கரம் என்பனவற்றை ஐம்படைத் தாலியாகத் தரித்தான் குலோத்துங்கன் என்பது பொருள்.

சினப்புலி வளர்ப்பதோர் சிறுப்புலியும் ஒத்தே
திசைக்களிறு அணைப்பதோர் தனிக்களிறும் ஒத்தே.

என்பது ஒரு பாடல். சினம் பெருகிய, சீற்றமுடைய புலி வளர்க்கும் ஒப்பற்ற புலிக்குட்டியைப் போலவும், திசை யானை அணைத்து வளர்க்கும் தனிக்களிறு போலவும் எனக் குலோத்துங்கனைச் சிறப்பிக்கிறார் செயங்கொண்டார்.

ஏற்கனவே சொன்னோம், செயங்கொண்டார் கவிச்சக்கரவத்தி என. அது ரசிகர் மன்றங்கள் பெரும்பணம் வாங்கிக் கொண்டு ஏற்பாடு செய்து கொடுத்த பட்டம் அல்ல. ஆன்றறிந்த அவையில் நூல் அரங்கேற்றி, பெரும் புலவர்களின் ஒப்புதல் பெற்று, நாடாளு மன்னன் வழங்குவது. கற்பனைக்கும், சந்தத்துக்கும் கவியழகுக்கும் ஜெயம்கொண்டான் உண்மையில் செயங்கொண்டார். ஒரேயொரு பாடல் கவனியுங்கள்.

பொருநராதிபர் கண்கள் சிவந்திய
போரில் ஓடிய கால்கள் சிவந்தன
விருதராச பயன்கரன் செங்கையில்
வேல சிவந்தது, கீர்த்தி வெறுத்ததே!

குலோத்துங்கனோடு பொருதும் மன்னர்களின் கண்கள் கோபத்தினால், மறத்தினால் சிவந்தன எனச் சொல்ல இயலாது. ஆனால் போரில் தோற்றோடிப் போய் கால்கள் சிவந்தன. விருதராச பயங்கரன் என்று பட்டம் பெற்ற குலோத்துங்கன் செங்கையில் வேல் சிவந்தது. அவன் கீர்த்தி வெறுத்து ஒளி வீசியது என்பது உரை.

குலோத்துங்கன் முடிபுனையும் காட்சிளை விளக்கும் ஒரு பாடல்.

அறைகழல் அரசர் அப்பொழுது
அடிமிசை அறுகு எடுத்திட
மறையவர் முடி எடுத்தனர்
மனுநெறி தலையெடுக்கவே!

ஒலி எழுப்பும் கழல்கள் அணிந்த அரசர் அப்பொழுது குலோத்துங்கன் கால்களில் அருகம்புல் எடுத்து வைத்து வாழ்த்தினார்கள். மறையவர் தலையில் சூடும் மணிமுடி எடுத்தனர், மனுநெறி தலையெடுக்கும்படியாக, என்பது பொருள்.

குலோத்துங்கன் வெற்றிச் சிறப்பு பேசும் பாடல் ஒன்று.


கெண்டை, மாசுணம், உவணம், வாரணம்
கெழல், ஆளி, மாமேழி, கோழி, வில்
கொண்ட ஆயிரம் கொடி நுடங்கவே,
குமுறு வேம்புலிக்கொடி இலங்கவே

கெண்டை மீன், பாம்பு, கருடன், யானை, பன்றி, சிங்கம், கலப்பை, கோழி, வில் எனும் சின்னங்கள் கொண்ட ஆயிரக்கணக்கான கொடிகள் அசைய, முழங்கும் வெம்புலிக்கொடி யாவற்றுக்கும் மேலாக இலங்கிற்று என்பது பொருள். இவற்றுள் எந்த மன்னருக்கு எந்தச் சின்னம் என்பதைக் கல்லூரி தமிழ்த்துறைத் தலைவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளலாம்.

