கூந்தப்பனை – வேர்களின் நீரூற்று

swayne-palm-trees

வாழ்க்கையின் சுவைகள் அதன் எதிர்பாராத்தன்மை இழக்கப்பட்டால் குன்றிவிடும். வேறொரு புத்தகத்தைப் பற்றிதான் எழுதுவதாக இருந்தேன், தேவையான குறிப்புகளையும் எழுதி வைத்திருந்தேன், அவற்றைத் தொகுத்து எழுதும் கட்டத்தில் இருந்தபோது கூந்தப்பனை குறுநாவல் தொகுப்பை எதிர்பாராமல் வாசிக்க நேர்ந்தது. வாசித்தபின் அதைப் பற்றிய யோசனைகளைத் தவிர்க்க முடியவில்லை – குறிப்பாக, “கூந்தப்பனை” என்ற தலைப்பு கொண்ட குறுநாவலில், தன் ஆண்மையற்ற நிலையை நேரடியாகவே எதிர்கொள்கிறான் சதீஷ். மனைவியைத் தன் நண்பனுக்கு மணமுடித்துத் தந்தபின்னான அனுபவ வெளிச்சத்தில் அவனது மனப்போக்கு புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனால், அவனது செயல்களின் விளைவுகள் தொடர்ந்து புதிராகவே இருந்தன. இந்தப் புதிர் என் எண்ணங்களை எதிர்பாரா திசைகளில் கொண்டு சென்றது.

சு.வேணுகோபாலின் ‘கூந்தப்பனை’ தொகுப்பை என்னுடன் பகிர்ந்து கொண்ட நண்பர், தான் விரும்பி வாசித்த எழுத்தை எனக்குப் பரிந்துரைத்திருந்தார் என்று நினைத்திருந்தேன். மாறாக, நான் இதைப் படித்து முடித்ததும் அது குறித்த தன் தீவிரமான எதிர்மறை விமரிசனங்களை அவர் முன் வைத்தார். அதற்கு முன்னரே நான் இந்த நூல் குறித்த என் கருத்துகளை எழுதி வைத்திருந்தேன் – அவருடன் உரையாடிய பின்,  புத்தகம் குறித்து மேலும் சில பார்வைகள் கிட்டின. அவருடனான உரையாடலின் அடிப்படையில் கூந்தப்பனையை மீண்டும் வாசித்து, திரும்ப எழுதும்போதுதான், நான் வாசித்ததாக நினைத்திருந்த நூல் வேறு தளத்தில் இயங்குவதை உணர்ந்தேன். முதல் வாசிப்பில் நான் எனக்குள் உருவாக்கிக் கொண்ட கதைகள் காமம் சார்ந்த வடிவம் பெற்றிருந்தன என்றால், இரண்டாம் வாசிப்பு எழுத்துருவம் பெற்றபோது அவை ஒழுக்க விழுமியங்களைப் பேசும் வடிவம் கொண்டன.

இதற்குமுன், சு.வேணுகோபாலைக் குறித்து என் மனதில் ஆழப் பதிந்திருந்த எண்ணம் இதுதான்: சமகால எழுத்தாளர்களில் அவர் மட்டுமே காமத்தின் உக்கிர அனுபவத்தை முழுமையாகத் தன் எழுத்தில் வெளிப்படுத்துகிறார் என்று ஒரு நண்பர் கூறியிருந்தார். கூந்தப்பனையை வாசிக்கும்போதும், அது குறித்து சிந்திக்கும்போதும் காமத்தை மையமாகக் கொண்டே இதிலுள்ள கதைகளை வாசித்துப் புரிந்து கொண்டிருந்தேன். ஆனால், காமத்துக்கு அப்பால், அதன் அறம் குறித்த அக்கறையும் மனித ஆன்மாவின் மெய்ப்பாடு குறித்த கவலையும் சு.வேணுகோபாலின் எழுத்தின் உள்ளார்ந்த (ஆனால் நேரடியாகப் பேசப்படாத) உணர்வாக இருக்கிறது என்று அறிகிறேன்.

venugopal1

[சு.வேணுகோபால்]

