சதி பதி

சங்கரி இப்பொழுதெல்லாம் அவள் வீட்டுப் பக்கம் பட்டாளத்துக்காரன் திரும்பியது போல் தட்டுப்பட்டாள். புருசன்காரன்தான் அனுப்பி வச்சிருக்கான்னு சொல்லிக் கொள்கிறார்கள். தள்ளி வச்சுட்டான்னும் பேச்சு.

putting_kolamகல்யாணத்துக்குப் பின்னாடி ஆள்தான் எவ்வளவு மாறியாச்சு! கொமரா இருக்குறப்ப இந்திரா காந்தி மாதிரி ஹிப்பி வளத்துக்கிட்டு, வல்லவெட்டுப் போட்டு ஒரு கம்பையும் தோள்ள ஏந்தி போறவன் வாரவன்ட்ட எப்படியெல்லாம் வம்பிழுப்பாள். அதே சமயம் மார்கழி பிறந்தால் விதவிதமான பதினாறு புள்ளித் தேர்க் கோலமாகட்டும், கம்பிக் கோலமாகட்டும், ஊடுபுள்ளிக் கோலமாகட்டும் அச்சடித்த மாதிரி போடுவாள். பத்தாவது படிக்கும் பக்கத்து வீட்டுப் பிள்ளையின் கணிதப் புத்தகத்திலிருந்து ஒரு சில நாள் பரவளையம், அதிபரவளையம் இவற்றை இணைத்து புதுவிதக் கோலத்தை உருவாக்கியிருந்தாள்.

வைகாசி பிறந்தால் மாரியம்மாளுக்கு முளைப்பாரிக் கும்மி. வானம் பொய்த்தால் மழைக்கஞ்சிக் கும்மி. வாழ்க்கையை முழுக்க முழுக்க சந்தோசமாக அனுபவிக்கப் பிறந்தவள் மாதிரி சிட்டாய்ப் பறந்து கொண்டிருந்தாள். மரம் ஏறித் தேங்காய் பறிப்பவளா இப்படிப் பூக்கட்டுகிறாள் என்று தோன்றும்படிச் சரம் தொடுப்பாள். சாமிக்குக் கலக்கமாகக் கட்டி சடைக்கு வைக்க நெருக்கமாகக் கட்டும்போதே நூலில் ஐந்து முடிச்சுப் போட்டுக் குஞ்சாரமாக்கி விடுவாள். புதுப் பொண்ணுக்கு பூத்தைக்க தாங்கித் தாங்கி கூப்பிட்டுப் போவார்கள். எடுப்பது தெரியும் தொடுப்பது தெரியாது. கட்டி வாங்கிக் கொண்டு வந்த சடை நாகத்தில் கூட என்னத்தையாவது கூட்டிக் கழித்து புதுசு புதுசா எதையாவது பரிமளிக்கப் பண்ணுவாள். பாரம்பரியமாக சிலருக்கு இது வாய்த்திருக்கலாம். ஆனால் இவளுக்கு அப்படி வாய்க்கவில்லை.

சங்கரி அம்மா கோலம் போட்டு யாருமே பார்த்த்தில்லை. ரெம்ப அவசரம் யாருமில்லை. விரதம் விடவேண்டும். கோலம் போட்டேயாக வேண்டும் என்றால் மூன்று புள்ளி மூன்று வரிசையைத் தாண்டாது. நேர்ப்புள்ளிகள் ஊடாவது ஆடுகள் வாகனச் சத்தத்திற்கு ஒதுங்குவது போலச் சாதாரணமாய் நடக்கும். மற்றபடி தெரிந்ததெல்லாம் ரெண்டுவேளை சோறாக்குவது; தண்ணிக் குழாயடியில் சண்டை போடுவது. சேலையைக் கூட எந்நேரமும் பாவாடை தெரிய இழுத்துச் சொருகிக்சொண்டு தலையை இடது கையால் சொறிந்து கொண்டிருப்பவளுக்கு இப்படி ஒரு நளின காந்தி. அவள் அம்மாவை எங்கே என்று சங்கரிக்கு இன்னொரு தங்கை.