நாட்டுவளம் பாடுவது போல், அழகுப் பெண்டிருக்கு உவமை சொல்கிறார் புலவர்.

எங்கும் உள மென் காதலி, எங்கும் உள
தண் கமுகம், எங்கும் உள பொங்கு இளநீர்,
எங்கும் உள பைங் குமிழ்கள், எங்கும் உள
செங்குமுதம், எங்கும் உள செங்கயல்கள்.

இவற்றுள் மென்கதலி எனும் வாழை மரம், தொடைக்கும், தண்கமுகம் எனும் தணுத்த பாக்கு மரம் கழுத்துக்கும், பொங்கு இளநீர் முலைக்கும், பைங்குமிழ்கள் எனும் குமிழம்பூ மூக்குக்கும், செங்குமுதம் எனும் செவ்வம்பல் வாய்க்கும், செங்கயல்கள் எனும் மீன்கள் கண்களுக்கும் உவமையாகும்.

nn2

பகுதி பதினொன்றில் கலிங்க நாட்டில் இருந்து வந்த கூனிப்பேய், காளிக்கு போர்க்களக் காட்சிகளை விவரிக்கின்றது-

அகில வெற்பும் இன்று ஆணை ஆனவோ!
அடைய மாருதம் புரவி ஆனவோ!
முகில் அனைத்தும் அத்தேர்கள் ஆனவோ!
மூரி வேலை போர் வீரர் ஆனவோ!

எல்லா மலைகளும் இன்று யானை ஆனவோ! அடைய வரும் காற்று புரவி ஆயினவோ! மேகங்கள் அனைத்தும் தேர் ஆனவோ!வலிய கடல் போர் வீரர் ஆனவோ! எனும் வியப்பு. அத்துடன் நில்லாது

பார் சிறுத்தலால் படை பெருத்ததோ-
படை பெருத்தலால் பார் சிறுத்ததோ

எனும் கற்பனை.

பிற்காலத்தில் நம் ஆள் எவனும் –

இடை சிறுத்தலின் முலை பெருத்ததோ
முலை பெருத்தலின் இடை சிறுத்ததோ

என வண்டி ஓட்டி இருக்கிறானா என்பதையும் நாம் தேட வேண்டி இருக்கும்.

குலோத்துங்கள் படைகளில் நடந்து செல்லும் யானைகள் பேசப்படுகின்றன.

கடல்களைச் சொறி மலையுள என இரு
கட தடத்தினைப் பொழி மதம் உடையன;
கனல் விளைப்பன முகிலுள் என விழி
கனல் சினத்தன; கரியொடு பரிகளின்
உடல் பிளப்பன பிறை சிலவுள என
உயர் மருப்பின்; உலகுகள் குலைதர
உகும் இடிப்பன வட அனலுள என
ஒலி முழங்கின கரிகளும் மிடையவே!

குலோத்துங்கன் படைகளில் நெருங்கி நடக்கும் யானைகள், கடல் நீரைப் பொழிகின்ற மலைகளைப் போல் மதம் பொழிகின்ற இரண்டு கன்னங்களை உடையன. நெருப்புப் பிறக்கும் மேகங்கள் என அவற்றின் விழிகளில் இருந்து கனல் பிறந்தன. பகைவரது யானைகளின், குதிரைகளின் உடல்களைப் பிளப்பன போன்று பிறைச் சந்திரனை ஒத்த இரு தந்தங்களை உடையன. உலகம் நடுங்கவும் வடவைக் கனல் போன்றும் முழங்கும் ஒலி எழுப்பின.

குலோத்துங்கன் படை நடந்தபோது கடந்த ஆறுகளைப் பாடுகின்றன மூன்று பாடல்கள்.

