குற்றப்புனைவுகளின் எல்லையை விரிவாக்கிய இயன் ரான்கின்

rebus-exhibition3

“முதன்முதலாக நான் ஒரு நாவலை எழுத ஆரம்பித்தபோது, அதில் வரும் புலனாய்வுத்துறையினர் எப்படிச் செயல்படுகிறார்கள் என்று நேரடியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமென்று அருகிலிருந்த காவல்நிலையத்துக்குச் சென்றேன். அவர்களிடம் நான் எழுதவிருந்த கதைக்கருவையும், அதில் நடக்கும் ஒரு குற்றத்தைப் புலனாய்வுத்துறையினர் எப்படித் தீர்க்கிறார்கள் என்பதையும் சொன்னேன். அதைக் கேட்டுவிட்டு காவல்துறையினர் ‘மிகவும் சுவாரசியமான கதைக்கரு’ என்று பாராட்டிவிட்டு, நான் சொன்ன கதையிலிருந்த குற்றம் போலவே அப்போது ஒரு குற்றம் நடந்திருக்கிறது என்றும், அதைத் தாங்கள் விசாரித்து வருவதாகவும் கூறினார்கள். எனக்கு அது மிகவும் ஆச்சரியமளித்தது. சந்தோஷமாக வீட்டுக்கு வந்து என் அப்பாவிடம் அதைக் குறித்துச் சொன்னேன். அவர் என்னைக் கடுமையாகக் கோபித்துக் கொண்டார்: ‘என்ன முட்டாள்தனமான காரியம் செய்திருக்கிறாய்? உண்மையில் போலிஸ் நீதான் அந்தக் குற்றத்தைச் செய்திருக்கிறாய் என்றும், அந்த வழக்கு எப்படிச் சென்றுகொண்டிருக்கிறது என்று தெரிந்துகொள்வதற்காக அவர்களிடம் பேசியதாகவும் நினைக்க ஆரம்பித்திருப்பார்கள்.’ என்று கடிந்துகொண்டார். நான் மீண்டும் காவல்நிலையத்துக்கு ஓடோடிச் சென்று என் நிலையை விளக்கிக் கூறினேன். என் விளக்கத்துக்குப்பின், என் அப்பா சொன்னதைப் போலவே அவர்கள் சந்தேகப் பட்டியலில் இருந்த ஒரே ஆள் நான்தான் என்பதைக் கூறினார்கள். அப்படி நான் எழுதிய புத்தகம்தான் என்னுடைய முதல் புத்தகம். இன்ஸ்பெக்டர் ரீபஸ் என்ற தொடர்நாவல்களின் முதல் புத்தகம். அதற்குப்பின் ஒருபோதும் போலிஸிடம் சென்று என் கதைக்கருவைச் சொல்லும் தைரியம் எனக்கு வரவில்லை.”

ஒரு பேட்டியில் இதைச் சொல்லியிருப்பவர் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த குற்றப்புனைவு எழுத்தாளரான இயன் ரான்கின். இன்று குற்றப்புனைவு குறித்து எழுதுபவர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர். இத்தொடரிலேயே இதுவரை இரண்டு முறை இவரைக் குறித்த குறிப்பு வந்திருப்பதே அதற்கு ஒரு உதாரணம். மேற்கண்ட பேட்டியில் இயன் ரான்கின் சொல்லியிருக்கும் இன்ஸ்பெக்டர் ரீபஸ் தொடர்நாவல்கள்தான் இவருக்குப் பெரும்புகழ் பெற்றுத் தந்தவை. இவருடைய படைப்புகள், ‘காவல்துறை விசாரணை’ (Police Procedural) என்ற வகைமை மற்றும் டார்ட்டன் நுவார் (Tartan-Noir) என்ற கிளைப் பிரிவு இரண்டிற்குள்ளும் அடங்கும். டார்ட்டன் நுவார்  வகையின் மிகச்சிறந்த ஆக்கங்களாக இவை கருதப்படுகின்றன. (டார்ட்டன் நுவார்  குறித்து கட்டுரையில் பின்னர் விரிவாகப் பார்ப்போம்) எந்த வகைமையில் வைத்தாலும், குற்றப்-புனைவுகளில் ஒரு எழுச்சியையும், அதன் எல்லைகளை விரிவாக்கியும், பலர் அதையொட்டி எழுதவும் காரணமாக இருந்தவர் இயன் ரான்கின்.

இவ்வளவு முக்கியமான குற்றப்புனைவு எழுத்தாளராக இருந்தாலும், குற்றப்புனைவுகளை ரான்கின் எழுத நேர்ந்ததே ஒரு தற்செயல் எனலாம். இயன் ரான்கின், ஸ்காட்லாந்திய இலக்கியத்தில் தேர்ச்சி பெற்று, அதில் Ph.D பட்டம் பெற மேற்படிப்புக்குச் சேர்ந்தார். அவருடைய ஆய்வு ம்யூரியல் ஸ்பார்க் (Muriel Spark) எனும் ஸ்காட்டிய எழுத்தாளரைப் பற்றி இருந்தது. அந்த காலகட்டத்தில் தன்னுடைய முதல் மூன்று நாவல்களை எழுதினார். தன் படைப்புகளின் முக்கிய கதாபாத்திரமான காவல்துறை அதிகாரிக்கு ரீபஸ் என்ற பெயரைக் கூடத் தன் படிப்பைச் சார்ந்து வைத்தார். ரீபஸ் என்பது வார்த்தைப் புதிர்களை படங்கள் மூலமாகத் தரும் ஒருவகை பழங்கால வார்த்தை விளையாட்டு. மொழியியல் சார்ந்து நிறைய படிக்கவேண்டியிருந்த இயன் ரான்கினை ரீபஸ் புதிர்கள் மிகவும் கவர்ந்தவை. “குற்றப்புனைவு மூலமாக வாசகர்களோடு நான் விளையாடுவதாக நினைத்தேன். ஆகவே ஒரு குறியீடு போல, ரீபஸ் என்ற புதிரின் பெயரையே இன்ஸ்பெக்டருக்கு வைத்தேன். ஆனால் இப்போது யோசித்துப் பார்த்தால் அது ஒரு குழந்தைத்தனமான பெயராகத் தோன்றுகிறது.” என்று சொல்கிறார் ரான்கின்.

இத்தொடரின் முதல் கட்டுரையில் குறிப்பிடப்பட்டதுபோல, எழுத ஆரம்பித்தபோது, இயன் ரான்கினுக்கு குற்றப்புனைவுகள் மீது பெரிய மதிப்பு இருந்திருக்கவில்லை. பெரும் இலக்கியவாதிகள் மீது ஈடுபாடு கொண்டிருந்த அவர், குற்றம் நடக்கும் ஒரு ‘இலக்கியப் புனைவாகத்தான்’ கதையை எழுதினார். இருந்தும் அது வெளிவந்தபின், குற்றப்புனைவாகத்தான் அவர் புத்தகம் வகைப்படுத்தப்பட்டது. ஆரம்பத்தில் அதைக் குறித்து எரிச்சலடைந்தாலும், அதைத் தொடர்ந்து குற்றப்புனைவுகளை அவர் ஆழ்ந்து படிக்க ஆரம்பித்தார். “நான் எழுத நினைக்கும், சொல்ல நினைக்கும் எல்லா விஷயங்களையும் குற்றப்புனைவுகளில் சொல்ல முடியும் என்பதைப் புரிந்துகொண்டபின் நான் தொடர்ந்து குற்றப்புனைவுகளை எழுத ஆரம்பித்தேன். குற்றப்புனைவும் இலக்கியம்தான் என்று எனக்குப் புரிய ஆரம்பித்தது.” என்கிறார் ரான்கின்.

