உலகமே ராஹுல் திராவிடிலிருந்து சச்சினுக்குத் தாவிய பின்னர் திராவிடைப் பற்றி மீண்டும் பேசுகிறோம்.
அவசரகதியில் பல்லாயிரக்கணக்கான மைல் நீளமுள்ள சுவர்களுக்கு வெள்ளையடிக்கும் பணியில் பெரும்பாலானோர் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது, பக்கத்தில் 5 அடிக்கு 5 அடி கேண்வாஸில் அரைமணி நேரமாய் ஒரே ஒரு கோடு வரைந்துக் கொண்டிருப்பவனை பைத்தியம் என்றுதான் சொல்லவேண்டும், வெள்ளையடிப்பதற்கும் ஓவியத்திற்கும் வித்தியாசம் தெரியாவிட்டால். அப்படிப் பலரின் விமர்சனங்களையும் வாங்கிக்கொண்டு பொறுமையாக வரைந்து முடித்து, ஓவியத்தை ஒரு அழியாச்சின்னமாக விட்டுச் சென்று இருக்கிறார் திராவிட். கிரிக்கெட்டே வண்ணமயமான ஒரு கோலாகலமாக மாறிக்கொண்டிருக்கும் போது, whites ரசிகர்களுக்கான ஆதர்சம் திராவிட்.
திராவிடுக்குப் பின்னர் கோஹ்லிதான் என்கிறார்கள் கிரிக்கெட் பீஷ்மர்கள். அந்த இடத்தில் வைக்கப்பட, தற்போது விளையாடும் யாருக்கும் தகுதியில்லை என்பது என் கருத்து. திராவிட் ஒரு கலவை – மரபு சார்ந்த ஆட்டமுறைகள் மட்டுமே ஆடத்தெரிந்த, தோற்கும்போதும், சிரமமான சூழ்நிலையின்போதும் விட்டுக் கொடுக்காத, தோற்றால் மீடியாவிற்கு நடுவிரலை உயர்த்திக் காட்டாத, தன்னுடைய ஒவ்வொரு செயலிலும் பேச்சிலும் செவ்வியல் தன்மை தோன்றும்படி நடந்துக் கொள்ளும் ஒரு கலவை. அந்தக் கலவை கிரிக்கெட்டில் இனிமேல் தோன்றும் என்ற நம்பிக்கையில்லை. அப்படி யாரேனும் தோன்றினால் மகிழ்ச்சியே.
அவரது சமகாலத்திலும் திராவிடுக்கு இணையாக ஸ்டீவ் வாவைத் தவிர வேறு யாரையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. ஸ்டீவிடம் இருந்து திராவிடிடம் இல்லாத ஒரே விஷயம் என்று நான் கருதுவது, விளையாடும்போது எதிரணியை எதிரி அணியாகவே பார்க்கும் போர் குணம். அந்த விஷயம்தான் ஸ்டீவை ஒரு மிகச்சிறந்த தலைவனாக உயர்த்திக் காட்டியது. கிரிக்கெட்டின் போக்கையே மாற்றியது அக்குணம். அவர் ஆடும் வரை, ஸ்டிவ் வா தான் என் ஆதர்ச கிரிக்கெட் வீரர். அவருக்குப் பின் திராவிட்தான். இருவரும் சமரசமே இல்லாமல் ஆடியவர்கள். இருவருமே அணியில் மற்றவர்கள் அனைவரும் சரிந்தாலும் ஒரு முனையில் எதுவுமே நடக்காதது போல் கர்மமே கண்ணாக ஆடக்கூடியவர்கள்.