பாலாறு, குசந்தலை, பொன்முகரிப்
பழ ஆறு. படர்ந்து எழுகொல்லி எனும்
நாலாறும் அகன்று, ஒரு பெண்ணை எனும்
நதி ஆறு கடந்து, நடந்து உடனே
வயலாறு புகுந்து, மணிப்புனல் வாய்
மன்னாரு, வளம் கெழு குன்றி எனும்
பெயயாறு, பரந்து நிறைந்து வரும்
பேர் ஆறும் இழிந்தது, பிற்படவே
கோதாவரி நதி மேலாறொரு, குளிர்
பம்பா நதியொடு, சந்தப் பேர்
ஒதாவரு நதி, ஒரு கோதமையுடன்
ஒளிநீர் மலிதுரை பிறகு ஆக.

ஈங்கு பேசப்பட்ட ஆறுகளாவன: பாலாறு, குசைத்தலை ஆறு, பொன்முகரி ஆறு, கொல்லி ஆறு, வடபெண்ணை ஆறு, மண்ணாறு, குன்றி ஆறு, கிருஷ்ணை ஆறு, கோதாவரி ஆறு, பம்பா நதி, காயத்ரி ஆறு, கௌதமி ஆறு, கோடி பலி ஆறு என்பன.

‘வண்டினுகும் திசையானை மதம் கொடுக்கும்’ என்றொரு அற்புதமான வரி உண்டு. வண்டினங்களுக்கு திக்கு யானைகளுடைய மதநீரை உண்ணக்கொடுக்கும் எனும் பொருளில்.

பன்னிரண்டாம் பகுதி, ‘போர் பாடியது’. உலக இலக்கியங்களில் இத்தகு வன்மையான போர்க்களக் காட்சியை எவரும் பாடியுள்ளனரா எனக் கற்றவர் நவிலக் கூடும். அற்புதமான சந்தத்தில் போர்க்களக் காட்சிகள் பாடப் பெறுகின்றன.

எறிகடலொடு கடல் கிடைத்தபோல்
இரு படைகளும் எதிர் கிடக்கவே;
மறி திரையொடு திரை மலைத்த போல்
வரு பரியொடு பரி மலைக்கவே;
கனவரையொடு வரை முளைத்த போல்
கடகரியொடு கரி முனைக்கவே;
இனமுகில் முகிலோடும் எதிர்த்தபோல்
இரதமொடு இரத்தமும் எதிர்க்கவே,
பொருபுலி புலியொடு சிலைத்த போல்
பொரு படரொடு படர் சிலைக்கவே
அரியினொடு அரியினம் அடர்ப்ப போல்
அரசரும் அரசரும் அடர்க்கவே

பொருதுதலுக்கு என எத்தனை சொற்கள் பாருங்கள்! கிடைத்த, மலைத்த, முனைத்த, எதிர்த்த, சிலைத்த, அடர்ப்ப/… உண்மையில் இம்மொழியின் வளம் கர்வம் ஏற்படுத்துகிறது.

கலிங்கப் போரில் குருதி ஆறுபோல் வெளி பரந்து பாய்ந்தது. பகையரசர்களின் குடைகள் வெண்மையான நுரைகள் போல் மிதந்தன. வெட்டுப்பட்ட யானைகளின் உடல்கள், குருதியாற்றின் கரைகள் போலக் கிடந்தன.

குருதியின் நதி வெளி பரக்கவே,
குடை இனம் நுரை என மிதக்கவே
கரி துணி படும் உடல் அடுக்கியே
கரை என இரு புடை கிடக்கவே.

போர் தீவிரமாகும்போது கவிதைச் சந்தம் மாறுகிறது.

இட்ட வட்டணங்கள் மேல்
எறிந்த வேல் திறந்த வாய்
வட்டம் இட்ட நீள் மதிற்கு
வைத்த பூழை ஒக்குமே!
கலக்கம் அற்ற வீரர் வாள்
கலந்த சூரர் கைத்தலத்து
உலக்கை உச்சி தைத்த போது
உழும் கலப்பை ஒக்குமே!
மத்த யானையின் கரம்
சுருண்டு வீழ, வன்சரம்
தைத்த போழ்தின், அக்கரங்கள்
சக்கரங்கள் ஒக்குமே!
வெங்களிற்றின் மத்தகத்தின்
வீழும் முது, வீரமா
மன்கயர்க்கு மங்கலப்
பொறி சொரிந்தது ஒக்குமே!

