*
*
அன்றொருநாள் கோலி சோடா குடித்தபடி ஞானத்தேடலில் மூழ்கியிருந்தேன்.
ராஜகோபுரத்தை பார்த்து சிரிக்கும் உலோக காந்தியின் பின்புறம், செல்வா கடைத் திருப்பத்தில் பஸ்கள் வரிசைக் கிரமமாய் ஆக்கிரமிக்கும். அதுதான் எங்களூர் பஸ் ஸ்டாண்ட். கடை வாசலில் காரை பெயர்ந்து முனையில் செங்கல் தெரியும் சிமெண்ட் திட்டின் மீது, ஜீன்ஸ் பாண்டில் குதிரை வாகன போஸில் வீற்றிருந்தேன். ஒரு கையில் கோதண்டம் என கோலி சோடா. தொடையில் மடக்கி ஊன்றியிருந்த மறு கையில் இறுமாப்பு. கடையில் வெற்றிலை போடுபவர்களின் நடுவிரல் வெண்சுண்ணம் தீற்றியிருந்த மடிந்த மரக்கதவுகளின் மீது சாய்ந்து, சிந்தையில் உலகஞானத்தைச் செரிக்க, செல்வாவிடம் கணக்கு சொல்லி, வாயில் கோலிசோடாவை வழியவிட்டிருந்தேன்.
டிவியில் அறிவியல் வாரம், கர்நாடக இசை வாரம், இலக்கிய வாரம், குழந்தைகள் வாரம் என்று வைக்காமல் இருப்பதுபோல், பல அறிவுத்துறைகளின் யுகாந்திரமாய் உருவான ஞானப்பெருங்கடலை, ‘சாரம்’ என்று சுருக்கி நொடிக்கொன்றாய் உள்வாங்கி கோலி சோடாவுடன் செரிப்பது ஊரில் என் போன்ற கடும் உழைப்பாளிகளின் பொழுதுபோக்கு.
ராமாயணத்தின் சாரம், கீதையின் சாரம், புத்தரின் போதனைகளின் சாரம், சார்லஸ் டார்வின் பரிணாம தத்துவத்தின் சாரம், ஐன்ஸ்டைன் சார்பியலின் சாரம், குவாண்டம் மெக்கானிக்ஸின் சாரம், அய்ன் ராண்ட் சாரம் இப்படி ஓரிரு மணிநேரங்களில் இதுவரையிலான உலக ஞானம் அறிவுப் பசிக்குணவாய், பஞ்சுமிட்டாய்போல அமுங்கிச் சிறுத்து, அப்படியே சாப்பிட்டு, போயேபோச்சு; சோளிகாச்சி, இட்ஸ் கான்.
மாற்றான் மனைவியை இச்சித்தல் கூடாது என்பது ராமாயணத்தின் சாரம். அதனால் அனைத்தையும் திருமணத்திற்கு முன்பே முடித்துக்கொள்ளவேண்டும். சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட் என்பது சார்லஸ் டார்வினின் பரிணாம தத்துவத்தின் சாரம். அதனால் மனிதருள் உஸ்தாதாய் இருப்பது அவசியமாகிறது. கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே என்பது கீதையின் சாரம். இதை வியாஸரோ கிருஷ்ணரோ, யார் சொல்லியிருந்தாலும், நாம் மேற்படி உஸ்தாதாய் அனைவரிடமும் எடுத்துரைப்பது அவசியம். இல்லை கடமையை செய்யும் அனைவரும் பலனுக்கு ஆசைப்படுவார்கள். ஆசையே துன்பத்திற்கு காரணம். அட, இது புத்தபிரான் போதனைகளின் சாரமாயிற்றே. பூனைக்கு வால் உள்ளது; நாய் குரைக்கும்; நாய்க்கும் வால் உண்டு அதனால் பூனை குரைக்கும் என்கிறவகை தர்க்கத்தில், கிட்டத்தட்ட கம்யூனிஸத்தின் சாரமும் ‘கடமையை செய் பலனை எதிர்பார்க்காதே’ என்பதுவே. சற்றே திருத்தி, பலனை பாஸ் எடுத்துக்கொள்வார் என்பது காப்பிட்டலிஸத்தின் சாரம். கடமையை செய்யாதே, பலனை எடுத்துக்கொள் என்பதும் மனிதகுலம் தழைப்பதற்கான பிரபலமான சாரமே.
