கவிதைகள்

தாய்மடி
எம்.ராஜா

ஒருவழியாக
அறையை அடைத்துக்கிடந்த கட்டிலை
அப்புறப்படுத்தியாகிவிட்டது இன்று.
கட்டில்மெத்தை தலையணைக்கு
ஜிகினா விரிப்போடு உறைபோர்த்தி
பெயருக்கேற்றார்ப்போல்
அரியணைக்கட்டிலில் வீற்றிருந்தவன்
தரைமட்டமாய் தலைசாய்த்திருக்கிறேன்
இன்றிரவு.
ஏழாண்டுகளாய் புழங்கிய அறைதான்
ஏதோவொன்றின் வாயென
அகலத் திறந்திருக்கிறது இப்பொழுது.
திடீரென வளர்ந்து நிற்கிறது
இந்த புத்தக அலமாரி.
மேலே சாய்ந்தால்
நசுங்கி தாள்களோடு தாளாவேன்.
தொங்கிக் கொண்டிருக்கும்
சட்டைகளின்மேல் சிரிக்கும் முகங்களில்
அச்சு அசலாக எனது சாயல்.
உத்தரத்தை
நான்கு கால்களால் தாங்கிநிற்கும் பல்லி
நகராதிருக்கட்டும் இம்மியளவும்.
காற்றிசைச் சரத்தின் ஒலிமழை
அறையை நிறைக்கிறது மெல்ல.
கொஞ்ச நேரத்தில் பழகிப்போய்விட
பயம் போய்விட்டது இப்போது.
தரை மடிந்து
தாய்மடியென உருக்கொள்ளும் இக்கணத்தில்
களைத்த கண்களை வருடிச் செல்கின்றன
கதகதப்பான கரங்கள்.

ரயில் உரையாடல்
எம்.ராஜா

இருவருமே
உரையாடிக்கொள்வோம்.
காற்றின் தண்டவாளமேறி
ஓடும் என் ரயிலில்
உஷ்ணம் அதிகம் இருக்கும்.
உனது ரயிலுக்கோ கூர்மை ஜாஸ்தி.
எதிரெதிர் திசையில்
பயணிக்கும் நமது ரயில்கள்
அவ்வப்போது முட்டிக்கொள்வதும் உண்டு.
விபத்துக்கு பிந்தைய
பேசாதிருக்கும் பொழுதுகளில்
இருவருக்கும் இடையே
உலவும் காற்றில் எப்போதுமே
ஈரம் அதிகம் இருக்கும்.

நீரில் நடந்த பூக்கள்
எம்.ராஜா

ஒளிகுறைகிற வேளை.
பனிபடர்கிற ஏரியில்
நெளிகிறது வானம்.
கிளைகளை நிறைத்து
நான்கைந்தாய்
நீரிலும் நடக்கின்றன
பால்நிறப் புஷ்பங்கள்.
பார்த்திருக்கும்போதே
விரித்த இதழ்களோடு
கூட்டமாய்ப் பறந்து
மறைகின்றன.
ஏரி
பனி மரம் வானம்.

அலுங்குனி ஆட்டம்
எம்.ராஜா

பாதையின் முடிவில்
இருபுறத்து மரங்கள்
முட்டி நின்றபடி
வளைந்த வாயிலென
வரவேற்கும்.
நடந்து சேர்ந்தாலும்
ஓடிச் சென்றாலும்
விலகி நின்று
நுழைவழி காட்டாது
குலுங்கிச் சிரிக்கும்.
வழி நெடுக
திறந்தே கிடக்கின்றன
வானமும் பூமியும்.

எம்.ராஜா

-o00o-

உணவு
ஃபைஸல் அஹமத்

எனக்கு ஏழு நாட்களாக உணவில்லை
நான் இருக்கும் சுற்றுவட்டாரமெல்லாம் சுழலும்

சமயல் வாசனை மூக்கைத் தூக்கி என்னிடமிருக்கும்
பீங்கான்களில் மிக நல்லதொன்றின் மேல் வைத்துவிடுகிறது

மழை வானத்தை இருட்டிக்கொண்டு வரும்;
நித்திரை என் கண்களை இருட்டிக்கொண்டு வரும்.
உணவில்லாததால் தலைச்சுற்றும் இருக்கிறது.

வீதியோரம் தலைக்கு பீங்கானை வைத்து
உறங்க ஆரம்பிக்கிறேன்.

ஈச்சம் பழம் வேண்டுமா உனக்கு
என்ற குரல் எனது செவிக்குள் குரங்குபோன்று பாய
எழுந்திருக்கிறேன்,

அவள் கைகளில் இருக்கும் ஐந்து விரல்களையும்
ஒன்றிணைத்து என் கையில் வைக்கிறாள்
அது என் வலக்கரம்
என் வலக்கரத்தில் ஈச்சை மரம் ஒன்று பழங்களுடன்
நிற்பதைக் காணுகின்றேன்

எறும்புகள்
ஃபைஸல் அஹமத்

வீட்டுச் சுவரில் ஒரு பகுதி உலக வரைபடம் போல்
வெடித்திருக்கிறது
கால் நகங்களையும், கை நகங்களையும்
வெட்டி அலங்கரித்துவிட்டு
மழிதகட்டை
உலக வரைபடப் பாதையில் நிறுத்திவைப்பார் தந்தை

பீடித்துண்டுகள் பாதையின் நடுவே நிற்கும்
இன்று
யாருக்கும் எங்கும் செல்ல முடியவில்லை
எல்லோரும் திரும்புவோம்
என்று வரிசையின் முதலில் வந்த எறும்பு
தன்னைப் பின் தொடர்ந்து வந்த எல்லா எறும்புகளுக்கும்
தகவல் அனுப்புகிறது

என் தலையில் இருக்கிற தேங்காய் மூட்டையை
யாராவது கை மாறுங்கள்
என் தலையில் இருக்கிற அரிசி மூட்டையை
யாராவது கை மாறுங்கள்
தயவு செய்து கை மாறுங்கள்
என்று கூச்சலிடும்போது எறும்புகளின் அணிவகுப்பு
சற்று குழம்பிவிடுகிறது
திண்ணையில் உறங்கிக்கொண்டிருந்த பிஞ்சுக் குழந்தையின்
தூக்கம் கலைந்து குழந்தை அழுகிறது
தாய் பதறியடித்து ஓடிவருகிறாள்
மீண்டும் அணிவகுப்பை சீர் செய்துகொள்கின்றன எறும்புகள்
பாலைவனத்து ஒட்டகங்களின் நினைப்போடு

கண்கெட்டுப்போன எறும்பு கடிச்சிருக்கு
என் செல்லத்துக்கு
தாய் எறும்புகளைத் திட்டுகிறாள்
இந்த திட்டு மூட்டையை யாராவது கை மாறுங்கள்
என்றது ஒரு எறும்பு

ஃபைஸல் அஹமத்