தொடர்ந்து இன்ஸ்பெக்டர் ரீபஸ் நாவல்களை எழுதினாலும், அவை அதிகம் வாசக/விமர்சன ஆதரவைப் பெறவில்லை. இத்தொடரின் எட்டாவது நாவலான ப்ளாக் அண்ட் ப்ளூ (Black & Blue) என்ற நாவல்தான் அவருடைய எழுத்துப் பயணத்தில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. பரவலான வரவேற்பைப் பெற்ற இந்த நாவல் பொன் கத்தி (Gold Dagge)’ விருதைப் பெற்றது. நாவல் என்ற எழுத்து வடிவின் எழுத்துமுறை, உருவம், உள்ளடக்கம், சூழல் பற்றிய ஒரு தெளிவான பார்வைக்கு இந்த நாவலின் மூலம் வந்தார் இயன் ரான்கின் எனலாம். முந்தைய நாவல்களைப் படித்தபின் இதைப் படிக்கும்போது நம்மால் அதை உணர முடியும்.

ir-11“ரீபஸ் பற்றி ஏழு கதைகள் எழுதி முடித்திருந்தேன், இனி எப்படிப்பட்ட முயற்சியைச் செய்யலாம் என்பது எனக்குத் தெரிந்து விட்டது போன்ற உணர்வு இருந்தது. எனக்கு இந்த வகைமை மிகவும் பழக்கப்பட்ட ஒன்றாக இருந்தது. இப்போது ரிஸ்க் எடுக்கத் துவங்கவும், ரீபஸ்சை இன்னும் கொஞ்ச தூரம் கொண்டு செல்லவும் தயாராக இருந்தேன். அவரை எடின்பரா (Edinburgh) நகரை விட்டு வெளியே கொண்டு செல்ல முடியும். ஸ்காட்லாந்து முழுவதையும் பற்றிப் பேச முடியும். அரசியல் நிலவரத்தையோ பொருளாதார நிலவரத்தையோ பேச முடியும். நிஜ வாழ்வில் இருந்த தொடர் கொலைகாரனைக் கதைக்குள் கொண்டு வர முடியும். நான் நினைத்த எதையும் என்னால் செய்ய முடியும். அந்த சமயத்தில் நான் ஜேம்ஸ் எல்ராயின் நாவல்களை வெறி பிடித்த மாதிரி படித்துக் கொண்டிருந்தேன் என்பது ஓரளவுக்கு இதற்கான காரணமாக இருக்கலாம். அவர் பயன்படுத்திய அந்த மாபெரும் நிலப்பரப்பை, அவரது கதைமொழியைப் பார்த்தேன். தன் கதைகளின் அமைப்பில் அவர் எடுத்துக் கொண்ட சாத்தியங்களைக் கவனித்தேன். அந்த நேரத்தில் நான் மிகவும் ரசித்துப் படித்த இன்னொரு புத்தகம் என்று ட்ரெயின்ஸ்பாட்டிங் (Trainspotting) -ஐச் சொல்ல வேண்டும். அதிலும் முக்கியமாக எர்வின் வெல்ஷ் (Irvine Welsh) கண்டுபிடித்திருந்த கலப்பு மொழியை மிகவும் ரசித்தேன். அவர் பயன்படுத்தியவை உள்ளூர் சொற்கள் இல்லாதவை என்பது எனக்குத் தெரிந்திருந்தது, நானே எடின்பராவில் இருந்தவன்தான்.” என்று இந்த மாற்றங்களை பற்றி ரான்கின் கூறுகிறார்.

இதைத் தொடர்ந்து வந்த நாவல்கள் பெரும் வாசக மற்றும் விமர்சன வரவேற்பைப் பெற்றன. ப்ளாக் & ப்ளூ (Black & Blue) புத்தகம், டார்ட்டன் நுவா என்ற வகைமையின் மைல் கல்லான படைப்பாகப் பார்க்கப்படுகின்றது. டார்ட்டன் நுவா என்ற வருணனைப் பிரிவு அமெரிக்க எழுத்தாளர் ஜேம்ஸ் எல்ராயால் (James Ellroy) உருவாக்கப்பட்டது. இது ஸ்காட்லாந்திய குற்றப்புனைவுகளை, அதன் எழுத்தாளர்களைக் குறிப்பது. ஸ்காட்லாந்தியப் புனைவுகளில் காலெடோனியன் ஆண்டிஸிசிகி (Caledonian Antisyzygy) என்ற ஒருவருக்குள் உறைந்து கிடக்கும் நன்மை, தீமை என்ற இருமையைக் குறிக்கும் கருத்தாக்கங்கள் உண்டு என ஒரு கருத்து 20ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் உருவாக்கப்பட்டது. இருண்மையையும் ஸ்காட்லாந்தியப் புனைவுகள் அதிகம் சித்தரிப்பதைப் பார்க்கமுடியும். (Strange Case of Dr Jekyll and Mr Hyde, The Private Memoirs and Confessions of a Justified Sinner போன்ற ஸ்காட்லாந்திய நாவல்களை இவ்வகைப் புனைவுகளுக்கு உதாரணமாகக் கூறலாம்.) இந்த ஸ்காட்லாந்தியப் புனைவம்சங்களையும், அமெரிக்க ‘hard boiled’ வகையில் இருந்து சில கூறுகளையும் உள்ளடக்கி உருவாகிய ஸ்காட்லாந்திய குற்றப்புனைவுகள் டார்ட்டன் நுவார் என்று அறியப்படுகின்றன. இவ்வகைப் புனைவுகளின் மையப்பாத்திரம் ஒரு களைப்புற்ற, வாழ்வின் மீதே சற்றே அவநம்பிக்கை உள்ளவராக இருப்பது (world weary and cynical)  குறிப்பிடத்தக்க அம்சம்.

இன்ஸ்பெக்டர் ரீபஸ் பாத்திரம் டார்ட்டன் நுவாவுக்கான இத்தகைய குணாதிசயங்கள் கொண்டதே. ஆனால் இப்பண்புகள் மற்ற நாடுகளில் எழுதப்படும் படைப்புக்களிலும் காணப்படுவதால் இந்த தனி வகைமையை நிராகரிப்பவர்களும் உண்டு. இன்ஸ்பெக்டர் ரீபஸ் தொடரின் முக்கியமான அம்சங்கள் என, ‘குற்றம்’ என்று இந்த வகைப் புனைவுகளில் அதிகம் பேசப்படுபவையை தவிர மற்றதையும் பேசுவது, சமூக அவதானம், பல இழைகளைக் கொண்ட நாவல்கள், காவல்துறையின் உள் அரசியல், அன்றாட வாழ்க்கைமுறை பற்றி பேசுவது, எடின்பரா நகரை ஒரு பாத்திரமாக மாற்றியது போன்றவற்றைக் கூறலாம்.

கொலை, கடத்தல் இவை இரண்டும்தான் பெரும்பாலான குற்றப்புனைவுகளின் முக்கியமான கருப்பொருளாக இருந்து வருகின்றன. ஆனால் காவல்துறை இவற்றைத் தவிரவும் பல வகையான வழக்குகளை விசாரணை செய்கிறது. உதாரணமாக, காணாமல் போனவர்களைப் பற்றி எத்தனை புனைவுகள் வந்துள்ளன? ஒரு ஆள் கடத்தப்பட்டு இறுதியில் கண்டுபிடிக்கப்பட்டு சுபமாக முடிவது போல் நிஜத்தில் நடப்பதில்லை. வருடந்தோறும் எத்தனையோ பேர் வீட்டில் பிணக்கு கொண்டோ, படிக்கப் பிடிக்காமலோ, நகரத்தால் ஈர்க்கப்பட்டோ காணாமல் போகிறார்கள். அவர்கள் எல்லாம் என்னவாகிறார்கள், அவர்கள் குடும்பம் படும் அவஸ்தை என்ன? ஒருவருக்கு என்ன நடந்தது என்று தெரிந்து விட்டால், அது எவ்வளவு துக்ககரமாக இருந்தாலும் அவரை சார்ந்தவருக்கு ஒரு விதமான தீர்வு கிடைக்கும். ஆனால் என்ன ஆனார்கள் என்றே தெரியாமல் இருப்பது மிகக்கொடுமையானது.