சங்கரியாவது புது நிறம். பாண்டியம்மாள் நல்ல வெள்ளை. வெள்ளெலி என்று தான் ஊருக்குள் தெரியும். கூறுதான் ஏறுக்கு மாறு. என்னேரமும் கல்கோனாவை ஒதுக்கிக் கொண்டு நின்ன இடத்தில் பராக்குப் பார்க்கவேண்டியது. சில சம்யங்களில் மூக்கும் ஒழுகும். ஒழுங்காகச் சேலை கட்டிக்கத் தெரியாது. சடை போட்டுக்கத் தெரியாது. ஒரே வீட்டில் பிறந்தாலும் அவரவர் எப்படி என்பதை யார்தான் தீர்மானிக்க முடியும். பேசியதையே திரும்பத் திரும்பப் பேசுவது . அப்படியே அவள் அம்மா மாதிரி. பிலு பிலுவென்று சண்டை பிடிக்க வேண்டியது . உலை வைக்கும் பொழுது அழுது தீர்க்க வேண்டியது. அய்யா செத்து நாலு வருசம் ஆச்சு. ரெண்டு குறுக்கம் வயக்காடு இருப்பதனால் சோத்துக்குப் பிரச்சனை இல்லாமல் வண்டி ஓடுது. ஆனால் சங்கரி ! கிராமத்துப் பெண் இப்படி டவுண் பொண்ணுகளுக்குப் போட்டி போட்டுக் கொண்டு திரிவது , ஊரே நிறைந்தது போல் இருக்கும்.

வயசுக்கு வந்த பெண் சைக்கிள் ஓட்டுதுன்னு மொறைப்பையன் கட்டிக்க மாட்டேனுட்டான். ‘அவன் கெடக்கான். நான் வளவித் தாத்தாவைக் கட்டிக்கப் போறேன்’ என்பாள். வளவித் தாத்தாவுக்கு எழுபது எழுபத்தந்து வயதிருக்கும். காசிருந்தும் சோற்றுக்குக் கஷ்டப்படுகிறவர். சத்துணவில் மதியம் வாங்கி ராத்திரிக்கும் வைத்துக் கொள்வார். ஊர் மந்தையில் படுத்துக் கொள்வார். சங்கரிக்கென்று வெளியூரில் இருந்து விதம் விதமாகத் வளையல்களைத் தேர்வு செய்து கொண்டு வந்து, பஸ்ஸை விட்டு இறங்கியதும் இறங்காததுமாகக் கொடுப்பார்..ஆசைதீரப் போட்டுக்கொண்டு வீதியில் வளைய வருவாள். வளவித் தாத்தாவைக் கட்டப் போறாளோ இல்லையோ நித்தம் காலை ஆகாரத்தைக் கொண்டு போய்ச் சேர்த்து விடுவாள்..

சங்கரியைப் பக்கத்தில் தான் கட்டிக் கொடுத்தார்கள். நல்ல குடும்பம் என்றார்கள். அண்ணன் தம்பி ரெண்டு பேர்தான். மூத்தவன் கணேசன், இளையவன் முருகன். பாத்துப் பாத்துப் பெயர் வைத்திருக்கிறார்கள். பேருதான் வேற . பார்க்க அச்சடிச்ச மாதிரி ஒண்ணு போலத்தான் இருப்பார்களாம். மூத்தவன் உடம்பு சதைப் போட்டிருக்கும். இளையவன் வல்லுப் போல. நாத்தனார். இல்லை. மாமியார் இல்லை. அப்பாவும் சாமியாராப் போய்ட்டார்னு சொல்லிக் கொள்கிறார்கள். எட்டு குறுக்கம் வயக்காடு இருக்குதாம். பகிராமத் தான் வெள்ளாமை பார்த்திருக்கிறார்கள். அய்யா சாமியாராப் போன பின்னாடி ஊர்ப் பெரியவுகளே பகிர்ந்து கொடுத்திருக்கிறார்கள்.