விவசாயத்தின் நசிவைப் பேசும் ‘கண்ணிகள்’, விவசாயத்தை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ள பொருளாதாரம் இன்று சந்திக்கும் அச்சுறுத்தல்களை விவரிக்கிறது, அதன் இழப்புகளைச் சந்திப்பவர்களின் சொத்துகள் மட்டுமல்ல, ஆன்மாவே விலை பேசப்படுகிறது என்பதை உணர்த்தும் கதை அது. இந்தச் சிறுகதையில் நொடிந்து போன விவசாயியின் நிலம் அநியாய வட்டிக்குப் பணம் தருபவர்களிடம் மோசம் போகிறது, அதிலிருந்து மீளும் முயற்சி அவனது ஆன்மாவை விலை பேசும் கிருத்தவப் பெருவணிகரிடம் அவனை இட்டுச் செல்கிறது.

பிறந்த வீட்டுக்குப் போய் விட்ட தன் மனைவியைத் திரும்ப அழைத்து வர “வேதாளம் ஒளிந்திருக்கும்” குறுநாவலின் கதைசொல்லியின் உதவியைக் கேட்கிறான் விஸ்வநாதன். அவர்கள் சென்ற இடத்தில் கண்டவை, மூவரும் ஒன்றாய் பேருந்தில் திரும்பும்போது விஸ்வநாதனின் மனைவி சொல்லக் கேட்டு அறியக் கிடைப்பவை என்று ஒழுங்குபடுத்தப்படாத வரிசையில் விரிகிறது கதை. இங்கு இழப்பதற்கென்று எந்த ஆன்மாவும் இல்லை, ஆனால் ஆண்மனதின் அச்சங்கள் கேள்விக்குள்ளாகின்றன – “ஆதிக்கத்தின் மேல் நின்றுதான் நம்மால் அன்பை செலுத்த முடியுமா? விடாப்பிடியான மாய கௌரவ தடிமன் அது. அது இல்லையென்றால் ஆணும் இல்லை என்ற பின்னல் கொடி எங்கும் வியாபித்துக் கிடக்கிறது.” விஸ்வநாதனால் ஈஸ்வரி இல்லாமல் இருக்க முடியவில்லை – ஆனால், பெண்மேல் ஆதிக்கம் செலுத்துவதைத் தன் இயல்பாகக் கொண்டிருப்பதால் அவன் அன்பின் இயல்பை அறியாதவனாக இருக்கிறான். “அபாயச்சங்கு” சுரேந்திரனையும் இந்த ஆதிக்க வெறிதான் தோற்கடிக்கிறது – “அவள் மீதான மோகம் – மோகம் என்று சொல்வதைவிட அவமானத்தின் பிரதிபிம்பம் என்று சொல்லலாம்- நாளாக நாளாக அவளைத் தன்னுள் சுருட்ட முயலும் ஆக்ரோஷம் மிகுந்ததாக வளர்ந்தது. அவள் உடலை ஆக்கிரமித்து முறுக்கிப் பிழிந்தெடுக்க மனம் ஆலாய்ப் பறந்தது.”

“மரத்த தடிமன் இது என்று அறியாமலே மனிதனாக நிற்கும் ஜந்து” என்று “வேதாளம் ஒளிந்திருக்கும்” விஸ்வநாதன் விவரிக்கப்படுகிறான். பெண்ணுள்ளத்தைப் புரிந்து கொள்ள முடியாத, தன் பொறுப்பை உணராத, ஆண்பிள்ளைத்தனம் என்ற தடித்தனத்தால் இல்லற இன்பம் தன் தனியுரிமை என்று நினைத்து, தன் தோல்வியிலும் பிறரைத் தண்டிக்கும் ஆண்மையை விமரிசிக்கும் குறுநாவல் இது.

