அணு ஆற்றலின் அரசியல் – பகுதி 3

இந்தக் கட்டுரையின் முதல் பாகம் | இரண்டாம் பாகம்

லட்சியக் குடியரசில், குடிமக்கள் தங்களது சமூகம் எதிர்நோக்கும் பல்விதப் பிரச்சினைகளை ஊக்கத்துடன் விவாதிப்பர். பிறகு தேர்தல், மனுக்கள், சமூக ஊடகங்கள் போன்றவற்றின் மூலம் அவர்கள் தம் கருத்துகளை அரசாங்கத்துக்குத் தெரிவிப்பர். அரசு தன் பங்குக்குப் பொதுமக்களின் கருத்துக்களை பிரதிபலிக்கும் கொள்கைத்திட்டங்களை முன்மொழிந்து அவற்றை செயல்படுத்தும்.

ஆனால், நிஜ வாழ்வில் குடிமக்களால் அரசாங்கத்தின் கொள்கைகளில் நேரடியாகச் செல்வாக்கு செலுத்த முடியாது; ஏனெனில், அரசாங்கம் பொதுமக்களின் கருத்துகளிலிருந்து மாறுபட்டு, தனக்கான தர்க்கப்படி செயல்படுகிறது. முதலாவதாய், அரசாங்கம் என்ற அமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகள் மற்றும் அரசு நிர்வாகிகளாலானது. இவர்களுக்கு, குடிமக்களின் தேவைகளுடன் ஒன்றுபடாத, அவர்களுடையதேயான சொந்த அக்கறைகள் இருக்கும். காட்டாய், ஜப்பானில் அரசியல்வாதிகளும் அரசு நிர்வாகிகளும் அணுமின்சக்தித் தொழில்துறையை பாதுகாப்பதின் மூலம் கணிசமான பொருள் வழி அனுகூலங்களைப் பெறுகின்றனர். டெப்கோ மற்றும் இதர மின் நிறுவனங்களிலிருந்து பல அரசியல்வாதிகள் தேர்தல் நிதி பெறுகின்றனர். அணு மின் நிலையங்களை நிறுவத் தேவையான இடத்தை கொடுக்கும் மாவட்டங்களுக்கு ஏராளமான அரசு மான்யங்களும், கட்டுமானப் பணித்திட்டங்களும் கிடைப்பதினால் உள்ளூர் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கு ஒரு வழியாய் அணுத்துறையை பராமரிப்பதாய் உறுதி அளிப்பதின் மூலம் அரசியல்வாதிகள் வாக்காளர்களின் ஆதரவை வெல்லமுடியும்.

japan-streets-peoples

அணுமின் தொழில்துறை அரசு நிர்வாகிகளுக்கும் பல ஆதாயங்களைத் தருகிறது. இத் தொழில்துறையை நிர்வகிக்க ஜப்பானிய அரசு பல முகமையங்கள், ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் அறநிறுவனங்களை உருவாக்கி இருக்கிறது. ஜப்பானின் ஆற்றல் கொள்கையின் முக்கியப் பகுதியாய் அணு ஆற்றல் ஒப்புக்கொள்ளப்படும் வரையில், இந்த ஸ்தாபனங்கள் மெடி (Ministry of Economy Trade and Industry -METI)யிலிருந்து ஓய்வு பெற்ற அரசு நிர்வாகிகளுக்கு ஸ்திரமான வேலை வாய்ப்பு அளித்துக்கொண்டிருக்கின்றன. மேலும் டெப்கோவும் இதர மின்சக்தி நிறுவனங்களும் மெடியுடன் தொடர்பு கொள்ளும் வேலைகளைச் செய்ய, ஓய்வுபெற்ற அரசு ஊழியர்களுக்கு நல்ல சம்பளத்தில் பதவிகள் கொடுக்க முன்வருகின்றன. அரசியல்வாதிகளுக்கும் அரசு நிர்வாகிகளுக்கும் உள்ள இத்தகைய ‘வெளிப்படையான’ ஆதாய நோக்குகள், பொதுமக்களின் கருத்துகள் ஜப்பானின் ஆற்றல் கொள்கைகளை உருவாக்குமளவு செல்வாக்கு பெறுவதைத் தடுக்க முடியும்.

ஆயினும் ஜப்பானிய குடிமுறை சமுதாயத்துக்கு (civil society) அரசாங்கத்தின் மேலுள்ள செல்வாக்கைக் கட்டுப்படுத்தும் இன்னொரு இயக்கமுறை, அவ்வளவு வெளிப்படையாக இல்லாததாயினும், அதிக சக்தியுடையதாக இருக்கிறது: அது, ஜனநாயக அரசாங்கத்தின் அங்கமாக இருந்தாலும், ஜனநாயகத் தன்மை இல்லாத அமைப்பாகப் பணியாற்றும் அரசுப் பணியாளர் அமைப்பு. மக்கள் வாக்களித்து அரசியல்வாதிகளைத் தேர்ந்தெடுக்க முடிந்தாலும், அரசை நிர்வாகம் செய்யும் அதிகாரிகள் தேர்தலின் முலம் அன்றி அவர்களின் தகுதிகளின் அடிப்படையில் நியமிக்கப்படுகிறார்கள். இருப்பினும், நவீன திரள்சமூக ஜனநாயகம் தன் கொள்கைத் திட்டங்களை வடிவமைக்கும் வழிமுறைகளை(process) நிர்வகிக்கும் நிர்வாகிகள் இல்லாமல் திறமையுடன் செயலாற்ற இயலாது. உண்மையில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளுக்கு சமூகப் பிரச்சினைகளை அலசுவது, அவற்றை ஆய்ந்து,கொள்கைகளை வடிவமைப்பது, மசோதாக்களுக்கு உருக்கொடுப்பது போன்றவற்றில் திறமை இல்லாததினால் அவர்கள் இவற்றுக்கெல்லாம் நிர்வாகிகளையே சார்ந்து இருக்கிறார்கள்.