இயன் ரான்கினின் டெட் ஸோவ்ல்ஸ் (Dead Souls) என்ற நாவல் இது குறித்து பேசுகிறது. ரீபஸின் பள்ளித்தோழரின் மகன் காணாமல் போக, அது குறித்து அவர் ரீபஸின் உதவியை நாட, ரீபஸ் விசாரிக்கிறார். இதனூடாக அக்குடும்பத்தின் துக்கம் குறித்த சித்திரமும் நமக்கு கிடைக்கிறது. குற்றத்தை நேரடியாக சம்பந்தப்பட்டவர் மட்டுமே பாதிப்படையும் விஷயமாக பார்க்க முடியாது என்பதையும் இது காட்டுகிறது. இன்னொரு நாவல் இரு குற்றக் கும்பல்களிடையே நடக்கும் சண்டை பற்றியும், அதனூடாக மற்ற நாடுகளிருந்து பெண்கள் பாலியல் தொழிலுக்காகக் கடத்தப்படுவது பற்றியும் பேசுகிறது. இன்னொரு நாவலில் காவல்துறையில் உள்ள கறுப்பாடுகளைக் கண்டுபிடிக்க ரீபஸ் பணிக்கப்பட்டு, அதற்காக சந்தேகத்திற்கு உள்ளான அதிகாரிகளுடன் பழகுகிறார். அவர்கள் பிடிபட்ட போதை மருந்தைக் கடத்துவதும், அதை ரீபஸ் கண்டுபிடிப்பதும் காட்டப்படுகிறது.

குற்றப்புனைவுகளில் இன்னொரு பொது அம்சம், மையக்கதாபாத்திரம் ஒரு வழக்கை மட்டுமே விசாரிப்பது, அதுவே நாவலின் கருவாக இருக்கும். அதிகம் போனால் இரண்டு இழைகளை ஆரம்பித்து, மத்தியிலோ இறுதியிலோ இரண்டையும் ஒரே புள்ளியில் இணைப்பது நடக்கும். நிஜ வாழ்க்கையில் காவல்துறையினருக்கு இச்சலுகை இருப்பதில்லை. ஒரே நேரத்தில் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத பல வழக்குகளை அவர்கள் விசாரிக்க வேண்டிவரும். அதே போல் இந்த நாவல்களிலும் ரீபஸ் சில சமயம் மூன்று, நான்கு வழக்குகளை ஒரே நேரத்தில் விசாரிக்கிறார். ஹாங்கிங் கார்டன் (Hanging Garden) நாவலில் மேலே பார்த்த குற்றக்கும்பல்களுக்கிடையே நடக்கும் சண்டையைத் தடுக்க முயலும் நேரத்தில், ஒரு போர்க்குற்றவாளி பற்றியும் விசாரணை செய்கிறார். இதனூடாக ஆட்கடத்தல் பற்றியும் ஆராய்கிறார். இதனிடையே அவருடைய மகள் ஒரு தறி கேட்ட வாகனம் மோதி விபத்துக்குள்ளாக, அதை வேலை சார்ந்து இல்லாமல், தனிப்பட்ட முறையில் விசாரிக்கிறார்.

காவல்துறையில் நடக்கும் அரசியல், மலிந்திருக்கும் லஞ்சம் போன்றவையும் நாவல்களில் பங்கு வகிக்கின்றன. உயர் அதிகாரிகளானாலும் சரி, அல்லது இன்ஸ்பெக்டர் என்ற பதவியில் இருப்பவரானாலும் சரி அவர்களின் எண்ணம், படிநிலையில் (hierarchy) அடுத்த படிக்கு செல்வதுதான். அதற்காக எந்த சமரசத்திற்கும் அவர்கள் தயாராக உள்ளனர். குறிப்பாக ஊடகங்களில் பெயர் கெடாமல் பார்த்துக்கொள்வது அவர்களுக்கு முக்கியம், வழக்கில் தொய்வோ அல்லது பாதகமோ ஏற்படக்கூடுமென்றாலும், தங்களைத் தற்காத்துக்கொள்ள ஊடகங்களைப் பயன்படுத்துகிறார்கள். ஒரே சமயத்தில் பல வழக்குகளை விசாரிக்கவேண்டி உள்ளதால் ஏற்படும் பிரச்சினைகள் பேசப்படுகின்றன. விசாரிப்பவர்களுக்கு வேலைப்பளு மிக அதிகமாகிறது. தினமும் கிட்டத்தட்ட முழுநாள் பணியில் இருக்க வேண்டி வருகின்றது. வார இறுதியில் கூட ஓய்வு கிடைப்பதில்லை. அதிகப்படி நேரம் வேலை செய்வதற்கு மேலதிகாரிகள், பட்ஜெட் பற்றாக்குறையால் அதிகப்படி பணம் (OT) தருவதில்லை. இவையெல்லாம் காவல்துறையினரை எப்போதும் சாகச வீரர்களாகக் காட்டும் பிம்பத்தை தகர்த்து அவர்களையும் நம்மைப் போன்று ஆசாபாசங்கள் கொண்ட, தவறுகள் செய்கிற, வேலை மீது பல நேரம் ஆயாசங்கள் கொள்பவர்களாகக் காட்டுகிறது.

இந்நாவல்கள் சமூகத்தின் படிநிலைகளில் பல்வேறு இடத்தில் உள்ளவர்களைத் தொட்டுச் செல்கின்றன. குற்றக்குழுக்கள் பற்றி ஒரு பக்கம் பேசினால், இன்னொரு பக்கம் சமூகத்திலும், அரசியலிலும் செல்வாக்குள்ளவர்கள் செய்யும் குற்றங்கள் பற்றி பேசுகின்றது. அதே நேரம் நடுத்தர வர்க்கக் குடும்பங்களில் நடக்கும் குற்றங்களும் பேசப்படுகின்றன. ஃப்லெஷ் மார்க்கெட் க்ளோஸ் (Fleshmarket Close) என்ற நாவல் குடியேற்றம் (immigration) மற்றும் இன நெருக்கடி (racial tension) பற்றிப் பேசுகிறது. இன்னொரு நாவல் குழந்தைகளிடம் பாலியல் குற்றம் புரிந்தவர் வெளிவந்து ஒரு குடியிருப்பில் வசிக்கும்போது, அக்குடியிருப்பில் வசிக்கும் மற்றவர்கள் அதை எப்படி எதிர்கொள்கிறார்கள், ஒரு முறை தவறு செய்தவர் திருந்த வாய்ப்பில்லையா, அந்த வாய்ப்பைத் தர வேண்டுமா என்று பேசுகிறது. இப்படிப் பல்வேறு படிநிலைகள் வழியாக நாவல் பயணிப்பதால், எடின்பரா நகரத்தின் பல்வேறு சமூக அடுக்குகள் பற்றி நமக்குத் தெரிய வருகிறது.

உலகின் எந்த நகரமாக இருந்தாலும் சுற்றுலாப் பயணிகளுக்கோ, வாழ்க்கையின் விளிம்புகளைப் பார்க்காதவர்களுக்கோ அது தரும் உணர்வுகள் பொதுவாக சிறப்பான ஒன்றாக இருக்கும். அவர்கள் அந்த நகரை சிலாகிக்கலாம். ஆனால் காவல்துறையினரோ அவர்கள் விசாரிக்கும் பல தரப்பட்ட வழக்குக்கள் மூலம் ஒரு நகரை அதன் சகல பரிமாணங்களுடன், சாதக, பாதகங்களுடன் அறிந்து வைத்திருப்பார்கள். அவர்களுடைய அனுபவங்கள் நகரைப் பற்றிய முற்றிலும் வேறு பார்வையை தந்திருக்கும். நகரத்தின் பிரபலமான விஷயங்கள் அவர்களை அவ்வளவாக ஈர்க்காது.