இந்த வரிசையில், நத்திங் கம்ஸ் ஃபார் ஃப்ரீ என்பதுதான் அய்ன் ராண்ட் கூறும் மேட்டிமைவாத சித்தாந்தத்தின் சாரம் என்று தெளிந்திருந்தேன்.
தெறிக்கும் வெய்யிலில் பெரிய மூட்டையைத் தூக்கமுடியாமல் கோவிலிலிருந்து வெளிப்பட்ட பெரியவர், என்னிடம் உறையூர் பஸ் வருமாப்பா, இங்கன நிக்குமா, இந்த மூட்டையை பஸ்ல ஏத்திடேன். உதவி கோரி விண்ணப்பித்தார்.
எங்கு சுற்றியும் ரங்கனைச் சேர்ம்பாங்க. அதான் கடுக்கற வெய்யிலிலும் குத்தகைக்கு வர்ரேன்.
தடுக்கிவிழுந்தால் கோவில்; அதிலுரையும் ரங்கனை சேர்வதற்கு எதற்கு நான் முதலில் எங்கும் சுற்ற வேண்டும்? கோலி சோடாவின் கிர்ரில், எனக்குள் உலக ஞானம் வினவியது.
அப்படி குந்துங்க பெரியவரே. பஸ் வர இன்னும் அரை மணி இருக்கு. நான் இங்கதான் இருப்பேன். ஏத்திடலாம். எங்கும் சுற்றும் சேல்ஸ்மேன் மனிதன் பூச்சியாய் மாறிவிடும் ஃபிரான்ஸ் காஃப்காவின் மெட்டமார்ஃபொஸிஸ் தத்துவார்த்த கதையின் சாரத்தை அரைமணி வரை கோலி சோடாவுடன் உறிஞ்சிடத் தீர்மானித்தேன்.
கோலி சோடா தீர்வதற்கும், உறையூர் பஸ் வருவதற்கும், அநேக கதைகளில் நடப்பது போல, சரியாயிருக்கவில்லை. நிஜத்தில் பஸ் முன்னராகவே வந்துவிட்டது.
அத்தோடு உறையூர் மன்னனின் ஆணையின்படி நுரை தப்ப விரைந்து, வரிசையில் நின்றிருந்த அனைத்து பஸ்களையும் கடந்து இருநூறு அடி முன்னால் சென்று பத்மா கஃபேயின் வாசலை அடைத்தபடி கனைத்தது. பெரியவரால் ஓடமுடியவில்லை.
பாதி கோலி சோடாவை கடலைமிட்டாய் பாட்டிலின் அரைகுறையாய் திருகியிருந்த துருபிடித்த மூடியின்மீது ’ணங்’கிவிட்டு, சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டெஸ்ட் என்று பரிணாம சாரம் புசித்திருந்த நான் மூட்டையை தூக்கியபடி ஓடிச்சென்று, பஸ்ஸில் ஏறிவிட்டேன்.
ஓட்டுநருக்கு இடப்புறம் நெடுக்கு சீட்டில் அமர்ந்திருக்கும் கால்கள் சரக்கென உள்வாங்க, மூட்டையை உதறும் கியர்பாக்ஸில் படாமல் கிடத்தி, ரைரைட்ஸ்… என்று குரலெடுக்க முனைந்த நடத்துனரை, நீங்கதான் அடுத்த ரஜினியாமே என்று பேச்சு கொடுத்தபடி, வாயில் பிகில் வைக்கவிடாமல் பெரியவர் வரும்வரை பஸ்ஸை ஒரங்கட்டியிருந்தேன்.
பஸ் ஏறி, இருக்கையில் அமர்ந்து ஜன்னலுக்கு வெளியே நன்றி என்ற பெரியவரிடம் கைநீட்டி, நத்திங் கம்ஸ் ஃபார் ஃப்ரீ என்று அய்ன் ராண்ட் தத்துவ சாரத்தை அறிவுறுத்தினேன்.
திகைத்தவரிடம், ’கொடுப்பதை கொடுங்கள் ஆனால் கொடுத்துவிடுங்கள்,’ என்றேன்.
