மொழியின் கடைசிப்பெண்

தமிழ்நாட்டில் அப்போது ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடந்து கொண்டிருந்தது. எனக்கு மூன்று வயதாய் இருந்தபோது வட இந்தியாவில் அப்பா வேலை பார்த்துக் கொண்டிருந்தார். அப்பாவின் அப்பா தமிழ் வாத்தியார். அதனால் அப்பாவிற்கு தமிழ் நன்கு எழுதப் படிக்க வரும். அம்மா வட இந்தியாவில் பிறந்தவள். தமிழ் பேசுவாளே தவிர எழுதப் படிக்க வராது. அம்மா அப்பாவிடம் தமிழ் எழுதப் படிக்கக் கற்று வந்தாள். அப்பா வட இந்தியாவிலிருந்து சென்னைக்கு மாற்றப்பட்டார். அம்மா அப்போது கர்ப்பமாக இருந்தாள். பிரசவத்திற்கு இன்னும் சில வாரங்களே இருந்ததால் பிரசவத்திற்குப் பின் சென்னை செல்வோம் என்று அம்மா கூறினாள். அப்பா அதற்கு ஒத்துக் கொள்ளவில்லை. தமிழ்நாடு முழுவதும் ரயில் மறியல் நடந்து கொண்டிருந்ததால் நாங்கள் சென்ற ரயில்வண்டி தமிழ்நாடு எல்லைக்கு முன்பே நிறுத்தப்பட்டது. அம்மாவிற்கு பிரசவவலி வந்து விட்டது. ரயில் காட்டினுள் நிறுத்தப்பட்டிருந்ததால் பக்கத்திலிருந்த டவுண் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே அம்மா இறந்து போனாள்.

அம்மா இறப்பதற்கு ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் காரணம் என அப்பா நம்பினார். மொழியை அரசியலாக்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடு என்று அரசியல்வாதிகளின் மீது கோபம் கொண்டார். சில நாட்களில் மற்றவர்களிடம் தமிழில் பேசுவதை நிறுத்திக் கொண்டார்.

அப்பாவுடன் ஃபோனில் பேசிக்கொண்டிருந்தபோது பேருந்து நிறுத்ததிலிருந்த ஒருவன் தலையில் அடித்தான். யாரிவன் என்று யோசிப்பதற்குள் மயக்கம் வந்தது. சிறிது நேரத்தில் மயக்கம் போட்டு கீழே விழுந்தேன்.

நீளமான வால் கொண்ட வெள்ளைக் குதிரையை அழகாக ஜோடித்திருந்தனர். அதன் முதுகில் சிவப்புநிற கம்பளம் விரிக்கப்பட்டிருந்தது. குதிரையின் மேல் நானும் என் காதலியும் அமர்ந்திருந்தோம். சாலையின் இருபுறத்திலும் நின்றிருந்தவர்கள் மகிழ்ச்சியாய் அருகில் நிற்பவர்களிடம் சிரித்துப் பேசிக் கொண்டிருந்தனர். நடந்து சென்ற குதிரை சிறிது நேரத்தில் பறக்கத் துவங்கியது. உடல் லேசாகக் குலுங்கியது. வாய் திறந்து பேச முயற்சி செய்தபோதும் பேச முடியவில்லை. கைகளைக் கொண்டு குதிரையின் வேகத்தைக் கட்டுப்படுத்த முயற்சி செய்தபோதும் கைகளை முன்னால் கொண்டுவர முடியவில்லை. சலப்பென்று உப்புத் தண்ணீர் முகத்தில் விழுந்தது.

விழித்துப் பார்த்தபோது சூரிய ஒளி முகத்தில் விழுந்தது. எழுந்து அமர்ந்தேன். படகை ஓட்டிக் கொண்டிருந்தவன் பின்னால் திரும்பிப் பார்த்து சிரித்தான். எனக்கு எங்கிருக்கிறோம் என்பது புரியவில்லை. எதற்காகப் படகில் பயணம் செய்கிறேன் என்று தெரியவில்லை. கைகள் பின்னால் கட்டப்பட்டிருந்தன. வாயில் பிளாஸ்திரி ஒட்டப்பட்டிருந்தது. உணவு எடுத்து வந்தவன் பொட்டலத்தை என் முன்னே வைத்துவிட்டு கைகளைக் கட்டியிருந்த கயிற்றை அவிழ்த்துவிட்டு, வாயில் ஒட்டியிருந்த பிளாஸ்திரியை எடுத்து விட்டான்.