என எழுதிக் கொண்டே போகலாம்.

பதின்மூன்றாவது, ‘களம் பாடியது’. களம் எனில் போர்க்களம். இரண்டு பாடல்கள் மட்டும் சொல்ல உத்தேசம்.

தரமகளும் தன் கொழுநன் உடலம் தன்னைத்
தாங்காமல் தன் கரத்தால் தாங்கி, விண்ணாட்டு
அரமகளிர் அவ்வுயிரைப் புணரா முன்னம்
ஆவி ஒக்க விடுவாளைக் காண்மின் காண்மின்!

தனது கணவனின் இறந்த உடலை நிலமகள் தாங்க அனுமதிக்காமல், தன் கரத்தால் தாங்கி, உயிர் விட்ட கணவன் உயிரைத் தேவ மகளிர் புணர்வதற்கு முன்பே, தன் உயிரையும் உடனே விடும் மனையாளைக் காண்மின், காண்மின்!

எல்லோரும் மேற்கோள் காட்டுகிற இன்னொரு அற்புதப் பாடல்:

பொரு தடக்கை வாள் எங்கே? மணி மார்பு எங்கே?
போர் முகத்தில் எவர் வரினும் புறங்கோடாத
பருவயிரத் தோள் எங்கே, எங்கே என்று
வயிரவியைக் கேட்பானைக் காண்மின், காண்மின்!

போர்க்களத்தில் வீர மரணமுற்றுக் கிடக்கிறான் வீரன். அவனைத் தேடி வருகிறாள் மனையாள். தலை மட்டும் கிடக்கிறது. பைரவி எனும் பெண் தெய்வம் ஒன்று போர்க்களத்தில் இருந்தது. அவளைப் பார்த்து மனைவி கேட்கிறாள்- பொரு தடக்கை வாள் எங்கே? மணி மார்பு எங்கே? போர் முகத்தில் எவர் வரினும் புறம் கொடாத பருவயிரத் தோள் எங்கே? எங்கே?

பதினான்காவது பகுதி ‘கூழ் அடுதல்’. பேய்கள் காளிக்கு கூழ் சமைத்துப் படைத்து வழிபடுதல் விவரிக்கப் படுகிறது. இதை வாசிப்பதும் பாராட்டி எழுதுவதும் எனக்கு இயல்பான காரியங்கள் இல்லை. மாதிரிக்காக, உரைநடையில் சில சொல்கிறேன்.

“பேய்களே, வெண்மையான யானைக் கொம்புகளைப் பறித்துப்பல் விளக்கிக் கொள்ளுங்கள். ஆண்யானைகளின் விலா எலும்புகளைப் பறித்து நாக்கு வழியுங்கள். அம்புகளை எடுத்து உங்கள் கூரிய, அழுக்கேறிய நகம திருத்துங்கள். யானையின் மதநீரைத் தலையில் எண்ணெயாகப் பூசுங்கள். வெண்மூளை ஆகிய களிமண்ணால் கூந்தலை அலசிக் கழுவுங்கள். குருதித் தடாகத்தில் கூட்டமாகப் பாய்ந்து மூழ்கி நீந்தி விளையாடுங்கள்.

“கலிங்க வீரர்களுடைய கொழுப்பை விரித்து ஆடையாக உடுத்திக் கொள்ளுங்கள். யானைகளுக்குத் தந்தத்தில் அணிவிக்கும் பூண்களைக் கை வளையல்களாக அணியுங்கள். குதிரைகளின் கால்மிதிகளைக் காலணியாகக் கொள்ளுங்கள். போர்வீரர்கள் பயன்படுத்தும் வளைந்த தடிகளைக் காதணியாக, யானைகளின் துதிக்கைகளைக் காப்புக் கயிறாக, குதிரைகளின் கவிந்த குளம்புகளைத் தோள் வளையாகச் சூடுங்கள். சினம் கொண்டு போர் புரிந்த வீரர்களின் கண்மணிகளைக் கோது வன்னசரமாக அணிந்து கொள்ளுங்கள்.”