“உண்மையில் இரண்டு எடின்பராக்கள் இருக்கின்றன. சுற்றுலா வருபவர்கள் பார்க்கிற நகரம் ஒன்று. அங்கே கோட்டை இருக்கிறது, கில்ட் அணிந்தவர்கள் ஷார்ட்பிரெட் சாப்பிடுகிறார்கள்,  பைக்குழல் வாத்தியம் வாசிக்கிறார்கள். அது சரிதான். உண்மையில் அது எடின்பராவின் டிஸ்னிலாண்ட் முகம். ஆனால் மக்கள் மிகக் குறைவாக காணும் உண்மையான, உயிர்ப்புடன், சுவாசிக்கும் நகரம் ஒன்றும் இருக்கிறது. அது நம் பார்வையில் படும் நகரத்தின் மேற்பூச்சுக்குக் கொஞ்சம் கீழே இருக்கிறது. நான் புத்தகங்கள் எழுதப் பார்த்துக் கொண்டிருந்த 1980-களில் மேற்கு ஐரோப்பாவின் மிக மோசமான போதைப்பொருள் பிரச்சினை இருந்த இடங்களில் ஒன்றாக எடின்பரா இருந்தது. அது ஹெரொவின் (Heroin) வர்த்தகத்தின் முக்கியமான அளிபாதையாக இருந்தது. அது தவிர எய்ட்ஸால் மிக அதிக அளவில் பாதிக்கப்பட்டவர்களும் அங்குதான் இருந்தனர். யாரும் அதைப் பற்றிப் பேசுவதாக இல்லை. யாரும் அது குறித்து எதுவும் செய்வதாகவும் இல்லை. பிரச்சினைகள் பார்வைக்கு மறைவாக இருந்ததால் எல்லாரும் எல்லாமும் நன்றாக இருப்பதான பாவனையில் இருந்தனர். சரிதான், இந்த நிஜ உலக சமகால விஷயங்களை யாராவது நாவல்களில் எழுதியாக வேண்டும் என்று நான் நினைத்தேன். ஏனென்றால் அதை அப்போது எவரும் செய்து கொண்டிருக்கவில்லை,” என்று இதைக்குறித்துச் சொல்கிறார் இயன் ரான்கின்.

ஒரு நாவலில் எடின்பரா நகர் பற்றி வரும் கீழுள்ள உரையாடல் இந்த இரட்டைப் பார்வைகளை (dichotomy) கூர்மையாகச் சொல்கிறது. அதோடு பொதுமக்களுக்கு அவர்கள் அறிந்த வாழ்க்கையைத் தவிர, பிற விஷயங்கள் மீது இருக்கும் விலகல் மனோபாவம் மிகச் சிறப்பாக வெளிவந்துள்ளது.

“….இவ்வளவு அழகிய நகரம்,” என்றாள் அவள். ரீபஸ் ஆமோதிக்க விரும்பினார். அந்த அழகிய நகரை அவன் இப்போதெல்லாம் மிக அபூர்வமாகவே பார்க்கிறார். எடின்பரா அவனுக்கு இப்போது. கொலைபாதக எண்ணங்களும் கீழ்மையான உந்துதல்களும் சுழன்றாடும் மனநிலையாக மாறிவிட்டிருந்தது. அதன் அளவை, கைக்கு அடக்கமான அதன் பரிமாணங்களை அவர் விரும்பினானர். அதன் மதுவிடுதிகள் அவருக்கு பிடித்தமானவையாக இருந்தன. ஆனால் அதன் புறத்தைப் போர்த்தியிருந்த அலங்கார அணிவகுப்பு வெகு காலம் முன்னரே அவருக்கு அலுத்து விட்டிருந்தது. ஜீன் தன் கோட்டை இன்னும் இறுக்கிச் சுற்றிக் கொண்டாள். “எங்கு பார்த்தாலும், அங்கே ஏதோ ஒரு கதை இருக்கிறது,ஏதோ ஒரு சிறு சரித்திரத் துணுக்கு இருக்கிறது,” என்று சொல்லிவிட்டு அவரைப் பார்த்தாள். ஆம் என்று தலையசைத்தார் அவர். ஆனால் தான் விசாரித்திருந்த தற்கொலைகள்தான் அவர் நினைவில் வந்தன, ஜீன் பார்த்துக் கொண்டிருந்த நகரைப் பார்க்க முடியாததாலோ என்னவோ, மேற்குப் பாலத்திலிருந்து ஆற்றில் குதித்தவர்கள் அவர்கள். “இங்கே காணக் கிடைக்கும் அழகு எனக்கு அலுப்பதே இல்லை,” என்றாள் ஜீன், அவள் காரை நோக்கித் திரும்பிச் சென்றாள். அவர் மீண்டும் ஆமோதித்தார், உண்மையை வெளிக்காட்டிக் கொள்ளாமல். அவருக்கு அது எந்தக் காட்சியையும் காணத் தகுந்த இடமாக இருக்கவில்லை. நிகழக் காத்திருக்கும் குற்றக் களம்.”[3]

ஜீன் ஒரு அருங்காட்சியக மேற்பார்வையாளர் (museum curator), அவர் தன் வாழ்க்கைமுறை/தொழில் சார்ந்து நகரம் பற்றி கூறுவதற்கும் அதற்கான ரீபசின் மன எதிர்வினைக்கும் உள்ள வித்தியாசத்தைப் பாருங்கள். ஒரு பத்தியிலேயே நகரைப் பற்றிய பல மாறுபட்ட கோணங்களைக் கொண்டு வந்துவிடுகிறார் ரான்கின்.

பழமை வாய்ந்த எடின்பரா நகரமும் அதன் தட்பவெப்பமும், ஸ்காட்லாந்து மக்களின் பொதுவான மனநிலையும் தொடரின் அங்கங்களாக மாறி விடுகின்றன. அதன் தெருக்கள், மதுபான விடுதிகள், பழமை வாய்ந்த கட்டடங்கள் ஒரு புறமென்றால், அதிகரித்து வரும் மக்கள் தொகை, புதிதாக உருவாகி வரும் கட்டடங்கள், தொழில்கள், குற்றத்தின் பெருக்கம் என அந்த நகரை நமக்குப் பல்வேறு வகைகளிலும் அறிமுகப்படுத்துகிறது இத்தொடர்.

சில நாவல்கள், சாட்சிகள் இல்லாததாலோ, அல்லது வேறு காரணத்தாலோ ‘முழுமை பெறாமல்’ (open endings) முடிந்து விடும். இது குற்றப்புனைவுகளின் சம நிலையைக் குலைக்கக்கூடியவை. இதை ரான்கின் வேண்டுமென்றேதான் செய்கிறார்.

“கல்வித்துறையில் இருப்பவர்களும் இலக்கியத்தைத் தீர்மானிப்பவர்களும் குற்றப் புனைவுக்குத் தகுந்த மரியாதை தருவதில்லை என்றால் அதற்குக் காரணம் கதைகளுக்கு முற்றும் வைக்கப்படுகின்றன என்ற உணர்வுதான். க்ரைம் நாவல்களில் பேசப்படும் விஷயங்கள் பிசிறில்லாமல் முடிவுக்குக் கொண்டு வரப்படுகின்றன என்ற உணர்வு இருக்கிறது. அதனால் க்ரைம் நாவல்கள் நிஜ வாழ்கையைப் போலில்லை. நான் காவல்துறையில் இருப்பவர்களுடன் பேசியிருக்கிறேன். அந்த மாதிரியான முற்றும் போட்ட உணர்வு அவர்களுக்கு சில சமயம் கிடைப்பதில்லை. சரியான காரணங்களுக்காக அவர்கள் சில சமயம் தவறான ஆளைப் பிடித்து விடுகிறார்கள். அல்லது தவறான காரணங்களுக்காக சரியான ஆளைப் பிடித்து விடுகிறார்கள். வழக்கில் முடிவு கிடைக்கும்போதுகூட அவர்களுக்கு எப்போதும் திருப்தி கிடைத்து விடுவதில்லை. அந்த உணர்வுகளில் சிலவற்றையாவது வெளியில் கொண்டு வர விரும்பினேன். கடைசியில் எல்லாம் முடிந்து போய் மூட்டை கட்டி வைக்கப்படுகிறது என்பது எப்போதும் உண்மையில்லை என்ற அளவிலாவது மெய்த்தன்மை கொண்ட நாவல்களை எழுத விரும்பினேன். ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்துக்கு கதை முடிந்தபிறகு அப்புறம் என்ன ஆயிற்று என்று என்னிடம் சில சமயம் வாசகர்கள் கேட்பதுண்டு. ’நீங்கள்தான் அடுத்து என்ன நடக்கும் என்று முடிவு செய்து கொள்ள வேண்டும். என்னைப் பொருத்தவரை கதை முடிந்து விட்டது. அப்புறம் என்ன ஆகிறது என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளுங்கள்’ என்றுதான் அவர்களுக்கு பதில் சொல்கிறேன்,” என்பது இயன் ரான்கினின் வாதம்.