அண்ணன்காரன் கொஞ்சம் ஏமாத்தி அதிகம் வாங்கிக் கொண்டானாம். வாங்கி என்ன பண்ண? மண் வாகோ..இல்லை சரியாக வெள்ளாமை பாக்கத் தெரியலியோ தம்பி வயல் முத்து முத்தா வெளையுறப்ப , அண்ணன் சாவிய அறுத்திருக்கான். கல்யாணத்துக்கு முன்னாடி இப்படிப் பதரை விளைய வச்சுப் பாத்துக்கிட்டு இருந்திருக்கான். சங்கரி போன பின்னாடிதான் குளுக்கைல நெல் நெறஞ்சு மச்சுல அடுக்கி வச்சாகளாம். அப்பயும் கூட அண்ணங்காரன் சீட்டு வெளையாடப் போய்டுவானாம். இவ தாம் ஆம்பள மாதிரி மூணு கரண்டு வர்றப்ப காத்திருந்து தண்ணிப் பாய்ச்சிருந்திருக்கிறா. ஆளுகளக் கட்டி மேச்சு வேலை வாங்கி கொண்டு சேர்த்திருக்கிறாள். . நம்ம ஊர்ல இருந்து வீரம்மாளையும் அங்க தான கெட்டிக் கொடுத்திருக்கு. அவ வந்து சொல்லுவா கதை கதையா.

என்னமோ ஏதோ எல்லாம் நல்லபடியாகத் தான் போய்க் கொண்டிருந்த மாதிரித் தெரிந்தது. ஊர்ப் பொங்கலுக்குச் சோடியாகத்தான் வருவார்கள். பழைய உற்சாகம் இருக்காது. கல்யாணமாயிட்டால் சின்னப்பிள்ளைகள் போலத் திரிய முடியுமா. அவள் பாட்டுக்கு பொங்கல் வைத்து மாவிளக்குப் போட்டுப் போவாள் . ரெம்ப வற்புறுத்திக் கூப்பிட்டால் முளைப்பாரியைக் கங்கையில் போடும் போது

தானானே தானானே
சம்சாரி படப்புலயும்
சம்பா வைக்க ரெண்டெடுத்து
தானானே தானானே
மொதாலாளி படப்புலயும்
மொத வைக்க ரெண்டெடுத்து ….
வாயக்கட்டி வயித்தக் கட்டி
வளத்தேனம்மா மாரி
யெம்மா வளத்தேனம்மா மாரி
தானானே தானானே
நீ வைகாசித் தண்ணியில
போறயம்மா மாரி

என்று சோகம் கவியப் பாடிக் கும்மியடித்து விட்டு வருவாள்.

எத்தனை சோகத்திலும் நெளியும் நளினம். என்ன சோகம்? பிள்ளை இல்லாததுதான். முதல் வருடம் வரைக்கும் யாருக்கும் பெரிதாகத் தோணவில்லை. முதல் பொங்கலுக்கு வந்தபோதுகூட வளவித் தாத்தா என்னைக் கட்டிக்கிறேனுட்டுச் சொல்லிட்டு ஏமாத்திட்டன்னு சொல்லி கை நிறைய வளையல் கொடுத்தார்.

கொடுக்கத்தான் முடிந்தது. போட்டு விட புருசன்காரன் ஒத்துக் கொள்ளவில்லை. அந்நிய ஆம்பளைகள் பொண்டாட்டி கையைத் தொடக்கூடாதாம்.

வருடங்கள் போகப் போக எல்லோரும் வயிறு திறக்கலையான்னு கேட்டுக் கேட்டுப் புண்ணாக்கினார்கள். இப்பொழுதெல்லாம் ஊர்ப் பொங்கலுக்கு விடிந்தும் விடியாமலும் வந்து சாயந்திரம் போய்விடுவாள். நாலு பொங்கலாச்சு.

