சிற்றிலக்கியங்கள் எனப்படும் பிரபந்தங்கள்- பகுதி 10

சென்ற இதழில் ஆரம்பித்த ‘கலிங்கத்துப் பரணி’ பகுதியின் தொடர்ச்சி.

கலவியின்போது கொழுநன் அல்லது காதலன் பெண்ணுடம்பில் – குறிப்பாக முலையில் நகக்குறி வைப்பான். அந்த நகக்குறியை, மனைவி அல்லது காதலியானவள், யாரும் இல்லாத, பார்க்க வாய்ப்பில்லாத இடத்தில் மறைந்து நின்று, ஆடை தளர்த்தி, கண்ணுற்று, நெஞ்சம் களிப்பாள். அந்தச் செயலானது முன்பு செல்வம் ஏதும் இல்லாதவன் பெற்ற நிதியை யார் கண்ணிலும் படாது மூடி மறைத்து வைத்திருந்து அடிக்கடி திறந்து பார்ப்பது போலுள்ளது என்கிறார் கவிச்சக்கரவர்த்தி.

முலைமீது கொழுநர் கைந்நகம்மேவு குறியை
முன்செல்வம் இலாதவர் பெற்ற நிதிபோல்
கலைநீவி யாரேனும் இலாத இடத்தே
கண்ணுற்று நெஞ்சம் களிப்பீர்கள், திறமின்!

என்பது பாடல்.

nn11

தேன் ஒலிக்கும் செங்கழுநீர்ப் பூக்களையும் முதிராத இளைஞர்களின் ஆருயிரும் திருகிக் கூந்தலிலே செருகும் இளம்பெண்களே, செம்பொன் கபாடம் திறவுங்கள் என்றொரு அற்புதமான பாடலும் கடைதிறப்பில் உண்டு.

முருகிற் சிவந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் குழல் மடவீர்
செம்பொற் கபாடம் திறமினோ!

இனிப் பொருள் விளக்கம் தர முற்படாமல், அரும்பதச் சொற்களுக்கான பொருள் மட்டும் தந்து, பாடல்களை மட்டும் தருகிறேன். ஒரு பயிற்சிக்காக, மாங்கனியைத் துண்டு போட்டும் தின்னலாம், முழுதாய்க் கடித்து உரித்தும் தின்னலாம். முற்சொன்னது வசதி. பின்னது அனுபவம்.

அளகபாரம் மிசை அசைய, மேகலைகள்
அவிழ, ஆபரண வகை எல்லாம்
இளக மாமுலைகள் இணை அறாமல் வரும்
இயல்நலீர், கடைகள் திறமினோ!

அளகம் – கூந்தல், மிசை – இடை, மேகலை – இடை ஆபரணம், இணை அறாமல் – இடைவிட்டு அகலாமல்

சமீபத்தில் மும்பை சாலையொன்றில் நடந்தபோது அரைக்கால் சட்டையும் கையில்லாத பனியனும் அணிந்திருந்த பெண்ணின் மார்ப்பகுதியில் பனியனில் அச்சிடப்பட்டிருந்த வாசகம், KING SIZE. இதனைத்தான் செயங்கொண்டார் மாமுலைகள் என்கிறார்.

மதுரமான மொழி பதற, வாள்விழி
சிவப்ப, வாய் இதழ் வெறுப்பவே
அதரபானம் மதுபானம் ஆக, அறிவு
அழியும் மாதர், கடை திறமினோ!

மதுரம் – இனிமை, வாள்விழி – ஒளி பொருந்திய விழி, அதரபானம் – வாய் அமுதம், மதுபானம் – கள், அறிவு அழியும் – அறிவு கெடும்.

உபய தனம் அசைமின் ஒடியும், நடையை
ஒழியும் ஒழியும் என ஒண்சிலம்பு
அபயம் அபயம் என அலற, நடை பயிலும்
அறிவையீர், கடைகள் திறமினோ!

உபயம் – இரண்டு, தனம் – முலை, சிலம்பு – காற்சிலம்பு, அபயம் – தஞ்சம்.

இந்தப் பாடலுக்கு மட்டும் பொருள் சொல்லி விடுவோம்.

