சாமத்தில் முனகும் கதவு – சிறுகதை குறித்து…

11

சொல்வனம் இதழ் 65-இல் வெளியான, திரு. கே.ஜே.அசோக்குமார் எழுதிய ‘சாமத்தில் முனகும் கதவு’ சிறுகதை குறித்து ஆசிரியர் குழுவிலிருக்கும் திரு. வ.ஸ்ரீநிவாசனின் சில கருத்துகள்.

‘இனர்ஷியா’ பற்றி கதைகள் வந்துள்ளன. அடூரின் ‘எலிப்பத்தாயம்’ இதன் அதீத நிலையைச் சித்திரித்தது.

கூத்தையன் மனதுக்குள், கற்பனையில் அதிகம் வாழ்பவன். கலவி போன்ற புலன்களை தீவிர விழிப்புக்குக் கொண்டு செல்லும் செயல்பாடுகளில் மட்டுமே உணர்வு பெறுபவன். இது உடம்பின் வியாதி இல்லை. முழுக்க முழுக்க மனம் சம்பந்தப்பட்டது. இதில் சிக்கி மனோவைத்தியரை நாடியவர்களை நான் பார்த்திருக்கிறேன். அவர்கள் குளிப்பதை, இயற்கைக் கடன்களைக் கூட ஒத்திப் போட்டு விடுவார்கள். கூத்தையன் அவ்வளவு மோசமில்லை. ஆனால் கற்பனையின் சுகத்தில் செயலை விட்டுவிடும் மனிதன். சோம்பேறி, கொழுப்பு பிடித்தவன், மசை என்ற பல பெயர்கள் இத்தகையோருக்கு இருக்கும். அவர்களின் அந்த சோம்பேறித்தனத்தில் அவர்களது வீழ்ச்சியும், அழிவும் தென்படும். ஆனாலும் சாக்கடையில் குளிக்கும் எருமையை, பன்றியை நாம்தான் மனிதனாகக் கருதி கேவலம் என்கிறோம். அதில் உள்ள சுகம் அதற்குத்தான் தெரியும். கூத்தையன் போன்றவர்களுக்கும் அவர்களது சுகம் அந்த செயலாற்றாமையில்தான் இருக்கிறது. இந்த செயலின்மை ஞானம் சம்பந்தப்பட்டதல்ல. ‘சுகம்’ அல்லது ‘இன்பம்’ சம்பந்தப்பட்டது. இதன் இன்னொரு பக்கம் பயம்.

ஓயாத கற்பனை. தூக்கத்திலும் கனவாய்த் தொடர்வது. அந்தக் கனவு விழிப்பின் பொழுதுகளையும் ஆக்ரமிப்பது என்று கதை துவங்குகிறது.

கற்பனையும், நிஜமும் செய்யும் குழப்பம் அவன் மனதின் பிடித்த பொழுது போக்கு. அதன் அதீதம் அடூரின் ‘அனந்தரம்’ படத்தில் வரும். கூத்தையன் நிலை மோசமில்லை. அவன் முயன்றால் தூக்கி எறியக் கூடியதுதான்.

அந்த சோம்பேறித்தனம் அவனுக்கு எல்லோராலும் வழங்கப் பட்ட பரிசு. கடை வைத்து விட்டுப் போன அப்பா. எவ்வளவு ‘ஜென்டிலான’ அம்மா. மருமகளின் தொடுப்பு பற்றி பேசுகையில் கூட ஆங்காரம் இல்லை. எவ்வளவு தயக்கமாக சுட்டிக் காட்டுகிறாள். மௌனத்திலிருந்து வெளி வந்து ஏமாந்து போய் மீண்டும் மௌனத்தில் தஞ்சம் புகும் அபலை. இவனும் மென்மையானவன்தான். அம்மாவும் பிள்ளையும் அந்தத் தற்கொலையைக் கூட தங்கள் அனுகூலத்துக்குப் பயன்படுத்துவது இல்லை.

அவன் அப்பாவாலும் அம்மாவாலும் மனைவிகளாலுமே பார்த்துக் கொள்ளப்படுபவன்.