“நீங்கள் யார்? என்னை எங்கே அழைத்துச் செல்கிறீர்கள்?” எழுந்து நடந்து படகு ஓட்டுபவனின் அருகில் சென்றேன்.

“நான் கேட்பது காதில் கேட்கலை? நீங்கள் யார்? எங்கே என்னை அழைத்துச் செல்கிறீர்கள்?” என்று சத்தமாக அவன் அருகில் சென்று கேட்டேன். படகு ஓட்டுபவன் பதிலேதும் கூறாமல் உணவுப் பொட்டலத்தை நோக்கி கை காட்டினான். அவன் என்னைச் சாப்பிடச் சொல்கிறான் என்பது புரிந்தது.

“நீங்கள் சொமாலியா கடற்கொள்ளையர்களா? என்னைப் பணத்திற்காகக் கடத்திச் செல்கிறீர்களா? நான் ஒரு எலக்ட்ரானிக்ஸ் இஞ்ஜினியர். நான் வடிவமைத்த எலக்ட்ரானிக் இயந்திரம் நாளை இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வருகிறது. அதை நான் வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறேன். தயவு செய்து என்னைச் சென்னையில் விட்டு விடுங்கள்”

உணவு கொடுத்தவன் என்னைச் சாப்பிடச் சொன்னான். அவனருகில் நெருங்கி அவன் கழுத்தை கைகளால் நெறித்தேன். அவன் என் நெஞ்சில் கை வைத்து உதறித் தள்ளியதில் கீழே விழுந்து தலை மரக்கட்டையில் இடித்தது. மயக்கம் வருவது போல் இருந்தது.

மயக்கத்திலிருந்து எழுந்தபோது கடற்கரை மணல் மீது படுத்துக் கிடந்தேன். அருகில் பொட்டலம் ஒன்று கிடந்தது. நன்கு பசித்தது. பொட்டலத்தை எடுத்துப் பார்த்தேன். அதனுள் நான்கு சப்பாத்தி, இரண்டு எலுமிச்சங்காய் துண்டுகள், கொஞ்சம் வதக்கிய தக்காளி இருந்தன. எத்தனை நாள் சாப்பிடாமல் இருந்தேன்? காதில் வலி எடுப்பது போல் இருந்தது. சப்பாத்தியைச் சாப்பிட்டேன். சப்பாத்திக்கு வதக்கிய தக்காளி சுவையாக இருந்தது. கடத்தப்பட்டு, தனியாக உச்சிவெயிலில் கடற்கரை மணலில் நின்று உண்ணும்போதும் நாவு சுவையை மறப்பதில்லை என்பது ஆச்சரியமாக இருந்தது.

கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஒரு ஆள் கண்ணில் படவில்லை. கடலில் படகுகள் இல்லை. கடல் நீளமாக இருந்தது. அதன் முடிவு வானம்தான் என்பதுபோல் இருந்தது. கடற்கரை மணலில் நடந்தேன். என்னுள் ஆயிரம் கேள்விகள். எதற்கும் பதில் கிடைக்கவில்லை. தூரத்தில் தென்னை மரத்தின் கிளைகள் தெரிந்தன. மணல் சூடேறியிருந்தது. மெதுவாக நடந்தால் கால்கள் பொசுங்கிவிடும் என்று வேகமாக ஓடினேன்.

அதிகமான அளவில் தென்னை மரங்கள் ஒழுங்கற்ற முறையில் நடப்பட்டிருந்தன. சூரிய ஒளிக்கதிர்கள் தென்னங்கீற்றின் இடையில் புகுந்து தரையில் விழுந்தன. அங்கும் ஆட்கள் தென்படவில்லை. மரநிழலில் நடந்தேன். காய்ந்த இலைகள் தரையில் கிடந்தன. உள்ளே நடந்து செல்ல காடுபோல் தெரிந்தது. பறவைகளின் சப்தம் மட்டும் கேட்டது. சத்தமாகக் கத்தினேன். பறவைகள் கிளைகளை விட்டுப் பறக்கும் சப்தம் கேட்டது. சிறிது நேரத்தில் என் குரலே எனக்கு கேட்டபோது பயமாக இருந்தது. தூரத்தில் தெரிந்த கடற்கரை, கடல் எதுவுமே இப்போது இல்லை.