cover_naming_deadஇத்தொடரின் மிகச்சிறந்த, மிக முக்கியமான நாவல் த நேமிங் ஆஃப் த டெட் (The Naming of the Dead) என்பேன். இத்தொடரின் சிறப்பம்சங்களாக நான் இதுவரை சொன்ன பல விஷயங்களின் தொகுப்பாக இந்த நாவல் உள்ளது. 2005-ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடந்த G8 மாநாட்டு சமயத்தில் நடப்பதாக இக்கதை எழுதப்பட்டுள்ளது. மாநாட்டு சமயத்தில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இறக்க, அது தற்கொலை என்று முடிவு செய்யப்படுகிறது. அதை ஏற்றுக்கொள்ளாமல் ரீபஸ் குற்றத்தை விசாரிக்கத் தொடங்குகிறார். மாநாட்டிற்காக வந்துள்ள சிறப்புக் காவல்படை அவருடைய விசாரணைக்கு முட்டுக்கட்டை போடுகிறது. அதுபோக, வேறு குற்றங்களுக்காக, தண்டனை அனுபவித்து சிறையிலிருந்து வெளியே வந்தவர்கள் கொல்லப்படுகிறார்கள்.ரீபஸின் உயரதிகாரி இந்த இரண்டு விஷயங்களும் மாநாடு முடியும் வரை வெளியே வராமல் பார்த்துக் கொள்வதைத்தான் முக்கியமாக நினைக்கிறார். விசாரணை மேல் அவருக்கு இப்போது அக்கறையில்லை.

இன்னொருபுறம் ரீபஸ்ஸோடு சேர்ந்து இத்தொடரில் பணிபுரியும் காவல்துறை அதிகாரியான ஷுவானின் (Siobhan) பெற்றோர் இந்த மாநாட்டை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்யும்போது காவல்துறை நடத்திய தடியடியில் ஷுவானின் தாய் காயமடைகிறார்.  ஷுவா ன் தன் தாயைத் தாக்கியவரைத் தேடுகிறார்.  ஷுவா னின் பெற்றோர் மூலம் ஈராக் போர் எதிர்ப்பு, சுற்றுசூழல் மாசு, காலநிலை மாற்றம், அதற்கான பேரணிகள் என மாநாட்டிற்கான எதிர்ப்புக்கள் குறித்த மாற்றுப்பார்வைகள் கிடைக்கின்றன.  இந்நாவலின் தலைப்பு ஈராக் போரில் இறந்த ஆயிரம் பேர்களின் பெயர்களைப் படிக்கும் நிகழ்வை ஒட்டி அமைந்துள்ளது. (இது நிஜமாக நடந்த ஒன்று). இந்த நிகழ்வை ஷுவான் தன் வேலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறார்:

“அவள் இறந்தவர்களின் பட்டியலைத் தயாரித்தாள். அவர்களுடைய பெயர்களை எழுதினாள். கடைசி விவரங்களைக் குறித்தாள் – யார் அவர்கள், எதனால் இறந்தார்கள் என்பதை அறிய முற்பட்டாள். மறக்கப்பட்டவர்களுக்காகவும், தொலைந்து போனவர்களுக்காகவும் அவள் குரல் கொடுத்தாள். பாதிக்கப்பட்டவர்களால் நிறைந்ததொரு உலகம் அவளுக்காகவும், அவளைப் போன்ற புலனாய்வு நிபுணர்களுக்காகவும் காத்துக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வழக்கையும் விடாமல் அரித்து ஆராய்ந்து கொண்டிருக்கும் ரீபஸ் போன்ற புலனாய்வு நிபுணர்களுக்காகவும் கூட. அவர்கள் ஒருபோதும் அவ்வழக்குகளைக் கைவிடுவதில்லை. அப்படிக் கைவிட்டால் அதுதான் அந்தப் பட்டியலில் இருப்பவர்களுக்குச் செய்யப்படும் இறுதி அவமானம்.” [4]

சமூகச் சித்திரம், அதிகாரத்துவத்தின் பலம், குடும்ப உறவுகள் எனப் பல கூறுகளைக் கொண்ட இந்த நாவல், ஒரு குறிப்பிட்ட வகையைச் சார்ந்த புனைவு என்ற எல்லையைத் தாண்டிச் செல்கிறது.

ரீபஸ் கதாபாத்திரத்தின் சித்தரிப்பைப் பற்றி நினைக்கும்போது எனக்கு முதன்மையாக நினைவுக்குவருவது இன்னொரு புகழ்பெற்ற திரை பாத்திரமான ராக்கி (‘Rocky’) தான். தன்னை விட வலிமையானவர்களுக்கு எதிராகக் களமிறங்கி, திறமை, ஆற்றல் போன்றவற்றைவிட விடாப்பிடியான முயற்சியால் அதிகம் வெற்றி பெறும் ராக்கி போல்தான் ரீபஸும். பண, அதிகார, அரசியல் பலம் கொண்டவர்களுக்கு எதிராக விசாரணை செய்தாலும் ரீபஸ் தளர்வதில்லை. ஒரு பிடி கிடைத்துவிட்டால் அதைப் பற்றிக்கொண்டு என்ன எதிர்ப்பு வந்தாலும் (சில சமயம் உயரதிகாரிகளிடமிருந்தும்) இறுதிவரை சென்று விடுவார்.