ஆண்மையின் இந்த மாய கௌரவ தடிமன் “வேதாளம் ஒளிந்திருக்கும்” மௌனமாய் இறுகி ஈஸ்வரியை அச்சுறுத்துகிறது – இந்த ஆண்மையே “அபாயச்சங்கு” மற்றும் “கூந்தப்பனை” ஆகிய இரு குறுநாவல்களிலும் வெவ்வேறு வகைகளில் குலைகிறது: கண்ணாடியின் எதிரெதிர் பிம்பங்களைப் போல் அபாயச்சங்கிலியின் சுரேந்திரனும் கூந்தப்பனையின் சதீஷும் இருக்கின்றனர் : முன்னவனது வீழ்ச்சி ஒரு எச்சரிக்கையாக இருந்தால், பின்னவனது மேன்மை ஒரு இயற்கை நியதியின் நிச்சயத்தன்மையைச் சுட்டுகிறது. தன் காதல் தோற்றுவிட்ட நிலையில் காதலியின் தாயின் பெண்ணுடலை ஆண்டு அந்த உறவில் அன்பை நிறுவ முயற்சிக்கும் சுரேந்திரன், தன் ஆன்மாவை இழக்கிறான். இல்லற வாழ்வில் அடிப்படை ஆண்மைக் குறைவுள்ள சதீஷின் இயல்பான கருணை, அவனது ஆன்மாவை பிரபஞ்ச அளவில் விரிப்பதாக இருக்கிறது.

என் நண்பர் இத்தொகுப்பில் உள்ள கதைகள் சமூக இயல்பைப் பிரதிபலிக்கவில்லை என்று சொன்னார், இவற்றில் விவரிக்கப்படும் சமூகம் நம்பகத்தன்மை இல்லாத ஒன்று, சமூக வழக்குகளை, வாழ்க்கை முறைமைகளைப் பொருட்படுத்தாத வணிக திரைப்படங்களுக்குரிய கற்பனை இந்தக் கதைகளின் ஊடே ஒரு சரடாக இருக்கிறது என்றார் அவர். “அபாயச்சங்கிலியில் வருவதுபோல் தன் காதலியின் தாயுடன், அண்டை வீடாக இருந்தாலும், வேலையில்லாத ஒரு இளைஞன் யாருக்கும் தெரியாமல் தொடர்ந்து கள்ள உறவு வைத்திருப்பது சாத்தியமா? அவனது தாய் வீட்டோடிருப்பவள். காதலியின் தாயாருக்குப் பள்ளி செல்லும் மகன் இருக்கிறான். அக்கம்பக்கத்து வீடுகளுடன் நட்பு இருக்கிறது. இந்த உறவு எப்படி சாத்தியம்?” என்று கேட்டார் அவர். அதே போல், “கூந்தப்பனையில் வருவது போல் நெருங்கியவர்களாக இருந்தாலும், நாலு பேரறிய ஒருவன் தன் மனைவிக்கு மறுமணம் செய்து வைக்க முடியுமா? அவர்கள் யார் எவர் என்பதைப் பார்க்க வேண்டும். அப்படி ஒரு சம்பவம் நடந்து விட்டால், உறவுக்காரர்கள் இவர்களை நிம்மதியாக வாழ விடுவார்களா? எல்லாவற்றுக்கும் மேலாக, வேறொருவனைக் கல்யாணம் செய்து கொண்ட தன் மனைவியுடன் அவன் ஒரே வீட்டில் வசிக்கிறான். இன்றைய சமூக நடப்புக்குப் பொருந்தாத கற்பனையாக இருக்கிறது இது,” என்றார் அவர்.

“நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யெனப் பெய்யும் மழை.” என்ற குறள் எப்படிப்பட்ட மனநிலையை வெளிப்படுத்துகிறதோ, அந்த மனநிலையே, அதன் அற விழுமியங்களே கூந்தப்பனையை ஒரு தனித்துவம் கொண்ட படைப்பாக நிலை நிறுத்துகிறது, என்று சொன்னேன் நான். அதன் முன் சு.வேணுகோபாலின் எழுத்தில் நாம காணக்கூடிய குறைகள் எத்தனை இருந்தாலும் அவை பொருட்டல்ல. நண்பருக்கு அதில் திருப்தியில்லை.