இருட்டத் துவங்கியிருந்தது. வானத்தில் நிலவு வந்திருந்தது. என்னைக் கடத்தி வந்தவர்கள் எங்கே என்று தேடினேன். எவரும் தென்படவில்லை. எதற்கு என்னை கடத்தி வந்தார்கள்? என்னிடம் எதை எதிர்பார்க்கிறார்கள்? இது எந்த இடம்? எப்போது என்னை விடுதலை செய்வார்கள்? மனிதர்கள் இல்லாத இந்த இடத்தில் இறந்து விட்டால் என்னைக் கடத்தியவர்கள் என் உடலை என் வீட்டிற்கு அனுப்புவார்களா, இல்லை கழுகுகள் தின்று போகட்டும் என்று விட்டுவிடுவார்களா? விபரீதமான கேள்விகள் மனதில் எழுந்தன. பொட்டலம் ஒன்று கடற்கரை மணலில் கிடந்தது. பொட்டலத்தினுள் நான்கு சப்பாத்தி, இரண்டு எலுமிச்சங்காய் துண்டுகள், கொஞ்சம் வதக்கிய தக்காளி இருந்தன. இந்த பொட்டலத்தை யார் இங்கே போட்டது? கடத்தி வந்தவர்களா, இல்லை என்னைக் கண்காணித்து வருபவன் இந்த பொட்டலத்தை இங்கே போட்டிருக்கிறானா?

தூரத்தில் வீடொன்று இருப்பது தெரிந்தது. வீட்டினுள் யாராவது இருக்கிறார்களா என்று எட்டிப் பார்தேன். யாரும் இல்லை. வீட்டின் சுவரில் பெண் ஒருத்தியின் கருப்பு வெள்ளை புகைப்படம் மாட்டப்பட்டிருந்தது. புகைப்படத்திலிருந்த பெண் ஆடையில்லாமல் பிறப்புறுப்பை மட்டும் இலையால் மறைத்துக் கட்டியிருந்தாள். அவள் கருப்பு நிறமாக இருந்தாள். சிரிக்கும்போது தெரிந்த பற்கள் மட்டும் ஓரளவு வெள்ளையாக இருந்தன. யாரோ நடந்து வரும் சப்தம் கேட்டு வீட்டை விட்டு வெளியே வந்து மரத்தின் பின்னால் ஒளிந்து கொண்டேன்.

கிழவி ஒருத்தி கைகளில் மீன்களுடன் நடந்து வந்து கொண்டிருந்தாள். புகைப்படத்தில் பார்த்த பெண்போல் இருந்தாள். ஆனால் ஆடை அணிந்திருந்தாள். மேலே ப்ளவுஸ் கீழே பாவாடை. கிழவியின் வாய் அசைவை வைத்துப் பார்க்கும்போது யாருடனோ பேசிக்கொண்டு வருவதுபோல் இருந்தது. அவளுக்கு முன்னால் பின்னால் அருகில் எவரும் இல்லை. மரத்தின் பின் நின்று கொண்டு அவளை நோட்டமிட்டேன்.

கிழவி துவைத்து வந்த துணிகளை மரத்தின் கிளைகளில் காய வைத்தாள். மீன்களை வீட்டினுள் வைத்து விட்டு மரத்தின் நிழலுக்கு வந்து படுத்துக் கொண்டாள். கிழவிக்கும் கடத்தி வந்தவர்களுக்கும் தொடர்பு இருக்குமென்று நினைத்தேன். சப்பாத்தியை கடற்கரை மணலில் போட்டது கிழவியாக இருக்கக்கூடும்.

கிழவியிருக்கும் வீட்டிலிருந்து தள்ளிக் கொஞ்ச தூரத்தில் வேறொரு வீடு இருந்தது. வீட்டின் கதவு திறந்திருந்தது. வீட்டினுள் மரக்கட்டில், பழைய சீலிங் பேன், தூசு படிந்த ஜன்னல் கதவுகள், பழுப்பு நிறத்தில் வெஸ்டர்ன் டாய்லெட் இருந்தது. வேறெதுவும் வீடு இருக்கிறதாவென்று காட்டைச் சுற்றி வந்தேன். காட்டில் வேறு யாரும் இல்லை. காடு அதனை சுற்றிலும் கடல். இது ஒரு தீவு. காட்டினுள் நானும் அந்தக் கிழவியும் மட்டும் இருக்கிறோம்.