அரசியல்வாதிகளின் மேல் அரசு அதிகாரிகளின் இத்தகைய ஆதிக்கம் ஜப்பானிய அரசாங்கத்தின் முக்கிய அம்சமாய் இருந்து வந்திருக்கிறது. 1990-களின் கடைசி வருடங்களில் அரசியல் சீர்திருத்தங்கள் அரசியல்வாதிகளின் அதிகாரத்தை அதிகமாக்கியபோதிலும், இன்னமும் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்கப்படும் பெரும்பான்மையான மசோதாக்களை அரசாங்க அதிகாரிகள்தான் வடிவமைக்கிறார்கள், அமைச்சர்கள் தொழில்களையும், ஊராட்சி அரசுகளையும் நிர்வாக ஆணைகள் மூலம் கட்டுப்படுத்தி வருகின்றனர். ஜப்பானில் அரசு அதிகாரிகள் அரசியல்வாதிகளை விட சக்திவாய்ந்தவர்களாய் இருப்பதினால், அணு சக்தியைக் கைவிடக் கோரும் இயக்கம் பல சமயங்களில் அரசியல்வாதிகளின் ஆதரவைப் பெற ஒருபக்கம் முயல்வதுடன் மறுபக்கம் அரசாங்க அதிகாரிகளுடன் நேரடியாகப் பேச்சு வார்த்தை நடத்த முயல்கிறது. எனினும் “அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகள்” என்ற பெயரில் அதிகாரிகளுடன் நடக்கும் பேச்சு வார்த்தைகள், ஃபுகூஷிமா பேரிடர் மற்றும் அதன் பின்விளைவுகள் சார்ந்த அரசாங்கக் கொள்கைகளின் மேல் இவ்வியக்கம் தாக்கம் பெறுவதற்குப் பல தடைகளை ஏற்படுத்துகிறது.

இயக்கத்தினருக்கும் அரசு அலுவலர்களுக்கும் இடையான கருத்துப்பரிமாற்ற சிக்கல்கள்

முதலாய், அரசு அலுவலர்களுக்கும் இயக்கத்தினருக்கும் இடையேயான குறுகிய அலைவிரிவே உள்ள தொடர்பு, இந்த இயக்கத்துக்கு ஆற்றல் சார்ந்த கொள்கைத்திட்டங்களில் தாக்கம் ஏற்படுத்தும் திறனை வெட்டிக்குறைக்கிறது. அரசு அதிகாரிகள் ஒப்பந்த மேஜைக்கு வருவதற்கு விருப்பமின்றி இருப்பது மட்டுமன்றி அவர்களது கருத்துக்களை மறுபரிசீலனை செய்யவும் தயங்குகிறர்கள். முன்னாள் அரசு அதிகாரிகள் திரும்பத் திரும்ப சுட்டிக்காட்டுவது போல, ஜப்பானின் அரசு நிர்வாகத்துறை மிகவும் சுயநிறைவு உடையது. பட்டப்படிப்பு முடித்த கையோடு ஒரு அமைச்சகத்தில் சேர்ந்தவர்கள் பணி ஓய்வு பெறும் வரையில் அதே அமைச்சகத்தில் தங்கி இருக்கிறார்கள். இத்தகைய வேலை நிலை, அரசு அதிகாரிகள் தங்கள் அமைச்சகத்துக்கு வெளியேயுள்ள உலக அனுபவத்தைப் பெறுவதற்குத் தடையாகிறது, மேலும் கொள்கைத்திட்டங்கள் சார்ந்த விஷயங்களைக் கையாள அவர்கள் உபயோகிக்கும் நிர்வாக மொழியையே எளிதில் புரியாததாக்கி, இறுகலாக்கி விடுகிறது. இதனால், அரசு அதிகாரிகளும் இயக்கத்தினரும் கலந்துரையாடக் கிடைக்கும் சமயங்களில் அந்த பேச்சுவார்த்தைகள் அவர்களிடையேயான “மொழி” பேதங்களினால் தடைப்படுகிறது.