ரீபஸ் ஒரு தனிமை விரும்பி, சமூக எதிராள் (antisocial) என்று கூட கூறலாம். அதிகாரத்தை (authority) வெறுப்பவர். அதற்குக் கட்டுப்பட மறுத்துத் தன் வழியில் செல்பவர். தொடரின் துவக்கத்தில் அவருக்குக் கிட்டத்தட்ட நாற்பது வயதாகி விட்டது, மணவிலக்கு பெற்று விட்டார், ஒரு மகள் உண்டு. அவருடைய இளமைக்காலத்தில் ‘சிறப்பு விமான சேவையில்’ (SAS) பயிற்சி பெற்று, அதில் ஏற்பட்ட அனுபவங்களால் மனதளவில் பாதிப்படைந்தார். பின்னர் அதிலிருந்து விலகிக் காவல்துறையில் சேர்ந்தார். உயரதிகாரிகள் ரீபஸை சுயக்கட்டுப்பாடில்லாத ஆசாமியாகத்தான் பார்க்கிறார்கள். அவரைப் பணி நீக்கம் செய்ய ஒரு தகுந்த காரணத்துக்காக காத்துக்கொண்டிருந்தாலும், வழக்குகளில் ரீபஸ் அடையும் வெற்றிகளால் அவரை சகித்துக்கொள்ளவேண்டிய சூழ்நிலை அவர்களுக்கு. ஆனால் மற்றவர்களைப் பற்றி ரீபஸ் கொஞ்சம் கூட கவலைப்படுவதில்லை, தனக்கு சரி என்று தோன்றுவதைச் செய்ய என்ன எதிர்ப்பு வந்தாலும் பொருட்படுத்துவதில்லை. உதாரணமாக ஒரு நாவலில் ரீபஸின் மகள் விபத்தால் பாதிக்கப்பட, அதைச் செய்தவனைக் கண்டுபிடிக்க காஃபெர்டி (Cafferty) என்ற ஒரு குற்றக்குழுவின் தலைவனின் உதவியை நாடுகிறார். அதற்காக ‘Cafferty’ உடன் சமரசம் செய்து கொண்டார் என்று அர்த்தமில்லை, தற்காலிகமான ஒரு உறவுதான் அது,  காஃபெர்டியை கைது செய்ய ரீபஸ் தொடர்ந்து முயல்கிறார். ஆனால் தொடர்ந்து வரும் நாவல்களில், ரீபஸ் விலை போய் விட்டார் எனச் சில வதந்திகள் பரவுகின்றன. அதைப்பற்றி அவர் கவலைப்படுவதில்லை, எந்தத் தன்னிலை விளக்கமும் அளிப்பதில்லை. அவர் ஒரு நியாயவாதியோ, ஒழுக்கவாதியோ அல்ல, குற்றமற்ற சமூகத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணமெல்லாம் அவரிடம் கிடையாது, அப்படி ஒரு சமூகம் வரும் என்ற நம்பிக்கையும் அவருக்கு இல்லை. தன் வேலையைச் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்பது ஒன்றுதான் அவருடைய எண்ணம். அதன் மேல் அவருக்கு ஒரு வெறி என்று கூடச் சொல்லலாம். இது கூட அவரின் தனிவாழ்க்கையில் மற்றவர்களுடன் சகஜமாகப் பழக முடியாமல் இருப்பதை நியாயப்படுத்தும் ஒரு உத்திதான். தன் வேலை சார்ந்து சந்தித்த குற்றவாளிகளின், பாதிக்கப்பட்டவர்களின், கண்டுபிடிக்க முடியாமல் போன குற்றங்களில் நினைவுகளால் துரத்தப்படுகிறார் ரீபஸ்.

இயன் ரான்கின் இசைப்பிரியர். எடின்பரா நகருக்காக ஒரு இசைத்தொகுப்பை (playlist) ரான்கின் உருவாக்கி உள்ளார். அதைப் பற்றி இங்கு படிக்கலாம். அதேபோல் ரீபஸும் இசைப்பிரியராக உருவாக்கப் பட்டுள்ளார். தன் தனிமையான பின்னிரவுகளை மது மற்றும் இசையுடன் ரீபஸ் கழிக்கிறார். அவரிடம் பெரிய இசைத்தொகுப்பு உள்ளது. தன்னை வாட்டும் நினைவுகளிருந்து மீள அவை உதவுகின்றன. இசை பற்றிய நிறைய சிறு குறிப்புகள் தொடர் முழுவதும் உண்டு. (முரகாமியின் நாவல்களில் வரும் இசை பற்றிய சிதறல்கள் போல்.) இசை மீது நாட்டமுடையவர்களுக்கு இத்தொடரில் குறிப்பிடப்படும் இசைக்கலைஞர்கள், இசைத்தொகுப்புகள், அவர்களைப் பற்றிய ரீபஸின் விமர்சனங்கள் சுவாரசியமாக இருக்கும்.

சில விஷயங்களில் ரீபஸின் செயல்கள் மனித உரிமைகள் பார்வையில் விமர்சனத்துக்குரியவை. உதாரணமாக இரண்டு விஷயங்கள் பார்க்கலாம். ஒரு ஆரம்ப நாவலில் ரீபஸின் உயர் அதிகாரி, சட்டத்திலிருந்து தப்பிக்கொண்டிருக்கும் ஒரு குற்றவாளியைப் பிடிக்க, தானே ஓர் ஆதாரத்தை உருவாக்கி குற்றவாளியின் இடத்தில் வைத்து அவனைக் கைது செய்கிறார். குற்றம் சாட்டப்பட்டவர் பின்னர் தற்கொலை செய்து கொள்கிறார். அதைப் பற்றிய விசாரணை நடக்கும்போது, ரீபஸும் விசாரிக்கப்படுகிறார். அவருக்கும் தன் உயரதிகாரி மேல் சந்தேகம் இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்வதில்லை. தனக்கு பாதிப்பு ஏற்படும் என்றாலும் உண்மை வெளிவராமல் இருப்பதையே விரும்புகிறார். உயரதிகாரியின் செயலை நியாயம் என்று ரீபஸ் நினைப்பது போல் நாவலில் சித்தரிக்கப்பட்டிருக்கும்.

இன்னொரு நாவலில் குழந்தைகளின் மேல் பாலியல் வன்முறை செலுத்திய ஒருவர் சிறை சென்று மீண்டு, திருந்தி வாழ விரும்புவதாகச் சொல்கிறார். சமூக சேவகர்கள் அவருக்கு உதவுகிறார்கள். ரீபஸ் இதை நம்புவதில்லை, அந்த ஆசாமியை அவர் இருக்கும் குடியிருப்பிலிருந்து துரத்த விரும்புகிறார். தன் உயரதிகாரியுடன் இதைப் பற்றிப் பேசும்போது, ”ஒரு சிறுத்தை தன் புள்ளிகளை இழந்து எப்போதாவது பார்த்திருக்கிறோமா?” (‘Ever seen a leopard change its spots?’) என்று கேட்குமளவுக்கு எதிர்மனநிலை கொண்டவராக இருக்கிறார். அந்த ஆசாமி இருக்கும் குடியிருப்பில் யாருக்கும் அவரைப் பற்றி தெரியாது, அதனால் அவரைப் பற்றிய செய்திகளை பத்திரிகையில் வர ரீபஸ் ஏற்பாடு செய்கிறார். இதனால் அந்த ஆள் குடியிருப்பில் தொல்லைகளுக்கு ஆளாகிறார். அவரை மற்ற குடியிருப்புவாசிகள் அடிக்கவும் செய்கிறார்கள். ரீபஸ் அதைப்பற்றி கவலை கொள்வதில்லை.

இப்படிச் சில சாதக, பாதக விஷயங்கள் இருந்தாலும், இவைதான் ரீபஸை ரத்தமும் சதையுமான ஆசாமியாக நமக்குக் காட்டுகின்றன. மேலும் அவருடைய செயல்கள், வழிமுறைகள் தவறாக இருந்தாலும், அவருடைய நேர்மையை சந்தேகிக்க முடியாது. டார்டன் நுவாரின் ஒரு கூறான இருமை மனநிலை (‘Dual Polarity’) இப்பாத்திரத்தில் உள்ளதை நாம் உணரலாம்.

ir-2

ஷுவான் இத்தொடரின் இன்னொரு முக்கியமான பாத்திரம். இத்தொடரின் ஐந்தாவது நாவலில் அறிமுகமாகும் இவருக்கும் ரீபசுக்குமான உறவு நட்பு ரீதியானது. தொடரின் போக்கில் இந்த உறவு பலப்படுகிறது. ஷுவான் இரு மனநிலைகளுக்கிடையே இருப்பவர். அவருக்கு விதிகளின்படி (technicality) செல்ல வேண்டும், வழிமுறைகள் ஓரளவுக்கு முக்கியம், உயர் பதவிகளை அடைய நினைப்பவர். ஆனால் அதற்காக சமரசம் எதுவும் செய்ய விரும்பாதவர். ரீபஸ் விசாரணைகளில் விதிகளை மீறிச்செல்லும்போது அவருடைய நட்பு ஷுவானுக்குச் சில சங்கடங்களை உருவாக்குகின்றது. இருந்தும் ரீபஸ்ஸை எக்காரணம் கொண்டும் ஷுவான் விட்டுக்கொடுக்க மாட்டார். தனக்கு பாதிப்பு ஏற்படும் என்றாலும், ரீபசுக்கு உதவுவார். தொடரின் போக்கில் பதவி உயர்வு கிடைத்து, தனியே வழக்குகளை ஆராயவும் செய்கிறார், இந்த நாவல்களில் ரீபஸின் அளவு அவர் முக்கியத்துவம் பெறுகிறார்.

