வாசகர் மறுமொழி

s71
[stextbox id=”info” caption=”துருவநட்சத்திரம்”]

இசையுலகின் பிதாமகர்களையும் இளவல்களையும் குறித்து எழுத மிகச்சிறப்பான திறமைகள் கொண்ட ஒரு எழுத்தாளர் கிடைத்துள்ளார். கர்நாடக சங்கீத மரபின் தொல்வானில் அவரது உதயத்தைக் கண்டு நான் மிகவும் மகிழ்ச்சி அடைகின்றேன். பெரும்புகழ் படைத்த மறைந்த இசைமேதை ஸ்ரீ ஜி.என்.பாலசுப்ரமண்யம் அவர்களைப் பற்றிய அவரது முதல் புத்தகத்தை நான் வாசித்தபோதே திரு.லலிதா ராம் என் கவனத்தைக் கவர்ந்தார்.  குறிப்பாக அவரது எழுத்து நடையைச் சிறப்பித்துப் பேச வேண்டும். கர்நாடக சங்கீதத்தைப் பாமரரும் பண்டிதரும் கூர்ந்து செவித்த அந்த நாட்களுக்கு வாசகர்களை அவரது எழுத்து இட்டுச் செல்கிறது.  ஒரு புத்தகத்தின் வீச்சனைத்தையும் ஒரே மூச்சில் வாசித்து முடித்துவிடும் வகையில் தன் வாசகனின் கவனத்தை நிலைநிறுத்திக் கொள்ள மேதைமை கொண்ட எழுத்தாளர்களால் மட்டுமே முடியும். அவர் வெவ்வேறு இடங்களிளிருந்து நுணுக்கமாகத் திரட்டித் தரும் நேரடித் தகவல்கள் ஒரு மாபெரும் சாதனையாகும். அது சாதாரண மனிதர்களால் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாதது.
திரு.லலிதா ராம் எழுதிய “துருவ நட்சத்திரம் – காலம் சென்ற பழனி சுப்ரமணிய பிள்ளையின் வாழ்க்கைக் கதை” என்ற புத்தகத்தை என் அபிமான புத்தகக்கடையில் காண நேர்ந்தது. அந்த இளம் எழுத்தாளரின் பெயரைக் கண்டவுடன் நான் புத்தகத்தைக் கையில் எடுத்துவிட்டேன்.  புத்தகத்தைப் படிக்கத் துவங்கிய இரண்டே மணி நேரத்தில் 224 பக்கங்கள் அனைத்தையும் படித்து முடிக்கும் வரை நேரம் போனதே எனக்குத் தெரியவில்லை. புத்தகத்தைப் படித்த என் நண்பர்கள் அனைவரும் கூறிய ஒரு தகவலை நான் மகிழ்ச்சியுடன் உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன் : அவர்கள் கர்நாடக இசையை முறைப்படி இவ்வளவு காலம் பயின்றிருந்தும் தாள வாத்திய உலகின் இவ்வளவு இசைக்கருவிகளைப் பற்றி இத்தனை முழுமையான தகவல்களை மட்டுமல்ல,  அவற்றை இசைத்த கலைஞர்களையோ, அவர்கள் எவ்வளவு சிரத்தையோடு தங்கள் கருவிகளை வாசித்துப் பழகினர் என்பதையோ அறிந்திருக்கும் வாய்ப்பு இதுவரை தங்களுக்குக் கிடைத்ததே இல்லை என்று அவர்கள் கூறினார்கள்.
இதுபோன்ற கல்விச் செறிவுள்ள புத்தகங்களை நீங்கள் இன்னும் அதிக எண்ணிக்கையில் பதிப்பித்து இசை நூலகத்துக்கு வளம் சேர்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். திரு.லலிதா ராம் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவிக்கவும்.

இப்படிக்கு,
சங்கீதரத்னம் டி.எஸ்.ராஜகோபாலன், சங்கீதாஸ்ரமம்

[/stextbox]

[stextbox id=”info” caption=”முனைவர் இராம.கெளசல்யாவின் கட்டுரை”]முனைவர் இராம.கெளசல்யாவின் கட்டுரை பல ஆண்டுகளின் இசை அனுபவங்களை மிக சுவையாக, அழகாக வர்ணிக்கிறது. இசைக் கல்லூரி மாணவியாகவும், அதே கல்லூரியின் முதல்வராகவும் இருந்த அவருக்கு எத்தனை பெரிய ஜாம்பவான்களுடைய பழக்கமும், அவர்களுடைய இசைப் பயணங்களின் சுவையான நிகழ்ச்சிகளும் கிடைத்திருக்கின்றன. அவர் கொடுத்து வைத்தவர் என்பதைக் காட்டிலும் அவர் சொன்ன அத்தனை செய்திகளையும் படிக்கக் கொடுத்து வைத்த நாம் பாக்கியசாலிகள்.

வி. கோபாலன், தலைவர், திருவையாறு அய்யாரப்பர் நாட்யாஞ்சலி ட்ரஸ்ட்

(VGopalan, President, Tiruvaiyaru Ayyarappar Natyanjali Trust.)

[/stextbox]

[stextbox id=”info” caption=”குற்றமும் புனைவும் – தொடர்”]அஜய் எழுதிவரும் குற்றமும் புனைவும் தொடர் சுவாரசியமாக இருக்கிறது. Crime Fiction மீது ஆர்வமில்லாத எனக்கு இது புதிய வாசல்களைத் திறப்பதாக இருக்கிறது. அஜய் கொடுக்கும் மேற்கோள்கள் குற்றப்புனைவில் கூட இதெல்லாம் சாத்தியமா என்ற ஆச்சரியத்தைக் கொடுக்கிறது. மேலும் கட்டுரையில் வேறு பல புத்தகங்களையும் அஜய் மேற்கோள் காட்டுவது அவருடைய வாசிப்பின் வீச்சைக் குறித்தும் எனக்கு வியப்பைத் தருகிறது.

அஜய்க்கு என் வாழ்த்துகள்.

அ.கண்ணையன்

[/stextbox]

[stextbox id=”info” caption=”இதழ் 66″]இந்த சொல்வனம் இதழில் “ரிக்யு” – தேனீரின் பாதையில் இரு கலைஞர்கள்” என்ற திரைப்படக் கட்டுரையும், ரவி நடராஜன் எழுதி வந்த எண்ணை பிரச்சினை குறித்த தொடரும் மிகவும் சிறப்பாக இருந்தன. ரவி நடராஜன் கட்டுரையில் சமீபத்திய டெட் வீடியோவை இணைத்திருந்தது சிறப்பு. இதழ் வெகு தாமதமாக வந்ததும், இதழில் சுகாவின் கட்டுரை எதுவும் இல்லாததும் ஏமாற்றத்தைக் கொடுத்தன.

அன்புடன்,

மாலதி

[/stextbox]