கடத்தியவர்கள் அல்லது கிழவி கடற்கரை மணலில் உணவுப் பொட்டலத்தை போட வருவார்கள் என்று கடற்கரையில் காத்திருந்தேன். கிழவி நடந்து வந்தாள். அவள் கையில் அரிக்கேன் விளக்கு இருந்தது. நடக்கும்போது ஏதோ பேசிக்கொண்டே நடந்தாள். அவளைச் சுற்றி யாரும் இல்லை. இவள் யாருடன் பேசுகிறாள் என்பது புரியவில்லை. இவள் பைத்தியமாக இருப்பாளோ என்றுகூட நினைத்தேன். அரிக்கண் விளக்கைக் கீழே வைத்துவிட்டு மணலில் அமர்ந்து கொண்டாள். கடல் அலைகளையே பார்த்துக் கொண்டிருந்தாள். மீண்டும் பேசுவது போல் வாயை முணுமுணுத்தாள். ஓவென்று கத்தினாள். அகோரமாகச் சிரித்தாள். கிழவி எழுந்து அரிக்கேன் விளக்குடன் வீட்டிற்கு நடந்து சென்றாள். உணவுப் பொட்டலம் எங்கும் தென்படவில்லை. அன்றைய இரவு உணவு உண்ணாமல் தூங்கினேன்.

வீட்டின் கதவு பலமாக தட்டப்படும் சப்தம் கேட்டது. படுக்கையிலிருந்து எழுந்து கதவை திறக்கச் சென்றேன். கடத்தல்காரர்கள் வந்திருப்பார்கள் . அவர்கள் கேட்கும் தொகையை கொடுத்துவிட்டு நிம்மதியாக ஊர் போய் சேர வேண்டும். கதவைத் திறந்தால் கிழவி நின்று கொண்டிருந்தாள். மெளனமாக நின்று கொண்டு என்னை மேலிருந்து கீழாக நோட்டமிட்டாள். நான் கிழவியின் கண்களையே பார்த்துக் கொண்டிருந்தேன். வீட்டின் உள்ளே வந்தவள் என் கைகளை பற்றி இழுத்துச் சென்றாள். நடக்கும்போதும் பேசிக்கொண்டே நடந்தாள். எனக்கு அவளது பேச்சு புரியவில்லை. மொழி புரியவில்லை.

அவள் என்னை வீட்டினுள் அழைத்துச் சென்று சுட்ட மீன் துண்டுகளை என் கைகளில் கொடுத்தாள். மீன் நன்கு வெந்திருந்தது. என்னைப் பார்த்துச் சிரித்தாள். நானும் சிரித்தேன். இவள் கடத்தல் கூட்டத்தை சேர்ந்தவளாக இருக்க முடியாது. அவளிடம் கேள்விகள் கேட்டுப் பேசிப் பார்த்தேன், பதிலேதும் இல்லை. கிழவி பேசிய மொழி எனக்குப் புரியவில்லை. இவளிடம் எவ்வாறு கேள்விகள் கேட்பதென்று யோசித்தேன். எனக்குத் தெரிந்த மொழிகள் எதுவும் அவளுக்குத் தெரியவில்லை.

என் கைகளைப் பிடித்து கூட்டிச் சென்றாள். சிறு செடிகளைப் பறித்து கைகளில் வைத்துக் கொண்டாள். என் கைகளிலும் சில செடிகளைக் கொடுத்தாள். காட்டிலிருந்து கடற்கரை நோக்கி நடந்தோம். கடற்கரையில் பாறைகள் உள்ள இடத்திற்கு அழைத்துச் சென்றாள். பாறைகளின் மேல் அமர்ந்து கொண்டோம். செடிகளைப் பிய்த்து நீரின் மீது தூவி விட்டாள். சிறிது நேரத்தில் நீருக்கடியிலிருந்து மீன்கள் செடிகளைத் தின்ன மேலே வந்தன. அப்போது கிழவி கையினால் மீன்களைப் பிடித்தாள். இப்படியாகப் பறித்து வந்த செடிகள் எல்லாவற்றையும் நீரின் மீது தூவி நிறைய மீன்கள் பிடித்தாள். கிழவி சந்தோஷமடைந்தாள்.