சீட்டினுள் எழுந்திருந்து, வேட்டியின் மடிப்பிலிருந்து அவர் கொடுத்த எட்டணாவை, அய்ன் ராண்டின் நத்திங் கம்ஸ் ஃபார் ஃப்ரீ சித்தாந்த சாரத்தின் பரிசாய், என் முதல் சம்பாத்யமாய், பல வருடம் மேஜை டிராயரில் வைத்திருந்தேன். அமெரிக்கா செல்லும்வரை.
*
*
அன்றொருநாள் தமிழர்களுக்கென்று பிரத்தியேகமாக ரேடியோ ஸ்டேஷன் இருக்கும் அமெரிக்க நகரத்தில் வசித்தேன். இடைப்பட்ட வருடங்களில் பல ஞானத்தேடல்கள், சாரங்கள். ஆராய்ச்சி மேற்படிப்பிற்காக உலகஞானத்தின் ஏதோ ஒரு பகுதியை அமெரிக்க நகரின் பிரதான பல்கலைக்கழகத்தில் ஒருக்களித்துப்போட்டு மென்று கொண்டிருந்தேன். எவ்வகைச் சிந்தையும், இயக்கமும், சிக்கல், அல்லது தீர்வு என்பதின் வெளிப்பாடே என்பதுவரை உலக ஞானத்தைச் செரித்திருந்தேன். இந்தத் தீர்வு அந்தச் சிக்கலுக்குரியதா என்றோ, அந்தச் சிக்கலே அனைத்து ஜீவராசிகளுக்கும் சிக்கல்தானா என்றோ சந்தேகங்கள் இல்லாத இளமைக்காலம்.
என்றோ ஊரில் கோலி சோடாவை பாதியில் விட்டதில் எனக்குள் உலக ஞானம் முழுமையாக இறங்கியிருக்கவில்லை.
என் ஆராய்ச்சிக் குழுவின் தலைவர் பிரேஸில் நாட்டவர். நரசிம்மன் என்பதை நரஸிம்ஹம் என்று போர்த்துகீஸ் கலந்த ஆங்கிலம் பேசுவார். பங்கிற்கு, ஷெட்யூல் என்பதை ஸ்கெட்யூல் என்று உச்சரிக்கக் கற்றிராத நான், பேசுவது ப்ரிட்டிஷ் ஆங்கிலமாக்கும் என்று அறிவிலித்திருந்தேன்.
ஆராய்ச்சிக் கடலை யயாதியின் முனைப்புடன் பருகிவரும் காலத்தே, ஆங்கே ஒரு வீக்கெண்டில் தொலைபேசியில் தலைவர் குரல். மயக்கும் மாலையை மனைவியுடன் கழிக்கவெண்ணி, குழந்தைகளிருவரையும் கவனித்துக்கொள்ள என்னை அமர்த்தினார்.
க்ரீன் பில்டிங் என்கிற சொல்லாடலே பெரும்புரட்டு என்பதற்கு அத்தாட்சியாக இழை பல்புகள் தலைகீழாய் மஞ்சளாய் தேவைக்கதிகமாய் பிரகாசிக்கும் அவர் வீட்டின் விஸ்தாரமான ஹாலில் கைகுலுக்கிக்கொண்டு, மாடியில் கேம்-ரூம் அறையில் குழந்தைகளுடன் விளையாட்டு தொடங்கியது.
நம்மூர் திருடன் போலீஸ் விளையாட்டை வேறு ரூபத்தில், பெயரில், விளக்கி, நான்தான் போலீஸ், சிறுவர்கள் இருவரும் திருடர்கள் என்றாகியது. லைட்டை அணைத்துவிட்டு அவர்களை நான் பிடிப்பதற்கு அறையினுள் சென்று சுதாரிக்கும் முன் தலையணைகளால் மொத்திவிட்டனர். அங்கேயும் போலீஸ்தான் சோப்ளாங்கி.
எனக்கு தயக்கம், உவர்ப்பு. ஊரில் ஏதேதோ செய்து, தலையால கோலி சோடா குடித்து, லோன் போட்டு ஆராய்ச்சிப் படிப்பிற்காக இங்குவந்தால், ஏதோ ஒரு மூலையில் ஒரு இருட்டறையில் பழக்கமற்ற இருவரிடம் அடிவாங்கிக்கொண்டிருக்கிறேனே.
