காணாமல் போன கனவுக்கன்னிகள்

‘கனவுக்கன்னி’ என்று எழுதும்போதே ஒரு விஷயம் மனதை நெருடுகிறது. கனவில் வரும் பெண்கள்கூட, கன்னிகளாகத்தான் இருக்கவேண்டும் என்ற நமது கற்பு அபிமானம் என்னைப் புல்லரிக்க வைக்கிறது. ஆங்கிலத்தில் ட்ரீம் கேர்ள்’ என்றுதான் குறிப்பிடுகிறார்கள். ‘ட்ரீம் விர்ஜின்’ என்று யாரும் கூறுவதில்லை. ஆனால் தமிழில் மட்டும், கனவில் வந்து வெள்ளை உடையில் சும்மா “லல்லலா…” பாடுவதற்குக்கூட கன்னியாகத்தான் இருக்கவேண்டும் என்று அடம் பிடிக்கிறார்கள். இத்துடன் கனவுக்கன்னிகள் கட்டாயம் ஒரு நடிகையாகவும் இருக்கவேண்டும். ஆனால் இந்தக் கனவுக்கன்னிகளின் இடமோ நிரந்தரமல்ல.

சில மாதங்களுக்கு முன், சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் ஒரு முன்னாள் நடிகையைப் பார்த்தேன். ஒரு காலத்தில் தனது கட்டுடலுக்கும், பொலிவான முகத்திற்கும், ஹைசொஸைட்டி லுக்குக்கும் பெயர் பெற்ற நடிகை அவர். இப்போது அவருக்கு அறுபது வயதுக்கு மேல் இருக்கும். காலம் அவரின் அழகை கரைத்துவிட்டு, நைந்து போன உடலை மட்டும் விட்டு வைத்திருந்தது.

ஆழ்வார்பேட்டை பழைய சாம்கோ ஹோட்டல் வாசலில் நின்ற ஒரு நள்ளிரவில் எனது தாய்மாமா அந்நடிகையின் அழகைப் பற்றி சில ஆண்டுகளுக்கு முன் என்னிடம் விவரித்த நிமிடங்கள் சட்டென்று நினைவுக்கு வந்தன. தன்னைவிட 25 வயது சிறியவன் என்றும் பாராமல், என்னிடம் என் மாமாவை ரசனையுடன் புலம்ப வைத்த அழகு அது… தலைக்கு மேல் இரவு நழுவிக் கொண்டிருப்பதை அறியாது, ஒரு நண்பனிடம் பேசுவது போல் என் மாமாவை என்னிடம் பேச வைத்த அழகு அது… சாலையென்பதையும் மறந்து சத்தமாக, ‘‘இன்னைக்கி இருக்கிற ஒருத்தியும் அவகிட்ட நிக்க முடியாது.” என்று என் மாமாவை சவால் விடவைத்த அழகு அது.

ஆயிரமாயிரம் இளைஞர்களின் இரவுகளில் கனவுகளை விதைத்த அந்த அழகின் ஒரு துளி மிச்சத்தையாவாது பார்த்துவிட முடியாதா என்பது போல், அந்நடிகையை உற்று உற்றுப் பார்த்தேன். தளர்ந்த உடல்… முதுமையேறிய முகம்… சுருங்கிய தோல்… ஒட்டிய கன்னங்களுடன் அவர் அக்கம் பக்கம் பார்க்காமல், குனிந்த தலையுடன் வேக வேகமாக நடந்தார். அந்த நடை இயல்பாக இல்லை. தன்னை யாருக்கும் தெரிந்துவிடக்கூடாது என்பது போல், ஒரு மெல்லிய பதட்டத்துடன், விறுவிறுவென்று நடந்த அவர் கோயிலை விட்டு வெளியேறினார்.

அவரை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. தனது அழகால் லட்சக்கணக்கான ஆண்களை வசீகரித்து வைத்திருந்த அந்தப் பழைய தோற்றம் இப்போது அவரிடம் இல்லை. இந்த முதிய கோலத்தில் தன்னை யாரும் அடையாளம் கண்டுகொள்வதை அவர் நிச்சயம் விரும்பியிருக்கமாட்டார்.

வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது. இறந்த காலத்தின் தேவதைகளை பலி கொண்ட நிகழ் காலம், அழகின் ரத்தத்தை தன் மேனியெங்கும் பூசிக் கொண்ட ஒரு அரக்கன் போல் நின்று கொண்டிருக்கிறது.

இந்த கனவுக்கன்னிகள் எப்படி உருவாகிறார்கள்?

ஒரு சிறுவன் தனது தந்தையை ஜென்ம விரோதி போல் பார்க்க ஆரம்பிக்கும்போது, அவன் வயதுக்கு வந்துவிட்டான் என்று அர்த்தம். அடுத்து அவன் பெண்களின் பிற பயன்பாடுகள் குறித்து அறிந்துகொண்டதும், தன்னைச் சுற்றியுள்ள பெண்களை வேறு விதமாக பார்க்கத் துவங்குகிறான். அந்த பெண்களில் ஒருவரை அவன் தனது கனவுக்கன்னியாக வைத்துக் கொள்ளலாம். ஆனால் அதில் ஆயிரம் சிக்கல்கள் உள்ளன.

ஒரு ஆண் வயதுக்கு வந்தவுடன், அவன் கண்களில் அதிகம் படும் வயசுப் பெண்கள், பெரும்பாலும் அக்கம் பக்கத்தில், சிறு வயதிலிருந்தே அவனுடன் வளர்ந்த பெண்களாகத்தான் இருப்பார்கள். ஆனால் பெண்களின் பெற்றோர்கள் மிகவும் உஷாராக அப்பெண்களிடம் சிறு வயதிலிருந்தே, ‘‘உன்னைவிட வயசுல பெரியவன்டி… அண்ணன்னு கூப்பிடு…” என்று பழக்கப்படுத்திவிடுவார்கள். வயதில் பெரிய பெண்ணாக இருந்தால் பையனிடம், ‘‘உன்னை விட வயசுல பெரியவடா… அக்கான்னு கூப்பிடு…” என்று மூன்று மாதம் மூத்த பெண்ணைக் கூட ‘அக்கா’ என்று அழைக்க வைக்கும் சதிகாரர்கள் நிறைந்த இத்தேசத்தில், ஒரு கனவுக் கன்னியைத் தேர்ந்தெடுப்பது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. எனவே ஒரு ஆண் மனதிற்குள் தனக்கான கனவுக்கன்னியை தேடிக்கொண்டேயிருக்கிறான். நிஜ வாழ்வில் கனவுக்கன்னிகளை சந்திக்காதபோது, திரை பிம்பங்கள் உயிர்த்தெழுகின்றன. நடிகைகள் திரையிலிருந்து இறங்கி, ரசிகனின் கையைப் பிடித்துக்கொண்டு அவனுடனே செல்கிறார்கள்.

jp

எனது முதல் கனவுக்கன்னி, இயக்குனர் சத்யஜித்ரே அவர்களால், ‘உலகின் மிக அழகிய பெண்களில் ஒருவர்’ என்று வர்ணிக்கப்பட்ட ‘சலங்கை ஒலி’ ஜெயப்ரதா. ஆம்… ‘சலங்கை ஒலி’ ஜெயப்ரதாதான். ‘நினைத்தாலே இனிக்கும்’ ஜெயப்ரதாவோ, ’47 நாட்கள்’ ஜெயப்ரதாவோ அல்ல. ‘சலங்கை ஒலி’ ஜெயப்ரதா மட்டுமே என் கனவுக்கன்னி. சமீபத்தில் மலையாள இயக்குனர் ப்ளெஸ்ஸியின் இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘ப்ரணயம்’ என்ற மலையாளப் படத்தில் ஜெயப்ரதாவைப் பார்த்தபோது, மனம் பழைய ஜெயப்ரதாவையே சுற்றி சுற்றி வந்தது.