இந்திய வீரர்களைப் பொருத்தவரை போராட்ட குணம் என்பது நவீனகால கிரிக்கெட் வீரர்களின் அம்சமாகவே இருக்கிறது. கபில்தேவ் 1983 உலகக்கோப்பையில் ஜிம்பாப்வேவுக்கு எதிராக ஆடிய ஆட்டம் அக்காலத்தில் யுகத்தில் ஒரு நாள் நிகழக்கூடிய நிகழ்வு. துரதிருஷ்டமான விஷயம் என்னவென்றால், நவீனகாலத்திலும் இந்த போராட்ட குணம் முழுமையான வடிவம் பெறவில்லை. ஆனால், அக்குணம் இந்திய கிரிக்கெட்டில் இப்போது இருக்கும் நிலையை எட்டுவதற்குக் காரணம் Indian Trinity என்று அழைக்கப்படும் கங்குலி, சச்சின் மற்றும் திராவிட்தான். லக்ஷ்மணை சேர்க்கவில்லை என்று யாரும் கோபப்படவேண்டாம். ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் என்ற இரண்டு வடிவத்தையும் சேர்த்துப் பேசும்போது லக்ஷ்மணை விட வேண்டியிருக்கிறது. இந்தக்கூட்டணிக்குப் பின் வந்த இளைஞர்கள் அனைவரிடமுமே இந்தப் போராட்ட குணம் இயல்பாகவே இருப்பதை நீங்கள் காணலாம். அந்தப் புள்ளியில்தான் திராவிடின் பங்களிப்பு அசாதாரணமாக இருந்திருக்கிறது.
திராவிடின் பங்களிப்பை, அவர் கிரிக்கெட் விக்கெட்டில் நிகழ்த்திக் காட்டிய சாதனைகளை மட்டும் வைத்துக் கொண்டு பேசினால், அது எண்ணிக்கை சம்பந்தப்பட்ட உரையாக முடிந்து விடும். மிக அதிகமான பந்துகளை எதிர் கொண்ட பேட்ஸ்மேன், டெஸ்ட் போட்டிகளில் மிக அதிகமான கேட்ச்களைப் பிடித்தவர் (C Dravid B Kumble என்று இல்லாத ஸ்கோர்போர்டைப் பார்ப்பது அப்போது அரிது), தொடர்ச்சியாக மூன்று தொடர்களில் இரட்டை சதம் அடித்தவர் என்று பல எண்ணிக்கை சார்ந்த சாதனைகள் அவர் பெயரில் உள்ளன. ஆனால், அவர் ஆடிய ஆட்டங்களில் முக்கியமானது என்று என்னளவில் நான் கருதுவது, 3 ஆட்டங்கள் – எல்லோருக்கும் தெரிந்த 2001 கொல்கத்தா டெஸ்ட் போட்டி, கிரிக்கெட் ரசிகர்களால் மறக்கவே முடியாத 2003 அடிலைட் டெஸ்ட் போட்டி மற்றும் 2004 ராவல்பிண்டி டெஸ்ட்.
காரணங்கள் முழுவதும் தொடர் சார்ந்தவை, திராவிடின் தனிப்பட்ட சாதனைகள் சார்ந்தவை அல்ல. 2001 தொடர் பற்றி ஏற்கனவே சொல்வனத்தில் எழுதியிருக்கிறேன். 2003 தொடரில் முக்கியமாக அடிலைட் டெஸ்டில், ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய முதல் இன்னிங்க்ஸ் ஸ்கோரை எதிர் கொண்டு பதிலடி கொடுத்தது இந்தியா. அதில் மிகப்பெரிய பங்கு திராவிட் மற்றும் லக்ஷ்மணுடையது. அவர்கள் இருவரும் ஏறக்குறைய 2001 கொல்கத்தா ஆட்டத்தை ஆஸ்திரேலிய மண்ணில் மீண்டும் நடத்திக் காட்டினர். அந்த ஆட்டத்தில் தோல்வி அடைந்ததன் மூலம் முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியாவுடன், தொடரைக் காப்பாற்ற வேண்டிய கட்டாயத்திற்கு ஆஸ்திரேலியா தள்ளப்பட்டது. அந்தத் தொடரின் கடைசி ஆட்டத்தில் சிட்னியில், பார்த்திவ் படேல், ஸ்டீவ் வாவிற்கு ஒரு லட்டு ஸ்டம்பிங் வாய்ப்பை விட்டதால் அந்த ஆட்டம் ட்ராவில் முடிந்து தொடரும் வெற்றி தோல்வியின்றி முடிந்தது. ஆஸ்திரேலிய மண்ணில், இன்றளவில் இந்தத் தொடருக்கு ஈடாக இந்தியா விளையாடிய இன்னொரு தொடரைக் காட்ட முடியாது. பொதுவாக ஆஸ்திரேலியாவில் தொடரின் கடைசி ஆட்டத்திற்கு முன்பே தொடரின் முடிவு தெரிந்து விடும். ஆனால் இந்தத் தொடரில் கடைசி நாள் வரை, ஆஸ்திரேலியா இந்தியாவிடம் தோல்வியைத் தவிர்க்கப் போராடிக் கொண்டிருந்தது. அந்தத் தொடரின் ஆட்ட நாயகனும் திராவிட்தான்.