இப்படிப் போகிறது கொண்டாட்டம்.

சமையலறை மெழுகுதல், கோலமிடல், அடுப்பு கூட்டுதல், பானை, உண்பொருட்கள், உப்பு, காயம், பூண்டு, தீ மூட்டல், விறகு, பழைய அரிசி, அரிசி குத்தும் உரல், அரிசி புடைத்தல், அரிசி அளத்தல், உலையில் இடல், துடுப்பு, அகப்பை, கூழை உப்பு பார்த்தல், கிண்டுதல், பதம் பார்த்தல், பானை பிடித்து இறக்குதல், உணவுக்கு முன் நீர் வைத்துக் கொளல், கூழ் உண்ணும் பாத்திரங்கள், அகப்பைகள்…

மேற்சொன்னதனைத்தும் ஆவது யானை, குதிரை, வீரர் பிணங்கள், மூளை, குடல், குருதி, பற்கள, நகங்கள்… கலிங்க வீரர்களுடைய பற்களைத் தகர்த்து எடுத்ததுதான் பழைய அரிசி. கொல்லப்பட்ட யானைகளின் தந்தங்கள் உலக்கை. வீரர்களின் மூளை குளிர்ந்த தயிர்….

எழுதிப் பகர்தல் என்னால் ஆகாது ஐய!

இந்தக் கூழை மடைபேய்கள் சமைத்து, பார்ப்பனப் பேய், சமணப் பேய், புத்தப் பேய், கங்காணிப் பேய், குருட்டுப் பேய், ஊமைப் பேய், கருவுற்ற பேய், மூடப் பேய், நோக்கப் பேய், கூத்திப் பேய், விருந்துப் பேய், ஊர்ப் பேய், கனாக்கண்டு உரைத்த பேய், கணக்குப் பேய் என பந்தி பரிமாறப்படுகின்றது. செயங்கொண்டார் ஏன் எழுத்தாளப் பேய், சினிமாப் பேய், வாத்தியார்ப் பேய், அரசியல் பேய் யாவற்றையும் விட்டு விட்டார் என்று தெரியவில்லை.

கூழ் உண்டு முடிந்தபின் வெற்றிலை போடுகின்றன பேய்கள். குதிரைகளின் காதுகள் வெற்றிலை, கணைக்கால் குளம்பு பாக்கு, கலிங்க வீரர் கண்கள் சுண்ணாம்பு…

கூழ் மிகுதியாய் உண்டு புறையேறினால் பூதத்தின் சிரசு மயிரை மோந்து பாருங்கள் பேய்களே என்கிறார் கவிஞர். அல்லது டாக்டர் பேயிடம்தானே போக வேண்டும்?

பொன்னித் துறைவனை வாழ்த்தினவே!
பொருநைக் கரியானை வாழ்த்தினவே!
கன்னிக் கொழுநனை வாழ்த்தினவே!
கங்கை மணாளனை வாழ்த்தினவே!

கரிகாலச் சோழனோடு ஒப்பிட்டு குலோத்துங்கனை வாழ்த்துவதுடன் கலிங்கத்துப் பரணி முற்றுப் பெறுகிறது. கவிச் சிறப்பினையும் கற்பனை வளத்தினையும் சனத நயத்தையும் காம வேட்கையையும் தாண்டி எனக்கு வயிற்றைப் புரட்டிக் கொண்டு வருகிறது.

அடுத்து ஒட்டக்கூத்தரின் தக்கயாகப் பரணி பார்ப்போம். அஞ்ச வேண்டாம், அதனை இத்தனை விரிவாக எழுத முயல மாட்டேன்.