முதல் நாள் ராகிங்கில், காலேஜில் ஏற்படும் உணர்வு இது.
அந்த சீனியரே அடுத்த வருட பரிட்சையில் நமக்கு பிட் கொடுத்து உதவுவதும், நீ என் முதுகை சொறிந்தால் நான் உன் முதுகை சொறிவேனாக்கும் என்கிற நியூட்டன் விதியின் சாரம்.
இருட்டில் தோன்றிய இவ்வகை மனவெளிச்சத்தில், பலனை எதிர்பார்க்காமல், கடமையை, விளையாட்டைத் தொடர்ந்தேன். அட, கீதையின் சாரம்.
நேரம் ஆக ஆக, பிரேஸில், போர்த்துகீஸ், அமெரிக்கா, ஆங்கிலம், தமிழ், தயக்கம், வயது, வெட்கம், மீசை, நிறம், என எங்களிடையே அதுவரை சேர்த்திருந்த ஞான வியூகங்கள் ஒவ்வொன்றாகக் கழன்றுகொண்டது.
அடுத்தமுறை போலீஸாய் பறந்து வந்த தலையணையை பிடித்து திருப்பிக் கொடுத்தேன். வாக்குவம் க்ளீனருடன் உறவாடியதில் மேனிமுழுவதும் மயிர்கூச்செறிந்திருந்த பவ் பவ் கார்ப்பெட்டில் பின்புறம் தடாலென்று மோதி விக்கித்து விழுந்தான் பாலகன். இன்னொரு குழந்தையை அலேக்காய் தலையணையுடன் தூக்கி ஆழம் அதிகமான சோபாவில் விட்டெறிந்தேன். அவள் வாழ்க்கையில் தலையணைமேல் ஏறிப் பறந்தது அன்றுதானாம். பின்புறத்தை தட்டிக்கொண்டு எழுந்த பாலகனிடம், “இதுதாண்டா போலீஸ்” என்றேன்.
இரவு வெகுநேரம்வரை கும்மாளம்.
கசங்கிய கோட்டு ஸ்கர்டுகளில் வீடு திரும்பிய தலைவரும் தலைவியும் குழந்தைகள் என்னை சரியாக நடத்தினார்களா என்று கேட்டனர். குழந்தைகளிடம், அவர்களை நான் சரியாக நடத்தினேனா என்றும் கேட்பார்கள்.
தலையணைகளை அடுக்கிவைத்துவிட்டு சோபாவின் மேல்மடிப்பு கலையாமல் நாசூக்காய் அமர்ந்திருந்த குழந்தைகள், நான், இருவருக்குமே சரியாக நடத்தப்பட்டோம் என்றே தோன்றியது. தலையாட்டினோம்.
விண்ட்பிரேக்கரை எடுத்துக்கொண்டு, விடைபெற்று, காருக்கு புறப்பட்டேன். வீட்டினுள் இருந்து தந்தை வழிகாட்ட, எனக்கு டாடா சொல்லி கதவைத் திறந்து விட வந்தது ஆண் குழந்தை.
கதகதப்பான வீட்டின் வாசலில் நின்றபடி, கொத்தாக சில டாலர் நோட்டுக்களை குழந்தை விகல்பமில்லாமல் வெளியே நின்றிருந்த என் கையில் திணித்தது.
அந்தத் தருணத்தின் முடிவின்மையில், எனக்கு அன்றொருநாள் செல்வா கடையில் பாதியில் விட்ட கோலி சோடா முழுவதுமாய் உள்ளிறங்கியது. பெரியவரிடம் வாங்கிய எட்டணா எதுக்களித்தது.
குழந்தையின் கையை மடக்கி, காசை மறுத்து, டாடா கூறினேன்.
விஷயத்தை கேள்விப்பட்ட தந்தை வாசலுக்கு வந்தார். என்ன நரசிம்ஹம். ஏன் காசு வேண்டாம் என்கிறாய். கூச்சப்படாதே. நத்திங் கம்ஸ் ஃபார் ஃப்ரீ.
இல்ல சார், இதற்கு வேண்டாம்.
அப்ப பதிலுக்கு வேறெதுவும் எதிர்பார்கிறாயா?