காட்டாய், ஃபுகூஷிமா நகரத்தின் வடரி மாவட்ட மக்களும், அரசு சாரா அமைப்புகளும் அக்டோபர் 2011ல் அரசு அதிகாரிகளுடன் வெளியேற்றம் மற்றும் இழப்பீட்டுக்கான செயற்திட்டங்கள் பற்றிய ஒப்பந்தப்பேச்சு நடத்தினர். அணு உலை பேரிடருக்குப் பின் வடரி மாவட்டத்தில் உயர்ந்த அளவில் கதிர்வீச்சு தொடர்ந்து பதிவானது. ஃபுகூஷிமா நகரம் காற்றுக் கதிர்வீச்சு அளவு பற்றி ஜூனில் மேற்கொண்ட ஒரு அளவீடு மணிக்கு 3.2-3.8µSv என்று பதித்தது. இந்த அளவிலான மாசு வருடத்துக்கு 28-33mSv என்னும் அளவிலான கூட்டு கதிர்வீச்சு பாதிப்பை ஏற்படுத்தலாம். [சர்வதேச கதிர்வீச்சுப் பாதுகாப்புக்கான ஆய்வுக்குழு (The International Commission on Radiological Protection) வழமையான சூழலில் ஒரு வருடத்துக்கான பாதுகாப்பான கதிர்வீச்சு வெளிப்பாட்டு எல்லையை 1mSv என வரையறுத்திருக்கிறது]. கோபெ பல்கலைக்கழகத்தைச் (神戸大学 – kobe University) சார்ந்த பேராசிரியர் ஒருவரும் ஒரு அரசு சாரா அமைப்பும் கூட்டாய் மேற்கொண்ட நில மாசு பற்றிய ஒரு கருத்தாய்வும் மாவட்டத்தின் சில இடங்களில் மாசு அளவு செர்னோபில் பேரிடருக்குப் பின் பெலாரூஸ் மற்றும் செர்னோபில்லில் தனிமைப்படுத்தப்பட்ட மண்டலங்களின் அளவுக்கு இருந்ததை உறுதிப்படுத்தி இருக்கிறார்கள். அரசின் வெளியேற்றம் மற்றும் இழப்பீட்டுக்கான கொள்கைத் திட்டங்களின் காரணமாய் வடரியில் குடியிருந்த பலரும் வெளியேறத் தயங்கினர்: அரசு உத்தரவின்படி வெளியேற்றப்படவேண்டிய மண்டலங்கள் என்று அதிகாரபூர்வமாய் நியமிக்கப்பட்ட இடங்களின் குடியிருப்பாளர்களுக்கு மட்டுமே வெளியேற்றத்துக்கான செலவுகளை டெப்கோ ஈடு செய்யத் தேவையாய் இருந்தது. உயர்ந்த கதிர்வீச்சு அளவுகள் இருந்தபோதிலும் இந்த மாவட்டம் அதிகாரபூர்வமாய் வெளியேற்றப்பட வேண்டிய மண்டலமாய் அதிகார பூர்வமாய் அறிவிக்கப்படாததினால் வடரியின் குடியிருப்பாளர்கள் தம் வெளியேற்றத்துக்கான செலவுகளை தாமே சுமந்திருக்க வேண்டும். அவர்களில் பலருக்கும் அதை செய்யும் அளவு பொருளாதார வசதி இல்லை.

People leave Tokyo

அரசுடன் ஒப்பந்தப்பேச்சு நடத்துகையில், வடரியின் குடியிருப்பாளர்கள் பல சமயங்களில் விழுமியங்களைப் பற்றிப்பேசி உணர்ச்சிகளைத் தூண்டினர். கடுமையாய் மாசுபட்ட மாவட்டப்பகுதிகளிலிருந்து கதிர்வீச்சின் தீய விளைவுகளால் அதிகமான பாதிப்புக்கு சாத்தியம் கொண்ட குழந்தைகளைக்கும், கர்ப்பிணிப்பெண்களுக்குமாவது உதவி செய்ய அதிகாரிகளை இணங்கவைக்க முயலுகையில், பல குடியிருப்பாளர்களும் “குழந்தைகளின் பாதுகாப்புதானே மிக முக்கியமானது?” “உங்களுக்கும் குழந்தைகள் இருக்கிறார்கள்தானே, ஏன் உங்களால் எங்கள் கவலைகளைப் புரிந்துகொள்ள முடியவில்லை?” என்றெல்லாம் கேட்டனர். (இயக்கத்தினரிடமிருந்து இது போன்ற உணர்ச்சிகரமான கேள்விகள் அரசுடனான பேச்சுவார்த்தைகளின்போது சாதாரணமாய் எழுபவை. காட்டாய், நவம்பர் 20011ல் அணு உலைகளை மீண்டும் துவங்குவது பற்றிய பேச்சுக்களின் போது, இயக்கத்தினர் பலர் எழுந்து நின்று அரசு அதிகாரிகளிடம் வருங்கால சந்ததியினருக்காக அணு சார்ந்த கொள்கைத்திட்டங்களைத் தொடராமல் இருக்கும்படி இறைஞ்சினர்.)

ஆனால் அரசு அதிகாரிகள் உணர்ச்சிகளால் உந்தப்பட்ட இத்தகைய கேள்விகளுக்குப் பதிலே தரவில்லை. அரசு சாரா அமைப்பிலிருந்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்த பணியாளர்கள் கேள்விகளை நிர்வாகத்தின் மொழியில் மாற்றி வடிவமைத்தபோது தான் அரசு அதிகாரிகள் பதிலளிக்கத் துவங்கினர். காட்டாய், அரசு சாரா அமைப்பிலிருந்து பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டிருந்த ஒருவர் வடரி மாவட்டத்தின் பல பகுதிகளில் காணப்பட்ட கதிர்வீச்சு அளவு அரசு முன்பே வெளியேற்ற வேண்டிய இடங்களாய் அதிகாரபூர்வமாய் நியமித்த இன்னொரு ஊரின் சில பகுதிகளைவிட அதிகமானது என்று சுட்டிக்காட்டினார். இங்கே அவர் விழுமியங்களையும், உணர்ச்சிகளையும் மொழி பெயர்த்து நிர்வாகம் ஒரே நிலை நோக்குடன் கவனிக்கவேண்டிய விஷயமாய் இதை சொன்னார். இருப்பினும் இந்த மொழி பெயர்ப்பு அரசின் நிலையை மாற்றுவதில் வெற்றியடையவில்லை. அரசு தீர்மானம் செய்ய உபயோகித்த பல காரணிகளில் கதிர்வீச்சு அளவும் ஒன்று, அவ்வளவுதான் என்று ஒரு அதிகாரி பதிலளித்தார். அரசு சாரா அமைப்பிலிருந்து பேச்சுவார்தைகளில் ஈடுபட்டிருந்தவர் இவை என்னென்ன காரணிகள் என்று விளக்கிக் கூறுமாறு நெருக்கினார், ஆனால் அரசு அதிகாரி அதே பதிலை திரும்பக் கூறி வடரி மாவட்டத்தின் நிலைமையை அரசு தொடர்ந்து உன்னிப்பாய் கவனிக்கும் என்றும் கூறினார். பேச்சு வார்த்தை நடத்துபவரின் துருவல் அரசு அதிகாரியின் மழுப்பலான பதிலில் கூர்மழுங்கிப் போனது.