அப்போது நான் ப்ளஸ் ஒன் படித்துக்கொண்டிருந்தேன் (உண்மையில் அப்போது நான் ஒன்பதாவதுதான் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால் ஒன்பதாவது படிக்கும்போதே என்று எழுத கொஞ்சம் வெட்கமாக இருக்கிறது. அதனால் ரெண்டு க்ளாஸ் ஏற்றிவிட்டேன்.).. அரியலூர், லட்சுமி தியேட்டரில் சலங்கை ஒலி படம் ஆரம்பித்து, ஃப்ளாஷ்பேக் துவங்கும் வரை மனதில் ஒரு சலனமும் இல்லை. ஃப்ளாஷ்பேக்கில் ஒரு கோயிலில், கமலஹாசனை ஒரு சிறுவன் போட்டோ எடுத்துக்கொண்டிருப்பான். கமல் அப்போது மிகவும் சத்தமாக, ‘‘தா… தாரிகிடதாரிகிட… தை” என்று கத்தியபடி போஸ் கொடுக்க… மஞ்சள் கலர் பட்டுப்புடைவையில், கையில் காமிரோவோடு திரும்பிப் பார்ப்பார் ஜெயப்ரதா. தேவதைகள் பூமியிலும் வாழ்வார்கள் என்பதை நான் அறிந்துகொண்ட நாள் அது. சராசரிப் பெண்களை விட சற்றே கூடுதல் உயரம். கூர்மையான மூக்கு. மேலுதட்டுக்கு மேல் அந்த மச்சம், உலகின் அழகிய ஒற்றைப்புள்ளி கோலம். முகத்தில் ஒரு அழகார்ந்த அமைதி.

படம் முழுவதும், இயக்குனர் கே.விஸ்வநாத் மிகுந்த ரசனையுடன் ஜெயப்ரதாவின் அழகைப், பலவிதமான காட்சிகளில், விதம் விதமாக வெளிப்படுத்தியிருந்தார். சிவப்பு நிற பட்டுப்புடைவையில், கல்யாண வீட்டில், சூடான காபி டம்ளரை புடைவை முந்தானையில் பிடித்துக்கொண்டு காபி குடிக்கும் ஜெயப்ரதா… ஆட்டோமேட்டிக் காமிராவை கமல் ஆன் செய்தவுடன், உதடுகளைப் பிரிக்காமல், பற்களைக் கடித்துக்கொண்டு, ‘‘க்ளிக்காயிடும் வாங்க…” என்று கமலை அழைக்கும் ஜெயப்ரதா… வெள்ளைநிறப் புடைவையில், லேசாக பாதங்களை உயர்த்தி அமர்ந்தபடி நடனவிழா அழைப்பிதழில் கமல் ஃபோட்டோவைக் காண்பித்து, ‘‘இவரு கூட பெரிய டான்ஸர்தான்…” என்று கமலிடம் கூறும் ஜெயப்ரதா… என்று சொல்லிக்கொண்டே போகலாம்.

sagara-sangamam-salangai-oli-9

எல்லா அழகான பெண்களும், ஒரு குறிப்பிட்ட கணத்தில் தங்கள் உச்சகட்ட அழகை அடைவார்கள். அவ்வாறு இப்படத்தில் ஜெயப்ரதா தனது உச்சகட்ட அழகை அடையும் காட்சி: ஒரு காரருகில் நின்றுகொண்டு ஜெயப்ரதா கமலிடம், ‘மௌனமான நேரம்..” பாடலைப் பாடிக் காண்பிப்பார். பல்லவியை முடிக்கும்போது, திடீரென்று வெட்கம் வந்து, தோளைப் போர்த்தியிருந்த சிவப்பு நிறப் புடைவையால் லேசாக மூக்குக்குக் கீழ் முகத்தை மூடி, வெட்கத்துடன், ஒரு சிரிப்பு சிரிப்பார் பாருங்கள்… அந்த வெட்கச்சிரிப்பை அப்படியே கையில் பிடித்து, வாழ்நாள் முழுவதும் வைத்துக்கொள்ள முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்…

படம் முடிந்து வெளியே வந்தபோது, அரியலூர் வானம் முழுவதும் ஜெயப்ரதா உலகளந்த பெருமாள் போல் பிரமாண்டமாக நின்றுகொண்டு ‘‘மௌனமான நேரம்” பாடினார். சலங்கை ஒலி அரியலூரில் ஓடிய ஒரு வார காலத்தில், அப்படத்தை நான் மூன்று முறை பார்த்தேன். அதன் பிறகு…