காற்றில் சரியாக அண்டக் கொடுக்காத கதவின் ‘க்றீச்சிடலும்’ சம்போக உச்சத்தில் மனைவியின் முனகலும் ‘கற்பனை இன்பத்தில்’ சுகமாய் வாழும் கூத்தையனுக்கு ஒன்றாகப் போகின்றன. கற்பனையின் மீது ஓரளவாவது இருக்கும் ‘கன்ட்ரோல்’ அவனுக்குக் (யாருக்குமே) கனவு-நனவுக் கலப்பின் மீது இல்லை. கனவின் நடுவில் நிகழும் விழிப்புலகச் செயல் கனவில் ஒரு தர்க்க ரீதியான செயலாவதை நாமனைவரும் அனுபவித்து இருக்கிறோம். காலிங் பெல், தட்டப்படும் கதவு போன்றவை கனவுக் காட்சியின் சரியான இடத்தில் வேறாகத் தெரிந்து நாம் தெளிவது அனைவருக்கும் தெரிந்தது. அதை அருமையாகக் கொண்டு வந்திருக்கிறார். ஆனால் கதவு முனகி குழப்பமாய் நினைவுறுத்தும் அந்த மனைவி விஷம் அருந்தி இறந்தவள். அல்லது அந்நினைவுக்கான ஒரு ப்ரமேயம் அந்தக் கதவின் முனகல். அவள் இறப்புக்குப் பின்னும் ஒரு கதை இருக்கிறது. அது வழக்கமான கதை; அவனால் நம்பப்படுவது. (‘பேணுகின்ற காதலினைத் தேடியன்றோ பெண் மக்கள் கற்பு நிலை தவறுகின்றார்’ – பாரதி பக்கம் நான்.)

சும்மா இருப்பவர்கள் பயங்கரங்களைச் சாட்சிகளாக இருந்து கவனித்துக் கொண்டிருப்பார்கள். தன்னை அந்த நெருப்பு நெருங்குகையில் வெகு சிலரே அதில் மடிவார்கள். பெரும்பாலானவர்கள் தன்னை காப்பாற்றிக் கொள்பவர்கள். ‘டிப்ரெஷனின்’ தீவிரத்தைப் பொருத்தது அது.

வீட்டின் முன்னால் செல்லும் வாய்க்கால் சாக்கடையாக மறுவதையும், வீட்டில் தொங்கும் ஒட்டடைகளையும், காற்றில் சப்தமிடும் கதவையும் பார்ப்பான். ஆனால் சரி செய்ய ஒன்றும் செய்ய மாட்டான். தன் மனைவியோடு தொடுப்பு இருந்தவனைக் கூட அவனால் தயக்கத்தோடும், செயலின்மையாலும்தான் டீல் செய்ய முடிகிறது.

(இம் மனச்சிக்கலைச் சொல்லும் ஒரு கவிதையைக் கடைசியில் தந்திருக்கிறேன்.)**

இவரது வர்ணனைகள் அழகை மட்டும் தேடுவன அல்ல. அனைத்தும் இவர் கண்களுக்குத் தெரிகின்றன.

ஒரு முறை ஒரே ஒரு முறை சப்தமிடும் கதவை – தினமும் நினவிலிருத்தி அண்டக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லாமல் – கழற்றி எடுப்பதன் மூலமாக அவன் ஒரு காரியத்தைச் செய்து விடுகிறான். அதுவே அவனது விடுதலை. மிகப்பெரிய ஆன்மீக மாற்றம் அவனுள் நிகழ்ந்து விட்டது. அதனால்தான் அவன் மறுபடியும் அச்சமின்றி கதவை அதே இடத்தில் வைக்கவும், உற்சாகமாக இருக்கவும் செய்கிறான்.