குடிமுறை சமூகத்துக்கும் அரசுக்கும் இடையே தடையாய் இருக்கும் திட்ட ஆணைக்குழுக்கள் (Policy Commissions):

தொடர்புக்கான பாதை குறுகலாய் இருப்பது ஒரு பிரச்சினை என்றால், அதைவிட, அரசாங்கம் தன் செயல்திட்டங்களை உருவாக்க ஆணையங்களைப் பயன்படுத்தும் நடைமுறையும், அணு ஆற்றலை படிப்படியாய் கைவிடத் தூண்டும் இயக்கத்துக்கு அரசாங்கத்திடம் செல்வாக்கு கிடைப்பதற்கான வாய்ப்பை இன்னமும் குறைக்கிறது. அரசு அதிகாரிகள் அரசு நிர்வாகத்தில் திறமைசாலிகளாய் இருந்தாலும், அவர்கள் கொள்கைத்திட்டம் சார்ந்த பிரச்சினைகளில் கணிசமான விஞ்ஞான அறிவு உடைய நிபுணர் குழுக்களை நம்பி இருக்கிறார்கள். காட்டாய், ஃபுகூஷிமா பேரிடர் மூலம் பிரச்சினைகள் வெளிப்படையாகத் தெரிய வந்திருக்கும் நிலையில், ஜப்பானின் ஆற்றல் கொள்கைத்திட்டத்தை எப்படிச் சீர்திருத்துவது என்று தீர்மானிக்க அரசு அதிகாரிகள் பொருளாதாரம், பொறியியல் மற்றும் சுற்றுச்சூழல் கொள்கை இன்னும் பல துறைகளில் தேர்ந்த பேராசிரியர்களின் ஆலோசனையை நாடுகிறார்கள். பொதுவாக இத்தகைய ஆலோசனை ஆணைக்குழுக்களின் மூலம் நடைபெறுகிறது. ஜப்பானில் அரசாங்க அதிகாரிகள் தொழில்நுட்ப ரீதியான பிரச்சினைகளைப் பற்றி கலந்தாலோசிக்கவும் கொள்கைத்திட்டங்களைப் பரிந்துரைக்கவும் ஆணைக்குழுக்களுக்கு நிபுணர்களை அடிக்கடி நியமிக்கிறார்கள்.

இருப்பினும், ஆணைக்குழுக்களுக்கான அங்கத்தினர்களின் தேர்வில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் நிலைமைக்கு சாதகமான கருத்துக்கள் இருப்பவர்களையே தேர்ந்தெடுக்கிறர்கள். இதற்கு ஒரு நல்ல உதாரணம் மெடி உருவாக்கிய இயற்கை வளம் மற்றும் ஆற்றல் பற்றிய விரிவான ஆராய்ச்சிக்கான ஆணையத்துக்கான (Commission for Comprehensive Research on Natural Resources and Energy )உறுப்பினர் தேர்வு. 25 ஆணைக்குழு அங்கத்தினர்களில் 8 பேர் மட்டுமே அணு சக்திக்கு எதிராய் எல்லா அணு உலைகளையும் உடனடியாய் மூடவேண்டும் என்பதிலிருந்து படிப்படியாய் எல்லா அணு உலைகளையும் மூடவேண்டும் என்கிற வரையிலான பல்வேறு எதிர்ப்பு நிலைப்பாடுகள் உடையவர்கள். இன்னும் பட்டவர்த்தனமான ஒருதலைசார்புக்கு ஒரு உதாரணம் கொள்முதல் செலவுகளுக்கான மதிப்பாய்வு ஆணையத்துக்கான (Evaluation Commission for Procurement Costs) அங்கத்தினர் தேர்வு. இந்த ஆணையத்தின் குறிக்கோள் புதிப்பித்துக்கொள்ளக்கூடிய ஆற்றலை மேம்படுத்துவதற்கான அடக்கவிலைக்கேற்றபடி விநியோக விலையை நிர்ணயிக்கும் முறையையும் (feed-in-tariff arrangements), அது நீடிக்கும் கால அளவையும் தீர்மானிப்பது; எனினும் மெடி இந்த ஆணையத்துக்கு பரிந்துரைத்த 5 பேரில் 3 பேர் கடந்த காலத்தில் புதிப்பித்துக்கொள்ளக்கூடிய ஆற்றலுக்கான அடக்கவிலைக்கேற்ற விற்பனைக் கட்டண அமைப்புகளை எதிர்த்தவர்கள்.