இணையாக இருக்கின்ற தனம் அசைந்தால் இடை ஒடிந்து போகும். எனவே நடையை ஒழியும் ஒழியும் என ஒண்சிலம்பு அபயம் அபயம் என அலறும். அவ்விதம் நடை பயிலும் அறிவைகளே, வாயிற்கதவுகளைத் திறப்பீர்!

இன்னொரு அற்புதமான பாடல். இப்பாடலின் சற்று நீர்த்த வடிவத்தைத் திரைப்பாடலாக நீங்கள் கேட்டிருப்பீர்கள்.

வாயின் சிவப்பை விழி வாங்க
மலர்க்கண் வெளுப்பை வாய்வாங்க
தோயக் கலவி அமுது அளிப்பீர்
துங்கக் கபாடம் திறமினோ!

தோய்ந்து புணர்ச்சி விருந்து அளிக்கும்போது, உங்களது வாயின் சிவப்பை விழி வாங்கிக் கொள்ளும். மலர்க்கண் வெளுப்பை வாய் வாங்கிக் கொள்ளும். அவ்விதம் கலவி அமுது அளிக்கும் பெண்களே, துங்கக் கபாடம் திறமினோ!

கூடும் இளம் பிறையில் குறுவெயர் முத்து உருளக்
கொங்கை வடம் புரளச் செங்கழுநீர் அளகக்
காடு குலைந்து அலையக் கைவளை பூசல் இடக்
கலவி விடா மடவீர், கடை திறமின் திறமின்.

இந்தப் பாடல், புணர்ச்சியின்போது மனைவியர் நிலை பேசுகிறது. கூடும் இளம் பிறை நெற்றியில் குறுவியர்ப்பு முத்து உருளும். கொங்கைகள்மீது கிடக்கும் வடம் புரளும். செங்கழுநீர்ப் பூக்களைச் சூடிய கூந்தல் காடு குலைந்து அலைய, கைவளைகள் ஒன்றுடன் ஒன்று பூசல் இடும். எனினும் கலவியை விடாமல் தொடரும் மடப் பெண்களே, கடைகள் திறமின், திறமின்.

எந்தப் பாடலையும் தாண்டிப் போக மனமில்லை எனக்கு. கீழ்வரும் பாடல் ஒரு கலவிப் பாட்டு, போர்ப் பாட்டு, ஆனால் சொல் விளையாட்டு.

காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த
கலவி மடவீர், கழற் சென்னி
காஞ்சி இருக்கக் கலிங்கம் குலைந்த
களப்போர் பாடக் கடை திறமின்.

காஞ்சி எனும் ஒட்டியாணம் போன்ற இடையணி சிறிதும் குலையாமல் இருக்க கலிங்கமாகிய துகில் அவிழ்ந்து போகும்படியாக கலவி செய்யும் இளம் பெண்களே, வீரக்கழல் அணிந்த குலோத்துங்க சோழன் காஞ்சியில் இருக்க, கலிங்க நாடு குலைந்தது. அந்தக் களப்போர் பாடக் கடை திறவுங்களேன்!

மேற்சொன்ன வரிகளை காஞ்சி மாநகரில் விடுதியில் அமர்ந்து நகல் எடுக்கிறேன் எனும் நினைப்பே எனக்கு கிளர்ச்சி ஊட்டுகிறது.

கலிங்கத்துப் பரணியின், கடை திறப்பின், சிறப்பான பாடல்களில் ஒன்று கீழ் வருவது.

வீரர்கள் கலிங்கப்போருக்குப் புறப்பட்டுப் போகிறார்கள். திரும்பி வருவோம் எனக் குறித்த காலமும் வந்தது. காத்திருக்கும் மனைவியர் இரவெல்லாம் அவர் வந்து விட்டாரா, வந்து விட்டாரா என வாயிற் கதவைத் திறந்து பார்ப்பார்கள். வரவில்லை என அறிந்து வாயிற்கதவைச் சாத்துவார்கள். மீண்டும் வந்து விட மாட்டாரா என்று திறப்பார்கள், வரவில்லை என்று அடைப்பார்கள். இரவு முழுக்க இவ்விதம் திறந்தும் அடைத்தும் திறந்தும் அடைத்தும் வாயிற்கதவின் குடுமி தேயும். ஆனால் இன்று உண்மையிலேயே வந்து விட்டோம், ஊடல் நீங்கி, கபாடம் திறவுங்கள் என்பது அந்தப் பாடல்.