ஒரு அசோகமித்திரன் கதையில் தற்கொலைக்குச் செல்லும் ஒருவன் ஓர் இருப்புபாதையில் படுத்து இருக்கையில் பக்கத்து இருப்புப்பாதையில் ரயில் போய்விடும். அவனும் எழுந்து போய்விடுவான். ஒரு சுஜாதாவின் கதையில் துப்பாக்கியால் சுட்டு சுடப்படுபவர் மேல் அது படாவிடினும் திருப்தியாகிவிடுவார் ஒருவர். நாநா படேகர், மனீஷா கொய்ராலா நடித்த ‘அக்னி சாக்ஷி’ யில் நாநா மனீஷாவைச் சுட்டு விடுவார். அவரும் இறந்தவர் போல் விழுவார். அது ஒரு போலீஸ் நடத்தும் நாடகம். மீண்டும் அவரைப் பார்க்கையில் கூட நாநாவுக்கு பிரச்னையிராது. இத்தனைக்கும் அவருக்கு எல்லாம் தெரியும் என்பது போல் படம் முடியும். (நாநா அசத்தி இருப்பார்). அவ்வளவு ஏன் சமீபத்திய ‘சந்திரமுகி’யில் என்ன ஆகும்? அது போல் அந்தக் கதவை அவன் பெயர்ப்பதில் அதன் சப்தமும், மனைவிகளின் கசப்பு நினைவுகளும் தவிர அவனது துருப்பிடித்த செயலின்மையும் நீங்குகின்றன. கதவை அவன் மீண்டும் அங்கே வைக்கும் அளவுக்கு தெளிவு வந்து விடுகிறது. இது உடனே அல்லது ஓரிரு நட்களில் அல்லது பின்னால் போய் விடலாம். இப்போ அவன் விடுதலையாகி இருக்கிறான்.

இது போன்ற மனசிக்கல்களில் மாட்டிக் கொண்டவர்களுக்கும், அல்லது உடனிருந்து பார்த்தவர்களுக்கும் இந்த விடுதலையின் அர்த்தம் சரியாகப் புலனாகும்.

மனதின் நிகழ்வுகள் அருமையாய் வந்திருக்கின்றன. மொழி லாகவம் இன்னும் சரளமாக, கூர்மையாக இருந்திருக்கலாம். ஆனால் எடுத்துக் கொண்ட விஷயத்தில் உள்ள கவனத்தில், சிரத்தையில் கதை வென்று விடுகிறது. சொல்வனத்தில் வெளிவந்த சிறந்த கதைகளில் இக்கதை நிச்சயம் இடம் பெறும்.

மோட்சம் தேடாத எருமைகள் **

குருவிகள் உள்ளே வந்து – மின்
விசிறியில் அடிபடும் என்று
ஜன்னலைச் சாத்தியாச்சு.
வியர்வை.
விலாவும் தரையும் பிசுபிசுக்க
வலிய வரவழைக்கும் தூக்கம்.
வேலை ஒன்றும் பளுவானதில்லை
ஆனால் ஒரு இடைவேளையையும்
விடுவதற்கு மனசில்லை.
ராப்பூரத் தூக்கம். பகல்பூரத் தூக்கம்.
பிரச்னைகளைத் தீர்க்கக்
காலையில் திடச் சித்தம் பூண்ட காலம்
மலையேறிப் போச்சு.
எது பற்றிப் பேசினலும் ரெண்டு
பக்கமும் சரியோ என்ற
தீராத சந்தேகம்.
இன்று சேற்றிலிருந்து
எழுந்து விட வேண்டும் என்று
உடம்பின் எல்லா மூலைக்கும்
ஆணைகள் விடுத்த மூளைக்கு
அப்பவே தெரியும்
இது ‘சும்மா’ ஒரு அலண்டாத விளையாட்டு.
யார் எந்த அரசியல் பேசினால் என்ன?
ஆபீஸ் சம்பளம் குமாஸ்தா மூளையை
யார் என்ன ஏசினால் என்ன?
மூளையைக் காட்டிலும்
அதில் படரும் பாசி
சக்தியுள்ளது.
இதில் ஒரு துக்கமும் இல்லை.
பதட்டமும் படபடப்பும் குறைந்தாலும்
அதற்குத் தெளிவைக் காட்டிலும்
சோம்பலே காரணம்.
சும்மா இருப்பது
சுகமோ இல்லையோ
அதில் தொந்தரவில்லை !
ஒருகால் –
ஒரு நாள் –
புத்து வைக்கலாம்.
இல்லே ! புல் முளைக்கலாம்.

ஜூன் 1979 கணையாழி.