JAPAN-NUCLEAR/

அணு ஆற்றலை படிப்படியாய் கைவிடக்கோரும் இயக்கம் குழுக்களின் அங்கத்தினர் தேர்வில் ஓரளவு செல்வாக்குடன் செயல்படுவதில் வெற்றியடைந்தது என்பது நிச்சயம்தான். இயற்கை வளம் மற்றும் ஆற்றல் பற்றிய விரிவான ஆராய்ச்சிக்கான ஆணையத்தில் 8 உறுப்பினர்கள் அணு சக்தியை எதிர்ப்பவர்கள் என்பதே அணு சக்திக்கு சார்பான நிபுணர்களே ஆற்றல் சார்ந்த ஆணையங்களில் ஆதிக்கம் செலுத்திய கடந்தகால நிலையிலிருந்து முக்கியமான ஒரு மாற்றமாகும். அணு ஆற்றலை எதிர்க்கும் போராளிகளும், சுற்றுச்சூழல் சார்ந்த அரசு சாரா அமைப்புகளும், டயட் (ஜப்பானிய பாராளுமன்றம்) அங்கத்தினர்களின் ஆதரவை திரட்டி அவர்களில் பலரையும் திட்டமிடப்பட்ட உறுப்பினர் தேர்வை எதிர்ப்பதற்கு இசைய வைத்தபின் மதிப்பாய்வு ஆணையத்துக்கான (Evaluation Commission) அங்கத்தினர் தேர்வு நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.. இவ்விரண்டு உதாரணங்களிலும் இயக்கத்தினர், மேற்படி குழு அங்கத்தினர் தேர்வில் இருக்கும் பாரபட்சங்களைப் பொதுமக்கள் அறியச்செய்வது, அக்கறையுள்ள குடிமக்களைத் திரட்டி ‘மெடி’யின் வலைத்தளத்தில் குறிப்புரைகள் எழுதவைப்பது, தம் மாவட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல்வாதிகளை தொலைபேசியிலும் தொலை நகலியிலும் தொடர்பு கொள்வது போன்ற முயற்சிகளை ஐ சி டி (ICT) எனப்படும் தகவல் மற்றும் தொடர்புத் தொழில்நுட்பத்தின் உதவியுடன் செய்தனர்.. அணு ஆற்றலைக் கைவிடத் தூண்டும் இயக்கம் ஐ சி டிக்களின் மூலம் தன் செல்வாக்கை அதிகரிக்க முடியும் என்பதை இந்த முக்கியமான வெற்றி காண்பித்தாலும், ஜனநாயக சமுதாயத்தின் ஆளுகையின் அடித்தளத்தில் இறுக்கமாய் கட்டப்பட்டிருக்கும் நிபுணர்கள் சார்ந்த திட்ட அமைப்பை இந்த இயக்கம் தவிர்த்துச் செல்ல முடியாது என்பதையும் உறுதிப்படுத்துகிறது.

இதையே திருப்பிப்போட்டு சொன்னால், திட்டக்குழுக்களில் இருக்கும் நிபுணர்கள் இயக்கத்தினரின் கோரிக்கைகளுக்கு சாதகமாய் இருந்தால்தான் இயக்கத்தினர் முக்கியமான முன்னேற்றம் அடைய முடியும். ஃபுகூஷிமா பேரிடர் தொடர்பான குழுக்களில் இதுபோன்ற ஒரு குழு அணுசக்தியால் ஏற்பட்ட சேத ஈட்டுக்கான தகராறுகளை தீர்வு செய்யும் குழு.( Dispute Settlement Committee for Nuclear Damage Compensation), இதில் சில குழு உறுப்பினர்கள் விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களிடம் ஓரளவு இரக்கம் கொண்டிருந்தனர். முன்னமே சொன்னது போல், அரசு அதிகாரபூர்வமாய் வடரி மாவட்டத்தை வெளியேற்றத்துக்குரிய மண்டலமாய் குறிக்க மறுத்துவிட்டது. இருப்பினும் அரசு சாரா அமைப்புகளும், மாசுபட்ட மாவட்டத்திலிருந்து தாமாகவே வெளியேறிய வடரியின் குடியிருப்பாளர்களும் தாமாகவே வெளியேறியவர்களுக்கும் சேத ஈடு கொடுக்கவேண்டும் என்று தகராறுகளை தீர்வு குழுவை (Dispute Settlement Committee ) வற்புறுத்திக்கொண்டிருந்தனர். நீண்ட தீவிரமான பேச்சுவார்த்தைகள், போராளிகளின் விடாப்பிடியான ஆதரவு தேடும் முயற்சிகள் மற்றும் மறுப்புப் போராட்டங்கள் – இவற்றுக்குப் பின் தகராறுகளை தீர்வு செய்யும் குழு இறுதியாய் டிசெம்பர் 2011ல் டெப்கோ தாமாகவே வெளியேறியவர்களுக்கும் சேத ஈடு கொடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தனர். கூடுதலாய், தகராறுகளை தீர்வு செய்யும் குழு தாமாகவே வெளியேறியவர்களுக்குக் குறைவான வரையிலான சேத ஈட்டுத் தொகைகளையே (உதாரணமாய்,வயது வந்தவர்களுக்கு 80,000 யென்கள் , கர்ப்பிணிப் பெண்களுக்கு 400,000 யென்கள்) பரிந்துரைத்திருந்த போதும் குறிப்பிட்ட தொகைக்கு மேல் ஆகும் வெளியேற்ற செலவுகளுக்கு தாமாகவே வெளியேறியவர்கள் டெப்கோவிடம் கூடுதல் சேத ஈடு கோர அனுமதிக்கப்படவேண்டும் என்றும் இந்தக் குழு பரிந்துரைத்தது.