வருவார் கொழுநர் எனத் திறந்தும்
வாரார் கொழுநர் என அடைத்தும்
திருகும் குடுமி விடியளவும்
தேயும் கபாடம் திறமினோ.

திருகும் குடுமி விடியளவும் தேயும். கபாடம், இன்று திறவுங்கள் என்பதன் கெஞ்சல், கொஞ்சல் தொனி சிறப்பு.

தோய்ந்து தமிழ் கற்போர், தமிழ் வாசிக்கும் ஆர்வம் உடையோர், தமிழில் படைக்க முயல்வோர் அறிந்து களித்திருக்க வேண்டிய பகுதி கடை திறப்பு.

கலிங்கத்துப் பரணியின் மூன்றாம் பகுதி “காடு பாடியது”. கரிந்து காணப்படும் மரம் செடி கொடிகள், பாலை நிலத்தில் பகலவனின் வெப்பம், நெருப்பு, புகை, நீரற்ற நிலம், நிலத்தின் வெக்கை, அங்கு பசித்து வரும் பேய்கள், முதுபேய், வெந்த வனம், சூறாவளி எனப் பாடப் பெறுவது இப்பகுதி.

அடுத்து நாலாம் பகுதி, ‘கோயில் பாடியது’. காளி கோயிலின் தன்மைகள், கோபுரம், நெடுமதில், ஈம விளக்கு, காளியின் தன்மை, பலிகள், பேய்களின் தன்மைகள் ஈண்டு பாடப்படுவன. பின்பு, ‘தேவியைப் பாடியது’. காளியின் சிறப்புகள், ஆற்றல், அணிகள் இங்கு பாடப் பெறுவன. அடுத்து ‘பேய்களைப் பாடியது’. பேய்களின் உருவம், ஆற்றொணாப் பசி, பேய்களின் வகைகள் – நொண்டிப் பேய், கை ஒடிந்த பேய், குருட்டுப் பேய், ஊமைப் பேய், செவிட்டுப் பேய், கூன்பேய் – என. அடுத்தது ‘இந்திரசாலம்’. இதில் காளி வழிபாடு, பேய்கள் காளிக்குச் செய்யும் சேவைகள் விவரிக்கப்படுகின்றன. பின்பு, ‘இராச பாரம்பரியம்’. இதில் சோழர்களின் குலவரலாறு கிளத்தப்படுகிறது. அடுத்து ‘பேய் முறைப்பாடு’. காளியிடம் பேய்கள், பசியில் வாடும் எங்களை யார் காப்பார் என முறையிடுதல், சங்கடம் உரைத்தல். எங்கள் பசி போக்கிக் கொலை இறங்க வேண்டும் என் இரத்தல்.

பத்தாவது பகுப்பு ‘அவதாரம்’. கண்ணனே குலோத்துங்கனாய் பிறந்தான் என விவரிப்பது. தமிழரின் மரபொன்றும் உண்டு, திருவுடை மன்னரைக் காணின் திருமாலைக் கண்டேன் என்று.

‘காளிக்குக் கூளி கூறியது’ என்பது பதினோராம் பகுதி. கலிங்க நாட்டில் இருந்து வந்த கூளிப்பேய், போரின் வெம்மையைக் காளி தேவிக்குக் கூறுவதான பாடல்கள். பன்னிரண்டாம் பகுப்பு ‘போர் பாடியது’. யானைப் படை, குதிரைப் படை, விற்போர், இரத்த ஆறு, யானைப் போர், என்பன குறித்தது. பின்பு ‘களம் பாடியது’. காளி தேவி போர்க்களத்தைப் பார்வை இடுதல். பதினான்காம் பகுதி ‘கூழ் அடுதல்’. பேய்கள் காளிக்கு கூழிட்டுப் படைத்து வழிபடுதலும் பேய்கள் நிணக்கூழ் அட்டு உண்டலும்.