நீதிநூல்கள் இலக்கியமாகுமா என்ற கேள்வியை எழுப்பினார் அவர். இத்தொகுப்பில் உள்ள கதைகளை நீதிக் கதைகள் என்று சொல்ல முடியாது என்றாலும், இவற்றின் அடிப்படையில் உள்ள நீதி விசாரணையே இவற்றை இலக்கியமாகுகிறது என்று நினைக்கிறேன். பிரபஞ்ச நியதியை மனித வாழ்வோடு பிணைக்கும் எழுத்து அபூர்வமாகவே காணக் கிடைக்கிறது. சு.வேணுகோபாலின் கூந்தப்பனை, அதன் அத்தனை குறைகளோடும், இன்றைய காலகட்டத்தில் அவ்வகைப்பட்ட எழுத்தின் உயர்ந்த சாத்தியங்களைத் தொடுகிறது என்று சொல்லலாம்.

“அபாயச்சங்கு” குறுநாவலை ஒரு cautionary taleஆக வாசிக்க இடமிருக்கிறது – மிகவும் செயற்கையாக எழுதப்பட்ட கதை- பாத்திரங்கள் கதையைக் கொண்டு செல்லும் வாகனங்களாகப் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. ஆனால் இந்த செயற்கையான மொழியையும் மீறி அபாயச் சங்கின் நீதி நம்மைத் தாக்குகிறது. “சிதறியதில் மிச்சம் மீதியை நினைவின் துருத்தி ஊதி ஊதி அவஸ்தையை நீண்ட நாள் உயிரோடு வைத்திருக்கிறது,” என்று எழுதுகிறார் சு.வேணுகோபால். இது தவிர, அபாயச்சங்கின் பேச்சுத் தமிழ் வடிவமான சைரனுக்கு கிரேக்க இலக்கியத்தில் வேறொரு தனிப்பொருள் உண்டு.

“அபாயச்சங்கு” நினைவின் துருத்தி ஊதி ஊதி கொல்லாமல் கொல்லும் அவஸ்தை மட்டுமல்ல – கடற்கப்பல்களைத் தம் இனிய கானங்களின் கவர்ச்சியால் ஈர்த்து பாறைகளில் சிதறடித்துச் சாகடிக்கும் கிரேக்கக் கன்னிமார்களும் சைரன்கள்தான். “பொங்குவதை நீர் தெளித்து மட்டுப்படுத்த முடிந்ததே தவிர பொங்காமல் இருப்பதற்கான வழி” தெரியாத சுரேந்திரன் முன் விரியும் காட்சி இது: “குழாய் தள்ளும் நீரின் உருளையான வளைந்த வடிவம் நீரில் முங்கியிருக்கும் கல்லோடு மோதி உருளை சிதைந்து வாய்க்கால் நீராக உருக்கொண்டு போகிறது”. – இதுவும் ஒரு உடைதல்தான், இல்லையா? இந்த வாய்க்கால் நீரும் உடைதலின் விளிம்பில் நிற்கும் அவன் கண்முன் வற்றிப் போகிறது.

அபாயச் சங்கிலி கதையில் சுரேந்திரன் இளைஞன். பக்கத்து வீட்டில் இருக்கும் தன் அத்தை பெண்ணைக் காதலிக்கிறான். அத்தை கொஞ்சம் அழகானவள், அழகு குறித்த கர்வம் உள்ளவள். வசதியானவள். சுயநலம். இவன் கல்லூரி மாணவனாக இருக்கும்போது அவள் பள்ளி மாணவி. படித்து முடித்ததும் காசு கொடுத்து சொசைட்டி ஒன்றில் கிளார்க் வேலை வாங்குகிறான். முதலில் இருவரையும் விலக்கி வைத்த அத்தை, இப்போது இவர்கள் காதலை மறைமுகமாக ஊக்குவிக்கிறாள். வேலை போய் விடுகிறது. அத்தை இருவரையும் பிரித்து விடுகிறாள். இவனது காதலி சேலம் போய் கம்ப்யூட்டர் டிப்ளமா படிக்கிறாள். இவன் வேலையில்லாமல் வீட்டில் இருக்கிறான். அப்புறம் அவளுக்குக் கல்யாணம் நிச்சயம் செய்கிறார்கள். அவள் இவனை உதாசீனப்படுத்திவிட்டு தன் கல்யாணத்துக்குத் தயாராகிறாள். இவனுக்கு அவமானமாகப் போய் விடுகிறது. ஒரு நாள் அத்தை வாசலில் நின்று இவனை உற்றுப் பார்த்துத் திரும்புகிறாள். இவன் ஒரு உந்துதலில் சற்று நேரம் கழித்து அவளைத் தொடர்ந்து அவள் வீட்டினுள் நுழைந்து விடுகிறான். என்ன எப்படி என்று தெரியவில்லை, எப்படியோ தொடர்பு ஏற்பட்டுவிடுகிறது. அந்தக் கள்ள உறவு தொடர்கிறது. ஒரு ஆவேசத்தில் துவங்கிய அந்த உறவு காதலாகக் கனிகிறது. ஆனால் அது அர்த்தமற்ற காதல் என்று அவன் உணர்கிறான். தான் சீரழிந்துவிட்டதை அவன் உணரும்போது எல்லாம் முடிந்து விடுகிறது.