“ என்ன சங்கரி. வீட்டுக்காரரு எப்படி இருக்காரு? ”

tnபுகை புகுந்தது போல் விருட்டென்று வீட்டுக்குள் போய்விட்டாள். நம்ம சங்கரியா இப்படி? ஒரு வார்த்தை வாய்க் கொடுத்தால் பத்து வார்த்தை பேசுவாளே!! என்ன ஆச்சு! என்று ஆளாளுக்கு ஒன்று பேச ஆரம்பித்தனர். எல்லாம் ரெம்ப நாளைக்கு நீடிக்க வில்லை. புருசன்காரன் நாலைந்து ஆட்களுடன் வந்துவிட்டான். எங்கள் பக்கமும் நிறையப் பேர்களை வைத்துக் கொள்ளவில்லை. பஞ்சாயத்துப் பேச நாலைந்து பெரியவர்கள் மட்டும்தான் .

“அவன் சொல்றதுலயும் நாயம் இருக்கு. ஒரு வருசமில்ல ரெண்டு வருசமில்ல. நாலு வருசம் பொறுத்துப் பாத்துட்டான். வமுசமில்லாமப் போகவிட்டுற முடியுமா. இப்பயும் தீத்து விட்றேன்னு சொல்லலியே. கொழுந்தியாளத் தான ரெண்டாம் தாரமாக் கேக்கான். ஊரு ஒலகத்துல இல்லாததா ? இன்னொருத்தி வந்து சக்களாத்திச் சண்ட நாறுறதுக்கு அக்காளும் தங்கச்சியும் ஒண்ணா ஒரு வீட்டுல கெடக்கலாம்ல. இன்னி வரைக்கும் சண்ட உண்டா ? அடி உண்டா? நல்லா வச்சுத்தான பெழைக்கான்.? ”

புருசன்காரன் எதுவும் பேசவில்லை. பஞ்சாயத்துப் பண்ணியவர்கள் சங்கரியப் பார்த்தார்கள் . குனிந்த கண்களின் வழியேயும் எட்டிப் பார்த்தது தீப்பொறி. எப்படி ஆறவைக்கிறதென்று அவர்களுக்குத் தெரியும். ஊருக்கே ராசாத்தியை கலங்க வைப்பதா? சங்கரியையும் தனியே கூப்பிட்டு மிச்சமெல்லாம் சரியாகத்தான் போச்சா என்று கேட்டுக் கொண்டார்கள்.

“எல்லாம் வாஸ்தவம்தான் அதுக்காக இப்பிடி பெறந்த வீட்டுக்கு அனுப்பி வச்சுட்டுத்தான் பொண்ணு கேட்டு ஆளுகளக் கூப்பிட்டு வரணுமா? இன்னிக்குத் தலை ஆடி. ஆடி மாசம் நல்ல விசயம் பேசக்கூடுமா? போங்க போங்க சங்கரியக் கூப்பிட்டுப் போங்க? ஆடி கழியட்டும். அப்புறம் நல்ல நாள்ப் பாத்து வாங்க, பேசிக்கலாம்.” வெள்ளெலி என்ன நடக்குதுன்னே தெரிந்தோ இல்லை தெரியாமலோ கூட்டத்தைப் பராக்குப் பார்த்துக் கொண்டு கல்கோனாவை ஒதுக்கிக் கொண்டிருந்தாள்.

ஊரெல்லாம் துள்ளித் திரிந்த பெண் இப்படி வேண்டா வெறுப்பாக வெறிக்கப் பார்த்துக் கொண்டே பஸ் ஏறுவதைப் பார்க்க ஊருக்கே கஷ்டமாகத்தான் இருந்த்து. எல்லாப் பெண்களுக்கும் பஸ் ஏறத்தானே விதித்திருக்கிறது. ஆடி நமக்கு வேண்டுமானால் சீக்கிரம் ஓடியிருக்கலாம். ஆனால் சங்கரிக்கு எப்படி இருந்திருக்குமோ ? ஆடி முடிந்தால் பெண் கேட்டு வருவார்கள் என்று வெள்ளெலியை வீட்டுக்குள்ளேயே பிடித்து வைத்திருந்தார்கள்.