இத்தனை அருவருப்பும் அருசியும் அதிபயங்கரமும் நிறைந்த இலக்கியம் தமிழில் வேறு இல்லை என்று படுகிறது, கலிங்கத்துப்பரணியை வாசித்து முடித்த பிறகு. தற்காலத் தமிழறிஞர்கள் இத்தனை உறுதி செய்ய வேண்டும். எனவேதான் செயங்கொண்டார் கடை திறப்பை முன்வைத்தார். மேலும் ஆயிரம் ஆண்டுகள் பிந்தி வந்தவர்கூட இத்தகைய வன்தொழிலை வரிசை இட்டுப் படைத்துவிடவில்லை. அவர்களால் யோசிக்க முடிந்ததெல்லாம் பெண்ணுறுப்பு சார்ந்த நோய்மன வெளிப்பாடுகள் மட்டும்தான்.

nn2

பரணிப்போர் என்பது சாதாரண சண்டை அல்ல என்பது நமக்குப் புரிகிறது. யுத்தம், WAR என்பனவற்றுக்குச் சமமான தமிழ்ச்சொல் போர் என்பதுதான். எனினும் பரணிப்போர் என்பது அதையும் நோக்க அதிபயங்கரமானதாக இவண் வருணிக்கப்படுகிறது. ‘ஆனை ஆயிரம் அமரிடை வென்ற’ என்ற தொடரின் அர்த்தம் புரிகிறது. நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், துப்பாக்கியும் பீரங்கியும் குண்டு வீசும் போர் விமானங்களும் கண்டுபிடிக்கப்பட்ட காலத்துக்கு எண்ணூறு ஆண்டுகள் முந்தைய கோரம் இது. அந்தக் கோரத்தை, கொடுமையை செயங்கொண்டாரால் சொற்களால் எழுப்பிக்காட்ட முடிந்திருக்கிறது என்பதோர் சொல் கடந்த அதிசயம்.

சுமார் முப்பத்தைந்து ஆண்டுகட்கு முன்னம், பம்பாய் மாநகரில், விக்டோரியா டெர்மினல் இரயில் நிலையத்துக்கு எதிரே இருந்த கேப்பிட்டல் சினிமா தியேட்டரில், காலைக் காட்சி பார்த்தோம் நானும் ஞான ராஜசேகரனும், ‘அக்ரீத்’ என்றொரு மராத்திப் படம். பன்னிரண்டு வயதுச் சிறுமியை கிராமத்துத் தேவதைக்குப் பலி செய்து குருதியைப் பெண்தெய்வத்துக்கு தெளிக்கும் சம்பவம் சார்ந்த படம்.

அமோல் பாலேக்கர், சித்ரா பாலேக்கர், ஸ்மிதா பாட்டில் நடித்த படம். ஆலையில்லா ஊருக்கு இலுப்பைப்பூ சர்க்கரை என்பது போல் உள்ளூர் கவர்ச்சி சில்லறை வணிக நடிகைகளை இமயம் என்றும் சிகரம் என்றும் பசிபிக் பெருங்கடல் என்றும் கொண்டாடும் தமிழ்க் கூட்டம், ‘அக்ரீத்’ படத்தில் ஸ்மிதா பாட்டில் நடிப்பைக் கண்ணுறல் சாலப் பொருந்தும்.

ஒரு காட்சியில், அருவருப்புத் தாங்க ஒட்டாமல், வன்முறை நேரிட ஒண்ணாமல் எனக்கு வாந்தி உணர்ச்சி ஏற்பட்டது. நல்ல வேளையாக சாய் தவிர காலைச் சிற்றுண்டி உண்டிருக்கவில்லை நான். அன்று அதற்கு வசதியும் இருக்கவில்லை. அன்றைய லஞ்சு, ‘பஞ்சம் பூரி’ உணவு விடுதியில் ஞான ராஜசேகரன் வாங்கித் தந்ததும் நினைவில் இருக்கிறது.

கடை திறப்பு தாண்டியதும் செயங்கொண்டார் வன்முறையின் கோரங்களைப் படிப்படியாக உயர்த்திக் கொண்டே போகிறார். ‘கூழ் அடுதல்’ பயங்கரத்தின் உச்சம். உங்கள் அனுமதியுடன், மாதிரிக்கு மென்மையான சில பாடல்களை மட்டும் சொல்லிச் செல்வேன்.