கதையின் வணிக சினிமாவின் எளிய கணங்களில் ஒன்று, முகமூடிக் கிழவன். சுரேந்திரனின் அகக்காட்சி இவன். காதலில் தோற்ற சுரேந்திரன் காமம் தன்னைச் சிறுமைப்படுத்திவிட்டதை உணரும்போது, முகமூடிக் கிழவன் கேட்கிறான், “உனக்கென்று எதை வைத்திருக்கிறாய்?” என்று. “சான்றிதழ்” என்று மட்டும்தான் சுரேந்திரனால் சொல்ல முடிகிறது. “மண்ணாங்கட்டி” என்கிறான் கிழவன். ஒழுக்கத்தையும், சுயத்தையும், உறவுகளையும் இழந்தது சுரேந்திரன் மட்டுமல்ல – சான்றிதழைத் தவிர வேறு எந்த அடையாளத்தையும் அவனுக்குத் தர முடியாத கல்வி முறையும் தோற்கிறது. அந்தக் கல்விக்காக பரம்பரை பரம்பரையாக விவசாயம் செய்து வரும் நிலங்களை இழக்கும் மக்களும்தான். சுரேந்திரனின் தந்தை முன்னர் பண்ணை வேலை செய்திருந்த மிராசுதாரின் குடும்பம் நொடிந்து போய், அவர்களுடைய விவசாய நிலங்கள் குழந்தைகளின் கல்விக்கு விற்கப்பட்டு, அந்தக் கல்வியும் பயனற்றுப் போகிறது – இந்த சமூக விமரிசனம், அபாயச்சங்கின் உட்சரடாக ஓடிக் கொண்டே இருக்கிறது. ஒரு தனி மனிதனின் ஆன்மா மட்டுமல்ல, சமூக ஆன்மாவின் இழப்பே அபாயச் சங்கிலியில் பேசப்படுகிறது.

இவ்வளவு விஷயமிருந்தும் அபாயச் சங்கிலி, கதையாக வணிக சினிமாவின் செயற்கைத்தன்மையைத் தாண்டுவதில்லை. கூந்தப்பனையின் செயற்கைத்தன்மை இதைவிட அதீதமானதாக இருந்தாலும், அது தொடும் உச்சம் பிரம்மாண்டமான ஒன்று.