மூன்றாவது ஆட்டம், ராவல்பிண்டி டெஸ்ட் – அந்த ஆட்டத்தையும் தொடரின் காரணமாகவே முக்கியத்துவப்படுத்துகிறோம். இந்தத் தொடரின் துவக்கம் வரை, பாகிஸ்தான் மண்ணில், இந்தியா தொடரை வென்றதே இல்லை. திராவிட் தலைமையில் முதல் டெஸ்டில் இந்தியா அபார வெற்றி (ஷேவாகுக்கு முல்தானின் சுல்தான் என்று பட்டம் வாங்கிக் கொடுத்த ஆட்டம்). இரண்டாவது டெஸ்டில் பாகிஸ்தான் வெற்றி. மூன்றாவது டெஸ்டில், திராவிட் அபாரமாக விளையாடி 270 ஓட்டங்கள் எடுத்து, இந்தியாவின் வெற்றிக்கு வழி வகுத்தார்.
அவர் சதம் (36 சதங்கள்) அடித்து டெஸ்ட் போட்டிகளில் இந்தியா தோற்ற ஆட்டங்கள் நான்குதான் (அதில் 3 சமீபத்திய இங்கிலாந்து தொடரில் அமைந்த ஆட்டங்கள்.) அவரது தனிப்பட்ட சாதனைகள் பெரும்பாலும் இந்தியாவின் வெற்றியைச் சார்ந்தே அமைந்திருக்கின்றன. அதே போல ஒரு நாள் சதங்களும் – அவர் முதன் முதலாக ஒரு நாள் போட்டிகளில் சதம் அடித்த ஆட்டத்தில் சயித் அன்வர் உலக சாதனை ஸ்கோர் அடித்தார்.
ஆனால், இவற்றையெல்லாம் விட அவரது மிகப்பெரிய பங்களிப்பு என்று நான் கருதுவது, அவர் ஒரு மரபை விட்டுச் சென்றிருக்கிறார். அவரது எண்ணிக்கை அடிப்படையிலான சாதனைகள் எதிர்கால ரன் மெஷின்களால் முறியடிக்கப்பட்டாலும், அவரை மரபை எடுத்துச் செல்லும் ஒருவரே கிரிக்கெட்டில் திராவிடின் இடத்தை நிரப்ப முடியும்.
திராவிடைச் சார்ந்து இருக்கும் விஷயங்கள் அனைத்துமே மரியாதைக்குரியதாகத்தான் இருந்தன. ஒரு விஷயம் ரசிக்கத்தக்கதாக இருப்பதைக் காட்டிலும், மரியாதைக்குரியதாக இருப்பது அவசியம் என்பது என் போன்ற பத்தாம்பசலிகளின் கருத்து. அவர் முடிவுகள் அனைத்துமே சரியான சமயத்தில் அமைந்த முடிவுகள். மூத்த கிரிக்கெட்டர்கள் ஓய்வு பற்றி இந்தியா பேச ஆரம்பித்தவுடன் பலரும் எதிர்பார்த்தது லக்ஷ்மணின் ஓய்வைத்தான். ஆனால், தன் பணி முடிந்து விட்டது என்று திராவிடுக்குத் தோன்றியிருக்க வேண்டும். சமீபத்திய இங்கிலாந்து தொடருக்குப் பின் திராவிட் டெஸ்ட் ஆட்டங்களின் அத்தியாவசிய அங்கமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம்தான் பலருக்கும் இருந்தது. அந்த எண்ணத்துடன் மக்கள் இருக்கும்போதே விடை பெறுதலே, திராவிட் இத்தனை காலம் ஆடிய ஆட்டத்திற்கு மரியாதை. உண்மையில், இங்கிலாந்து ஆட்டங்களில் அவர் வெளிப்படுத்திய ஃபார்ம் அவர் கடுமையான உடலுழைப்பு மற்றும் மனபலத்தால் வெளிக் கொண்டுவந்த ஆட்டம். அப்போதே சிங்கம் இளைத்தற்கான அறிகுறிகள் தெளிவாகத் தென்பட்டன. இருப்பினும், மனம் தளராமல் தூணாக நின்ற அந்த குணம்தான் அவர் விட்டுச் சென்ற மரபு. ஆஸ்திரேலியாவில் அவர் திணறியபோது, இரையை விரட்ட முடியாத கிழட்டு சிங்கம் மூச்சு வாங்கி நிற்கும் தோற்றமே ஏற்பட்டது.