என்றாலும் என் செய ஆகும் எம்மால்? இது தமிழில் எழுந்த உன்னத சிற்றிலக்கிய வகையான ‘பரணி’யில் முதன்மையானது.

‘காடு பாடியது’ பகுதியில் வெம்மையால் தாக்குண்ட மரம் செடி கொடிகளின் தன்மை காட்டும் பாடல் ஒன்று.

‘பொரிந்த காரை, கரிந்த சூரை,
புகைந்த வீரை, எறிந்த வேய்
உரிந்த பாரை, எரிந்த பாலை,
உலர்ந்த ஓமை கலந்தவே!
உதிர்ந்த வென்னில், ஒருங்கு நெல்லி,
உணங்கு தும்பை, உலர்ந்த வேல்,
பிதிர்ந்த முள்ளி, சிதைந்த வள்ளி,
பிளந்த கள்ளி பரத்தவே!

வற்றல் வாகை, வறந்த கூகை,
மடிந்த தேறு, பொதிந்த வேல்
முற்றல் ஈகை, முனிந்த விண்டு,
முறிந்த புன்கு நிறைந்தவே!

இருபத்தோரு மரம் செடி கோடிகள் பேசப்படுகின்றன இப்பாடலில்.

பொரிந்து போன காரைச் செடிகள், கருகிய சூரை மரங்கள், புதைந்து போன வீரை மரங்கள், எரிந்து போன மூங்கில் முத்து, பட்டை உரித்த சாலை மரங்கள், முறிந்து போன பாலை மரங்கள், காய்ந்து போன ஓமை மரங்கள், இலையும் பழமும் உதிர்ந்த வீரை மரங்கள், ஒடுங்கிப் போன நெல்லி மரங்கள், உணங்கிப் போன தும்பைச் செடிகள், உலர்ந்த வேல மரங்கள், பிளந்து நின்ற முள்ளிச் செடிகள், சிதைந்த வள்ளிக் கொடிகள், பிளவுபட்ட கள்ளி மரங்கள், வற்றலாகிப் போன வாகை மரங்கள், வரண்டு போன கூகைக் கொடிகள், மடிந்து போன தேற்றா மரங்கள், பொதிந்து போன கருவேல மரங்கள், முற்றிப் போன இண்டல் கொடிகள், உலர்ந்த விண்ட மரங்கள், முறிந்து போன புங்க மரங்கள் காட்டில் நிறைந்து கிடந்தன என்கிறார் புலவர்.

அதில் எனது சொந்த சோகம், பேசப்படும் 21 தாவரங்களில் பத்தே பத்துதான் அறிந்து என்னால் அடையாளம் காட்ட முடிபவை.

காட்டில் வறட்சியைப் பாடும் பாடல் ஒன்று.

தீயின் வாயின் நீர் பெறினும் உண்பதோர்
சிந்தை கூர, வாய் வெந்து உலர்ந்து செந்
நாயின் வாயின் நீர் தன்னை, நீர் எனா
நக்கி நாவினால் நக்கி விக்குமே!

தீயின் வாயில் இருந்து நீர் பெறினும் பருகிவிடுவது எனும் சிந்தை மானுக்கு. அத்தகு கொடுந் தாகம். அந்நிலையில், வாய் வெப்பத்தினால் வெந்து, உலர்ந்த செந்நாயின் வாயில் இருந்து வடியும் எச்சிலை, நீர் என எண்ணி, மான் நாக்கினால் நக்கி விக்கும். நீரின்றித் தவிக்கும் விலங்குகளின் துன்பம் பேசப்படுகிறது. செந்நாய் மானுக்குப் பகை விலங்கு என்றாலும் அதனைப் பொருட்படுத்தாது அதன் எச்சில் பருக முயலும் மான். வெம்மையின் கொடுமையால் விலங்குகள் தம் இயல்பும் மறந்தன என்பதும் பொருள்.

மற்றொரு பாடல்.