v1சதீஷ் தனக்கு ஆண்மையில்லை என்பதை மணமானபின்தான் உணர்கிறான். தன் மனைவி இல்லறம் நிறைவு பெறாமல் தவிப்பதற்கு இரங்கி, தன் நெருங்கிய நண்பனை அவளுக்குக் கல்யாணம் செய்து வைக்கிறான். சதீஷ் எப்போதும் தன்னோடு இருக்க வேண்டும் என்று அவள் கேட்டுக் கொண்டாள் என்பதற்காக மூவரும் ஒரே வீட்டில் இருக்கிறார்கள். ஒரு நாள் அசந்தர்ப்பமான வேளையில் அவன் வீட்டுக்குள் நுழைகிறான்; வாரிச் சுருட்டிக் கொண்டு அவள் “திறந்த வீட்டில் நாய் மாதிரி நுழையறியே, நீயெல்லாம் மனுசனா?” என்று கேட்கிறாள். எத்தனை முறை நான் பார்த்த உடம்பு என்று நொந்து போய்விடுகிறான் இவன். இது தவிர ஊரே இவனை ஏளனம் பேசுகிறது. ஆக, ஊரைவிட்டு ஓடுகிறான். எங்கெங்கோ செல்கிறான். கதையின் முடிவில் ஒரு கிராமத்திலிருந்து கேனில் பாலைக் கொண்டு போய் சொசைட்டிக்குத் தரும் வேலை கிடைக்கிறது. அந்த வேலையைச் செய்துவிட்டுத் திரும்பி வரும்போது வெடிகளால் பாறைகளைப் பிளக்கும் இடத்தைச் சுற்றி உள்ள தென்னந்தோப்பு நீரில்லாமல் கருகுவதைப் பார்க்கிறான் சதீஷ். அங்குள்ள ஒரு பாறைப் பள்ளத்தில் தேங்கிக் கிடக்கும் நீரை எடுத்து ஒரு மரத்துக்கு ஊற்றிவிட்டு திரும்பி வந்து பார்க்கும்போது ஒரு அதிசயம் நிகழ்ந்திருக்கிறது.

கூந்தப்பனை குறித்து ஜெயமோகன் ஒரு ஆழமான விமரிசனக் கட்டுரை எழுதியிருக்கிறார். இந்தக் குறுநாவல் வாசிப்புக்கு அந்தக் கட்டுரை இன்றியமையாத ஒன்று. அதில் ஜெயமோகன் இவ்வாறு எழுதுகிறார்: “மண்ணில் முளைத்தெழுந்த ஒரு கலைஞனைப் புரிந்துகொள்ள நமக்கு எவ்வளவு தகவல்கள் தேவைப்படுகின்றன இல்லையா? நாம் எத்தனை தூரம் விலகி வந்திருக்கிறோம்!” என்று. உண்மைதான், நாம் மேற்கொண்டிருப்பது தகவல் இழப்பு மட்டுமல்ல, நாம் நம் சமூக ஆன்மாவையே தொலைத்துக் கொண்டிருக்கிறோம். அதன் மொழி நமக்குப் புரியாததாக இருக்கிறது. வணிக  சினிமாவின் எளிய கற்பனையே இன்று நம் மண்ணின் கதையாடலாக மாறிவரும் நிலையில், அந்த வடிவின் உச்சங்களைத் தொடும் சு.வேணுகோபாலை மண்ணில் முளைத்தெழுந்த கலைஞர் என்று ஜெயமோகன் அழைப்பதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. அது ஏன் என்று புரிந்து கொள்ள, இங்கு சுட்டப்பட்டிருக்கும் ஜெயமோகனின் கட்டுரையை நீங்கள் படிக்க வேண்டும்.

நார்த்ராப் ஃப்ரை (Northrop Frye) என்ற விமர்சகர், தொன்மத்தின் நீட்சியே இலக்கியம் என்று சொன்னதாகத் தெரிகிறது. கூந்தப்பனை தொன்மத்தின் ஆழங்களைத் தொடும் கதை என்பது ஜெயமோகனின் இந்தக் கட்டுரையைப் படிக்கும்போது வலுப்பெறுகிறது. சதீஷ் தனியன்தான், ஆனால் தனியனில்லை. அவனது துயரங்கள், அவற்றை அவன் உத்தமமாய் எதிர்கொள்ளும் தன்மை, அவனை இயற்கையோடு இயற்கையாய் ஒன்ற வைப்பதாக இருக்கிறது. பொதுவாக வேணுகோபாலின் கதைகளில் கலவியனுபவங்களில் இது நிகழ்கிறது – “பாம்புப் பிணையல். வயது வித்தியாசம் அழிந்து ஒத்த நாய்க்குட்டிகளின் செல்லாட்டம். அடக்குமுறை மறைந்து என்னை ஆண்டுகொள் என்ற விட்டுக்கொடுத்தல் சட்டென்று அந்தப் புள்ளியில் மையம் கொண்டது இருவருக்கும். மனிதர்கள் அழிந்து, விலங்குகள் அழிந்து, புழு பூச்சிகள் அழிந்து, எங்கும் மல்லிகை மொட்டு மெத்தென்று உதிர்ந்திருக்கும் மிகப் பெரிய வெளியில் யோசிப்பற்ற இரு குழந்தைகள் உருவிப் போட்டது போல் விளையாடுகின்றன,” என்று வேணுகோபால் எழுதுகிறார் ஓரிடத்தில் (அபாயச்சங்கு, பக்கம் 53).