அரசு மருத்துவமனையில் எனக்கு வலிக்காமல் ஊசி போட்ட நர்ஸ் ஜெயப்ரதாதான். மாரியம்மன் கோயில் அரசமரத்தடியில், ராட்டினம் சுற்றிய பெண்ணும் ஜெயப்ரதாதான். பாலு வாத்தியார் வீட்டு வாசல் திண்ணையில், ட்யூசனுக்காக உட்கார்ந்திருந்த அத்தனைப் பெண்களும் ஜெயப்ரதாதான். நாராயணசாமி பால் பண்ணையில், பாலுக்காகத் தூங்கி வழிந்த முகத்துடன் காத்திருக்கும் அத்தனைப் பெண்களும் ஜெயப்ரதாக்கள்தான்.

வீட்டில் சண்டைப் போட்டுக்கொண்டு சாப்பிடாமல் தூங்கிவிட்ட இரவுகளில், ஜெயப்ரதா எழுப்பிவிட்டு சாப்பாடு போட்டார். கணக்கில் மார்க் குறைவாக வாங்கி அழுதபோது, பகற்கனவில் ஜெயப்ரதா, ‘‘என்னது சின்னப்புள்ள மாதிரி அழுதுகிட்டு… கண்ணத் துடைச்சிக்கோ.” என்று கூறியவுடன் கண்களைத் துடைத்துக் கொண்டேன். அப்பா என்னைத் திட்டும்போது, ‘‘மரியாதையாப் பேசுங்க மிஸ்டர் கோவிந்தராஜன்” என்று ஜெயப்ரதா அப்பாவை அதட்டினார்.

சில மாதங்கள் வரை, ஜெயப்ரதா ஒரு நிழலைப் போல் என்னைத் தொடர்ந்துகொண்டே இருந்தார். ஆனால் ஜெயப்ரதாவை தொடர்ந்து கனவுக்கன்னி ஸ்தானத்தில் தக்க வைப்பது மிகவும் கஷ்டமான காரியமாக இருந்தது. நீங்கள் ரசிக்கும் ஒரு நடிகையின் படங்களை அவ்வப்போது பார்த்துக்கொண்டிருந்தால்தான், கனவுக்கன்னியின் ஸ்தானம் ஸ்திரப்படும். ஆனால் ஜெயப்ரதா தமிழ்ப்படங்களில் அதிகமாக நடிக்கவில்லை. எனவே வேறு வழியின்றி சில மாதங்களிலேயே, நான் வேறு கனவுக்கன்னியைத் தேடவேண்டியிருந்தது.

நடிகை ராதா ஏற்கனவே ‘அலைகள் ஓய்வதில்லை’ படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், அப்போது நான் ஏழாவதுதான் படித்துக்கொண்டிருந்ததால், அப்போது ராதாவை கனவுக்கன்னியாக பார்க்கத் தெரியவில்லை. பிறகு ‘டிக் டிக் டிக்’ படத்தில், ராதா சிவப்பு நிற நீச்சல் உடையில் ஓடிவந்து என் இதயக் குளத்தில் குதித்தபோது, மனதில் லேசாக ஒரு சலனம். இரண்டு ஆண்டுகளில் ராதா மேலும் பாலிஷாகி, ‘ஒரு கைதியின் டைரி’ படத்தில் பளிச்சென்று வந்து நின்றபோது முடிவெடுத்துவிட்டேன். ராதாதான் என் அடுத்த கனவுக்கன்னி.

ராதா போன்ற சற்றே கருப்பான அழகிகளுக்கு ஒரு விசேஷத்தன்மை இருக்கிறது. சிவப்பழகிகள் எல்லாம், எட்டாத உயரத்தில் இருக்கும் மகாராணிகள் போல் தோன்ற… கருப்பழகிகளை உங்கள் மனதுக்கு நெருக்கமாக உணரமுடியும். நானும் அவ்வாறே உணர்ந்தேன். ‘பாயும் புலி’ படத்தில் மஞ்சள் நிற ஆடையுடுத்திக்கொண்டு, ‘‘பொத்துக்கிட்டு ஊத்துதடி வானம்…” என்று மழையில் ஆடியபோது ராதா தனது அழகின் பரிபூர்ணத்துவத்தை எட்டியிருந்தார். இனிமேல் சாகும்வரை ராதாவை மட்டுமே நினைத்துக்கொண்டு, ஒரு ஏகக்கனவுக்கன்னி விரதனாக இருந்துவிடவேண்டும் என்று உறுதி பூண்டேன். ஏறத்தாழ இதே காலகட்டத்தில் விஜி, நளினி, அம்பிகா, ராதிகா, சுலக்ஷனா என்று எத்தனையோ நடிகைகள் ஃபீல்டில் இருந்தாலும், நான் மனதை அலைபாய விடாமல், எனது கனவுக்கன்னி ராதாவுக்கு உண்மையாகவே இருந்தேன்.