வற்றிய பேய் வாய் உலர்ந்து
வறள் நாக்கை நீட்டுவ போல்
முற்றிய நீள் மரம் பொதும்பின்
முது பாம்பு புறப்ப்படுமாய்

முதிர்ந்து வளர்ந்து உலர்ந்து மரப்பொந்தினுள் இருக்க ஒட்டாமல், பெரும் முது பாம்புகள் வெளியே புறப்புடும் பொந்தில் இருந்து. அந்தக் காட்சி வற்றிப் போன பேய், வாய் உலர்ந்து வரண்ட நாக்கை நீட்டுவது போல் இருந்தது என்கிறார் புலவர்.

சொல்லாட்சிகளைக் கவனியுங்கள் – வற்றிய பேய், வாய் உலர்ந்து, வறள் நாக்கு, முற்றிய நீள் மரப் பொதும்பு (பொந்து), முது பாம்பு. காட்டின் கொடும் வெம்மைக்கு மொழி மாற்றம் பெரும் விந்தை இது.

‘கோயில் பாடியது’ எனும் பகுதி காளி கோயிலின் சிறப்பைப் பாடுவது.

கொள்ளி வாய்ப் பேய் காக்கும்
கோபுரமும் நெடுமதிலும்
வெள்ளியால் சமைத்த தென்
வெள்ளெலும்பினால் சமைத்தே!

காளி கோயிலின் கோபுரமும் நெடுமதிலும் கொள்ளிவாய்ப் பேய் காக்கும். அந்தக் கோபுரமும் நெடுமதிலும் வெள்ளியினால் செய்யப்பட்டவை எனத் தோற்றினாலும் அவை போரில் இறந்துபட்டவர்களின் வெள்ளெலும்பினால் சமைக்கப்பட்டவை.

தவற்றினை உணர்ந்து உயிர் நீக்கும்போது, பாண்டியன் நெடுஞ்செழியன் மொழியாக, சிலப்பதிகாரத்தில் இளங்கோ கையாண்ட வரி தொடர்பற்று எனக்கு நினைவுக்கு வருகிறது – ‘மன்பதை காக்கும் தென்புலம் காவல்’ என்று. மன்பதை – தெய்வம், தென்புலம், தென்னாடு.

பாண்டியன் படையினரில் ஆபத்துதவிகள் என்றும் ஜப்பானியப் படைகளின் ஹாராக்கிரி பற்றியும் வாசித்திருக்கிறோம். மன்னன் உயிர் தலை கொய்து வைத்தும் தம்மைத் தண்டித்துக் கொள்வார்கள் என. இங்கு காளிக்கு வீரர்கள் பலிக்கடன், நேர்ச்சைக் கடன் செலுத்துகிறார்கள்.

‘நீண்ட பலி பீடத்தில் அரிந்து வைத்த
நெடுங்குஞ்சிச் சிரத்தைத் தன் இனம் என்றெண்ணி
ஆண்டளைப்புள் அருகு அணைந்து பார்க்குமாலோ!
அணைத்தலும் அச்சிரம் அச்சம் உறுத்துமாலோ!

பலிக்கடன் செலுத்தும் பலிபீடம். அதன்மேல் நேர்ச்சைக் கடன் செலுத்தும் போர்வீரர் தனது நீண்ட சிகையை உடைய சிரத்தைத் தாமே தம் கையில் அரிந்து வைத்துள்ளார். அத்தலை ஆண்டளைப் பறவை உட்கார்ந்திருப்பது போல் தோற்றம் தருகிறது. அந்த நெடுங்குஞ்சிச் சிரத்தை, தன் இனம் என்று எண்ணி அருகு அணைந்து பார்க்க வருகிறது. அவ்விதம் ஆண்டளைப் புள் அருகு அணைந்ததும் அறுபட்ட தலையின் வெறிக்கும் கண்கள் அச்சுறுத்தும். அச்சம் உறுத்துமாலோ என்பது வியப்பைத் தொனிக்கும் பொருள் தருவது.

யோகினிகள் காளிதேவியிடம் வந்து சேரும் சீர் பரவப்படுகிறது ஒரு பாடலில்.

படை வலங்கொடு, பசுந்தலை
இடங்கொடு, அணைவார்
இடை மொழிந்து, இடை நுடங்க, வரு
மோகினிகளே!