கொள்கைகளை உருவாக்குவதில் அணு ஆற்றலை படிப்படியாய் கைவிடக்கோரும் இயக்கத்தின் பலகீனம்:

உண்மையில் அரசு அதிகாரிகளையும் ஆணையக்குழுக்களையும் தவிர்த்து நேரடியாய் அரசு கொள்கைகளில் குறுக்கிடுவதற்கு ஒரு வழி இருக்கிறது: பொதுவாக்கெடுப்பு (Referendum). ஆயினும் ஜப்பானிய உதாரணம், பொதுவாக்கெடுப்பால்கூட நிபுணர்களைச் சார்ந்த கொள்கை அமைப்புத் திட்டத்தைத் தவிர்க்க இயலாது என்று காட்டுகிறது. உதாரணமாய் எதிர்ப்பாளர்கள், அறிவாளர்கள் மற்றும் அரசு சாரா அமைப்புகள் ஒரு குழுவாகி, ஜூன் 2001ல் தொடங்கிய அணு ஆற்றல் பற்றிய தேசிய அளவிலான பொதுவாக்கெடுப்புக்கான கூட்டமைப்பு (Association for a National Referendum on Nuclear Power). இந்த அமைப்பிற்கு இரண்டு குறிக்கோள்கள் இருந்தன. ஒன்று, டயட்டின் உறுப்பினர்களிடம் 2012 டயட் கூட்டத்தில் அணு ஆற்றல் பற்றிய தேசிய அளவிலான பொதுவாக்கெடுப்புக்கான சட்டமசோதாவை இயற்றுவதற்கான ஆதரவைப் பெறுவது. இந்த முயற்சி வெற்றியடைந்தால் இது ஜப்பானின் சரித்திரத்தில் முதலாவது தேச அளவிலான பொதுவாக்கெடுப்பாய் இருக்கும். இன்னொரு குறிக்கோள் டோக்யோ மாநகர் சூழலிலும் (prefecture) ஒஸாகா நகரத்திலும் பொதுவாக்கெடுப்பு நடத்துவதற்கான அனுமதியைப் பெறுவதற்குத் தேவையான அளவு கையெழுத்துக்களைத் திரட்டுவது. இத்ற்கு முன்னால் சிறிய நகராட்சிகள் அணு ஆற்றலைப் பற்றிப் பொதுவாக்கெடுப்புகள் நடத்தி இருந்தாலும், இந்தக் கூட்டமைப்பு ஜப்பானின் இரு மிகப்பெரிய அரசியல் மற்றும் பொருளதார மையங்களில் பொதுவாக்கெடுப்புக் கோரியது. பல அணு உலைகளின் உடைமையாளர்களான டெப்கோ மற்றும் கன்சாய் மின்சக்தி நிறுவனங்களின் மிகப்பெரிய பங்குதாரர்கள், முறையே டோக்யோ மாநகராட்சியும் ஒஸாகா நகரமும் ஆவன. டிசெம்பெர் 2011ல் பொதுவாக்கெடுப்புக்கான கூட்டமைப்பு டோக்யோவிலும் ஒஸாகாவிலும் கையெழுத்து திரட்டும் இயக்கத்தைத் தொடங்கியது. ஃபெப்ரவரி 2012க்குள் இந்த கூட்டமைப்பு இவ்விரண்டு பெருநகர்களிலும் பொதுவாக்கெடுப்பை அனுமதிப்பதற்குத் தேவையான கையெழுத்துக்களை திரட்டியது. இருப்பினும் இந்தக் கையெழுத்துத் திரட்டும் இயக்கம் நடப்பிலுள்ள் நிலைமையை ஆதரிப்பவர்களின் கடுமையான விமரிசனத்துக்கு உள்ளானது. மிக கவனிக்கத்தக்கதாக, டொக்யோவின் ஆளுனர் ஷிண்டாரோ இஷிஹாரா ஆட்சியரங்க அளவிலான பொதுவாக்கெடுப்பின் சாத்தியத்தை மூடுமறைப்பின்றி தள்ளுபடி செய்தார். ஏனெனில் “பொதுவாக்கெடுப்பை ஆதரிப்பவர்களிடம் அணுசக்திக்கு பதிலாய் ஒரு தெளிவான மாற்றுவழி இல்லை. அவர்களின் எதிர்ப்பு வெறுமே உணர்ச்சிபூர்வமானது.” இஷிஹாராவின் அறிக்கை அணு ஆற்றலைக் கைவிடக் கோரும் இயக்கத்துக்கு வேண்டுமென்றெ மதிப்புக்கேட்டை ஏற்படுத்தும் அர்த்தத்துடன் சொல்லப்பட்டிருந்தாலும் அதில் சிறிதளவு உண்மை இருந்தது: கையெழுத்து திரட்டல் இயக்கத்தில் அடிக்கடி தார்மீக வாதங்களை செய்யும் வழக்கமான முறையில் அணுசக்தியை எதிர்க்கும் அரசு சாரா அமைப்புகளின் ஆதிக்கம் இருந்தது: காட்டாய், அணு சக்தி ஏற்கமுடியாத ஒன்று ஏனெனில் அது மனித இனத்துக்கு அச்சுறுத்தலானது என்ற வாதம். அவர்களது அணு எதிர்ப்பு நடவடிக்கைகள் ஹிரோஷீமா மற்றும் நாகசாகியில் நடந்த அணுகுண்டு வெடிப்புகளின் நினைவுகளின் அடிப்படையில் இருப்பதால் அவர்கள் தார்மீக வாதங்களில் ஈடுபடுகிறார்கள். அணு சக்தியை தார்மீக ரீதியில் புறக்கணிப்பது மக்களின் உணர்சிகளுக்கு அழைப்பு விடுத்து அவர்களை ஒன்றுதிரட்ட உதவினாலும், அது அணு ஆற்றலைக் கைவிடும் இயக்கத்தை அணு சார்பான அரசியல்வாதிகள், ஆய்வறிவாளர்கள், மற்றும் அணு ஆற்றல் பற்றிய சரியான தகவல் இல்லாத அல்லது அணு ஆற்றலுக்கான மாற்று வழிகளில் நம்பிக்கை இல்லாத பெரும்பாலான ஜப்பானிய மக்களின் விமரிசனங்களுக்கு உரியதாய் ஆக்குகிறது.

