மகரந்தம்

கிழக்கு வாழ்கிறது மேற்கு தேய்கிறது

mauer

இந்தக் கதை ஜெர்மனியில் நடப்பது. கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியாகப் பிரிந்திருந்து, 20-வருடங்களுக்கு முன்இந்த இரு நாடுகளும் ஒன்றிணைந்து, மீண்டும் ஒரே ஜெர்மனியாயின. ஒன்றிணைவு ஒப்பந்தம் (Solidarity Pact) என்பதன் அடிப்படையில் கிழக்குப்பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கு மேற்குப்பகுதியிலிருந்து தொடர்ச்சியாக நிதியுதவி அளிக்கப்படும் என்று ஒப்புக்கொள்ளப்பட்டது. கடந்த 2005-ஆம் ஆண்டு மீண்டும் இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி 2019-ஆம் ஆண்டு வரை பல பில்லியன் யூரோக்கள் கிழக்குப்பகுதிக்கு வழங்கப்படவேண்டும். ஆனால் மேற்குப்பகுதியை ஆள்பவர்கள் இதனால் தங்களுக்கு ஆட்சி புரிவதில் பல சிக்கல்கள் எழுவதாகச் சொல்கிறார்கள். குறிப்பாக, பொருளாதாரச் சுமை. “ஏற்கனவே அளிக்கப்பட்ட பணத்தை கொண்டு கிழக்குப்பகுதி மேற்கொண்டு என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறார்கள். இன்னும் எதற்கு அவர்களுக்கு பணம்?” என்று கேள்வி எழுப்புகிறார்கள். எல்லா தேசங்களிலும் இருக்கும் பிரச்சினை ஒன்றுதான் போலும். நிதி மற்றும் வள மேலாண்மையில் ஒரு சிலரால் நிகழும் தவறும், தேக்கமும் ஒட்டுமொத்தமாக ஒரு சமூகத்தைக் காவு வாங்குகிறது. மேலும் படியுங்கள் : http://www.spiegel.de/international/germany/0,1518,822473,00.html

Operation B71

இது ஏதோ ராணுவ நடவடிக்கையா? இல்லை. ஆனால் அந்தளவிற்குத் திட்டமும் காலமும் தேவைப்பட்ட ஒரு கணினித்துறை சம்பந்தபட்ட நடவடிக்கை. இணையம் மூலம் முதலில் உங்கள் தகவலையும் அதைத் தொடர்ந்து உங்கள் பணத்தையும் மிகச்சுலபமாக திருடிவிட முடியும். இதற்கென்று ஒரு பெரிய கூட்டம் இணையத்தில் இயங்குகிறது. ஒரு இலவச மென்பொருளைத் தருவதாகச் சொல்வார்கள். நீங்களும் அதை உங்கள் கணிணியில் நிறுவிவிட்டீர்கள். இப்போது, இந்த இலவச மென்பொருளில் இருக்கும் ஒரு ‘கள்ளன்’ நீங்கள் தட்டச்சும் அனைத்தையும் ஒரு மைய கணிணிக்கு அனுப்பும். உங்கள் கணினி வழியே நீங்கள் நடத்தும் அனைத்து விவரங்களும் (வங்கி கணக்கு எண், கடவுச்சொற்கள்) சேகரிக்கப்படும். இது போல் பல கணிணிகளும் இயங்கினால்? குறிப்பாக ஒரு பிரவுசிங் நிலையத்தில் இப்படி ஒரு கணிணி இருந்தால்?

இத்தகைய வேலையைச் செய்யும் ஒரு பெரும் வலைப்பின்னல் இணையத்தில் உண்டு. அத்தகைய ஒரு பெரும் வலைப்பின்னலை குற்றக் குழுவை மைக்ரோசாப்ட் நிறுவனம் உடைத்திருக்கிறது. மேலும் விரிவான தகவலுக்கு இதைப் படியுங்கள்.