சில நாவல்களில் மட்டும் வந்தாலும் காஃபெர்டி என்ற குற்றக்குழுவின் தலைவரும் ஒரு சுவாரஸ்யமான பாத்திரம். ரீபஸின் மிக முக்கிய எதிரி (arch nemesis) இவர்தான் என்று சொல்லலாம். ரீபஸ் ஒருமுறை அவரை சிறைக்கு அனுப்புகிறார். விடுதலையாகி வெளியே வந்தபின்னும் தன் தொழிலைத் தொடர்கிறார். ரீபஸ் இவரைக் கைது செய்ய தொடர்ந்து முயல்வதும்  காஃபெர்டி  ஓர் அடி முன்னால் இருப்பதும் நடக்கின்றது. தனிப்பட்ட முறையில் ரீபஸ் இவரின் உதவியை நாடினாலும், இவர்களிடையே நடக்கும் ஆடு புலி ஆட்டம் எப்போதும் தொடர்கிறது.

விவாகரத்துக்குப் பின் சில பெண்களுடன் ரீபஸுக்குத் தொடர்பிருந்தாலும், அவை நீடிப்பதில்லை. மகள் ஸாமி (Sammy) மீது ரீபஸ் பாசம் கொண்டவர், ஸாமியும் அப்படியே. இந்தப் பாத்திரம் சில நாவல்களில் மட்டும் வருவதால் முழுமையாக இல்லை. லியரி (Leary) என்ற கத்தோலிக்க பாதிரியார் சில நாவல்களில் வருவார். அவர் பங்கு நாவலின் முக்கிய இழைக்கு சிறிதளவே உண்டு, இருப்பினும் சுவாரஸ்யமான ஆளுமை.

இவருடன் ரீபஸ் அடிக்கடி பேசுகிறார். குற்றம், குற்றவாளிகள், மன்னிப்பு, கடவுள் என அவர்கள் உரையாடல்கள் விரியும். லியரியை மதமரபாளர் என்று கூறமுடியாது. மதுப்பிரியர். இன்மை, மறுமை பற்றி அவர் பேசுவதில்லை. மதம், தேவாலயம் என்பதை உலகில் மனிதனின் துன்பத்தைப் போக்க உதவ வேண்டிய ஒரு அமைப்பாகப் பார்க்கிறார். ரீபஸின் இந்த உரையாடல்களை வழக்கத்துக்கு மாறான வாக்குமூலமாக (Unconventional confession) பார்க்கலாம்.

இத்தொடரின் இன்னொரு சிறப்பம்சம் காலப் போக்கிற்கேற்றபடி வயதாகுதல் (Real Time Ageing) என்பது. அதாவது புத்தகங்கள் வரும் கால இடைவேளிக்கேற்ப முக்கியமான பாத்திரங்களுக்கும் வயதாகும். ஒரு நாவலுக்கும் அடுத்ததுக்கும் பத்து வருட இடைவெளி இருந்தால், அந்த பாத்திரத்திற்கும் பத்து வயது கூடி இருக்கும். 1987-இல் முதல் ரீபஸ் நாவல் வெளிவந்தபோது, ரீபஸின் வயது நாற்பது. இதனால் 2007-இல் வெளி வந்த எக்ஸிட் ம்யூஸிக் (Exit Music) நாவலின்போது அவருக்கு அறுபது வயதாகி விட, பணி ஒய்வு பெறுகிறார். இந்தத் தொடரும் (இப்போதைக்கு?) முடிவடைகிறது. ரான்கின் முதலில் இருந்தே இத்தகைய எண்ணத்துடன்தான் தொடரை நகர்த்தி வந்துள்ளதால், இது எதிர்பார்த்த ஒன்றுதானென்றாலும் என்னைப் போன்ற இத்தொடரின் பல வாசகர்களுக்கு இது ஏமாற்றம்தான்.

முந்தைய கட்டுரைகளில் பார்த்தது போல், தொடர் நாவல்களில் கதைக்கு இருக்கும் முக்கியத்துவம், கவனம் பாத்திரங்களுக்கும் இருக்க வேண்டும். அப்போதுதான் அத்தொடர் வெற்றியடையும். ஷெர்லக் ஹோல்ம்ஸ் சாகடிக்கப்பட்டபோது பலர் அவரை மீண்டும் உயிர்பிக்க வேண்டும் என்று எழுதினார்கள் அல்லவா? அதுபோல் இங்கு நடக்காவிட்டாலும், ரீபஸின் ஒய்வு குறித்து ஒரு சுவாரசியமான சம்பவத்தை ரீபஸ் கூறுகிறார்: “ஒரு பயணத்தின்போது என்னைச் சந்தித்த வாசகி ஒருவர் ஒரு சுவாரசியமான யோசனையைச் சொன்னார். என் விசிறிகள் ஸ்காட்லாந்து பாராளுமன்றத்துக்கு மனு அனுப்பி காவல்துறை அதிகாரிகளின் ஓய்வு பெறும் வயதை 65-ஆக உயர்த்தச் சொல்லவேண்டும். அப்படிச் செய்தால் ரீபஸ் இன்னும் கொஞ்ச வருடங்கள் வேலை செய்யலாம்.”

ஷுவான் இன்னும் பணியில் இருப்பதால் அவருக்கு வெளியில் இருந்து ரீபஸ் உதவுவதாக நாவல்கள் வெளிவரும் என்னும் நம்பிக்கை உள்ளது. “ரீபஸ் வெளியேயிருந்து ஷுவானுக்கு உதவுவதன் மூலம் இத்தொடரை நகர்த்தப் பல வழிகள் இருக்கின்றன,” என்று ரான்கின் முன்பு ஒரு நேர்காணலில் கூறியது அதற்கு வலு சேர்க்கின்றது. இதற்குப் பிறகு மால்கம் ஃபாக்ஸ் என்பவரை மையக் கதாபாத்திரமாகக் கொண்ட தொடரின் இரு நாவல்களை இந்த ஐந்து ஆண்டுகளில் எழுதி உள்ளார். இவை ரீபஸ் அளவுக்கு இதுவரை புகழடையவில்லை.

இந்தக் கட்டுரையில் உள்ள ரான்கினின் மேற்கோள்களைப் படித்தால் ஒன்று நமக்குப் புரியும். அவர் எப்போதும், குற்றப்புனைவு என்ற வகைமையைத் தாண்டிச் செல்லவே விரும்பி இருக்கிறார். அப்படி முத்திரை குத்தப்பட்ட புனைவுகளுக்கு இன்னும் அங்கீகாரம் வேண்டும் என்று எண்ணுகிறார். அது அவருக்கான தனிப்பட்ட புகழுக்கான வேட்கை அல்ல, இந்த வகைப் புனைவுகளின் சாத்தியக்கூறுகளை அவர் மற்றும் பல எழுத்தாளர்கள் செயல்படுத்தி உள்ளதைச் சார்ந்து, இப்புனைவுகளுக்கு அதிக அங்கீகாரம் வேண்டுமென்கிறார். ‘குற்றம்’ பற்றி ரான்கின் கூறியுள்ளதை பார்ப்போம்.