இன்னோரிடத்தில் ஆணும் பெண்ணும் தத்தம் இயற்கையை ஒன்றியுணர்தல் இப்படி விவரிக்கப்படுகிறது: “அவளுக்குள் அவனுக்குள் பதுங்கி இருக்கும் ஆண்மை, பெண்மை பிரவாகமெடுத்து பரவசமாய்க் கசிந்தது. உச்சத்தின் உதிர்ப்பு நிகழ தனித்த தூக்கலான தாக்குதல் மறைந்தது. பெண்ணுக்குள் ஆணையும், ஆணுக்குள் பெண்ணையும்… அர்த்தநாரி மீட்டலென நிகழ்ந்தது. ஐம்புலன்களும் வெளி இரைச்சல் அடங்கி ஐந்தும் ஒன்றன் கவனமாகிக் குவிந்தது. ஜதிகளில் மயங்கும் பாதலீலைகள் போல் ஆனந்த லகரி. வெட்கங்கள் ஒழிந்த மல்யுத்தம். முக்குளித்ததில் பிறந்தது லயம். இப்படி மோகத்தில் ஒன்றிப் பிணைத்து போகும் நிலையை அவள் இதற்குமுன் பெற்றதில்லை. தம்மை மறந்தனர். கொத்தான நரம்பு மண்டலத்தின் ஒரு கீற்றில் ஒட்டியிருந்த அவளது கழுத்துச் சுளுக்கின் முடிச்சு அவிழ்ந்து கொண்டது” (அபாயச்சங்கு, பக்கம் 80).

கூந்தப்பனையில் சதீஷின் ‘நினைப்பில் மட்டுமே இருந்தது காமம்’, ‘சர்வவல்லமை பொருந்திய அந்த ஜீவாதார காந்தப்புலம். உடம்பில் எந்த இடத்தில் அது ஒட்டிக கிடக்கிறது? அதை எப்படி வெட்டியெடுக்க?’ என்று ஒரே சிந்தனையாக, “ஒரே ஒரு முறை ஒரு மின்னலெனத் தெறித்து மறைந்தால் போதும்…” என்று எப்போதும் நீங்காத தன் குறை நினைவால், வாழ்க்கையை விரும்பித் தொலைத்தவன் அவன். தன் மனைவியை நண்பனுக்கு மணமுடித்து, அவளை “… நடுவில் கிடத்தி இருவரையும் தன் இரு கரத்தால் குழந்தைகளைத் தழுவிக் கொள்வதுபோலத் தழுவி நிம்மதியாகத் தூங்கும் அமைதியைத் தேடினான் அவன். “அவனோடு அவனது அம்மா மூச்சாக இருக்கிறாள். அவள் உடல்தான் சத்திரப்பட்டியில் சுற்றி வருகிறது,” என்று நினைத்துக் கொள்ளக்கூடியவன் – சதீஷுக்கு ஆணும் பெண்ணும் கூடி அறியக்கூடிய அர்த்தநாரி மீட்டல் இல்லை: அவனே அர்த்தநாரியாக இருக்கிறான். அதனால் சிறுமைப்பட்டாலும், சிறுமை தொடாதவனாக இருக்கிறான். துயர் மிகுந்திருந்தும், துயரைக் காணும்போதெல்லாம் கருணை அவனுள் சுரந்து கொண்டே இருக்கிறது.