இல்ல சார். இதற்கெல்லாம் கைமாறு வேண்டாம்.
நீ உன் நேரத்தை எனக்காக செலவிட்டிருக்கிறாய். வேறு வேலை செய்திருந்தால் சம்பாதித்திருப்பாயே?
ஆமாம், ஆனால் அது வேலை. இன்று வீக்கெண்ட். இங்கு வரவில்லையென்றால் சும்மா ஃப்ரெண்ட்ஸோடு சுத்தியிருப்பேன். எனிவே, குழந்தைகளுடன் விளையாடுவது வேலையில்லையே.
ஆனாலும் என் குழந்தைகளுடன் நீ ஏன் விளையாட வேண்டும்?
எனக்கு கல்யாணமாகவில்லை…
அதில்லப்பா, உன் நேரத்தை என் குழந்தைகளுக்காக ஒதுக்கியிருக்கிறாயே. அதற்குதான் காசு.
இல்ல சார், அதை காசிற்காக செய்யவில்லை. நீங்கள் கேட்டுக்கொண்டதனால் செய்தேன். உங்கள் மேல் மரியாதையால் குழந்தைகளைப் பிடிக்காதிருந்தாலும் செய்திருப்பேன். ஆனால் குழந்தைகளை இயல்பாய் மிகவும் பிடித்துப்போனது.
அப்படியென்றால் அது பிடித்த வேலை. அவ்வளவுதானே. அதற்கு ஏன் காசு வேண்டாம் என்கிறாய். பிழைக்கத்தெரியாதவனா நீ? அமெரிக்கா ரன்ஸ் ஆன் மானி. நாதிங் காம்ஸ் ஃபார் ஃப்ரீ, யு நௌ.
இருக்கலாம் சார். எங்கள் மரபில் இந்த ஞானம் தேவையிருக்கவில்லை. வளர்ந்த பொழுதில் எங்கள் கிராம அண்டை அயலார்கள் வீடுகளில் இலவசமாய்தான் உண்டிருக்கிறேன், உறங்கியிருக்கிறேன். என் நண்பர்களும் எங்கள் வீடுகளில் இன்றும் அவ்வாறே. தெருவோரம் போவோர் திண்ணையில் இளைப்பாறினாலே எங்கள் தாத்தா வீட்டில் மத்தியான சாப்பாடு உண்டு. அவர் இதைக் கேள்விப்பட்டால் என்னை வீட்டினுள் சேர்க்கமாட்டார்.
இந்தியாவில் ஊரில் பஸ் ஸ்டாண்டில் கோரிய உதவியைச் செய்துவிட்டு, நத்திங் கம்ஸ் ஃபார் ஃப்ரீ என்று பெரியவரிடம் எட்டணா வாங்கியதை கேள்விப்பட்டால் தாத்தா என்ன செய்வார் என்று யோசித்துப்பார்க்க அமெரிக்க இரவின் குளிர் விடவில்லை.
சற்று நேரம் ஒரு கையில் பணத்தையும் மறுகையில் வாசல் கதவையும் பிடித்தபடி தலைவர் வெளியே கிளம்பிவிட எத்தனித்த என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
ஓ, இட்ஸ் நாட் எ ஜாப், இட்ஸ் ஹெல்ப் என்கிறாய். நீ ஒரு நண்பனாய் எனக்கு உதவுகிறாய் அப்படித்தானே.
‘அப்படியில்லை, இதற்கு நண்பனாய் இருக்கவேண்டும் என்றில்லை. இது ஜஸ்ட் உதவும் பண்பு. குட் வில். மனித குணம். இதுபுரியாதவர்களே நத்திங் கம்ஸ் ஃபார் ஃப்ரீ என்று சித்தாந்தம் தருவிப்பர். ஆனால் இச்செயலினை மதித்து என்னை நண்பனாக்கிக்கொள்ள விழைந்தால் ஓகே’ இப்படி நினைத்ததைச் சொல்லி தருணத்தை வளர்க்க இஷ்டமின்றி, “ஆமாம்” என்றேன்.