இரவில் கடலின் சப்தம் பலமாக இருந்தது. கடல்நீர் குளிர்ந்திருந்தது. கால்களை உதைத்துக் கைகளை முன்னே செலுத்தி கடலில் நீந்தினேன். கால்கள் வலித்தன, உடல் குளிரில் உறைந்து போனது, இனியும் இப்பெருங்கடலை நீந்திக்கடப்பது முடியாது என்று திரும்பினேன்.

கிழவி வீட்டில் படுத்திருந்தேன். உடல் சூடாக இருந்தது. கிழவி ஏதோ பச்சிலையை பறித்து வந்து தலையில் வைத்தாள். மீன்துண்டை இளம் சூட்டில் வாட்டிக் கொடுத்தாள். நன்றாக இருந்தது. ஏதோ கேட்டாள். எனக்குக் கிழவி கேட்பது புரியவில்லை. அழுகை வந்தது. கண்களிலிருந்து வழிந்து வந்த உப்புநீரின் கரிப்பு கடல்நீரின் உப்பைவிட அதிகமாக இருந்தது. கிழவியும் அழத்துவங்கினாள்.

மறுநாள் கிழவி இறந்துவிட்டாள். அவள் சடலத்தைப் புதைக்க ஐந்தாறுபேர் வந்திருந்தனர். இவள் இறந்த விவரம் இவர்களுக்கு எவ்வாறு தெரிந்தது? இத்தனை நாள் இவர்கள் எங்கிருந்தார்கள்? எல்லாம் மர்மமாக இருந்தது.

இவள் பெயர் என்னவென்று வந்திருப்பவர்களிடம் கேட்டேன்.

“இந்தக் கிழவியின் பெயர் போவா. இவள் போ மொழியின் கடைசி பெண்.”

“போ மொழி தெரிந்தவர்கள் வேறு யாரும் இல்லையா?” என்று கேட்டேன்.

கேள்விக்கு பதில் கூற எவரும் வரவில்லை.

கடைசியாக, கூட்டத்திலிருந்த பெண் ஒருத்தி பதிலளித்தாள்.

“ஒரு மொழியின் அழிவு யாருக்கும் கவலையளிப்பதில்லை. போ மொழியும் அதற்கு விதிவிலக்கல்ல. போ அந்தமான் பழங்குடியினர் பேசும் மொழி. 1858-இல் ஆங்கிலேயர் வருகைக்குப் பின்னர் அந்தமானியர் பலர் கொல்லப்பட்டனர். பலர் ஆங்கிலேயர் கொண்டு வந்த நோயில் இறந்து போயினர். இதனால் அவர்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தது. 2004-ஆம் ஆண்டு சுனாமியில் சிலர் இறந்து போயினர். கடைசியாக ஜம்பத்தியோரு பேர் இருந்தனர். அதில் போவா தவிர எவருக்கும் போ மொழி தெரியாது. ஐம்பது பேரும் நகர்ப்புறங்களுக்கு குடிபெயர்ந்தனர். போவா மட்டும் செல்லவில்லை”

“இந்த இடம்? “

“அந்தமான், ஸ்டிரைட் ஜலண்ட். இந்தியாவிலிருந்து 1500 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் தீவு.”

கடற்கரை ஓரத்தில் நின்றிருந்த படகில் என்னை இத்தீவிற்கு அழைத்து வந்த படகோட்டியும், உணவு கொடுத்தவனும் இருந்தனர். படகில் ஏறி அமர்ந்து கொண்டேன். படகு புறப்பட்டது. உணவு கொடுப்பவன் பொட்டலம் ஒன்றைக் கையில் கொடுத்தான். பொட்டலத்தினுள் நான்கு சப்பாத்தி, இரண்டு எலுமிச்சங்காய் துண்டுகள், கொஞ்சம் வதக்கிய தக்காளி இருந்தது. உணவு கொடுத்தவனைப் பார்த்து சிரித்தேன். அவனும் சிரித்தான்.

படகு சென்னை கடற்கரை வந்து நின்றது. கரையில் தலையில் அடித்தவன் நின்று கொண்டிருந்தான்.