கடைசியில் ஒரு இந்தோ-ஐரோப்பிய கூட்டுச்சதியால், எனது ஏகக் கனவுக்கன்னி விரதம் கலைந்தது. ஒரு ஐரிஷ் நாட்டு தாய்க்கும், வங்காளத் தந்தைக்கும் கல்கத்தாவில் ஒரு பெண் பிறந்தார். அந்தப் பெண் வளர்ந்து ‘அமலா’ என்ற பெயரோடு, எங்கள் ஊர் சக்தி தியேட்டருக்கு வந்தார். படம்: டி. ராஜேந்தரின், மைதிலி என்னைக் காதலி’. அந்த அழகிய பெண், ‘‘கண்ணீரில் மூழ்கும் ஓடம் நானே…” என்று பாடியபோது, என் கண்களில் தண்ணித் தண்ணியாக வந்தது. படம் முடிந்தவுடன், கனவுக்கன்னிப் பட்டத்தைத் தூக்கி அமலாவுக்கு கொடுத்துவிடலாமா என்று ஒரு யோசனை. ஆனாலும் மனசாட்சி உறுத்தியது. இச்சமயத்தில் ராதா ‘காதல் பரிசு’ படத்தில் சற்றே கவர்ச்சியாகத் தோன்றி அமலாவுக்கு கவுன்ட்டர் கொடுத்து, எனது சபலத்தை ஓரம் கட்டினார்.

ஆனால் அமலா வரிசையாக சத்யா, அக்னிநட்சத்திரம், ஜீவா, கொடி பறக்குது படங்கள் மூலமாக தமிழ்நாட்டு இளைஞர்களின் மீது ஒரு மாபெரும் தாக்குதலை நிகழ்த்தினார். அத்தனைப் பசங்களும் கவிழ்ந்தார்கள். அதுவும் ‘ஜீவா’ படம் பார்த்த தினம் இன்றும் நினைவில் இருக்கிறது.

அப்படம் ரிலீசான அன்று, நான் தஞ்சாவூரில் என் பாட்டி வீட்டில் இருந்தேன். காலை எழுந்தவுடன் எனது மாமாப் பையன் தீனா, தினத்தந்தியில் ‘ஜீவா’ பட விளம்பரத்தைக் காட்டினான். அதில் அமலா நீச்சல் உடையில் ஓடிவரும் கண்கொள்ளாக் காட்சி. எழுந்து முகம் கழுவிக்கொண்டு, ராஜராஜன் தியேட்டர் வாசலில், டிக்கெட் கவுண்ட்டர் கேட்டில் நானும், தீனாவும் முதல் ஆளாய் நின்றோம். நேரமாக, ஆக… தினத்தந்தி பார்த்த ரசிகர்கள் வெள்ளம் போல் குவிந்துவிட்டனர். வரிசையில் முதலில் நின்றிருந்த எங்களைக் கும்பல் நெருக்கித் தள்ள… எனக்கு மூச்சடைத்தது. ஒரு கட்டத்தில், நீச்சல் உடையில் அமலாவைப் பார்க்காமலேயே செத்துப் போய்விடுவோமோ என்ற பயம் வந்துவிட்டது. கவுண்ட்டரைத் திறந்து முதல் டிக்கெட்டை வாங்கியபோது, சொர்க்கவாசலுக்கே டிக்கெட் வாங்கியது போல் உணர்ந்தேன்.