மறுநாள் லஞ்ச்சில் தலைவர், நேற்றைய உன் செயலை யோசித்தேன். பிரேஸிலில், எங்கள் ஊர் ஸௌ-பாலொவிலும் இப்படித்தான் பழகுவோம். கோடை விடுமுறையில் ஊர் சர்ச்சில் அல்லது பக்கத்து பண்ணையில் கோழிக்கறி, இலவசமாய் உணவு. கையில் சிக்கனை கடித்தபடி நண்பர்களுடன் விளையாட்டு. கடலில் நீராட்டம். இத்தனைக்கும் எங்களிடம் பெரிதாக பணமிருந்ததில்லை. சாதா குடும்பம்தான். பேப்பரை கசக்கி மடக்கி, சைக்கிள் டயர் டியூபை கத்தரித்து ரப்பர்பேண்டாய் அதன் மீது போட்டு…
அட, தெருக்கிரிக்கெட்டா, என்றேன் உற்சாகமாய்.
இல்லை, ஸாக்கர்.
ஓ, நீங்க பிரேஸில் இல்ல…
சற்று நேரம் பதப்பட்ட சிக்கனை வெட்டி உண்டு, நேர்த்தியாக வலப்புறம் கத்தி இடப்புறம் முள்கரண்டி என சப்தமிடாமல் பொருத்தி, வெளேர் மேஜைத்துணியை உதட்டில் உரசி, மடியில் ஒளித்து, நிமிர்ந்து, கேட்டார்:
காசு கொடுக்க விழைந்து, நான் உன்னை அவமதித்துவிட்டேனோ; வெகுநாள் அமெரிக்காவில் இருந்துவிட்டேனோ.
அட, காஃப்காவின் மெட்டமார்ஃபொஸிஸ் சாரம் போலுள்ளதே…
அடுத்த வீக்கெண்ட், ஃபோனில் குரல். நரசிம்ஹம், என் குழந்தைகள் நீதான் வேண்டும் என்கிறார்கள், வேலை இருக்கிறதா, வருவியா?
ஷ்யூர்.
அன்று கண்ணாமூச்சி ஆட்டத்தில் இலக்கைத் தொட ஹால் சோஃபாவைப் பின்புறமிருந்து ஒரே ஜம்பில் தாண்டிக் குதித்து அமர்ந்ததால், சிறுவனுக்கு ஷ்வார்ஸ்நெகர் ரேஞ்சிற்கு நான்தான் ஸ்டண்ட் கிங். இரவு, சிறுமி என் மடியிலேயே கதைகேட்டபடி தூங்கிவிட்டாள்.
தலைவர் மார்ட்கேஜ் கட்டி, அவர் தந்தையிடம் கடன் வெட்டி, புதுவீடு கட்டி க்ருஹப்பிரவேசம் செய்தது அப்புறமே. தங்கள் ரூமிற்கு என்ன பெயிண்ட் அடிக்க வேண்டும், ப்ரிட்னி ஸ்பியர் போஸ்டர் ஒட்டலாமா என்பதுவரை குழந்தைகள் என்னிடமே ஆலோசித்தனர். சிறுமியின் பள்ளியில் “உன் புதிய நண்பரை அறிமுகப்படுத்து” நிகழ்ச்சியில் அடியேன்தான் நண்பேண்டா.
நிகழ்ச்சி முடிவில் அவள் பத்து வயது அமெரிக்க நண்பி என்னிடம் வந்து “ஐ ஹாவ் ஹேர்ட் ஸோ மச் அபௌட் யூ,” என்றாள். படிப்பு முடிந்து நான் வெளியூர் வேலைக்கு செல்கையில் குழந்தைகளின் அம்மா என்னிடம், ’சற்று வயது கம்மியா இருந்தால் என் பெண்ணிற்கு நீதான் ஏற்றவன் என்று காட்டிக்கொடுத்திருப்பேன்,’ என்றாள்.
வயது சற்று அதிகமா இருந்திருந்தால் என்னவாகியிருப்பேனோ.
இதுதான் ஐன்ஸ்டினின் சார்பியல் சித்தாந்தத்தின் சாரமோ? அட, இது ராமாயண சாரமல்லவோ.
*
*
அன்று அமெரிக்காவில் இன்று இந்தியாவில் என காலம் வருடங்களாய், நிமிடங்களாய், நொடிகளாய் கணங்களாய் இப்பொழுதை அப்பொழுதாய் மாற்றுவதில் என்றும்போல் மும்முரமாயிருக்கிறது.