“ஒரு கொலையின் மர்மம் தீர்க்கப்படுவதோடு ஒரு கதை முடிந்துவிடுவதில்லை. அதுதான் நடுப்பகுதி. ஒரு கொலை ஏற்படுத்தும் அதிர்வுகளை நாம் மறக்கக்கூடாது. கொலையை விசாரிக்கும் அதிகாரிகள், விசாரணைக்கு முன்பு இருந்த மனநிலையை ஒருபோதும் பெறமுடியாது. கொலையோடு தொடர்புடையவர்கள், இறந்தவரின் குடும்பத்தவர்கள், ஏன் கொலையைச் செய்தவர்கள் – எல்லோருமே அந்தக் கொலையால் பாதிக்கப்படுகிறார்கள். அவர்கள் நுண்ணிய மாறுதலுக்குள்ளாகிறார்கள். அதனால்தான் இன்றுவரை எழுதுவதற்கான மிக சுவாரசியமான குற்றமாகக் கொலை இருக்கிறது. இந்தக் குற்றத்தில்தான் ஈடுசெய்யவே முடியாத தனித்துவமான ஒரு விஷயம் உலகிலிருந்து மறைந்துவிடுகிறது.” [5]

இதே போல் ஒரு கருத்தை ஓடன் (W.H Auden) எப்படிச் சொல்கிறார் என்று பார்ப்போம்:

“கொலை அதில் சம்பந்தப்பட்டவரை ஒழித்து விடுவதால், சமூகம் பாதிக்கப்பட்டவரின் இடத்தில் இருந்து, அவர் சார்பாக பரிகாரம் கேட்பதோ அல்லது மன்னிப்பு வழங்குவதோ நடப்பதால், அது தனியாரின் குற்றமாகிறது. சமூகம் நேரடி ஆர்வம் கொள்ளும் குற்றமும் இதுவே.” [6]

இருவரில் ஓடன் புகழ் பெற்ற ஒரு இலக்கியவாதி, ரான்கின் அந்த வகைமையில் சேர்க்கப்படாதவர், இருப்பினும் இருவரின் கருத்துக்களில் எது மேலானது என்று கூறமுடியுமா? (தனிப்பட்ட முறையில் ரான்கினின் கருத்து சற்று அதிக ஆழமானதாக எனக்கு தோன்றுகிறது.) ரான்கினின் கருத்தை ஓடன் கூறினார் என்று சொன்னால் கண்டிப்பாக அனைவரும் நம்புவர். இத்தகைய பார்வைதான் இயன் ரான்கின், ஹென்னிங் மான்கெல் போன்றோரின் படைப்புகள் இலக்கியவகைப்பாடுகளின் குறுகிய எல்லையைத் தாண்டிச் செல்லக் காரணமாக உள்ளது.

ரீபஸ் மீண்டும் வருகிறாரோ இல்லையோ, இதுவரை இத்தொடரை நீங்கள் படிக்காவிட்டால் படித்து விடுங்கள். மீண்டும் ரீபஸ் வந்தால் அவரை வரவேற்க நீங்கள் தயாராக இருக்கலாம்.

பின்குறிப்புகள்:

1 .இத்தொடர் நாவல்களின் ஒரையன் (Orion) பிரசுரகத்தின் பதிப்புகளில், நாவலைப் பற்றிய ரான்கினின் நீண்ட முன்னுரை உள்ளது. ஒரு புனைவு எப்படி உருவாகிறது, சமூக நிகழ்வுகளை எப்படி ஒரு எழுத்தாளர் பார்க்கிறார், அது அவரை எப்படி பாதித்து புனைவாக மாறுகிறது, தன் பாத்திரத்தின் பரிணாம வளர்ச்சியை ஆசிரியர் எப்படி நகர்த்திச் செல்கிறார் போன்ற பல விஷயங்கள் நமக்குத் தெரிய வரும். துரதிஷ்டவசமாக மற்ற தொடர்களில் (நான் படித்த பதிப்புகளில்) இத்தகைய முன்னுரைகள் இல்லை. எனவே இந்த தொடரில் ஒரையன் பதிப்பு கிடைத்தால் விட்டுவிடாதீர்கள்.

உதாரணமாக ஒரு முன்னுரையில் நாவலின் களம் குறித்துப் பேசுகிறார். இத்தொடரின் முதல் நாவலை ரான்கின் எடின்பரா நகரிலிருந்து எழுதினார். பிறகு அடுத்து வந்த ஏழெட்டு நாவல்கள் ரான்கின் பிரான்சில் இருந்த ஆறு வருட காலத்தில் எழுதப்பட்டன. பின்னர் எடின்பரா திரும்பி வந்த பிறகு அவர் எழுதிய முதல் நாவல், டெட் ஸோவ்ல்ஸ். இதை பற்றி ரான்கின் கூறுகையில், “இப்போது மீண்டும் எடின்பரா வந்துவிட்டேன். ஆனால் இந்நகரைப் பற்றி என்னால் இனி எழுதமுடியாதோ எனக் கவலையாக இருக்கிறேன். இந்நகரிலிருந்து வெகு தொலைவில் இருந்ததால் இந்நகரைக் குறித்து புனைவாக எழுதுவது எனக்கு சாத்தியமாக இருந்தது. இங்கு வந்த பிறகு, ஒரு சிறு நடை மூலம் நான் இத்தனை ஆண்டுகள் இந்நகரம் குறித்து செய்துகொண்டிருந்த தவறுகளை அறிய வரும் போது, அதை நான் எப்படி எதிர்கொள்வேன்?அதற்காக நான் கவலைப்பட்டிருக்க வேண்டியதில்லை,” என்று அந்த முன்னுரையில் சொல்கிறார் ரான்கின்.

நம் சொந்த ஊருக்கு வந்தால் அதைப் பற்றி இன்னும் தெளிவாக எழுத முடியும் என்று பொதுவாக நினைக்கலாம். ஆனால் ஒரு எழுத்தாளராக அதில் இருக்கக்கூடிய சவால்கள் பற்றி படிக்கும்போது எழுத்தின் பயணம் பற்றி இன்னும் சில தெளிவுகள் கிடைக்கின்றன.

2. ரீபஸின் ஸ்காட்லாந்து: ஒரு சொந்தப் பயணம் (‘Rebus’s Scotland: A Personal Journey’) என்ற அபுனைவு நூலையும் ரான்கின் எழுதியுள்ளார். இதில் தன்னுடைய இளமைக்காலம், ரீபஸ் உருவான விதம் என ஸ்காட்லாந்து நாட்டிற்கும் தனக்கும் உள்ள உறவை விவரிக்கிறார்.

3. இது மூலப் பத்தி: ” ‘Such a beautiful city,’ she said. Rebus tried to agree. He hardly saw it anymore. To him, Edinburgh had become a state of mind, a juggling of criminal thoughts and baser instincts. He liked it’s size, its compactness. He liked its bars. But its outward show had ceased to impress him a long time ago. Jean wrapped her coat tightly around her. ‘Everywhere you look, there’s some story, some little piece of history’. She looked at him and he nodded agreement, but he was remembering all the suicides he had dealt with, people who had jumped from North Bridge maybe because they couldn’t see the same city Jean did. ‘I never tire of this view’, she said, turning back towards the car. He nodded again, disingenuously. To him, it wasn’t a view at all. It was a crime scene waiting to happen. ”

4. இது மூலப் பத்தி: “She named the dead. She recorded their last details, and tried to find who they’d been, why they’d died. She gave voice to the forgotten and the missing. A world filled with victims, waiting for her and other detectives like her. Detectives like Rebus too, who gnawed away at every case, or let it gnaw at them. Never letting go, because that would have been the final insult to those names.”

5.  இது மூலப் பத்தி: “When a murder is satisfied, it isn’t the beginning of the story; it’s the middle. We shouldn’t forget that fact because murder has ripples. You never go back to being the same. The people that investigate these crimes never go back to being the same as they were before they started the investigation. The people’s whose lives have been affected, the victim’s families, even the murderer themselves are profoundly changed. That’s why murder is still the most interesting crime for us to write about, because it is the only crime where something unique is taken away from the world, something that can’t be replaced.”

6.  இது மூலப் பத்தி: “Murder is unique in that it abolishes the party it injures, so that society must take the place of the victim, and on his behalf demand atonement or grant forgiveness .it is the one crime in which society has a direct interest.”

One Reply to “குற்றப்புனைவுகளின் எல்லையை விரிவாக்கிய இயன் ரான்கின்”

Comments are closed.