ஜப்பானின் அணு ஆற்றலைக் கைவிடக் கோரும் இயக்கம், வழக்கமான அணு எதிர்ப்புக்கான அரசு சாரா அமைப்புகள் மட்டுமன்றி சுற்றுச்சூழல் சார்ந்த பிரச்சினைகள் கொள்கைகள் இவற்றில் கவனம் செலுத்தும் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் தி எர்த் ஜப்பான் (Friends of the Earth Japan, ) போன்ற புதிதான, செயல் கொள்கை வடிவமைப்பில் கவனம் செலுத்தும் அரசு சாரா அமைப்புகளையும் உள்ளடக்கியது. இத்தகைய செயல் கொள்கையிலும் சுற்றுச்சூழலிலும் அக்கறை கொண்ட அரசு சாரா அமைப்புகள் அணு ஆற்றலைப் படிப்படியாய் கைவிடுவதற்கும், புதிப்பித்துக்கொள்ளக்கூடிய ஆற்றல் வகைகளை மேம்படுத்துவதற்குமான விரிவான கொள்கைத் திட்டங்களை முன்மொழிந்துள்ளனர். எனினும் இயக்கத்தின் இந்தப் புதிய பகுதி பலமற்றதாய் இருக்கிறது. லாபநோக்கற்ற முயற்சிகளை ஆதரிப்பதற்கான சட்டத்தை (Nonprofit Activities Promotion Law ) அரசு 1998 ல் இயற்றிய போதிலும், ஜப்பானில் அரசு சாரா அமைப்புகள் இன்னும் நிதி, நிறுவனம் மற்றும் மனிதவளம் போன்றவற்றில் பற்றாக்குறையுடன் இருக்கின்றன. ஒரு சில அரசு சாரா அமைப்புகளுக்கே விரிவாய் கொள்கைகளை அலசுவது, கொள்கைகளை வடிவமைக்கும் நடவடிக்கைகள் போன்றவற்றில் ஈடுபடுவதற்கு முழு நேரப் பணியாளர்களை அமர்த்த வசதி இருக்கிறது, ஆனால் இவர்கள் கூட தன்னார்வ ஊழியர்களை வெகுவாக நம்பி இருக்கிறார்கள். கொள்கை அலசல் மற்றும் கொள்கை உருவாக்க நடவடிக்கைகள் போன்றவற்றில் இருக்கும் இந்த பலவீனம் அரசின் ஆற்றல் கொள்கைகளில் இந்த இயக்கம் தாக்கத்துடன் செயல்படுவதற்குத் தடையாய் இருக்கிறது.

ஜனநாயக ஆட்சியில் நிபுணர்களின் பங்கு:

newsmlmmd_47b8739dd340ee94d48360400233d5dc_2510_japan-s-top-securities-firm-nomura-holdings-has-b

இப்படி, ஜப்பானில் அணு ஆற்றலைக் கைவிடக் கோரும் இயக்கம் அரசின் கொள்கைகளை அமைப்பதில் ஆற்றலுடன் செயல்படுவதில் பல சிரமங்களை எதிர்நோக்குகிறது. துவக்கத்தில், அரசு அதிகாரிகள் இயக்கத்தினரை கொள்கைகளை உருவாக்கும் முறையிலிருந்து இரண்டு வழிகளில் கழட்டி விடுகின்றனர். ஒன்று, அரசு அதிகாரிகள் கொள்கை உருவாக்கத்தில் தற்சார்புடன் இருக்கிறார்கள். பொதுமக்களின் கோரிக்கைகள், அரசு நிர்வாகம் உபயோகிக்கும் புரியாத மொழியில் வடிவமைக்கப்பட்டாலன்றி அவர்கள் அவற்றைக் “கேட்பதே” இல்லை. இரண்டாவதாய், அவர்கள் ஆணைக் குழுக்களின் உறுப்பினர்களைத் தேர்வு செய்வதில் ஒருதலைப்பட்சமாய் செயல்படுகிறர்கள். பெரும்பாலான நேரங்களில் அவர்கள் தற்போதைய நடைமுறை நிலைக்கு சார்பாய் இருப்பவர்களையே தேர்வு செய்கிறார்கள். இதன் விளைவாய், இயக்கத்தை சார்ந்தவர்களுக்கும் அரசின் பிரதிநிதிகளுக்கும் இடையே கொள்கைகளை விவாதிக்க ஒரு குறுகிய தொடர்பு வழிப்பாதையே இருக்கிறது. மேலும் இயக்கத்தினருக்கு கொள்கைகளை அலசி ஆய்ந்து மாற்றுக் கொள்கைகளை வடிவமைப்பதற்கான திறமை மட்டுப்பட்டு இருக்கிறது. இது இயக்கத்தை, அணு ஆற்றல்தான் ஒன்றே வழி என்று இருக்கும் நடைமுறை நிலைக்கு சவால் விட முடியாதபடியான நிலையில் வைக்கிறது. இன்னொரு வகையில் சொன்னால், புதிதாய் கிடைக்கப்பெற்றுள்ள ஐ சி டிக்கள் (ICT) இயக்கத்தினர் தங்கள் கருத்துக்களைத் தெரிவிப்பதற்கான வழிப்பாதையின் அகலத்தை விரிவாக்கினாலும், அவர்களின் கருத்துக்கள் எவ்வளவு தூரம் அரசிடம் சாதகமான பாதிப்பை ஏற்படுத்த முடியும் என்பது, பரிந்துரை செய்து கொள்கைகளை வடிவமைக்கும் ஆற்றல் உள்ள நிபுணர்களுக்குத் தனிச்சலுகை அளிக்கும் அரசு முறையால்தான் அடிப்படையில் வழிநடத்தப்படுகிறது.