சச்சினை இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக மக்கள் ஏற்றுக்கொண்ட சமயத்தில், திராவிடை ப்யூரிஸ்ட்களின் பிரதிநிதியாக உலகம் ஏற்றுக் கொண்டது. சச்சினுக்குத் துவக்கம் எப்போதுமே அபாரமாக இருக்கும். பல சமயத்தில் அவர் களத்தில் புகும்போதே எழுந்து நின்றே ரசிகர்கள் கரகோஷம் எழுப்புவார்கள். திராவிடுக்கு நேர் எதிர். அவர் பல மணிநேரம் பந்துவீச்சாளர்களை அலைக்கழித்த பின்னர் வெளியே போகும்போது அரங்கம் எழுந்து நின்று கைதட்டிக் கொண்டிருக்கும். அதையே நாம் இன்றும் அவர் ஓய்வை அறிவித்து விட்டுச் செல்லும்போதும் பார்க்கிறோம். சாதாரணமாக உள்ளே நுழைந்து, தனக்கென ஒரு இடத்தை வகுத்துக்கொண்டு, மிக மிக கௌரவமாக தன் ஓய்வைத் தேடிச் சென்றிருக்கிறார்.
அவரது ஓய்வை உலகம் ஏற்றுக் கொண்ட விதமே மிகவும் அலாதியானதாக எனக்குப் படுகிறது. நீங்கள் எங்களுக்காக ஓடியது போதும் – இந்த ஓய்வு உங்களுக்கு மிகவும் அவசியமானது என்று ஓய்வு பெற்று வரும் தந்தையிடம் ஒரு குடும்பம் பகிர்ந்து கொள்ளும் அந்த மனநிலையையே பெரும்பாலான ஊடகங்கள் பதிவு செய்தன. இந்த அளவுக்கு ஆத்மார்த்தமாக கவாஸ்கருக்குப் பின் திராவிடுக்கே விடை கொடுத்திருக்கின்றன ஊடகங்கள். கபில்தேவின் ஓய்வின்போது கூட ஹேட்லியின் சாதனையை எப்போது அவர் முறியடிப்பார், எப்போது கிளம்புவார் என்பது போன்ற ஒரு தோற்றம் ஏற்பட்டது உண்மையே.
ராஹுல் திராவிடின் ஓய்வினால் இந்தியா நம்பர் 3 பேட்ஸ்மேனை மட்டுமே இழந்திருக்கிறது, இந்திய கிரிக்கெட்டின் தூதுவரை இழந்து விடவில்லை. இந்திய கிரிக்கெட்டின் தூதுவர் என்று நான் அவரைச் சொன்னதன் காரணம் புரிய, சமீபத்திய ஆஸ்திரேலியத் தொடரின்போது அவர் நிகழ்த்திய பிராட்மேன் உரையை நீங்கள் முழுவதுமாகக் கேட்கவேண்டும். இன்றைய தேதியில், இந்திய கிரிக்கெட் வீரர்களின் பலதரப்பட்ட முகங்களை இந்த அளவுக்குத் துல்லியமாக எந்த பத்திரிக்கையாளரும், எழுத்தாளரும் முன்வைக்கவில்லை என்பதை நீங்கள் ஒத்துக் கொள்வீர்கள்.
எனக்கு திராவிட் ஆடும் போது, Fountain Headஇல் ரோர்க்கிடம் பீட்டர் கீட்டிங் கேட்பது தான் மனதில் வந்து போகும்:
“Do you always have to have a purpose? Do you always have to be so damn serious? Can’t you ever do things without reason, just like everybody else? You’re so serious, so old. Everything’s important with you, everything’s great, significant in some way, every minute, even when you keep still. Can’t you ever be comfortable–and unimportant?”
இந்தக் கேள்விக்கான பதில் கிடைக்காத போதே அவர் தன் பீடத்தை இளைஞர்கள் எடுத்துக் கொள்ளக் கொடுத்தது அவர் மற்ற மூத்த வீரர்களுக்கு விட்டுச் சென்றிருக்கும் ஒரு முக்கியமான செய்தி.