amala-old-malayalam-actress-cute-pic3

ராஜராஜசோழ மண்ணின் மைந்தர்கள் ராஜராஜன் தியேட்டரில் அந்த பொன் கணத்தை எதிர்நோக்கி ஆவலுடன் திரையைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். வந்தது அந்தக் காட்சி… ஒரு டூயட் பாடலின் நடுவில், வெள்ளை நிற சட்டையுடன் தோன்றுவார் அமலா. திடீரென்று அமலாவிற்கு அந்த சட்டை மிகவும் பாரமாகத் தோன்ற… சட்டென்று அந்தச் சட்டையைக் கழட்டி வீசிவிட்டு, நீச்சல் உடையில் தகதகவென்று மின்னிய அமலா, திபுதிபுவென்று கடற்கரை ஈர மணலில் ஓடி வர… தியேட்டரில் ஆழ்நிலை தியான மண்டபம் போல் ஒரு பேரமைதி. அமலா ஸ்லோமோஷனில் ஓடி வந்து ஓய்ந்தவுடன், ரசிகர்கள் உயிர்பெற்று ‘ஒன்ஸ் மோர்…’ கேட்டு ஏககலாட்டா செய்தார்கள். ஆனால் ஆபரேட்டர் மசியவில்லை.(இப்படத்தில் போனஸாக ஒரு செமத்தியான சில்க் ஸ்மிதா பாடலும் உண்டு.). படம் முடிந்து வெளியே வந்து, தஞ்சை ரயிலடி வாசலில் வைத்து, எனது கனவுக்கன்னி பட்டத்தை மனப்பூர்வமாக அமலாவுக்கு அளித்தேன்.

சிறிது காலத்திலேயே அமலா அலை ஓய… ஒரு விடுமுறையின்போது தஞ்சாவூரில் நானும், என் மாமாப் பையன் தீனாவும் பெரிய கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தோம். வழியில் சுவர்களில், ‘மிஸ்டர் விஜய்’ என்ற தெலுங்கு டப்பிங் பட போஸ்டர். அதில் நடிகர் வெங்கடேஷுடன் ஒரு பெண் ஒல்லியாக, வெள்ளையாக, அழகாக, கவர்ச்சியாக போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அப்படியே சைக்கிளைத் திருப்பி யாகப்பாத் தியேட்டருக்கு விட்டோம். பயங்கரமான அஜுடு குஜுடு தெலுங்கு மசாலாப்படம். ஒரு சவால் காட்சி, ஒரு சண்டை, ஒரு டூயட் ஸாங்… என்று மாற்றி மாற்றி வந்த அந்த படத்தில், மொத்த ஆறு டூயட் பாடல்கள். ஆறிலும் அந்த நடிகை, கண்களை அழகாகச் சிமிட்டிச் சிரித்தபோது, அடுத்த கனவுக்கன்னித் தயார். நான் தீனாவிடம், ஒரு முன்னணி திரைப்படத் தயாரிப்பாளர், சக தயாரிப்பாளரிடம் கூறுவது போல், ‘‘இந்தப் பொண்ணு தமிழுக்கு வந்துச்சுன்னா, ஒரு ரவுண்டு வரும்.” என்றேன். எனது தீர்க்கதரிசனம் விரைவில் பலித்தது. அவர் ‘வருஷம் 16’ படம் மூலமாக, ஒரே வாரத்தில், ஓல்டு கனவுக்கன்னிகள் அனைவரையும் ஓரம்கட்டினார். அந்த நடிகை… குஷ்பு.

‘வருஷம் 16’ படத்தையும் முதலில் தஞ்சாவூரில் தீனாவுடன்தான் பார்த்தேன். மேட்னி ஷோ முடிந்து வெளியே வந்த நாங்கள் குஷ்பு போஸ்டரைப் பார்த்தோம். அதிகம் யோசிக்காமல் அப்படியே ஃபர்ஸ்ட் ஷோவுக்கு டிக்கெட் வாங்கிக்கொண்டு, மீண்டும் தியேட்டரில் நுழைந்தோம். பிறகு அப்படம் அரியலூர் வந்து, லட்சுமி தியேட்டரில் 18 நாட்கள் ஓடியது. அந்த பதினெட்டு நாட்களும் மதியம் காலேஜ் கட்டடித்துவிட்டு, வருஷம் 16 படம் பார்க்கச் செல்வோம். படம் ஆரம்பித்து 20 நிமிடம் கழித்துதான், குஷ்பு வருவார். கரெக்டாக அந்த சமயத்தில்தான் உள்ளே நுழைவோம். ‘‘பூ பூக்கும் மாசம் தை மாசம்…’ பாடல் முடிந்தவுடன் வெளியே வந்துவிடுவோம்.