இடைப்பட்ட காலத்தில் “மனித குலத்தின் ஒரு சாரர் தீர்வில் வசிக்கிறார்கள், ஏனையோர் சிக்கலில்,” என்று அமெரிக்க அதிபர் சோஷியாலஜியின் சாரத்தில் தெளிந்திருந்தார். வாச்சிங் தி வீல்ஸ் பாட்டில், “உலகில் சிக்கல்களே கிடையாது, இருப்பதெல்லாம் தீர்வுகளே” என்று ஜான் லெனன் என்னை ஸென்பௌத்தத்தில் தெளிவித்திருந்தார்.
ஆராய்ச்சிப் பணியின் தீவிரத்தில் சென்னையில் மற்றொரு வெயில் நாள் வியர்த்தது. மற்றொரு ஆராய்ச்சி மாநாட்டில் என் அறிவுத்துறை உரையில் விழித்திருந்தவர்களுக்கு தேநீர் கொடுக்கிறார்கள். உரைமுடிந்து தொண்டை கரகரக்கும் எனக்கு கை மட்டும் குலுக்குகிறார்கள். கடமையைச் செய் பலனை எதிர்பார்க்காதே, அட கீதையின் சாரம்.
வீட்டிற்கு வந்து ஆயாசமாய் மேய்கையில், இணையத்தின் கவனக் கலைப்புகளிலிருந்து “நரசிம்ஹம், ஹௌஸிட் கோயிங்” என்று மின்செய்தி கிளம்பியது. “டூயிங் ஃபைன் தாங்க்ஸ்” என்று பதிலடித்ததுமே உரைத்தது. இந்த பரிபாஷையை மறந்து பத்து வருடங்களாகிவிட்டதே, யாரிது சாட்டுவது…
ஹெய் எங்கள மறந்துட்டயா. நான் இப்பொ நீ படிச்ச காலேஜ்லதான் படிக்கறேன். உன்ன மாதிரியே பி.எச்.டி. தங்கையும் டுயிங் வெல். அவ கம்யூனிட்டி காலேஜ்ல. அம்மாவோட வசிக்கிறோம். அப்பாவ வீக்கெண்ட் போய் பார்ப்போம். எனக்கு உன்னமாதிரி கீக் ஆகனும். உன் வெப்ஸைட் சூப்பர். என்னது, உன்ன மறக்கறதா, எங்களை வளர்த்தவனில்லையா நீ…
ஆராய்ச்சிக்குழுத் தலைவர் இன்று டைவர்ஸீ. இளமையாக வேறு கலியாணம் செய்துகொண்டுள்ளார். அட, இவரும் ராமாயண சாரத்தில் தெளிந்தவரே.
நான் இன்று என் குழந்தைக்கு தமிழிலக்கிய அறிமுகம் செய்து வாங்கிக் கட்டிக்கொள்ளும் குடும்பஸ்தன். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்கிற புத்தபிரானின் சாரத்தில் தெளிந்தவன்.
தாத்தாவும் அவர் வீடும், திண்ணையும் இன்றில்லை. சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டெஸ்ட் என்று பரிணாம சாரத்தில் அடங்கிவிட்டது.
ஆனாலும், தமிழ் கலந்த ஆங்கிலம் பேசும் நான் வளர்த்த போர்த்துகீஸ் கலந்த ஆங்கிலம் பேசும் குழந்தைகள் அட்லாண்டிக்கைக் கடந்து அன்பை வர்ஷிக்கிறார்கள். இலவசமாய்.
நத்திங் கம்ஸ் ஃபார் ஃப்ரீ. எதுவும் இலவசமாய் உனக்கு கிடைப்பதில்லை. ஆனால் இலவசமாய் இங்கிருப்பதை, இருக்கும் இடத்திலேயே எட்டணா வாங்காமல் நீ சென்றடையலாம்.
இதுவும் ஏதோ ஒரு ஞானமரபின் சாரமாகத்தான் இருக்கவேண்டும்.
எங்கு சுற்றியும் ரங்கனைச் சேர் என்பதுபோல்.
One Reply to “எட்டணாவில் உலக ஞானம்”
Comments are closed.