http://www.wired.com/threatlevel/2012/03/microsoft-botnet-takedown/

-o00o-


என்சைக்ளோபீடியாவின் முடிவு

என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா தொகுப்பு வருடா வருடம் அச்சிடப்பட்டுக் கொண்டிருந்தது. பணமுள்ளவர்கள் வீட்டு அலமாரிகளில் தூங்கும். இதை அவ்வப்போது தகவல் தேட உதவும் புத்தகம் என்றுதான் கருதுவதால் இதை முழுக்கப் படிக்கத் தேவை இல்லை என்று வைத்து விடுவார்கள். ஆனால் அனேகமாக எப்போதுமே தொடாமலே புத்தகங்கள் சும்மா கிடக்கும். மரங்களுக்கு வந்த ஆபத்து என்று வேண்டுமானால் கருதலாம். ஆனால் எத்தனையோ குப்பைகள் நாட்டில் அச்சிடப்படுகின்றன. நம் ஊரிலேயே எத்தனை ‘பரபரப்பு’ பத்திரிகைகள், தினம் ஒரு ஆபத்து தமிழருக்கு என்று பீதியை வளர்ப்பதையே தொழிலாக வைத்துக் கொண்டிருக்கும் குப்பைகள் லட்சக்கணக்கில் அச்சாகின்றன. ஒப்பீட்டில் என்சைக்ளோபீடியா அத்தனை மோசமில்லை.

என்ன ஒரு பிரச்சினை என்றால், உலக மையமே பிரிட்டன் என்பது போன்ற, பிபிசி போன்ற செய்தி ஸ்தாபனங்களின் மமதை பிடித்த பார்வை இந்த புத்தகத் தொகுப்புக்கும் இருந்தது. இந்த புத்தகத்தை இனிமேல் அச்சிடப் போவதில்லை என்று முடிவெடுத்திருக்கிறார்களாம். மரங்கள் கொஞ்சம் பிழைக்கும். ஒரு காரணம் விக்கி பீடியா போன்ற வலை ஊடகங்கள் வந்த பிறகு இதை யாரும் வாங்குவதில்லை. இன்னொன்று வலையில் தேடினால் கிட்டாத எதுவும் இந்தப் புத்தகங்களில் இராது என்பது பொது மக்கள் கருத்து. பல பத்தாண்டுகளுக்கு இப்புத்தகங்கள் உலகின் மூலை முடுக்கில் எல்லாம் ஏதோ ஒரு உலகம் பூரா கிட்டும் தகவல்களுக்குப் பாதையாக இருந்தன என்பதை நாம் மறுக்க முடியாது.

இதைக் குறித்து ஸ்லேட்.காம் வெளியிட்டிருக்கும் கட்டுரை இங்கே.

-o00o-


TIMBI : இது புதுசு

BRIC என்ற ஒரு சுருக்கப் பெயர் கடந்த பத்தாண்டாக பொருளாதார வல்லுநர்களால் மிக அதிகமாக உபயோகிக்கப்பட்டது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா (Brazil, Russia, India, China) ஆகிய நாடுகளின் பெயர்களின் முதலெழுத்தை இணைத்து உருவாக்கிய சுருக்கப் பெயர் அது. இந்த நாடுகள் உலகில் அடுத்து எழும் பெரும் பொருளாதார சக்தியாக உருவகித்து அவற்றின் எழுச்சியை சர்ச்சிக்கப் பயன்படுத்தப்பட்ட பெயர்ச்சொல் இது. மேற்குலகுக்கு பொருளாதார உலகின் இழுபறிகள் ஏதோ விளையாட்டுப் போட்டி போலத் தோன்றும்படி அவற்றை உருவகித்து விவாதிப்பது வழக்கம். ஆனால் அவற்றின் அதிகார அமைப்புகள் இந்த வகை சொல்லாக்கங்களை உலக ஊடகங்களில் விரி விநியோகப்படுத்தி அவற்றுக்குக் கிட்டும் எதிர்வினைகளை வைத்து புதுப் பொருளாதாரப் போர்களை அவிழ்த்து விடுவதில் குறியாக இருப்பார்கள். இந்தப் பொருளாதாரப் போர் என்பது ஏதோ சந்தை, வர்த்தகம், வணிக உறவுகளோடு நிற்காது. அதுதான் பிரச்சினை.