இந்தக் கதையின் முடிவில் என்றும் தன்னுள் ஈரமறறிருந்த சதீஷ் தன்னைச் சுற்றி ஈரமற்ற உலகில் உயிர்கள் வாடுவதைக் காண்பது நாம் தொன்மங்களில் உணரும் உச்சம். இந்த உச்ச துயரில் அவனுள் சுரக்கும் கருணையில் இயற்கை நெகிழ்கிறது. அவனுக்காகக் ஒரு பேரதிசயம் நிகழ்கிறது – அது, “இதுவரை ருசித்திராத நீரமுதம். கருணையின் ஜீவித அழகு”. ஆண் பெண் அறிதலில் இயற்கை தொட்டு ஒரு அர்த்தநாரிஸ்வர மீட்டல் நிகழ்கிறதென்றால், அர்த்தநாரிஸ்வரத்தைத் தம்மியல்பாய்க் கொண்ட இயற்கையும் சதீஷும்- வேறொரு, அதனினும் உன்னத மீட்டலை நிகழ்த்துகின்றனர்.

நல்லார் ஒருவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்ற நீதி எந்த மண்ணில் வேரூன்றி இருந்ததோ, அந்த மண்ணின் கதைகளை நீக்கி அவற்றின் இடத்தை என்றோ ஆக்கிரமித்து விட்டன வணிக சினிமாவின் எளிய கதைகள்.  ஆனால் அந்த நீதியுணர்வு தொடர்ந்து வெளிப்படுவதால் சு.வேணுகோபாலின் கதைகள், அவற்றின் அத்தனை குறைகளையும் தாண்டி, இந்த மண்ணின் கதைகளுக்குரிய குரலில் பேசும் இயல்பு கொண்ட இலக்கியமாகின்றன.

-o00o-

கூந்தப்பனையில் ஓரிடத்தில் சதீஷ் கிருத்தவ தேவாலயமொன்றில் இறைவனிடம் இறைஞ்சுகிறான் : “எத்தனை முறை கேட்டிருப்பேன்? தரவில்லையே இறைவா! நீ ஒரு இந்துவுக்குத் தரமாட்டாயா? இந்த சந்நிதானத்தில் சொல்கிறேன். எனக்கு அதை – ஒரே ஒரு முறை போதும்- தந்து எடுத்துக் கொள். மதம்மாறி உன் பாதங்களில் கிடக்கிறேன்.”

ஜெரார்ட் மான்லி ஹாப்கின்ஸ் என்றொரு பதினெட்டாம் நூற்றாண்டு கவிஞர். கத்தோலிக்க பாதிரியார். ஏறத்தாழ இதே போன்ற ஒரு இறைஞ்சுதலை அவரும் கவிதையாகப் பதித்திருக்கிறார். ஒரு முறை படித்தாலும் மறக்க முடியாத கவிதை: ‘Thou art indeed just, Lord, if I contend’ என்று துவங்கும் அந்தக் கவிதை இயற்கை புத்துயுயிர்ப்பு கொண்டு செழிப்பதை வர்ணித்து, இப்படி முடிவு பெறும்-

Now, leavèd how thick! lacèd they are again

With fretty chervil, look, and fresh wind shakes

Them; birds build – but not I build; no, but strain,

Time’s eunuch, and not breed one work that wakes.

Mine, O thou lord of life, send my roots rain.

ஜெரார்ட் மான்லி ஹாப்கின்ஸ் கதை என்ன ஆயிற்றென்று தெரியாது- கூந்தப்பனையில் இந்தப் பிரார்த்தனைக்குக் கடவுள் செவி சாய்க்கிறார்: சதீஷின் வேர்களுக்கு நீரூற்றுகிறார், அது உலகின், அல்லது உலகின் அவனிருக்கும் பகுதியின் தாகத்தைத் தீர்க்கும் “கருணையின் ஜீவித அழகாக மிளிர்கிறது”. அந்த முடிவை நம் மனம் இன்றும் ஏற்றுக் கொள்கிறது என்பது புதையுண்டு போகும் நம் பண்பாடு சரியான குரல்களுக்குத் துளிர்க்கும் உயிர்ப்புடன் இருக்கும் அதிசயத்தை உணர்த்துகிறது. கூந்தப்பனையில் நாம் அறியும் குரல் அப்படிப்பட்ட ஒன்று.

(கூந்தப்பனை, குறுநாவல்கள், சு.வேணுகோபால். தமிழினி பதிப்பகம். 2001ஆம் ஆண்டு பதிப்பு. 144 பக்கங்கள். விலை ரூ.50)