தத்தம் படைகள் (ஆயுதங்கள்) வலம் கொடு (வலது கையில் கொண்டு), புதிதாய் அறியப்பட்ட குருதி சொட்டும் தலை இடம் கொடு (இடது கையில் கொண்டு), அணைவார் இடை மொழிந்து (தம் மறுகே அணைந்து நடக்கும் பிற மோகினிகளுடன் இடையிடையே பேசிக் கொண்டு), இடை நுடங்க (இடை ஒசிந்து அசைய), வருவார் யோகினிகளே!

சந்த ஒழுங்குடன் காளிதேவி ஆடும் நடனம் பாடப்படுகிறது.

அரவோடு திக்கயம் அப்பொழுது பரித்த இடத்து
அடி இட, உட்குழிவுற்று அசைவுறும் அப்பொழுதில்
தாரணி தரித்ததெனப் பரணி பறித்த புகழ்ச்
சயதரனைப் பரவிச் சதிகொள் நடத்தினளே!

ஆதிசேடன் எனும் அரவமும் அட்ட திக்கயங்கள் எனும் திசை யானைகளும் பூமியைச் சுமந்தாலும் தன் பாதங்களைக் காளி பெயர்த்து வைத்தால் உட்குழிந்து பூமி அசைவுறும். அப்போழுதில் சயதரன் எனப்படும் குலோத்துங்கன் தோன்றி தரணியைத் தாங்கினான். பரணி பாடலும் பெற்றான். அவனைப் பரவி சரிகொள் நடனம் நடத்தினாள் காளி.

காளியின் சக்தியும் பேசப்படுகிறது.

அண்டம் ஊறு குலகிரிகள்
அவள் ஒருகால் இருகாதில்
கொண்ட அணியின் மணிவடமாம்
கோத்து அணியின், குதம்பையுமாம்
கைம்மலர்மேல் அம்மனையாம்
கந்துகமாம் கழங்குமாம்
அம்மலைகள்; அவள் வேண்டின்
ஆகாதது ஒன்று உண்டோ?

அண்டத்தில் இருக்கும் குலமலைகள் காளியின் இரு காதுகளில் ஒருக்கால் காதோலையாகும். கோத்து அணிந்தால் மணிவடம் ஆகும். கையில் வைத்து ஆடினால் அம்மானையாகும், பந்தாகும், கழற்சியும் ஆகும் அம்மலைகள். அவள் நினைத்தால் ஆகாதது ஒன்று உண்டோ?

காளியின் பெருமை பேசப்படும் அதே நேரத்தில் பேய்களின் பசியால் வறண்டு வாடிய தன்மையும் பேசப்படுகின்றன.

வற்றாத உலர்ந்த முதுகுகள்
மறக்கலத்தின் மறிபுறம் ஒப்பன
ஒற்றை வான் தொளைப் புற்று எனப் பாம்புடன்
உடும்பும் உள்புக்கு உறங்கிடும் உந்திய”

வற்றலாக உலர்ந்த முதுகுகள் மரக்கலத்தைக் கவிழ்த்துப் போட்டதுபோல் விளங்கி, பாம்புடன் உடும்பும் உட்புகுந்து உறங்கிடும் ஒற்றைப் பெருந்துளைப் புற்றுபோல் இருந்தது பேய்களின் உந்தியின் தொப்புள்.

சங்கப்புலவன் குப்புறக் கவிழ்ந்து கிடந்த வள்ளத்தை – தோணியை ஒட்டகத்தின் முதுகுக்கு உவமை சொன்னான். செயங்கொண்டார் வற்றலாக உலர்ந்த பேயின் முதுகுக்கு மரக்கலத்தின் மறிபுறத்தை உவமை சொல்கிறார்.

மேலும் காளியை விட்டுப் பிரியாத நொண்டிப் பேய், கை ஒடிந்த பேய், குருட்டுப் பேய், ஊமைப் பேய், செவிட்டுப் பேய், குட்டைப் பேய், கூன்பேய், என்பனவும் விவரிக்கப்படுகின்றன. இந்திரசாலம் பகுதியில் காளிதேவிக்கு முதுபேய் ஒன்று மாய வித்தைகள் செய்து காண்பித்தல் பேசப்படுகிறது.

(தொடரும்)