கவிதைகள்

leadership-chess

சூதாட்டம்
– ராமலக்ஷ்மி

கருப்பு வெள்ளைக் கட்டங்களில்
மனிதர்கள்

சிப்பாயாக
குதிரை வீரனாக
மதகுருவாக
யானை மேல் தளபதியாக
உயர்வு தாழ்வுகள்
வசதி வாய்ப்புகளுக்கேற்ப.

அதிக சக்தி கொண்டவர்
ஆளும் அரசியாக
அரியணைக் குடும்பமே
கட்டிக் காக்கப்பட வேண்டிய
ராஜாதி ராஜவாக.

விதியை எதிர்த்து
விதிமுறைக்கு உட்பட்டே
நகர வேண்டிய களத்தில்
சீறவும் சீவவும்
தாராளமாக அனுமதி.

பயந்து பதுங்கவும்
ஒதுங்கி வழிவிடவும்
உண்டு அனுமதி என்றாலும்
பலவீனங்கள் பலங்களால்
பந்தாடப்படும்
பலகைக்கு உள்ளேயேதான்
போராட்டம்.

கொய்து
எல்லைக்கு அப்பால் எறியப்படும்
நொடி வரையிலும்
துரத்திக் கொண்டேயிருக்கிறது
காலம்.

மரண பயம்
– எம். ராஜா

தூரத்தே
இருசுவர்கள் சேரும்
மூலைக்கருகே
எரிந்துகொண்டிருப்பது
பிணமல்ல
தெளிவாகத் தெரிந்தும்
சஞ்சலம் அடங்கவில்லை வெகுநேரம்.

0

பயத்திற்கும் துயரத்திற்கும்
பிரத்யேகமாய் நிறமிருக்கிறது
மரணப்படுக்கையில் கிடப்போர் முகத்தில்
குழைத்து பூசப்பட்டிருக்குமது.

உள்ளுணர்வு உரைக்கப்பெற்றோ
சுற்றியிருப்போர்
சுற்றிவளைத்து சொன்ன வார்த்தைகளிலோ
வாசிக்கப்பட்டுவிடுகிறது
வேளைவந்துவிட்டது என்றொரு செய்தி.
அனுபவங்களின் முன்மொழிதலில்லை
முந்திச் சென்றவர்களின் வழிமொழிதலில்லை
மிரண்டுவிடுவார்களோ?
பொருளாதாரத்திலோ உறவுமுறையிலோ
குறைகுற்றங்கள் விளைவித்த சோகமாயிருக்குமோ?
நினைவுதப்பும் நொடிவரை
முகத்தில் அப்பியிருக்கிறது
மிரட்சியும் துக்கமுமாய் ஒரு கலவை.
அது
இறுதிக் காட்சிக்கான ஒப்பனை.

வாழ்தலை
தனக்கும் பிறர்க்குமாய்
நிறைவாய் நிகழ்த்தியிருந்தால்
மகிழ்ச்சியாகவோ சலனமற்றோ
நிறைவடைந்திருக்குமோ இந்த நிகழ்ச்சி?
ஒரு நாளோ ஒரு வருடமோ
ஆயுள் நீட்டிக்கப்பட்டிருந்தால்
நிரம்பியிருக்குமோ சில வெற்றிடங்கள்?
என்ன செய்வது?
இன்னொரு வரமோ
இரண்டாவது வாய்ப்போ
தொடர்ந்து கிட்டுவதாயில்லை.
விதியெனச் சொல்லப்பட்டது வலிதன்றோ?

0

கூடவோ குறையவோ
இருநூறு முந்நூறாண்டுகள்
வாழவே ஆசை.
பீடித்த மரணபயம்
முழுதாய் அகலவில்லை.
கணந்தோறும்
விழிப்பில் வாழ்தலே விழைவு.
அஃதெனவே
ஒருநாளேனும் வாழ்ந்துவிட்டால்
சிரித்தோ சலனமற்றோ சாகலாம்.

offwires