ஆனால் சங்கரியை ஆடிப்போக வைத்த ஆடி முடிந்தது. சங்கரி புருசன் வெள்ளெலியைக் கேட்டு வருவான் வருவான் ஏன்று எதிர்பார்த்தவர்களுக்கெல்லாம் வந்த்தென்னவோ ஒரு நல்ல செய்தி. சங்கரி உண்டாகி இருக்காளாம்.

“அடிப்பாருடி அதிசயத்த நாலு வருசமா உண்டாகம இருந்துட்டு புருசன் ரெண்டாம் தாரம் கெட்டப் போறனவுடன இப்பிடி வந்து நிக்கிறத. ? ”

“ சும்மாவா சொன்னாக பெரியவுக. முருங்க மரம் காய்க்காட்டி வெளக்கமாத்த எடுத்து ரெண்டடி வச்சா ரோசப்பட்டுக்கிட்டு காச்சுடுமாமே . ? ”

“ ச்சீ . அவ மனசு எம்புட்டுக் கஷ்டப் பட்டுச்சோ. . . ? ”

“ ம்ம் இனிமெ வெள்ளெலிய எவன் கேட்டு வரப்போறானோ . கல்கோணா வங்குறவண்ட்ட தள்ளி விட்றலாம். இல்லாட்டி வளவித் தாத்தவுக்கு வாக்கப்படட்டும். அவதான் ஏமாத்திட்டா. இவளை விட்றக்கூடாது”

“ ம்ம் வெள்ளெலிக்கு என்ன் கொறச்சல். ஒழுங்காத் தலசீவி ஊருவழிப் போனாக்க , நாடாளும் மன்னன் கூட தேரத் திருப்பாமப் போகமட்டான். அவ போய்ப் புருசன் வீட்டுல பொழைக்கிற பொழைப்ப பாக்கத்தான போறம். எல்லாவளுகளும் அப்படியேதான் ஆத்தா வீட்டுல இருந்து வந்தாகளா? அவ அவ வீடுன்னு ஆன பின்னடி ராசாங்கம் எப்பிடி நடக்குதுன்னு பாரேன்…?”

ஆனால் அப்படியெல்லாம் தங்கையை விட்டு விடவில்லை. வெள்ளெலி கல்கோணாவை தின்றுவிட்டு, பார்க்கும் பராக்கைத் தன் வீட்டிலேயே பார்க்கட்டும் என்று ஐப்பசியில் கொழுந்தனுக்குக் கட்டி வைத்துவிட்டாள். அவனுக்கு கலர் மயக்கம். கல்கோணாவாவது. கருப்பட்டி மிட்டாயாவது. அவளும்கூட கார்த்திகையில் உண்டானதாகச் செய்தி வந்தது .

அக்காளுக்கும் தங்கச்சிக்கும் ஒண்ணாகவே வீடு கூட்டிக் கூப்பிட்டுப் போனார்கள். அண்ணன்காரன் இன்னமும் சீட்டு விளையாட்டு மும்முரம்தான். “இத்தன வருசமாக் காத்திருந்து பொட்டப் புள்ளப் பெத்துருக்கா.?” ன்னு சங்கரி புருசன் புலம்புவதை ஊரும் சங்கரியும் கண்டு கொள்வதில்லை. அவன் என்னமோ சம்பந்தப்பட்டவன் மாதிரி அலுத்துக்கிறான். ஒரு தடவைக்கு ஒத்தாசைக்கு வந்ததைக் காரணம் காட்டி ஓயாமல் வயல்வேலைக்கு வரவேண்டாம் என்பதை ஒரு பார்வையிலேயே தம்பிக்காரனுக்கு உணர்த்தி விட்டாள்.