இங்கேதான் ஜனநாயக அரசில் நிபுணர்களின் பங்கு முக்கியமான பிரச்சினைகளை வெளிக்காட்டுகிறது.

முதலாக, ஐசிடி-கள் நாட்டின் குடிமக்களுக்குக் கிடைக்கும் தகவல் அளவை அதிகரித்தாலும், நிபுணர்களுக்கும் நிபுணத்துவம் இல்லாத இதர குடிமக்களுக்கும் இடையே ஒரு விஷயத்தைப் பற்றிய அறிவில் பெரிய இடைவெளி இருக்குமானால், அவர்களிடையே நடக்க வேண்டிய முக்கியமான விவாதம் தடைப்பட்டுப்போகும். ஃபுகூஷிமா பேரிடர் பற்றிய விவாதத்தில் இப்படி அடிக்கடி நடப்பதன் காரணம், விவாதத்துக்குரிய விஷயம் கதிர்வீச்சு, ஆற்றல் பாதுகாப்பு மற்றும் பொறியியல் போன்ற மிகத் தொழில் நுட்பமான விஷயங்களைச் சார்ந்தாய் இருப்பது..இது போன்ற தருணங்களில், ஜனநாயக சமுதாயத்தின் சமமான உறுப்பினர்களிடையே நடக்க வேண்டிய விவாதம் ஒரு தலைப்பேச்சாய் மாறி, நிபுணர்கள் குடிமக்களுக்கு உரை நிகழ்த்துவது போல் ஆகிவிடக்கூடும். குடிமக்கள் அப்படியும் கேள்விகள் கேட்கலாம்தான் ஆனால் கேள்விகள் எளிமையானதும், சந்தேகம் தீர்க்கும் வகையிலும் இருக்கும். ஏனெனில் அவர்களுக்கு நிபுணர்களின் கூற்றுக்களுக்கு சவால் விடும் அளவிலான விஷய ஞானம் கிடையாது. இப்படியே, ஐசிடிக்கள் குடிமக்களுக்கும் நிபுணர்களுக்கும் கருத்து வெளிப்பாட்டுக்கு ஒரே அளவு அனுமதி கொடுத்தாலும் அவர்களுக்கிடையே உள்ள ஏற்றத்தாழ்வை அகற்ற முடியாது. மேலும் நிபுணர்களுக்கும் குடிமக்களுக்கும் இடையேயான ஏற்றத்தாழ்வின் அச்சு, .இரு வெவ்வேறு வகை நிபுணர்களுக்கும் குடிமக்களுக்கும் இடையே உள்ள ஏற்றத்தாழ்வின் அச்சுடன் குறுக்கே வெட்டுகிறது.

விஞ்ஞானப் பிரச்சினைகளில் நிபுணர்கள் அனேகமாய் எப்போதுமே திடமான ஒத்தக் கருத்துடன் இருப்பதில்லை. இதனால்தான் இந்த இழுபறி விஞ்ஞான உண்மைக்காக என்றல்லாமல் விஞ்ஞானச் சர்ச்சையே எனப்படுகிறது. ஃபுகூஷிமா பேரிடர் மற்றும் ஜப்பானின் ஆற்றல் கொள்கை பற்றிய ஆணையங்களில் குழு உறுப்பினர்களிடையே கடுமையான உடன்பாடின்மை அபரிமிதமாய் நிலவுகிறது. இன்னொரு விதமாகச் சொன்னால், போட்டியான நிலைபாடுகளுடைய வெவ்வேறு குழுக்களாய் விஞ்ஞான நிபுணர்கள் பிரிந்து இருக்கிறார்கள், இவை ஒன்றொன்றுக்கும் குடிமக்கள், அரசியல்வாதிகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் கொண்ட வெவ்வேறு ஆதரவாளர் கூட்டங்கள் இருக்கின்றன. இதன் விளைவாய் ஐசிடிக்கள் மக்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் திறனை ஜனநாயகமாய் எல்லோருக்கும் சமமாய் கிடைக்கும்படி செய்தாலும், வெவ்வேறு குழுக்களில் உள்ள மக்களுக்கு ஒரே சமமான செல்வாக்கு கிடைக்காது. அதிக நிபுணர் அந்தஸ்தையும், அதிக அரசியல் மற்றும் பொருள் வளத்தைத் திரட்டக்கூடிய குழுதான் ஜனநாயக சமுதாயத்தில் இதர குழுக்களின் மேல் தன் ஆதிக்கத்தை செலுத்தும்

ஜப்பானில் நடைமுறையில் இருக்கும் நிலைமைக்கு ஆதரவானவர்கள், ஃபுகூஷிமா பேரிடருக்குப் பின்னும் ஆதிக்கத்துடனும் அணு ஆற்றலுக்கு ஆதரவாகவும் இருந்து வருகிறார்கள். அடுத்த இதழில், தற்போதைய நிலைமைக்கும் அணு ஆற்றலைக் கைவிடக்கோரும் இயக்கத்துக்கும் இடையான ஏற்றத்தாழ்வு, ஜப்பானின் தனிப்பட்ட வகை சமூக கட்டமைமைப்புகளால் எப்படி உருவாக்கப்படுகிறது என்பதை ஆராய்வேன்.