தற்போது நிலைமை கொஞ்சம் மாறிவிட்டது. ரஷ்யாவில், சீனாவில் மக்கள் தொகையில் பெரும் மாற்றங்கள் நேர்ந்துவிட்டன. இரு நாடுகளிலும், அடுத்த பத்து ஆண்டுகளில் இளைஞர்கள் குறைவாகவும், முதியோர் அதிகமாகவும் இருப்பார்கள். அதனால் அவர்களின் பொருளாதார நிலை குறித்து பெரிதாக நம்பிக்கை தெரிவிக்க வல்லுநர்கள் தயாராக இல்லை. அவை துரிதமாக வளரா, மாறாக முதியோருக்கு சேவை செய்ய நாட்டின் வளங்களைச் செலவழிக்க வேண்டி வ்ரும். அதனால் போட்டியில் பெரும் சக்திகளாக இருக்காது என்று கணிப்பு. மேற்கின் பொருளாதாரப் போருக்குப் புது இலக்குகள் தேவைப்படும் என்று அந்த அதிகார மையங்களுக்கு ஊகம். அதனால் ஒரு புதிய சுருக்கப் பெயர் உருவாக்கப்பட்டிருக்கிறது இப்போது : TIMBI. அதென்ன TIMBI? புது ஏமாந்த சோணகிரிகள், தாம் வல்லரசாகி விடலாமோ என்று தப்புக் கணக்குப் போடுபவர்கள். அமெரிக்காவும், மேற்கும் வேறு தந்திரங்கள் செய்து கவிழ்ப்பது எப்படி என்று யோசிக்க இலக்காகப் போகிற நாடுகள்.

இதைப் படியுங்கள்: http://www.foreignpolicy.com/articles/2011/12/02/rise_of_the_timbis

-o00o-


வருடம் 1700-1800 : ஆசியாவுடனான அமெரிக்காவின் வர்த்தக உறவுகள்

18-19ஆம் நூற்றாண்டில் உலகில் பெரும் மாறுதல்கள் நேர்ந்தன. மேற்கின் ஏகாதிபத்தியப் பேராசையும், கிருஸ்தவத்தின் பரவல் வெறியும், வெள்ளை இனத்தின் மேட்டிமைப் பார்வையும் உலகெங்கும் வன்முறையை அவிழ்த்து விட்டு பல நூறு சமூகக் குழுக்கள் ஓட்டாண்டியாக்கப் பட்டார்கள்.  அந்தக் கால கட்டத்தில், பிரிட்ட்டனுக்கும் ஆசியாவிற்குமிடையே நிகழ்ந்த வர்த்தகப் பரிமாற்றங்களும், அதன் பல்வேறு விளைவுகளும் குறித்து பல நூறு புத்தகங்களும், நீள நீள ஆவணப் படங்களுமாகத் தகவல் அடுக்கப்பட்டாயிற்று. இந்தக் காலகட்டத்தில் அமெரிக்கா அப்போதுதான்  தொழில்துறையில் வலுவுள்ள ஒரு நாடாக எழத் துவங்கியது என்பதாலும் வேறு சில அரசியல் காரணங்களாலும், அமெரிக்காவின் பங்கு உலக வர்த்தகத்திலும், வேறு வகை அரசியல் உறவுகளிலும் என்னவாக இருந்தது என்பதை அமெரிக்கரைத் தவிர வேறு நாட்டினர் அதிகம் கவனித்ததில்லை. சமீபத்தில் அமெரிக்காவுக்கும் ஆசியாவுக்கும் அன்றிருந்த வர்த்தக உறவு குறித்த ஆராய்ச்சிகள் நடைபெறத் துவங்கியுள்ளன. இவ்வர்த்தக உறவுகள் அமெரிக்க சமூகத்தை, அதன் பொருளாதாரத்தை எந்தளவிற்கு பாதித்தன என்பது குறித்து ஏற்கனவே அமெரிக்கர்கள் ஆராய்ச்சி செய்தவை ஒரு பக்கம் இருக்க, இப்போதைய ஆராய்ச்சிகள் இந்த வர்த்தகத்தால் பிரிட்டனின் பன்னாட்டு உறவுகள் அடைந்த பாதிப்பு குறித்தும், இந்த விசேஷ உறவால் பிரிட்டன் பிற காலனிய மக்களைக் கையாண்டது எப்படி எல்லாம் மாறியது என்பது குறித்தும் அமைந்துள்ளன. அத்தகைய புத்தகம் ஒன்றை அறிமுகம் செய்யும் கட்டுரை இங்கே :

http://eh.net/book_reviews/so-great-proffit-how-east-indies-trade-transformed-anglo-american-caitalism