இப்படத்தில் முகத்தில் ஒரு சின்ன சிணுங்கலுடன், ‘‘என் செயினத் தாங்க…” என்று கார்த்திக்கிடம் கேட்கும் குஷ்பு… கோயிலில் இளஞ்சிவப்பு நிற பாவாடையும், சட்டையும் அணிந்துகொண்டு, இரட்டை ஜடையுடன் தோன்றும் குஷ்பு… கோயிலில் கார்த்திக்கின் கலாட்டாவால் சாமி விளக்கு கீழே விழுந்தவுடன் தொடரும் காட்சியில் ‘ஜோசியர் ஆபத்து ஒண்ணுமில்லன்னு சொல்லிட்டா முத்தம் தர்றியா?’ என்று கார்த்திக் கேட்கும்போது குஷ்பு லேசாக… மிகவும் லேசாக… மிக மிக லேசாக, அரை வெளிச்சத்தில் ஒரு வெட்கத்தை காண்பிப்பார் பாருங்கள்… அட அட அடா… இந்த உலகம்தான் எவ்வளவு இனிமையானது.

தொடர்ந்து வெற்றி விழா, மைடியர் மார்த்தாண்டன், சின்னத்தம்பி… அண்ணாமலை… என்று ஏழெட்டு வருடத்திற்கு குஷ்புவை யாரும் அசைக்க முடியவில்லை. குஷ்பு மின்னிய காலம் ஓய்ந்தபோது, நான் குடும்பஸ்தனாகியிருந்தேன்.

கருணையே இல்லாத காலம் வேகமாக ஓடி, எனது முன்தலை முடிகளை உதிர்த்துவிட்டு, எனது கனவுக்கன்னிகளை நாலாபக்கமும் சிதறடித்தது. ஜெயப்ரதா, ‘சலங்கை ஒலி’ ஜெயப்ரதாவை அறியாத உத்தரபிரதேசத்தின் புழுதி படிந்த வீதிகளில், ராம்பூர் தொகுதியில் ஆஸம்கானை வீழ்த்துவதற்காக வியூகம் வகுத்துக் கொண்டிருக்கிறார். ராதா தனது மகளை கனவுக்கன்னியாக்க முயற்சித்து தோற்றுக் கொண்டிருக்கிறார். அமலா, நாகார்ஜுன் மனைவியாக ஹைதராபாத்தில் மிருகங்களின் நலனுக்காக நாட்களை செலவிட்டுக் கொண்டிருக்கிறார். தலைவர்கள் நிரம்பிய தமிழக அரசியலில், குஷ்பு தனக்கான இடத்தைத் தேடிக் கொண்டிருக்கிறார்.

எனது நேற்றைய கனவுக்கன்னிகளில், இன்று வரையிலும் நான் தொடர்ந்து ரசித்துக்கொண்டிருக்கும் ஒரே நடிகை, ‘சலங்கை ஒலி’ ஜெயப்ரதாதான். இப்போதும் 3, 4 மாதங்களுக்கு ஒரு முறையாவது டிவிடியில் ‘சலங்கை ஒலி’ படத்தைப் போட்டுப் பார்த்துவிடுகிறேன். சில வாரங்களுக்கு முன், டீன் ஏஜ் வயதில் நுழைந்து, என்னை ஜென்ம விரோதியாகப் பார்க்க ஆரம்பித்திருக்கும் எனது மகனும் என்னுடன்  சேர்ந்து சலங்கை ஒலி படத்தைப் பார்த்தான். ஃப்ளாஷ்பேக்கில் கோயிலில் அழகாகத் தோன்றும் ஜெயப்ரதாவைப் பார்த்தவுடன், ‘‘யாரு இந்த நடிகை?” என்று கேட்டான்.